வியர்வைப் பூக்கள்

0
(0)

“ரகுபதி ராகவ ராஜாராம்: பதீத பாவன சீதாராம்!”

“ஈஸ்வர அல்லா தேரே நாம்! சப்கோ ஷண்மதி ஹே பகவான்.”

 

என் கணவரின் இந்த மந்திரஜெபம் என்னைத் துயில் எழுப்பிவிட்டது.

எழுந்துகொண்டேன். பாயைச் சுருட்டிக் கிழக்கு மூலையில் சாய்த்துவைத்தேன். போர்வையை மடித்துக் கயிற்றுக் கொடியில் தொங்கவிட்டேன். முந்திச் சீலையால் முகத்தைத் துடைத்தபடி கதவைத் திறந்தேன். வாசல் இருண்டு கிடந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். மேகம் சூழ்ந்து இறுக்கமாக இருந்தது. ஈரம் தோய்ந்த இளங்காற்று உடம்பை நடுக்கியது. ஏற்கனவே நேற்று வந்து இறங்கிய புளிமூடைகள் பிசுகிசுப்பாக இருந்தன. இப்போது வீசும் ஈரக் காற்றும் சேர்ந்துகொண்டால் அவ்வளவுதான். கட்டி விழுந்த கேப்பைக் களிமாதிரி தொடவே அருவருப்பாக இருக்கும்.

விளக்குமாறெடுத்து வாசலைப் பெருக்கினேன். தண்ணீரால் தெளித்துவிட்டேன்.

காட்டுப் பக்கம் போய்க் காலைக் கடனை முடித்துத் திரும்பியபோது அவரின் பிரார்த்தனை முடியும் தறுவாயில் இருந்தது.

கன்னத்தில் போட்டுக் கொண்டு காந்தி படத்துக்கு முன்னால் விழுந்து வணங்கினார்.

புளிக் கூடையைத் தூக்கி வெளியே வைத்தேன். பூளாங்குச்சியால் செய்த பஞ்சாரக் கூடை அது. சுத்தியலை எடுத்துக் கூடைக்குள் போட்டேன். கொத்தனாருக்குத கொத்துக் கரண்டி போல புளித் தட்டும் பெண்களின் கைக் கருவி சுத்தியல். கிழிந்த சாக்கு, துண்டுத் துணி ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டேன். ஒரு தூக்குப் போணியில் நீச்சத் தண்ணி ஊற்றி உப்புப் போட்டு அதையும் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.

வாசலில் இறங்கி உள்ளே எட்டிப் பார்த்து “போய்ட்டு வரட்டா?” என்றேன்.

“போய்ட்டு வா” என்றவர் சிறிது நிறுத்தி “இன்னக்கிக் கொஞ்சம் கூதலடிக்கிறாப்புல இருக்குல்ல?” என்றார்.

எப்போதுமே அவர் இப்படிச் சொன்னதில்லை: காய்ச்சல் அடிக்குமோ எனத் தோன்றியது. ‘இருக்காது’ என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

“வந்து சுக்குத் தண்ணி வச்சுத் தாரேன்” என்றபடி நடக்கத் தொடங்கினேன்.

சிந்தனை வேகு வேகு என அடித்துக் கொண்டது.

இன்றிலிருந்து ஒருமாத காலத்துக்கு அரைமனு புளி அதிகம் வாங்கித் தட்டவேண்டும். மழைக்காலம் என்பதால் ஆஸ்பத்தரிச் செலவு வரலாம். மூர்த்தகாலம் என்பதால் செய்முறைச் செலவு வரலாம்: தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்கவேண்டும்.

நான் புளிக் கொட்டரைக்குள் நுழையவும் எங்கோ இருக்கும் நூல் மில்லில் ஆறுமணிச் சங்கு ஊதவும் சரியாய் இருந்தது. ஏற்கனவே பார்வதியும் பஞ்சலட்சுமியும் வந்து புளித் தட்டும் வேலையைத்  தாடங்கிவிட்டிருந்தார்கள். நாற்பதுபேர் அமர்ந்து வேலை செய்யக் கூடிய கொட்டரை அது. ஏழுமணிக்குள் அநேகமாக அத்தனைபேரும் வந்து வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.

