“வால்”

0
(0)

சீதா விறுட்டென்று விடுதிக்குள் நுழைந்தாள். எதிரே எதிர்ப்பட்ட அந்த பணிபுரியும் மகளிர் விடுதி மேட்ரன் மேகலா, சீதாவைப் பார்த்து,

”என்னங்க சீதா இன்னிக்கு காலேஜ்க்கு போகலையா?

”இல்லை மேடம் தலைவலி! ஒரே ஃபீவரிஸா இருக்கு” என்று வார்த்தைகளை உதிர்த்து விட்டுக் கொண்டே விரைந்தாள்.

”ஓஹோ பூஜா ஹாலிடேஸில் டெய்லி நைட்ஸோ வா-” என்று கிண்டலித்து நக்கலாகக்கெக்கலித்தாள்.

மலத்தை மிதித்தது போல் உணர்ந்த சீதா அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் அறையைத் திறந்து சதவை ஓங்கி அறைந்து மூடிக் கொண்டாள்.

“ச்சீ! இந்தப் பெண்கள் இப்படித்தான் கொஞ்சங் கூட இங்கித மில்லாமல் அடுத்தவங்க சுகதுக்கங்களை கிளறி குளிர் காயற அரக்கத்தனம்” என்று முனங்கியவாறே, தனது கைப்பையை திறந்து வேதியியல் ஆய்வகத்திலிருந்து மறைத்து எடுத்து வந்த சயனைட்தூள் பொட்டலத்தை எடுத்து மேஜை மீது தனது பிரத்தியேக பயன்பாட்டுக்காக வைத்திருந்த சிறிய ஸ்டவ்வில் சிறிது நீரை கொதிக்க வைத்து விட்டு அமுல் டப்பாவை எடுத்து வந்து பால் கலக்கினாள். அப்பாலில் சீனியை சற்று அதிகமாக விட்டு கட்டியில்லாமல் கலக்க கலக்க, அந்தப் பவுடர்பாலின் வாசனையோடு முந்தைய நாட்களின் நினைவுகள் வட்டமிட்டு வந்தன.

ஆவணி இறுதியில் நடந்து முடிந்த தன் கல்யாணத்திற்கு எடுத்த பதினைந்து நாட்கள் விடுப்பு கழிந்த பின் கல்லூரிக்குச்சென்று விட்டவள் அந்த நவராத்திரி விடுமுறைக்குத்தான் தனது கணவனது வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

கணவன் ராம்குமார் தஞ்சையில் அரசுத்துறை ஒன்றில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றுகின்றான். சீதாவோ கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் வேதியியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறாள்.

நங்கை நாத்திகளின் விசாரிப்புகளும், கணவனது பார்வையுமாய் மாலை நேரம் கழிந்தது; இரவு வந்தது.

“சீதா-ராம் குமார் ஆஹா எவ்வளவு அருமையான பொருத்தம்” போன்ற கல்லூரி சகத் தோழியரின் தூப மொழிகளும், கிண்டல்களும், கணவன் என்ற புதுஉறவின் மயக்கமும், பிரிவும், தனிமையும் ……. எதிர்பார்ப்புகளோடு கணவனை நெருங்க வைத்தன!

படித்த படிப்பு தந்த துணிவுடன் கணவனருகே கட்டிலில் அமர்ந்தாள் மென்மையாக.

கணவன் ராம் கண்கள் குறுகுறுக்க முறைத்தான். இதைக் கண்டு சற்று பதறிய சீதா, தன்னைச் சமாளித்துக் கொண்டு ‘வெகுளித்தனமாய்’ நகைத்தவாறே……..

”என்னங்க அப்படி பாக்கிறீங்க? என் மேல கோவமா?

“இல்ல! சந்தோசம் பொத்துகிட்டு வழியுது!”

”என்னங்க…. உங்களுக்கு…..என்னங்க ஆச்சு?” என்றவாறே ஆறுதலாய் கணவனது நெற்றியை வலது புறங்கையால் தொட்டாள்.

தொட்டதும் சுருண்டிடும் கம்பளிப் பூச்சியைப் போல் சற்று விலகி, முகத்தை கோணலாய்ச்சுருக்கிச் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

”பிளீஸ் என்னங்க ஆச்சு! சொல்லுங்க …” ”ஒன்னுமில்ல!…… இந்த நடிப்புக்கும் பகட்டுக்கெல்லாம் குறைச்சலில்ல!”

என்னங்க? தயவு செஞ்சு தப்பு என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க…”

”ஆமா நீ லீவு முடிஞ்சு போகும் போதே, உங்க அப்பாவுக்கு மோட்டர் சைக்கிள் வாங்கித் தரச் சொல்லி லெட்டர் எழுதச் சொன்னேன்ல்ல…….? நீ எழுதினியா? தீபாவளி நெருங்கிகிட்டே வருதில்ல?

எரிந்து போன கம்பி மத்தாப்பு போல கறுத்து சீதாவின் முகம் சுருங்கி தலை தாழ்ந்தது.

“என்ன பேசாம இருக்கே?

“இல்லங்க இப்பதான் எங்களுக்கு யு.ஜி.சி. சம்பளம் தர ஆரம்பிச்சிருக்காங்க! இனி மாதம் 4000 வரை சம்பளம் கிடைக்கும். எப்படியும் 4 மாசத்தில் என் சம்பளத்திலேயே நல்ல பைக் ஒன்னு வாங்கிறலாம்..”

“இந்தா! அந்த யோசனை மசிரெல்லாம் நா ஒங்கிட்ட கேட்கலை….

”ஓ! எங்க பாதரின்லா வாங்கித் தந்த பைக்குன்னு சொன்னா என்னோட கலீக்ஸ் மத்தில எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கும்…. அதெல்லாம் நினைச்சுப் பாக்காம.. சும்மா பெரிய இன்ஜினியரோட ஒய்ப் ஒரு புரேபஸருன்று சொல்லிக்கிட்டா போதுமா? அகுக்குத் தகுந்த கௌரவம் …. அந்தஸ்து அது இதெல்லாம் உருவாக்கித்தர வேணாம்?

“ஏங்க நம்ம சம்பாத்தியத்தில நாமலே நமக்குத் தேவையான தெல்லாம் வாங்கிக்கிட்டா நமக்கு பெருமையா இருக்காதா? கௌரவமா இருக்காதா?’ என்று அழுத்தம் கலந்து மென்மையோடு கூறியபடி அவனுக்கு ஆறுதலாய் அவனது தோளில் கை வைத்தான்.

எதோ எச்சம் விழுந்தது போல் துள்ளிச் சீறியவனாய் “இந்தா கையை எட்றி! பெரிய இவ மாதிரி பக்கத்தில் வந்து தாஜா பண்ணா வந்துட்டா ஒரு பைக் வாங்கித்தர வக்கில்ல! பெரிய வியாக்கியானம் பேச வந்துட்டா.” குரைத்து குதறினான்.

”ஏங்க …பைக் வாங்கித்தந்தாதான் பொண்டாட்டியா?

”இந்தா எனக்கு சுத்தி வளைச்செல்லாம் பேசத் தெரியாது. தீபாவளிக்கு பைக் வாங்கித் தர்ரதுன்னா இங்க வா, இல்லாட்டி உங்கப்பன் வீட்டுக்கே போயிரு” என்று விஷத்தைக் கொட்டி விட்டு கழிப்பறைப் பக்கம் பே னான்.

சீதாவுக்கு கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. கட்டிலுக்கு கீழே தலையணையை எறிந்து விம்மியவாறு அதில் முகம் புதைத்துக் கொண்டாள்.

வாத்து மண்ணுக்குள் தலையை மறைத்துக் கொண்டால் துரத்தி வரும் துன்பங்கள் தொலைந்தா போகும்?

தலையணையின் அணைப்பு கவலையையும் சோகத்தையும் ஜுவாலையிட்டு எரியச்செய்தது. அன்றிலிருந்து அந்த நவராத்திரி விடுமுறை நாட்கள் தனிமை அழுகையிலேயே ஊர்ந்தது. கொலுப் பார்க்க பக்கத்து வீட்டாரின் அழைப்பும், நங்கை நாத்தியரின் பரிகசிப்பும் கொழுப் பொம்மையை விடக்கீழான நிலையை உணர்த்தின.

விடுமுறைக்குக் கணவன் வீட்டிற்கு வந்து விட்டு இடையில், திடீரென தனியாய்த்தந்தை வீட்டிற்குச் சென்று அங்கு பூகம்பத்தை விதைக்க மனமில்லை. வடிகால் இல்லாது தனக்குத்தானே புழுங்கிப் புழுங்கிப் புரண்டாள். கவலைகள் – கொசுக்களாய்க் கெக்கலித்தன. ஒரு வழியாய் விடுமுறை கழிந்து விடுதலை தர … கல்லூரிக்குள் நுழைந்து அரை நாள் வகுப்பு எடுத்தாள்.

பாடத்தில் எண்ணமில்லை. நிழலாய் இருந்த கவலைகள் இனி எதிர் காலமே கருக்கு இருட்டாய் விசுரூபமெடுத்தன. அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அறைக்குள் முடிவோடு அடைக்கலமானாள்.

‘அப்பாவிடம் எப்படி மோட்டார் பைக்குக்காக இன்னும் இருபதாயிரம் ரூபாய் கேட்பது? அவர்படிக்க வைக்க வாங்கிய கடனைக் கட்டி முடிக்கு முன் தனியார் கல்லூரியில் வேலை பெறுவதற்காகக் கொடுத்த ஐம்பதாயிரம் கடனாக வந்து ஒட்டிக் கொண்டது. அந்த இரண்டு கடன்களை வட்டியோடு அடைக்கும் முன்னே கல்யாணம் குதிர்ந்து விட்டது.

சீதா கல்யாணத்திற்கு எவ்வளவு மறுத்தும் வயது வந்த தங்கைளுக்கு தடங்கலாக இருக்கக் கூடாதென்ற அப்பாவின் கெஞ்சலுக்காக கல்யாண செக்கில் பூட்டப்பட்டாள், இந்த நேரத்தில் அப்பா பழைய கடனை அடைப்பாரா பைக் வாங்கித் தருவாரா? இல்ல தங்கச்சிகள் கல்யாணம், தம்பி படிப்பு, குடும்பம் அது இதுன்னு பார்ப்பாரா?…..

இந்த லட்சணத்தில் …. சம்பளத்திலிருந்து ஒரு பைசா கூடஅப்பவுக்கு கொடுக்கக்கூடாதென்கிற கண்டிசன்வேற ..

ச்சே …. என்ன மனுசங்க இவங்கெல்லாம் ஆம்பிளைன்னு சொல்லிக்கிறாங்க!

பிரியமாய் வளர்த்த அப்பாவும், பாசமான அம்மாவும் தங்கைகளும், தம்பியும், ராட்சசனாய் கணவனும், வீட்டாரும் மாணவியரின் சோக ஊர்வலமும் எண்ணத் திரையில் வரிசையாய்ப் படமோடி மறைந்தன.

கண்களை இறுக மூடி டம்ளரை வாயருகே கொண்டு சென்றாள்.

சயனைடின் மனம் மூக்கை அரித்துக் குமட்டியது. குமட்டலின் வயிற்றுப்புரட்டலில் வயிற்றில் வளரும் சிசுப்பிண்டம் தன்னை நினைவூட்டியது. விம்மினாள். வயிற்றை தாய்மையோடு தடவினாள். தனக்கு ஏற்பட்ட கதிதானே தன்பிள்ளைக்கும்? என்றவாறே மீண்டும் டம்ளரை வாயருகே கொண்டுசெல்ல வாந்தி பீரிட்டுக்கொண்டு வர வேகமாய் டம்ளரை வைத்துவிட்டு எழுந்தாள்.

டம்ளரை வைத்த வேகத்தில் டம்ளரின் கீழ் தரையில் ஒரு பல்லி சிக்குண்டு வால் துண்டிக்கப்பட்டு துள்ளிப்புரண்டது.

புரண்ட பல்லியின் வயிற்றில் வெண் முட்டைகள்! இருந்தும் வாழ்வுக்காக தப்பிஓடியது. துண்டிக்கப்பட்ட வால் துடிதுடித்துக் கொண்டிருந்தது.

சுவற்றின் மேல் ஏறவும் இறங்கவும் சரியான திசையில் திரும்பவும் உதவியாக இருந்த வால் துண்டிக்கப்பட்டும் வாழ்க்கைக்காகப் போராடி பல்லி ஓடிக்கொண்டிருப்பது.. சீதாவின் சிந்தனையில் ஒருமின்னல் மிளிர்ந்தது.

சீதாவின் பின்னால் ராம்குமார் என்ற வால் இல்லாவிட்டால் வாழ்வே இல்லையா என்ன? நாம் நம்மை நிலை நிறுத்தித் தனியே வாழ்ந்து காட்டி விட்டால்… அறுந்த வால்போல் முறிந்த உறவு வளராதா என்ன? அப்படியே இல்லாவிட்டாலும் நமக்கு வாழ்க்கைத்துணையாய் பிள்ளையும் லக்சரர்வேலையும், இல்லையா என்ன…?

சயனைட் கலக்கிய பாலை சாக்கடையில் ஊற்றலாமா என்று எண்ணி எழுந்த சீதா சற்று தயங்கினாள் சாக்கடையில் ஊற்றினால் எத்தனை கால் நடைகள் ……… உயிர்கள் ஏன் மனிதர்கள் கூடப் பாதிக்கப்படலாம்…….

நேரே கழிவறைக்குச் சென்று கழிவுத்துவாரத்தில் கொட்டி விட்டு முகத்தைக் கழுவி விடுப்பை ரத்து செய்து விட்டு கல்லூரிக்குப் போகத் தயாரானாள் சீதா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top