வெளிச்சக் கீற்றுகள்

5
(3)

நாற்புறமும் சுழித்துக் கிளம்பி வந்து முற்றுகையிட்டுத் தாக்குவதைப் போல் ஆங்காரமாய் பிளிறிய காற்றில் மேனியைச் சுற்றியிருந்த சால்வை அடிக்கடி விலக, தலை பீறிக் கிளம்பிய மண் துகள்கள் கால்களோடு சால்வை விலகிய மேனி இடுக்குகளிலும் பட்டுச் சிதற, இழுத்து இழுத்துப் போர்த்திக் கொண்டு, தோட்டக் காடுகளைக் குறிவைத்துப் பிரியும்; சுடுகாட்டுப் பாதையில் இறங்கி நடந்தான் செல்லப்பாண்டி.

இருளில் பழகிய கண்கள் கருத்த இருட்டை இயல்பாய்க் கொண்டு முன்னேறின. காற்றையும், கடுங்குளிரையும் உத்தேசித்து வீட்டிலிருந்து புறப்படும் போதே இருகக் கட்டிய முண்டாசு நெஞ்சு வரை ஏதோ தைலத்தைக் கொண்டு நீவி விட்டாற்போல் கதகதப்பை இறக்கியிருந்தது. அடிப்பாகத்தில் ஆணி தங்கியிருந்த முரட்டுச் செருப்புகள் எதிர்வரும் இன்னல்களை மோதி மிதித்து விடும் முனைப்புடன் தரையைக் கீரிக் கிளர்ந்தன. போர்வையுடன் முடங்கிய வலது கைத் தொங்கலில் இருந்த டார்ச்சை அடித்துப் பார்க்கும் யோசனையின்றி நடையில் வேகம் கூட்டினான்.

அறுவடைக்குத் தயாராகிவிட்ட சோளக் கதிர்களில் நுழைந்து கதிர் நுனிகளில் பால் மனம் பருகி வருகிற காற்றில் குளிர் வேகத்தோடு கூடிய ஒருவித பூ வாசைன நாசிகளில் பரவி இதமூட்டியது.

பால்பண்ணையும், ரைஸ்மில்லும் தலையில் பல்புகளுடன் அடையாளம் தெரிவித்துக் கொண்டன. ஆங்காங்கே சிறு சிறு மனித ஒலிகளால், தோட்டங்களில் காவல் இருப்பைக் கணிக்க முடிந்தது. வெள்ளையும், மஞ்சளுமான ஒளிப்புள்ளிகள் மோட்டார் தோட்டங்களின் இரவு நேர முகங்களை நினைவூட்டின. ரைஸ்மில்லைக் குறுக்கு வெட்டி, சிறிது தள்ளி நடந்து, இருமருங்கும் சீமைக் கருவேல்கள் அடர்ந்த பாதையில் ஒ ருபர்லாங் நடந்தபின்,

“முப்பது வருஷம் ஒழச்சு ஒழச்சு

முக்காப்படியும் மிஞ்சல-நா

மூல மூலைக்கு கடன வாங்கி

மூச்சுத் தெணறுது வழியில்ல…”

கிராமத்து விவசாயிகளின துயரங்கள் தொழிலாளர்களின் நாவில் இசைப் பாடலாய் கிளம்பி, இரவின் விசும்பலாய் வெளிப்பட்டது. தொடர்ந்து பலகுரல்கள் கோரஸாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. பாடல்களோடு இன்னும் பலவாறான குரல்களும் நிசப்தமான இரவையும், நி‘டூரமாய்த் தாக்கும் குளிரையும் பொருட்படுத்ததாது பீறிக் கொண்டிருந்தன.

இந்த ஒருமாத காலமாக அவர்கள் கவலையை மறந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். மேடைப் பிரசங்கம்போல் தங்களுக்குள் வட்டமடித்து உட்கார்ந்து பேசுகிறார்கள். கோஷம் போடுகிறார்கள். அடிக்கடி உள்ளூரிலும், டவுனுக்குமாக ஊர்வலமாகப் போகிறார்கள. குழுமிய இடத்தில் சிறு சிறு நாடகங்களையும் போடுகிறார்கள். செல்லப்பாண்டிக்கு இதுவெல்லாம் புதுமையாக இருந்தது. ‘இப்படியும் ஒரு போராட்டமா?’ என்று கூட திகைத்தான்.

அவர்கள் வட்டமடித்து உட்கார்ந்திருந்த அய்யனார் கோவிலை அடைந்தபோது, வேப்பமரக் கிளையிலிருந்து ஒரு பெட்ரோமாக்ஸ் நடு நாயகமாகத் தொங்கியது. லைட்டுக்கருகில் ஒருவர், சீறிப்பாயும் காற்றில் கொத்தான முடிகள் குப்பென்று வீசிப் பறக்க பாட்டின் லயத்திற்கேற்ப கைகளை வளையவிட்டபடி பாடிக் கொண்டிருந்தார்.

“சாமி கொடுத்ததா பூமி கொடுத்ததா-நம்ம

சர்க்கார் கொடுத்ததா சொல்லுங்களேன்”

செல்லப்பாண்டியின் உருவ அசைவு தெரியவே சிலர் வேகமாக எழுந்து வந்தனர்

“யாரு… யாரது?” ஒரு தொழிலாளியின் குரல் கடினமாக வெளிப்பட்டது. மில் நிர்வாகம் வீடுகளில் புகுந்து தொழிலாளர்களைத் தாக்குவதும், தூக்குவதுமாக இருந்து கொண்டு வருகிறது. பெற்றோர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, அவலங்களை நினைவூட்டி பிள்ளைகளை வேலைக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. சமயங்களில் இந்த இடத்திற்கும அடி யாட்களை ஏவி வேவு பார்த்து வருகிறது. போலீஸை வைத்து மிரட்டுகிறது.

“நாந்தே என்னத் தெரியலீயா…? தெனம் தெனம் வர்றேனே. மே காட்டு செல்லப்பாண்டி…” என்றவாறு அவர்களை நெருங்கிப் போனான்.

மறுகணமே அவர்களது குரலில் மென்மை இழைந்தது. “ஓஹோ… நீங்கதானா?… நாங்க ஏதும் போலீஸான்னு பாத்தோம்” – அவர்கள் வழி விட்டு மறுபடியும் கூட்டத்தில் போய் உட்கார்ந்து கொண்டனர்.

கூட்டம் இவ்வளவு அவ்வளவு என்று மதிப்பிட முடியவில்லை. பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் அவ்வளவு கூட்டத்திற்கும் போதுமானதாக இல்லை. சுற்றிலும் பலவாகப்பட்ட மரங்கள் சூழ்ந்து மைதானமாய் விரிந்திருந்த அந்த இடத்தில் வெறும் தலைகளாய்த் தெரிய அவர்கள் குழுமியிருப்பது ஏதோ கிடையில் ஆடுகள் நிறைந்திருப்பதைப் போல் தோன்றியது. ‘சேந்து நின்னா சோந்து போகாதும்பாங்க.. அது மாதிரியில்ல இருக்கு இது…’ அவன் கடந்து போகும் போது சிலர் மாறி மாறிப் பார்த்தனர்.

இரவில் இப்படிப் போகும் போது ஒரு காட்சி! காலையில் காவல் முடிந்து வரும்போது, அவர்கள் மோட்டார் தோட்டங்களுக்குக் குளிக்கக் கிளம்புவார்கள். தொழிற் சங்கத் தலைவர்கள் சிலர் தொலை தூரங்களிலிருந்தெல்லாம் வந்து அவர்களை அன்போடும், ஆதரவோடும் விசாரித்து இதுவரை நடந்ததைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். மேற்கொண்டு நடத்த வேண்டிய போராட்டங்களைப் பற்றியும் பேசுவார்கள். தாங்கள் இப்படி குழுமியிருப்பதும், ஊருக்குச் சென்று பிரச்சாரம் செய்வதும் போராட்டம் நடத்துவதும் மேலும் தங்களுக்கு ஒற்றுமையைக் காட்டுவதாகவும், மில் நிர்வாகம் நெருக்கடியிலிருந்து மீள்வதாக இருப்பதாகவும் தொழிலாளர்கள் சொல்வார்கள்.

ஒரு புறம் கல்லடுப்பில் சமையல் கூட்டி இருப்பார்கள். கிராம மக்களிடமிருந்து வசூலித்த அரிசியும், காய்கறிகளும் கணிசமாகக் குவிந்திருக்கும். அவர்களுக்கு அருகிலும், சுற்றிலுமிருக்கிற பத்துக்கும் மேற்பட் கிராமங்கள் அவர்களது போராட்டத்தைப் பேணி வளர்த்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உதவி செய்தனர். இந்தப் போராட்டத்தில் வெற்றி கிடைக்கும்வரை அவர்களுக்கான உணவைச் சமைத்துத் தரும் பொருப்பை செல்லப்பாண்டியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கிற சிங்காரம் ஏற்றிருந்தான்.

“ஏம்பா சங்கம் வைக்கிறதுக்கு ஒரு போராட்டமா? சங்கம் வச்சு என்னத்தப்பா காங்கப் போறாங்க? பேசாம உள்ள வேலயப் பாத்துக்கிட்டு, உள்ள கஞ்சியக் குடிச்சிக்கிட்டுப் போக மாட்டாம… இதுக்கு ஒரு போராடடம். இதுக்கு நீ வேற பொறுப்பாயிருந்து கஞ்சிய வேற காய்ச்சி ஊத்துரேங்குறே… நல்லாருக்குப்பா.” வரப்பில் கம்பந் தட்டைகளுக்கு ஊடாக நடக்கையில் சிங்காரத்திடம் தான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவனுக்கு பொதுவாகவே இவற்றிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இருந்தது. அவனது அக்கா மகன் கூட ஸ்டிரைக்கில் இருந்தான். அவனிடம் “அவங்க சங்கத்துக்கு ஆள் சேக்கிறதுக்காக ஒங்களத் தூண்டிவிட்டா அதுக்கு நீ வேற எரையாகுறே… பேசாம வேலைக்குப் போப்பா. நாளைக்குப் போராட்டம் தோத்திருச்சுன்னா அப்புறம் என்னைக்கும் வேலைக்க எடுத்துக்கிற மாட்டாங்க… ஆமா” என்று அச்சுறுத்தியும்கூட அவன் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டு கேலிப் புன்னகையுடன் சொன்னான். “நீ போ மாமா. ஓனக்கு எதுனாச்சும் தெரிஞசாத்தானே… வீட் விட்டாத் தோட்டம். தோட்டத்த விட்டா வீடு. ஓனக்கெல்லாம் இப்படியாப்பட்ட போராட்டங்களைப் பத்தி என்ன தெரியும்!” தான் பார்க்க வளர்ந்தவன், ‘மாமா அஞ்சு காசு!” என்று கேட்டுக் கொண்டு மூக்கொழுகித் திரிந்தவன் இன்று சங்கத்தின் மகிமைகளைப் பற்றிப் பேசுகிறான்.

“தொழிலாளி-விவசாயி ஒற்றுமை ஓங்குக!”

கோஷம் தாள லயத்துடன் தாவி வந்தது. சோளக் கதிர்கள் உர் உர்ரென்று வீசிய காற்றுக்குத் தக்கவாறு ஓங்காரமாய் ஆடின. இரவின் ஆளுமையில் அவைகள் நிழல்க் கீற்றுக்களாய் நெளிந்தன. அவன் தனது தோட்டத்தை அடையும் வரை அவர்களுடைய கோஷங்களும், பாடல்களும் ஒரே சீராகக் கேட்டுக் கொண்டேயிருந்தன. விலகியிருந்த சால்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு படலுக்குப் போனான்.

