விடியும் நேரம்

0
(0)

செயலாளர் சொன்னபடி பஸ் நிலையத்திற்கு எதிரேயுள்ள பெட்டிக் கடையை ஒட்டி நின்று கொண்டிருந்தேன். வெள்ளை அரைக்கை சிலாக் கருப்பு நிற பேண்ட், தோளில் தொங்கிய லெதர்பேக், இடது கையில் வாட்சு, முக்கியமாக சட்டைப் பாக்கெட்டில் பாதி வெளியே தெரியும்படி நீலநிற கைக்குட்டை, சொன்ன அடையாளங்களோடு சரியாக பத்து மணிக்கு வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கடந்து விட்டன. குறைந்தது அரைமணி நேரமாவது காத்திருக்க வேண்டுமென நினைத்தேன்.

நட்சத்திரங்கள் மின்னின. மழை வராது. மேற்கு வானத்தில் மலைத் தொடருக்கு மேலே நட்சத்திரங்கள் தெரியவில்லை. காற்று குளிர்ந்திருப்பது போல் உணர்ந்தேன்..

இரண்டு தெரு விளக்குகளுக்கு மத்தியில் நிற்பதால் வெளிச்சம் கொஞ்சம் குறைவு தான். ஆனாலும் எனது அடையாளங்கள் தெரிய போதுமானதாக இருந்தது. அதிக வெளிச்சம் இப்போது நல்லதல்ல. பின்புறமாக உள்ள சந்து நல்ல இருட்டில் மிகவும் வசதியாக இருக்கிறது. திட்டமிடுவதில் செயலாளரின் தெளிவுக்கு இது எடுத்துக்காட்டு.

எழுபத்தாறாவது சுதந்திர தின விழாவில் நாடு சோசலிசத்தை நோக்கி முன்னேறுகிறதென்று பிரதமர் பேசியது நினைவிற்கு வந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலாளிகள் நடத்தும் தொழிற்பேட்டை யில், அந்த மின் நிலையத்தைத் திறந்து வைத்து, நாடு சோசலிசத்தை நோக்கிப் போவதாக அமைச்சர் பேசியபோது தொழிலாளர்கள் மௌனமாக சிரித்துக் கொண்டதும் நினைவிற்கு வந்தது.

வேலை நிறுத்தம் செய்து குடியிருப்புகள் கட்ட வைத்த பிறகு அதைத்திறந்து வைத்த அமைச்சர் அரசின் சாதனையாகவும், தொழிலாளர் அரசாகவும் பேசி பெருமைப்பட்டுக் கொண்டார். தொழிலாளர்களின் வாழ்க்கை ஒவ்வொரு போராட்டமாக வளர்ந்து, விலைவாசியோடு நிரந்தரப் போராட்டமாக நடக்கிறது.

அந்தக் காலத்தில் காப்பி ஐம்பது பைசாவுக்கு கிடைத்ததாம். நம்பவா முடிகிறது.

மேலும் பத்து நிமிடங்கள் கடந்தது. செயலாளர் சொன்னபடி யாரும் வரவில்லை. நகைக் கடைகளையும் ஸ்டேசனரி கடைகளையும் அடைத்து

விட்டார்கள் பகலில் வெங்கிடாசலபுரத்திலும், மற்ற கிராமங்களிலும் அலைந்ததால் களைப்பாக இருந்தது. நல்ல சாப்பாடு இல்லாவிட்டாலும் அந்த விவசாயத் தொழிலாளர்களின் அன்பு பசியைப் போக்கியது.

அவர்கள் எல்லாம் இப்போது எவ்வளவோ புரிந்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இப்படியா இருந்தார்கள்? அவர்களது வாழ்க்கைப் போராட்டம் அவர்களை ஒன்று பட வைத்தது. ஆனாலும் போதாது. நகரத்திலுள்ள நம்மைப் போன்ற தொழிலாளர்கள் அளவுக்கு வரவேண்டும். இன்னும் நிறைய கிராமங்கள் பாக்கியிருக்கிறது. ஆனாலும் முன்பை விட இது வளர்ச்சியைத் தான் காட்டுகிறது.

கால் வலிக்க ஆரம்பித்தது. உட்காரலாமென்று இடம் தேடினேன். கால்கள் கெஞ்சின. பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு, ஒரு பக்கமாக சிறிது சரிந்து நீண்டுள்ள பலகையில் எச்சரிக்கை யோடு உட்கார்ந்தேன்.

உடனேயே செயலாளர் சொன்னது நினைவிற்கு வந்தது. சடக்கென எழுந்து பழைய இடத்திலேயே நின்று கொண்டேன். அவர் சொன்னபடி அங்கு தான் நிற்க வேண்டும். கஷ்டங்களைவிட கடமைதான் முக்கியம்.

இப்பொழுதெல்லாம் ஏராளமான தோழர்கள், இளைஞர்கள் கடமை உணர்வோடு இருக்கிறார்கள். துடிப்போடு கட்டுப்பாடாக வேலை செய்கிறார்கள். ஆனாலும் கிராமங்கள் அதிகமாக இருக்கிறதே! அதனால் வேலையும் அதிகமாக இருக்கிறது. அங்கும் புதிய இளைஞர்கள் தோழர்களாக மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் காட்டாறு போல் வேகம் அதிகமாக இருக்கிறது. கரை அமைத்து ஒழுங்கு படுத்தாவிட்டால் விபரீதமாக முடிந்து விடும். ஆரம்பத்தில் சில இடங்களில் இப்படித்தான் இருப்பார்கள். சரியான வழியைச் சொல்லி, கூடிப்பேசி முடிவெடுக்கச் செய்துவிட்டால் அருமையான தோழர்களாக மாறிவிடுவார்கள்.

செயலாளர் சொன்னது போல் அவர் வந்தவுடன் விரைவாக செயல்பட வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் யாரென்று சொல்லியிருந்தால் அடையாளம் கண்டு கூப்பிட்டுக் கொள்ளலாம், வந்த பிறகு தெரிந்து கொண்டால் போதுமென்று சொல்லி விட்டார்.

கட்சியின் செயல்முறைகள் நாளுக்கு நாள் மாறிவருகிறது. முன்பு போல் கூடிப்பேச முடியவில்லை. அடிக்கடி உத்தரவு போல் தகவல்கள் ரகசியமாக வருகிறது. கூடிப்பேசினாலும் முன்பு போல் எல்லாவற்றிலும் விவாதம் நடப்பதில்லை. வரவர விவாதங்கள் குறைந்து உத்தரவுகள் தான் அதிகமாகிறது. இது சமுதாய மாற்றமும் புரட்சியும் நெருங்கி விட்டதைக் காட்டுகிறதா?

கால்கடுக்க கடமைக்காக நின்றிருந்தவனை எறும்பு கடித்தது. நசுக்கி விட்டு, தாகத்திற்கு பெட்டிக்கடையில் தண்ணீர் குடித்தேன். மணி பத்து இருப்பதைக் காட்டியது.

பெரும்பாலான தலைவர்கள் பல இடங்களுக்கும் ரகசியமாகவே போய் வருகிறார்கள் அவர்களின் நிலையை நினைத்தால் மிகவும் இரக்கமாகவும் கவலையாகவும் இருக்கிறது. இந்த மக்களுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். போன தேர்தலிலிருந்து இப்படி ஆகிவிட்டது. அதற்கு முன்பு விலைவாசிக் கொடுமை பொறுக்க முடியாமல் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அது தேர்தலில் பாதிக்கு மென்று கட்சியைத் தடை செய்தார்கள் கட்சிப் பத்திரிகையையும் தடை செய்தார்கள்.

சுயேட்சையாக நின்ற சில தலைவர்கள் கூட அதிக வித்தியாசத்தில் ஜெயித்தது, அரசுக்கு பேரிடியாகப் போய் விட்டது. மற்ற இடங்களில் வாக்குப் பதிவு இதுவரையிலும் இல்லாத அளவுக்கு குறைவாக இருந்தது.

இது மிகவும் முக்கியமான தேர்தல். மக்கள் தேர்தலை நம்புகிறார்களா? இல்லையா? என்பது தெரிய வேண்டும். தலைவர்கள் நின்ற இடங்களில் மட்டும் அதிகம் வாக்குப் பதிவு. மற்ற இடங்களில் பத்து சதவிகிதம் கூட இல்லை. ஆனால் போராட்டங்களுக்கு அதிகம் வருகிறார்கள். இதைத் தெரிந்து கொள்ளத்தான் கட்சி சில இடங்களில் மட்டும் நின்றதா?

ஆனாலும் கிராமப் புறங்களில் இந்த மாற்றம் முழுமையாக இல்லையே. பாதிக்குப் பாதி என்று சொல்லாம் ஆனாலும் நின்ற இடங்களில் தலைவர்கள் தோற்கவில்லை. வளர்ச்சியைக் காட்டும் கருவியாக இந்த தேர்தல் அமைந்து விட்டது. எதையும் கட்சி சரியாகத் தான் செய்யும்.

கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியையும் அளந்து பார்த்தால் இரண்டும் சமமாகத்தான் தெரிகிறது. ஆனால் போராட்டம் வளர்கிறது. அதே சமயம் மக்களிடம் நெருக்கமும் ஒற்றுமையும் அதிகமாகிறது.

போன மாதம் அரிசிப் பஞ்சம் வந்து கஷ்டப்பட்ட போது, ரேசன் கடையில் வைத்திருந்த அரிசிமூடைகளை லாரியில் ஏற்றி அமைச்சரின் மைத்துனன் கடத்திச் சென்றானே. நகரத்து தொழிலாளர்கள் பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து வழிமறித்தவுடன் குறுக்குப் பாதையில் கிராமத்து வழியாகச் சென்ற பொழுது கிராமத்து மக்களும் தடுத்து நிறுத்தினார்களே! அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டால் ஏமாற்றி விடுவார்கள். அதனால் அதிகாரிகள் முன்னாலேயே மக்கள் கமிட்டி போட்டு நகர்ப்புறம் கிராமப்புறம் என்று வித்தியாச மில்லாமல் அரசு விலைக்கே எல்லோருக்கும் பகிர்ந்து அரிசி கொடுத்தது ஒற்றுமையைத் தானே காட்டுகிறது.

ஒற்றுமையும் போராட்டமும் தான் இப்போது தேவை என்று அவர்கள் உணரவில்லையா? இது கடந்த காலமாக இருந்தால் சாதியை சொல்லி சண்டையை மூட்டி ஊரு ரெண்டுபட வைத்திருப்பார்கள் காலம் மாறிவிட்டது, அதனால் முடியவில்லை .

மழை வந்தால் காரியம் கெட்டு விடுமே என்று வானத்தைப் பார்த்தேன். பயமில்லை. எப்படியும் கட்சிக் கட்டளையை நிறைவேற்றி விடலாமென்ற எண்ணமே உற்சாகத்தையும் வலுவையும் கொடுத்தது.

நகரத்திலுள்ள தொழிலாளர்கள் பொது மக்களின் உணர்வுகளைப் பார்த்தால் விரைவில் புரட்சி வந்து விடுமென்று தோன்றுகிறது. ஆனால் கிராமப்புறத்தைப் பார்த்தால் அப்படியில்லை. மோசமாக இல்லாவிட்டாலும் இந்த அளவுக்கு இல்லை.

நம் நாட்டைப் போல இப்படி எங்குமிருக்க முடியாது. எல்லாமே புது மாதிரி தான். அதனால் தான் கட்சி எதற்கும் அவசரப்படாமல் திட்டமிட்டுத் தெளிவாகச் செய்கிறது. புரட்சியை இறக்குமதியா பண்ணமுடியும்? இங்கேயே தானே வளர்ந்து உருவாக வேண்டும்.

பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள். அந்த அரிசி லாரியை மறித்தபோது நகரத்திலும் கிராமத்திலும் முன்னால் நின்றது பெண்கள் தான். தெருவுக்கு வராமல் வீட்டுக் கஷ்டம் போகாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டார்கள்.

இதனால் ஆண்களுக்கும் பலம் சேர்ந்த மாதிரி இருக்கிறது. புரட்சி என்பது ஆண்களுக்கு மட்டுமா என்ன? பெண்கள் சரிபாதி என்பது இதில் தான் உண்மையாக இருக்கும்.

“மணி என்ன ஆகுதுங்க?”

இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன் தாடையைச் சொரிந்து கொண்டு நின்றிருந்தார். செயலாளர் சொன்னது நினைவிற்கு வந்தது.

“வாட்சு ஓடலங்க” என்று காதை இடது கை விரலால் குடைந்து கொண்டு சொன்னேன்.

“ஓடப்படிக்கு வண்டி இருக்குங்களா? என்று வலது கையால் தலையைத் தடவிக்கொண்டு கேட்டுவிட்டு, காரித்துப்பினார். செயலாளர் சொன்னது சரியாக இருந்தது.

“அவசரமாகப் போகனுங்களா?” என்று வலது கையால் முதுகைச் சொரிந்து கொண்டேன்.

“இல்லை” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

எங்களது அறிமுகம் முடிந்து விட்டது. இதற்குள் அவரை நன்றாகப் பார்த்து யாரென்று தெரிந்து கொண்டேன். இனிமேல் கடமையை விரைவாக முடிக்க வேண்டும் வந்திருப்பவர் மிகவும் முக்கியமான தோழர் வந்திருக்கும் காரியமும் அவ்வளவு முக்கியம்.

பின்புறமுள்ள சந்து வழியாக அழைத்துச் சென்றேன். பல திருப்பங்களுக்குப் பிறகு ஒரு கடை வீதி வந்தது. இவரை ஓரமாக நிறுத்தி விட்டு வீதிக்கு வந்து சுற்றிலும் பார்த்தேன். சற்றுத் தூரத்திலுள்ள பெட்டிக் கடையில் நின்றிருந்த ஒரு தோழர் ரகசிய சைகை காட்டிய பிறகு இவரை கூப்பிட்டுக் கொண்டு எதிரேயுள்ள இன்னொரு சந்து வழியாக வேகமாக நடந்தேன்.

கடந்த ஒரு வாரமாக பல தலைவர்கள் கைதாகி விட்டார்கள். மக்களின் போராட்டங்கள் வெடிக்க வெடிக்க போலீஸ் வேட்டை அதிகமாகியது. கைதானவர்கள் என்ன ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை இதற்காகவும் போராட்டங்கள் அதிகமாகிறது. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. ஆனாலும் போராட்டங்கள் இப்பொழுதே நடந்துகொண்டு தானிருக்கிறது. இது புரட்சியல்ல இதுவே இப்படியென்றால் புரட்சியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இதற்கு கிராமத்து மக்கள் இன்னும் தயாராக வேண்டும்.

தேர்தலில் பாதி அளவுக்கு அவர்களைப் பற்றி தெரிந்தது. வரப்போகும் வேலை நிறுத்தத்தில் அவர்களின் பங்கு எவ்வளவு என்பது தெரிந்து விடும். இது வளர்ச்சிக்கு மேலும் உதவியளிக்கும்.

அதனால் தலைவர்களை வேட்டையாடி விட்டால் சிறை பிடித்து விட்டால் நிலைமையை மாற்றி விடலாமென்று அரசு நினைக்கிறது. இது தப்புக் கணக்கு மக்கள் பிரச்சனைக்காகத் தான் போராடுகிறார்கள் நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று தான் போராடுகிறார்கள். இதை அரசு உணராமல் அடக்கு முறையைக் கையாளுகிறது.

தலைவர்களைப் பிடித்து விட்டால் தீர்ந்து விடுமா? இப்பொழுதெல்லாம் எல்லா இடங்களிலும் தலைவர்கள் உருவாகி விட்டார்களே! இன்னும் உருவாகப் போகிறார்களே! எந்தத் தலைவனையும் பலி கொடுக்க நாம் தயாராக இல்லை. அவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையில்லையா?

நாங்கள் அரைமணி நேரம் நடந்திருப்போம். பல இடங்களில் பதுங்கி வந்தோம். சில இடங்களில் அவருக்குத் தலையில் முண்டாசு கட்டி அழைத்து வந்தேன். எனது வேகத்திற்கெல்லாம் ஈடு கொடுத்து வந்தார். சாப்பிட்டாரா என்பது கூடத் தெரியவில்லை. கேட்பதற்கும் நேரமில்லை. போலீசாரால் வலைபோட்டு தேடப்பட்டு வரும் இந்தத் தோழரைப் பாதுகாக்க வேண்டும்.

செயலாளர் குறிப்பிட்ட இடத்தில் ஓய்வு பெற வைத்து விடிவதற்கு முன்பு வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு தான் முக்கியமான கூட்டம் நடக்கவிருக்கிறது அங்கு கொண்டு செல்லும் வேலைக்கு வேறு ஒரு தோழர் பொறுப்பு ஏற்பார். இரண்டு முறையும் ஒரே நபர் சென்றால் ஆபத்து ஏற்படலாம்.

இன்னும் பத்து நிமிடங்களில் சென்று விடுவோம். குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் மாடியைப் பார்த்தேன். லைட் எரிந்து கொண்டிருந்தது. ஒரு தோழர் காற்றுக்காக துண்டை விசிறிக் கொண்டு உலாவிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் நாங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கித் திரும்பி விசிறிக் கொண்டிருந்தார்.

எல்லாமே நல்ல விதமாக அமைந்து வருகிறது. அடுத்து பொட்டலான இடமாக இருப்பதால் தான் எச்சரிக்கைக்காக மாடியில் நின்று கவனித்து எங்களுக்கு வழிகாட்டினார். எப்படியோ அந்த பொட்டல் வெளியையும் கடந்து அடுத்துள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று விட்டோம்.

சிறிது தூரம் சென்றவுடனேயே ஒரு மறைவான இடத்திலிருந்து செயலாளர் வெளிப்பட்டு எனது வேலையை அவர் ஏற்றுக் கொண்டார் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டு, வேறு பாதையில் செல்லுமாறு சொல்லிவிட்டு, அந்தத் தோழரோடு சென்று விட்டார்.

பசியும் சோர்வும் அதிகரித்தாலும் ஒரு மகத்தான சமுதாய விடியலுக்கு எனது பங்கைச் செய்த உணர்வு நெஞ்சில் நிறைந்து நின்றது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top