வேஸ்ட்

0
(0)

இன்று சனிக்கிழமை.ஷிப்ட் முடிய இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது.ஒரு வழியாக இந்த வாரம் முடிந்து விட்டது.இன்றைக்குப் பிற்பகலும், நாளை ஒரு நாள் பூராவும் கம்பெனியைத் தவிர்த்து விடலாம்.!

மணி அப்போது பழுது பார்த்துக் கொண்டிருந்த டூலில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது.அதைத் தொடர்ந்து செய்து முடிக்கிறதா, இல்லை, வழக்கம் போல் மெஷின் க்ளீனிங் ஆரம்பிக்கிறதா? போர்மன் இருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தான். செக்ஷனில் அவரைக் காணோம்.எட்டத்தில், பவர் ப்ரெஸ் அருகே சூப்பரின்ட்டன்ட்டும் போர்மனுமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனோ அவனுக்குத் திடீரென்று எரிச்சலாக வந்தது.சனிக்கிழமைகளில் செகண்ட் ஷிப்ட் வந்தாலே இந்தத் தொல்லைதான். அன்றைக்கு ஒவ்வொரு ஷிப்டிலும் நான்கு மணி நேரம்தான் வேலை.முதல் ஷிப்டாக இருந்தால் காலை நாலரை மணிக்குப் போனால், ஒன்பது மணிக்கெல்லாம் வேலை முடிந்து போகும்.இரண்டாவது ஷிப்டுக்கு வரும் ஆள்களிடம் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே ஒப்படைத்து விட்டு ஹாயாக வெளியேறி விடலாம். இரண்டாவது ஷிப்ட் வந்தாலோ, பன்னிரண்டு மணிக்கு க்ளீனிங் ஆரம்பித்தோ மென்றால்,ஒரு மணிவரை இடுப்பு முறிந்து போகும்.அதுவே சமயங்களில் அவசர வேலை ஏதேனும் இருந்தால், பன்னிரண்டே முக்கால் வரை டூலிங் வேலையில் இருந்து விட்டுக் கடைசி பதினைந்து நிமிடம் ஆலாய்ப் பறக்க வேண்டும். அவன் யோசித்துக்கொண்டிருக்கும் போதே விரைவாக வந்து அவனை நெருங்கினார் போர்மன்.

“என்ன மணி,இந்த டூல் ரெடியா?”

“இல்ல சார், இன்னும் அசெம்பிளிங் ஒர்க் பாக்கியிருக்கு…”

“நோ, ஸ்டாப் இட்.க்ளீனிங் டைமாயிடுச்சு. இத திங்கக்கெழம பாத்துக்கலாம்.ஸ்டார்ட் தி க்ளீனிங்.எவ்வரிதிங் ஷுட் பி பக்கா க்ளீன்!”

போர்மன் சொல்லி விட்டுப் போய்க்கொண்டே இருந்தார்.பார்த்துக் கொண்டிருந்த டூலின் பாகங்களை எல்லாம் ஓர் ஓரமாகத் தள்ளி விட்டு ஒரு நிமிடம் யோசித்தான். ’முதலில் கிரைண்டிங் மெஷினிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… ’மேசை இழுப்பறையைத் திறந்து பார்த்தான்.கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அவன் கொண்டு வந்து வைத்த வேஸ்ட்டைக் காணோம்.

“டாமிட்!”உரக்கக் கதட வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான்.ஒவ்வொரு முறையும் இதே கதை. அவன் ஸ்டோருக்குள் போய் வேஸ்ட் எடுத்து வந்து வைக்கக வேண்டியது; அடுத்த ஐந்தாவது நிமிடத்திற்குள் யாராவது ஓர் ஆள் –தர்ணரோ, கிரைண்டிங் மெஷின் ஆபரேட் டரோ-போகிற போக்கில் கையில் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்!

சலிப்புடன் ஸ்டோருக்குள் நுழைந்தான்.ஸ்டோர் கீப்பர், ’என்ன?’ என்பது போல் கேள்விக் குறியுடன் புருவங்களை உயர்த்தினான்.

“வேஸ்ட்…”

“கொஞ்ச முன்னாடிதானே எடுத்துட்டுப் போனீங்க?”

“ஆமா,எடுத்துட்டுப் போனேன்.இப்போ என்ன அதுக்கு?உங்க அப்பன் வீட்டு வேஸ்டையா குடுக்கறே?”-மனதினுள் குமுறல்…ஆனால்,வெளியில் வந்த வார்த்தைகளோ வேறு…!

“என்ன பண்ணச் சொல்றீங்க?இப்போதான் எடுத்திட்டுப் போனேன்.டிராயர்ல வெச்சுட்டு மறுபடி பாத்தா சுத்தமாக் காணோம்.”

“ஆர் யூ ஸ்லீப்பிங் ஆன் த காட்டன் வேஸ்ட் ?” –கிண்டலாக ஒரு கேள்வி எழுந்தது ஸ்டோர் கீப்பரிடமிருந்து.

சாதாரணமாக இந்த மாதிரிக் கிண்டல் செய்கிறவர்களுக்குச் சிரிப்பையே பதிலாக உதிர்ப் பதுதான் மணிக்கு வழக்கம். ஆனால், இன்றைக்கு அப்படியில்லை. கோபம் குமுறியது. இது என்னடா மடத்தனமான கேள்வி.தூங்குவதற்கா கம்பெனிக்கு வருகிறார்கள்?

“ எஸ்,டூ யூ கம் அலாங் வித் மீ ?”

இந்த பதில் கேள்வி சுளீரென விழுந்திருக்க வேண்டும்.முகம் விகாரப்பட,இவனை முறைத்தான் அவன்.

“ வேஸ்ட் தீந்து போச்சு…”

“தீந்து போச்சுன்னா?இன்னிக்கு சாட்டர்டே…மெஷின் கிளீன் பண்றது எப்ப்பிடி?”

“ என்ன ஏன்னா பண்ணச் சொல்றீங்க?அங்க இருந்தா எடுத்திட்டுப் போங்க”

விடுவிடுவென்று அங்கே போனான். வாஸ்தவமாகவே வேஸ்ட் இல்லை.அங்கங்கே பிய்த்துக் கொண்டு போனதில் சிதறிக் கிடந்ததைத் திரட்டி எடுத்தான். கொஞ்சம் தேறியது. செக்ஷனுக்குத் திரும்பினான். அவனுடன் ஷிப்டில் வருகிற இன்னொரு டூல்மேக்கர் சங்கரன், “என்ன ,வேஸ்டா?இங்க கொஞ்சம் குடுங்க…” என்றான்.ஸ்டோர் கீப்பரிடம் கத்தியது போல் இவனிடம் கத்த முடியாது.

பழைய வேஸ்டினால் கிரைண்டிங் மெஷினின் வெளிப்பக்கமாகக் கன்னங் கரேலென்று வழிந்திருந்த கிரீஸ்-மெஷின் ஆயில் கலவையைத் துடைத்து எறிந்தான். மறுபடி மெஷின் பெட் டைத் தூக்கி வைத்து இரண்டு மூன்று முறை வலப்பக்கமும் இடப்பக்கமுமாகச் சுற்றிப் பார்த்தான். மீதி வேஸ்டில் மெஷின் பூராவையும் அழுத்தித் துடைத்து முடித்தான். கையெல்லாம் பிசுபிசுவென்று கிரீசும், ஆயிலும்.திருப்பித் திருப்பி அதே வேஸ்டில்தான் துடைத்தாக வேண்டி இருக்கிறது.

வேஸ்ட் நிறைய இருக்கிற நேரங்களில் ஒரு முறை இலேசாகத் துடைத்தவுடன் தூக்கி எறிந்து விடுவது வழக்கம். எதுவுமே இப்படித்தான்.நிறையக் கிடைத்துக் கொண்டிருக்கிற சமயங்களில் எதனுடைய மதிப்பும் தெரிவதே இல்லை.

‘கிர்ர்’ ரென்று மணி ஒலித்தது. அட,ஒரு மணியாகி விட்டதா அதற்குள்? எல்லா கப்போர்டுகளையும் பூட்டினான். ஒர்க் பெஞ்சுகளின் மேல் சிதறிக்கிடந்தவற்றை அள்ளிக் கீழே டிரேயில் போட்டு விட்டு மறுபடி அந்த பழைய வேஸ்டால் கையைத் துடைத்துக் கொண்டான். கச கசவென்றிருந்தது. எரிச்சலோடு அதைத் தொக்கி டஸ்ட் பின்னில் எறிந்தான்.

சாவிக் கொத்தை வாட்ச்மேனிடம் ஒப்படைத்து விட்டு ஞாபகமாகக் கீ ரெஜிஸ்டரில் நேரத்தைக் குறிப்பிட்டுக் கையெழுத்தையும் போட்ட பின் கார்டை பன்ச் செய்தான். ஷிப்ட் நேரம் முடிந்து பதினேழு நிமிஷம் ஆகியிருந்தது. பாழாய்ப் போன மெயின்ட்டனன்ஸ் செக்ஷன் –ஒரு நாளாவது நேரத்திற்கு வெளியே போக முடிகிறதா என்ன?

அலுப்போடு வந்து காம்பவுண்ட் கேட்டைத் தாண்டும் போதுதான் ராஜனின் ஞாபகம் வந்தது. வழக்கம்போல் ராஜன் வரும்வரை காத்திருக்க வேண்டும்.இவனாவது பதினேழு நிமிஷம் கழித்தாவது வந்து விட முடிகிறது. அவனுக்கு இன்னும் பொறுப்பு அதிகம், நேரமாகும்..!

வெய்யில்.கம்பெனிக்கு நேர் எதிரே பார்வைக்கு எட்டின வரையிலும் பசேலென்று கிடந்த நெல் வயல்களில் கானல் நீர் அலையாய்ப் பரவிப் போய்க்கொண்டிருந்தது.கண்கள் தீயாய் எரிந்தன. தொலைவில், தென்னை மரக் கூட்டங்களினிடையே அப்பால் தொலைவில் சத்துவாச் சாரியும்,மொட்டை மலைகளும் தெரிந்தன. ராஜன் வருகிறானா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, மறுபடி வயல்பக்கம் பார்த்தபோதுதான் மணி அவர்களைக் கவனித்தான்.

சின்னஞ்சிறுசுகள்.மூன்று பேர். இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும்.சிறுமியும் பையன் ஒருத்தனும் தலையில் மூட்டைகளைச் சுமந்து கொண்டு நின்றார்கள். மூட்டை என்றால், பெரிதாக ஒன்றுமில்லை.கிழிந்த சேலைத் துணிகளால் கட்டின இரண்டு சின்ன மூட்டைகள். உதிர்ந்த, காய்ந்த இலைகள்,சருகுகள்,கிழிந்த காகிதங்கள்,சிறுசு சிறுசாக ஒடிக்கப்பட்ட சுள்ளிகள்,மரப் பட்டைகள்…இத்தியாதி.நான்கு மூலைகளிலும் பிதுங்கிக் கொண்டு வெளியே சிதறின அந்தக் குப்பைகள்.

இன்னொரு பையன், சாலைக்கு மறுபக்கம், வயலுக்கும் சாலைக்கும் நடுவே மண்டிக் கிடந்த கருவேல முள்செடிகளிலிருந்தும், தரையிலிருந்தும் எதையோ பிய்த்துப் பிய்த்துக் கையிலிருந்த துணிப்பைக்குள் திணித்துக் கொண்டிருந்தான். என்ன இது ?இவன் மனதில்  ஆவல் குறுகுறுத்தது.மெல்ல சாலையைக் கடந்து மறுபக்கம் போனான்.

தந்திக் கம்பத்தருகில் நின்று கொண்டிருந்த சிறுமியும்,பையனும் இந்தப் பையன் பொறுக்குவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இவனும் அவர்கள் பக்கத்தில் போய் நின்றான்.ஏதோ வேறு வேலையாய் நிற்கிறவன் போல்,தற்செயலாய் அங்கே நிற்க நேர்ந்த பாவனையுடன் நின்றான்.

பையன், கருவேலஞ்செடிகளிலிருந்து, பாளம் பாளமாய்ப் பிளந்து கிடந்த தரையிலிருந்து பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தது –வேஸ்ட்தான். ஷிப்ட் முடிந்தபின், வெளியே வருகிறவர்கள் போகிற போக்கில் வீசி எறிகிற வேஸ்ட். எண்ணெய்க் கறைகள் படிந்தவை; கிரீஸ்-மெஷின் ஆயில் கலவைப் பிசுபிசுப்புள்ளவை; வெள்ளையாய்ச் சுத்தமாய் எங்காவது ஒரு முனையில் மட்டும் சற்றே அழுக்குப் படிந்தவை-எல்லாம்தான்!

வெய்யிலில் வியர்வை வழிகிற முகம்.கிழிந்து ஓட்டுப் போட்ட சட்டையும்,டிராயரும் வியர்வையில் தெப்பலாக நனைந்து கொண்டிருந்தன. சிதறிக் கிடக்கிற குப்பைகளையும் இடை இடையே கிடைக்கிற வேஸ்ட் கத்தைகளையும் பையன் ரொம்ப கவனமாய் இழுத்துப் பிய்த்துப் பையினுள் போட்டுக் கொண்டிருந்தான். வெய்யிலைச் சட்டை பண்ணுகிற மாதிரித் தெரியவில்லை.சட்டை பண்ணுகிற வயதுமில்லை. நிலா வெளிச்சத்தில், மணலில் வீடு கட்டிக் கொண்டு, இலைகளையும் தழைகளையும் கிள்ளிப் போட்டுக் ‘கூட்டாஞ்சோறு’ ஆக்குகிற மாதிரி அவன் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். அடிக்கொருதரம்,கூறாக நீட்டிக் கொண்டிருக்கிற முட்கள் சுரீலென்று அவனுடைய பிஞ்சுக் கை விரல்களில் பாய்கிற போது மட்டும் இலேசான முகச்சுளிப்போடு, முனகலோடு கைகளை இழுத்துக் கொண்டான்.

“என்னடா,  சீக்கிரமா எடு…வூட்டுக்குப் போவ வாணாம்?”

-சிறுமி விரட்டினாள்.

“போலாம்…அந்தா…அங்க என்னமோ கெடக்கு பாரு “

-பையன், கருமமே கண்ணாக அந்தப் பக்கமாக நகர்ந்தான். இதெல்லாம் எதற்கு?குப்பை களையும், சுள்ளிகளையும் பார்க்கிற போது, இலேசாய்ப் புரிகிற மாதிரி இருந்தது.அடுப்பு எரிக்கவோ?

மணி அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். வழக்கமாக இரண்டாவது ஷிப்ட்டுக்கு வருகிற போது, கிருபானந்தவாரியார் கைஸ்கூல் விட்டு பிள்ளைகள் வருகிற ஞாபகம் வந்தது. இந்தப் பையன்களைப் போல், இந்தச் சிறுமியைப் போல் சிறுவர்கள்…சிறுமிகள்.யூனிபாரம் போட்டுக் கொண்டு, இல்லாவிட்டால், இதே போல் இலேசாய்க் கிழிந்த சட்டைகளைப் போட்டுக் கொண்டு ,கைகளில் நசுங்கி நெளிந்து போன அலுமினியத் தட்டுகளில் மதிய உணவை வாங்கித் தின்று கொண்டே வருவார்கள். இவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. தலையில், தோளில், கைகளில் சுள்ளிகளையும்,காய்ந்த இலை தழைகளையும்,காட்டன் வேஸ்ட் குப்பைகளையும் சுமந்து கொண்டு, இந்த வேகாத வெய்யிலில் கருவேல மரங்களின் முட்களிடையே அலைந்து தேடித் திரிந்து…

கொஞ்சம் முன்னதாக,மெஷினையும்,டூல்களையும்,ரேக்கையும் துடைத்து விட்டு,மரப் பெட்டியில் எரிந்து விட்டு வந்த வேஸ்ட்டின் ஞாபகம் வந்தது. இனிமேல் கை துடைக்கிற வேஸ்டைக் கொண்டு வந்து எதிர்ப்பக்கம் கருவேலஞ் செடிகளுக்கு அடியில் ஞாபகமாய்க் கீழே வீசி விட்டுப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் மணி. மனசில் என்னவோ ஒரு சங்கடம் அடிவயிற்றில் பந்தாய் உருண்டு திரண்டு அலைந்தது.திரும்பிப் பார்த்தான். அந்தப் பசங்கள் மூன்று பெரும் அந்த இடத்திலிருந்து கொஞ்சம் விலகிப் போய் விட்டார்கள்.இப்பால், கம்பெனிக்குள்ளிருந்து ராஜன் வேகமாய் வருவது தெரிந்தது.

“சாரி,ரொம்ப நேரமா வெய்ட் பண்றியா மணி ?” என்று அவன் கேட்டுக்கொண்டே வந்தான். அவன் கையில் அப்போதுதான் எடுத்து வந்த வேஸ்ட் இருப்பதை மணி கவனித்தான்.நடந்து கொண்டே கையை நீட்டினான். ராஜன் ஒரு கணம் திகைத்து விட்டு மணியின் கைகளைக் கவனித்தான்.

“ஒ, நீ கை கழுவுறது இல்லியோ?”என்றபடி வேஸ்டை நீட்டினான். அதை வாங்கி அழுத்தமாய்க் கைகளைத் துடைத்துக் கொண்டபின், ஞாபகமாகத் தந்திக் கம்பத்தருகில் கருவேலஞ் செடிகளுக்கப்பால் போய் விழும்படி அதை வீசியெறிந்தான் மணி.

“என்ன ராஜன்,இவ்வளவு லேட்?”என்று கேட்டபடி இலேசாகத் திரும்பிப் பார்த்த போது, சற்று முன் அவன் வீசியெறிந்த வேஸ்டை அந்தப்பையன் வேகமாக ஓடி வந்து எடுப்பது தெரிந்தது.

“ என்ன பண்றது?எனக்கு பிசிகல் ஒர்க் இல்ல…ஆனா,இன்ஸ்பெக்ஷன் பண்ணினத ஓகே பண்ணி அனுப்பாம வர முடியாது…”

-ராஜன் சொன்னது காதுகளில் விழுந்தது.மனசு என்னவோ, வேஸ்ட் பொறுக்குகிற அந்தப் பசங்களின் பின்னால், முட்களில் தயங்கி,சுள்ளிகளில் பாய்ந்து, வெய்யிலில் பதைபதைத்து நடுங்கிக் கொண்டிருந்தது…

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top