விருது

0
(0)

சார்…… சார்….. அவசரமும் பரபரப்புமாய் வேகமாய் பக்கத்தில் வந்து, சார் உங்களைத்தான்… சந்திரன் முகத்தில் பரவசக்களை. சுந்தரமூர்த்தி புருவத்தை உயர்த்தி கண்களை இடுக்கிப் பார்த்தார் ஒன்றும் புரியாமல். “சார்…. நேரா ஆபிசில் இருந்துதான் வரேன். உங்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைச்சிருக்கு. மாவட்டத்தில் இருந்து இப்பத்தான் தகவல் வந்துச்சாம்.” சுந்தர மூர்த்தியின் முகம் எவ்வித சலனத்தையும் காட்டவில்லை.

“இந்தச் செய்தி உண்மைதானா…”

“ஆமா சார்… டி.இ.ஓ ஆபிசுல இருந்து போன் போட்டு சொல் – யிருக்காக.”

சிறிது நேரம் மெளனம். கண்களை மூடி யோசித்தார்.

“இந்த விருது எனக்கு வேண்டாம். இந்த விருதை நான் வாங்கப்போறதில்ல.” சொல்லிவிட்டு விரு விரு வென நடந்து போய்விட்டார் சுந்தர மூர்த்தி.

சந்திரன் அதிர்ந்து போய்விட்டார். இப்படி வேண்டாம் எனச் சொல்வார் என்று சிறிதும் எதிர் பார்த்திருக்கவில்லை. விசயத்தைக் கேள்விப்பட்டதும் அப்படியே மனதுக்குள்ளாவது ஆனந்தக் கூத்தாடி, தனக்கு ஏதாவது இனிப்பு வாங்கிக் கொடுத்து நன்றி தெரிவிப்பார் என்றுதான் ஓடோடி வந்தார். தன்னையே நம்ப முடியாமல் ஒரு நிலைப்படாமல் தவித்தார். என்ன இப்படிச் சொல்லிவிட்டுப் போறார். இந்த விருது வாங்க யாருக்காவது கசக்குமா என்ன…? இப்படியும் ஒரு மனிதரா.? மறுக்க என்ன காரணம். நடு ரோட்டில் நின்று மூளையைக் குழப்பியதுதான் மிச்சம். சக ஆசிரியர்களிடம் கூறிய போது அப்படியா என்று ஆச்சரியப்பட்டார்களே தவிர ஒருவருக்கும் காரணம் பிடிபடவில்லை.

சுந்தரமூர்த்தி எப்போதும் போல வீட்டிற்குத் தேவையான பொருட்களை கடையில் வாங்கிக் கொண்டு, சாவகாசமாய் நடந்து வீட்டிற்குச் சென்றார். அவர் தலை மறையும் வரை ஆச்சர்யமாய் வெறித்துப் பார்த்தபடி நின்றார் சந்திரன்.

பழைய சுந்தரமூர்த்தியாக இருந்தால் ஆனந்தக் கூத்தாடியிருப்பாரோ என்னவோ. இருபது வருடத்திற்கு முன் நடந்த சம்பவம் இன்னும் மனதை ரணமாய் அறுத்துக் கொண்டுதான் இருந்தது.

அப்போது இளவயது, அந்த கிராமப் பள்ளியின் தலையை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்த நேரம். அவர் எண்ணமெல்லாம் மாணவர்களின் நலன் மட்டுமே குறிக்கோளாய் இருந்தது. காலை முதல் மாலைவரை பள்ளியே கதி என்று இருப்பார். வீட்டு வேலைகளைக்கூட மறந்து விட்டு…. சில சமயம் நிராகரித்து விட்டும், பள்ளி வளர்ச்சியே லட்சியம் என பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

கல்வி மட்டுமின்றி, ஒரு மாணவன் ஒழுக்கத்தில் மிகத் தேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதில் மிக்கக் கண்டிப்புடன் இருந்தார் சுந்தரமூர்த்தி. கையில் எப்போதும் ஒரு பிரம்புடன் அலைவார். சக ஆசிரியர்களே பயந்து மிரளும் தோற்றம். மிலிட்டரியில் இருக்க வேண்டிய ஆளு தப்பித் தவறி இந்த வேலைக்கு வந்து விட்டார். சக ஆசிரியர்கள் தங்களுக்குள் நக்கலாய் கூறிக் கொள்வர். ஆனாலும் அவருடைய நேர்மையும், கண்டிப்பும் ஒழுக்கமும் எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் இருந்ததே தவிர, எதிர்த்து ஒரு வார்த்தை கூற முடியாத அளவு முன்மாதிரியாய் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. இருந்தாலும் அந்த ஊரில் ஒழுக்கக் குறைபாடுகள் நிறைந்த ஊர் என்று சுற்று வட்டாரத்தில் பேர் வாங்கியிருந்தது. இதையெல்லாம் தெரிந்திருந்தாலும் அப்பள்ளி மாணவர்கள் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்து, சமுதாயத்தில் எடுத்துக்காட்டான மனிதர்களாய் வரவேண்டும் என்பதில் சுந்தர மூர்த்தி கண்டிப்பாக இருந்தார். அதற்காக சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி வரும் போதெல்லாம் தயங்குவதில்லை. இதுவே அவருக்கு போதாத காலமாய் முடியும் என்று ஒருபோதும் நினைத்துகூடப் பார்க்கவில்லை.

மரத்தடியில் ஊரே கூடியிருந்தது. மாலை மயங்கும் வேளை, குஞ்சு குறுவான்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் காளிமுத்துதான் நாட்டாண்மை. அவருடைய கைத்தடிகள் சூழ உட்கார்ந்து இருந்தார். பெண்களும் கூட தூரத்தில் நின்று தங்களுக்குள் “குசு குசு வென்று” பேசிக் கொண்டிருந்தனர். லெட்சுமி மட்டும் “எழவெடுத்தப்பய …. சின்னப் பையன்னு கூடப் பாக்காம இப்படி அடிச்சுருக்கானே. இவன் என்ன பெத்தா போட்டிருக்கான். மூஞ்சியும் மொகரக்கட்டையும்” என்று எல்லோருக்கும் கேட்கும்படி கூறினாள்.

சுந்தர மூர்த்தி கூனிக்குறுகிப் போய் நின்று கொண்டிருந்தார். இதுநாள் வரை இவரது பேச்சுக்கு கட்டுப்படும், யோசனை கேட்டும் வந்த மக்களுக்கு நடுவில் ஏதோ ஆகப் பெரிய தவறு செய்தவர் போல் தலை கவிழ்ந்து நின்றார். கூட்டத்தில் ஆளாளுக்குச் சலசலப்பு. “தாயைக் கொன்னவனுக்கு ஊர்ல பாதி” ன்னு சொல்ற மாதிரி ஆயிப்போச்சு. சுந்தர மூர்த்தியின் நிலை. இவருக்குப் பிடிக்காதவங்க இவர் காது கூசும்படியான வார்த்தைகளைப் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். பின்னே இப்படி ஒரு சந்தர்ப்பம் வேறு எப்போது கிடைக்கும்.

“சம்பளம் வாங்குனமா பாடத்தச் சொல்-க் கொடுத்தமான்னு இல்லாம் தேவையில்லாத நட்டன மயிறுதான் ….”

“இன்னைக்கு மண்டைய உடைச்சு ஆளு. நாளைக்கு கையைக் கால ஒடைச்சு மொடமாக்க மாட்டாருன்னு என்னையா உத்தரவாதம். காடு கரைன்னு நம்மள மாதிரி நொம்பளப்பட்டா தெரியும். நோகாம நெழல்ல உட்கார்ந்து இருந்தா என்ன கஷ்டம் தெரியும்”.

“இந்த ஆளு வந்ததுலே இருந்தே ஒரு மாதிரிதான் அலைஞ்சான். இன்னைக்கு குடுக்கிற குடாப்புலதான் ஆளு ஒடுங்கணும்”

“ஏலேய் வார்த்தைய ஒடுங்குங்கடா. என்ன இருந்தாலும் படிச்சவரு. ஒரு மட்டு மருவாதி வேணாம்.”

“யோவ் ஓமக்கு வந்து விடிஞ்சிருந்தா துடிச்சிருப்பே. மண்டை ஒடைஞ்சவன் இன்னொருத்தன் மகன்தானே. வாயப் பொத்திக்கிட்டு இருப்பியா. நாயம் சொல்ல வந்துட்டாரு.” கூட்டத்தில் ஒரே சலசலப்பு.

நேற்று வரை இருந்த மதிப்பும் மரியாதையும் தரைமட்டமாகி விட்டது. எப்போதும் போல் கையில் பிரம்புடன் சுற்றி வரும்போது கண்ட காட்சி. கோபத்தை ஏற்றிவிட்டது. ஒரு துண்டு பீடியை எடுத்து ஒரு மாணவன் உறிஞ்சியதைப் பார்த்ததும், கையில் இருந்த பிரம்பால் விளாசிவிட்டார். பிரம்பின் முனை தலையில் பட்டு ரத்தம் வழிய, ரத்தம் பார்த்த மாணவன் பயந்து மயங்கிச் சரிய, ஒரே ரசா பாசமாகிவிட்டது. ஊரே பள்ளியில் கூடி ஆஸ்பத்திரியில் சேர்த்ததெல்லாம் தனிக்கதை.

யோவ்….. கொஞ்சம் சத்தம் போடாம இருங்கய்யா. இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டு இருந்தா எப்படி…? காளிமுத்துவின் சத்தத்திற்கு எல்லோரும் அடங்கினார்.

சார்….. நீங்க அடிச்சதுல தப்பில்ல. ஆனா இப்படி மூர்க்கத்தனமா அடிச்சதுல பையனுக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிருச்சுன்னா என்னாகும். பாவம் லட்சுமி அன்றாடங் களை எடுத்து கஞ்சி குடிக்கிற குடும்பம். படிச்ச நீங்களே இப்படி காட்டு மிராண்டித்தனமா நடந்துக்கிட்டா எப்படி…? உடல் கூசும்படியான சொல் அம்புகள்.

படிக்கும் போதும், ஆசிரியப் பயிற்சியின் போதும் கிடைத்த விருதுகளும் பாராட்டுகளும் ஒரு சேர தகர்ந்து மண்ணோடு மண்ணாகியது. ஊரில் மோசமான வாழ்க்கை நடத்துபவர்கள் எல்லாம், ஒழுக்க நெறிகளுடன் நேர் கோட்டில் வாழ்க்கையைப் பயணிக்கும் சுந்தர மூர்த்திக்கு வாழ்க்கைப் பாடம் நடத்தினார்.

கண்ணு மண்ணு தெரியாம அப்படி என்ன கோவம் வேண்டிக் கெடக்கு. ஆடு மாடுகள அடிக்கிறாப்புல. இதுவரைக்கும் எத்தனையோ வாத்தியாருங்க, வந்திருக்காங்க, போயிருக்காங்க. வர்றதும் தெரியாது …. போறதும் தெரியாது. வாத்தியாருங்கன்னா அப்படியில்ல இருக்கணும். சுந்தர மூர்த்திக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான் மழைக்கும் பள்ளிக்கூடம் ஒதுங்காத குருசாமி.

கூட்டத்தில் ஒவ்வொருத்தரும் புத்திமதி, கண்டிப்பு, கோபம், தாபம் என்று ரக வாரியாய் பேச்சு வளர்ந்து கொண்டு இருந்தது. இதற்கு என்ன முடிவு கூறுவது என்று தெரியாமல் ஒத்தையடிப் பாதையாய் நீண்டு வளர்ந்தது.

ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாய் அந்தச் செயலைச் செய்தார் சுந்தர மூர்த்தி.

ரெண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கில் “ஐயா, ஊர்க்காரவுக எல்லாரும் என்னை மன்னிக்கணும். நான் செஞ்சது தப்புதான். இதுக்காக உங்க எல்லோருடைய கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கிறேன்’ என்று அப்படியே நெடுஞ்சாண் கிடையாய் பொத்தென்று மண்ணில் விழுந்தார். உடன் இருந்த ஆசிரியர்கள் பதறியடித்துத் தூக்கினார்கள். ஒரு திருடனைப் போல மன்னிப்பு கேட்டது. உட்கார்ந்திருந்த அனைவரது மனங்களையும் உலுக்கியது. பேயறைந்தது போல பேச்சற்றனர். என்ன பேசுவது என்று ஒருவருக்கொருவர் குழப்பமாய் பார்த்துக் கொண்டனர். ஒரு ஆசிரியர் இப்படி மண்ணில் விழுந்து மன்னிப்பு கேட்பார் என்று, யாரும் எதிர்பார்க்கவில்லை. சுந்தர மூர்த்தி எழுந்து மீண்டும் கையைத் தூக்கி அனைவரையும் வணங்கி பேச்செடுக்கும் முன்….

“போதும் சார்…. இனிமே நீங்க ஒன்னும் பேச வேணாம், நீங்க போங்க” கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் கனத்த இதயத்துடன் பேச்சற்று பிரிந்து சென்றனர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடைபிணமாய் பள்ளிக்குச் சென்று வந்தார். பெரும்பாலோருக்கு இந்த விசயமே தெரியாது. ஒரு பையனையோ அல்லது பெண்ணையோ கோபமாகக் கூட ஒரு வார்த்தை பேசாது இருபது வருடத்தையும் ஒட்டி விட்டார்.

வீட்டுக்கு வந்து காய்கறிப் பையை வைத்துவிட்டு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார்.

மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு…

வணக்கம்.

நல்லாசிரியர் விருது பெற நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். இதுவரை என் ஜீவனத்திற்காகவே பள்ளிக்குச் செல்வதும், பாடம் நடத்துவதுமாய் இருந்திருக்கிறேன். ஒரு ஆசிரியர் சமூக மாற்றத்திற்கு மாணவர்களை உருவாக்கும் கருவியாக இருக்க வேண்டும். நான் இதுவரை கல்வியைத் தவிர்த்து, மாணவர்களுக்கு எந்த ஒரு விசயத்தையும் புகட்டவில்லை. பாடங்கள் மட்டுமே வகுப்பறைகளில் பேச்சுப் பொருளாக இருந்தன. மாணவர்களுக்கான ஒழுக்கத்தையும், சமூக அக்கறையையும், செயல் பாடுகளையும் புகட்டாத நான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியில்லாதவன் என்றே கருதுகிறேன். எனவே தயவு கூர்ந்து தகுதி வாய்ந்த திறமையான வேறு ஆசிரியருக்கு , எனக்கு வழங்க இருக்கிற விருதினை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

சுந்தரமூர்த்தி.

எழுதி முடித்த கடிதத்தை இருபது ஆண்டுகளுக்கு முந்தைய அதே இதய கனத்தோடு சுவருக்குள் வைத்து, கல்வி அலுவலரின் முகரியை கவரில் எழுதினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top