வெற்றியின் பின்னால்

0
(0)

“ராஜ ராஜ — ராஜ கம்பீர — ராஜமார்த்தாண்ட … ராஜ குல திலக முத்து மாற பூபதி வருகிறார் …”

கட்டியங் கூறியதும், அவையினர் அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். அரசவை மண்டபமே நிறைந்திருந்தது.

பெரிய தூண்களால் தாங்கப்பட்ட மாபெரும் மண்டபம் பல தளங்களாக அமைக்கப்பட்டு, ஓவியங்களும், சிற்ப வேலைப்பாடுகளுமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாமன்னன் மண்டபத்தில் நுழைந்தான். மண்டபத்தின் இறுதியில் கட்டப்பட்ட உயர்ந்த அரச பீடம் நோக்கி நடந்தான். ரத்தினக் கம்பளத்தில் நடந்து வர, மங்கையர் இருபுறமும் மலர் தூவி நின்றார்கள் மன்னவனின் தங்கக் கிரீடத்தில் உள்ள வைர வைடூரியங்கள் நட்சத்திரங்கள் போல் ஜொலித்தன.

பார்வையில் கர்வமிருந்தது முறுக்கிய மீசையில் வீரம் துள்ளியது. களம்பல கண்டவன் பகை பல வென்றவன். நிமிர்ந்த நெஞ்சில் வீரம் விளைவித்த வடுக்களை, முத்து மாலைகளும், தங்க ஆபரணங்களும் மறைக்க முயற்சித்தன. மலைகளென உயர்ந்த, மதர்த்த தோள்கள் உரமேறிய கரங்கள் போர்க்களத்தில் இவனது வீரத்தைப் பார்க்க வேண்டும். வெற்றியின் உறுதியைக் கூற முடியும். வெற்றி நடை போட்ட பழக்கம் இப்பொழுதும் தெரிகிறது.

முறம் கொண்டு புலியைப் புறம்கண்ட சரித்திரம் இவனுக்குச் சொந்தம். மலை போல் வரும் யானையை, மார்பிலே பாய்ந்து நின்ற வேலெடுத்து எதிர்கொண்ட வீரப் பாரம்பரியம் உடையவன். இவனது முதுகு கண்ட எதிரி களத்திலே எவனுமில்லை.

இவனைப் பாடாத கவியே இல்லை. இவன் புகழ்பாடுவதும், பரிசில் பெறுவதும் புலவர்க்குப் பெருமை. அதனால் அசையும் சீர்களாக தொடுத்து நின்று புலவர்கள் கவிதையாய் வருவார்கள்.

காவலர் முன்னும் பின்னுமாய் வர மேடையில் ஏறி நின்றான். அவையோரின் வாழ்த்துக்களை ஏற்று சிம்மாசனத்தில் அமரவும், அவையோரும் அமர்ந்தனர்.

அறிவார்ந்த அமைச்சர்களும், வெற்றித் தழும்பேறிய படைத் தளபதிகளும் அமர்ந்திருந்தனர். சிற்றரசர்களும், ஜமீன்களும், பெரு நிலக்கிழார்களும், பிரமுகர்களுமாய் அந்த மாபெரும் அரச சபை மண்டபமே நிறைந்திருந்தது.

செல்வச் செழிப்பும், வசதிப் பெருக்கும் இவர்களிடத்தில் தெரிந்தது. இந்த நாட்டைப் பாடும் புலவர்கள் இவர்கள் வாழும் வீதிகளை மாட மாளிகைகளைப் பாடாமலிருக்க முடியாது. இவைகளைப் பாடினால் தான் நாட்டின் செல்வச் செழிப்பு தெரியும் இவர்களுக்கு மட்டும் தான் அரசவையில் அமரும் தகுதியுண்டு.

உள்மண்டபம் இவர்களால் நிறைந்திருக்க மூன்று பக்கங்களிலும் விரிந்துள்ள வெளி மண்டபத்தில் நிறைந்து நின்றது மக்கள் கூட்டம்

பழக்கப்படி துண்டை இடுப்பிலே கட்டியதால், இடுப்பிற்கு மேலே ஆடையில்லை, உழைத்த களைப்பு எப்போதும் முகத்தில் தேங்கியிருக்க,

வியர்வை நாற்றமும் சேர்ந்து அவர்களின் தகுதியைக் காட்டியது. இந்தத் தகுதியுடன் அவர்கள் உள்ளே செல்ல முடியாது.

நிலத்திலே தானியங்களை விளைவிப்பதும், போர்க்களத்திலே வெற்றியை ஈட்டுவதும் இவர்கள் தான் இவர்கள் ஈட்டிய வெற்றியை  மட்டுமல்ல, நிலத்தில் இவர்கள் உழைத்த பலனையும் சேர்த்து  அனுபவித்து, அரசர், சிற்றரசர் பெருநிலக்கிழார் என்றெல்லாம்  தகுதிப்படிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

அந்தப்படிகளுக்கு அடித்தளமே இந்த மக்கள் தான் படிகள் உயரலாம் அடித்தளம் உயரமுடியுமா? உயரக் கூடாது என்று தான் அதன் மீது அந்தப் படிகளைக் கட்டி பாதுகாப்பாக அரசோச்சுகிறார்கள்.

பட்டத்து ராணியும் படியேறிவந்து, மன்னனின் பக்கத்து ஆசனத்தில் சர்க்க அமர்ந்தார். மற்ற ராணிகள் ஆண்கள் நுழைய முடியாத அந்தப்புரத்தில் மானோடும் மயிலோடும் விளையாடிக் கொண்டும், கிளியோடும், குயிலோடும் பாடிக் கொண்டும் மலர்ச் சோலையில் களிப்புற்றுமிருந்தார்கள்.

அழகைக் கண்டு மன்னனுக்கு ஏற்பட்ட ஆசையால் கொண்டு  வரப்பட்டவர்களும் உண்டு. பிற நாட்டில் மன்னனால் வென்று வரப்பட்டவர்களும் உண்டு. இப்படி காரணங்கள் பல உண்டு. இன்னும் பரிசில் கணிகைகளும் உண்டு. அவர்களுக்கென்று வீதிகளும் உண்டு. ஆனாலும் ளாக அரசு வாரிசுக் கென்று பட்டத்து ராணி மட்டுமே உண்டு.

வாரிசு தேவைப்பட்ட காலத்திலேயே அந்தப்புரமும் தோன்றி விட்டதே, அன்று முதலே வேறு ஆண்கள் நுழையக் கூடாதென்று, பாதுகாப்பு பலமாக இருந்தது. இப்படியெல்லாம் வாரிசை ஏற்படுத்தியிருந்தாலும் அந்த வாரிசுகளுக்குள்ளேயே சண்டைகள் வந்தது. இதில் நேர்வழி குறுக்கு வழியெல்லாம் கூட உண்டு. எந்த வழியில் வந்தாலும் ஆளப்போவது அவர்கள் தான்.

சில நாட்களுக்கு முன்பு பெற்ற வெற்றியின் களிப்பு இன்னும் அரசவை மண்டபம் முழுவதும் தெரிந்தது. நாட்டிற்கு பெருமை சேர்ந்தது. அந்த மக்களின் குடிசைகளிலே வறுமை சேர்ந்தது. வானமும் பொய்த்தது. அதனால் மக்கள் கூட்டம் இங்கு மொய்த்தது.

நிலத்தில் இறங்கி வேலை செய்யாமல், போர்க்களத்தில் மன்னனின் ஆட்சியைக் காக்க போரிட்டார்கள். நாட்கள் நீண்டு மாதங்களாயின. நியதிப்படி வீட்டுக்கு ஒருவராய் சென்றவர்கள் மாண்டதால் அந்த நியதிகாக்க மீண்டும் சென்று அரச விசுவாசத்தைக் காட்டினார்கள் இதனால் பஞ்சம் வந்தது. பசி சேர்ந்தது. நாளைக்கென்று சேர்த்து வைக்க இவர்களின் குடிசைகளில் தானியக் களஞ்சியங்களா இருக்கிறது? வேளைக்கு உணவு கிடைத்தாலே போதுமென்று உழைப்பவர்கள் நாளைப் பொழுதை நினைக்க முடியுமா?

வீட்டுக்கு ஒருவரை அல்லது இருவரை போர்க்களத்தில் பலி கொடுத்த சோகத்தோடு வறுமையும் சேர்ந்து பஞ்சைகளாய் முறையிட வந்திருக்கிறார்கள். மன்னன் கருணையால் தானியமும் பொருளும் கிடைக்குமென்று நம்பிக்கையோடு நின்றார்கள்.

வெற்றிக் களிப்போடு அரசவைக் கூட்டம் ஆரம்பமாகியது. சிறிது நேரத்தில் காவலன் ஒருவன் வந்து வணங்கி நின்று, சிங்கி நாட்டுத் தூதுவன் வந்திருக்கும் தகவலைச் சொன்னான்.

“வரச் சொல்”

தூதுவனும் வந்து வணங்கி நின்று, இடுப்பிலே செருகியிருந்த மடலை எடுத்துப் பணிவாக நீட்டினால் பட்டுத்துணியில் வந்த செய்தியைப் படித்த மன்னனின் முகம் சிவந்தது. தலைமை அமைச்சர் என்னவென்பது போல் மன்னனைப் பார்த்தான். மன்னனும் எழுந்து நின்று கொஞ்சம் அழுத்தமாய், உலவுவது போல் நடந்தான்.

“இளவரசியைப் பெண் கேட்டு தூது அனுப்பியிருக்கிறான்” அவையோரின் கருத்தை அறிவது போல் சுருக்கமாகச் சொல்லி சுற்றிலும் பார்த்தான்.

“இல்லையென்றால்?” தலைமை அமைச்சர் கேட்டார்.

“வாள் முனையில் பெண்ணைப் பெறுவானாம்” துள்ளியெழுந்த தளபதியை சைகையால் அமர்த்திவிட்டு தலைமை அமைச்சர் பேசினார்.

“அவனுக்குப் பெண் கொடுப்பது நமது அரச பரம்பரைக்கே இழுக்கு ஆசை நாயகிக்குப் பிறந்தவன். அரசனை மயக்கி பட்டத்தரசியை சிறை பிடித்து, அரசாள்பவன் அவனது குலமே இழிவானது.”

ஒற்றர் படைத்தலைவர் எழுந்து நிற்கவும் முக்கியமான தகவல் இருக்குமென்று எல்லோரும் பார்த்தனர்.

“நம்மிடம் தோல்வியடைந்த வேங்கை நாட்டரசனுக்கு இவன் தஞ்சம் கொடுத்திருக்கிறன் பழிவாங்க இவனைத் தூண்டுகிறான். பெண் கேட்பது இவனது நோக்கமல்ல. ஏற்கனவே வேங்கை நாட்டு இளவரசி மீது இவனுக்கு காதல் உண்டு. நம்மீது இவன் வெற்றி கொண்டால் நாடு கிடைக்கும் அதோடு நமது இளவரசியை வெற்றியின் பரிசாக ஆசை நாயகியாக வைத்துக் கொள்வான். பட்டத்தரசியாக வேங்கை நாட்டு இளவரசியை ஏற்றுக் கொள்வான். இப்படி அவர்கள் பேசி முடித்திருக்கிறார்கள்”.

மனதில் மாளிகை கட்டி இளவரசியை குடியேற்றியிருக்கும் தளபதிக்கு இதற்குமேல் பொறுமையில்லை.

“வாள்முனை அவனுக்கு மட்டும் சொந்தமென்று நினைத்தால். அவனது மூக்கை அறுப்பேன். பெண் கேட்ட நாக்கையும் சேர்த்து அறுப்பேன்.”

அமைச்சர். அமைதிப்படுத்தினார். சுற்றிலும் நின்ற மக்கள் கூட்டம் எட்டிப்பார்த்தது. போர்க்களத்தில் பூத்த புண்கள் இன்னும் காயவில்லை. வீர வடுக்களாக மாறாத நிலை இன்னும் பூப்பதற்கு இடமில்லை. வயதான பெற்றோர்களை மனைவி மக்களைப் பிரிந்திருந்த காலத்தை நினைத்துக் கொண்டார்கள்.

அவர்கள் பட்ட வேதனையும் வறுமையும் சேர்ந்து மனதை கசக்கியது. அனைத்தையும் மன்னனிடம் முறையிட்டு வறுமையைப் போக்க காத்திருந்தார்கள்.

ஒற்றர் தலைவர் மீண்டும் பேசினார். நமது மாமன்னர் மீது அவதூறு பேசுகிறான் அவமானப்படுத்த முயல்கிறான் பெண்ணாசை பிடித்தவரென்றும் காமுகனென்றும் பேசுகிறான் வேங்கை நாட்டு இளவரசியைக் கவர நினைத்துத் தான் அந்த நாட்டின் மீது போர் தொடுத்ததாக மாமன்னர் மீது பொய்மாறிப் பொழிகிறான். ஒற்றுச் செய்திகளைத் தொடர்ந்து சொல்ல அரச சபை பொங்கி எழுந்தது.

சிற்றரசர்கள் ஜமீன்கள், பெருநிலக்கிழார்கள் தங்களது செல்வங்களைப் பாதுகாக்க உள்ளத்தில் ஏற்பட்ட துடிப்பால் துடிதுடித்தார்கள் அரசனுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பேசிமானம் காக்க அறை கூவினார்கள்.

மானம் பெரிது மறத்தமிழன் வீரம் பெரிது. மானம் விற்று வாழ்பவன் கோழை. அந்தப் பிழைப்பு நாயும் பிழைக்கும். வெற்றி அல்லது வீர சொர்க்கம். மன்னனைப் பழித்த பகைவனின் கொட்டத்தை அடக்குவோம்.

அவையினர் ஆரம்பித்து வைத்தார்கள். அமைச்சர்களும் ஆமோதித்தார்கள்.

தனது மானம் காக்கப் பொங்கியெழுந்த அவையினரைப் பார்த்து பூரித்து நின்றான் மன்னன்.

“நாம் எப்பொழுதும் நீதிக்காக நேர்மைக்காகத் தான் போர்க்களம் செல்கின்றோம். அநீதிகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் எப்பொழுதும் வெற்றி நம் பக்கமே இருக்கிறது. அநீதிக்கும், அவமானத்திற்கும் தலைவணங்குவதை விட வீரச்சமர் புரிந்து மடிவதே மேல், வாள்முனையில் சந்திப்பதாக சிங்கி நாட்டு அரசனிடம் போய் சொல்.”

பதிலைக் கேட்ட தூதுவன் அரசவையை விட்டு வெளியேறினான்.

நாடு காக்க, அரசனின் மானம் காக்க வீட்டுக்கு ஒருவராய் புறப்பட வேண்டிய மக்கள் தங்கள் நிலையை எண்ணி வேதனைப்பட்டார்கள். குறையைச் சொல்லி முறையிட வந்தவர்களின் வேதனை கூடியது. பலி ஆடுகளாய் நின்றார்கள்.

இவர்களது வேதனைகளில் விளைந்ததை தங்களின் சாதனைகளாக மாற்றியவர்கள் வீரம் பேசி நின்றார்கள்.

“வேலெடுத்து வீசி நின்றான் வீரத்தளபதி. நாட்டைக் காக்க வீட்டுக்கு ஒருவராய் வாருங்கள். உயிரை விட மானம் பெரிது. படைகள் தயாராகட்டும். பகைகளை ஒழிக்கட்டும். தோள்கள் திணவெடுக்கட்டும். வாள்கள் சுழலட்டும். வெற்றி நமதே! வெற்றி வேல்! வீரவேல்!”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top