வித்யாசமான உணர்வுகள்

5
(1)

சட்டைப்பாக்கெட்டில் பணம் வைத்திருக்காத தன் மடத்தனத்தைப் பெரிதும் நொந்து கொண்டான். பாண்டிலிருந்து தேடிப் பிடித்து பர்ஸை எடுப்பதற்குள் பஸ் விருட்டெனக் கிளம்பிவிட்டது. பஸ்ஸின் ஜன்னல் வழியே லேசாய் தலையை நீட்டிப் பரபரப்புடன் ஒரு ரூபாய் நோட்டை கையில் எடுத்துக் கொண்டு பர்க்கையில் அவள் வெகு தூரத்தில் புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தாள்.

‘சே!’ என்று சலிப்புடன் முனகியவனாய், சோர்வுடன் இருக்கையில் சாய்ந்தான்.

மஞ்சள் நிறப் பையில் வெள்ளரிப் பிஞ்சுகள் பாறையாய் கனத்தன. ஒரு ரூபாய்க்கென்று சொன்னதும் அவள் சிறிய பிரம்புத்தட்டிலிருந்து காய்களைப் பரபரப்புடனும், போனியாகிற ஆர்வம் பீறிட எடுத்துக் கொடுக்கையில், வாங்கிப் பையில் திணித்துக்கொண்டதை நினைக்கையில் அவனுக்கு அவமானமாயிருந்தது.

ஒரு ரூபாய் தனக்கு வேண்டுமானால் சாதாரனமாய்ச் செலவிடக்கூடிய தொகையாயிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணுக்கு…? பாவம், அவள் அதற்குள் எத்தனை திட்டமிட்டிருந்தாளோ…! அவளின் ஒரு நாளைய ஜீவாதாரத் தொகையை அபகரித்துக் கொண்டு வந்து விட்டதாய் அவனுள் ஒரு குற்ற உணர்வு அழுத்தியது.

தான் உண்மையானவனாயிருந்தால் கிளம்பத் துடிக்கிற பஸ்ஸை இன்னும் ஒரு நிமிஷமேனும் தாமதிக்குமாறு செய்து ஒரு ரூபாயை அவளிடம் சேர்த்திருக்கலாமே! தனக்கு ஏன் உடனே அந்த எண்ணம் எழவில்லை என்று வெட்கினான்.

வருஷத்தில் இரண்டு முறையேனும் தங்கச்சி வீட்டுக்குச் செல்வான். தன் ஊரிலிருந்து கிளம்பி, தொடர்ந்து அறுபது மைல் வரைக்கும் இடைப்படும் சிறு சிறு கிராமங்களைத் தாண்டி, விருது நகர் செல்வதில் அவனுக்கு அலாதிப் பிரியமுண்டு. அதுவும் வெள்ளரிப் பிஞ்சுகளுடன் அலைமோதுகிற இது போன்ற கிராமங்களைக் காண்கையில் ரொம்பவும் மனம் இளகிப் போவான். இந்தக் கரிசல் வெளிகளில் இத்தனை வனப்பாய் இளம் பிஞ்சுகளைக் கொணர்வதற்கு இவர்களால் எப்படி முடிகிறது என்று வியப்பான்.

இன்று, ஏமாந்து போன இந்த ஏழைப் பெண்ணை பற்றியே மனசெல்லாம் எண்ணியது. இந்நேரம் அவள் என்ன செய்வாள்? ‘எந்தக் கொலைகாரப் பாவியோ ஏம் பொழப்புல கை வச்சுட்டான். அவெ வெளங்குவானா… நாசமாப் போக!… என்று எத்தனை நூறு வசவுகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாளோ!

அவள் தன்னை ஓர் ஏமாற்றுக்காரன் லிஸ்டில் வைத்திருப்பாளேயானால் அது கொடுமையானது என்று அவன் மனம் எண்ணமிட்டது. அதை மாற்றியமைப்பதுதான் இனி தன் முதல் வேலை என்று தீர்மானித்தான்.

பதினைந்தாவது நாள் விருதுநகர் நேதக்கிப் புறப்பட்டான். வுழி நெடுகிலும் அந்தக் கிராமத்தில் இறங்கி அவளைத் தேடிப்பிடித்து ஒரு ரூபாயை அவளிடம் சேர்ப்பிப்பது பற்றியே அவன் சிந்தனை செய்தான். அப்படி அவள்தென்படா விட்டால் இறங்கியேனும் அவளைகப் கண்டு பிடித்துப் பேசி, அவளிடம் பணத்தைச் சேர்ப்பித்துவிட வேண்டும் என்று அவனுள் ஓர் உறுதி எழுந்தது.

எண்ணற்ற கிராமங்களைத் தாண்டிப் போன பஸ் இலக்கான கிராமத்தை எட்டிக் கொண்டிருந்தது. அவனுள் இதுகாறும் ஒளிந்திருந்த பரபரப்பு திடுமென எழுந்தது. மனது படபடவென அடித்துக் கொண்டது. நெஞ்சு ஏனோ விம்மி விம்மி அடங்கியது. அந்த பஸ் கிராமத்திற்கு இரண்டு பர்லாங் இடைவெளியில் வரும்போதே வெள்ளரிக்கூடைகளுடன் பெண்கள் சஞ்சரிக்கும் பகுதியைக் கண்கள் தொலைநோக்குப் பார்வையில் கூர்மையாய் ஊடுருவத் துவங்கின.

பஸ் நின்று கொண்டு உறுமியதும் நல்ல வேளையாய் ஏழெட்டுப்பேர் அந்தக் கிராமத்தில் இறங்க எழுந்து கொண்டிருந்தனர். கூலியாள் ஒருவன் பஸ்ஸின் மேல் தளத்திற்குப் பாய்ந்து போனான். அவனது வருகைக்காய் ஏழெட்டுக் காய்கறி மூட்டைகள் காத்துக் கடந்தன. கண்டக்டர் அவசரப்பட்டுக் கொண்டிருந்தும் எல்லாமே ஆமை வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தன.

இந்த அரிய சந்தர்ப்பத்தை நினைக்கையில் அவனுள் ஒரு குதூகலம் நிரம்பி வழிந்தது. மின்னல் தெறிப்புகளாய்ச் சில எண்ணங்கள் ஓடி மறைந்தன. அவசர அவசரமாகத் தலையை ஜன்னல் வழியே நீட்டிக் கொண்டு அவளைத் துழாவினான். பஸ்ஸை வலம் வரும் பெண்களிலும் உட்கார்ந்து வியாபாரம் செய்கறவர்களிலும் அவளைத் தேடினான். சே! எங்கே போய்த் தொலைந்தாள்?’ அவனுள் இனம் புரியாத எரிச்சல் பிரவகித்துக் கொண்டிருந்தது. பஸ் இத்தனை நேரம் தாமதப் பட்டுக் கொண்டிருக்கையில் அவள் அகப்பட்டிருந்தால் சாவதானமாய்க் கைதட்டி அவளை அழைத்து விபரம் கூறி, காசைத் திணித்திருக்கலாமே! என்று ஓர் ஆதங்கம் அவனுள் எழுந்தது.

பஸ் கிளம்பி விட்டது. விலகியிருந்த பாரம் மேலும் கனத்துடன் தலையில் வந்து அழுத்திக் கொண்டதைப் போலிருந்தது அவனுக்கு. மனசில் திடீரென்று ஒரு வெறுமை சூழ்ந்தது.

தங்கையின் வீட்டுக்குப் போன மறுநாளே பிடிவாதத்தில் ஊருக்குக் கிளம்பி விட்டான். வழியில் அந்தக் கிராமத்தில் இறங்கி அவளைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். இந்த முறை தோல்வி கிட்டாது என்று அவனுள் ஓர் நம்பிக்கை வேர் விட்டது. இன்று முழுப் பொழுதையும் அவளுக்காச் செலவிட்டாலே மனம் சாந்தியடையும் போல் அவனுக்கு தோன்றியது.

அந்தக் கிராமத்தை பஸ் அடைந்ததும் பரபரப்புடன் கீழே இறங்கினான். வெள்ளரிப் பிஞ்சுகளுடன் குழுமியிருந்த பெண்களை நோக்கி நடந்தான். அவன் கொஞ்சமும் எதிர் பாராத விதமாய் அவள் அங்கே இருந்தாள். அன்று பஸ் கிளம்பியதும் காசை இழந்த தவிப்பில் இரு கைகளையும் விரித்துக் கொண்டு ஓடி வந்தாளே, அவள் அங்கே இருந்தாள்! தன் குழந்தையின் தலையைக் கிளறிக் கொண்டு முன்னாள் இருந்த தட்டில் வெள்ளரிப் பிஞ்சுகளுடன் வெம்பிப் போயிருந்தாள்.

ஒரு ரூபாயை அவளிடம் நீட்டிய போது “பையை பிடிங்க சாமி” என்றவளாய்க் குழந்தையை நகர்த்தி விட்டு ஆர்வத்துடன் பிஞ்சுகளை இரு கைகளினாலும் குவித்து அள்ளினாள்.

“இல்லம்மா இது ஒனக்குத் தரவேண்டிய கடன்… இத மொதல்ல வாங்கிக்க!” அவளைத் தேடிப்பிடித்த சந்தோஷம் அவன் முகத்தில் ஸ்தூலமாய்த் தெரிந்தது. நோட்டைப் பற்றியிருந்த கரம் ஏனோ லேசாய் நடுங்கியது.

“என்ன சாமி சொல்றீங்க? கடனா? நா ஒங்களுக்குக் குடுக்கலியே! வேற யாரு கிட்டயாவது வாங்கியிருப்பீங்க, ஒங்கள நா இதுக்கு முந்திப் பார்த்ததே இல்லியே!” அவள் திடீர்த் தாக்குதலில் நிலை குலைந்தவள் போல அவனை மலங்க மலங்க விழித்துப் பார்த்தவளாய்ச் சொன்னாள்.

அவளது பேச்சு அவனுள் ஒரு விதி விதிர்ப்பை  ஏற்படுத்தியது. தனக்குச் சாதகமாய் வருகிற எதையும், எந்த நிலையிலும் சிக்கெனப் பிடித்துக் கொள்கிற உலகில் இப்படியும் ஒருத்தியா?

அவன் அன்று நடந்ததை அவளுக்கு எடுத்துக் கூறினான். அவன் கூறி முடித்ததும் அவள் சுற்றுச் சூழலையே மறந்து போனவளாய் வயிறு குலுங்கச் சிரித்தாள்.

“என்ன சாமி ஒலகத்துல இல்லாத அதிசயமா இருக்கு! ஏங்காலத்துல இப்படி ஆளப் பார்த்ததில்ல” என்றவள் இன்னும் சில கணங்கள் நிம்மதியாய்ச் சிரித்தாள்.” இது ஒங்களுக்குப் புதுசா இருக்கலாம் சாமி. எங்களுக்குப் பழகிப் போச்சு. ஓடுற பஸ்ஸை நம்பிப் பொழைக்க வந்துட்டோம்ல ஒரு நேரத்துல நாங்க பாக்கிச் சில்லரை குடுக்குறதுக்குள்ளே பஸ்ஸ_ போயிடும். அப்ப நாங்க ஒங்களைத் தேடி வர முடியுமா? போங்க சாமி! கொண்டுட்டுப் போங்க.. இதுக்காக நீங்க அலைஞ்சு வந்துருக்கீங்களே, அதுக்காக ஒங்களுக்கு நா எம்புட்டோ செய்யனும்… இந்தக் காலத்துல இப்படி யாருசாமி வருவா!”

அவள் பேசப் பேச அவன் கண்கள் அகல விரிந்து கொண்டே வந்தன. தான் வாழும் உலகில்தானா இது நிகழ்கிறது? வறுமையுடன் போராடும் ஒரு பெண்ணின் வாயிலிருந்தா இந்த வசனங்கள்?

“அன்னிக்கு காசு தராமப் போனதுக்காக நீ என்னைக் கண்டபடி ஏசியிருப்பியோன்னு பயந்தேன்… ஒனக்குத் துரோகம் செஞ்சுட்டதா சதாவும் ஏம் மனசு அரிச்சுக்கிட்டிருந்துச்சு… நீ என்னடான்னா..!”

“இத்தனை நல்ல மனசோட வந்திருக்க ஒங்களால துரோகமே பண்ண முடியாது சாமி! ஒங்கள ஏசியிருந்தா அது எனக்குத்தே கெட்டகாலம். ஆப்படியும் ஒங்கள ஏசுறதுக்கு என்ன இருக்கு சாமி? தொழிலு அப்படி இருக்கில்ல! ஒருநா அரை வயித்துக்குக் கெடைக்கும். இல்லேன்னா அதுவும் போகும். இதெல்லாபம் சகஜந்தானே! இத விட்டா எங்களுக்கு வேற பொழப்பில்ல. யாரும் காசை வேணுமின்னு கொண்டு போறதில்ல சாமி. அப்படிக் கொண்டு போனாலும எத்தனை நாளைக்கு சாமி, வச்சுப் பொழச்சிடுவாங்க? தெரிஞ்சு எங்க வயித்துல அடிக்கிறவங்களுக்கு அவங்க மனசே சத்துருவாயிரும்”

அவளுடைய உறுதியும் நம்பிக்கையும் அவனை மேலும் வியப்பில் ஆழ்த்தின. வாழ்க்கையுடன் போராடிப் பழகிக் கொண்ட இவர்களுக்கு எதுவுமே அதிக நேரம் பாதிக்கக் கூடியதில்லைதான். வரவையும் செலவையும், வறுமையையும் அறிந்தே வாழுகிற இவர்களுக்கு வாழ்க்கையே ஒரு வித விளையாட்டுத்தான்.

அவள் அவனிடமிருந்து ஒரு ரூபாயையும் வாங்கிக் கொள்ளாமல் மேலும் கொஞ்சம் வெள்ளரிப் பிஞ்சுகளைத் திணித்த போது அவன் கைகள் இயந்திரமாய் நீண்டிருந்தன. இமைக்க மறந்த கண்களுடன் சிலையாகி நின்றான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வித்யாசமான உணர்வுகள்”

 1. Sakthi Bahadur

  ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஜன்னல் ஓரம் கைநீட்டி எப்படி கிடைத்தாலும் எதையாவது விற்று அன்றைய பிறப்பை நடத்த போராடும் மக்களை காணும்போதெல்லாம் என் மனம் துடித்தது உண்டு.

  ஒரு நாளைக்கு எத்தனை பஸ் ஏறி இறங்க வேண்டும். அதில் எத்தனை பேர் வாங்குவார்கள். எத்தனை பேர் பணம் தராமல் செல்வார்கள். இப்படி இதில் எவ்வளவு தான் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். என்று நினைத்து மனம் வேதனைப்பட்ட துண்டு.

  ஆனால் அதே கட்சியை ஒரு இலக்கியவாதியின் கண் கொண்டு பார்த்தால்…. அருமையான கதையாக மாறும்.

  இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் அவளிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. ஒரு ரூபாய் கொடுக்காமல் சென்றவனின் மனம் அவனை இழுத்து வந்து அவள் முன் நிறுத்துகிறது.

  எங்க பொழப்பே இதுதான் தான்… என்று இயல்பாக பேசி தனக்கு கிடைத்த ஒரு ரூபாயும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் உழைப்பை மதித்து வந்த அவனுக்கு வெள்ளரிப்பிஞ்சு கொடுத்து அனுப்பும் அந்தப்பெண்ணின் மனம்… அதுதான் உன்னதமான மனிதம். சிறப்பு தோழர். வாழ்த்துக்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: