வேரும் விழுதுகளும்

0
(0)

“என்னடி டாக்டருக்கு படிக்கிறவ சின்னப் பிள்ளையாட்டம் இப்படித் திடுதிடுன்னு ஓடி வர்றே…? என்ன பிரச்சனை?” என்று மகளைக்கட்டித் தழுவியபடி லட்சுமி கேட்டாள்.

“ஒன்றுமில்லையம்மா, நாளைக்கிருந்து இந்தக் கிழடுகள் கிட்டே இருந்து நமக்கு விடுதலை…!” என்று மகள் பிரியா மேல்மூச்சு வாங்க கைகளை உயர்த்தி குதித்தபடி சொன்னாள். “அட புரியற மாதிரிதான் சொல்லேன்” “நீ டியுப் லைட்டும்மா. அண்ணன் இன்னிக்கு நைட்டு கிளம்பி வர்றேன்னு போன்ல சொல்லுச்சு. அண்ணனைப் பார்த்ததும் இந்தக் கிழடுக கிராமத்துக்குப் போயிரும். நமக்கு நிம்மதி! வீட்ல தொண தொணப்பு இருக்காது!.

“அண்ணன் வரட்டும், சந்தோசம் தான். பாட்டியும் தாத்தாவும் உன்னை என்னடி பண்ணினாங்க? மருமகக்காரி நானே சும்மா இருக்கேன்…. நீ அவங்களை விரட்டிறதிலேயே குறியா இருக்கியே…?”

“அம்மா, உனக்கு என்ன தெரியும்? சமையல் கட்டிலேயே உன் பொழுது போயிடுது. எனக்கில்ல இடைஞ்சல்! ஒரு டீவி பார்க்கமுடியலை. ஆற அமர ரூம்ல உட்கார்ந்து படிக்க முடியலை. எந்த நேரமும் இந்தக் கிழவியைத் தேடி ஆளுக வந்துகிட்டே இருக்காங்க! குடலு விழுந்திருச்சு குடலைத் தட்டனும்னு.. கால் சுளுக்கு எடுக்கணும்னு, மூச்சுப்பிடிப்பு எடுத்து விடணும்னு ஒரே கூட்டம்! அவனவன் அனாடமி, பிசியாலஜின்னு உடல்கூறு படிச்சு பிராக்டிகலா உடம்பை அறுத்து உறுப்புகளைத் தொட்டு பார்த்த வங்களே சுளுக்கு எடுக்கறதுக்கு, குடலைத்தட்டி விடறதுக்கும் தடுமாறுறாங்க. இவங்க பெரிய அனடாமிஸ்ட், பிசியாலஜிஸ்ட் மாதிரி, ஸ்கேன்ல பார்த்த மாதிரி, அங்கே தொடுவாங்களாம், இங்கே தட்டு வாங்களாம் சுளுக்கு, தசைப்பிடிப்பு எல்லாம் சரியா யிடுதாம்! என்னம்மா கதை? இந்த லட்சணத்தில் வர்றவங்க போரவங்க எல்லாம் டாக்டருக்கு படிக்கிற என்னை ஏற இறங்க ஏளனமா பார்த்துட்டுப் போறாங்க…”

“மணி அஞ்சரையாச்சா.. கரக்டா அந்தக் கிழவி தோட்டத்தைக் கூட்டி வேப்பஞ்சருகுகளுக்கு தீ வச்சிருச்சு போலிருக்கு, வேப்பஞ்சருகு கருகிற கசப்பு வாசம் வீசுது பாரு!” என்று பிரியா மூச்சுவிடாமல் வார்த்தைகளைப் பொழிந்தாள்.

“அடப்போடி, இதுக்குத்தான இந்த லாவணி அவங்க மனுஷ உடம்பு அமைப்பை அனுபவ அடிப்படையில் கத்துகிட்டவங்க! அவங்க பன்ற நாட்டுவைத்தியம் ஓரளவு சரியாயிருக்குது. அந்த வேப்ப இலை புகைமூட்டம் ஒங்க பாட்டி போடறதனால கொசுத் தொல்லை இல்லை! கொசு விரட்டிக் குப்பி வாங்கிற செலவு மிச்சம்! இல்லாட்டி நீயும் நானும் கொசுவை அடிக்க கோலாட்டம் கும்மியாட்டம் ஆடற மாதிரி கையை மேலத்தூக்கி இறக்கி தட்டி விரட்டிகிட்டிருக்கணும்” என்றாள் அம்மா. “ஆமாம், நீயும் பாதி கிழவியாயிட்ட இல்ல..? நீ அவங்களோட சேர்ந்துட்டே…?” சரி மூஞ்சியைக் கழுவிட்டு வா, காபியைக் குடிச்சிட்டு படிக்கிறதைப்பாரு!”

“என்ன தாயி வீட்டுக்குள்ளே அப்படி அரக்க பரக்க ஓடியாந்தே…? என்ன பிரச்சினை?” என்றபடி பொன்னுத்தாயி பாட்டி வந்தது இந்தக்கிழவிக்கு பாம்புக்காது! சத்தம் கேட்டு வந்திருச்சே..? பிரியா முனங்கினாள். “ஒண்ணுமில்லங்க அத்தே! உங்க பேரன் ஊருக்கு வர்றேன்னு போன்ல சொன்னானாம் அந்த சந்தோசத்தில் அப்படி குதியாட்டம் போட்டு ஓடியந்தா. வேறொன்னுமில்ல! இன்னும் கொஞ்சம் காபி குடிக்கிறியளா..? என்று லட்சுமி சொன்னதும் பேரப்பிள்ளை வர்ரானா, சந்தோசம் தான்! அந்த விடக்கோழியை அடிச்சு சாறு வச்சு குடுத்திடலாம்’ என்றபடி பாட்டி வீட்டு முற்றத்திற்குப் போனது லட்சுமியும் மகள் பிரியாவும் பரிகாசப்பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

பின் தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு தூசுகளைக் கழுவித் துண்டில் துடைத்தபடி தாத்தா வந்தார். “என்ன பேத்தி, இன்னிக்குப் பாடம் எல்லாம் எப்படி இருந்தது? எத்தனை நோயாளிகளைப் பார்த்தீங்க, முக்கியமான கேஸ் எதுவும் உண்டா ?” ‘ஆமாம், இவரு மருத்துவப் படிப்பில் அத்துப்படி இவருகிட்ட நாம சொல்ற தெல்லாம் புரியப் போகுது! கிழடுக சும்மா கிடக்க மாட்டேங்குதே..’ என்று நினைத்தபடியே, “வழக்கம்போல நல்லா இருந்துச்சு தாத்தா! ‘காபி சாப்பிடுகிறிகளா” என்று பேச்சின் திசையை மாற்றினாள் பிரியா…

“இப்பத்தான் குடிச்சேன் பேத்தி. டிவியில அந்த சாக்ரபி போடுமா. அதுலதான் காட்டுக்கத்தல் இல்லாம இயற்கையா இருக்கு. நேற்று நீ போட்டேயில்ல, அதில் அந்தந்த நாட்டு மலைச் சிகரங்கள் அந்த நாட்டு தலைவர்கள் தியாகிகள் உருவம் அமைச்சு அவர்களையும் கொண்டாடுறாங்க அந்த மலைகளையும் பாதுகாக் கிறாங்க! இங்க என்னடான்னா மலைகளை எல்லாம் கேக்குத் துண்டா வெட்டி கிரைனைட்டுன்னு வெளிநாட்டுகளுக்கு விக்கிறானுங்க. மழைக்காத்தை தடுக்க மலைத் தடுப்பு இல்லாம இந்த ஊர்ல பெய்ய வேண்டிய மழை மூனு ஊரு தாண்டிப்போய் பெய்யிது. இந்த ஊரும் நாடும் உருப்படுமா?” ‘ஆஹா ஆரம்பிச் சிட்டாரய்யா” என்று முனங்கி தலையில் அடித்துக் கொண்டு பிரியா டிவியில் ஜாக்ரபி சானலைத் தேடினாள். அடுத்தடுத்த அலை வரிசைகளில் கிரிக்கட் விளையாட்டு பளிச்சிட்டு ஓடின.

“இங்க பாரு, எந்தச் சானலை எடுத்தாலும் அந்தக் கிட்டிப் புல்லு விளையாட்டுதாம். இந்த இளந்தாரிப்பயக கள்ளுக் குடிச்சக் குரங்காட்டம் அதே கிறுக்காவுல்ல திரியரானுங்க… இந்த நாட்டு விவசாய மந்திரிக்கு விவசாயத்தைப் பத்தி கவலை இல்ல. சக்கரை, அரிசி, வெங்காயத்தை எல்லாம் ஏற்றுமதி பன்னிட்டு கிட்டிப்புல்லு விளையாட்டுத் தலைவரா இருந்தாப் போதும்னு திரியாராரு” என்று சொல்லிக்கொண்டிருந்தார். பிரியாவுக்கு முகம் சிவந்து விட்டது. பல்லைக் கடித்துக்கோபத்தை அணைபோட்டு நேஷனல் ஜியாக்ரபி சானலைப் பிடித்துக் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அறைக்குள் அடைக்கலமானாள்.

‘அண்ணன் வரட்டும் அவனிடம் சொல்லி இந்தக்கிழடுகளை ஊருக்கு விரட்டிவிடுவோம். ஆனாலும் இந்தக் கிழடுகள் வந்தது முதல் வீட்டுத் தோட்டத்தில் காய்கனிகள் விளைய ஆரம்பிச்சிருச்சு சாய்ங்காலத்தில் வேப்ப இலை மூட்டம் போடறதால கொசுத் தொல்லை இல்லாமல் போச்சு. அடுத்த தெருவில் வைரஸ் காய்ச்சல பலகுடும்பங்கள் சிரமப்பட்ட போது நம்ம வீட்லையும், சுத்தி இருக்கிற வீடுகள்ளையும் யாருக்கும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லையே..!

ஆனா என்ன, இந்தக் கிழவி வந்ததில் இருந்து ஷாம்பு போட்டுக் குளிக்க முடியலை. “ஷாம்பு போட்டுக்குளிச்சா ரசாயனத்தில் முடி உதிரும்! சாக்கடைத் தவளைகள் எல்லாம் செத்துப்போகும், கொசு பிறப்பைக் கட்டுப்படுத்த முடியாது”ன்னு சொல்லி கிராமத்தில் இருந்து அரப்புத்தூள்னு பச்சை நிறத்தில் கொண்டாந்து சீயக்கா யோடு போட்டு அரைச்சு குளிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துது. அது ஒரு மாதிரி வாசனையா இருக்கு. கூட படிக்கிறபிள்ளைகள் எல்லாம் ஒரு மாதிரி பார்க்குதுக. தனிவாசனை மூக்கை உறிஞ்சி உறிஞ்சி கேலி பன்னுறாங்க. ஆனா ஒருமுடி உதிரலை. ஒரு பொடுகு இல்லை. அந்தப் பேச்சுத் தொல்லைதான் தாங்கலை!

ஆனா அந்தக் கிழவன் எதாவது பேசிகிட்டுத்தான் இருக்குது. நேற்று பாரு பக்கத்து தெருவில் புதுவீடு கட்டி புதுப்புது நிறங்களில் ஜொலிக்குது. இதைப் பார்த்துட்டு வந்து வீட்டில புலம்ப ஆரம்பிச்சிட்டாரு.

“நம்மா நாடு வெயிலு தேசம். வெக்கை நாடு. இங்க வெள்ளைச் சுண்ணாம்பை சுவத்தில் அடிச்சா வெயிலும் குளிரும் வீட்டைத் தாக்காது. பூச்சி புழுக சுவத்தில் தங்காது. இப்படி கெட்டியான நிறமடிக்கிறானுங்களே கண்ணுக்கு பளிச்சின்னு இருக்குமொழிய வீட்டுக்குள்ளே அனலையும் குளிரையும் தடுக்காதே.” கவலைப் பட்டுத் தலையில் அடித்துக் கொண்டார். இந்த ஊரு வம்பெல்லாம் நமக்குத் தேவையா? இதவிடக் கொடுமை! இந்த வருசம் தைப் பொங்கலுக்கு வீட்டுச் சுவர்ல டிஸ்டம்பர் பெயிண்ட அடிக்காம வெள்ளைச் சுண்ணாம்பை அடிக்க வச்சிட்டாரு. இந்த வீடு மட்டும் தனிச்சு வெள்ளையா நிக்குது. “என்னடி இந்த இருபத்தோராம் நூற்றாண்டில இப்படி இருக்கீங்கன்னு என்னோட சினேகிதிக கேலி பேசுராங்க.

இராத்திரி அப்பா வேலை முடிஞ்சு வந்து குளிப்பார். சாப்பிட்டுவிட்டு வாசலுக்கு வந்ததும் தாத்தா ஊருக்கதை, உலகக்கதை எல்லாம் பேச ஆரம்பிச்சிருவாரு. அப்பா இடை யிடையே ஒவ்வொரு வார்த்தை பேசிகிட்டு உம் உம் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருப்பாரு.

“என்னப்பா தாத்தா பேசிகிட்டே இருக்காரு, கேட்டுக்கிட்டே இருக்கிங்களே போரடிக்கலையா?”

“அவரு அனுபவத்தை அவரு சொல்றாரு. நமக்கு தேவை யானதை எடுத்துக்கலாம். தேவையில்லாததை விட்டுற வேண்டியது தான்” என்கிறார். அப்பாவுக்கு வயசாயிருச்சு கிழடுகளோட சேர்ந்திட்டார்’ என்று முனங்கியபடி அறைக்குள் போனாள் பிரியா.

தண்ணீர் குடிக்கலாம் என்று சமையல் கட்டுக்குப் போனாள் பிரியா. அங்கே அம்மா ஆட்டுரலில் மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள். “என்னம்மா மறுபடியும் கிரைண்டர் பழுதா..” “இல்லடி உரல்ல ஆட்டினாத்தான் இட்லி ருசியா இருக்கும்னு சொல்லி உங்க பாட்டி சொல்லுச்சு. இந்த ஒரு மாசமா ஆட்டுரலில் தானே ஆட்டுகிறேன். உனக்கு ருசி தெரியலையா”.

“எனக்கு ஒன்னும் தெரியலை”

“அடிப்போடி நாக்குச் செத்தவ”

“நான் நாக்குச் செத்தவளா இருந்துட்டுப் போறேன் அப்பா தலையில் மாவு அரைச்சு கிரைண்டர் வாங்கினே, நீ எப்படி இந்த உரலை ஆட்றதுக்கு ஒத்துக்கிட்டே?”

“அடப் போடி கிண்டலா பன்றே? இந்தப் பெரிசுக வந்த மறுநாள் கிரைண்டர்ல மாவு ஆட்டிக் கிட்டு இருந்தேன் உங்க பாட்டிதான் சொன்னது. “என்னதாயி இந்த மிஷின்ல மாவு ஆட்டுறே இது திங்க விளங்காதேன்னு சொன்னது. ‘இல்லத்தே நல்லா இருக்கும்த்தே’ என்றேன்.

“நீ உரல்லே போட்டு மாவு ஆட்டும்போது அந்த மாவுல உன் கைமணமும் காத்தோட மணமும் சேரும். இந்த காத்தோட ருசிதான் இட்லிக்கு ருசியைக் கொடுக்கும். கிரைண்டர்ல அறைக்கும் போது மூடிபோட்டு காத்தடைச்சு அறைக்கிறதனால மாவு சூடேறிப்போய் மாவுசீக்கிரம் புளிச்சிரும் ருசியும் போயிரும். இதே போல அம்மியில மல்லி மிளகாய் சீரகம் வச்சு அரைச்சுப் பாரு, உன் கைமணமும் காத்தோட மணமும் சேர்ந்து அந்தக்குழம்பு என்னமா மணக்கும் பாரு என்றது பாட்டி.

காத்துக்கு ருசி இருக்காத்தேன்னு உன்னை மாதிரிதான் நானும் கேட்டேன். நாளைக்கு நான் அரைச்சுத்தாறேன் சமைச்சுபாருன்னு மறுநாள் அரைச்சுக் காமிச்சது! அதிலிருந்து இந்த ஒரு மாசமா கை அரவைதான்.

‘ஆகா சரியான மாமியா, சரியான மருமக! போன நூற்றாண்டில இருக்கவேண்டிய ஜீவன்கள்” என்று பிரியா கேலி செய்தாள், “மெல்ல பேசுடி, பாட்டி காதில் விழுந்துரப் போகுது”

“நீ மாமியாராகப் போற சமயத்தில் உன் மாமியருக்கு பயப் படறே” என்று பிரியா கிண்டல் செய்தாள் அம்மா அவளை சமையலையிலிருந்து வெளியே தள்ளி, “போ படி போ” என்று விரட்டினாள்.

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் பாட்டி காதில் விழுந்திருக்கும் போலிருக்கு. முன்வாசலில் பாட்டி தனித்து உட்கார்ந்திருந்தாள். முகம் சுட்ட கத்தரிக்காய் போல் சுருங்கிப்போய், சிந்தனை முடிச் சுக்கள் கோர்த்திருந்தது. இதைக் கவனித்த தாத்தா அதிர்ந்து போனார். என்ன விபரம், முகம் இப்படி இருக்கிறது என்று கேட்டார். பாட்டி பெருமூச்சு விட்டபடி நா தழுதழுக்கச் சொன்னாள்.

“நாம சும்மாவா உட்கார்ந்து மகன் வீட்ல் சாப்டறோம்? வம்பாடு படறோம். எப்படி எல்லாம் இவர்களுக்கு உழைச்சு உதவியா இருக்கோம். அந்தச் சின்னக்குட்டி பிரியா எந்த நேரமும் நம்மலை கரிச்சுக் கொட்டுறா, வீட்டை விட்டுத் துரத்துற பேச்சா பேசுறா, உங்களையும் என்னையும் ஏளனமா எகடாசியாப் பேசுறா… இங்க இருக்க பிடிக்கலை. வாங்க, கிராமத்துப் பக்கம் போவோம். இல்லாட்டி எங்கிட்டாவது கண்காணாத காட்டுக்குப் போவோம்! யாருக்கும் சுமையா இருக்கவேண்டாம்! நிழலின் அருமை வெயில்ல தான் தெரியுங்கிற மாதிரி நாம இல்லைண்ணா தான் நம்மலைப் பற்றி உணருவாங்க”,

“அடி என்ன பைத்தியக் காரத்தனமா பேசுறே..? அந்தச் சின்னப் பிள்ளைதான் புரியாமப் பேசுதுன்னா அதைவிட சின்னப் பிள்ளையாவில்ல நீ இருக்கே? வேரொட பெருமை விழுதுகளுக்கு தெரியாது. விழுதுகள் தாம் மரத்தைத் தாங்கிற மாதிரி தெரியும். வேரில்லைன்னா மரமும் இல்லை விழுதும் இல்லை. விபரம் தெரிஞ்ச நாமலே கோவிச்சுக்கலாமா? நம்ம பேத்திதானே பேசுது, வேற யாரும் பேசமுடியுமா? சரி மகனோ மருமகளோ நம்மளை மரியாதைக் குறைவா நடத்திறாங்களா? இல்லையோ…..!”

தாத்தா சொல்லிப் பார்த்தார் பாட்டி போட்ட முடிச்ச நெகிழலை. பிடிச்ச பிடிவாதம் தளரலை! ராத்திரி முழுக்க புலம்பலும் முனங்கலும் நீண்டது. விடியற்காலையில் சிறுதுணிப் பையோடு வீட்டை விட்டுக் கிளம்பிய பாட்டிக்குத் துணையாய் தாத்தாவும் கிளம்பினார். மாடை ஓட விட்டுத் தான் அணைந்து பழகியவர் தாத்தா. அறுபது வருச தாம்பத்யம் இப்படித்தான்.

காலையில் வாசல் தெளிக்க வந்த லட்சுமிக்கு மாமியாரையும் மாமனாரையும் காணாதது அதிர்ச்சியாக இருந்தது. பின்னால் தோட்டத்திற்கு ஓடிப்போய்ப் பார்த்தாள். அங்கும் இல்லை. முன்னறைக்கு வந்து அவர்களது துணி மணிகளைப் பார்த்தாள், இல்லை! பதறிப்போய் கணவனை எழுப்பினாள். அவருக்கு அம்மாவின் குணம் தெரியும். சொல் பொறுக்காதவர். ஏதோ நடந்திருக்கு, பேசநேரமில்லை. இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம், ரயில்நிலையம், கோயில், குளம் என்று தேடினார். ஏமாற்றம். மனசுக்குள் குமுறி அமுதார். வெளிக்காட்ட முடியவில்லை. தண்ணீர் வராத தெருக்குழாய் மாதிரி மூச்சுக்காற்று மட்டும் புஸ் புஸ்ஸென்று வந்து மனக் கொதிப்பைக் காட்டியது.

வீட்டுக்குத் திரும்பினார். வீட்டின் முன் தெருவே கூடியிருந்தது. அதிர்ச்சியாக இருந்தது. பதறிப்போய் உள்ளே நுழைந்தார். எல்லோரும் துக்கம் கேட்பது போல பார்த்தனர். பாட்டியின் வைத்திய முறைகளையும், தாத்தாவின் அனுபவ ஆலோசனை களையும் தெருவே அன்னம்பரித்து பேசியது. அப்பாவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. அம்மா லட்சுமி முந்தாணையை வாயில் பொத்தி துக்கத்தையும் அழுகையையும் அடைத்துக் கொண்டி ருந்தாள். பிரியா பல நினைவுகளை அசைபோட்டு துயரத்தை உணர்ந்தவள் போல தரையில் உட்கார்ந்தது குனிந்து இருந்தாள். கைகள் எதையோ தரையில் எழுதி எழுதி அழித்தபடி இருந்தன. அவள் என்ன எழுதினாள், ஏன் அழிக்கிறாள்? யாருக்குத் தெரியும்?

இந்த மவுன வேதனை தொடர்ந்தது, தெருமக்கள் அவரவர் கற்பனைக்கு பலபட பேசினர் பாட்டி தாத்தா பற்றி என்ன, ஏது என்று தெரியாமல் யாருக்கும் என்ன பதில் சொல்வது?

மணி பத்தாயிற்று, அப்பா கிராமத்துக்கு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டார். அவர்கள் அங்கும் போகவில்லையாம். காவல் நிலையத்தில் புகார் செய்வதா.. பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடுவதா.. கேள்விகள் அப்பாவைக் கடைந்தன. நெளிந்தார். நிமிர்ந்தார், குனிந்தார், பெருமூச்சு விடுவதைத் தவிர அவரால் எதுவும் செய்யமுடியவில்லை .

கைப்பேசியில் பிரியாவுக்கு அழைப்பு வந்தது. பதற்றத்தோடு எடுத்தாள். எதிர்முனையில் அண்ணன் “மரபு சார்ந்த விவசாயத் தொழில் நுட்பத்தின் அனுபவ அறிவாளுமை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்ய டெல்லி பல்கலைக்கழகம் ஒப்புதல் தந்துவிட்டது. தாத்தாவின் விவசாய அனுபவ அறிவை பதிவு செய்து, ஆய்வு செய்ய அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன்…. என்று தொடர்ந்தான்.

பிரியா ஓவென்று குரலெடுத்து அழுதாள். தாத்தாவை பாட்டியை எங்கே தேட……

நீங்க யாரும் அந்த வயதான தம்பதியைப் பார்த்தால் தகவல் சொல்லுங்கள்.

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top