வார்த்தைப் பிழை

5
(1)

மார்க்கையன் கோட்டையிலிருந்து இரண்டு பெண்கள் வந்திருப்பதாகச் சொன்னார்கள். பெண்கள் என்றவுடனே மனசுக்குள் சுருக்கெனெ ஊசி ஏறியது. ’அந்த சித்தியாகத்தான் இருக்கும். உடன் வந்திருப்பது அவரது மகளாக இருக்கலாம்.

உடனே சித்தியும்–மகளும் மனத்தில் சித்திரமாய் உருவக படுத்தும் பிரயாசை எழுந்தது. அவர்களைச் சந்தித்து ஆண்டுகள் பல கடந்திருந்ததால் சித்திரம் முழுமை பெறாமல் தத்தளித்தது. சித்தி மட்டும் பழைய – இளமைக்கால – தோற்றத்தில் வந்தார். மகள் … பிடிபடவில்லை.

சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கிடுகு பந்தலின் கீழ்  பிளாஸ்டிக் சேர்கள் ஒழுங்கற்ற வரிசையில் தாறுமாறாகக் கிடந்தன. கிடுகுப் பந்தலிலிருந்து துளைத்துவந்த சூரிய ஒளி. வெளிச்சப் புள்ளிகளை விதைத்திருந்தது. வாசலில் கட்டியிருந்த மாவிலைத் தோரணம் தலையில் உரச, குவியலாய்க் கிடந்த செருப்புகளை காலில் தள்ளி ஒதுக்கிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

வீடு குளிர்ந்து கிடந்தது.

அந்த பகல் வெளிச்சத்திலும். மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன். ஆட்கள் வருவதும் போவதுமாய் வீடு குலுங்கிய வண்ணம் இருந்தது.

இரண்டாம் கட்டு அறையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பக்கத்தில் தனம் அக்கா ஒருகாலை குத்திட்டு நிலைத்த கண்களோடு உட்கார்ந்திருந்தது.

”அண்ணே..” – கலங்கிய கண்களோடு சித்திமகள் அழைத்தது, உடனிருந்த திருப்பூர் மதனியும் ஏறிட்டுப் பார்த்து தன் வருகையை பதிவு செய்தது. சித்தி வரவில்லை. முடியாமல் இருப்பதாய் கேள்வி.

‘வாம்மா… வாங்க மதனி..’ – பக்கமாய் அமர்ந்தேன்.

‘ஒருவாத்த தாக்கல் சொல்லி விடலியேண்ணே.’ – கையை யாசிப்பதுபோல ஏந்திச் சொன்னவிதம் எனக்குள் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுவேட்டிசட்டையும் மொட்டைத்தலையுமாய் வந்து போய்க் கொண்டிருந்த தம்பிகள் கணநேரம் நின்று நகர்ந்தனர்.

‘மார்க்கயன்கோட்ட சித்திமக.’ – என அவர்களிடம் அறிமுகம் செய்வித்தேன், அந்த இடைவெளி ஒரு ஆசுவாசம் கொள்ளத் தேவைப்பட்டது.

ஒன்றுவிட்ட சொந்தம்.. போக்குவரத்து அதிகமில்லாததால் தம்பிகளிடம் ஒருதிணறல் இருந்தது. ஆனாலும் அருகில் வந்து நின்று, ’நல்லாருக்கீகளா…” என்று பொதுவாய் விசாரித்து சமாளித்தார்கள்.

‘இது ஜோதி அண்ணந்தான, பிரபு அண்ணன ஒருக்கா ப்ஸ் ஸ்டாண்ட்டுல வச்சுப் பாத்திருக்கேன்.. சின்னவெம் பேரு வெங்கடேசந்தான…’ – சித்திமகள் அத்தனை பேரையும் ஆச்சர்யப் படத்தக்க வகையில் சொல்லி, எங்களை வெட்கப்பட வைத்தது.

அம்மாச்சி உயிருடன் இருக்கும் பொழுது அக்காளையும் என்னையும் பலமுரை மார்க்கையன் கோட்டைக்கு கூட்டிப் போயிருக்கிறது. அதன் பிறகு அம்மாவோடு ஓரிருமுறை. கடைசியாக சித்திமகளின் கல்யாணத்திற்கு பெண்வீட்டார் சார்பாக வேனில் மணப்பெண்ணோடு பயணித்து கல்யாணத்தில் கலந்து கொண்டதாக ஞாபகம்.  .

அம்மாவும் சித்தியும் ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள். ஒரேஊர், ஒரே தெரு, தவிர படித்ததும் ஒரே பள்ளிக்கூடம். அம்மாவுக்கு உடன் பிறந்தோர் யாருமில்லை. சித்திக்கு ஒருஅக்காவும், ஒருதம்பியும் உண்டு. அக்காவை குமுளியில் நகைக்கடைக்காரருக்கு கட்டிக் குடுத்திருந்தார்கள். தம்பி, விவசாய வேலைகளில் தாக்குப்பிடிக்க முடியாமல், திருப்பூருக்கு குடும்பத்தை மாற்றிக்கொண்டார். சித்தியின் கணவர், மார்க்கையன் கோட்டையில் பெரியசம்சாரி. வாழைத் தோட்டமும் வயல் விவசாயமும் இருந்தது. மூத்தது பெண்ணாய்ப் பிறந்திட, இரண்டாவது ஆண் குழந்தை வேண்டுமென சபரிமலை அய்யப்ப்ன் கோவிலுக்கு மாலைபோட்டு மலையேறினார். அவரது ஆசைப்படியே குழந்தையும் பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தையைப் பார்க்க முடியவில்லை. சித்தி நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும்போது வாழைத்தோட்டத்தில் பாம்பு கடித்து சித்தப்பா இறந்து போனார்.

அந்தநேரம் சித்தியின் அக்கா, தானென்று நின்று தங்கையின் குடும்பத்தை காபந்து செய்திருக்கிறார். பிள்ளைகள் தலையெடுக்கும் வரை, அக்கா-தங்கை இரண்டு குடும்பங்களும் எந்தப் பிரிவினையு மில்லாது இருந்திருக்கின்றனர். பிள்ளைகள் ஆளானவுடன், அவரவர்க்கான அலுவல்கள், ஆவலாதிகளில் ஒரு இடைவெளி. அந்த காலகட்டதில்தான் சித்தி சொந்தக்காலில் நிற்கிறேனென்று வயதுக்குவராத மகனை நம்பி வயலையும், வாழைத்தோட்டத்தையும் காவு கொடுத்து இருக்கிறார். அன்றுதான் மார்க்கையன் கோட்டை மிராசுதார் வீட்டுப் பிள்ளை, சின்னமனூர் பலசரக்குக் கடைக்கு கணக்கெழுதப் போனான்.

அந்தநாளில்தான் அக்கா-தங்கை உறவில் விரிசல் விழுந்தது. இத்தனை காபந்து செய்தும், தனக்கு மதிக்கவில்லை என அக்காவும், அறியாப் பிள்ளைகளோடு அலைக்கழிந்த காலத்தில் ஆதரிக்காமல் விட்டாரென்று தங்கையும் உள்ளுக்குள் குமைந்ததில் குடும்பங்களுக் கிடையிலான போக்குவரத்து குறைந்து போனது.

அம்மாவைப்பற்றி விசாரித்தது சித்திமகள்.

’ஒருமாசமாத்தே முடியாம இருந்திச்சு.. அதும், இந்த நாலு நாள்தே சாப்பாட்டு அளவே, கொறஞ்சிச்சு.. கடேசி வரைக்கிம் காப்பியக் கொண்டா, தண்ணியக் கொண்டான்னு கேட்டு வாங்கித்தே சாப்பிட்டுகிட்டிருந்திச்சு. திடீர்னுதா.. உசிர் போச்சு… யாருமே நம்பல‘ – தனம் அக்கா எல்லோரிடமும் சொல்லிய அதே வாசகத்தை சித்திமகளிடமும் ஒப்பித்து முடித்தது.

