வாழைக்கு வாக்கப்பட்டவர்கள்

0
(0)

” நா ஏற்கனவே ஒரு கொல செஞ்சவ..? “ – புருசனின் அடாவடிகள் பொறுக்காத பொழுதெல்லாம் சட்டென வெளிப்படுகிற வார்த்தைகளை அவளால் கட்டுப் படுத்த முடிவதில்லை. அப்படிச் சொல்லுகிற் சமயம் அவளுக்குள் வாழையின் பசிய மணமும் ஜில்லிப்பும் வந்து மோதும். அதோடு மனசில் பதட்டமும் கூடுதலாய் வெறித்தனமும் சேர்ந்து கொள்ளும்.

 

பரமசிவத்துக்கு மனைவியின் அந்தக் கோபம் எந்நாளும் தைப்பதில்லை. மாறாக, “நீ ஒரு கொலதான செஞ்சிருக்க,  நாங்கள்ளாம் .. கணக்கே வச்சுக்கறதில்ல.. அப்பிடியே சாச்சுத் தள்ளிவிட்டு  போய்க்கிட்டே இருப்பம்.. தெரிமா..? “

 

சொல்லும் போதே அவனது உடல் ஸ்டைலாக வளைந்து நெளிந்து ஒடிசலான அவனது உருவத்துக்கு தனியான தோரணையைக் கொடுக்கும்.

 

பரமசிவத்தை சித்து உடம்புக்காரன் என அடையாளாம் சொல்லுவார்கள். நாற்பது வயசைத் தாண்டியும் கூட அவனது அடர்ந்த மயிர்க் கற்றைகளில் குறைந்தபட்ச்சமான நரையோ, தலைமுடி உதிர்வோ கண்டதில்லை. முகப் பிரதேசத்திலும், அரும்பு மீசைக்குமேல் அதிகபட்ச்சமான மயிர்கள் முளைவிட்டதில்லை. அதனாலேயே எந்த நாளிலும் அவனது முகம், எப்பொழுதும் ஒரு இளமைப் பொலிவினை தக்க வைத்தபடி இருந்தது.

 

அவளுக்கும் ஏறத்தாழ அவனை ஒத்த உடற்கூறே அமைந்திருந்தது. உடம்பின் எந்த இடத்திலும் அதிகப்படியான சதைப் பற்றினைக் கிள்ளிக்காட்ட முடியாதபடிக்குச் சிக்கென வாய்த்த உடம்பு. அடர்த்தியான கேசம் எனச் சொல்ல முடியா விட்டாலும். முதுகுவரைக்கும் சவுரிமுடி வைக்காமல் சடை பின்னுகிற நீளமான மயிர் வாட்டம்.

 

உயரத்தில் மட்டும் பரமசிவத்தைவிட அவள் நாலு விரல்கடை கூடுதலாய் இருந்தாள். அது சாதாரணமாய்த் தெரியாது. இரண்டுபேரும் சேர்ந்து எங்காவது வெளியில் போகிற பொழுது உன்னிப்பாய் கவனித்தால் மட்டுமே தெரியும். அதற்காகவே பரமசிவம், கல்யாணத்திற்குப் பிறகு குதிஉயர்ந்த செருப்பினை உபயோகப் படுத்தலானான்.

 

அவளோ. அவனோடு நடந்து போகிற நேரம் மட்டுமல்லாது, சாதாரணமாகவே கல்யாணத்திற்குப் பின்னால் செருப்பணிவதையே விட்டுவிட்டாள். பரமசிவத்துக்கு அவளது அந்தச் செயல்பாடு ரெம்பவும் பிடித்திருந்தது.

 

இரவில் அவளோடு கூடுகிற போதுகளில். ’தண்ணிமப்பில்’  இருந்தானேயானால், மெலிந்து வெளிறிய அவளது பாதங்களை அவன் முத்தமிடத் தவறுவதில்லை. துவக்கமோ, முடிப்போ அங்குதான் நிகழும். சிலநாட்களில் துவக்கி முடிப்பதும் உண்டு.

 

கட்டுமான வேலையில் – சென்ட்ரிங் – எனச் சொல்லப்படுகிற கம்பி ஒடித்துக் கட்டுகிற வேலைக்காரன். வேலைக்குப் பஞ்சமில்லை. ஒப்பந்தமாய் வைரவன் மேஸ்திரியோடுதான் வேலை. அவரிடமே ’டூல்ஸ் பை’ தூக்கத் துவங்கி, கம்பி வளைப்பது வரைக்கும் கற்றுக் கொண்டான். வேறு கங்காணியிடம் மாறாத அந்த விசுவாசத்துக்காகவே, பரமசிவத்துக்கு – அவர், பின்ன வாய்ப்பாடெல்லாம் – ஒரு வாத்தியாரைப் போல, அவனை உட்காரவைத்துச் சொல்லிக் கொடுத்தார்.

 

எழு கால் = ஒண்ணே முக்கால்

எண் கால் = ரெண்டு

ஒம்பத்திக் கால் = ரெண்டே கால்

 

“வீசம், அரவீசமெல்லாங் கூட கத்துக்கிட்டா நல்லதுடா…, ஆனா, அம்புட்டுச் சின்னக் கணக்கெல்லாம் இன்னிம்மே வேலையிருக்காது…” – என்று சதுரக் கணக்கு வரைக்கும் பொறுமையாய்ச் சொல்லிக் கொடுத்தார்.  இந்த கட்டட வேலையில் இந்தக் கணக்குதான் முக்கியமானது. இல்லாவிட்டால் ஏகமாய் காசை இழக்க வேண்டிவரும்.  கூடுதலாய் தண்ணியடிக்கவும் அவரிடமே கற்றுக் கொண்டதாய்ச் சொல்லிக் கொள்வான்.

 

“வெயில்ல கெடந்து வெந்து போகுற ஒடம்புக்கு குளிச்சியா ‘பீரு’ சாப்புட்டாத்தே மக்யா நாத்தைக்கி மகுடி ஊத முடியும்.” – என்று பரமசிவம் பல பேருக்குச் சொல்லி அவர்களையும் தனக்குக் கம்பெனியாக்கிக் கொள்வான்.

 

கொஞ்சநாளில் ‘பீர்’ புளிச்ச தண்ணியாய் ஆகிப்போனது. “ கழுணித்தண்ணியக் காசுகுடுத்துக் குடிக்காட்டி வீட்ல சொன்னா வடிகஞ்சிய வெளாவிவச்சிட்டுப் போறாக… பீரு குடிச்சா, தொப்ப பெருகுமப்பாவ்..! வேல செஞ்ச அலுப்புத்தீர சுருக்குன்னு சொணப்புத் தட்ற மாதரி ’சரக்கு’ ஏத்துனாத்தே ஒறக்கம் புடிக்கும். இல்லியா….”

 

‘பாருக்குள்’ அரிய உபன்யாசமே செய்ய ஆரம்பித்தான். சிலசமயம், வைரவன் மேஸ்திரியே அவனது பேச்சில் விழுவதுண்டு.

 

ஒரு குழந்தை பிறப்பது வரைக்கும் அவனது நடவடிக்கைகள் அவளை உறுத்தவில்லை. வேலைக்கெல்லாம் தவறாமல் போய்வந்தான். ஆனால் சம்பளபணத்தை என்றைக்கும் அவளிடம் மொத்தமாய்த் தந்தது கிடையாது. வீட்டுச் செலவுக்கென்று அவனாக ஒரு கணக்குப் போட்டுக் கொடுப்பான்.

 

பேறுகாலம் முடிந்து வந்தபிறகும் அவனது கணக்குப்படியே பணம் கொடுத்தபோது, ரெட்டிப்பாகச் செலவாவதைச் சொல்லி கணக்குக் காட்டினாள். ரெண்டாவது, மூணாவது பிள்ளைகளுக்கெல்லாம், அவன் தந்த செலவுப் பணம், அது மாநில சர்க்காருக்கு மத்திய அமைச்சரவை ஒதுக்குகிற நிவாரணத் தொகையைக் காட்டிலும் மிக மோசமாய் இருந்தது.

 

அவள் பிள்ளைகளைப் பூராவும் அவனிடம் விட்டுவிட்டு வெளியேறப் போவதாய் சொல்லிப் பயமுறுத்தினாள், அவனுக்குப் பயம் வந்த போதெல்லாம் கூடுதலாய் ஒருமடங்கு சாராயத்தைக் குடித்துவந்து தகறாறு செய்வான். போதை தெளிந்த நேரத்தில் சிக்கனமாய் வாழ்கிற வழியினைப் போதிக்கவும் செய்வான்.

 

ஆனாலும் பிள்ளைகள் என்னவோ அவன் மேலேயே பாசம் காட்டின. அந்தப் பாசத்திற்காக்வே வீட்டுச் செலவிற்கு டிமிக்கி கொடுத்து, பிள்ளைகளுக்குக் காசுகொடுத்துப் பாசம் வாங்கினான். அதன் காரணமாகவே அவளுக்கு பிள்ளைகள் பேரிலும் கோபம் இருந்தது.

 

“பக்கிக ரத்தத்த உறிஞ்சிப் பாலாக் குடிச்சிப்பிட்டு, குடிகாரப் பயலுக்குத்தே குண்டியக் கழுவிவிடுதுக.. ஹூம்..பிய்யத்திங்கறதுக்குப் பொறந்ததுக வேறொண்ணாவா வளரும்..? “ – எனச் சாடி, பலநேரங்களில் தன் பட்டினியோடு பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளுவாள்.

 

”இது நல்லாவா இருக்கு..? “ – புதிதாய்க் குடிவந்த பக்கத்து வீட்டு மாரிநாய்க்கர் அவளைக் கேட்டார்.

 

”எதுண்ணே..? “- பட்டினியில் புரண்டபடியே கேட்டாள்.

 

”ஒம் புருசனோட வகுசி அம்புட்டுத்தேன்னு தெரிஞ்சிபோச்சி அதச் சரிக்கட்ட,, நிய்யும் எங்கியாச்சும் ஒரு வேலவெட்டிக்கிப் போக மாட்டாம.., வீம்பு பண்ணிக்கிடிருக்கறது நல்லாவா இருக்குன்னு கேட்டேன்..! சொல்லு..? “ பொம்பளையாய்ப் பேசினார்.

 

”அதுக்கும் விடமாட்றார்ல .. ண்ணே… ! போனா வைறாப்பல…! “

 

“ ஓ… பொண்டாட்டி வேலைக்கிப் போறது கேவலமா இருக்குதாக்கும்…!”

 

“இல்லண்ணே நா, வேலைக்குப் போனா கெட்டுப் போயிருவேனாம்..”

 

”ஏலாதவாயி எல்லாத்தியும் பேசும்மா.. அதெல்லா நீ சட்ட பண்ணக்கூடாது. வேலயத் தேடு . பரமசிவத்த நாம் பாத்துக்கறேன்..!”

 

மாரிநாயக்கருக்குப் பொண்டாட்டி இல்லையாம். செத்துப் போயிருக்கும் போலிருக்கிறது. தினசரி பூ வாங்கிக் கொண்டு வருவார். பொண்டாட்டி படத்துக்கு என்று சொல்லுவார்.

 

“உசுரோட இருந்தா , மொழக் கணக்குல வாங்கிவீங்க போல..” – என்று அவள் சொல்லும் போதெல்லாம், அமைதியாய்ப் புன்னகைப்பார்.

 

ஏதோ நாட்டு வைத்தியம் பார்க்கிறார் போலிருக்கிறது. வாரத்தில் பாதிநாள் வெளியூர் போய்விடுவார். வெள்ளைக் கலர் மாருதிக்கார் வந்து அவரை அழைத்துப் போகும். காருக்குள்ளே மைக், ஸ்பீக்கர், வயர்கள், என்று கசகசப்பான பகுதிக்குள் தன்னைத் திணித்துக் கொள்வார்.

 

வீட்டில் ‘ஆளாகி’ இருந்தபோது சாதகத்தில் அவளுக்கு தோசம் இருப்பதாய்ச் சொன்னார்கள். போகிற வீட்டில் மாமனார் மாமியாரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டுமாம். ஊரிலுள்ள அத்தனை ஜோஸ்யர்களும் ஒரே மாதிரியே சொன்னார்கள். அந்த காலதாமதம் கூட அவளது அய்யாவுக்கு நல்லதாகவே பட்டது. கொஞ்சம் நகை நட்டுச் சேமிக்க அவகாசம் கிடைக்கிறதே…! ஆனால் சொந்த பந்தங்களின் வாயடைக்க முடியவில்லை ”வயசுப்பிள்ளைய தள்ளி விடுற வேலையப் பாக்காம குத்தவச்சு குந்தாணியாக்கப் போறியா..சாதகத்துல யாருக்குத்தான் கோளாறு இல்ல.. பரிகாரத்தப் பாரப்பா…” – ஏச்சுப் பொறுக்க முடியவில்லை . , பரிகாரம் பண்ண முடிவு செய்தனர்.

 

பரிகாரச்செலவு ஆயிரத்தைநூறு என்று லிஸ்ட் தந்தார் உப்பார்பட்டி கோபாலகுருக்கள். மொத்தமாய்த் தந்துவிட்டால், பரிகாரச் சாமான்கள் அத்தனையும் தானே தயாரித்துக் கொண்டு வந்துவிடுவதாகவும் ஒரு எளிய வழியும் சொன்னார்.

 

அவளோடு ஒரு வயசாளிப் பெண்மணி ஒருத்தர் வந்தால் போதும் எனவும் சொல்லி இருந்தார். வீரபாண்டி – ஈஸ்வரன் கோயில் ஆற்றங்கரைக்கு வரச்சொல்லி நேரமும் எழுதித்தந்தார்

 

ஆற்றில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தடுப்பணை ஓரமாய் ஒதுங்கிக் கிடந்த மணல் திட்டில் நாணல் புதரோரமாய் இடம் விரித்திருந்தார் குருக்கள்.

 

அம்மாச்சியோடு அவள் வந்திருந்தாள். வந்தவுடன் அவளை ஆற்றில் முழுகி எழுந்து வரச் சொன்னார். “வீட்லயே குளிக்கவச்சுத்தான் கூட்டிவந்தேஞ் சாமி..”என்றது அம்மாச்சி.

 

கைகால்களை மட்டும் அலம்பி வந்த அவளுக்கு, மல்லியப்பூ மாலை தந்து, கழுத்தில் போட்டுக் கொள்ளச் செய்தார். அவளது பக்கமாய் ஒரு முழ உயரத்தில் வாழைக்கன்று ஒன்றை மணலில் நிறுத்தி வைத்திருந்தார். அதன் கழுத்திலும் ஒரு மல்லியப்பூ மாலை தொங்கியது.

 

”ஒன்னோட மாங்கல்ய  பாக்கியம் நீடிக்க இந்த வாழைய உன்னோட மணாளனா ஏத்துக்கற..”  இந்த புருஷ மரத்தோட தியாகம்தான் ஒனக்கான திவ்ய மணாளனக் கொண்டுவந்து சேக்கும்… ஓகோன்ன கதவுத் தெறக்கும்… “ இன்னும் ஏதேதோ சொன்னார். அந்த வாழைக்கன்றைப் பார்க்க, அவளுக்கு பரவசமாயிருந்தது .அழகாய், அடக்கமாய், பவ்யமாய்.. இதுதான் புருச லட்சணமோ.. !

 

மாலைவாங்கி, தாலிவாங்கி, குருக்கள் கொடுத்த பிளேடால்,  கைநடுங்க அதனை லேசாக் கீறிச் சாய்த்த போதும் அவளுக்குள் அந்தக் கன்றின் மீதான மோகம் குறையவில்லை. அம்மாச்சி  ’ ஒப்பு ‘ வைக்க, அவளது பொட்டை அழித்தார் குருக்கள். பூவைப் பிடுங்கி, கூந்தலை கலைத்து அவளை ஆற்றில் மூழ்கி எழச் செய்து வீட்டுக்கு அனுப்பினார்.

 

“ தோசம் கழிந்தது “

 

அன்றிலிருந்து அவளுக்கு, வாழைக் கன்றை எப்போது பார்த்தாலும் அப்படி ஒரு பிரியம்..! அதன்மேல்.. சட்டென எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்வாள்.அதன் குளுமை உடலெங்கும் பரவுவதில், கலவி இன்பம் கிடைத்தது.

 

 

வழக்கம் போல, அவளோடு சண்டை போட்டு முடித்ததும், பரமசிவம் தானாய்ச் சோறு போட்டுத் தின்னத் தொடங்கினான். தொட்டுக் கொள்ள, செட்டியார் கடையில் வாங்கி வந்த ஊறுகாய் மட்டையை அவள் வாசலில் நின்றபடிக்கே வீசினாள். இடது கையில் கேட்ச் செய்து, பல்லால் பிரித்து நக்கிக் கொணடான்.

 

குட்டித்தூக்கதிற்குப் பிறகு, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பியவன், சட்டைப்பை காலியாயிருப்பதைக் கண்டான். “ ச்சே .. பீடிக்குக் கூடக் காஸ் மிச்சம் வெக்கெக் கூடாதா..இதுக்கு அவயம்னுதே சேப்ல காசே வெக்கிறதில்ல..” என்று முணங்கியவன், “தோசத்துக்குத் தோசம் மேட்சாகும்னு கட்டிவச்சாபாரு எங்காத்தா.. அவள செருப்பக் கொண்டிதெஞ் சாத்தணும். நல்லவேள   செத்துட்டா.” என உரக்கவே சொன்னான்.

 

அவளுக்கும் அது கேட்கத்தான் செய்தது. ஆனாலும், “என்னா..!” – என்று அவனை நிறுத்தினாள். “பக்கத்து வீட்டு நாக்யரு நாலஞ்சு நாளாச் சேட்டமில்லாமக் கெடக்காருபோல, சித்த என்னாண்டுதே ஒருவாத்த வெசாரிக்க வேணாமா..? “- என்றாள்.

 

“ஆரு வைத்தியரா..? ஊருக்கெல்லா லேகியம் குடுக்கிற மனுசெ.. என்னாத்த வெசாரிக்க.?” சொல்லியபடியே மாரிநாயக்கரின் வீட்டுக்குள் நுழைந்தான்.

 

வயிற்றோட்டம் போவதாய்ச் சொன்னார் நாயக்கர். முகத்தில் வாட்டமும் பேச்சில் அசதியும் நிழலாடின.

 

“ஒரு ஊசியக் கீசியப் போட்டு டக்குன்னு நிறுத்தலாம்ல. . படுத்தே கெடந்தா..?”

 

”எதையும் சட்டுனு நிறுத்தக்குடாது பரமசிவம்..,என்றவர் ,”அதென்னா தங்கமா வைரமா.. கசடுதான பரமசிவம்.,போகட்டுமே..!” –சிரித்தார் நாயக்கர்.

 

வாடிக்கையாய் வரும் மல்லியப் பூவை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள் அவ்ள்.

 

“பூவ ஏந்திக்கிட்டு நிக்காட்டி , சாமி ரூம்ல படத்துக்குப் போட வேண்டியதான..” – பரமசிவம் அவளை விரசினான்.

 

“அவரு சம்சாரம் போட்டாவுக்கு.!.” – திருத்தினாள் அவள்.

 

”உள்ரூம்ல இருக்கு ”     என்ற நாயக்கர், ”பழச மாத்திட்டுப் போடணும். இருக்கட்டும் நாம் போட்டுக்கறேன். “ என்றார்.

 

“பரவால்ல .. ஒரு நாளைக்கி நாம் போடுறேனே….என்றவள், “பயப்படாதிங்க ஒங்க பொண்ட்டி போட்டாவ நா முழுங்கீட மாட்டே..!” சிரித்தபடி ஆவலோடு உள்அறைக்குள் நுழைந்தாள் அவள். அந்த அறைக்குள் ஒரே ஒரு போட்டோ மட்டுமே ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

ஒரு முழ உயரத்தில் – நெற்றியில் குங்குமமும், கழுத்தில் மல்லியப் பூ மாலையுமாய் ஒரு வாழைக் கன்று.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top