வெறி

5
(1)

குஜராத் தெரியுமா உங்களுக்கு? கடந்த சில வாரங்களில் கோத்ரா ரயிலையும், வால் முளைத்த மனிதர்களையுமாக… நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் நிறையவே அறிமுகம் செய்து வைத்திருக்கும். அந்த குஜராத்தின் குச்வாடா மாவட்டத்தில் ‘வாயில் நுழையாத’ பெயர் கொண்ட நகரத் தெருக்களில் நான் நடந்து கொண்டிருக்கிறேன். கலவரம் முடிந்து (?) வாரங்களாகியும் இன்னும் மயான அமைதி கலையாத வீதிகள். ஆராய்ச்சிக்கு வந்த இடத்தில் ஒரு மாதம் ஓட்டல் சிறைவாசம் அனுபவித்தாயிற்று. ஊரெல்லாம் பற்றி எரிகிற நேரத்தில் ‘என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கிறது?’ என்று பல்கலைக் கழக நண்பர்கள் சொந்த ஊர்களை தரிசித்து வரப் போய்விட்டார்கள். “சகஜ நிலை திரும்பி விட்டது” என்று மைக் வைத்து அறிவிக்காத குறைதான். அப்படியும், தெருக்களில் தேங்கியிருக்கிற அடர்த்தியான மௌனம் இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தப்பித்தவறி வெளியே வருகிற மனிதர்கள் பரஸ்பர பயத்தோடு முகங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். பலூன் வெடிக்கிற சப்தத்தைக் கூட, கேட்கிற நிலையில் அவர்கள் இல்லை.

கலைத்து விடப்பட்ட தேனீக்களைப் போல, எங்கிருந்து கிளம்பியது இந்த வெறி? இயல்பாய், அமைதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனுமே ஒரு வெறி திரியோடு அலைந்து கொண்டிருக்கிறானா? மதங்களை ஆய்வு செய்து ‘டாக்டரேட்’ வாங்கப் போகிற என்னைக் கேளுங்கள். எந்த மதம் வெறி கொள்ளச் செய்கிறது என்று? எந்த மதத்திற்குமே மனிதனைக் காவு வாங்குகிற எண்ணமே கிடையாது. கடலிலே காற்று புகுந்து, கடும் புயலாகிறது. மனிதனுக்குள்ளே கொண்டிருக்கிற ‘ஈகோ சாத்தான்’ மதத்தையும் – அரசியலையும் பிடித்து ஆட்டி வைக்கிறது.

என் ஆய்வின் கடைசிப்பகுதியை அலங்கரிக்கப் போகிற சீக்கிய ‘குருத்துவாரா’ இதோ… வந்துவிட்டது. தூரத்திலிருந்து பார்க்கிற தாஜ்மகாலைப் போல ஒரு அழகு! சீக்கியர்களின் புனித இடங்களை வேலையாட்கள் கொண்டு கட்டுவதில்லை. அவர்கள் மக்களே ஒன்று சேர்ந்து அழகாக அவர்களின் கோயிலை எழுப்புவார்கள். அதனால் தானோ என்னவோ… அதன் அமைப்பையும் மீறி, அவர்களின் கூட்டு உழைப்பின் அழகு பளீரிடுகிறது.

அந்த குருத்துவாராவை நெருங்க, நெருங்க பெரிதாகிக் கொண்டே போவது போல் தோன்றியது. உச்சியைப் பிளக்கிற வெயிலிலும் ஒரு சிலர் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். தலையைச் சுற்றி கட்டப்பட்டிருந்த டர்பனும், வலையில் இழுத்துக்கட்டிய தாடியுமாய் ஒரு பெரியவர் என்னை நோக்கி வந்தார். அவர் பேசுவதற்கு முன்பே. நான் கை கூப்பினேன். “சத்ஸ்ரீ அகால்…” பெரியவரின் நெற்றியில் ஆச்சரியக் – கோடுகள். கிணற்றிலிருந்து பேசுவது போன்ற குரலில் பேசினார். “சத்ஸ்ரீ அகால்… நீங்கள் சீக்கியரா? உங்களுக்கு என்ன வேண்டும்?” அவர் குஜராத்தியில் பேசாமல், இந்தியில் பேசியது நல்லாதாகப் போய்விட்டது. நானும் இந்தியில் பதில் சொன்னேன்.

“நான் எம்.கே.யூனிவர்சிடி மாணவன். டாக்டரேட் செய்கிறேன். குருத்துவாரா பற்றிய தகவல்கள் வேண்டும்”

அவர் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார். அவருக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்தார். பின்பு, என் கையைப் பற்றியபடியே உள்ளே அழைத்துச் சென்றார்.

வளைவான முகப்பைக் கடந்து, இடது புறம் நடந்தார். பெரிய ஹால் ஒன்று தென்பட்டது. கீழே நீளமாய் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. “ஓ… இது லங்கர் போலும்.” எனக்குள்ளாகவே எண்ணம் ஓடியது. பெரியவர் நின்று, என்னைப் பார்த்தார். “இது லங்கர் தானே?” என்றேன். பெரியவர் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தார். நானூறு வருடங்களுக்கும் மேலாக இம்முறையை கடைபிடிக்கிறார்களா? ஆச்சரியம் தான். சீக்கியர்களுக்குள்ளே சரியாகச் சொன்னால் மனிதர்களுக்குள்ளே பேதம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் ‘சமபந்தி’ விருந்து போன்ற திறந்த வெளி உணவரங்கம் தான் – லங்கர். ஒரே பாத்திரத்தில் சமைத்து, ஒரே வரிசையில் அமர்ந்து, வழிபாட்டுக்கு வருகிறவர்கள் சாப்பிடும் இடம் இது! பெரியவர் என்னை அமரச் சொன்னார். சீக்கியர்களின் அன்புத் தொல்லையே இது தான். குருத்துவாராவிற்கு வந்து விட்டால், உணவை மறுக்க முடியாது.

ஒரு தட்டை கொண்டு வந்து வைத்து, தமிழ்நாட்டு சோறு போல – வெள்ளையாய் கொஞ்சம் குழைந்திருந்த அதனை கொடுத்தார்கள். அது பெயர் தெரியாத போதும், நல்ல சுவையாகவே இருந்தது. கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு எழுந்தேன். பெரியவர் குழாயை கை காட்டினார். “அதோ… குழாய் இருக்கிறது. கை கால்களை சுத்தம் செய்து கொண்டு உள்ளே செல்லுங்கள். ‘தர்ணாதள்’ சிங் ஒருவர் உள்ளே இருக்கிறார். உங்களுக்கு தேவையானவை கிடைக்கும்…” என்றவர், மீண்டும் திரும்பி சொன்னார். “மசூதிக்குள் போகிற ஒழுங்கமைதியோடு போங்கள்.”

பெரியவர் என் இளந்தாடியையும், உருவத்தையும் பார்த்து முஸ்லீம் என நினைத்துவிட்டார் போல! அதனால் என்ன? நான் யூதன் என்று சொன்னால் மட்டும் புதிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

கை, கால்களை தண்ணீரில் சுத்தம் கொண்டு மையத்தை நோக்கிச் சென்றேன். பரந்து விரிந்து கிடந்த ஒரு பேரறை, நான் நுழைந்தற்கு நேர் எதிர் சுவரில் ‘குரு கிரந்தம்’ இருந்தது. சுவரில் கட்டப்பட்டிருந்த செல்ஃப்பில், மரத்தாலான தாங்கு கட்டையின் மேல் அது இருந்தது. உற்சாகம் தருகிற அமைதி! நிசப்தத்தினூடே காலடி ஓசை. இடது மூலையிலிருந்து ஒருவர் வெளிப்பட்டார். கை கூப்பினேன். “சத்ஸ்ரீ அகால்”, “சத்ஸ்ரீ அகால்… நீங்கள்..?” கேட்ட அவருக்கு தாடிக் கருமையில் வெள்ளை அங்கங்கே முகாமிட்டிருந்தது.

“நான் யூத மதத்தைச் சேர்ந்தவன். காஷ்மீர் ‘பகல்காம்’ வம்சா வழி. தமிழ்நாட்டில் ஒரு யுனிவர்சிடியில் மதங்களைப் பற்றி பி.ஹெச்.டி. செய்கிறேன். அதில் சீக்கிய மதமும் ஒன்று! வேறு ஆய்வுகளுக்காக நிறைய நண்பர்கள் குஜராத் வந்தார்கள். நானும் அவர்களோடே இங்கு வந்து விட்டேன். குருத்துவாராவை நேரடியாகப் பார்த்து விட்டுப் போனால் உதவியாயிருக்கும் என வந்தேன்…” அவர் ஆச்சரியப் புன்னகையோடு, கீழே விரிப்பில் அமரச் சொன்னார். உடன் அவரும் அமர்ந்தார்.

“என் பெயர் தேக்பகதூர் சிங். ‘தர்ணாதள்’ என்கிற சீக்கிய சேனையில் பணியாற்றுகிறேன். உங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கேட்கலாம்…”

எனக்கிருந்த சந்தேகத்தைச் சொன்னேன். “அரசனைப் போன்ற ஆசனம், வாள் போன்ற டாம்பீகங்கள்.. மன்னிக்கவும், அதை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது… எப்போது சீக்கிய மதத்தைப் பீடித்தன?” அவர் கண்களை மூடி மௌனமானார். கேள்வியை ரசித்திருப்பார் போலும்.

“சீக்கியம் – ஒரு விவசாய மதம், அதனுடைய பின்புலங்கள் எல்லாம் படித்திருப்பீர்கள் தானே? எங்கள் மத குருமார்களில் ஒருவரான அர்ஜுன் சிங், முகலாய அரசான ஷாஜகான் ஆட்சியில் கொல்லப்பட்டார். விவசாய வரியை எதிர்த்தாலும், அரச எதிரிக்கு அடைக்கலம் தந்ததாலும்… என்று எதையோ சொன்னார்கள். ஒரு மதக்குருவையே கொல்லும் அளவிற்கு அரசபலம் ஆட்டிப்படைத்தது. அடுத்து வந்த குரு ஹர்கோவிந்த் சிங் ஆசனம், வாள், பாதுகாப்பு என ஏற்பாடு செய்தார். ‘மீரி – பீரி’ ‘இம்மை வெற்றி – மறுமை வெற்றி’ என்ற கோஷத்தையும் முன் வைத்தார்…’

“அப்போதிருந்து தான் இந்த அரச கோலம் தொடர்ந்தது. இவ்வளவு பாதுகாப்பிலும் கூட 9 – வது குரு தேக் பகதூர் சிங்ஜியையும் ஔரங்கசீப் அரசு, ஒரு பேச்சு வார்த்தையில் கொன்றது. அடுத்து வந்த பத்தாவது குரு கோவிந்த சிங் “குரு கிரந்தம்” நூலையே குருவாக அறிவித்தார்…”

எங்கோ ஆரம்பித்த விஷயம், அபரிமிதமான தகவல்களுடன் தொடர்ந்தார்.

“‘ரிலீஜியஸ் இன்வர்ஷன்’ என்று ஒரு நூல் கிடைக்கிறது. அதில் உங்கள் சந்தேகம் தீரும்…” என்று சொல்லி தேக்பகதூர் ஒரு டெல்லி பதிப்பக முகவரியை கிறுக்கி நீட்டினார். எனக்குத் தேவையானது – குருத்துவாராவில் நுழைவது. அது தான் நிறைவேறி விட்டதே? தெரிந்த விஷயங்களையே மீண்டும் கேட்டு தொல்லை தராமல் கிளம்பினேன். தேக்பகதூர் கைகூப்பினார். “கலவரம் ஓய்ந்திருக்கிறது… இருப்பினும் கவனமாகச் செல்லுங்கள்…” எச்சரிக்கையோடு வழியனுப்பி வைத்தார்.

வெயில் கொஞ்சம் குறைந்திருந்தது. குருத்துவாராவுக்கு வெளியே நின்றிருந்த ஒன்றிரண்டு பேரையும் காணவில்லை. பெரியவரை தேடினேன். அவரும் அங்கு இல்லை. வந்த வழியே மெதுவாக நடந்தேன். இவ்வளவு பகலிலும் கூட ஆளரவம் அற்றிருக்கிறது. இன்று இரவு மட்டும் இங்கே தங்கி விட்டு, நாளை தமிழ்நாடு கிளம்பி விட வேண்டியது தான். அந்த பெரிய ரோடு, சற்றே குறுகி திரும்பியிருந்தது.

இப்படி சுதந்திரமாக நடந்து, எத்தனை நாட்களாகி விட்டது? யாரோ ஓடி வரும் காலடி ஓசை கேட்டது. திருப்பத்திலிருந்து வந்தவர்கள், திடீரென என்முன்னே நின்றார்கள். நான்கைந்து பேரிருக்கும். “என்ன வேண்டும்?” நான் கேட்டதை அவர்கள் அலட்சியப்படுத்தி, தங்களுக்குள் குஜராத்தியில் பேசிக் கொண்டார்கள். இரண்டு பேர் என் பின்னால் வந்து கைகளை இழுத்துப் பிடித்தனர். நான் திமிறியவாறே கத்தினேன். “விடுங்கள்… என்ன வேண்டும் உங்களுக்கு?” என் இந்திக் குரல் அவர்களை சலனிக்க வைத்ததாகவே தெரியவில்லை. வயிற்றில் சுழன்ற பயப்பந்து, தொண்டைக்கு ஏறியது. ஒருவன் குஜராத்தியில் கத்திக் கொண்டே என் கன்னத்தில் அறைந்தான். “நான் காஷ்மீர்… நான்…” திணறல்களுக்கிடையே நான் அலறியது அவர்களுக்கு மேலும் ஆத்திரமூட்டியது.

ஒருவன் என் தலைமுடியைப் பிடித்து ஆட்டினான். மாறி மாறி கன்னத்தில் அறைந்தான். அவன் கண்களில் மின்னிய வெறி எனக்குள் பீதியை ஏற்படுத்தியது.

இன்னொருவன், என் இடுப்பைச் சுற்றியிருந்த குர்தா கயிற்றை இழுத்து, அற்றான். கையை நீட்டி தடுக்க முயன்றேன். சரேலென பேண்ட் கீழிறங்கியது. நான் நிர்வாணமானேன். வெறி பிடித்தது போல் ஒருவன் கத்தினான். “மு..ஸ…ல்..மா..ன்..” எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், இன்னொருவன் அந்த நீளமான கத்தியை எடுத்தான். கத்துவதற்காக திறக்க முயன்ற வாயை கைகளால் அடைத்தான். இந்த சின்ன இடைவேளையில் என் வயிற்றில் கத்தி ஆழமாய் இறங்கியது. வலியை முழுமையாய் உணருமுன்னே மீண்டும்… மீண்டும் கத்தி இறங்கியது. நான் ரத்த வெள்ளத்தோடு சரிந்து விழுந்தேன்.

அவர்களின் காலடி ஓசை கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தது. என் ரத்தத்தில் தோய்ந்த அவர்களின் கால்பதிவுகள், யார் யாருக்காகவோ காத்திருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வெறி”

 1. Sakthi Bahadur

  மதங்களை நம்புவதன் கொடூரத்தை சுட்டிக்காட்டும் ஆழமான கதை.

  யூத இனம் என்றாலே நம் நினைவிற்கு வருவது பாலஸ்தீன பகுதியில் நடக்கும் யூத இஸ்லாமிய கலவரம் தான். மதத்தின் பெயரால் குழந்தைகளும் பெண்களும் அப்பாவி மக்களும் உயிர் இழப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

  ஆனால் அதே யூத இனத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அனைத்து மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளார். குருத்வாராவில் சீக்கிய மதத்தைப் பற்றிய விசாரணைகளை முடித்துக்கொண்டு குஜராத்தின் தீ அடங்கா கலவர பூமியில் நடந்து செல்கிறான்.

  ஆணுறுப்பை சுன்னத் செய்வது இஸ்லாமியர்கள் மட்டுமே என்று அறிந்த இந்துதத்துவா வினருக்கு இஸ்லாமின் மற்றொரு எதிரியான யூதர்களும் சுன்னத் செய்வார்கள் என்பது தெரியாமல் போனது.

  மதங்களைப் பற்றிய உண்மையான புரிதல் இருந்தால் மதத்தின் பெயரால் மனிதர்களை பலி கொடுக்கமாட்டார்கள். நிறைய தேடல்களுக்கு ஆரம்ப புள்ளி வைக்கும் அருமையான சிறுகதை உமர் தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

 2. SathyaRamaraj

  எத்தனை முறை படித்தாலும் மனம் கனத்துப்போகிறது.மதவெறி என்ற பெயரில் மனிதம் அழிக்கப்படுவது இன்னும் எத்தனை காலம் தான் தொடருமோ?

  தகுந்த காரணமோ, முன் பகைமையோ இன்றி நிக்ழ்த்தப்படும் இத்தகைய படுகொலைகள் மனிதர்களின் மீதுள்ள நம்பிக்கையையே இழந்து விட்ச் செய்கிறது.

  உண்மையில் இதுபோல் எத்தனை எத்தனை இளைஞர்கள் இம்மாதிரியான வன்முறைக்குப் பலியாகியுள்ளனரோ என்று எண்ணும் போதே உள்ளம் பதைபதைத்துப் போகிறது.

  சமீப காலங்களில் என்னை மிகவும் பாதித்த கதை இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: