வேலை

4
(2)

ஊருக்குள்ளிருந்து ஆண்களும் பெண்களும் ஓடினார்கள் கண்மாயை நோக்கி. குஞ்சு குறுவான்களும் கூட உடன் ஓடினார். ஊருக்குள் ஏதோ பூகம்பம் வந்த மாதிரியும், சுனாமியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது மாதிரியான ஓட்டம் . “காச் பூச்” என்ற சப்தத்துடன் ஒரே களேபரம். குழப்பம் விசயம் தெரிந்தவர்களும் அரைகுறையாய் தெரிந்தவர்களும் வேகு வேகென்று ஓடி கண்மாயில் நின்றனர். நேரம் ஆக ஆக ஊரே வெறிச்சோடிக் கொண்டிருக்க வறண்ட கண்மாயினுள் மக்கள் வெள்ளம்.

‘இதப் பாருங்க வேலைய நடக்க விடுங்க. உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இல்லாட்டி எங்கூட நாலஞ்சு நாலஞ்சு பேர் வாங்க பி.டி. ஓவைப் பார்த்து பேசி தீத்துக்கலாம்.” கூட்டத்தின் நடுவே பளீரென்று தும்பைப் பூவாட்டம் மில் வேட்டி சட்டையில் இருந்த காண்ட்ராக்டர் பெருமாள் கூறிக் கொண்டிருந்தார்.

ஒருபிடி மண்கூட அள்ளிப் போடக்கூடாது. மொதல்ல எடத்தைக் காலி பண்ணுங்க. மூலைக்கு மூலை கூட்டத்தில் சத்தம் வலுத்துக் கொண்டு இருந்தது. “இதுக்காக கலெக்டர் கிட்ட மன்டே பெட்டிசன் கொடுக்கப்போறோம். அதுக்கப்புறம் என்ன செய்யுறதுன்னு பார்க்கலாம்” என்றான் அந்த ஊரின் படித்த இளைஞன் கணேசன்.

“இந்த வேலையே கலெக்டரோட பெர்மிசன் வாங்குன பெறகுதான் நடக்குது. டெண்டர் வீட்டுத்தான் இந்தக் காண்ட்ராக்டை எடுத்து இருக்கேன். அரசு வேலையைத் தடுக்கிறது. குத்தம்.” காண்ட்ராக்டர் பெருமாள் பேசப் பேசக்கூட்டம் கோபத்திலும் ஆவேசத்திலும் எகிறிக் கொண்டிருக்கிறது. ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு கேட்காதபடி சலசலவென்ற பேச்சொலிகள்.

“என்னய்யா…. அரசாங்க வேலை….? வேலைக்கு உணவுத் திட்டத்துல வந்த வேலைய இந்த மிசினை வச்சுச் செய்ய விடமாட்டோம். எங்க ஊர்க் கண்மாயை ஆளுகள வச்சு நாங்கதான் வெட்டுவோம். எங்களை என்ன கேணப் பயலுகன்னு நெனைச்சீங்களா.” எகிறினார் விவரமுள்ள முத்துச்சாமி.

மேலே இருந்து கீழே வரை கொடுத்த பெர்சண்டேஜ் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தார் காண்ட்ராக்டர் பெருமாள். கொஞ்சம் இறங்கி வந்தார். “நான் சொல்றதக் கொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் பேசுங்க. இது வந்து நானா யோசிச்சு சொல்றேன். ஊருக்கு வர்ற சீதையே திருப்பி அனுப்பிச்சுடாதீங்க. ஒங்க ஊர் கோயில் கும்பாபிசேகத்துக்கு பத்தாயிரம் ரூபாய் தாரேன். வேற பொதுக் காரியம் ஏதாவது இருந்தா சொல்லுங்க செய்யுறேன். இத மேலும் பிரச்சனை ஆக்க வேண்டாம். என்ன முனியசாமி அண்ணே. நீங்களா கூடிப் பேசி முடிவு பண்ணிச் சொல்லுங்க.”

தடால்னு இவ்வளவு பெரிய தொகை தருவாரென்று எதிர்பார்க்கவில்லை. கணேசன் உடன் சுதாரித்துக் கொண்டான். இந்தப் பணத்தைக் காட்டி மயக்க வேண்டாம் எங்களுக்குத் தேவை வேலை. சொன்னாச் சொன்னதுதான் என்றான். கூட்டத்தில் மூலைக்கு மூலை சத்தம் கூடிக்கொண்டே இருந்தது. அதில் காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளும் அடங்கும்.

“நான் சொல்றதச் சொல்லிட்டேன். வீணா வம்புல மாட்டிக்காதீங்க. உங்க நல்லதுக்காவும், ஊர் நல்லதுக்காகவும்தான் சொல்றேன். அப்புறம் உங்க இஷ்டம்”. கூட்டத்தின் கோபம் எல்லை மீறிப் போய் ஏதாவது நடந்து விடும் என்ற சூழல். சூழ்நிலை அறிந்து, தான் போய் பி.டி.ஓ வைப் பார்த்துவிட்டு வருவதாய் கூறிச் சென்றார் காண்ட்ராக்டர் பெருமாள்.

நேரம் ஆக ஆக வெயில் கூடிக்கொண்டே இருந்தது. போன பெருமாள் திரும்ப வந்தபாடில்லை. இதற்கு ஒரு முடிவு கட்டாமல் விடுவதில்லை என்பது போல கூட்டமும் கலையவில்லை. கண்மாய்க் கரையில் இருந்த ஆலமரத்தின் அடியில் கொத்துக் கொத்தாய் மக்கள் கூட்டம். வறண்ட கண்மாயினுள் தனியே புல்டோசரும் டிராக்டர்களும்.

“ஏம்பா… போனவனை இன்னுங் காணோம்.” — முத்துச்சாமி.

“வருவான் வருவான் இந்த மிசினுகளைத் தள்ளிட்டுப் போறதுக்காச்சும் வரணுமில்ல”

“வேற உள்தட்டு வேலை எதாச்சும் செய்வாம்ப்பா.”

“ஊரே சேர்ந்து தடுக்கும் போது யாரும் ஒன்னும் நொட்ட முடியாது.

கலெக்டரே இத ரத்துப் பண்ணத்தான் சொல்வார்”. — கணேசன்.

காளிமுத்துவுக்கு மனசுக்குள் லேசான ஒரு சந்தேகம். பெருமாளு “கெசப்’ பணக்காரனாச்சே. துட்டைக் குடுத்து ஊரையே வளைச்சுப் போடுறவனுக்குக் கேவலம் அந்த பி.டி.ஓ ஆபிசையா வளைக்க முடியாது.

“இந்தக் கம்மா வெட்டு, கால்வாய் வெட்டு எல்லாம் அந்தந்த ஊர்க்காரங்களை வச்சுத்தான் செய்யனுமிங்கிறது இந்தத் திட்டத்தோட சட்டம். சட்டத்தை மீறிச் செஞ்சி நாம் புகார் கொடுத்தா பில் பாசாகாது தெரியுமில்ல”. கணேசன் பேசுவதைக் கேட்ட காளிமுத்துவுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை வந்தது. என்ன இருந்தாலும் பெரிய பத்து வரைக்கும் படிச்ச பய இல்லையா அதுதான் வெவரமாய் பேசுறான். மனசுக்குள் மெச்சிக் கொண்டார்.

காலையில் மேயப் போன ஆடுகள் வாயில் நுரை தள்ள ஊரை நோக்கி ஓடி வந்தன. தீயாய் வெயில் கொளுத்தியது. பெண்களும் சிறுவர்களும் வீட்டை நோக்கி நடையைக் கட்டினர். காலையில் இருந்து சாப்பிடாமல் வீராவேசமாய் வாய் வ-க்கப் பேசிப் பேசி ஒவ்வொருவரும் களைத்து விட்டனர். வயதில் இளையவர்கள் லாடஞ் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தே களைத்துப் போயினர்.

முத்துச்சாமி பொறுமை இழந்து விட்டார். இனிமே இவங்க வந்த மாதிரிதான். துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாயில் வந்த கெட்ட வார்த்தையை உதிர்த்து விட்டு நடக்க ஆரம்பித்தார்.

மாமா அங்க பாருங்க ஒரு ஜீப்பு வருது. அட ஆமா, பின்னாடி வெள்ளக் கலர்ல போலீஸ் வண்டி மாதிரி தெரியுது. அந்த இடம் பரபரப்பானது. பேச்சற்று சோர்ந்து போயிருந்த இடம் நிமிடத்தில் சல சல வென்ற சப்தமும், குசு குசு வென்ற பெண்களின் பேச்சுமாய் ஒருவித படபடப்புடன் இருந்தது.

“இந்த மாதிரி ஒர்க்ஸ் எல்லாம் மேனுவல் ஒர்க்ஸ்தான். பட் சில கண்டிசன்ல ஒன் ஆர் டூ ஒர்க்ஸ் வி கேன் டு வித் மெசின் லைக் ஜெ.சி. பின்னு ரூல்ஸ் இருக்குது”. பி.டி.ஓ பேசியது பலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு அரைகுறையாகவேப் புரிந்தது.

பி.டி.ஓ வும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் தனியே போய் இரண்டு நிமிடம் பேசினார்கள். ஒரு வட்டமடித்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு பி.டி.ஓ ஜீப் வந்த வேகத்தில் கிளம்பிச் சென்றது.

“அரசு விதிகளின்படி முறையாய் நடக்கும் இந்த வேலையைத் தடுப்பது சட்டப்படி குற்றம். உடனே கலைந்து அவங்கவங்க வீட்டுக்கு போயிருங்க. இல்லாட்டி சட்டப்படி நான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்றார் கூட்டத்தைப் பார்த்து இன்ஸ்பெக்டர்.

போலீஸ் வேனைப் பார்த்ததுமே மனப் பயத்திலும் நடுக்கத்திலும் இருந்த பாதிப் பேர் பின்வாங்க, இவர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற அசட்டுத் துணிச்சலில் இருந்த பத்துப் பேர் மட்டும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.

காளிமுத்துவுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. இந்த நாப்பய கணேசனால் வந்தது. எல்லாந் தெரிஞ்சப் புடுங்கி மாதிரி பேசினான். இப்ப என்னாச்சு இருட்டுற வரைக்கும் டேசன்ல உட்கார வச்சுட்டான்.

கோயிலுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்குறதா சொன்னான் பெருமாள். அப்பவே சரின்னு சொல்லி இருக்கலாம். இந்த மரிப்பயலுக ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குற மாதிரி, நல்லா இருந்தத் தேரை நடுத் தெருவுல கொண்டு வந்து விட்டுட்டாங்க. என்ன இருந்தாலும் பெரிய மனுசன் பெரிய மனுசன்தான். பெருமாள் மட்டும் டேசன்ல வந்து சொல்லாட்டி லாடங்கட்டி ஏத்தி இருப்பான். நல்ல காலம் இதோடயாவது முடிஞ்சதே என்று பெருமூச்சு விட்டார் முத்துசாமி.

இனிமேல் இதுமாதிரியான தவறுகளைச் செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டு எழுதி கையெழுத்திட்டு வந்தது மனதில் ரணமாய் வலித்தது கணேசனுக்கு. ஊரே சேர்ந்து தம் உரிமையை நிலை நாட்ட முடியவில்லையே என்ற மன உளைச்சல், கையாலாகாத்தனம் எதைப் பார்த்தாலும் வெறுப்பாய் வந்தது. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. காலையில் இருந்து சாப்பிடாதது வயிற்றுப்பசி வ-யாய் மாறி இருந்தது. தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கண்களை சுற்றும் முற்றும் ஓடவிட்டான்.

பஸ் ஸ்டாண்டில் இருந்து ரோட்டின் இருபுறமும் டியூப்லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. அரசியல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்க, பசிப்பிணியை ஒழிக்க வேலைக்கு உணவுத் திட்டத்தை நூறு நாட்கள் என்று இருப்பதை இருநூறு நாட்களாக இரட்டிப்பாக்குவோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” பட பட வென பலர் கைதட்ட… “தூ” என்று காறித் துப்பினான் கணேசன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top