விடியுமா?

0
(0)

“ஏ… வள்ளியம்மா… நாளைக்காச்சும் வட்டி ரூவாய் கொடுத்து விடு… நாளைக்கும் அப்படியிப்படின்னு… சால்ஜாப்பு சொன்னே அப்புறம்…”

“ஒன்ரூவாயக் கொண்டுட்டு யாரும் ஓடிர மாட்டாக, ரூவா கொடுத்திட்டாளாம்… ரூவா…”

வெளியே அவசரமாய் காலடிச் சத்தம் கேட்கவே வாசலில் நின்று கொண்டிருந்த மதுரையம்மாள் திரும்பிப் பார்த்தாள். சின்னத் தம்பியின் பொண்டாட்டி பேச்சியம்மாள் ஓடி வந்து கொண்டிருந்தாள். அவள் ஓடி வருவதைக் கண்ட மதுரையம்மாள் கொஞ்சம் பதட்டத்துடன்,

“என்னட்டி பேகொண்டவ மாதிரி ஓடி வாரே…” அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் அவளைத் தாண்டி வள்ளியம்மாளைப் பார்த்து,

“மயினி… மயினி… கனகு மாப்பிள்ளை இருக்கானா…”

“இல்லியே… அந்த முடிவான் எங்கே தொலைஞ்சானோ யாரு கண்டா…”

“இல்ல மயினி… நம்ப ராக்காச்சி கோயில் முக்கிலே ஏழெட்டு ஆளுக ஒன் வீட்டை விசாரிச்சிட்டு இருந்தாகளாம்… இவுக அங்கிட்டு தற்செயலா போனவுக… என்னய்யான்னு கேட்டதுக்கு… வாங்கின கடனுக்காக இவ்வளவு நாள் இருந்து இருந்து பார்த்துட்டோம்… அவன் மாமியா வீட்டில் கெடக்கிற சாமாங்களை பெறக்கிட்டுப் போக வந்தோம்னு… சொல்லியிருக்காங்க… எல்லாம் கடம்பூரு ஆளுகளாம்…”

மூச்சு இரைக்க இரைக்கச் சொல்லி முடித்தாள் பேச்சியம்மாள்.

“அடச்சனியனே என்னட்டி சொல்லுத… எனக்கு வயத்தில் புளிய கரைக்குதே… அந்தத் தேவடியா மகனோட இதே பாடாப் போச்சே… என்ன வேணும்னாலும் அவங்கிட்டே போய் கேக்கச் சொல்லு…”

“இவளப்பாரு அதெல்லாம் கேக்கிற மாதிரியா இருக்காங்க… அவனுக… கனகுமாப்பிள இப்ப அவங்க கையில கெடச்சான் தொலிய உரிச்சிடுவாங்க… அவனால கொஞ்சத்தும்பமா… அண்ணாச்சிக்கு பாண்டிக்கு ஆளனனுப்புங்களேன்… வீட்டுல தைரியத்துக்காச்சும் ஒரு ஆம்பிள இருக்கட்டும்…”

“சின்னத் தம்பிய எங்கட்டி…”

“மார்க்கெட்டுக்கு போயிருக்காக…”

“மார்க்கெட்டுக்கு தொலஞ்சிட்டானா…”

வள்ளியம்மாளின் ஒடப்பிறந்தவன் சின்னத் தம்பி நல்ல தவசுப்பிள்ளை என்பதால் மெஸ் ஒன்று ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறான். வள்ளியம்மாளுக்கு எதுவும் தோணவில்லை. யோசிக்க யோசிக்க பயமே கூடியது. மதுரையம்மாளுக்கும் இதைக் கேட்டதும் சங்கடமாகிவிட்டது. மகளிடம் வட்டி ரூபாய் கேட்டுவிட்டு அய்யர் வீட்டுக்கு ஏனம் வௌக்கப் போவணும் என்று நினைத்து வந்தாள், பேச்சியம்மாள் வள்ளியம்மாளையும் மதுரையம்மாளையும் மாறிப் மாறிப் பார்த்தாள். அவர்கள் ஏதும் பதில் சொல்லாததைக் கண்டு மெல்ல அசைந்து அசைந்து போய்விட்டாள்.

வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த பள்ளிக்கூடம் விட்ட மணிச்சத்தம் கேட்டது. மதுரையம்மாள் மெல்ல முணு முணுத்தபடி உட்கார்ந்துவிட்டாள். வள்ளியம்மாளுக்கு கனகுமாப்பிள்ளை கணேசனை நினைக்கும்போதே தொண்டையில் கசப்பூறி ஆத்திரத்தையும் வெறுப்பையும் உண்டு பண்ணியது.

கனகுவுக்கு கல்யாணம் முடியும் போது ரொம்ப சாதுவாய் தெரிந்தான் கணேசன். கடன் வாங்குவதில் அவனை மிஞ்சமுடியாது. அவன் பேச்சு அமைதியான குரலில் மெதுவாக இருக்கும். அருகில் நிற்காவிட்டால் கேட்கக் கூட செய்யாது. இதை நம்பித்தான் நிறையப் பேர் கடன் கொடுத்திருக்கிறார்கள். அவன் எங்கெல்லாம் வேலை பார்த்தானோ அங்கெல்லாம் கடன். கடன் நெருக்கடி தாங்காமல் தான் ஒவ்வொரிடத்திலிருந்தும் வெளியேறினான். ஆட்கள் வீடு தேடி வர, போக இருந்தார்கள். அப்புறம் அவன் கனகுவை அவள் அம்மா வீட்டில் இரண்டு குழந்தைகளோடு விட்டு விட்டு அலைய ஆரம்பித்தான். இப்பவும் திடீர் திடீரென்று வருவான். நாலு நாள் இருப்பான். அப்புறம் வந்த மாதிரியே போய் விடுவான். சில நேரம் போகும் போது கூடவே ஏதாவது சாமான் அல்லது பணம் சேர்ந்து போயிருக்கும். வள்ளியம்மாளுக்கு அவனிடம் இருந்த மரியாதையெல்லாம் உருத் தெரியாமல் போனது. “இனிமே இந்தப் பக்கம் வராதே…” என்று கூடச் சொல்லிவிட்டாள். இதற்கு மேல் என்ன செய்ய முடியும். வள்ளியம்மாளின் ஏலாமை கோபமாகி, ஆத்திரமாகி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ஐய்யோ… நான் என்ன பண்ணுவேன்… இப்படி செய்வானா பாவி… நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நெனக்கலயே… ஒருத்தரப் பாவின்னேனா… பரப்பான்னேனா…” அவள் அழுது புலம்புவதைக் கண்டதும் மதுரையம்மாளுக்குப் பொறுக்கவில்லை.

“அடச்சீ… வெறு வாக்கட்டமூதி… என்னட்டி புலப்பம் வேண்டிக்கெடக்கு… ஒங்காத்தாள பாடையில் கொண்டு போறாமாரி… இப்ப மென்ன வரட்டுமே… வந்து கேக்கட்டும்… அப்புறம் பாத்துக்குவம்…”

அவள் சொல்லி முடிக்கவும் கனகுவும், அவள் மகள் அன்னத்தாயும் தீப்பெட்டி கம்பெனி வேலை முடித்து சந்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். சந்தில் இரண்டே வீடு தான். வள்ளியம்மாள் கடைசியில் இருந்தாள். முதலில் கற்பகம் இருந்தாள். கனகு பார்க்கும் போது கற்பகம் வீடு பூட்டிக்கிடந்தது. ஒருவேளை சினிமாவுக்குப் போயிருக்கலாம்.

இன்றைக்கு கனகு கூட சினிமாவுக்குப் போகலாம் என்று தான் கொஞ்சம் சீக்கிரமே தீப்பெட்டிக் கட்டைகளை அடுக்கி முடித்துவிட்டு, அன்னத்தையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். அன்னமும் இப்போதெல்லாம் பதினைஞ்சி கட்டைகளுக்கு மேல் அடுக்குகிறாள். நல்ல சுறுசுறுப்பு. மூணாங்கிளாசில் நன்றாகத் தான் படித்தாள். படிக்க வைக்கணும் என்று கனகுவுக்கும் ஆசை. ஆனால் வீட்டில் தான் நிலைமை சரியில்லையே. அன்னம் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தாள் கனகு. அப்படிப் பார்த்துக் கொண்டே ஏறும் போதும்படி தட்டியது. வாசலைத் தாண்டி உள் பக்கமாக உட்கார்ந்திருந்த மதுரையம்மா ஆச்சியைப் பார்த்துக் கொண்டே நுழைந்தாள். ஏதோ வித்தியாசமாய்பட்டது. அவளைக் கண்டது தான் தாமதம். வள்ளியம்மாள் ஆங்காரத்துடன்,

“தேவடியாமுண்டை… எல்லாம் ஒன்னால தாண்டி.. அன்னைக்கே செத்துத் தொலஞ்சிருந்தா… ஒரேயடியா தலை முழுகியிருப்பேன்… இந்தா பாரு… நீயமாச்சி… ஒம்பிள்ளைகளுமாச்சி… எங்கிட்டாவது கங்காணாத இடத்துக்குத் தொலஞ்சிபோங்க…”

கனகுவுக்கு முதலில் உடம்பெல்லாம் நடுங்கியது. ஒன்றும் புரியவில்லை. பதட்டத்துடன், “என்ன…”

மதுரையம்மா ஆச்சி எல்லாவற்றையும் சொன்னாள். அதைக் கேட்டு விட்டு கனகு, “யாரு சொன்னா…”

“நம்ப பேச்சியம்மா…”

“அப்படி வெவரத்தை சொல்ல வேண்டி தான… வெவரங்கெட்டதனமா அழுதா என்ன இழவு தெரியும்… அந்த ஆளு இங்க ஒண்ணும் கொண்டாந்து கொட்டலியே…”

கனகு சொல்லிக் கொண்டிருக்கும் போது அன்னத்தாய் உள்ளே நுழைந்தாள். வள்ளியம்மா ஆச்சி அழுது கொண்டிருப்பதையும், அம்மாவின் ஆத்திரத்தையும் பார்த்து பயந்து போய் விட்டாள். கனகு கேட்டாள்.

“அவங்க இங்கன வந்து ஏதும் கேட்டாங்களா…”

“யாரும் வரல்லடி… அவங்க நின்னு விசாரிக்கும் போது சின்னத் தம்பி கேட்டிருக்கான்…”

மதுரையம்மாள் காலை நீட்டி கைகளால் நீவி விட்டாள்.

“இதுக்குத்தானா… இந்தக்கூத்து…” கனகு இப்படிச் சொன்னதும் எல்லாருக்கும் ஆசுவாசமாகியது. ஒன்றும் இல்லாததைத் தான் பெரிதுபடுத்துகிறோமோ. ஆனாலும் இருட்டு கவியக் கவிய பயம் கனத்து வந்து கனகுவையும் அமுக்கியது. அவளும் வெறித்தபடி உட்கார்ந்துவிட்டாள். அப்போது தான் கனகுவின் மகன் சண்முகம் விளையாண்டு முடித்து வீட்டிற்குள் பைக்கட்டுடன் வந்தான். அவனைப் பார்த்ததும் மதுரையம்மாள்,

“ஏ… ஐயா… சம்முகம்… போயி தாத்தாவ… அச்சாபிஸிலிருந்து கையோட ஆச்சி கூட்டிட்டு வாய்யா… ஒரு ஓட்டத்திலவா… பாப்பம்…” என்று சொல்லி அனுப்பி விட்டு உள்ளே திரும்பி,

“ஏய்… எந்திரிச்சி… விளக்கு பொருத்துங்கடி… வள்ளியம்மா… ஏய் ஒன்னத்தானே…” அன்னத்தாய் இதை எதையும் கண்டவளாகத் தெரியவில்லை. அடுக்களைக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வந்து விளக்கைப் பொருத்திக் கொண்டு மேல் பெட்டி கட்டுகளை எடுத்துப் போட்டு ஒட்ட ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு தினமும் தீப்பெட்டி கம்பெனி போய் விட்டு வந்து ஐந்து கட்டு ஒட்டி விட வேண்டும். பட்டாலையில் எல்லோரும் இருந்ததால் அவள் அடுக்களையிலேயே உட்கார்ந்து விட்டாள். வெளியே கசாபுசலாய் சத்தம் கேட்டதும் இருந்த வாக்கிலேயே எட்டிப் பார்த்தாள். தாத்தா வந்திருந்தார்.

சிவபெருமான் பிள்ளைக்கு வேகமாய் நடந்து வந்ததில் இளைப்பு அதிகமானது. இளைப்பு அடங்க கொஞ்சம் உட்கார்ந்து ஆசுவாசமானார். வாசலிலேயே சின்னத் தம்பி சொல்லியிருந்தான். ஏதோ சொல்ல வந்தவர் இரும ஆரம்பித்தார். அவர் அச்சாபீஸ் வேலைக்குச் சேர்ந்ததில், மெஷினை மிதித்து மிதித்து ஆஸ்த்மாவும் குத்திருமலும் தான் அவருடைய நீங்காத சம்பாத்யம். தரித்திரம் விட்ட பாடில்லை. சுருண்டு வந்த சளியைத் துப்புவதற்காக எழுந்து அடுக்களையைத் தாண்டி வாய்க்காலில் துப்பிவிட்டு திரும்பும் போது அன்னம் விளக்கைப் பொருத்தி வைத்துகட்டு ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஒரு கணம் அதிர்ந்துவிட்டார். நெஞ்சில் ஏதோ அடைக்க விருட்டென பட்டாலைக்கு வந்து விட்டார். யாரும் எதுவும் பேசவில்லை. வள்ளியம்மாள் அழுது கொண்டேயிருந்தாள். கனகு எல்லாவற்றையும் அடக்கி அப்படியே உட்கார்ந்திருந்தாள். முகம் கல்லாய் இறுகியிருந்தது. கடைசியில் சிவபெருமான் பிள்ளை இவ்வளவு நேரம் பேசின தொடர்ச்சி மாதிரி,

“சரி… நமக்கென்ன… அவனுக்கும் நமக்குந்தான் எந்த சம்பந்தமுமில்லை… எங்க கிட்டே வந்து கேக்கறதிலே எந்த நாயமும் இல்லைன்னு அவங்ககிட்ட…”

சந்தில் திண்டு திண்டு என்ற சத்தம் கேட்டதும், நிறுத்திவிட்டார். பாண்டி வந்தான். சிவபெருமான் பிள்ளையின் கடைசிப் பையன் தொழிற்பேட்டையில் வேலை பார்க்கிறான். மூத்தவன் லாரியில் டிரைவராக ஓடுகிறான். அவன் இருந்தால் சமாளித்து விடுவான். பாண்டி கோபத்துடன்,

“யாரந்தத் தேவடியாமகங்க… மானாங் கண்ணியா வந்து தொடுவாங்களோ… வரட்டும் எவனாச்சும் தொடட்டும்… கொல தான் விழும்…”

அவன் பேசியதைக் கேட்டதும் கொஞ்சம் தைரியமாயிருந்தது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இனிக் கவலையில்லை. தாட்டிக்கமான ஆம்பிளை ஒருத்தன் வீட்டில் இருக்கான். அவன் வள்ளியம்மாளைப் பார்த்துக் கேட்டான்.

“ஆமா தெருமுக்கில ஒரு பயலக் காணோம்…” வள்ளியம்மாள் கொஞ்சம் தெளிஞ்சாலும் பதில் பேசுகிற நிலையில் இல்லை. மதுரையம்மாள் கேட்டாள்.

“ஒனக்கு யாரு சொன்னா…”

“வெங்கடாசலம்… சின்னத் தம்பி மாமா சொல்லி விட்ருக்காக…”

“ஏய்யா… நீ போயி போலீசில எழுதி வையேன்…”

“இவ ஒருத்தி… அநயம் தெரிஞ்சவ… போலீசுக்குப் போனா அம்புட்டு தான்… வேற வினையே வேண்டாம்… நான் மணியாச்சி வரைக்கும் போயி வேலுப்பாண்டியையும் மாரி முத்தண்ணனையும் பார்த்து கூட்டிட்டு வாரேன்… இன்னக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவம்… நீ எதுக்கும் கற்பகத்தக்கா வீட்டில சாமாங்களைப் போட்டு வை…”

“எல எதுக்கு வீணா வம்பு…” சிவபெருமாள் பிள்ளை சொல்லு முன்பே அவன் போய் விட்டான். எழுந்து எட்டிப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. அமாவாசைக்கு இன்னும் ஒரு நாளே இருந்ததால் நல்ல மையிருட்டு பரவியிருந்தது. திடீர் திடீரென நினைத்து வள்ளியம்மாள் அழுதாள். கனகு பித்துப் பிடித்த அமைதி போல அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்தாள். கொஞ்ச நேரம் யாருமே எதுவுமே பேசவில்லை. வெற்றமைதி.

அடுக்களையிலிருந்து அன்னத்தாய் கடவாய்ப்பெட்டி, பசைச்சட்டி, தாள் கட்டுக்களை கொண்டு வந்து வைத்தாள். திரும்பப்போய் விளக்கை எடுத்துக் கொண்டு வந்தவள் பட்டாலை வாசலில் ஒரு ஓரமாய் விளக்கை வைத்துவிட்டுப் போய் ஏற்கனவே தூங்கியிருந்த சண்முகத்தின் பக்கத்தில் கையையும், காலையும் குறுக்கிக் கொண்டு சுவரைப் பார்த்தபடி முடங்கி விட்டாள். மதுரையம்மாள் கேட்டாள்.

“சாப்பிட்டியாடி…”

“ம்…”

“அந்தப்பயசம் முகந்தான் சாப்பிடாம படுத்துக்கிட்டான்… ஏன் முடங்கிக் கிடக்கே… நல்லா விரிச்சிப் படு…”

இதற்கு அன்னத்தாய் ஏதும் பதில் சொல்லவில்லை. கண்களை அழுத்திக் கொண்டு அசதியும் தூக்கமும் வந்தது. வாசலில் யாரோ நிற்பது போல தோன்றவே, மதுரையம்மாள் குரல் கொடுத்தாள்.

“யாரது…”

“நாந்தான் கற்பகம். நான் இப்பத்தான் ஊத்துப்பட்டி சித்தாப்பாவைப் பாத்துட்டு வாரேன்… வந்ததும் வாசல்ல பேச்சியமக்கா சொன்னா… இருக்கிறதும்பம் போதாதுன்னு இதுவேறயா…” என்று சொல்லிக் கொண்டே எல்லோரையும் தாண்டி கனகுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். கற்பகத்தின் புருஷன் மிலிட்டரியில் இருக்கிறான். பெரிய பேச்சுக்காரி. ரொம்ப இளகின மனசு, அவள் வள்ளியம்மாளைப் பார்த்து,

“பெரிம்மா… சாமாங்கள வேணா எவ்வீட்டில போட்டுவைங்க… நாம் பாத்துக்கிறேன்…” வள்ளியம்மாளோ கனகுவோ அசையவில்லை. மதுரையம்மாள் தான் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“என்னத்த எழவு சாமாங்க… எல்லாந்தான் போச்சே…” என்றபடி, இருந்த ரெண்டு தவலைப்பானையில் இருந்த தண்ணீரைத் தொட்டியில் கொட்டிவிட்டு வாசலில் வைத்தாள். தட்டுச் சீட்டில் எடுத்த சின்ன எவர்சில்வர் குடத்தையும் முதலில் கொண்டு போகச் சொன்னாள். மற்ற சாமான்கள் எதை எதைக் கொடுப்பது என்றே தெரியவில்லை. எல்லாச் சாமான்களுமே முக்கியமாய்பட்டது. வீட்டையே காலி பண்ணிவிட்டால் கூட தேவலாம் போல இருந்தது.

“ஏட்டி கனகு… காதில கெடக்கிற கம்மலக் கழட்டிக் கொடு… அந்தப் பிள்ள காதில் என்ன கிடக்கு…”

“அது கவரிங்தான்…” என்று சொன்னவள் எழுந்து அலமாரியைத் திறந்து பாண்டி வாங்கி வைத்திருந்த அவன் சேக்காளி வாட்சையும் எடுத்துக் கொடுத்தாள். கற்பகம் வந்து கம்மலையும் வாட்சையும் வாங்கிக் கொண்டு பட்டாலைக்குள்ள எட்டிப் பார்த்து சொன்னாள்.

“பெரீம்மா… நெனச்சி… நெனச்சி கலவரப்படாதீக. அதெல்லாம் ஒண்ணும் நடக்காது… நிம்மதியாப்படுங்க…”

கீழே இறங்கிப் போய்விட்டாள். சிவபெருமான் பிள்ளை எப்பயோ சாய்ந்து தூங்கிவிட்டார். நேரம் ரொம்ப ஆகியிருக்கும் போல. வள்ளியம்மாள் உட்கார்ந்தபடியே தூங்கித் தூங்கி விழுந்தவள் சேலை முந்தானையை விரித்துப் படுத்தாள். தூக்கத்திலும் கண்ணிலிருந்து நீர் வழிந்தது உற்றுப் பார்க்கையில் தெரிந்தது. மதுரையம்மாளும் சுவரில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்தாள். தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. கனகு எதையெதையோ யாசித்துக் கொண்டிருந்தாள். சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் நிழல் பெரிதாய் ஆடியது. சோகமான மஞ்சள் ஒளிபரவி சூழ்நிலையை வரை தாள் சித்திரம் போலத் தீட்டியது.

கொஞ்சநேரத்தில் சந்துக்குள் தடுமாறிக் கொண்டே பாண்டி வரும் சத்தம் கேட்டது.

“டேய்… எவனாச்சும் வந்தீக… தலைய எடுத்திருவேன்… யாருமத்த அனாதைப் பயகன்னு நெனச்சீகளா…” முன் வாசல் படியைத் தாண்டியவன் அப்படியே விழுந்துவிட்டான். மதுரையம்மாளும், கனகுவும் புரட்டினார்கள்.

“டேய்… உள்ளே வந்து படுறா…”

“தொடாத… வெட்டிருவேன்… எந்தப் பயமவன் வாரான் நாம் பாக்கேன்… நீபோ… போன்னா… போ உள்ளே…” கொஞ்ச நேரம் எதெதுவோ முனங்கிக் கொண்டிருந்தவன் தூங்கிவிட்டான். அவன் போட்ட சத்தத்தில் வள்ளியம்மாளும் சிவபெருமான்பிள்ளையும் எழுந்து விட்டார்கள். வள்ளியம்மாள் மீண்டும் அழுகை பொங்கி வர அழுதாள். சிவபெருமான்பிள்ளை எதோ வாய்க்குள்ளேயே சொல்லிக் கொண்டு மறுபடியும் படுத்துவிட்டார். கனகு மட்டும் ரொம்ப நேரத்துக்குத் தூங்கவில்லை. என்னென்னவோ நினைவுகள் யோசனைகள், எப்பொழுது எப்படித் தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

வெளியே பால் காரனின் மணிச் சத்தம் கேட்டது. பழக்கத்தினால் முழிப்பு கொடுத்து வள்ளியம்மாள் எழுந்தாள். எழுந்து வீடு கிடக்கிற கோலத்தைப் பார்த்ததும் நேற்றைக்கு நடந்தது எல்லாம் நினைவில் வந்தது. பொங்கி வந்த விம்மலை அடக்கி ஒரு நீண்ட பெரு மூச்சுவிட்டாள். வெளியே லேசாய் ஊதல் காற்று வீசியது. வராண்டாவில் பாண்டி வேட்டியை இழுத்து மூடிப்படுத்திருந்தான். வானம் இருளைக் கரைத்து சாம்பல் நிறத்தில் வெளுத்துக் கொண்டிருந்தது. இனியொன்றும் பயமில்லை. எல்லோரும் இருக்கிறார்கள். அதுவுந்தவிர வெளிச்சம் வேறு வந்துவிட்டது.

வள்ளியம்மாள் பால் வாங்க ஏனம் எடுத்துக் கொண்டு போனாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top