வெயில்

0
(0)

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் கூட நன்றாகக் காற்று வீசியது போல இருந்தது. இப்போது வியர்வை ஊற்றெடுத்து ஒழுகியது. இத்தனைக்கும் வெயிலில் ரொம்ப தூரம் அலையவில்லை. போஸ்ட்மேனைப் பார்க்கப் போகிற சந்தைப் பேட்டைத் தெருவில் தூத்துக்குடி மாமாவைப் பார்த்ததுமே வேறெங்கும் போக வேண்டிய அவசியமே இல்லாது திரும்பி விட்டான். மாமாவும் எல்லாம் சொல்லி முடித்ததும்,

“போனாப் போகுது மக்கா… அடுத்து வர்ற ஜூன்ல அட்டெண்டர் போஸ்ட்டுக்கு ஆள் எடுக்கறாங்க… அதில கண்டிப்பா போட்டுருவோம்னு ஆபீஸரே சொன்னாரு… ரொம்ப வருத்தப்பட்டாரு… பரவால்ல மக்கா… அதில பாத்திக்கிடுவோம்…” என்றவர் கொஞ்சமும் தாமதியாமல்,

“நல்ல வெயில் இல்ல…” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் அப்படிச் சொல்லி விட்டுப் போனபின் தான் திடீரென வெயில் உறைத்ததாக உணர்ந்தான். மூச்சுத் திணறும்படியான வெக்கையும், முதுகில் பிசுபிசுத்த சட்டையும் அவனை முத்தானந்த சாமி மடத்திற்கு விரட்டியது.

முத்தானந்த சாமி மடத்திற்குள் அகல விரிந்து பரந்திருக்கும் அந்தப்புளிய மரத்திற்குக்கீழே உட்கார்ந்திருப்பது புஸ்தகங்கள் படிப்பது என்று பழக்கமான இந்த ஆறுமாதத்தில் இதுவரையில் பெரிய கேட் வழியே உள்ளே போனதில்லை. இருபுறமும் திறக்கும் கொஞ்சம் பெரிய ஜன்னலை ஞாபகப்படுத்தும் சின்னக் கேட்டைத் தள்ளிவிட்டு குனிந்து செல்வது தான் இதுவரை நடந்திருக்கிறது. துருப்பிடித்த பெரிய பூட்டோடு வெகு காலத்திற்கு முன்பே திறந்து மூடுதலை மறந்துவிட்ட அந்தப் பெரிய கேட்டைச் செவிட்டுச் சாமியிடம் சொல்லித் திறக்கவேண்டும். மரத்தடியில் வந்து உட்கார்ந்ததும், இன்றைக்குக் கிளிச் சத்தம் கேட்கிறதா என்று கூர்ந்து கவனித்தான். மிக அபூர்வமாய் கிளியின் சத்தம் கேட்ட ஒரு நாளில் தான் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சிலிருந்து இண்டர்வியூ வந்திருந்தது. அவன் ஆச்சரியமடைந்து எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சிலிருந்து தானா என்று நிச்சயப்படுத்தின போது மாமாவும் தற்செயலென நினைக்க முடியாதபடி வந்தார். அவர் வேலை பார்க்கிற அதே டிபார்ட்மெண்டில் தான் வேலைக்கான இண்டர்வியூ என்றும், ஆபீசருக்கு வலது இடது கைகள் மாமா தான் என்பதாலும் எப்படியும் வாங்கிவிடலாம் என்று உறுதியாய் சொன்னார். அப்பா மறுபடியும் மறுபடியும் விசாரித்து பணம் கொடுக்க வேண்டுமா என்றெல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டார். அப்பா இப்படிக் கேட்டதற்கு மாமா சிரியோ சிரியென்று சிரித்து விட்டார். அக்கா உடனே குத்து விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டாள். அவளுக்கும் விமோசனம் பிறந்துவிடும் என்ற ஆசையில் அவனுக்காகவும் சேர்த்துக் கும்பிட்டாள்.

“மக்கா… வேல கெடச்சதும் மாமாவை மறந்துராதே… நம்ப கறுப்புத் தங்கம் மகேசு ஒனக்காகத்தான், ரெண்டாங்கிளாஸ் படிச்சிட்டிருக்கா… சொல்லிட்டேன்…”

“மருமகப்பிள்ளைக்கு வேல வாங்கிக்கொடுத்து இப்பவே செட் அப்பண்ணுதியளோ…” என்று அண்ணன் கேட்டதும், எல்லாரும் கண்ணில் நீர் முட்ட என்றைக்குமில்லாதபடி அபூர்வமாய் மிகுந்த சந்தோஷத்துடன் சிரித்தனர். அவனும் கூடஅன்றைக்கு மனம் விட்டுச் சிரித்தான்.

மாமா சொல்லியிருந்தபடி இண்டர்வியூவுக்கு முதல் நாளே திருநெல்வேலி போய் விட்டான். ஆபீஸருக்கு ரொம்பவும் இவனைப் பிடித்துவிட்டது. அவர் வேலைகளைப் பற்றி எல்லாம் சொன்னார். கிளார்க் ரமணி கொடுத்த கொஞ்சம் பேப்பரை டைப் அடித்துக் கொடுத்தான். அதிலிருந்த தப்புகளைச் சொல்லித் திருத்திக் கொண்டே எல்லாம் போகப் போக சரியாயிடும் என்றார். எல்லோருமே பிரியமாய் இவனை விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.

“நீங்க வாங்க ஜமாய்ச்சிடுவோம்…” என்று பியூன் ராமசாமி சர்பத் வாங்கிக் கொடுக்கும் போது சொன்னார்… இவனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று உணர்வேயில்லாத படிக்கு வெறுமே சந்தோஷத்துடன் மட்டும் இருந்தான். இண்டர்வியூ முடிந்ததும் இன்னும் ரெண்டு நாளில் ஆர்டர் வந்து விடும் தயாராய் இரு என்று மாமா சொல்லியனுப்பினார். எல்லோரிடமும், வரும் போது கட்டாயமாய் ஸ்வீட்டோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சிவசக்தியில் ஒரு சினிமாவும் பார்த்துவிட்டு வந்தான்.

கோவில்பட்டி வந்தது முதல் நிறைய்ய யோசனைகள் எங்கே தங்குவது, ஓய்வாய் இருக்கும் போது என்னென்ன செய்யலாம். அன்றைக்கு ரொம்பவும் புதிதாக எல்லோரும் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது அவனுக்கு என்ன வேண்டியது இருக்கும் என்று அவனிடம் விசாரித்தும், தங்களுக்குள் விவாதித்தும் தெரிந்து கொண்ட போது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. வாழ்க்கை இப்படியான அழகோடும் பிரியத்தோடும் இருக்கும் என்று அதுவரையில் நினைத்துப் பார்த்ததில்லை. சாவித்திரி கூட அவள் முன்சொன்னதற்காக மன்னிப்பு கேட்டு விடுவாள் என்று தோன்றியது. அம்மா பேச்சோடு பேச்சாய் பேங்கில் மூழ்கிக் கொண்டிருக்கும் கல் வைத்த மாங்காய் நெக்லசைப் பற்றி ஞாபகப்படுத்தினாள். அக்கா ரெண்டு நாட்களில் கொஞ்சம் தெளிவடைந்த மாதிரி இருந்தாள். அண்ணன் மிகுந்த மரியாதையுடன் எல்லாவற்றையும் கேட்டு விசாரித்து ஆலோசனைகள் சொன்னான்.

அவனும் பார்க்கிற நண்பர்களிடமெல்லாம் சந்தோஷமாய் சொல்லி அவர்களுக்கும் இது போல் ஏதாவது திடீரென நடந்துவிடலாம் என்று தேற்றினான். காலை மாலை ரெண்டு நேரமும் சோப்பு போட்டு முகம் கழுவினான். கண்ணாடியில் பார்க்கிற நேரம் தன் நிறம் மாறி வருவதாய்க் கூட நினைக்கத் தொடங்கினான்.

நேற்றைக்கு ராத்திரி சாவித்திரி வரும் போது அவளுக்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாய் சுப்பிரமணியனிடம் சொல்லி அவள் நின்று திரும்பிப் பார்த்து விட்டுப் போனதைக் கண்டதும் “அன்பேவா”இரண்டாம்பிளே போனான். அப்பா மெல்லிய குரலில் ஏதும் தவறாகிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதையுடன்,

“ராத்திரி முழிச்சி உடம்பை ஏன் கெடுத்துக்கிடுதே… சரி… சரி… போய்ட்டு பத்திரமாவா… கூட யாருவாரா… சுப்பிரமணியா… சரி…”

தான் ரொம்பவும் மெலிந்து சிறு பையனைப் போல் ஆகிவருவதாக நெஞ்சுக்கூட்டை குனிந்து பார்த்து விட்டு நினைத்தான். தன் முகம் கூட சகிக்க முடியாதபடி கறுத்துப் போய்க் கொண்டிருப்பதாகவும் அதனாலேயே எங்கு போனாலும் இவனை மட்டும் ரொம்ப நேரம் காக்க வைத்துவிடுவதாயும் இந்த நேரத்தில் அவன் நினைத்தது துரதிருஷ்டம் தான். எல்லோருக்கும் இருக்கும் ராசி அவனிடம் இல்லையென்றும், இல்லையென்றால் வேலை இப்படிக் கடைசி நேரத்தில் யாரோ ஒரு எம்.எல்.ஏ.வால் தட்டிப்பறிக்கப்பட்டிருக்காதென்றும் யோசித்தவுடன் தொண்டை அடைத்து அழுகை வந்தது. எப்பவும் நிழல் தரும் மரம் இன்றைக்கென்னவோ கலக்கங்கலக்கமாய் வெயில் முழுவதையும் உள்ளே விட்டுக் கொண்டிருப்பது போல் பட்டது. அதனாலேயே அங்கிருப்பதும் அவனுக்கு நச நசத்தது.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், அக்கா பானையிலிருந்து குளிர்ந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். அவன் தண்ணீரை வாங்கிக் கொண்டே,

“சரியான வெயில்… ஸ்ஸ்… அப்பா…” சிரிக்க முயற்சி செய்தான். தண்ணீரைக் குடித்ததும் இன்னும் வியர்வை பொங்கியது. சட்டையைக் கழட்டி கொடியில் எறிந்த போது அம்மா வந்தாள்.

“டேய் துவைக்க வேண்டியதெல்லாம் எடுத்துப்போடேன்… வெயில்ல சீக்கிரம் காய்ஞ்சிரும்ல… ஆமா போஸ்ட் மேனை

பார்த்தியா…”

“பாக்கல…”

“சரி வந்தாத் தான் வீட்டுக்கு கொண்டு வந்துருவாரே… ஒரு வேளமத்தியானம் வருமோ என்னவோ…”

“இல்லம்மா வராது…” அவனுக்கே இது தன் குரல் இல்லை என்று தெரிய ஆரம்பித்தது.

“ஏண்டா…”

“இல்ல வராது…” முழுவதும் உடைந்து போய் கண்ணில் நீர் கோர்க்க அப்படியே சுவரோடு சாய்ந்தான். மத்தியானம் சாப்பிட அப்போது தான் உள்ளே நுழைந்திருந்த அப்பா,

“சரி… இப்ப என்ன… போனாப் போகுது… இது இல்லைன்னா இன்னொண்ணு… நாம மட்டுமா இப்படி இருக்கோம்… லட்சக்கணக்கில் படிச்சிட்டு சும்மா இருக்காங்க… இதுக்காக வருத்தப்பட்டா முடியுமா… ரங்கா இந்த விசிறிய எடு… யப்பா பயங்கர வெயில்…”

அம்மா கொஞ்ச நேரம் அவனையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள். அப்புறம் விசிறியெடுத்து அப்பா கையில் கொடுத்துக் கொண்டே,

“இப்பவே வெயிலடிக்கிற அடி தாங்க முடியல… இன்னும் அக்கினி நட்சத்திரம் வேற இருக்கு…” சொல்லிவிட்டு அடுக்களைக்குள் போய் விட்டாள். அவனுக்கு அழுகிற நினைவில்லாமலே கண்ணீர் வந்தது. அது நல்லது தான் என்று கூட நினைத்தான். ஆனால், அது இப்போது தவறிப் போன வேலைக்காக மட்டும் என்றில்லாமல் ஒரு மாதத்திற்கு முன்னால் ஒரு நட்சத்திரங்களற்ற இரவில் சாவித்திரி சொல்லிவிட்ட இன்றளவு பொய்க்காகவும் தான் என்று நினைத்ததும், இன்னுமொருமுறை அழுகையும் வியர்வையும் பொங்கி வெயிலை நினைவுபடுத்தியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top