விலக்கு..

0
(0)

அறிந்தும் அறியாமலும்..

தெரிந்தும் தெரியாமலும்,

செய்த குற்றங்கள் யாவையும்

பொறுத்துக் காத்து ரட்சிக்க வேண்டுமாய்..

சத்தியமான

பொன்னு பதினெட்டுப் படிமேல் வாழும்

ஓம் அரிஹர சுதன்

ஆனந்தன் எங்கள் அய்யனய்யப்ப….

சுவாமியே……..

சரணமய்யப்பா… சரணமய்யப்பா…… சரணமய்யப்பா…!

 

சரணகோஷம் முடிந்து கேசட்டில் பாடல் துவங்கிய சமயம் அம்மா வீடு நுழைந்து மூச்சுவாங்கியது. அந்த முன்காலைப் பொழுதில்கூட அம்மாவின் நெற்றி வியர்த்து இருந்தது. இடுப்பிலிருந்த கட்டைப்பையை இற்க்கி வைத்து விட்டு உஸ் சென உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

 

”நாளதான் வருவேன்னு நெனச்சேன்.. “ அம்மாவினருகில் உட்கார்ந்த பத்மினி, கட்டைப்பையை விரித்து உள்ளே பார்த்தாள். “அதான பாத்தே.. என்னாடா கமகமன்னு வாசன வருதேன்னு.. !”  என்றபடி, பைக்குள்ளிருந்து பனங்கிழங்கு ஒன்றை எடுத்தாள். “பரவால்ல….வேகவச்சே கொண்டு வந்திருக்கியே அம்மான்னா அம்மாதே தேங்ஸ்…மா..”  ஆவலுடன் கிழங்கின் தோலை உறிக்கலானாள்.

 

”கிறுக்கி..! என்னத்துக்குடி தேங்..சு.!. “ மகளின் தலையில் செல்லமாய்த் தட்டிய அம்மா, “ இந்தக் கழுதைய வாங்கி பண்டுதம் பாத்து வரத்தே இம்புட்டு லேட்டு…” என்றது. ’’தம்பிய எங்க..? இன்னம் வேலவிட்டு வரலியா..? ” என மருமகனை விசாரித்தது.

 

”குருசாமி’யப் பாக்கப் போயிருக்காரு..” என்று சடாரென விஷயத்துக்கு வந்தாள் பத்மினி.

 

”குருசாமியவா..? எதுக்கு..? எதும் மாலகீல போடப் போகுதா..? “ கேள்வியில் ஒரு அச்சம் தெரிந்தது.

 

பத்மினியின் கண்களிலும் ஒருகலக்கம் குடியிருந்தது. இமைகளை இரண்டொருதரம் படபடவென  சிமிட்டிக்கொண்டவள், ’ஆமென வார்த்தையில் சொல்லாமல் தலையசைப்பில் பதில் சொன்னாள்.

 

”முருகனுக்கா.. அய்யப்பனுக்கா..?”  மருவத்தூருக்கா எனவும் கேட்க நினைத்த அம்மா எதோ ஒருகணக்கில் அதை விட்டுவிட்டது.

 

”அய்யப்பனுக்குத்தே…ம்மா..”

 

”எதும் வேண்டுதலா..?”

 

”அதெல்லாமில்ல.. கூட வேல பாக்குறவங்க எல்லாரும் போறாங்களாம் அப்பிடியே அவுகளோட சேந்தமானைக்கி போயிட்டு வந்திரே..ங்கிறாரு..! “ நெஞ்சுக்குள் பாரம் சுமந்து கொண்டிருக்கிறவளைப் போல்த் திணறித் திணறிப் பேசினாள்.

 

” அட. பகவானே.. சாமி காரியத்த இம்பிட்டு விளயாட்டா எடுத்துக்க லாமா.. அதும் அய்யப்பன் ங்கறப்ப எம்பிட்டு சூதானமா இருக்கணுந் தெரியுமா.. வயசான கெழடு கெட்டைகளே பயந்துபோய் மாலயப் போடுவாங்களே…. இந்ததம்பிக்கு என்னத்துக்கு இந்த தொறட்டு,  சின்னப்பிள்ள மாதிரி..”

 

அய்யப்பசாமிக்கு ஒருமண்டலம் – நாற்பத்தெட்டு நாள் – விரதம் இருக்க வேண்டும். சைவம் தவிர்த்து அசைவ வாசனையே அண்டக் கூடாது. அதைவிட முக்கியம் ஆண்பெண் சேர்க்கை. நினைப்பில் கூட வரக்கூடாது. லாகிரி வஸ்து மதுபானங்கள் சுத்தத்துக்கு ஆகாது. ஒவ்வொருநாளும் – அதிகாலையிலும் மாலை வேளையிலுமாக தினசரி இரண்டு நேரக்குளியல் செய்ய வேண்டும். வாராவாரம் சனிக்கிழமை ஒருநேரத்துச் சாப்பாடுமட்டும் உண்டு முழுநோன்பு இருக்கவேண்டும்.

அதற்கு முன்பாக வீடுமுழுக்கவும் வெள்ளையடித்து சுத்தம் செய்ய வேண்டும். பண்டபழைய பொருடகளை கடாசி வீட்டைப் புத்தம் புதுசாகக்கி, மாலை போட்டவருக்குப் புதுப் பாத்திரத்தில்தான் உணவு சமைக்க வேண்டும்.            ”யே..ன் ஒம் மாமியார் எதும் சொல்லலியா.. ?“ – கல்யாணம் முடிச்சு ஏழெட்டு வருசம் ஆகியிருந்தாக்கூட பரவால்ல.. ரெண்டு வருசம் முழுசா முடியலியே… அம்மா தனக்குள் ஆதங்கப்பட்டுக் கொண்டது.

 

”இவர் யார்கிட்ட எந்தக்காரியத்துக்கு யோசன கேட்டாரு. எல்லாம் தான் வச்ச வரிசதான.”.

 

”மத்த விசயத்தக்கூட விடு.. சாமி காரியமில்லயா வீட்டுப் பெரியவங்கள ஒருவார்த்த கலந்துக்க வேணாமா…”

 

”அதேன் எனக்கு ஒண்ணும் புரியல.. அவர்ட்டப் பேசுனா சாமி கும்புடுறத தடுக்கறதா ரெண்டு பேச்சு வாங்கணும்.”

 

பத்மினிக்கு உண்மையில் அதுவல்ல பிரச்சனை. அய்யப்பனுக்கு மலைபோட்டால் கோவிலுக்குப்போகிற நாள்வரை அனுதினமும் அதிகாலை -அவர் எழுகிறாரோ இல்லியோ தான்எழுந்து தலைவழியே தண்ணீரை ஊற்றி கொண்டுதான் அன்றைய வேலைகளை துவங்க வேண்டும். அதும் கார்த்திகை மார்கழிக் குளிரில் பச்சைத்தண்ணீர்…  தாங்குமா..? அதுமட்டுமா அன்றாடம் உடுத்திய துணிகளை அன்றன்றே துவைத்து போடவேண்டுமாம். அம்மாவிடம் அழுகிறகுரலில் சொன்னாள்.

 

”ஆமா, அய்யப்பெ பெண் வாடை காணாத தெய்வ மில்லியா நாம எம்ப்புட்ட்க்கு சுத்தமா இருக்கணுமோ அம்புட்டுக்கு நல்லது.. “ அம்மாவும் ஒரு மாதிரியாகத்தான் பேசியது.

 

”காலையிலயும் ராத்திரிக்கிம் இட்லி தோசதே சுட்டுப் போடணுமாம்ல..”

மகள் யாரோ ஒரு வயசாளியிடம் சிக்கி ஏகப்பட்ட கேள்விகளை தனக்குள் கொண்டிருக்கிறாள் என்று அம்மாவுக்குப் புரிந்தது,

 

”விரதம் இருக்கவங்களுக்கு ஆறுன சாப்பாட்ட போடக்குடாது. ஏன்னா அவங்க அய்யப்பனோட மறு உருவம். சாமிக்கு பழையதப் போட ஆகுமா…? அதனால அப்பப்ப சூடாசெஞ்சு போடணும்பாங்க.. சூடுன்னா ந்ம்மூர்ல இட்லி தோசதான.. |” என்ற அம்மா, “ ஒகோ, ஒனக்கு இட்லி பிடிக்காதோ..”  –  என்று இழுவையாகப் பேசியது. பத்மினி ஆளாகி வீட்டில் இருக்கிறபோதெல்லாம் அரிசி ஊறப்போட்டாலே அலறுவாள். “ அது என்னா ஒருபண்டம்… நொசுக்கு நொசுக் குன்னு ..’’ என வேண்டுமென்றே இட்டலிக்கி  ஆட்டச்சொன்னால் தோசைக்கு ஆகும்படி மாவை நைசாகவும் லூசாகவும் அரைப்பாள்..

“ சரி ஒனக்கு மட்டும்,  தோசைய ஊத்திக்கிற வேண்டிதான.. ”

 

”ஆமா.. ஒருவீட்ல ஏழு வக்கன செஞ்சிகிட்டிருந்தா மத்த வேலயலா யார் பாப்பா..?”  அலுப்பும் சலிப்புமாய்ச் சொன்னாள் பத்மினி.

 

வீடுகளில் எந்த ஒரு விஷேசம் நடந்தாலும் அது பெண்கள் தலையில் தானே வந்து விடிகிறது. அதும் சாதாரணமாய் பத்மினியின் அம்மாவீட்டில் ஒவ்வொரு வெள்ளி-செவ்வாய்க்கும் வீடுகழுவி அடுப்படி மொழுகி விட்டுத்தான் அன்றாட வேலைகளாஈ ஆரம்பிக்கவேண்டும். இல்லையென்றால் அப்பா  யானையாய் கஜிப்பார்.’’ பொம்பளைகளுக்கு வீடுவாசல் கழுவறதக் காட்டியும் வேறஎன்னா முக்கியமான சோலி இருக்கு..?’. அந்தப்பழக்கம் பத்மினிக்கும் இயல்பாய்வந்து சேர்ந்துவிட்டது கணேசன் அவ்வாறெல்லாம் சொல்ல மாட்டான் என்றாலும் ஒவ்வொரு முக்கிய கிழமையிலும் இப்பவும் அப்பாவின் கர்ஜனை காதுகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.

 

போனமாதம் பத்மினியின் மாமனாருக்கு திதிநாள் வந்தது. மாமியார் முதல்நாள்தான் வந்து திடீரெனச் சொல்லிவிட்டுப் போனார். ‘’ உங்களுக்கா தெரிய வேணாமா.. ஒவ்வொரு வர்சமும் வந்துவந்தா சொல்லிட்டுப் போவாக.. என்கண்ணுக்குப் பெறகு மொத்தத்துக்கு மறந்துடுவீக போல..” எனற குற்றச்சாட்டு வேறு.

 

நல்லவேளை பூர்வீக வீட்டில் வசிக்கவில்லை. இருந்தால், திதிக்கு வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டியிருக்கும்.. வாடகை வீடாயிருந்தாலும் அங்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. அழுக்கு என்று எதுவுமில்லாதபடி, தலையணை உறைகளிலிருந்து, போர்வை, பெட்ஷீட், பாய் என எல்லாவற் றையும் ஒரே நேரத்தில் ஊறவைத்து அத்தனை துணிமணிகளையும் அள்ளித் துவைத்துப்போட நெஞ்சுக்கூடு புண்ணாகிப் போனது. அதற்குமேல். தண்ணீர் சுமக்கிற வேலை.. கரண்ட் இல்லாத கொடுமைக்கு அடிகுழாயில் அடித்து தொட்டியை நிரப்பி வேலைசெய்தாள்.

 

அது ஒரு நாளில் முடிந்தாலும், விஷேசத்தன்று காலையில் தூங்குகிறவரை எழுப்பி விட்டு, அவர் திரும்பி வருவதற்குள் வீட்டைக்கழுவிச் சுத்தம் செய்து முடிப்பது தான் அசுரத்தனம். உடம்பு வலியெடுத்துப்போகும். மேல்மாடியிலிருந்து  வீட்டை படிவழியே கழுவிக் கீழிறங்க இவருக்கு வேலைக்கு நேரமாகிவிடும். டிபன் ரெடிபண்ணித் தருவதற்குள் வீட்டை இரண்டாக்கிவிடுவார் “ஓஞ் சுத்தபத்தத்துக்கு ஒரு அளவு இல்லியா நா ஆபீஸ்ல வேலய ரிசைன் பண்ணீட்டு வந்திர வேண்டியதே.ம் போல..” என்று நாயாய்க் கத்துவாரே ஒழிய  தண்ணிர் எடுத்துக் கொடுப்போம்.. பண்ட பாத்திரங்கள் ஒதுக்க ஒரு ஒத்தாசை செய்வோம் என்கிற பழக்கம் கிடையாது. அந்தவகையில் அப்பா கூடவே இருந்து கழுவிதைத் துடைக்க துடைத்ததை எடுத்து அடுக்க என சின்னச் சின்ன காரியங்களாவது செய்வார்.ஆனால் அது அம்மாவுக்கு பிடிக்காது அப்பா பக்கத்தில் நின்று வேலைகளை வேவுபார்ப்பதாய் குறை சொல்லும். ’கொடஞ்சுகிட்டே இருக்காட்டி அங்கிட்டுப் போய்த் தொலஞ்சாலாச்சும் நிம்மதியா நம்ம வேலயபாக்கலாமே.’’

 

இதற்காகவே எந்த விஷேசம் என்றாலும்  ப்த்மினி முதல்நாளே மேல்மாடியைக் கழுவிப் பூட்டிவிடுவாள். யாரையும் படுக்கக்கூட அனுமதிக்க மாட்டாள். அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து, காலை டிப்பனுக்கான வேலைகளைத் துவக்கி விடுவாள்.

 

”டிப்பன் வேணும்னா காப்பிக்கடைக்கி போங்கன்னு அனுப்பிச்சு விட்ருவமா…” பத்மினிக்கு திடீரென  ஒரு யோசனை உதிததது.

 

”இப்பல்லாம் ரெம்பப்பேரு அதத்தான செய்றாங்க…ஆனா, அது சரியில்ல பத்து.. அய்யப்பனுக்குன்னு ஒரு மொற இருக்கு. மால போட்டுட்டா அடுத்த விட்டுல கை நனைக்கக் கூடாது. காப்பிக்கடைக்கிப் போனா எச்சிக்கிளாசில காப்பியோ தண்ணியோ சாப்பிடக்குடாது. சடங்குவீடு, சாவு வீடு, பேறுகாலம் பாத்தவீடு இங்கயெல்லா தலகாட்டக்குடாது. தூரமாப் போன பொம்பளைக மொகத்திலயே முழிக்கக்குடாது. அந்தமாதிரி ஆன்வங்க நம்மவீட்டுப் பிள்ளையா இருந்தாலும் சாமிக கண்ணுல படாமப் பாத்துக்கணும்…” அம்மா சன்னதம் வந்தவரைப்போல அடுக்கிக் கொண்டே இருந்தது.

 

”வாங்க அத்த…! நானே சொல்லிவிடலாம்னுக் கிருந்தேன்  நல்லவேள நீங்களே வந்திட்டீங்க.. மாமாவும் வந்திருக்காரா..” கணேசன் முகம் விரிய மாமியாரை வரவேற்றான்.

 

”இல்லங்…யா நா மட்டுந்த்தே..”  வாரிச்சுருட்டி எழுந்து கொண்டது.

 

”சும்மா ஒக்கார்ங்க.’’ என்றவன், ‘’. நாளான்னைக்கி அய்யப்பனுக்கு மால போடலாம்னு இருக்கேன்…. “ என்றான்.

 

” ம்.. இப்பத்தே பத்மினி சொல்லுச்சு..”

 

”வெள்ளையடிக்க ஆள்ச் சொல்லி இருக்கேன். சொன்னமாதிரி நீங்களும் வந்தது நல்லதாப் போச்சு. “ என்றவன்,” வீடு ஒதுக்க தனியா ஒருஆள வரச்சொல்லி விடலாமா.. “ இழுத்தான்.

 

”எதுக்கு தம்பி வெட்டிச் செலவா அதேன் நா வந்திட்டேன்ல பாத்துக்கலாம்..”  கணேசன் எதிர்பார்த்த பதில் கிட்டிவிட்டது.

வர்ணக்காரர்கள் வருவதற்கு முன்னதாக அம்மாவும் மகளுமாய்  வெள்ளையடிப்புக்கு தோதுவாக வீட்டை ஒதுக்கிக் கொடுத்தனர். வேலையாட்கள் மூன்றுபேர் வந்து மடமடவென டிஸ்டம்பரும் பெய்ண்ட்டும் கொண்டு தீற்றிவிட்டுக் கிளம்பினர். வீட்டைக்  கழுவி, இறக்கிப்போட்ட பொருட்களைப் பூராவும்  மறுபடியும் மேலே ஏற்றி வைக்க இரவாகிப்போனது. அன்று மட்டும் அதிசயமாய் கணேசன் நின்று உதவினான்.

 

” புதுத்துணி இப்ப எடுக்கவா.. கோயிலுக்குப் போகும் போது எடுக்கச் சொல்லவா..?”  அம்மா பத்மினியிடம் கிசுகிசுப்பாய்க் கேட்டது, பொண்ணக் குடுத்தவகளுக்கு நிண்டாலுஞ் செலவு யாரும் ஒக்காந்தாலும் செலவு.

 

” இப்ப எடுத்தா காவி வேட்டி சட்டதான எடுப்ப..? “ பத்மினி ரெம்பவும் எச்சரிக்கையாய்க் கேட்டாள்.

 

”ஆமா.. மால போடுற சாமிக அதத்தான உடுத்துவாக…”

 

’’அப்படீன்னா கோயிலுக்குப் போகிறப்பவே எடு. ரெம்பநாளா இவரு ஒரு சபாரிசூட் எடுக்கணும்னு பிரியப்பட்டுக்கிருந்தாரு.. தையல்கூலிய நாங்க குடுத்துக்கறோம்மா…”  பத்மினியும் அம்மாவின் காதோரமாகவே பதிலைச் சொன்னாள்.

 

கணேசன் மாலை போடுகிற நாளில் அப்பாவும் தம்பியும் வந்திருந்தனர். முதல்வருசம் என்பதால் சுருளித்தீர்த்தத்தில் போய் மாலைபோட்டால் விசேசம் என்று குருசாமி சொன்னார், நாலைந்து சாமிகள் சேர்ந்து ஒரு சுமோ கார் பிடித்தார்கள். மதியம் எல்லோருக்கும் தலை வழையிலை விருந்து. மாமியார், மச்சான், நாத்தனார் என சுற்றுசொந்தந்தகளை அழைத்திருந்தனர். அம்மாவும் பத்மினியும் பம்பரமாய் சுழன்று கவனித்தார்கள். உண்டு முடித்ததும் புருசன் பொஞ்சாதி இருவரும் ஜோடியாய் குருசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

 

கணேசனால் இரண்டுநாள்தான்  பச்சைத்தண்ணீரில் குளிக்க முடிந்தது. மூணாம்நாள், “தல கணம்.. தாங்கமுடீல பத்மினி.. வெந்நீல குளிக்கட்டுமா.. “ எனக் கேட்டான். பத்மினி பதில் சொல்வதற்குள் செல்போனில் குருசாமியிடம் தொடர்புகொண்டன். “பாதகமில்ல அய்ய்ப்பா..” என உத்தரவு கொடுத்தார்.காலை டிப்பன் வேலையோடு சேர்ந்து தினமும் ஸ்டவ்வில் வெந்நீர் சுடவைத்துத்தர வேண்டிய வேலையும் சேர்ந்து கொண்டது.பத்மினிக்கு.

 

சனிக்கிழமைதோறும் சக்திவிரதம் அனுசரிக்க வேண்டுமென குருசாமி கட்டளையிட்டிருந்தார். அன்றையதினம் ஒருவேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

”காலைலயா மத்தியானமா சாமி..” குருசாம்யிடம் தெளிவாக கேட்டான்.

 

”பகல் பூராவும் விரதமிருக்கணும் சாமி.. சூரிய அஸ்தமத்துக்குப் பிற்பாடு குளிச்சு துணிமணி மாத்தி அய்யப்பனுக்கு பூஜைபோட்டு நூத்தியெட்டு சரணத்தச் சொல்லி விரதம் முடிச்சா நல்லது. “

 

”வேலைக்கிப் போறம். அங்கன பசியெடுத்தா…?”

 

”கொஞ்சம் பால், இல்லாட்டா ரெண்டு பழம்.. லைட்டா எடுத்துக்கங்க..”

 

புருசனோடு சேர்ந்து பத்மினியும் விரதமிருக்க நேர்ந்தது. தனக்கென தனிச்சமையல் செய்ய பொழுதில்லை. வழக்கம்போல வீட்டை மேலும்கீழுமாய் அலசிக்கழுவிவிட்டு, துணிமணிகளைத் துவைத்துப்போட்டு, மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவந்து பொரியல் அவியலோடு சமயத்தில் பாயாசமும் சேர்த்துச் சமைக்க, தலைகிறுகிறுத்து வந்தது. அந்தமாதிரிச் சமயங்களில் வாயில் போட்டுக் கொள்வதற்கென அம்மா பத்மினிக்காக பேரீச்சம்பழமும், நிலக்கடலைப் பருப்பும் வாங்கிக் கொடுத்திருந்தது.

 

”ஒரேடியா பட்டினி கெடந்தா அல்சர் கில்சர் வந்து தொலயப் போகுது.”

 

”பாலு பழம்சரி. இதென்னா… கடலப்பருப்பெல்லாம் சாப்பிடலாமா..”

 

”வேகவைக்காத பண்டங்களுக்கு கணக்கில்லயாம்.. அய்யமார்கிட்ட் கேட்டுதே வந்தே……”

 

மாலையணிந்த நாளிலிருந்தே கணேசன் ரெம்பவும் உற்சாகமாய் இருந்தான். காலைமாலைக் குளிப்பும் சரியான நேரத்துச் சாப்பாடும் உற்க்கமும் அவனது உடமபை த்க்கையாய் வைத்திருப்பதாய்ச் சொன்னான். சனிக்கிழமை விரதநாளில் அய்யப்பனை அழைத்து சரணம் சொல்லுகிற வேளையில் சன்னதம் வந்து தன்னை மறந்த நிலையினை உணர்வதாகவும் பத்மனியிடம் உருகினான்.

 

”சபரிமல சாஸ்தா எப்பவுமே கன்னிச்சாமிகளோடதே இருப்பார் சாமி..” என்று குருசாமியும் சொன்னார்.

 

பத்மினிக்கு கணேசனைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ஒருநேரம் பசிபொறுக்க மாட்டான். ஆனால். மாலைபோட்ட தினத்திலிருந்து பசி எனச் சொன்னதே இல்லை. எப்படிச்சமாளிக்கிறான். முகத்தில் கிறக்கமோ கண்களில் அயர்வோ காணமுடியவில்லை.

ஒவ்வொருவருடமும் மகாசிவராத்திரிக்கி பெரியகுளத்தில் குலசாமி கும்பிடுவார்கள். பங்காளிகள் எல்லோரும் பதினைந்து அல்லது இருபத்தி இரண்டுநாள் விரதம் இருப்பார்கள். அதற்கு இத்தனை கட்டுப்பாடு கிடையாது. என்றாலும் கங்கணம் காட்டி கறிபுளி சேர்க்காமல் விரதம் இருக்கவேண்டும். அதற்கே வெகுபாடு பட்டுப்போவான். பத்துப் பன்னிரண்டு நாளிலேயே ஆள் சுணங்கிப் போவான். திடீரென இரவில் வந்து தண்ணீர் வைக்கச் சொல்லி குளிப்பான். என்னவென்றால் நண்பர்களோடு செட்டுச் சேர்ந்ததில் தெரியாமல் ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டு விட்டதாகவும் தலைவழியே தண்ணிர் விட்டால் சரியாப்போகும் என அவன் அம்மா சொன்னதாகவும் சொல்வான். சில இரவுகளில் தனிப்படுக்கையை மீறி இவளை அண்டிவருவான்.’தொட்டுப் படுக்காம தூக்கம் பிடிக்கமாட்டேங்குதுடி..’ என கிசுகிசுப்பான்.

 

அப்படிப்பட்டவன் எப்படித்தான் ரெண்டுமாச விரதம் தாங்கப் போகிறானோ என விதிர்த்துப் போயிருந்தாள். அதன் காரணமாய் அவனுக்கு எட்டவே இருக்கவும் முயன்றாள்.

 

”நம்ம தமிழ் ஆளுங்கதா எப்பவும் எதார்த்தமா யோசிப்பானுக,, ஏன்னு கேளுமே..” மாலைபோட்ட நாளில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து உப்புக்கோட்டை பெரியப்பா பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. ’’என்னா சடஙகு சாமிகும்பிடுன்னாலும் பதினாறு நாள்லருந்து இருவத்திரண்டு நாளைக்குள்ள வெரதம் முடிச்சுரு வாங்கெ.. அதுக்குமேல போனா ஆம்பளைக்கும் பெரச்சன பொம்பளைக்கும் சங்கடம். இப்பிடியா நாப்பத்தெட்டு நாளு அறுவது நாள்னு மனுசனப்போட்டு பிச்சு எடுக்கறது.. மலப் பிரதேசங்கறதுனால் மலையாளிக அவுகபாட்டுக்கு சாமியோ அய்யப்போன்னு திரிஞ்சிருப்பாக போல..”

 

அம்மாவுக்கு பத்மினியின் குளிப்புபற்றித்தான் கவலை இருந்தது. கோயிலுக்குப் போகிறநாளில் எதும் ஆகிவிடக்கூடாது.

 

மற்ற பெண்களைப்போல பத்மினிக்கு குளிப்பு அத்தனை சுத்தம் கிடையாது. ஒருநாள் ரெண்டுநாளில் நின்றுவிடும் என்றும் சொல்ல முடியாது. சமயத்தில் ரயில்வண்டிபோல ஒருவாரம்கூட ஓடிக்கொண்டிருக்கும்.

 

முன்னெச்சரிக்கையாய் கணேசன் தெரிந்த டாக்டரிடம் கேட்டு பத்மினிக்கு நிறைய மாத்திரைகள் வாங்கிக் கொடுத்திருந்தான்.

 

அம்மா குருசாமியிடம் போய் புறப்பாட்டுக்கான  தேதியைக் கேட்டுவந்தது.

 

சபரிமலைக்கு மாலைபோட்ட கன்னிச்சாமிகள் மலைக்குப் புறப்படுவதற்கு முன்பு ஏதாவது ஒருநாள் ஊரிலுள்ள சாமிகளை அழைத்து ’கட்டளை’ கொடுக்கவேண்டும் என்றார் குருசாமி. மலைக்குப் போவதற்கு முதல்நாள் ஏற்பாடு செய்யலாம் என நாள் குறித்துத் தந்தார். கிட்டத்தட்ட ஐம்பது சாமிகளுக்குமேல் கணேசனின் அழைப்புக்கு வந்திருந்தனர். வீடு கொள்ளவில்லை.

 

இரவுநேரம் என்பதால் மொட்டைமாடியில் பஜனை வைத்தார்கள். மைக்செட் ஸ்பீக்கர் வைத்து சீரியல்செட் பல்புகளெல்லாம் போட்டு வீட்டை அலங்கரித்து இருந்தார்கள். பாட்டும் பரவசமுமாய் பஜனை முடிய,  இரவு பன்னிரண்டு மணிக்குமேல் ஆகிப்போனது. வந்திருந்த அத்தனைபேருக்கும் ஜாங்கிரியில் ஆரம்பித்து இட்லி, வடை, பொங்கல், சட்டினி, சாம்பார் என விதவிதமாய் பரிமாறி பனங்கற்கண்டு பால் கொடுத்து விருந்து முடித்தனர். முன்னதாக வீட்டுக்குள் நுழைகிற அத்தனை சாமிகளுக்கும் – கணேசனும் பத்மினியும் வாசலில் நின்று மனைப்பலகை போட்டு அதில் சாமிகளின் பாதங்களை ஏற்றிவைத்து புள்ளி இல்லாமல் தண்ணீர்விட்டுக் கழுவி, கழுவிய பாதங்களில் சந்தனம் குங்குமம் சாத்தி புருசன் பொஞ்சாதி இருவரும் தொட்டுக்கும்பிட்டு – பாத்பூஜை செய்து வரவேற்று அழைத்து வந்தனர்.

 

 

மறுநாள் இருமுடி கட்டி முடித்ததும் சாமி வீடுவந்து சேருகிறவரை மனையாள் செய்யவேண்டிய பணியினை பத்மினியிடம் விளக்கிக் கொண்டிருந்தார் குருசாமி. அம்மாவுடன், கணேசனும் மேல்சட்டை இல்லாமல் நின்று கேட்டுக்கொண்டான்.

 

‘’சாமி இருமுடியத் தூக்கி தலையில ஏத்தி மலைக்குப் பொறப்பட்ட நாழிகையில இருந்து அவரு வீடுவந்து சேந்து பொங்கல் வச்சு மாலையக் கழட்டுற வரையும் நீங்க விளக்கேத்தி கும்பிட்டுவரணும் சாமி.. எந்தக் காரணங்கொண்டும் அத அணைய விட்ரக்குடாது. ‘’

 

‘’சரிங் சாமி..’’

 

அதற்கும்மேல் அவர் சொன்னதுதான் பத்மினிக்கு குமட்டியது. கோயிலிலிருந்து கணேசன் உடுத்திவரும் உடுப்பை வாங்கி துவைக்கும்போது மலைவாசம் பட்ட அந்தத் துவைநீரை உள்ளங்கையில் எடுத்து மனைவியானவள் ஒருவாய் குடிக்கவேண்டுமாம். அதனால் மலைக்குப் போய்வந்த புண்ணியம் அவளுக்கும் கிட்டுமாம்.

 

பத்மினி சிணுங்கினாள்., ‘’எப்பிடிம்மா…? “

 

‘’ ஒருசொட்டு  வெரல்ல தொட்டு. நாக்குல வச்சுக்கலாம் விடு .. ”

 

’’ சாமிய வழியனுப்பிச்சிட்டு வந்திர்ரேன்…”  என்று குருசாமியோடு வெளியில் வந்த கணேசன், ‘’ சாமீ.. “ என வார்த்தைகளை மென்றான்.

 

“சொல்லுங்க அய்யப்பா….! “ பவ்யமாய்க் கேட்டார் குருசாமி

 

“சாமீ.. நைட்டு தூக்கத்தில … வேட்டில.. “ சொல்லும்போதே அவனுக்கு .கைகால் வியர்த்தது.

 

கண்களை மூடித் திறந்த குருசாமி மறுப்பதுபோல தலையாட்டினார். ’’ஒண்ணும் பாதகமில்ல அய்யப்பா.. அதெல்லா.. பொம்பளைகளுக்குத்தான் தீட்டு கணக்கு எல்லாம்.. ஆம்பளைகளுக்கு எந்தக்கணக்குமில்ல. நீங்கபாட்டுக்கு தலவழியே  தண்ணிய ஊத்திக்கிட்டு சாமியே சரணம்னு சரணஞ்சொல்லிட்டுக்  கிளம்புங்க .”

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top