தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, “மன்னனே! நீ என்ன வேலை செய்து வெற்றி அடையப் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத் தாம் அடைந்ததைக்கூட எளிதில் விட்டு விடுகிறார்கள். இதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன். கவனமாகக் கேள்“ என்று கூறிக் கதை சொல்ல ஆரம்பித்தது.
தமிழ்நாடு என்ற தேசத்தில் பலவிதமான தேர்தல்கள் நடைபெறுவது வழக்கம். பாராளுமன்றம், சட்டசபை, மேல்சபை, அவை தவிர அவ்வப்போது இடைத் தேர்தல்கள் என்று ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கும்.
ஆயினும் திடீரென்று எதிர்பாராத ஒரு தேர்தல் வந்தது. பஞ்சாயத்துத் தேர்தல் என்று பெயர். பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் போகச் சந்தர்ப்பம் கிடைக்காத அரசியல்வாதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட தேர்தல்.
வெகு காலமாக நடைபெறாமலே இருந்து திடீரென்று பஞ்சாயத்துத் தேர்தல் வந்ததும் தமிழ்நாடு திருவிழாக் கோலம் பூண்டது. தேர்தல் காலச் சுறுசுறுப்பில் கலகலப்பானது. பலவிதக் கொடிகள் பறக்கவிடப் பட்டன .எல்லாச் சுவர்களும் வெள்ளை அடிக்கப்பட்டுத் தேர்தல் கோஷங்கள் எழுதப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் கொடிகளோடு விரைந்தன . ஒலி பெருக்கிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
வெவ்வேறு கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியாக ஆரம்பித்தன. இடம் நிச்சயமானவர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தார்கள். மக்களைச் சந்தித்து ஓட்டு கேட்க ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் தங்கள் பெயர் வெளியாவதற்காகக் காத்திருந்தார்கள்.
தேர்தல் சமயங்களில் மட்டுமே உருவாகும் கூட்டணிகளில் உள்ள கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீட்டின் காரணமாக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாயிற்று. அதன் காரணமாக நிறையப் பேரின் இரத்த அழுத்தமும் அதிகமாயிற்று.
ஆனால் அந்த பரபரப்பினால் எந்தவிதத்திலும் பாதிக்கப் படாமல் இருந்தார் ராமசாமி. எக்காளப்பட்டி யூனியன் தலைவர் பதவிக்குத் தன் கட்சி வேறு யாரையும் நிறுத்தாது என்று அவருக்குத் தெரியும். ராமசாமி அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஆளுங் கட்சிப் பிரமுகர். வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
எதற்கும் இருக்கட்டுமே என்று ஒவ்வொரு கட்சியும் மாற்று வேட்பாளராக ஒருவரை நிறுத்தும். ராமசாமிக்கு மாற்று கூடக் கிடையாது. அந்த அளவிற்கு நிச்சயமாக்கப்பட்ட இடம் அவருடையது.
பிரதான எதிர்க்கட்சி அவரை எதிர்த்து அறிவுத் தம்பியை நிறுத்தியது. அறிவுத் தம்பி எம். ஏ. முடித்த இளைஞர். கட்சியில் தீவிரப் பற்று உடையவர். அவருக்கு மாற்றாக இன்னொருவர்.
அப்புறம் இன்னொரு தேசியக் கட்சியும் ஒருவரை நிறுத்தியது. அவருக்கும் ஒரு மாற்று.
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளும் முடிந்தது. எக்காளப்பட்டியில் மும்முனைப் போட்டி உறுதியாயிற்று. இரண்டு மாற்று வேட்பாளர்களும் வழக்கம் போல் விலகிக் கொள்வதாகத் தீர்மானமாயிற்று.
ராமசாமிக்கு தமிழரசி என்று ஒரு மகள். அறிவுத் தம்பியோடு ஒன்றாகப் படித்தவள். படிக்கும்போதே இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். படித்து முடித்ததும் அறிவுத் தம்பி அரசியலில் இறங்கியதில் தமிழரசிக்கு சந்தோஷம். தந்தை அரசியல்வாதியாதலால், ஓர் அரசியல்வாதியையே கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பினாள். ராமசாமிக்கும் அவர்கள் காதல் பற்றி ஓரளவிற்கு தெரியும்.
தன் தந்தையை எதிர்த்து அறிவுத் தம்பி தேர்தலில் நிற்பது தெரிந்ததும் தமிழரசி வருத்தப்படத்தான் செய்தாள். ராமசாமி வெற்றி பெற்றுவிடுவார் எனத் தெரியும். அறிவுத் தம்பியின் அரசியல் வாழ்வில் ஓர் அனுபவமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று நினைத்தாள்.
ராமசாமியும் கவலையில்லாமல்தான் இருந்தார். ஆனால் தேர்தல் நாள் நெருங்க நெருங்க இலேசாகக் கவலைப்பட ஆரம்பித்தார். அறிவுத் தம்பி இளைஞன். எதிர்க் கட்சி மட்டுமில்லாமல் மற்ற கட்சி இளைஞர்களும் அவனை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். இளைஞர் ஓட்டுகளும், நடுநிலை ஓட்டுகளும் அறிவுத் தம்பிக்குப் போய் விட்டால் தாம் தோற்று விடுவோமோ என்று அஞ்சினார்.
அந்தத் தேர்தலின் முக்கிய அம்சம், ஐந்து பேரில் அறிவுத் தம்பி தவிர மற்ற நால்வரும் ஒரே ஜாதி. தேசியக் கட்சி வேட்பாளர் ஜாதி ஓட்டுகளைப் பிரித்துவிட்டால் தமக்கு ஓட்டு குறையலாம் என்ற பயம் வேறு.
எப்படியாவது அறிவுத் தம்பியை விலக்கி விட்டால் நல்லது என கணக்குப் போட்டார். தமிழரசியைத் தூது அனுப்பினார். அறிவுத் தம்பி விலகாவிட்டால் அவளை மறக்க வேண்டியதுதான் என்றார்.
தமிழரசி நேராக அறிவுத் தம்பியிடம் போனாள். தந்தையின் மிரட்டலைச் சொன்னாள் . ஆனால் அறிவுத் தம்பி மறுத்துவிட்டான்.
தமிழரசி வெகு நேரம் பேசிப் பார்த்தாள். அறிவுத் தம்பி ஆளுங் கட்சியின் மோசமான ஆட்சியைப் பற்றி தேர்தல் பிரச்சாரப் பாணியில் பேச ஆரம்பித்ததும் மனமொடிந்து விட்டாள். ராமசாமி தேர்தலில் இருந்து விலகாவிட்டால் தன்னை மறந்துவிடும்படி பதில் மிரட்டலை வெளியிட்டான் அறிவுத் தம்பி.
தமிழரசி தன் தந்தையிடம் எல்லாவற்றையும் சொன்னாள். ராமசாமி விலக முடியாது என்று கூறிவிட்டார். வேற்று ஜாதிக்காரனோடு என்ன உறவு என்று திட்டினார். தேர்தலில் தோற்றதும் அவன் திமிர் அடங்கிவிடும் என மகளைச் சமாதானப்படுத்தினார்.
தமிழரசி அறிவுத் தம்பியைச் சந்தித்துக் காதலைவிட தந்தை மேல் உள்ள பாசமே பெரிது என்று சொல்லிவிட்டாள்.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் எக்காளப்பட்டி மக்களுக்குத் தெரியாது. வேட்புமனுவை வாபஸ் வாங்கும் கடைசி நாளும் வந்து சேர்ந்தது. அன்று மாலை கிடைத்த செய்தி எக்காளப்பட்டி முழுவதுமே பெரும் வியப்பை உண்டாக்கிவிட்டது.
ராமசாமி, அறிவுத் தம்பி இருவருமே தேர்தலில் இருந்து விலகிவிட்டிருந்தார்கள். தேசியக் கட்சியின் மாற்று வேட்பாளர் ஏற்கனவே விலகிவிட்டதால் கடைசியில் எதிர்க் கட்சியின் மாற்று வேட்பாளராக இருந்தவருக்கும் தேசியக் கட்சியின் வேட்பாளருக்கும்தான் போட்டி நடந்தது.
வேதாளம் இக்கதையைக் கூறி, ”மன்னனே! தன் மகளின் காதலுக்காகப் போட்டியில் இருந்து விலகிய ராமசாமி, காதலிக்காக விலகிக் கொண்ட அறிவுத் தம்பி, தந்தை மீதுள்ள பாசத்தால் காதலைத் தியாகம் செய்த தமிழரசி. இவர்களில் யாருடைய தியாகம் உயர்ந்தது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்திருந்தும் நீ கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகிவிடும்“ என்றது.
விக்கிரமன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.
“தியாகமாவது கத்திரிக்காயாவது? மூவரின் செயலுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. ஆளும் கட்சியின் தலைவர்கள் கடைசியில் சில நிர்ப்பந்தங்களால் தேசியக் கட்சியோடு கூட்டு வைக்க முடிவு செய்து விட்டார்கள். சில தொகுதிகளை தேசியக் கட்சிக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை. எக்காளப்பட்டியும் அதில் ஒன்று.
கூடிய சீக்கிரமே ராமசாமியை எம்.எல்.சி. ஆக்கி, முடிந்தால் மந்திரி பதவியும் தருவது என்ற செய்தியோடு தலைவர் தூது அனுப்பினார். ராமசாமியும் லாப நஷ்டங்களைக் கணக்கிட்டு , மறு பேச்சு இல்லாமல் விலகிக் கொண்டுவிட்டார்.
எதிர்க் கட்சியின் தலைமையிடத்திற்குக் கடைசி நேரத்தில்தான் முக்கியமான செய்தி ஒன்று கிடைத்தது. அறிவுத் தம்பியின் ஜாதி அந்தத் தொகுதியில் மிகக் குறைவு. மாற்று வேட்பாளரால்தான் ஜாதி ஓட்டுகளைப் பெற முடியும். கேவலம், ஜாதியைக் காரணமாக வைத்துத் தங்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிடக் கூடாதே என்று நினைத்து அறிவுத் தம்பியை விலகிக் கொள்ளும்படி செய்தி வந்தது. இளமைத் துடிப்பில் அறிவுத் தம்பி மறுத்தான். தொடர்ந்து சற்றே மோசமான மிரட்டல் வந்தது. அறிவுத் தம்பி புத்திசாலி. கை, கால் சேதமடைவதை விரும்பாமல் விலகிக் கொண்டான்.
ஆளுங்கட்சியை விட்டுவிட்டு பிடிவாதமாக எதிர்க் கட்சி மீது பற்று வைத்திருக்கும் அறிவுத் தம்பி போன்றவர்களால் அரசியலில் காலந்தள்ள முடியாது என்று தெரிந்த தமிழரசி தன் மனதை மாற்றிக் கொண்டாள். பேசாமல் தன் தந்தையின் கட்சியில் உள்ள ஏதாவது ஓர் இளைஞனையே திருமணம் பண்ணிக் கொண்டால் வருங்காலம் வளமாக இருக்கும் என்று நினைத்துத்தான் அறிவுத் தம்பியின் காதலை உதறிவிட்டாள்.
“மொத்தத்தில் மூவருக்குமே தியாகம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. உண்மையில் தியாகம் பண்ணுபவர்கள் எக்காளப்பட்டி மக்கள்தான். இவர்களையெல்லாம் நம்பி நாட்டையும், எதிர்காலத்தையும் ஒப்படைக்கிறார்களே, அதனால் “என்றான் விக்கிரமன்.
விக்கிரமனின் பதிலைக் கேட்டதும் ஆடிப் போய்விட்டது வேதாளம். வழக்கம் போல விக்கிரமனின் மெளனம் கலைந்ததும் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் மரத்தில் ஏறிக்கொண்டது வேதாளம்.
க.பாரிவேள்
சின்னசேலம்
9442010380
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” எத்தனை பொருள் பொதிந்த வார்த்தை!
எந்த எல்லைக்கும் போகக்கூடிய அரசியல்வாதிகள், பழகிக்கொண்ட மக்கள் ஒரு நல்ல தலைவன் வாய்க்கமாட்டானா என்ற ஏக்கத்தோடு ஒரு பகுதியினர். அந்த ஏக்கத்திற்கு காரணமே எல்லோரும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பதுதான். உள்ளூர் அரசியலே இந்த நிலைமையில் என்றால் மற்றவை எட்டாக்கனிதான்.
உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல்வரை அனைத்திலுமே இறுதி நிமிடம் வரை எந்த மாற்றமும் நிகழும் என்பதை சொல்லும் கதை.
ரா.செல்வம்
சென்னை – 83
இன்றைய தேர்தலின் நடக்கும் நிலைமையை மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளார். இதில் தலைவர் பதவியை மொத்தமாக நில குத்தகை மாதிரி எடுப்பது மட்டுமே தவறிவிட்டது. சாதி மற்றும் மேல் அடுக்கான மதம் இதிலிருந்து மக்கள் என்று விடுப்பட்டு சமூக அக்கறையுள்ள நேர்மையான ஒழுக்கமான எதற்கும் அஞ்சாத வேட்பாளரை இனம் கண்டு வாக்கு அளிப்பது நடக்கிறோதோ அன்றுதான் மக்களுக்கான தலைவர் கிடைப்பார் என தெளிவாக புரிகின்றது.பணம் மீது உள்ள ஆசையில் அன்பையும் விலை பேசுவது சாதாராணமாக ஆகிவிட்டது.அத்தி பூத்தது ஒரிருவர் வந்தாலும் அவர்கள் எப்படி எல்லாம் அதிகார வர்க்கங்களால் மிரட்டப்பட்டு பணிய வைக்கப்படைகின்றனர் என்பது புரிகின்றது.
ரா.செல்வம்
சென்னை – 83
இன்றைய தேர்தலின் நடக்கும் நிலைமையை மிக எதார்த்தமாக பதிவு செய்துள்ளார். இதில் தலைவர் பதவியை மொத்தமாக நில குத்தகை மாதிரி எடுப்பது மட்டுமே தவறிவிட்டது. சாதி மற்றும் மேல் அடுக்கான மதம் இதிலிருந்து மக்கள் என்று விடுப்பட்டு சமூக அக்கறையுள்ள நேர்மையான ஒழுக்கமான எதற்கும் அஞ்சாத வேட்பாளரை இனம் கண்டு வாக்கு அளிப்பது நடக்கிறோதோ அன்றுதான் மக்களுக்கான தலைவர் கிடைப்பார் என தெளிவாக புரிகின்றது.பணம் மீது உள்ள ஆசையில் அன்பையும் விலை பேசுவது சாதாராணமாக ஆகிவிட்டது.அத்தி பூத்தது ஒரிருவர் வந்தாலும் அவர்கள் எப்படி எல்லாம் அதிகார வர்க்கங்களால் மிரட்டப்பட்டு பணிய வைக்கப்படைகின்றனர் என்பது புரிகின்றது.