”ஷிண்டே பாய்… ஒனக்கு டெலகிராம் வந்திருக்கு..” என்று சக பொறியியல் கல்லூரி மாணவன் மைதீன் நீட்டியதிலிருந்துதான், ஷிண்டே பாயின் புன்னகை தொலைந்து போனது. அவசர அவசரமாக ஒன்றிரண்டு உடைகளை மட்டும் சின்ன சூட்கேசில் இட்டு, ஹாஸ்டல் வார்டனிடம் அனுமதி பெற்று சென்னை வண்டியில் அமர வைத்து விட்டு வந்திருந்த ஒன்றிரண்டு நண்பர்களும் திரும்பிச் சென்றனர்.
ஷிண்டேபாயின் இருபத்தைந்து வயது வங்காள முகத்தில் சோகம் அப்பிருந்தது. கொல்கத்தா ரயிலில் ஏறி, சென்னையைக் கடக்கிற வரை அலையடித்துக் கொண்டிருந்த மனசு, சூனியமாய் விடப்பட்ட மாதிரி நிர்கதியாய் சலனமற்றிருந்தது. மிக மெதுவாக உதடு பிரித்து முணுமுணுத்தான். “அகுர மஸ்தா… ஏன் என்னை இம்சிக்கிறாய்…?” ரயில் பெட்டியின் சன்னல் வழியே எங்கு பார்த்தாலும் பசுமை. இந்த பசுமை அப்பாவுக்கு ரொம்பவும் விருப்பம். கலைந்து போன டர்பன் சுற்றிய தலையும், ஈக்கி குச்சியாய் நீண்டிருக்கும் மீசையுமாய் அப்பா நினைவுகளில் அலையடித்தார். எனக்காகத்தானே உழைத்து உழைத்து நாராய்க் கிழிந்து போனார். அம்மா மூன்று வயதில் இரக்கமின்றி என்னை அனாதையாய் விட்டு விட்டு இறந்து போன பின்பு, எனக்கே எனக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா. எவ்வளவு கஷ்டத்தையும் ஒரு குறுஞ்சிரிப்போடு வரவேற்கிற அப்பா, இப்போது செத்துப் போனார் என்பதை நினைக்கவே பயமாயிருந்தது ஷிண்டே பாய்க்கு.
ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லாத அப்பாவா இறந்து போனது? குட்கா போடுகிற எண்ணம் வந்து விடக் கூடாது என்று தானே அவரே அந்த பழக்கத்தை விட்டார். பிணங்களைப் பார்க்கிற ஆவலோடு ஒரு முறை மைதானத்துப் பக்கம் போன போது, வாழப் போகிற வயசில், சாவைப் பற்றி தெரிந்து என்ன செய்யப் போகிறாய்? என்று கடிந்து கொண்ட அதே அப்பாவை, இன்று பிணமாகக் காட்டப் போகிறார்கள். வயிற்றிலிருந்து ஒரு அமிலப் பந்து, நெஞ்சுக்குழியை இழுத்து மூடியது. ரயிலின் குலுங்கல் ஓசையும், காய்ந்து போயிருந்த வயிற்று இரைச்சலும் சுத்தமாய் மறந்து போயிருந்தது.
நாசியைத் துளைத்தெடுத்த நாற்றமே, கொல்கத்தா வரப் போவதை உணர்த்தியது. கலைந்த முடியோடு, வியர்வை வழிந்த பிசுபிசுத்த முகம் அப்படியே சோக உறைவில் சிக்கியிருந்தது.
எழுபது வயசைக் கடந்த பக்கிம் சௌத்ரி பெரியப்பாவெல்லாம் இன்னும் உயிரோடிருக்கிற போது, ஐம்பத்திரண்டு வயதுகளே ஆன அப்பா மட்டும் எப்படி மரித்துப் போனார்? ஒரு இன்ஜீனியர் ஷிண்டே பாயை பார்க்க விரும்பிய அப்பா, தன் ஆசை நிறைவேறுமுன்னே எங்கு போய் விட்டார்? |
ஓடியாடி உழைத்து, சிரித்து, பேசி, கண்டித்து, கண்ணீர் வடித்த ஒரு உடல் சட்டென்று எப்படி அசைவற்ற திரேகமாக, உணர்ச்சியற்ற பிரேதமாக மாறிவிடுகிறது? உணர்ச்சிகளை யார் அழைத்துப் போனது? இருளின் கடவுள் அங்கிரமன்யு என்பார்களே அவனா..?
இல்லை… அப்பா எப்போதும் போல வாசலில் காத்திருக்கப் போகிறார். “அரே… மை ஷிண்டே பாய்…” என்று ஓடிவந்து அணைத்துக் கொள்ளப் போகிறார். “என்னா… வாங்கிட்டெ வந்துய்?” என்று தமிழில் அரைகுறையாய் கேட்கப் போகிறார். இதோ… சென்னையின் கதர் சட்டையை எடுத்து நீட்டப் போகிறேன்.
ஷிண்டே பாயின் மனசு முழுக்க கற்பனை உருவங்களாக நிறைந்து இருந்தது. அடிக்கடி அப்பா முகம் மங்கலாக நினைவில் வந்து போனது.
அருகில் அமர்ந்திருந்த சீக்கியர்கள் கை வளையத்தை மேலே ஏற்றி விட்டு, பெட்டியை எடுத்து இறங்கத் தயாரானார்கள். ஷிண்டே பாய் கலைந்த தலையை ஒழுங்குபடுத்திக் கொண்டே, பெட்டியைத் தேடி எடுத்தான். பதினாறு மணி நேர பயணம் உடல் சோர்ந்து போயிருந்தது. ரயில் மெதுவாக ‘கிரீச்’ ஓசையோடு நின்றவுடன், பீடா எச்சிலாக நிறைந்திருந்த பிளாட்பாரத்தில் இறங்கி வேகமாக நடந்தான் ஷிண்டே பாய்.
டவுன்பஸ் நிறுத்தத்தில் ஒரு அமைச்சர் இரண்டு செக்யூரிட்டிகளோடு நின்று கொண்டிருந்தார். பஸ்ஸுக்காக குறைவானவர்களே காத்திருந்தனர். ஷிண்டே பாய் மணியைப் பார்த்தான். ஆறு மணி… தடிமனான ஒரு நபர், கை ரிக்ஷாவில் வருமாறு அழைத்தார். மறுக்கத் தோன்றவில்லை. பெட்டியோடு ஏறி அமர்ந்தான். “கௌரிங்கீ ரோடு” – ஷிண்டே பாயின் வார்த்தைக்காகவே காத்திருந்தது மாதிரி, இழுவை மரத்தை தாங்கியபடி மெதுவாக ஓடத்துவங்கினார். பகல் சீக்கிரமே முடிந்து போய், இருள் கவ்வத் தொடங்கியது.
ஷிண்டே பாய்க்கு மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. அதோ கௌரங்கீ ரோடின் முடிவில் குறுகலான சந்து தெரிகிறது. அங்கேயே நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டான். பத்து ரூபாயை கையில் திணித்து விட்டு, பெட்டியை இழுத்து தூக்கியபடியே வேகமாக நடந்தான். சின்ன, சின்ன காரை வீடுகளுக்கிடையில் ஷிண்டேபாயின் வீடு தெரிந்தது. போடப்பட்டிருந்த நாற்காலிகள் பெருமளவு காலியாய் இருந்தது. சொற்பமாய் ஒரு சிலரே உட்கார்ந்திருந்தனர். ஷிண்டே பாயை பார்த்தவுடன் அதிலிருந்து ஒருவர் ஓடி வந்தார். “ஷிண்டே … என்ன இவ்வளவு தாமதம்? சீக்கிரம் ஓடு… இப்போது தான் உடலை அகுரமஸ்தா மைதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள்…”
“அ..ப்..பா..” பெங்காலியில் வீறிட்டவாறே, பெட்டியை அப்படியே வீசிவிட்டு வந்த வழியே ஓடத் துவங்கினான் ஷிண்டே பாய்.
ஷிண்டே பாய் கூட்டமான பார்சி இனத்தில் அதிக நேரம் பிணத்தை வீட்டில் வைத்திருப்பதில்லை. எதிர்க்காற்றை கிழித்துக் கொண்டு, மூச்சிறைக்க – ரத்தம் தலைக்கும் – இதயத்துக்குமாக குதிக்க ஓடினான் ஷிண்டே … கௌரங்கீ ரோட்டின் மறுமனையில், ரிங் ரோட்டில் கலந்து மைதானத்தை நெருங்கிய போது கால்களும், கண்களும் சோர்ந்திருந்தன. அதோ… கம்பிகளுக்குப் பின்னே கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. இரண்டு, மூன்று பேர் மட்டும் அப்பாவின் உடலைச் சுமந்தபடி கிணற்றை நெருங்கிக் கொண்டிருந்தனர். மைதானத்தின் திறந்த கதவுகள் வழியே ஷிண்டே உள்ளே போவதற்கும், அவர்கள் உடலை கிணற்றின் மேல் போடப்பட்டிருந்த கம்பிகளில் படுக்க வைத்து விட்டு திரும்புவதற்கும் சரியாக இருந்தது. நின்று கொண்டிருந்த கூட்டத்தினரின் உள்புகுந்து, வெளியே வருவதற்குள் மைதானத்தின் உள்கதவு இழுத்து மூடப்பட்டது.
“பெரியப்பா… கதவை திறக்கச் சொல்லுங்கள்…” உடைந்து போயிருந்த குரலில் பக்கிம் சௌத்ரியைப் பார்த்து கத்தினான். மெதுவாக நடந்து ஷிண்டேயின் அருகில் வந்தார். ஆதரவாக முதுகை தடவிக் கொடுத்தார்.
“இல்லை கண்ணா … அங்கிரமன்யு நேரம் ஆரம்பமாகிவிட்டது. இனி உள்ளே போக முடியாது. அகுரமஸ்தா ஆசீர்வதிப்பார். வா போகலாம்…” பிசிறடிக்கும் பெங்காலியில் ஹீனமாய் சொன்னார். “இல்லை… இல்லை… நான் போயாக வேண்டும். அப்பாவின் முகத்தை கடைசியாக பார்க்கக் கூட எனக்கு உரிமையில்லையா? கதவைத் திறங்கள்…” அடிவயிற்றிலிருந்து கத்திய ஷிண்டே பாய் கம்பிகள் அதிர கதவைக் குலுக்கினான். மூன்று, நான்கு பேர் சூழ்ந்து நின்று பிடித்துக் கொண்டார்கள். “கதவைத் திறங்கள்.. திறங்கள்…” திரும்ப திரும்ப கத்தியபடியே உடைந்து போய் அழத் துவங்கினான். “அப்பா…” ஷிண்டேயின் பெருங்குரலுக்கு மைதானத்திலிருந்து ஒன்றிரண்டு கழுகுகள் மட்டும் திரும்பிப் பார்த்தன.
மனசிலிருந்த துக்கச் சுமை, தாரை தாரையாய் கண்கள் வழியே கண்ணீராய் வடிந்தது. கூட்டத்தில் கொஞ்சப் பேர் நகரத் துவங்கியிருந்தார்கள். மைதானத்தின் காவல்காரர் அருகே வந்தார். “ம்… எல்லாரும் போங்க…” அதிகாரம் கனக்கிற கொச்சை பெங்காலியில் கணைத்தார். பக்கிம் சௌத்ரி, ஷிண்டே பாயின் தலையைக் கோதியவாறே முகவாய் நிமிர்த்திப் பார்த்தார். கண்கள் சிவந்து போயிருந்தன.
“வா… ஷிண்டே போகலாம்…” சொல்லிவிட்டு மெதுவாக முன்னே நடக்கத் தொடங்கினார். ஷிண்டே மட்டும் நின்று, போகிற அவர்களையே பார்த்தான். மைதானத்தின் வாயிலை கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
மைதானத்தின் மையத்திலிருந்த கிணற்றை பார்த்தான். அப்பா அசைவற்று இருந்தார். எங்கிருந்தோ ஒரு கழுகு கிணற்றின் மேல்கம்பிகளில் அமர்ந்து, குதித்துக் குதித்து அப்பாவின் அருகில் வந்தது, ஷிண்டே பாய்க்கு ரத்தம் தலைக்கேறியது. “ஏ..ய்…ய்” பெருங்கூச்சலோடு அங்குமிங்கும் துலாவி, ஒரு சிறிய கல்லினை எடுத்தான்.
கம்பிகளிட்ட அடைப்பின் வழியே, கல்லை – கிணற்றை நோக்கி வீசியெறிந்தான். மீண்டும் குனிந்து தேடினான். ஒற்றைக் கழுகு ஒரு குதி, குதித்து மீண்டும் அருகில் சென்று அமர்ந்து கொண்டது.
ஷிண்டே கற்களை எடுத்து, நிமிர்ந்து பார்த்தான். இப்போது ஒரு கூட்டமாய் பத்துப் பதினைந்து கழுகுகள் வந்து அமர்ந்தன. கல்லினை கீழே போட்டு விட்டு விம்மி வரும் அழுகையோடு கத்தினான்.
“அய்யோ … அப்பா …டாய்…’
ஷிண்டேயின் கூச்சல் கேட்டு அதற்குள் மூன்று பேர் ஓடிவந்து பிடித்துக் கொண்டார்கள். அந்தக் கழுகுக் கூட்டம் ஒவ்வொன்றாய்த் தாவிப் பிணத்தின் மேல் அமர்ந்தன. வழக்கம் போல் இன்றைய உணவை, தன் அலகுகளால் கொத்தத் துவங்கின.
அவனின் திமிறலை அவர்களால் அடக்க முடியவில்லை. ஷிண்டே பாய்க்கு யாரின் மீது என்று தெரியாமல், இனம் புரியாத கோபம் தலைக்கு ஏறியது.
தன் தந்தையின் மரணச் செய்தியை பதறி சென்னையிலிருந்து கொல்கொத்தா செல்லும் ஷிந்தா பாய் எனும் பொறியியல் படிக்கும் இளைஞனுடன் துவங்குகிறது கதை .
சென்னையிலிருந்து கொல்கத்தா வரை அந்த இளைஞன் உடனே பயணம் செய்யும் உணர்வை கொடுக்கும் கதை அமைப்பு.
பார்சி இன மக்களின் இறுதி அடக்கத்தை, சடங்குகளை நாமும் கலந்து கொண்டு அனுபவித்த ஒரு உணர்வு
தமிழ் சமூகத்தில் அறிமுகமில்லாத வேறொரு இனத்தின் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் சிறுகதை சிறப்பு தோழர்.
ஷிண்டா பாய்க்கு காரணம் தெரியாத கோபம்…. யார் மீது…?
இனி திரும்பி வர போகாத தன் பாசமமிகு தந்தையின் முகத்தை கடைசியாக பார்ப்பதற்கு கூட கதவைத் திறந்து விட முடியாத மத சடங்குகளின் மீதா… அனைத்து மதங்களும் இறுக்கமாக கடைபிடிக்கும் சடங்குகளின் மீதா….? என்ற கேள்வியுடன் முடித்த விதம் சிறப்பு.
வாழ்த்துகள் தோழர்.
அகுரமஸ்தா (அடக்கஸ்தலம்) மூலம் நமக்கு ஒரு சில செய்திகள் கிடைக்கின்றன. அது யாருடைய உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. உருவாக்கப்பட்ட எத்தனையோ உயிர்கள் அனைத்தும் அதனிடம் அடக்கம் ஆவதில் பாகுபாடு இல்லை. ஷிண்டே பாயின் தந்தையை மட்டுமா எத்தனை பேர் அதனுள் அடக்கம்.. இப்போது இருப்பது போல் எத்தனை ஊர் அதனுள் அடங்கியிருக்கும். அங்கு உள்ள கழுகுகளுக்கு ஷிண்டே பாயின் தந்தை என்று தனித்து தெரியுமா என்ன? அலைகளைப் பொறுத்தவரை அது தனக்கு இரையாக கிடைத்த ஒரு விலங்கு. நாளை ஷிண்டே பாயும் தான்.