பறந்து கொண்டிருந்த பட்டத்தைச் சுண்டி இழுத்தது போல தூக்கம் தடைப்பட்டது. விழிப்பு வந்தது. ஏன் தூக்கம் அறுந்தது. மணி என்ன என்று கைப்பேசியை மினுக்கி நேரம் பார்த்தாள். மணி அதிகாலை 4 மணி. கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் வழக்கமாக எழும் நேரம். ஆனால் வீட்டுவாசல் கேட் திறக்கும் ‘க்ளிங்’ சத்தம், “இரு இரு அப்பா வர்றேன்ல”, “ஆவ்.. ஆவ்”, என்று நாயின் அவசர இளைப்புகள் கேட்கவில்லையேஞ் அப்புறம் எப்படி விழிப்பு வந்தது? ஆமாம். நாய் வைரவ் தான் இல்லையே என்று தெளிந்தாள். மீண்டும் படுக்கலாமா என்று முயன்றாள். இமை மூடவில்லை.
வழக்கமாக காலை 4 மணிக்கு க்ளிங் என்று சத்தத்தோடு வாசல் கேட் திறக்கும், ஆவ் ஆவ் என்று நாய் வைரவ்வின் இளைப்போசைகள், அதற்கு பதிலளிக்கும் விதமாக கணவரின் குரல்கள் நாயின் அவசர இழுப்புக்களைச் சமாளித்துக் கொண்டு திணறலாகக் கேட்கும் ஒலிகளே அவளை எழுப்பும். உடனே அவள் எழுந்து காலைக் கடன் கழித்து, அடுப்பில் வெந்நீர் ஒரு புறமும் காப்பி ஒருபுறமும் வைத்து, காய் வெட்டுவது, டிபனுக்கு சட்டினிக்கு தயார் செய்வது எனக் காலை சமையல் ஷிப்டு தொடங்குவாள் வாசல் கதவு திறந்து நாயை சங்கிலியில் கட்டும் சத்தம் கேட்டதும் காபியை மூடிய டம்ளரில் கணவன் அமரும் இடத்தில் வைப்பாள். அவர்காலை செய்தித்தாள்களை மேய்ந்து கொண்டே காபியைச் சுவைப்பார். டம்ளர்வைக்கும் சத்தம் கேட்டும், அதைத் தொடர்ந்து அவர்கழிப்பறைக் கதவைத் திறக்கும் ஒலி கேட்டும் இவள் போய் காபி டம்ளரை எடுத்து வருவாள். வைரவ் அவளைப் பார்த்ததும் வாலை ஆட்டும், வாயை வாயை பிளக்கும். இவள் அதற்கான இரண்டு ரொட்டித் துண்டுகளை வைப்பாள். பின் தனது பணிக்குத் திரும்புவாள்.
கணவன் குளித்ததும் கதவைத் திறக்கும் ஒலி கேட்கும் முன், அவருக்கான உடைகளை அறை முன் வைத்து வருவாள். உடையணிந்து பூஜையறைக்குப் போய் வருவதற்குள் அவர்மேஜையின் மேல் டம்ளரில் ஓட்ஸ் கஞ்சியை மூடி வைத்து இருப்பாள். அவர்கஞ் சியைக் குடித்துவிட்டு வாய் துடைத்து கண்ணாடியில் வழுக்கைத்தலையின் முடிகளை சரிசெய்து விட்டு, நாயின் சங்கிலியை அவிழ்த்து கேட் திறக்கும் சத்தம் கேட்டவுடன் விரைவாக ஓடிச்சென்று, அவர்கள் வெளியேறியதும் கதவை மூடத் தயாராக நிற்பாள். நாய் வெளியே போகும் உற்சாசத்தோடு இழுக்க இழுக்க அதனோடு செல்லமாகப் பேசிக்கொண்டே கணவன் நடைக்கு செல்வதைப் பார்ப்பாள். அண்டை அயல்வீடுகள் போல கணவன் மனைவியராக காலை நடைக்கு செல்ல வாய்க்கவில்லையே, நாய்க்கு கிடைத்த அந்நியோன்யமும் அன்பும் தனக்கு கிட்டவில்லையே என்று பெருமூச்சு விடுவாள். வலது கண்ணோரம் ஒரு துளி திரண்டிருக்கும் யாரும் பார்த்திடாமல் துடைத்து கதவைச் சார்த்தி உள்ளே போவாள்.
சமையலறையில் அரிவாள் மனையும், கரண்டியும், பாத்திரங்களுமே அவளுக்கு சக பேச்சாளிகள்ஞ்
“என்ன வரவர ஒழுங்கா அறுக்கமாட்டேங்கிறே, உனக்கும் மழுங்கி வயசாய்போச்சா, ருசி பார்க்க கரண்டியைத் தொட்டால், கொதிக்கும் குழம்பில் கோரிய கரண்டியில் ஒரு சொட்டுதானே உள்ளங்கையில் விழணும், எத்தனை நாள் அக்காவோட பழகி இருக்கே, உனக்கும் தெரிய வேண்டாமா கரண்டி, நீ என்ன மனுசப் பிள்ளையா? அடிச்சோ, திட்டியோ சொல்லித்தர” என்ற வகையில் உரையாடல் இருக்கும்.
வேலை முடிந்தபின் கரண்டி, பாத்திரங்களை கழுவும் போது
“இண்டு இடுக்குகளில் ஒரு துணுக்கு அழுக்கும் ஒட்டி இருக்கக் கூடாது. அழுக்கு இருந்தா அப்பா, அம்மா எல்லாருக்கும் உடம்பு கெட்டுப் போகுமுல்ல. நல்ல சுத்தமா குளிப்பாட்டியாச்சு. நல்ல பிள்ளையாட்டம் தூங்கி எந்திரிங்க. அம்மா கூப்பிடும்போது வாங்க’ என்று கழுவிய பாத்திரங்களை அதனதன் இடத்தில் வைப்பாள்.
முற்பகலில் சமையல் பணி முடிந்ததும் வைரவ்விற்கு உணவும், சிறிது பாலும் வைப்பாள். அது வாலை ஆட்டும். வாயை வாயை திறந்து ஏதோ சொல்ல முயலும்,
“என்னடா உங்க அப்பன் (சிவ, சிவா என்று கன்னத்தில் போட்டபடி) உங்க அப்பா இருந்தா என்னை கண்டுக்க மாட்டே இப்போது ரொம்பக் குழையறே” என்று முதுகில் தட்டுவாள்.
நாய் தலையாட்டி மறுத்து குனிந்து பால் நக்கும். நெடு நெடுன்னு கருப்புபுலி மாதிரி இருக்கும்! காது விடைத்து கம்பீரமாய் எழுந்து நிற்கும் தூர இருந்து பார்ப்பதற்கு பயமாக இருக்கும்! ஆனால் அதன் கண்களில் அன்பும் ஏக்கமும் ஒளிரும். பக்கத்தில் இருந்து பழகியவர்களுக்கு நாலுகால் குழந்தைதான். உண்டபின் தட்டை மெல்ல நகர்த்தி கொஞ்சலாய் ஒரு கனைப்பு குரல் எழுப்பும்.
அடுத்து தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர்வார்க்கும் போதும் அவற்றோடு உரையாடல் தொடரும்
“என்னடா வாடி வதங்கி போயிருக்கே! தலையை தொங்கப் போட்டுட்டு இருக்கே. நேற்று உனக்கு தண்ணீர் ஊற்றாமப் போயிட்டேன்னு கோவமா? அடுப்பில் குக்கர்கூச்சல் போட்டுட்டான். அவனை அணைக்காம் மறந்துட்டு வந்துட்டேன். போய் அவனை அமைதிப்படுத்தி வேற வேலைகளை பார்த்தேன். மறந்துட்டேன். கோவிச்சுக்காதடா தக்காளி, இனிமே அப்படி செய்மாட்டேன். மனசு குளிர நீராகாரம் குடி. வெயில் அண்ணன் இன்னிக்கு ரொம்பக் கோவமா இருக்காரு” கத்தரி, அவரை பூக்களில் தேனீக்கள் மொய்ப்பது பார்த்து, “என்ன கத்தரி தங்கச்சி, விருந்தாளுக நிறைய வந்திருக்காங்க போல இருக்கு ! காய்களும் நிறைய தருவீங்க! ரொம்ப சந்தோசம். அக்கம் பக்கம் வீட்டுக்காரங்களெல்லாம் இனி என்னை சுற்றி வருவாங்க நீர்பாயும்போது கத்தரிச்செடி ஆடுவது பார்த்து, ‘நான் சொன்னதும் சந்தோசம் தாங்காம ஆடுறது பாரு!” இப்படி இப்படியாக பேச்சுக்கள்.
அவர்களுக்கு ஒரு பெண்ணும், ஆணும் குழந்தைகள். பெண்ணுக்கு கல்யாணமாகி விட்டது. கையில் 2 வருட பெண் குழந்தை மகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் குடியேறி விட்டார்கள். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து ஒரு மாதம் தங்குவார்கள். ஒரே குதூகலம்தான் அவளுக்கு. அவர் அரசுத்துறையில் நிர்வாக அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அதிகார வர்க்கம் ஒருசில வார்த்தைகளே பேசும் முக பாவத்தில் கூட உணர்ச்சியைக் காட்டாமலிருக்க பயிற்சி பெற்றவர். வீட்டிலும் அலுவலகப் பழக்கம் மாறவில்லை .
காலை 6மணி அளவில் பக்கத்து வீட்டுப் பெண்கள் நடைக்குப் போவார்கள். அவர்களோடு அவளும் போவாள். “ஏக்கா உங்க சார் உங்க நாயை எப்படி வாக்கிங்குக்கு கூட்டிட்டு போறார். நாயோடு எவ்வளவு கம்பீரமா போறாரு. நீங்களும் அவரோடு போனால் என்னக்கா?” என்று கேட்கும் போது அவளது இதயத்தை பிடித்து ஒரு இழு இழுப்பது போல் தோன்றும். சமாளித்துக் கொண்டு, அவரு போற நேரத்தில் போனா காலையில் டிபன் யார் சமைக்குகிறது. வீட்டை யார்பார்த்துக்கிறது?” என்று எதிர்கேள்வி கேட்டுட்டு, “என்னதானாலும் பெண்களோட நடந்தா என்னன்னவெலாம் பேசலாம். பகிர்ந்துக்கலாம். அவருகிட்ட அப்படி பேச முடியுமா” என்று சொல்லுவாள். எதிர்கேள்வி வராது. இருந்தாலும் புருஷனோடு நடை போகும் பெண்களை நினைத்து எழும் ஏக்கம் சுருக்சுருக்கென்று துடித்துக் கொண்டிருக்கும். அவள் கணவர் நாயோடு அந்த தெருவில் நடந்து கடக்கும் வரை ஏக்கம் பொங்கப் பார்க்கும் பழக்கம் தொடரத்தான் செய்தது.
யார்கண் பட்டதோ வைரவக்கு சிறுநீரக நோய் வந்து, இரண்டே நாளில் சுருண்டு விட்டது. காப்பாற்ற முடியவில்லை. அந்த இரண்டு நாள் அது பட்ட இம்சை, வலி, சொல்ல முடியாமல் விநோதமாய் முனங்கியது. குரல் இழுகியது. அவர் அழுதார். கால்நடை மருத்துவர் எவ்வளவோ முயன்று பார்த்தார். காப்பாற்ற முடியவில்லை. பாக்கட் உணவில் கலந்த ரசாயன மருந்துகள் தான் காரணம் என்றார். கணவர் அழுதார். அவளுக்கு கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சையில், அவரை அப்பாவாக்கிய அவளது கர்ப்பப்பை அகற்றப்பட்டபோது கூட, அவர் இப்படி அழவில்லை. கலங்கவில்லை. மகளும், மகனும் தான் கண்ணீர்பொங்கி நின்றார்கள். ஆனாலும் இப்போது அவர் வைரவ்வுக்காகக் கண்ணீர் பொங்க கதறி அழுத போது அவளால் தாங்க முடியவில்லை. தோளில் தொட்டு அமர்த்தினாள். அவரது குலுங்கலும் கதறலும் கொஞ்சம் கொஞ் சமாக அடங்கி, அவர் அவளிடமிருந்து விலகி உட்கார்ந்தார்.
அவளுக்கு ஒரு ஆதங்கம். கர்ப்பப்பை அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த போது வைரவ் கூட அவளது மடியருகே முகத்தை வைத்து ஏதோ ஒரு புரியாத ஒலி எழுப்பியது. கண் கலங்கி வாலை ஆட்டியது. இந்த அளவு கூட கணவன் தனது துயரத்தை பகிர்ந்து கொள்ளவில்லையே.
வைரவ் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. காலை நடைக்கு போகவில்லை. அவர்காலையில் நாலுமணிக்கு எழுந்து நாய் கட்டியிருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் காபி வைத்ததைச் சொன்னதும் “ம்ம்” என்று எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை புரட்டிய படியே காபியைச் சுவைத்தார். பக்கத்து வீட்டு ஆண் நண்பர்கள் துக்கம் கேட்டு துயரத்தை தூண்டி விட்டார்கள். “வேறொரு நல்ல சாதிநாய் வாங்கி வளர்க்கலாம். அவர்கள் வீட்டில், இவர்கள் வீட்டில் நல்ல சாதிநாய்க்குட்டிகள் இருக்கின்றன” என்று சொன்னார்கள். அவர்சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார்.
அவருக்கு தீடீரென்று காய்ச்சல் வந்து விட்டது. சிறுகுழந்தை போல் புலம்பினார். மருத்துவமனையில் அவள் இரண்டு நாள் தூங்காமல் அருகிலிருந்து பராமரித்தாள். அவர்கண் விழிக்கும் போதெல்லாம் அவளது சோர்ந்த முகத்தை பார்த்தார். அவள் ஆறுதலாக நெஞ்சைத் தொட்டாள். அவர் தலையை அண்ணார்ந்து பார்த்து அவளது கண்களில் நீர்பொங்குவதைக் கண்டு அவளது தொடையைத் தட்டினார். அகலிகை சாபவிமோசனம் போல அவளது உடல் சிலிர்த்தது.
“ஏங்க, இனி நாய் வளர்க்க வேண்டாம்ங்க இந்த மாதிரியான இழப்புகளைத் தாங்கும் சக்தி நமக்கில்லை. உங்களுக்கு ஆதரவு நான். எனக்கு நீங்க” என்று சொன்னபடி அழுதாள். அவரது கை நீண்டு அவளது கண்ணீரை துடைத்தது.
சூர்யகாந்தி பூ போல முகத்தை நிமிர்ந்து அவரை பார்த்த அவள் “ஏங்க உடல் சரியானதும் நாம ரெண்டுபேருமா வாக்கிங் போகலாம், வாக்கிங்கை விட்டற வேண்டாம் அப்பத்தான் உங்களுக்கு சர்க்கரை கட்டுப்படும். நம்ம பிள்ளைங்களுக்காக, பேரப்பிள்ளைகளுக்கு வழிகாட்டவாவது நாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கணும்ங்க”.
அவர்மெல்ல எழுந்து குலுங்கியபடி அவளது தோளில் சாய்ந்தார். அப்புறம் உலர்ந்த உதடுகளை நாவால் நனைத்தபடி சொன்னார் உனக்கு ஒன்று தெரியுமா” அவள் ஆச்சரியத்தோடு நிமிர்ந்தாள். “வைரவ்வோடு நடை போகும்போது ஒரு வகையில் கம்பீரமாய்த்தான் இருக்கும். ஆனால் உன்னை ஏன் அழைச்சிட்டு போறதில்லை தெரியுமா? வைரவ்வோடு நடை போகும் போது அதன் பின்னால் ஏகப்பட்ட நாய்கள் வரும். கொஞ்சும், குரைக்கும், அது உனக்கு ஒரு வகையில் அருவறுப்பாய் இருக்கும் இல்லை ?”
அவள் குலுங்கி அழுதாள்.