வேலிகளுக்கு வெளியே ….

0
(0)

“வேலிக்கு வெளியே… நீளும் கிளைகளை வெட்டினாய்… வேலிக்கு கீழே… நீளும் வேர்களை என்ன செய்வாய்” என்ற கவிதை வரிகள் இன்று காலையில் எழுந்ததலிருந்தே நினைவில் ரிங்கரித்துக் கொண்டிருப்பது. ரம்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வரிகள் தொடர்ந்து நினைவுக்கு வருவதன் காரணம் என்ன. அப்படி எனக்கு இம்மாதிரி என்ன நிகழப்போகிறது. குடும்ப நலம் கருதித்தானே கனடா வந்தேன். காதல் கீதல், தடைகிடை ஏதுமில்லையே? சரி என்னதான் நிகழ்கிறதென்று பார்ப்போம்.

ஆமாம். இன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரபல எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு தன்னோடு வருமாறு வித்யாவை அழைத்திருந்தாள் ரம்யா. வித்யாவும் சற்று தயங்கியவள் பிறகு வருவதாக ஒப்புக்கொண்டாள். நிகழ்ச்சி பிற்பகல் 3 மணிக்குத்தான். போகும் போது அழைத்துச் செல்லவேண்டும்.

வித்யாவை நினைத்ததும் பளிச்சென்று நினைவு மின்னியது. அவள் தான் காதலில் துயரப்பட்டு, நிகழக்கூடாத பயங்கரங்கள் நிகழ்ந்து மன அமைதிக்காக பணியின் பெயரைச் சொல்லி, நிம்மதி நாடி கனடா வந்துள்ளாள். அவளை பற்றிய துயரச்செய்திகள், குடும்பத்தில்; விபரித மரணங்கள் என மின்னூடகங்களில் பார்த்திருந்தாலும் அதெல்லாம் தனக்கு தெரிந்ததாக ரம்யா, வித்யாவிடம் காட்டிக் கொண்டதில்லை. அவளே தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்வைத் தேடி வந்துள்ளாள். அவளாக தனது அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளாத நிலையில் அவற்றை நினைவூட்டி காயப்படுத்திக் கொள்வது மறைக்கும் புண்ணில் மொய்க்க நுழையும் ஈயின் வேலையாகும். மனிதர்க்கு அழகல்ல! என்று இவர்களோடு மென்பெரி தொழிலில் உழலும் மற்ற பெண்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆகவே ரம்யா அப்பிரச்சனைப் பற்றி பேசுவதேயில்லை. ரம்யாவிடம் மட்டுமே வித்யா ஓரிரண்டு பொதுவான வார்த்தைகள் தமிழ்நாட்டுக்காரி என்றளவில் பேசுகிறாள். அந்தப் பகிர்விலும் அவளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாது என்பது ரம்யாவின் எண்ணம்.

ஞாயிற்றுக்கிழமைக்குரிய வீட்டுப் பணிகளை முடித்துக் கொண்டாள். வீட்டின் முன் தோட்டத்து செடிகளுக்கு நீர்வார்த்தாள். செடிகளில் கூட்டுப்புழுக்களைக் கவனித்தாள். நீர் அவைமேல் பட்டுவிடாமல் பார்த்துக்கொண்டாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோட்டத்துச் செடிகளுடன் பேசித்திரிவாள். இலைகளும் பூக்களும் தலையாட்டுவது. அவளது வேலை இறுக்கத்தையும், தனிமையின் தவிப்பையும் கலைத்துவிடும்!

மதிய உணவு முடித்து வித்யாவை நினைவூட்டி தயாராக இருக்கச் சொன்னாள். இருவரும் ஒரு காரில் புறப்பட்டனர். அறுபது கி.மீ தொலைவிலுள்ள நகரத்தில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கிற்குள் நுழையும் போது ஒரே பரவசம்! கருப்பு, பழுப்பு, செம்பழுப்பு, வெளிர் சிவப்பு நிறங்களில் ஆண்களும், பெண்களும் தமிழை மெல்லிதாக, உரத்த, இசைபட இழுவையாக என பல குரல்களில், சுரங்களில் பேசும் புலம்பெயர்ந்த தழிழர்கள். இது தமிழ்கூறும் நல்உலகமல்ல தமிழ்கூறும் நல்பிரபஞ்சம் என்று சொல்லத்தக்க வகையில் இருந்தது. பிரமித்துப் போனாள். இப்படியான விருது வழங்கும் நிகழ்வுகளுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ரம்யா வருகிறாள். அவளுக்கு வியப்பும், மகிழ்வும் விரிந்து கொண்டே போகிறது, ஆண்டுக்காண்டு கூடும் கூட்டம் விரிவடைவது போலவே! எப்பொழுதும் இறுகிய முகமாய் இருக்கும் வித்யாவின் முகமும் மலர்ந்து இருந்தது. கண்களில் ஒளிர்வு, இறுக்கம் தளர்ந்த இதயத்தை வெளிப்படுத்தியது.

“என்ன வித்யா கூட்டத்தை பார்த்தியா”,

“ரம்யா, இன்றைக்கு காலையிலிருந்தே சொல்ல முடியாத உணர்வு. எதோ புதியதாய், படிக்காத தேர்வெழுதப்போகும் படபடப்பும், நடுக்கமாய் இருந்தது. நான் வரமாட்டேன்னு சொன்னால் நீ கோபித்துக் கொள்வாய் என்று தயக்கத்தோடுதான், வந்தேன். இங்கே வந்ததும் தான் நினைத்தேன். எவ்வளவு நல்ல சூழலை, வாய்ப்பை இழந்துவிட இருந்தேன்! கடுங்குளிர்காலத்தில் தீயின் அருகே போவது போலவும், விலகிப் போவது போலவும் சொல்ல முடியாத பரவசம்!”.

ரம்யாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. வித்யா கனடா வந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகிறது. ஒரு நாளிலும் கூடி இப்படி அவள் பேசியதில்லை! அவள் இயல்பு நிலைக்கு வந்தால் நல்லது தானே! என்று மனம் பூரித்தாள். மேடை நிகழ்வுகள் தெளிவாகத் தெரியும்படியான ஒரு மையமான வரிசையில் உட்கார்ந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழின் உயர்வும் இன்றைய நிலையும் குறித்த பாடல்கள், ரத்தினச் சுருக்கமாய் விருதாளர்கள் அறிமுகம், பொன்னாடை அணிவித்தல், நினைவுப்பரிசுகள் வழங்குதல், விருதாளர்களின் நெகிழ்வும் கம்பீரமும் கலந்த உரைகள்! இப்படி ஒவ்வொரு நிகழ்வின் போதும் மேடையில் ஊடுபாவாய் அந்த இளைஞன் அலைந்தான். ரம்யா சொன்னாள் “அவனை கடந்த மூன்று ஆண்டுகளாகப் பார்க்கிறேன். இங்கு நடைபெறும் எல்லா கலாச்சார நிகழ்வுகளிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்கிறான். அவன் பெயர் சுகுமார். நம்ம தமிழ்நாட்டுக்காரன்தான். அநேகமாக உங்கள் மாவட்டத்துக்காரன் தான்னு நினைக்கிறேன். இந்த இளம் வயதில் இப்படி கலாச்சார நிகழ்வுகளில் இந்த அந்நிய பூமியில் உற்சாகத்தோடு கலந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!.”

“என்ன ரம்யா, அந்த இளைஞர் மீது உனக்கு எதுவும் தனிப்பட்ட விருப்பு அது இது உண்டா?”

“சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. இந்தக் காலத்தில் இளம் வயதிலும் இப்படியான கலாச்சார விழாக்களில் ஆர்வம் காட்டி உழைக்கிறார். இந்த அந்நிய மண்ணில் நிலவும் வித்தியாசமான தட்பவெப்பநிலைகளில், தொலைவு தொலைவாய் இருக்கும் இடங்களில் அலைந்து இயங்குவதற்கும் ஒரு சிறப்புகுணம், இயல்பூக்கம் வேணுமில்லையா அதனால் ஏற்பட்ட பாராட்டுணர்வு தவிர ஏதுமில்லை”.

“சொந்த ஊரின் துயரங்களை இப்படி உழைப்பதின் மூலம் கரைத்து கொள்கிறோரோஞ்” “இந்த வயசில் என்ன துயரம் இருக்கமுடியும் வித்யா?” என்று சொன்னவள் தனது நாக்கை மெல்லக் கடித்தபடி ரம்யா நேரடியாக வித்யாவை பார்க்காமல் ஓரக்கண்ணால் பார்த்தாள். வித்யாவின் செம்பழுப்பு முகத்தில் ஏதோ நினைவுமேகம் போல நிழலாடிக்கடந்தது. ரம்யா மௌனத்தை திசை திருப்பும் படியாகக் கேட்டாள். என்ன நீயும் அந்த இளைஞரையே பார்க்கிறாய்” என்றாள் கிண்டலாக. “ஒன்றுமில்லை அவரை எங்கோ பார்த்த மாதிரித் தெரிகிறது ஆனால் எங்கே என்று நினைவில் பிடிபடவில்லை” என்றாள் வித்யா.

மேடையில் ஒவ்வொரு நிகழ்வும் நெகிழ்வாகவும், தமிழ் உணர்வு பொங்குவதாவும் இருந்தன.

“அந்நிய மண்ணில் புலம்பெயர்ந்து படும்பாடுகளை இறுக்கத்தை எல்லாம் இது போன்ற நிகழ்வுகள் வடித்துவிடுகின்றன. மனசு இலேசாக இருக்கிறது’ என்றாள் வித்யா. ரம்யா தனது வலது உள்ளங்கையை தூக்கி வித்யாவின் வலது உள்ளங்கையோடு மோதி தனது ஒத்த நிலைப்பாட்டு மகிழ்வை வெளிப்படுத்ஜீனாள். விழா முடிந்தது. விதவிதமாய் தமிழ்க்குரல்கள் ஒலித்து மகிழ்வை வெளிப்படுத்தி கூட்டம் கலைந்தது. சுகுமார் என்ற அந்த இளைஞன் விருந்தாளர்களை, சிறப்பு அழைப்பாளர்களை உணவு ஏற்பாடு செய்திருந்த அரங்கிற்கு இங்கிதமான உடல்மொழி வெளிப்படுத்தி மகிழ்வுந்துகளில் அனுப்பிட உதவிக் கொண்டிருந்தான்.

திரும்பியவனை இவர்களிருவரும் வணங்கினர். அவன் வித்யாவை பார்த்த, பார்வை மின்னலின் தாக்குதலில் நினைவு சாளரம் திறக்க அதிர்ந்து, ஒரு கணம் உறைந்து நின்றான். வித்யாவுக்கும் அதே நிலை! அவனை எங்கோ துயார்கவ்விய இருட்டில் பார்த்த மங்கலான நினைவு. ரம்யா எதோ உணர்ந்தவள் போல், குரல் கொடுத்தாள். “சுகுமார், நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தன! வாழ்த்துக்கள்! தமிழ் அலையில் உருண்டு புரண்டு எழுந்த உணர்வு நன்றி” என்றாள். ரம்மியாவின் மெல்லிய குரல் பனிநீர் தெளித்ததுபோல் உணர்ந்து, நினைவுக்கு வந்தான் சுகுமார். வித்யாவின் முகத்தில் துயர மேகங்கள்! கண்ணீர் திரண்டிருந்தது.

சுகுமார் கேட்டான் “நீங்கஞ் வித்யா தானே?” அந்த குரல் அவளுக்கு நெருக்கமாகவும், துயர்தோய்ந்ததாகவும் இருந்தது. அவள் ‘ஆமாம்’ என்று ஆமோதிக்கவும் இயலாமலும், இல்லை என்று மறுக்கவுமியலாமலும் நின்றாள். ரம்யா இசைவாய் தலையாட்டி கண்களை மலர்த்தினாள். துடிப்போடும், கம்பீரத்தோடும் திரிந்த அந்த இளைஞன் கண்களிலிருந்து நீர்த்துளிகள் பொலபொலவென உருண்டன. ரம்யா ஏதோ புரிந்தது போல இருவரது தோள்களையும் மெல்ல தட்டி இயல்புநிலைக்கு கொண்டுவர முயன்றாள்…! சுகுமார், பின்னால் யாரையோ பார்ப்பது போல், திரும்பி கண்களைக் கைகுட்டையால் துடைத்துக் கொண்டான்.

“சரி, வாங்க முதல்ல, சாப்பிடுவோம்!” என்றான்.

“இல்லை, எனக்கு பசியில்லை! இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்” என்றாள் வித்யா! ரம்யாவுக்கு பசித்தது. சுகுமாரோடு சேர்ந்து மூவருமாய் சாப்பிட ஆசைதான். வித்யாவின் மனம் தனிமை தேடுவதை உணர்ந்தாள். சுகுமாரிடம் விடைபெற்றனர். ரம்யா, சுகுமாரைத் திரும்பி பார்த்தாள். அவரைக்கொடிபோல் துவண்டு, தளர்வாய் நடந்தான்.

வித்யாவும் வாடித்தான் இருந்தாள். ஒரு வாடகை வாகனத்தைப் பிடித்தனர். சற்று தள்ளி நிறுத்தச் சொல்லி ஒரு காபியகத்தில் சூடாய் இரு கோப்பை காபி வாங்கி வந்து வித்யாவிடம் ஒன்று தந்து வாகனத்தில் அமர்ந்தாள். கசப்பும் இனிப்பும் கலந்த சூடான காபி தொண்டைக்கு இதமாய் இருந்தது. வாகனம் நகர்ந்தது. வித்யாவின் நினைவுகளும் சுழன்றன.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்னால் கல்லூரியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட வளாகத்தேர்வில் பத்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வித்யாவும், ராஜ்குமாரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்ற எட்டு பேரில் ஆறு மாணவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் ஐதராபாத்தில் பணியிடைப் பயிற்சி ஓராண்டு தரப்பட்டது. ஒரே மாவட்டம், ஒரு மொழி என்றரிதியில் நெருங்கிப் பழகினர்! நட்பு காதலாக சொல்லும் போது ராஜ்குமார் தயங்கினான். நமது மாவட்டத்தில் நிலவும் சாதீய சூழலில் நமது காதல் நெறிக்கப்படும்’ என்று மறுதலித்தான். வித்யா மணந்தால் அவனையே மணப்பேன்! பெற்றோரை சம்மதிக்கவைப்பேன் என்றெல்லாம் சமாதானம் செய்தாள். ஊருக்குப் போகாமல் ஐதராபாத்தில் தங்குவோம். குடும்ப வாழ்வை நடத்துவோம் என்று முடிவானது. இருதரப்பு பெற்றோர்களும் ‘ஊர்ப் பொங்கல் விழாவுக்கு மூன்று நாள்கள் வந்து போங்கள் என்று தொலைப்பேசியில் தொடர்ந்து வலியுறுத்தியும் கெஞ்சியதாலும் இருவரும் அவரவர் ஊருக்கு பயணப்பட்டனர். வித்யாவின் உடல் மாற்றம், ஓயாத தொலைப்பேச்சுகளும் காட்டிக்கொடுத்துவிட்டன. நண்பர்கள் மூலமாக ராஜ்குமாரை நைச்சியமாக பேசி அழைத்து வந்தனர். உணவில் விஷம் கொடுத்து கிணற்றில் தள்ளிவிட்டனர். தற்கொலை செய்தி பரவியது. சந்தேகங்கள், சாட்சியங்கள் சாதிக்கொலை எனத் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இளைஞர்கள், மாதர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊடகங்கள் இருவரது படங்களைப் போட்டு ஓலமிட்டன. ராஜ்குமாரின் பெற்றோர் நீதிமன்றம் அலைந்தனர். வழக்கு வழக்காகவே நீள்கிறது. விடிவு இல்லை .

வித்யாவுக்கு மருத்துவம் பார்ப்பது போல கருக்கலைத்தனர். வேரொருவருக்கு மணம் பேசினர். மறுத்தாள். ‘தற்கொலைக்கு முயன்று விடுவாள்’ என்று காவல் காத்தனர். குளிக்கும் போதும் உண்ணும் போதும் உறங்கும்போதும் காவல். நரகத்திலிருந்து தப்பிக்கத்தான் வெளிநாட்டு வேலைக்கு வந்தாள். ஊரெல்லாம் தம்மை கொலைக்காரக்குடும்பமாய் பார்க்கும் உறுத்தல் தாங்காமல்தான் அவளது அப்பாவும், அம்மாவும் அவளை கனடாவுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் காசி, ராமேஷ்வரம் என்று அலைந்தனர். ராஜ்குமாரை இழந்தது போல் இளைய மகன் சுகுமாரை இழந்துவிடக்கூடாது என்றுதான் அவனை அந்த எளிய பெற்றோர் வெளிநாட்டுக்கு அனுப்பினர். அண்ணன் கொல்லப்பட்டான் என்று சொல்லும் போது ஊடகங்களில் வந்த செய்தியில் பார்த்த முகம்தான் சுகுமார்.