இரவும், பகலும் அதே இடத்தில் அவர்களால் எப்படி நிற்க முடிகிறது! தனக்கு சரி இதுதான் கதி என்று ஆகி விட்டது. போராட்ட ஒற்றுமையில் எல்லாம் எளிதாகி விடுமோ?

“தொழிலாளி விவசாயி ஒற்றுமை ஓங்குக!”

செல்லப்பாண்டியின் உள் மனதில் எதுவோ தைத்தது. ‘வெவசாய எதுக்குச் சேக்குறாங்க?’ அவனுள் யோசனைகள் ஓடின. அங்கே குழுமிய நாள் தொட்டே அவர்களுடைய கோஷங்களிலும், பாடல்களிலும் விவசாயிகளின் பிரச்சனை சேர்ந்தே வருகிறது. ஊர்வலம் போகும் போது கூட விடுவதில்லை. தங்கள் கோரிக்கைகளே பூதாகாரமாய் விரிந்திருக்கையில் விவசாயிகளின் கோரிக்கைகளையும் இணைத்துக் கொள்கிறார்களே… இதனால் அவர்களுக்கு என்ன லாபம்; கிடைக்கப் போகிறது? நாளை இதைப்பற்றி சிங்காரத்திடம் கேட்க வேண்டும்.

சுழித்துச் சுழித்து மேல் நோக்கிக் கிளம்பிய காற்று, படலை அறுத்துக் கொண்டு விட்டது. பக்கத்துத் தோட்டங்களிலிருந்து காவல் குரல்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. இனி இரவு முழுவதும் இப்படியே கிடக்க வேண்டும். கருது விளைந்த நேரம். தூங்கி விடுவதும் சரியல்ல. இருக்கிற சிரமத்தில் எவனாவது கசக்கிக் கொண்டு போனால் வயிற்றுப் பாட்டுக்குத் திண்டாட வேண்டும்.

மெல்ல நடை கொடுக்கலாம் என்று நினைத்தான். அதற்கேற்றார்போல் தொழிளாலர்களின் பாடல்கள் வசீகரித்தன.

“கடலச் செடியத் திண்ணு போடுச்சு

கம்பளிப் பூச்சியெல்லாம்,

மக்களக் கடனுக்குள்ள மூழ்கடிக்குது

சுரண்டும் கூட்டமெல்லாம்”

‘இதெல்லாம் இவங்களுக்கு எப்படித் தெரியும்? காடுமேடு சுத்துற எனக்கே இம்புட்டுத் தெரியல…’ அவர்களுடைய கோஷங்களையும், பாடல்களையும் முணுமுணுத்துக் கொண்டே வரப்புகளில் நடந்தான்.

மில் நிர்வாகம் அவர்களுக்கு அசைந்து கொடுப்பதாய் இல்லை. தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதே நோக்கமாகக் கொண்டு பேச்சு வார்த்தைகளுக்கு வராமல் இழுத்தடித்து வருகிறது. வேலை வெட்டி இல்லாமல் ஊரைச் சுற்றியவர்களையும், வெளியூர்க்காரர்களையும் கருங்காலிகளாக்கியது. தனது வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கிறோம் என்பதை அறியாமலேயே முதலாளியின கைப்பொம்மைகளாய் ஆடும் அவர்களில் சிலரை அடியாட்களாகவும் பழக்கியது. ஊர்வலம், பொதுக்கூட்டம் என்று நடக்கும் போதெல்லாம் அவர்கள் ஏதாவது ரகளை செய்யக் கூடியவர்களாக உட்புகுந்ததை செல்லப்பாண்டி பார்த்திருக்கிறான். ‘இவன்களுக்கு வேலையில்லாத ஆத்திரம், அவன்களுக்கு தின்னு கொழுத்த திமிரு…’

ஆனாலும் தொழிலாளர்கள் இழை பிசகாமல் போராடுகிறார்கள். தொடர்ந்து பல தினங்கள் தாங்கள் மட்டுமே உண்ணாவிரதமிருந்த அவர்கள், குடும்பம் குடும்பமாக ஈடுபடுத்தப் போகிறார்கள். இந்த உண்ணா விரதத்தில் மகனுடன் சேர்ந்து அக்காவும் மாமாவும் உட்காரப் போகிறார்களாம். ம்… உட்கார வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு இப்படிப்பட்ட இழுத்தடிப்புகளைப் பொறுத்தக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலும் குளிரிலும் ஒரு நிமிஷம் முதலாளியால் இருக்க முடியுமா?

பக்கத்துத் தோட்டத்திலிருந்த முனியாண்டியின் படலை நோக்கிப் போனான். இந்தக் காற்றில் அதுவும் நிற்காது என்றே நினைத்திருந்தான். ஆனால் முனியாண்டி பாடிக் கொண்டிருந்தான்.

“முக்கா மொழம் நெல்லுப்பயிரு

முப்பது கெஜம் தண்ணிக் கெணரு…”

“முனியாண்டி… ஏ, முனியாண்டி.. இருக்கீயாப்பா?”

காற்று வடுவேனா என்று சீற்க் கொண்டிருந்தது. இப்படியே போனால் விடிவதற்குள் முனியாண்டியின் படறும் போய்விடும்.

பாட்டை நிறுத்திக் கொண்டு முனியாண்டி பதில் குரல் கொடுத்தான்.

“வா செல்லப்பாண்டி வா. பாத்து வா. அங்கன வரப்பு ஒரு மாதிரியா இருந்துச்சு. தடுமாறிடாம வா…” முனியாண்டி டார்ச்சை அடித்தான். வெளிச்சம் விழுந்த இடத்தில் வரப்பு குழிந்திருந்தது. பதனமாகத் தாண்டி அருகில் வந்தான்.

“அட நீயும் இந்தப் பாட்டையே பாடுற!” செல்லப்பாண்டியின் குரலில் வியப்பு மேலிட்டது.

“ஏப்பா நான் பாடக்கூடாதா? இதேப்பா நம்ம பாட்டு. மொதல்ல ஒரு மாதிரியாத்தே இருந்துச்சு. அப்புறம் இவங்களோட பழகுனே… பேசுனே. அவங்க கஷ்டம் தெரிஞ்சுச்சு. இம்புட்டுக் கொடுமைய நம்மாலயெல்லாம் தாங்க முடியாதுப்பா தொழிலாளிகன்னா கீழ கெடக்குற குச்சியா நெனச்சு மிதிச்சு வந்திருக்காங்க.”

செல்லப்பாண்டிக்கு அவன் பேசப் பேச வியப்பாயிருந்தது. ‘அவங்க கஷ்டத்த இவன் அளவுக்கு நாம புரிஞ்சுக்கலியா?’ முனியாண்டியின் முகத்தைத் தெளிவாகப் பார்த்துப் பேச வேண்டும் போல் ஆவல் கொண்டு, அவனருகில் உட்கார்ந்தான். இருட்டு புதைகுழியில் ஆழ்ந்தாற்போல் கண்களை இருட்டியது.

“பாடுபடுறவனுக்கு பாடுபடுறவந்தே தொன. நீயும் பாத்திருப்பேல்ல. அவங்க நம்மளப்பத்தி எம்புட்டுப் பேசுறாங்க. நம்மளப் பத்திப் பேசாம அவங்க ஒண்ணுகூட நடத்துறதில்ல. அவங்க நமக்காகப் பேசுனா நாம அவங்களுக்காகப் பேசனும்! அதே மொற” முனியாண்டி ஒரு பீடியை உருவி பற்றவைத்துக் கொண்டான்.“ கொஞ்ச நாளா எனக்கு இந்த நெனப்புத்தே வருது. நீ என்ன சொல்ற?” இன்னொரு பீடியை உறுவி செல்லப்பாண்டியிடம் நீட்டினான்.

“நெனைக்க நெனைக்க எப்படி இருக்கு தெரியுமா? அவன் அதா அந்த மொதலாளியும் ஒரு மனுஷப் பொறவிதானப்பா. எங்கியோருந்து குதிச்சு வந்தவ மாதிரி அம்புட்டுக் கொடும பண்ணியிருக்கான்… இந்த எட்டு வருஷத்துல இவங்களக் கொண்டே மில்லக் கெட்டியிருக்கான்… நூலு வேலைகளையும் பாக்க வச்சிருக்கான். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…” சம்மணமிட்டிருந்த கால்களை உயர்த்தி முழந்தாளை மடக்கி அதில் முகவாய்க் கட்டையைப் பதித்துக் கொண்டான் முனியாண்டி.

“இத்தன வருசமா எல்லாரும் அத்தக் கூலி மாதிரித்தானாம். நெனச்சா வரச் சொல்றதாம், நெனச்சா போகச் சொல்றதாம். முப்பது ரூபாச் சம்பளக்காரன திடீர்னு ஆறு ரூபாய்க்கு எறக்குறதாம். சேத்த பிந்தி வந்தாலும் வீட்டுக்குப் போகச் சொல்லிடுறதாம். இத எத்தன நாளைக்குத்தேப்பா பொறுத்துக்கிடுவாங்க. எத்தனையோ பேருகிட்டப் போயி இந்தக் கொடுமைகளச் சொல்லிக் காப்பாத்தச் சொன்னாங்களாம். ஆனா ஒருத்தனும் என்னான்னு கேக்கலியாம். குடைசியில இந்தச் செங்கொடிக்காரங்கதே வழி சொல்லிப் போராட்டத்துல எறக்கி விட்டுருக்காங்க…” தனக்குத் தெரிந்த விபரங்கள ஒன்று விடாமல் பேசித் தீர்க்க விரும்பியதைப் போலும், அதற்குத் தோதான ஆள் கிடைத்துவிட்ட உணர்விலும் முனியாண்டியின் பேச்சு சீராக வந்தது.

சேல்லப்பாண்டி இரண்டாவது பீடியையும் தீவிரமாக இழுத்துவிட்டுக் கீழே எறிந்தான். சிங்காரமும் அக்கா மகனும் இதற்கும் மேலாக மில்லில் நடந்த கொடுமைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம், தான் அத்தனை உறுத்துடன் கேட்காமல் நழுவியது எத்தனை தவறு என்று இப்போது அவனுக்கு வருத்தமாயிருந்தது. ஆனால் ஒரு விஷயம் அவன் மனதில் வேரூன்றி, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் நடுக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.

“வேலைய விட்டு வெலகிட்டப்புறம், மறுபடியும் சேர்றதுக்காக வருஷக்கணக்கா அலஞ்சும் வேலக்கிச் சேக்காததுனால நாலுபேரு செத்துப் போன வெவரமும் ஒனக்குத் தெரியுமா?” என்று கேட்டான் செல்லப்பாண்டி.

முனியாண்டி சிறிது நேரம் ஒன்றும் பேசசவில்லை. ஏதோ யோசிப்பவனைப் போலிருந்துவிட்டு தொண்டையைச் செருமிக் கொண்டான்.

“அந்தக் கொடுமய ஏங் கேக்குற. நம்ம வேலாயி பேரனத் தெரியுமா ஒனக்கு?”

“எந்த வேலாயி? தெக்குத் தெருவுல பயறவிச்சு விக்குதே அந்தக் கெழவி பேரனா?”

“ஆமாமா. இப்பயாவது தெரிஞ்சுக்கிட்டியா? அந்தம்மா பேரனும் அங்கதா வேல பாத்தான்…”

“அவந்தா நாலு மாசத்துக்கு முந்தி செத்துப் போனானே! அவன் அங்கயா வேல பாத்தான்?…”

“ம்… அதானப்பா சொல்றது. நம்மளச் சுத்தி என்னா நடக்குதுன்னு பாக்காட்டி, ஏதோ இருந்தாஞ் செத்தான்னுட்டுப் போக வேண்டியதுதா… பாவம் அவன் இந்த மில்லுல வேல செய்யுறாங்குறத வச்சு கல்யாணம் பண்ணி வச்சாங்க. தாய் தகப்பன் இல்லாத பய. அந்தக் கெழவியும் ‘ஏம் பேரன்   நூலு மில்லுல வேல செய்யுறான்’னு ஊரெல்லாம் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சா! அப்புறம் ஒரு நா நைட்ல இவெ வேல பாத்த மிஷpன்ல ஏதோ மிஸ்டேக்காம். அது எதுனால வந்துச்சோ. இவெந்தே காரணம்னு வீட்டுக்கு அனுப்பிச்சதுதே. அப்புறம் அவஞ்சு அலஞ்சு பாத்தான். புதுக் கல்யாணம் வேற. வீட்டுலயும் புடுங்கு வெளியிலயும் புடுங்கு. எத்தன நாள்தே சமாளிப்பான். ஒன்னா ரூவாய்க்கு வாங்கி அடிச்சுட்டான். இது மாதிரிதே சுத்துக் கிராமங்கள்லருந்து வந்து வேல செஞ்ச மத்த மூனு பேரும்…”

“ம்…” சோகப் பெருமூச்சு விட்டுக்கொண்டே எழுந்தான் செல்லப்பாண்டி. “இப்படியும் கொடும நடக்குது. யாருக்கோ வந்த விதின்னு நாமலும் போயிடக் கூடாதுதே. ஏழைக்கு ஏழைதானே ஒதவி. இவங்கள நம்மளும் கைவிட்டுட்டா வேற யாரு காப்பாத்தப் போறாங்க?” குரல் தழுதழுத்தது. தன்னையறியாமல் கண்களில் சிலிர்த்த நீரோடு, “நானும் வேற எத்தனையோ பேரு நடத்துன போராட்டங்களப் பாத்துருக்கே. ஆனா இதுலருக்க உறுதியும், ஒத்துமயும் இல்ல. இன்னிக்கெல்லாம் எனக்கு ஒரு நெனப்பு, இவங்க ஜெயிச்கிடுவாங்கன்னு.”

முனியாண்டியும் கூட எழுந்து நின்றான். “நாங்கூட நாளைக்குக் கருதறுத்த ஒடன வர்றதுல ஒரு மூட்டய இவங்களுக்குக் குடுத்திடலாம்னு பாக்குறே.. அத இவங்க கூலாக்கி குடிச்சாலும் சரி, அரிசியா மாத்திக்கிட்டாலும் சரி…” முனியாண்டி ஆர்வம் ததும்பச் சொன்னான்.

காற்று சற்று அமர்த்தலாக வீசியது. குளிர் அப்படியே இருந்தது.

“ஒழைக்காத கூட்டமடா

ஊரையெல்லாம் ஏய்க்குதடா

ஊரையெல்லாம் ஏய்ச்சுக்கிட்டு, நம்மல

ஓட்டாண்டி ஆக்குதடா…”

ஒரு முழுமையான கச்சேரியின் பரிமாணத்தோடு தொழிலாளர் மத்தியிலிருந்து பாடல்கள் இன்னும் வந்து கொண்டேயிருந்தன. அவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது போலும்.

“சரி நா வர்றனப்பா…” செல்லப்பாண்டி சால்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நகர்ந்தான். “பொழச்சுக் கிடந்தா நாமலும் ஒரு மூடையைக் கொடுத்திற வேண்டியதுதா”

மூன்று தினங்களுக்குப் பிறகு அறுவடை முடிந்து, கதிரடித்து எல்லாம் ஆகி, தேனி கமிஷன் கடைக்கு மூடைகளை ஏற்றிக் கொண்டு போனான் செல்லப்பாண்டி.

நடுவழியில் தொழிலாளர்களின் நீண்ட ஊர்வலம் டவுனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் தொழிலாளிகள் மட்டுமின்றி ஊராரும் இருந்தனர். இன்னும் அவர்களுடைய குடும்பம் முழுவதும் இறங்கியிருந்தது. கைக் குழந்தைகளுடன் பெண்களும், வயதான பெரியவர்களும், கிழவிகளும் செங்கொடிகளுடன் முன்னேறினர்.

“ஒன்றுபட்ட போராட்டம்

ஓன்றே நமது துயரோட்டும்!”

செல்லப்பாண்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனைச் சத்தமிட்டு அழைத்து வண்டியை நிறுத்தச் சொன்னான்.

“இந்த ஊர்வலம் முழுசாப் போனப்புறம் அரைமணி நேரம் கழிச்சு வண்டிய மெல்ல ஓட்டிக்கிட்டு வரணும். அப்புறம் அதுக்கு எடஞ்சலா வண்டியைத் தட்டிக்கிட்டு வரக்கூடாது. நா அப்படியே இவங்களோடே போயிடுறேன்…” என்றவாறே அவனுடைய கண்கள் ஊர்வலத்தைத் துழாவின அவனுடைய எதிர் பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில் முனியாண்டி கைகளை உயர்த்தி உயர்த்திக் கோஷமிட்டுக் கொண்டு ஊர்வலத்தில் போய்க் கொண்டிருந்தான். செல்லப்பாண்டியின் அக்கா மகன் அவனுக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தான்.

செல்லப்பாண்டிக்கு புது விதமான உணர்வுகள் அரும்பின. முன்னெப்போதும் இல்லாத மனநிலையில் உடம்பெல்லாம் ஒருகணம் சிலிர்த்தது.

“அப்பறும் இன்னொன்னு மறந்துட்டேன். பன்னன்டுக்கு பதினோரு மூடைய கடையில எறக்கிட்டு ஒரு மூடைய தொழிற்சங்க ஆபீசுக்குக் கொண்டாந்திடு…” என்றபடி வண்டியிலிருந்து குதித்தான்.

வுண்டிக்காரன் தடுக்கு வைத்த இரட்டை மாட்டு வண்டியை சற்று ஒதுக்குப்புறமாக நிறுத்திக் கொண்டு, “எனக்கும் அதுல வர ஆசதே. ஆனா ஞாபக மறதியா வண்டியப் பூட்டியாந்துட்டேன்…’’ என்றான்.

செல்லப்பாண்டி அவனை ஆச்சரியமும் அன்பும் பொங்கப் பார்த்துவிட்டு “அதே நீ பந்தலுக்கு வரப் போறேல்ல, அப்படியே ஒக்காந்துட வேண்டியதானே” என்றபடி ஓடிவந்து ஊர்வலத்தில் சங்கமமானான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “வெளிச்சக் கீற்றுகள்”

  1. செங்கொடி அமைப்பின் ஆரம்ப கால பயணங்களை காட்டும் குறும்படம் போன்ற கதை அமைப்பு சிறப்பு தோழர்.

  2. பா மோகனசுந்தரபாண்டியன்

    பா மோகனசுந்தரபாண்டியன்,
    8220119462
    கண் முன்னே போராட்டம் நடக்கும் போது கதையின் செல்லப்பாண்டியாக கடந்து சென்றுள்ளேன். எண்ணற்ற செல்லபாண்டிகள் இருப்பதால் தான் போராட்டம் மறந்து போகிறது. ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் அனைவருக்காகவும் தான் போராடுகிறார்கள் என உணர்ந்தால் போதும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: