வெற்றிச் சிரிப்பு

3.5
(8)

தெருப் பக்கம் உள்ள திண்ணையில் ஏழெட்டுச் சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். தெரு முனையில் ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்தே இவர்களைப் பார்த்து விட்டது. அடிபட்ட நாய் போலும். அப்படியே திரும்பி ஒரே ஓட்டமாய் ஓடி விட்டது. சிறுவர்களுக்கு ஏமாற்றம். சலித்துக் கொண்டார்கள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பட்டாளத்து ராவுத்தருக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. கதை சொல்வதிலும் கணக்குப் போடுவதிலும் இவர் வல்லவர். பட்டாளத்துக் கதைகளை கற்பனை கலந்து தாராளமாக அள்ளி விடுவார். அந்த வழக்கப்படி இந்தத் திண்ணைக்கு வந்தார்.

“டேய் பசங்களா …… இன்னக்கி ஒரு பழமொழி சொல்லப் போறேன் …. அதுக்கு யாரு சரியான அர்த்தஞ் சொல்றான்னு பாக்கலாமா?” சொல்லிவிட்டு ஒரு அர்த்த புஷ்டியோடு பார்த்தார். சிறுவர்களும் சரியென்று தலையை ஆட்டினார்கள். லேசாகச் சிரித்துக் கொண்டு ராவுத்தர் சொன்னார்.

“கல்லக் கண்டா நாயக்காணாம் நாயக்கண்டா கல்லக் காணம், இதுக்கு என்ன அர்த்தம்?”

மிகச் சாதாரணமான கேள்வி. இதைப் போய் கேட்கிறார என்று கல்லும் கையுமாய் நிற்கும்போது அகப்பட்டுக் கொண்ட நாயைப் பார்ப்பது போல் இவரைப் பார்த்தார்கள். ஒரு சிரிப்பும் வெளிப்பட்டது.

“இதப் போயி பெரிசாக் கேள்வின்னு கேக்றீங்களே! வேற ஏதாவது கேளுங்க.”

சலீம் சலித்துக் கொண்டான்.

“இதுக்குச் சொல்லுங்கடா …. பாப்பம்?” ராவுத்தரும் சவால் போல் கேட்டார்.

சிறுவர்கள் சிரித்துக் கொண்டார்கள். அராபத் அனுபவத்தோடு பதில் சொன்னான்.

“தூரத்துல நாய்வருது நாங்க பாத்துட்டு கல்லத் தேடுறோம். நாயும் எங்களப் பாத்துருது. இனி நாயி நிக்காது. ஓடிரும். அவசர அவசரமாத் தேடுனாலும் ஒரு கல்லு கூட கெடைக்காது. அப்பறம் ரோடு போட கல்லாக் குமுச்சு வச்சிருப்பாங்க ரோடு பூராங் கொத்திப் போட்டு வெறுங்கல்லாக் கெடக்கும். கையும் பரபரங்கும். ஆனால் ஒரு நாய் கூட வராது. இதத்தான் கல்லக் கண்டா நாயக் காணாம், நாயக் கண்டா கல்லக் காணாம்னு சொல்றது.” சொல்லி விட்டு வெற்றிச் சிரிப்பு சிரித்தான் அராபத்.

எல்லோரும் பட்டாளத்து ராவுத்தரைப் பார்த்தார்கள். ஆனால் பட்டாளமும் வெற்றிச் சிரிப்பு சிரித்தது. பையன்களுக்கு விளங்கவில்லை. இல்லையென்பது போல் ராவுத்தர் தலையையும் ஆட்டிச் சிரித்தார். என்னடா இது என்பது போல் சிறுவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.

“இது தப்பு … வேற யாராவது சொல்ல முடியுமா?” கேட்டு விட்டு நரைகள் எட்டிப் பார்த்த நாடியைச் சொரிந்து கொண்டார்.

எங்கும் அமைதி. பையன்களுக்கு வேறு பதில் எதுவும் கிடைக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கடைசியில் இவரையே பார்த்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு ஆவல் வெளிப்பட்ட பிறகு பட்டாளம் ஆரம்பதித்தார்.

“கேட்டுக்கங்கடா …… பசங்களா …… எல்லாரும் வெளியூருக்குப் போறேம். சுத்திப் பாக்குறோம்னு வச்சுக்கங்க அங்க பழைய பங்களா கோயிலு எல்லா இருக்கு. வேடிக்கையா பாக்குறோம். இப்ப அரபாத் சொன்ன மாதிரி ஒரு திருப்பத்துல ஒரு நாயி நிக்கிது. அதப் பாத்துட்டு உஷாரா ஆயிடுறீங்க முன்னால கல்லு நெறைய கெடக்குது. நாயும் இருக்கு, கல்லுமிருக்கு, கல்ல எடுத்துக்கிட்டு பதுங்கிப் பதுங்கிப் போறீங்க. எவ்வளவு பக்கத்துல போக முடியுமோ அவ்வளவு பக்கத்துல போயி, அந்த நாயி ஓடுறதுக்குள்ள எறியிறீங்க. குறிவச்ச மாதிரி நாயிமேல எறி விழுகுது. ஆனால் நாயி ஓடல அப்படியே நின்ன மானக்கி நிக்கிது. எல்லாரும் தெகச்சுப் போறோம். ஆச்சரியமா இருக்கு! செத்துப் போச்சோன்னு நெனச்சாலும் அப்படி இல்ல ….. உசுரோட நிக்கிது. என்னாடான்னு பக்கத்துல போனா அது கல்லு! நாயி இல்ல நாயின்னு நெனசுட்டோம்.

உயிருள்ள நாயி மாதிரி செல செஞ்சு வச்சிருக்காங்க. ஒரே ஆச்சரியம் பக்கத்துல போய் பார்த்தாலும் நம்ப முடியல. அவ்வளவு தத்ரூபமா இருக்கு. ரொம்பத் தெறமையான வேல.தூரத்துல பாத்தா நாயி, பக்கத்துல வந்து தொட்டுப் பாத்தா கல்லு, கல்லக்கண்டா நாயக்காணாம் நாயக் கண்டா கல்லக் காணாம்.

சொல்லி விட்டு பட்டாளத்துக் கிழவன் வெற்றிச் சிரிப்பு சிரித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வெற்றிச் சிரிப்பு”

  1. பழமொழிக்கதைகள் குழந்தைகளுக்கும் குழந்தை மனமுடைய பெரியவர்களுக்கும் ஏற்ற பழமொழிக்கதை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: