வெல்லும் சொல்

0
(0)

“ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்” என்பது சரிதான்னு மீண்டும் நிருபனமாயிருச்சு” என்று சிரித்தபடியே கைப்பேசியை நிறுத்தினார் நண்பர். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எதோ கவிதை மாதிரியும் இருக்கு தத்துவம் மாதிரியும் இருக்கு. அவர் கைபேசியில் பேசும்போது அவரது குரலில் அதிர்ச்சியும் முகத்தில் சோகமும் படிந்திருந்தது. ஆனால் பேசி முடிச்சதும் சிரிக்கிறாரே? இது சோகச்சிரிப்பா என்ற சிந்தனையோடு அவரது முகத்தைப் பார்த்தேன்.

“என்ன குழப்பமா பார்க்கிறீங்க? போனில் வந்த செய்தி என்ன? இந்தப் பழமொழியைச் சொல்லி சிரிக்கக் காரணம் என்ன இதுதானே நீங்க கேட்க நினைக்கிறது?”

“ஆமாம்” என்று தலையாட்டினேன்.

“போனில் வந்த செய்தியைச் சொல்கிறேன். அதற்கு முன்னால் இந்தப் பழமொழியைச் சொல்லி, சிரிச்சக் காரணத்தைச் சொல்றேன். இந்தப் பழமொழி என் வாழ்க்கையை மாற்றி அமைத்த பழமொழிகளில் முக்கியமான ஒன்று.”

‘இவரு சாந்தமான ஆளு. கொல்லும், வெல்லும் சொல்லுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்? என்று யோசித்தபடியே அவரைப் பார்த்தேன்.

“முருகன் நீங்க யோசிக்கிறது புரியுது. நடந்ததை எல்லாம் கேட்டால் உங்களுக்கு தெளிவாகியிரும். எங்க அப்பா கிராமத்து மனிதர்தான். சகமனிதர்களைவிட அறிவும், அனுபவமும் நிறைந்தவர். எவ்வளவு நுட்பமானத் தொழிலையும் தன்னால் செய்யமுடியும். என்ற சுயநம்பிக்கை கூடுதலானவர். எளிதில் உணர்ச்சிவசப்படும் முன்கோபி. வார்த்தைகளைக் கூர்மையாகப் பயன்படுத்துவார். பேச்சில் பழமொழிகளும், சொலவடைகளும் எதிராளியை பதம்பார்க்கும்.

அவரது சிவந்த நிறமும் முகலட்சணமும், செய்யும் தொழிலில் காட்டும் சிரத்தையும் அவர்மீது ஈர்ப்பை உருவாக்கும். ஆனாலீல் அவரது பேச்சின் கறார்தன்மை, எதிராளியைத் துச்சமென நினைக்கும் தன்மை அவரை மண்டைகனத்தவன், கர்வி என்று சிலரை ஒதுங்கிப் போக வைக்கும்.

என்ன முருகன் உற்றுப் பார்க்கிறீங்க இந்தக் குணங்கள் எல்லாம் என்கிட்டே இல்லையேன்னு யோசிக்கிறீங்களா? இதை எல்லாம் செரிச்சிட்டேன். அப்பாவிடமிருந்த கருணை, அண்டிவந்த ஏழை எளியவர்களுக்கு தன்னிடமிருந்ததைக் கொடுத்து ஆதரிக்கும் நல்ல பழக்கங்களும் இருந்தன. அவற்றை மட்டுமே கை கொள்ள முயற்சித்து வருகிறேன்.

சரி, கதையைக் கேளுங்க. எங்க அப்பாவுக்கு இரு அக்காமார்கள். தம்பி மீது அளவற்ற பிரியம், மரியாதை அவர்களுக்கு உண்டு. ஆனால் சீர்சினத்தி செய்யறதில் மட்டும் பிரச்சினைகள் அப்போதைக்கப்போது வரும். கோப தாபங்கள் எழும், அடங்கும்.

சிறிய அத்தைக்கு ஐந்து மகன்கள் இரண்டு மகள்கள். காதுகுத்து, பொங்கல், ஊர் திருவிழா அது இதுன்னு பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் அத்தை பிள்ளைகளோடு பக்கத்து நகரத்திலிருக்கும் எங்கள் வீட்டிற்கு வரும். அப்போது பஞ்சகாலமாக இருந்த போதும் அத்தை வீட்டிற்கு வந்து விட்டால் கறி, மீன் என்று விசேஷ சாப்பாடுகள் இருக்கும்! மூன்று நாள் கழிச்சு ஊருக்கு கிளம்பும் போது நெல்லரிசி, அரைச்செலவுசாமான்கள் என்று சுமக்கும் அளவுக்கு ஒரு மூட்டை தயாராகும். கையில் பணமும் கொடுப்பார்.

‘ஊர்மெச்சத் தொழிலில் கொடிகட்டிப்பறந்து வாழும் தம்பி, ஊருக்காரங்க வர்றவங்க போரவங்களுக்கெல்லாம் நல்லா செய்யிறான்! தான் பக்கதிலே இருந்து அனுபவிக்க முடியலையே என்று அத்தை புலம்பலாக ஆரம்பித்து ஒப்பாரியாய் தொடரும். அப்பாவுக்கு அழுதால் பிடிக்காது. அழுத புரண்ட மனை கழுதை புரண்ட களம்’ என்று வைவார். இப்படி அழுவதாய் இருந்தால் இங்கே வராதே என் மூஞ்சியில் விழிக்காதே”.

“தம்பி நான் என்னப்பா பாதகம் செஞ்சேன்? கேட்பார் பேச்சு கேட்டு மூஞ்சியில் முளிக்காதே என்கிறாயேஞ்” அத்தை குரலோங்கி அழத் தொடங்கியது “சீ இப்படி அழுதேன்னா வீட்டில் அக்காதான் குடியிருப்பா, நா செத்தாலும் முஞ்சியில் முழிக்காதே” என்று சொல்லிவிட்டு அப்பா கோபத்தோடு வெளியே கிளம்பினார். அம்மா எந்தப் பக்கமும் பேசமுடியாத மவுனசாட்சியாக இருந்தது.

அப்புறம் இரண்டொரு மாதத்தில் தொழில் நெருக்கடி காரணமாக எங்கள் குடும்பம் அந்த ஊரை விட்டு அடுத்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெரிய ஊருக்கு குடிபோனது. அந்த ஊரில் பெரிய அத்தை இருந்தது. அத்தையின் கணவர் இறந்துவிட்டார். அத்தைமகன் அருகிலுள்ள மாவட்டத்தலைநகரில் இருந்தார். அத்தை மட்டும் அந்த ஊரில் தனியாக ஒரு சிறுபெட்டிக்கடை வைத்து இருந்தார். அவருக்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை. எங்கள் குடும்பம் அந்த ஊரில் குடியேறிய சமயம் பெரிய அத்தை தனது பிரியத்துக்குரிய தம்பி தொழில் ரிதியாச் சிரமப்படுகிறான் என்று தான் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியைக் கொடுத்தது. அன்று ஒரு பவுன்விலை நூற்றுப்பத்து ரூபாய் தான்! பெரிய அத்தையின் உதவி பெரிய உதவியாக இருந்தது.

அப்பாவுக்கு தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த நேரம் என் தம்பிக்கு அம்மை வார்த்தது. மூன்றாம் நாளே அவன் இறந்துவிட்டான். என்னைவிட என் தம்பி நன்றாக இருப்பான் என்றும் அப்பாவுக்கு உறுதுணையாக இருப்பான் என்றும் ஜாதகரிதியாக நம்பினார். தம்பியின் மரணம் அப்பாவை உலுக்கியது. அப்போது மதுவிலக்கு காலம். அப்பா குடிக்க ஆரம்பித்தார். இதைக் கேள்விபட்ட பெரிய அத்தை வந்து அழுதது. அருமை பெருமையாய் இருந்த தம்பி குடிக்கி றானே” என்று புலம்பியது. அப்பாவிடம் குடிக்க வேண்டாம் என்று கதறியது. இதுபோல நிகழ்வுகள் அடிக்கடி நடந்தன.

ஒரு நாள் அத்தை வந்து பெருங்குரல் எடுத்து அழுதபடியே சொன்னது “ஊரெல்லாம் கடன்வாங்கி உடன்பிறந்தான் குடிச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கிறான்னு ஊரெல்லாம் சொல்லுது. தாங்கமுடியலை” என்று அழுதது.

“ஊரார் பேசுறது காதுல கேட்கமுடியலென்னா பஞ்சு வச்சுக்க” என்று அப்பா சொன்னதும் பெரிய அத்தை நெஞ்சில் அடித்து அழுத்து.

“உன் ரெண்டு பவுன் சங்கிலிக்காத்தானே இப்படி வந்து நெஞ் சிலடிச்சு ஒப்பாரி வைக்கிறேஞ் இன்னும் ஒரு மாதத்தில் என் தலையை வித்தாவது சங்கிலியை உன் மூஞ்சியில் தூக்கி எறியறேன்” என்றார்.

“சங்கிலிக்காக உன் தலையை விக்க வேண்டாம் நீ குடிக்காம இருந்தாத்தான் நான் உன் மூஞ்சியில் முளிப்பேன்” என்று அழுதபடியே அத்தை போனது. அப்புறம் அத்தைக்கு உடல்நலம் இல்லை என்று மகன் வீட்டிற்குப் போய்விட்டது.

கைத்தொழில்கள் மீது அரசாங்கத்தின் நெருக்கடியான நடவடிக்கைகள் அதிகரித்தன. இந்த ஊரிலும் தொழில் மந்தமாகிவிட்டது. எங்கள் குடும்பம் வேறொரு மாவட்டத் தலைநகருக்கு குடிபெயர்ந்தது. அப்பாவுக்கு சிறுசிறு வேலைகள் தான் கிடைத்தன. வருமானம் குறைவு. குடிக்கவும் முடியவில்லை . அப்பாவின் உடல் நலம் குன்றியது. திடீரென்று ஒரு திங்கள் கிழமை அப்பா திரும்பா ஊருக்குப் பயணப்பட்டு விட்டார். எனக்கு பதிமூன்று வயது. உலகம் அறியாத பருவம், அத்தைமார்களுக்கு

அடித்த தந்திகளம் உரிய நேரத்தில் போய்ச் சேரவில்லை. அண்டைவீட்டார், அந்த ஊரில் இருந்த தூரத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து அப்பாவின் இறுதி சடங்கிற்கு உதவினார்கள். அத்தைமார்கள் இருவரும் அப்பாவின் மூஞ்சியில் விழிக்க முடியாமல் போனது!

ஒரு வாரம் கழித்து வந்த அத்தைமார்கள் அழுதூர்கள் சிறுபிள்ளையிலிருந்து தம்பியை வளர்த்த விதம், காட்டிய பிரியம், பெயர் சொல்லிக் கூட கூப்பிடாமல் காட்டிய மரியாதை; தம்பி அக்காமார்களிடம் காட்டிய அன்பு எல்லாம் சொல்லி, வார்த்தையில் காட்டிய கோபத்தீ தம்பி வாழ்க்கையையே எரித்து சாம்பலாக்கி விட்டதே என்று கதறிய அழுகை என் நெஞ்சில் இன்னும் ரணமாய் இருக்கிறது. இவ்வளவு அண்பானவர்கள் எப்படி நெருப்பு சொற்களை ஒருவர் மீது ஒருவர் வீசினர்? ஆச்சரியமாய் இருந்தது. அத்தைமார் குடும்பம் இருந்த சூழலில் பெரிய அளவில் உதவ முடியவில்லை அவர்களிடம் தம்பிமகன், தம்பி மனைவி என்ற பாசம் இருந்தது. காசு இல்லை. ஆகவே என் அம்மா தனது தம்பி வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றது. தம்பியும் அவரது மனைவியும் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் எனது படிப்புக்கு உதவுவார்கள் என்று அம்மா நம்பி அழைத்துப் போனது. மாமா சிறுவனாக இருந்த போது நாம் ஆதரித்தோமே நம்ம பிள்ளைக்கு அவன் ஆதரிப்பான் என்ற அம்மாவின் எண்ணம் பொய்த்துப்போனது. அவர்கள் எங்களை தரித்திரத்தின் உருவகங்களாகப் பார்த்தார்கள்.

நாங்கள் அங்கு போயிருந்த சமயம் மாமாவின் மனைவி சைக்கிளில் தடுமரி விழுந்து விட்டது. இடுப்பில் எலும்பு முறிந்ததாக சொன்னார்கள்.

அம்மாவும் நானும் ஆஸ்பத்திரிக்குப்போய் அத்தையைப் பார்க்கப் போனோம். மாமா அம்மாவைப் பார்த்ததும் அறுத்தவ இங்க ஏன் வந்தே? இருக்காளா செத்துட்டாளான்னு பார்க்க வந்தியா” என்று திட்டினார். கண்ணீர் பொங்க வாயில் சேலைத்துணியை மூடியவாறு அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது.

ஒருவாரம் கழித்து அத்தையை அழைத்துக் கொண்டு வந்தார்கள் “சிறிய எலும்பு விலகல்தான் சரியாகிப்போய்விடும் ஊன்றுகோல் உதவியால் நடக்கலாம்” என்று மருத்துவர்கள் சொன்னதாக பாட்டி சொன்னது. ஆனால் மாமா அம்மாவைப் பார்த்ததும், “நீ இன்னுமா இங்கே இருக்கேஞ் நீ வச்ச செய்வினையில் எம் பொண்டாட்டி இடுப்பு ஒடிஞ்சிருச்சு. தாலி அறுத்தவளுக்கு அடுத்தவ வாழ்றது பிடிக்குமா… என் மூஞ்சியில் முளிக்காமப் போயிரு” என்று கத்தினார்.

“ஏன்டா பொண்டாட்டி தாசா, உன்னை தம்பியாக பார்க்காம என் பிள்ளை மாதிரி வளர்த்தேன். அந்த பஞ்சகாலத்தில் நான் சாப்பிடாட்டாலும் உன்னை சாப்பிட வச்சு அழகு பார்த்தேன். நீயா இப்படி பேசுற? கோழி மிதிச்சு குஞ்சு சாகுமாடா. நான் உன் பொண்டாட்டிக்கு செய்வினை செய்வேனாடா என் வயிறு எரியுதுடா. என் வயிறு எரிய எரிய நீ எரிஞ்சு போவடா” என்று ஆவேசமாகக் கதறினாள் அம்மா.

மாமா எங்களை வாசலுக்கு வெளியே தள்ளினார். பாட்டி கண்ணீர்வழிய கல்லாய் நின்றது. மகனை எதிர்த்து பேசினால் தனக்கும் தங்குமிடம் இல்லாமல் போகும் என்ற அச்சம். அந்த தெருமக்கள் துயரத்தில் வாயடைத்துப் போய் நின்றனர். அவர்கள் அடுத்த தெருவில் ஒரு சிறிய மாட்டுக் கொட்டத்தை சரி செய்து எங்களைத் தங்க வைத்தனர்.

ஒரு வாரம் விவசாயக் கூலி வேலைக்கு அம்மா போனது. அந்த சமயம் ஏலத்தோட்டத்து வேலைக்கு ஆள்தேடி கண்காணி சுப்பையா வந்தார். தம்பியின் வார்த்தைகள் வறுத்தெடுத்தலை தாங்க முடியாமல் ஏலத்தோட்டத்திற்கு வேலைக்கு அம்மா என்னை அழைத்துப் போனது. உலகமே பள்ளிக்கூடமானது. ரெண்டு வருஷம் ஏலத்தோட்ட வேலை. அதில் சிக்கனமாய்ச் சேர்த்த காசில் நான் விடுதியில் சேர்ந்து படித்தேன். அம்மா தொடர்ந்து ஏலத்தோட்டத்தில் வேலை பார்த்தது.

அப்புறம், கல்லூரிபடிப்பு வேலை என்று எனது வாழ்க்கை தளம் விரிந்தது. பெரிய அத்தை இறந்ததாகத் தந்தி வந்தது. கிளம்பினோம். அன்று பாரத்பந்த் எங்கும் பேருந்தும் ரயிலும் இயங்கவில்லை. கடைசியாக நான்கூட பெரிய அத்தையின் முகத்தை பார்க்க முடியவில்லை. வாழ்க்கை முழுக்க இப்படி கசந்த அனுபவங்கள். சாபமிடும் கடுஞ்சொல்லை விட்டெரிந்தேன். இனியசொல் சாந்தமான அணுகுமுறை, இயன்ற அளவுக்கு அடுத்தவருக்கு உதவி. கடன் வாங்காமை, கசப்பான வார்த்தைகள், அணுகுமுறைகள் தவிர்த்தல் நேர்மறையாக பேசுவது என்று நடைமுறைகளை வகுத்துக் கொண்டேன்.

“என்ன முருகன் சிரிக்கிறீங்க?”

“அதான் உங்க வாயிலிருந்து எதிர்மறையான வார்த்தைகள் வருவதில்லையோ. உங்க பிள்ளைகளையும் நேர்மறையா வளர்த்து உயர வச்சுட்டிங்க! இதுதான் வெல்லும் சொல் ரகசியமா’ என்றேன்.

அவர் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்து முகமெல்லாம் விரிந்தது.

“போன் வந்த கதையைச் சொல்லுங்க” “எங்க அம்மா இறக்கும் முன்னரே தனது தம்பிக்கு தகவல் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார், அம்மா. இறந்த விஷயம் மாமா கேள்விபட்டிருக்கலாம். ஆனால் என் பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ள விதம் பத்திரிக்கைகள் மூலம் நண்பர்கள் மூலம் அறியவரும் போது மாமா கூச்சப்படுவாராம். அவரது மனைவியும் நோய்வந்து அற்பாயுளில் போனார். ஒரு மகனும் குடும்பத்துக்கு அடங்காமல் இருந்தானாம். அந்த மனைவியோடு அவரது வாழ்க்கை சோபிக்கவில்லை. அம்மா அடிக்கடி ஒன்னு சொல்லும். அதை இந்த நேரத்தில் சொல்லியாகணும்.

“பெண்டாட்டி பேச்சை கேட்காதவரால் என் வாழ்க்கை கெட்டது. பெண்டாட்டி பேச்சைக் கேட்டதால் என் தம்பி வாழ்க்கை பாழானது”

நான் கேட்டேன் ‘ஏம்மா, பெண்டாட்டி பேச்சைக் கேட்கலமா, கூடாதா?’ அம்மா சொன்னது பெண்டாட்டி பேச்சை கேட்க வேண்டியதற்கு கேட்கனும், கேட்கக் கூடாததற்கு, கேட்கக்கூடாது!

அப்புறம், மாமா இரண்டாது மனைவி கட்டி இரண்டு பெண் பிள்ளைகளாம். மாமா நேற்று இறந்துவிட்டதாக வந்த தகவல் தான் அது. கைப்பேசி மூலமாக அந்தக்கிராமத்து நண்பர்கள் சொன்னார்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். மாமா எனக்கு நல்லது எதுவும் செய்யவில்லை என்றாலும் நானாவது அவர் முகத்தை பார்க்கலாம் என்றிருந்தேன். ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு கடந்து சென்று எப்படி பார்க்க முடியும்? போய்ச் சேரவே ஒருநாள் ஆகும் உடலை புதைக்காமல் எனக்காகக் காத்து இருப்பார்களா? அதுதான் கொல்லும் சாபச்சொல் வென்றது. இப்படியான எதிர்மறைச்சொல் பேசுவோர் எங்கள் குடும்பத்தில் யாரும் இப்போது இல்லை” என்று சிரித்தார். பாம்பு சட்டையை உரித்துப் போட்டு நகர்வது போல் என் மேனி சிலிர்த்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top