“வாங்க செவந்தியக்கா” என்றான் வாச்மேன். “மாமா சௌக்கியமா?”

“நல்ல சவுரியம்.”

“அவரு எங்குட்டும் வேல வெட்டிக்கிப் போறதில்லயா?”

“இல்ல.” அசுவாரஸ்யமாய்ப் பதில் சென்னேன்.

“ஏன்?”

“ஒடம்பு எச்சுப் போச்சுல்ல.”

கூடையைக் கொண்டுபோய்ப் புளி அம்பாரத்துக்கு அருகில் வைத்துவிட்டு சாக்கை எடுத்துத் தட்டுகல் அருகில் விரித்தேன். கல்லைத் துடைத்து சுத்தம் செய்தேன். அருகில் கிடந்த செத்தைகளை அள்ளிக் குப்பைக் கூடையில் போட்டேன்.பளீரென்று சுத்தமானபின் புளி வாங்கிவரப் போனேன்.

மலையாகக் குவிந்து கிடந்தது புளி. நீளநீளமாய், சவளம் சவளமாய் இல்லாமல் கம்பனிக் கடலையாய் சிறுத்துக் கிடந்தது. தட்டவும் வராமல் எடுக்கவும் வராமல் சள்ளையாய் இருந்தது. இப்படிப் பட்ட சரக்கைப் பார்த்தாலே சிலர் லீவு போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

“எங்குட்டிருந்து புடிச்சுட்டு வந்த்தீக இந்த ஒருக்கொட்டத் தேம்பல்கள?”

வாய்விட்டுச் சிரித்தான் வாச்மேன். “செவந்தியக்காவுக்கு எல்லாமே ஈசியாத் தெரியுது: இந்தச் சரக்கக் கொண்டார மொதலாளி எம்புட்டுக் கஷ்டப் பட்டிருக்காரு தெரியுமா?”

“அடேயப்பா!” என்றபடி கொட்டாரத்துக்குள் நுழைந்தாள் கமலா. “இவரென்ன தலையிலயா செமந்துட்டு வாராரு?”

கமலாவோடு சேர்ந்து வெந்திப் பூ வாசனையும் நுழைந்தது. தலை நிறைய செவந்திச் சரம்! கருப்புக் கொண்டையில் மஞ்சள் கீரிடம் சூட்டின மாதிரி. செவந்திப் பூவுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. அரும்பும், பூக்கும், வாசனை வீசும், ஆனால் கையில் வைத்துக் கசக்கினாலும் இதழ்கள் துவண்டு போவதில்லை. மீண்டும் நிமிர்ந்து நின்று நிறம் காட்டும். நாள்முழுக்க உழைத்தாலும் தெம்பு நழுவாத புளிக் கொட்டரைப் பெண்போல.

“யாரு, கமலாக்காவா?” என்றான் வாச்மேன்.

“நானேதான்” என்றாள் கமலா.

“ஏம்பேச மாட்டீங்க: நம்மள மாதிரி ஏழபாழைங்க எச்சுப் போயிரக் கூடாதுன்னு நாடுவிட்டு நாடு போயி கொண்டாந்த சரக்காக்கும்.”

“எந்த நாட்டுச் சரக்கு இது,?”

“ஒரிசா தேசத்துல சிரபுஞ்சிக் காட்டுல வௌஞ்ச சரக்கு இது. அங்கல்லாம் இருபத்தி நாலு மணிநேரமும் மழதானாம். கொட்டோ கொட்டுன்னு கொட்டுதாம்: அதனாலதான் காயாம ஈரப் பசையோட கெடக்கு.”

பஞ்சாரம் நிறைய புளி அள்ளி முக்கோணத் தராசின் வலதுபக்கத் தட்டில் வைத்தேன். இடது தட்டில் எடைக் கற்கள். எவ்வளவு என்று தெரியவில்லை. கோணிப் பைக்குள் கட்டி வைத்திருந்தார்கள்.

‘ஏன் சாக்குக்குள்ள கட்டிவக்யணும்?’ என்று பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தபோது முதலாளி சொன்ன பதில் விச்சித்திரமாக இருந்தது. “நூறுபேரு வந்து போற எடம்: எல்லாக் கண்ணும் ஒரே மாதிரியாவா இருக்கு? ஓமலிப்புத் தச்சுச்சுன்னா யாவாரம் படுத்திரும்: அதான்………”

பெண்கள் திருப்பிக் கேட்டார்கள். “புளி அம்பாரத்துல கண்ணு பட்டாத்தான் கெடுதி: அதுக்கும் படிக்கல்லுக்கும் என்ன சம்பந்தம்?”

முதலாளிக்குக் கோபம் கொப்புளித்தது. “பொம்பளைங்களா நீங்க?” என்று கர்ஜித்தார். “அடக்கமும் ஒடுக்கமும் பொம்பளைக்கு அழகுன்னு இருந்த காலம் மலையேறிப் போயிடுச்சு: இப்படியெல்லாம் பேசுறதுனாலதான் வர்ண பகவானே பூமிய வெறுக்குறாரு.”

படிக்கல் அந்தரங்கம் வெகுநாள்வரை நீடிக்கவில்லை. என் கணவர் இதே கொட்டரையில் வேலைக்குச் சேர்ந்தபோது அது அம்பலமானது.

அவர் நினைத்திருந்தால் பெரிய பெரிய உத்தியோகத்துக்குப் போயிருக்க முடியும். சிறு வயதிலிருந்தே காந்திமகானை வணங்கி வந்ததால் லஞ்சம் கொடுத்து வேலைவாங்க மறுத்துவிட்டார். “பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்குறதும் காக்காகிட்ட இருந்து நரி ஏமாத்திப் பிடுங்குறதும் மனுஷ வாழ்க்கையில வரக்கூடாது: தக்ளி சுத்தி நூல் நூத்துப் ;பொழப்பனே தவிர இந்த மாதிரி ஈனப் பொழப்பு எனக்குத் தேவையில்ல” என்பார்.

ஆனால் அவர் எந்த வேலை செய்வதற்கும் தயங்கியதே இல்லை. ஓட்டல்கிளல் பில் பதிந்தார். மில்களில் கங்காணி வேலை பார்த்தார். அறுவடை காலங்களில் மரக்கால் பிடித்துத் தானியம் அளந்தார். இதே கொட்டரையில் கணக்குப் பிள்ளையாகவும் வேலை செய்தார்.

எப்போதும் ‘ரகுபதி ராகவ’ பாடிக் கொண்டே இருப்பார். கதர் அணிந்து தூய வௌளையில் காட்சியளிப்பார். கையில் சத்திய சோதனையும் நெற்றியில் விபூதிப் பட்டையுமாக வாழ்ந்தார்.

ஒருநாள் சாக்கை விலக்கி எடைக்கல்லை எடுத்துப் பார்த்தார். பதினைந்து கிலோ இருந்தது. ஒரு மனு என்பது பனிரெண்டு கிலோ: அதிகப் படியாக இருந்த மூன்று கிலோவை எடுத்துவிட்டு நிறுத்துப் போட்டார்.

செய்தியறிந்த முதலாளி ஓடோடி வந்த்தார். இந்த மாதிரி காந்தி வேலையெல்லாம் ஒன் வீட்டோட வச்சுக்க: இங்க வந்தா என் சொல்படிதான் வேல பாக்கணும்.”

“அது பாவமில்லையா?” என்றார் என் கணவர். அவர் குரல் பரிதாபமாக இருந்த்து.

ஆட்டுக்குப் பரிதாபப் பட்டா கசாப்புக்கடக்காரன் பொழப்பு ஓடுமா?”

வாக்குவாதம் முற்றியது. முதலாளியின் கண்கள் சிவந்தன. என் கணவரின் கன்னத்தில் அறை விழுந்தது. தடவிக் கொண்டே கொட்டரையை விட்டு வெளியேறினார்.

“செவந்தியக்கா! காபி குடிக்கிறீங்களா?” கமலா என் சிந்தனையைக் கலைத்தாள்.

காபி என்ற வார்த்தையைக் கேட்டதும் நாக்கில் தாகம்! தூக்குப் போணியும் நீச்சத் தண்ணியும் ஞாபகம் வந்தன. மூடியைத் திறந்து கைவிரல்களால் கலக்கி அண்ணாக்க ஊற்றினேன். புளிப்பு ஏறிய சோற்றுவாசம்! நெஞ்சில் கதகதப்பு! கிறக்கம் தெளிந்து சுத்தியல் வீச்சு சுறுசுறுப்படைந்தது.

ஓங்கி ஓங்கித் தட்டினேன். கல்லெறி வாங்கிய கழுதை மாதிரி புளி அடிவாங்கிக் கொண்டே இருந்தது. ஒரு அடியில் விலகவேண்டிய நார் மூன்று அடி வாங்கியும் இறுக்கமாக இருந்தது. இரண்டு அடியில் பிதுங்கி வெளியேற வேண்டிய புளியமுத்து ஐந்தாறு அடிகளைத் தாங்கியது. காய்வானதாக இருந்தால் முதல் அடியிலேயே பளிச் சவளம் சட்டை சட்டையாக விரிந்துவிடும். ஒருமனு பளிக்கு மூன்று மனு உழைப்புத் தேவைப் பட்டது.

மழை வலுத்தபோது உடம்பு ஓய்வை விரும்பியது. புளியை யாருக்காவது அள்ளிக் கொடுத்துவிட்டுப் போகலாம். யார் வாங்குவார்கள்? மழைக்காலத்துப் புளிவேலை, வெயில் காலத்து அடுப்புவேலை மாதிரி வெறுப்பூட்டக் கூடியது.

குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. திரும்பிப் பார்த்தேன். கமலாவின் பிள்ளை! மடியில் பால் கொடுத்தபடியே புளித் தட்டிக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா, என்னாச்சு?”

“முத்து தச்சிருச்சுக்கா.”

இது வாங்கொடுமை! புளித் தட்டும் போது பிதுங்கி வெளியேறும் முத்து மனித உடம்புகளைத் தாக்குகிறது. குழந்தை உடம்பு என்றால் வீங்கி வீறாந்து போகும். கன்றிச் சிவந்து காந்தலெடுக்கும்: அழுகையும் ஓயாது: வேலையும் ஓடாது.

ஒருமுறை ரஞ்சிதத்தின் குழந்தை கண்ணில் புளியமுத்து பட்டுவிட்டது. கண் சிவந்து வீங்கியது. மூன்று நாட்களாக அழுகை நிற்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்று நந்தியாவடைப் பூவின் இதழ்களைக் கசங்கிப் பிழிந்து  கண்ணில் ஊற்றினார்கள். உஷ்ணம் தாங்காமல் கண் மேலும் வீங்கியது. அதன் பிறகு டாக்டரிடம் கொண்டு போனபோது “கண் வெந்து போச்சு” என்று பீதியைக் கிளப்பினார்.

பாவம் அந்தப் பிஞ்சு! கண் குருடாகி இன்று பார்வை இழந்தோர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறது.

காட்டுவேலை என்றால் தனியாக நிழலில் தொட்டில் கட்டிப் போட்டுவிடலாம். இது புளிக்கொட்டரை. புளிச்சத்தமும் தெறித்துவிழும் முத்தும் தவிர்க்க முடியாதவை. வாங்கிக் கொண்டும் தாங்கிக் கொண்டும் ஓடுகிறது வாழ்க்கை.

வேகவேகமாய்த் தட்டினேன். ‘நசுக்…நசுக்’ கென்றிருந்தது. நார் விலகி முத்துப் பிதுங்கியபின் புளிச் சவளம் விறைப்பாக இல்லாமல் துவண்டு கிடந்தது.

பெருமூச்சு பீறிட்டது. புளிவேலை சள்ளையாய் இருந்தது. ஓய்ந்து கிடக்கவேண்டிய வயசு! இப்படி உழலவேண்டி இருக்கிறது. மகன் வீட்டுக்கோ மகள் வீட்டுக்கோ சென்று ஒருமாசம் ஓய்வெடுக்கலாம். கணவர் சம்மதிக்க மாட்டார்.

“யாருக்கும் சொமையா இருக்கக் கூடாதுடா செவந்தி” என்பார். “அவங்களுக்கும் அளவான சம்பாத்தியந்தான? நாமளே தொந்தரவு குடுக்கலாமா?”

எனக்குமே கூட அவர் எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வார். கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்வார். தேவைப்பட்டால் துணியும் துவைப்பார்.

பத்துமணிச் சங்கு ஊதியது: தட்டி முடிக்கவே நான்குமணிநேரம் ஆகிவிட்டது. இனி நார் உருவி விதை பிதுக்க வேண்டும். புளிச் சுளைகளை சட்டை சட்டையாக விரிக்க வேண்டும். உள்ளிருக்கும் வௌளைப் பகுதி வெளியே தெரியும்படியாகவும் கறுப்புநிற மேல் பகுதி உள் மறையும்படியாகவும் மாற்றி மாற்றி ஒட்டவேண்டும்: அதாவது ‘ரேக்கு’ ஒட்டவெண்டும். பிறகு புளியமுத்துகளை சல்லடையில் அலசி ரகம் பிரிக்கவேண்டும். உருவிய நார்களைக் கூடையில் அள்ளித் தனி அறையில் போடவேண்டும். நார் தீ எரிக்கவும் முத்து காபிப் பொடியில் கலக்கவும் பயன்படுகிறதாம்.

தட்டியதை அம்பாரமாகக் குவித்துவைத்தேன். இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றேன். கை இரண்டை நீட்டி உடம்பை முறுக்கினேன். ஈரக் காற்று குதுகுதுப்பை உண்டாக்கியது.

வீட்டுக்குப் போய் சமயல் செய்து சாப்பிடவேண்டும். அவருக்கு மருந்து கலக்கித் தரவேண்டும்: பிறகு வந்து புளி பெறக்கவேண்டும்: இரவு ஏழுமணிவரை வேலை நீளும் என்று தோன்றியது.

“என்னக்கா, வீட்டுக்குக் கௌம்பிட்டிங்களா?” கமலா கேட்டாள்.

“:ஆமாம்மா.”

“நையி நையின்னு அழுகுது: இந்தச் சனியனக் கொண்டு வீட்டுல விட்டுருங்களேன்.”

பாவம்! தொட்டிலில், காற்றாடிக் காற்றின் தழுவலில் அமைதியாக உறங்கவேண்டிய பருவம்: இப்படிப் புளி வெக்கையில் கிடந்து மாய்கிறது. இதற்கு ‘சனியன்’ என்ற வசவு வேறு.

“எங்கவீட்டு ஆம்பள கொறட்டவிட்டுத் தூங்கிட்டு இருக்கும்: எழுப்பிக் குடுத்துட்டுப் போங்க.”

குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீதியில் இறங்கி நடந்தேன். ‘ரகுபதி ராகவ’ பாடல் மானசீகமாய் ஒலித்தது. ஒல்லியான திரேகம்: ஒளிமயமான முகம்! வாழ்வின் அர்த்த புஷ்டியுள்ள பகுதிகளை எழுதிக் காட்டிய கண்கள்! “குளுருது” என்ற அவரின் வார்த்தை ஞாபகத்துக்கு வந்தது.

குழந்தையைக் கமலாவின் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு என் வீட்டை நோக்கி நடந்தேன், வேகவேகமான. கணவரின் நினைவும் குவிந்துகிடக்கும் புளி அம்பாரமும் நடையைத் துரிதப் படுத்தின.

வீட்டுக்குள் நுழைந்தபோது அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்தார் அவர். வீட்டுக் கூரையில் திருவாசகப் பாசுரம் எதிரொலித்தது.

“நானார்? என் உள்ளமார்?

ஞானங்களார்?

என்னை யாரறிவார்?”

1999ஆம் ஆண்டின் ஜோதி விநாயம் நினைவுப் பரிசை வென்ற கதை

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top