கட்டு

1
(1)

மரம் உயரத்திற்கு முருங்கை காய்த்திருக்கிறதாம். நீள நீளமாய் காய்கள் தொங்குவதை படம்பிடித்து பேப்பரில் போட்டிருந்தார்கள். பெரியகுளம் ஆராய்ச்சிப் பண்ணையில் இது போல் நிறைய செய்திருக்கிறார்கள். என்று படித்து மைதீனுக்கு ஒரே வியப்பு.

“ச்சே…” கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டார்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த முகமது திடுக்கிட்டுப் போனார். கையில் வைத்திருந்த புத்தகம் கீழே விழுந்தது.

“என்ன …. என்ன …. ?” பதட்டமாகக் கேட்டார்.

“ஒன்னுமில்ல …. மரம் ஒயரத்து முருங்கக்ககா காச்சுத் தொங்கதாம்.”

“அட…நா பயந்தே போய்டேன் திடுக்குன்னா இப்பிடியா சொல்றது?” |

கீழே விழுந்த புத்தகத்தை குனிந்து எடுத்தார். இவரைப் பார்த்த மைதீனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். முகமதுக்கு கோபமாயும் சங்கடமாயும் இருந்தது. எதைக் கண்டு சிரிக்கிறார்?

எல்லோரும் இப்படித்தான். ஒன்று மில்லாததுக்கெல்லாம் ஊரைக் கூட்டிச் சிரிப்பார்கள. முகமதுவுக்கு வெறுப்பாய் வந்தது. இவர் என்றாலே எல்லோருக்கும் ஒரு இது தான். நடந்ததை பெரிதாகப் படம் பிடித்து. போவார் வருவோரிடம் எல்லாம் சொல்லி ஒரு கூட்டத்தைக் கூட்டி விடுவார்கள். இதே திண்ணையில் இதே மைதீன் போன வாரம் இதே மாதிரி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். திண்ணை வீதியில் இருந்தது. வீதியில் பத்துப் பதினைந்து வீடுகள் மாலை நேரங்களில் ஓய்வாக உட்கார்வதற்கும் பேசுவதற்கும் தோதாக பாதி வீடுகளில் இப்படி திண்ணை கட்டி இருக்கிறார்கள்.

“என்ன … படிக்கிறீங்க?”

மைதீன் நிமிர்ந்து பார்த்தார். கேள்வி கேட்டவர் முகமது. இவருக்குப் புரிய வைப்பது மிகவும் சிக்கலான விசயம். நட்சத்திர மண்டலம், பால் வெளி, ஒளி வருச தூரம் என்றெல்லாம் சொன்னால் முகமது குழம்பிப் போய் விடுவார். சுருக்கமாகவும் எளிமையாகவும் சூப்பர் நோவா வை விளக்க வேண்டும்.

“நட்சத்திரம் – வெடிச்சிருச்சு.”

சொல்லி விட்டு முகமதுவைப் பார்த்தார்.

“ம் …. ஹும் …. அப்பிடியா ! … எந்த ஊர்ல ?”

ஆர்வமாய் கேட்டுக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தார். முகமதுவைக் கோபித்துப் பயனில்லை. சிரிக்காமலும் இருக்க முடியவில்லை.

“எந்த ஊர்லன்னு கேட்டா, எதுக்கு சிரிக்கிறீங்க?”

அடக்கி அடக்கிப் பார்த்து குபுக்கென்று சிரித்து விட்டார். முகமதுவுக்கு காரணம் புரியவில்லை. வேண்டுமென்றே சிரிக்கிறாரா? வழக்கம் போல் அரட்டைக் கூட்டம் சேர ஆரம்பித்தது. மைதீன் சிரிப்பதையும், பக்கத்தில் முகமது உட்கார்ந்திருப்பதையும் பார்த்தவர்கள் வேகமாய் வந்தார்கள்.

“என்ன விசயம்?”

கேலிப் பார்வையோடு சிக்கந்தர் கேட்டார். முகமது உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டார். ஆள்காட்டி விரலால் இவரின் இடுப்பில் லேசாக ஒரு குத்து குத்தி விட்டு ரகீம் உட்கார்ந்தார்.

“ச்சூ… சும்மாரீங்க….”

யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. முகமது சொல்லமாட்டார். மைதீனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிப்பை நிறுத்தி விசயத்தைச் சொல்ல வேண்டும்.

“சொல்லிட்டுச் சிரிங்க அவசரப்பட்டார்கள்.”

“நட்சத்திரம் …..”

அதற்கு மேல் சொல்ல முடியவில்லை. அடக்கிய சிரிப்பு குலுங்கி வந்தது. நட்சத்திரத்திற்கும் முகமதுவுக்கும் என்ன சம்பந்தம்? அங்கே போகப் போகிறரா? முகமதுவைப் பார்த்தார்கள். அவர் கடு கடு என்றிருந்தார். இருக்கும் சூழ்நிலையில் எல்லோரும் பிடி பிடியென்று பிடித்துக் கொள்வார்கள் என்று நைசாக நழுவினார். சிரிப்போடு சிரிப்பாய் மைதீன் எட்டிப் பிடித்தார். முகமதுவின் கைலி சிக்கியது. இடுப்பில் ரகீமின் விரல்கள் கிச்சு முச்சுக் காட்டின. அந்தக் கிளு கிளுப்பில் நெளிந்தார். கைலி அவிழ்ந்து விட்டது. அவசரமாய் பிடித்துக் கொண்டு அப்படியே நச்சென்று திண்ணையில் உட்கார்ந்தார். அதற்குள் மற்றவர்களும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். இனி தப்பிக்க முடியாது. மைதீனின் சிரிப்பும் மட்டுப்பட்டது.

“நட்சத்திரம் வெடிச்சிருச்சுன்னு சொன்னேன். எந்த ஊர்லன்னு கேக்ருறா …..”

“ஆஹ் ….. ஹாஹ்ஹ் …. ஹா ….” வெடிச் சிரிப்பு கிளம்பியது. ரகீம் வந்தாலே இப்படித்தான். சத்தம் போட்டே ஊரைக் கூட்டுவார்.

உண்மையாகவே பாதிப் பேருக்கு இது புரியவில்லை. இது சிரிப்பானதா? அல்லது கோட்டாப் பண்ணி சிரிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும் சிரித்து வைத்தார்கள். இது அடிக்கடி நடக்கக் கூடியது தான். பொதுவாக முகமது இருந்தால் தான் வீதியே களை கட்டும். பேச்சிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். ரகீமின் வெடிச்சிரிப்பு தான் முகமதுவின் கோபத்தைத் தூண்டி விடும். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் ஒதுங்கலாக உட்கார்ந்து விடுவார்.

சிறிது நேரத்தில் இவரைப் பற்றிய பேச்சும், கேலியும் மாறி, வேறு விசயங்களுக்கு பேச்சு போகும் போது, இவரது கோபமும் மாற ஆரம்பிக்கும், எந்தக் கோபமும் அதிக நேரம் நீடிக்காது.

முழுவதுமாக பேச்சு மாறிய பிறகு இவரும் வந்து உட்கார்ந்து விடுவார். சகஜ நிலை ஏற்பட்டு விடும், பேச்சிலும் கலந்து கொள்வார். பேச்சில் கலந்து விட்டால் முன்பு போல் ஏதாவது சொல்லாமல் அல்லது கேள்வி கேட்காமல் இவரால் இருக்க முடியாது. கேட்டவுடனேயே ரகீமின் வெடிச்சிரிப்பு எல்லோரையும் முந்திக் கொண்டு கிளம்பிவிடும்.

ரகீமுக்கு ஒரு வழியில் முகமது மச்சான் வேண்டும். இன்னொரு வழியில் அண்ணன் முறை வரும். ஆனால் மைதீனுக்கு எப்படிப் பார்த்தாலும் முகமது மச்சான் தான்.

இவர்களுக்கெல்லாம் தூரத்துச் சொந்தம் ஒன்று சென்னையில் இருந்தது. அவர்கள் இங்கிருந்து பிழைக்கப்போனவர்கள் போன இடத்தில் வீடும் வசதியும் ஏற்பட்டு நன்றாக இருக்கிறார்கள். ஏதோ வியாபாரம் என்று கேள்வி. அவர்கள் மைதீனுக்கு மாமன் மச்சான் முறையும் அதே போல் முகமதுவுக்கும் மாமன் மச்சான் முறையும் வருகிறார்கள். இது எப்போதும் போல் முகமதுவுக்குப் புரியவில்லை. அதே சமயம் மைதீனுக்கும் புரியவில்லை.

அவர்கள் கல்யாணத்திற்குப் பத்திரிகை வைத்துக் கூப்பிட வந்த போது இந்த உறவை புதுப்பித்தார்கள். ரகீமுக்கும் சிக்கந்தருக்கும் அண்ணன் தம்பி முறை வேண்டுமாம்.

ஒன்றுக்கு இரண்டு நாளாகத் தங்கி எல்லா வீடுகளிலும் விருந்து சாப்பிட்டு செல்வச் செழிப்பையும் காட்டி ஏக அமர்க்களம் பண்ணிவிட்டுப் போய்விட்டார்கள். அதிலிருந்து ஒரு வாரமாய் எல்லா வீடுகளிலும் இதே பேச்சு தான்.

சொந்தம் வீட்டுப் போனதையும், அந்தக் காலத்தில் உறவாடியதையும், திருப்பித் திருப்பிப் பேசினார்கள். நாங்கள் தான் அதிக நெருக்கம் என்று எல்லோரும் காட்ட முயன்றார்கள். உறவு வழியில் ஒருவர் நெருக்கம் என்றால், இன்னொருவர் குடும்பப் பழக்கங்களில் நெருக்கம் என்று சொன்னார்.

ஆக, திருமணத்திற்கு சென்னைக்குப் போவதற்கும், ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு உறவைப் புதுப்பித்து வருவதற்கும் தயாராக ஆரம்பித்தார்கள். சென்னையைப் பற்றி எல்லோரிடமும் முகமது விசாரிக்க ஆரம்பித்து விட்டார். பலரும் பலதையும் சொன்னார்கள். போகாதவர்கள் கூட போனது போல் அளந்து விட்டார்கள். மெரினாபீச், துறைமுகம், கலங்கரை விளக்கம், மவுண்ட் ரோடு, விமான நிலையம், அது இது என்று அள்ளி விட்டார்கள்.

துறைமுகத்திற்கு கப்பல் வருவதையும், அது ரொம்பத் தூரத்திலிருந்து வருவதையும். தெரிந்து கொண்டார். அதே போல் விமானம் இறங்குவதையும், விமான நிலையம் என்பதையும் கேட்டார். கடலுக்குள் மூழ்காமல் அப்படியே கப்பல் நிற்பதை அவரால் நம்ப முடியவில்லை. கப்பலைப் பற்றிச் சொன்னவர்கள். கடலைத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியும் பார்த்திருக்கிறேன் என்று மட்டும் சொன்னார். அதற்கு மேல் சொல்லவில்லை. அதற்குக் காரணம் இருந்தது.

இவர் ஏர்வாடியில் கடலைப் பார்த்திருக்கிறார். தர்காவிற்குப் போனவர்கள், அப்படியே நாலைந்து பேராய் கடலைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். பார்த்தவுடனேயே, யேய் ….. யப்பா……. இம்புட்டுத் தண்ணியா! என்று ஆச்சரியப்பட்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் ஒரே தண்ணீர் தான். அதே போல் கரையும் அளவில்லாமல் நீண்டு சென்றது. பிரமித்துப் போனார். ஒரே ஆரவாரமாய் அலைகள் புரண்டு புரண்டு வந்தன. சற்றுத் தள்ளியே நின்று கொண்டார். அவர் சாதாரண நிலைக்கு வர நீண்ட நேரம் ஆனது. நேரமும் மாலையானது. எல்லோரும் கரையில் உட்கார்ந்தார்கள்.

மாலை நேர வழக்கப்படி ஒதுங்குவதற்கு இடம் பார்த்தார். அப்படிப்பட்ட இடங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சம் சரிவான இடத்தில் உட்கார்ந்து விட்டு வந்தார். தண்ணீருக்கா பஞ்சம்? கைலியை லேசாகத் தூக்கிக் கொண்டு இறங்கினார்.

அலைகள் வந்து வந்து போயின. சரிப்பட்டு வரவில்லை. தயாராகிக் கொண்டு அலைவரும் போது சட்டென்று உட்கார்ந்தார். அதற்குள் ஒடி விட்டது. அப்படியே அகன்று கொஞ்சம் உள்ளே தள்ளி காத்திருந்தார். இப்போதும் முடியவில்லை. ஏமாந்து போனார். இந்த முறை சுதாரிப்பாக இருந்து. அலைகள் வந்து உடனேயே கையில் அள்ளினார். வந்த அலை திரும்பி கடலுக்குள் ஓடியது. இவரும் விடவில்லை. விரட்டி விரட்டி உட்கார்ந்தார். அப்படிக் கொஞ்ச தூரம் உள்ளேயே போய் விட்டார்.

அடுத்த நிமிடம் ஒரு பெரிய அலை வந்து சட்டென்று அடித்து உருட்டி விட்டது. தொப்பல் தொப்பலாய் நனைந்து விட்டார். உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து இவரைத் தூக்கி நிறுத்தினார்கள்.

அதிலிருந்து யாரும் கேட்டால் கடலைப் பார்த்ததை மட்டும் சொல்லுவார். மேற்கொண்டு விபரங்களைச் சொல்லமாட்டார்.

வீட்டுக்கு ஒருவர் இருவர் என்று மொத்தம் முப்பது பேர்கள் சென்னைக்குத் தயாராகி விட்டார்கள் மைதீனும் சிக்கந்தரும் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. கடைசி கடைசியாகத் தயாரானவர் முகமது தான். அதையும் கூட திருவள்ளுவரில் டிக்கெட் எடுத்த பிறகு தான் உறுதி செய்ய முடியும்.

ஏழெட்டு முறையாவது முகமதுவை தயார்படுத்தி இருப்பார்கள். இதில் மைதீனுக்கும் ரகீமுக்கும் முக்கியப் பங்குண்டு. இவர் முடியாது என்று சொல்லுவார். அவர்கள் அதையும் இதையும் சொல்லி, தைரியம் ஊட்டி, நிறைய பார்க்கலாம் என்று ஆசைகாட்டி தயார்படுத்துவார்கள். காலையில் சம்மதித்தால் மாலையில் மனம் மாறி விடுவார். மாலையில் சரியென்று சொன்னால் மறுநாள் காலையில் பழைய கதையாகி விடும். இப்படி ஒரு வாரமாய் விடாப் பிடியாய் அவரை தேத்தினார்கள்.

அந்த நாளும் வந்தது. இரவு எட்டரை வண்டிக்குப் புறப்பட வேண்டும். எல்லா ஏற்பாடுகளும் தயாராகி விட்டன. முகமது மட்டும் சலனத்திலேயே இருந்தார். மனதில் பயம் வந்து கொண்டே இருந்தது. வழிதவறிவிட்டால் எங்காவது போய்விட்டால், கடலுக்குள் விழுந்து விட்டால், ஊர் பேர் தெரியாத பட்டணத்தில் தனியாகத் தவிக்க நேரிட்டால் …. இப்படி பலப்பல எண்ணங்கள் வந்து கடல் அலைகள் போல் மோதின. தன்னைத் தானே தைரியம் கொடுக்க முடியாமல் தத்தளித்தார். ஏர்வாடி சம்பவம் பயமுறுத்தியது. எல்லோரும் இருக்க, விட்டு விடுவார்களா என்று சமாதானப்பட முயன்றார்.

எல்லோரையும் வழியனுப்ப மைதீன் சிக்கந்தர் போன்றவர்கள் தயாரானார்கள். முக்கியமாக முகமதுவுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். தலைவாரிக் கொண்டிருந்த மைதீன் தகர டப்பாவில் இரண்டு நூல் கண்டுகளைப் பார்த்தார். ஒரு யோசனை வந்தது. சிரித்துக் கொண்டார். ஒன்று வெள்ளை, இன்னொன்று நீலம் இரண்டிலும் கொஞ்சம் நூலை உருவி, ஒன்றாக முறுக்கி முழநீளத்திற்கு கயிறு போல் உருட்டி, துண்டுக் காகிதத்தில் மடித்தார்.

எல்லோரும் தயாராகி விட்டார்கள். மைதீனும் வந்து சேர்ந்தார். சிக்கந்தரிடமும் ரகீமிடமும் ரகசியமாய் காதைக் கடித்தார். அவர்களும் புன்முறுவலோடு நிறுத்திக் கொண்டார்கள். ஒதுங்கலாய் திண்ணையில் உட்கார்ந்திருந்த முகமதுவிடம் மைதீன் மட்டும் போனார். பக்கத்தில் போனதும் காகிதப் பொட்டலத்தை எடுத்து, வலது கைய நீட்டுங்க என்றார்.

ஏதோ புரிந்தது போல் அவசரமாய் முகமது இறங்கி நின்றார். இவர் பொட்டலத்தைப் பிரித்தார். வெள்ளையும் நீலமும் கலந்து முறுக்கிய கயிறு இருந்தது.

“எதுக்குங்க …..?” கேட்டுக் கொண்டே காலில் கிடந்த செருப்பை கழற்றி விட்டு, வெறுங்காலில் பயபக்தியோடு பார்த்தார்.

“வேற ஒன்றுமில்ல….. பயத்துக்கு நல்லது. எதுவும் அண்டாது…..” சொல்லி விட்டு. முகமதுவின் வலதுகை மணிக்கட்டில் கட்டி விட்டார். சற்றுத் தள்ளி நின்று சிக்கந்தரும் ரகீமும் வேடிக்கை பார்த்தார்கள் முகமதுவுக்கு இப்போது தெம்பு வந்தது.

“எல்லாரும் வந்துட்டாங்களா….ம்……. பொறப்படுங்க நேரமாச்சு….”

ஒரு பெரியவர் எல்லோரையும் கிளப்பினார். அவரவர் பைகளை தூக்கிக் கொண்டு விடை பெற்றார்கள். எல்லோரையும் விட முகமது அதிக உற்சாகமாய் இருந்தார். கையில் கட்டிய கயிற்றையும் அடிக்கடி பார்த்துக் கொண்டார்.

யாரும் கொடுக்க முடியாத தைரியத்தை அந்தக்கயிறு கொடுத்து விட்டது. சிரித்து விட்டால் காரியம் கெட்டுவிடும். மனம் மாறிவிடுவார், சென்னைக்குப் போகமாட்டார். அதனால் சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். மற்றவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. முகமதுவின் உற்சாகம் அவர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியம். அவர் அந்தக் கையை ஆட்டி ஆட்டி விடை பெற்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top