இவர்கள் வீட்டை அடைந்தனர். வித்யாவை தனியாக அவளது அறையில் விட்டுச் செல்வதைவிட அவளோடு கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்தால் அவளது மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று ரம்யா கருதினாள். வாடகைக்காரை அனுப்பி விட்டு அவளும் வித்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். முன்னம் நடந்த கதைகள் எல்லாம் சொன்னதில் வித்யாவின் மனம் வெள்ளம் வடிந்த மணல் தரை போல் பொது பொதுவென்று மென்மை படர்ந்திருந்தது. வித்யா எப்பொழுதும் மௌனமாக இருப்பதாகக் தோன்றுவாள். ஆனால் அவள் மனத்துக்குள் துயர அலை வீசிக்கொண்டே இருந்தது. சாதியின் பெயரால் தனது வாழ்வை இந்த சமூகம் சூரையாடிவிட்டது. வஞ்சித்துவிட்ட சமூகத்தை பழிதீர்க்க வேண்டும் எந்த சாதியின் பெயரால் தனது வாழ்வை பாழடித்த சமுகத்தை அந்த சாதியைக் கொண்டே பழிதீர்க்க வாய்ப்பை எதிர்நோக்கியே மவுனித்திருந்தாள். அவளது மௌனம் ஆழ்கடல் மௌனம்!. அந்த வாய்ப்பு தேடியே வெளிநாட்டுக்கு வந்தாள் அந்த வாய்ப்பு நெருங்கி வந்து விட்டதாகக் கருதினாள்.

அவள் முகம் கழுவி மாற்றுடை அணிந்து வருவதற்குள் ரம்யா சட்னி அரைத்து தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்டது. வித்யா கதவைத் திறந்தாள். சுகுமார் நின்றான். அவள் “வாருங்கள்” என மௌனமாகத் தலையசைத்தாள். அவன் அவளை பின் தொடர்ந்தான். ரம்யா “வாங்க சுகுமார்! வாங்க! தோசை சாப்பிடலாம்!”

“நீங்க சாப்பிடுங்க, நான் இப்போது தான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என்றபடி வித்யாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.

“எங்க வீட்டு தோசை ஒன்னையாவது ருசி பாருங்க” என்றாள் வித்யா. நீங்க பேசிக்கிட்டுருங்க ஒரு நிமிடத்தில் வந்துட்றேன்” என்று குளியலறைக்குள் ரம்யா போனாள்.

வித்யா நின்றிருந்தாள். சுகுமாரனும் எழுந்து நின்று வித்யா, எங்கள் குடும்பத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டிருந்தால் அதற்காக எங்கள் குடும்பத்தின் சார்பாக மிகுந்த வருத்தத்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அதை ஒன்றுதான் என்னால் செய்ய முடிந்தது”

“இல்லை, சுகுமார் என்னை சாக்கிட்டு சாதி வெறியர்கள் உங்கள் குடும்பத்தை சின்னா பின்னமாக்கிவிட்டார்கள். உங்கள் அண்ணனை இழந்து நொந்த, அம்மா அப்பாவை இழந்து நிற்கிறீர்கள். நல்லவேளை நீங்கள் தப்பிய விவரம் இன்று உங்களைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். உங்கள் குடும்பத்தை சாதியின் பெயரால் அழித்துவிட்டு, என்னையும் காவுகொடுக்க முயன்ற என் அம்மா அப்பா நிம்மதி தேடி பரிகாரம் வேண்டி கோவில் குளங்களுக்குத் திரிகிறார்கள்.

நான் உங்களுக்கு எதாவது செய்தாக வேண்டும்! செய்தாக வேண்டும். செய்தாக வேண்டும்” என்று மனது உருக கண்ணீர் பெருக்கெடுத்து அழுதாள். அவளை அமைதி படுத்த அவளது அழுகையை தடுக்க நீட்டிய அவனது உள்ளங்கைகளில் ரொம்ப நாள் பழகியவள் போல் வித்யா குத்தினாள். அவன் புரியாது திகைத்து நின்றான்.

காலையிலிருந்து மனதில் ரிங்கரித்த கவிதையின் அர்த்தம் புரிந்தவளாக “அப்பாடா, வெக்கைதீர, மனசு குளிர ஒரு குளியல் போட்டாச்சு” என்றபடி ரம்யா குளியலறையிலிருந்து வெளிய வந்தாள். தோட்டத்து செடியில் கூட்டுப்புழுக்கள் இருந்தவை வண்ணத்துப் பூச்சி களாகப்பறந்தன.!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top