’ஒரு.. மாசமா..? ‘ எனத்துவங்கிய சித்திமகள், ’கடசீல மொகத்தக் கூடப் பாக்க முடியாமப் போச்சே ண்ணே ’ – என அங்கலாய்த்தது.

‘எனக்கு தாக்கல் தெரிஞ்சும் நா வரமுடியலியே பிள்ள….” – மதனியும் தன்பங்கிற்கு சொல்லிமுடித்தது.

“நீங்க திருப்பூர்ல இருந்தில்ல வரணும். நா இங்கன பக்கத்தில இருந்தும் பாக்க முடிலியே அத்தாச்சி..” – மறுபடி மறுபடி மருகியது.

“மார்க்கையங்கோட்டையில இருந்தெல்லா ஆள் வந்திருந்தாங்களே..”  – இளையவனின் சம்சாரம் சொன்னது.

’ம்.’ என ஆமோதித்த சித்திமகள், “முந்தியெல்லா தோட்டிகிடட, இன்னார் இன்னாரின்னு சீட்டெழுதிக் குடுத்து வீட்ல சொல்லச் சொல்லி ஆள் அனுப்பிச்சு விடுவாக, அவனும்  கூலிக்காக அல்லா வீடும் சொல்லி வருவான். இப்ப.. இந்த செல்போன் வந்ததால நம்பர் இருந்தாத்தே..  இல்லாட்டி செரமந்தே.”

சொல்லிவிடாத எங்கள் குற்றத்தை மறைத்து அத்தனையையும் தன்மேல் சுமத்திக் கொண்டது.

’இப்ப எல்லாமே போன்லதான நடக்குது. தெரிஞ்சவங்க.. பக்கத்தில இருக்கவங்கதே.. அங்கங்க சொல்லிக் கூட்டி வரணும். கேத வீட்டுக்கார வுகளே அல்லாருக்கும் சொல்லமுடிமா..? ந்தா, நாங்கள்..லா அப்பிடித்தே எங்க வகைல நாங்கதே அல்லர்க்கும் சொல்லி கூட்டிட்டு வந்தம்.“ – உப்பார்பட்டி பெரியம்மா நீட்டிமுழக்கிச் சொன்னது.

என்னதான் இருந்தாலும் குறிப்பிட்டு தகவல் சொல்லி இருக்க வேண்டும் என நான் ஒத்துக் கொண்டேன். ‘மன்னிச்சுக்கம்மா’ என்கிற வார்த்தை மட்டும் சொல்ல வாய் வரவில்லை.

அம்மாவும் அந்த சித்தியும் உறவுமுறைகளை மீறிய அத்தனை அன்யோன்ய நெருக்கம். ‘பிச்சையக்கா’ என்று அம்மாவை சித்தி அழைக்கும் வார்த்தையில் ஒருவித நேசம் வழியும். எங்களையும் கூட ‘என்னாங்கடா அய்யா’ என்றுதான் அழைப்பார். ‘எங்க அக்கா பிள்ளீக.. அல்லிநாரத்துல இருக்குல..’ என்றே எல்லோரிடமும் அறிமுகம் செய்விப்பார். அவரது பிள்ளைகளும் அதுபோலத்தான். அம்மாவை ‘அல்லிநகரத்துப் பெரிம்மா ‘ என்றே கூப்பிடுவார்கள். கூடப் பிறக்காத குறைதான். தம்பிகளூக்குத்தான் சித்திவீடு ஞாபகம்வர  வாய்ப்பில்லை. எனக்கும் அக்காவுக்கும்தான் அதிக பரிச்சயம். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் இங்கேதான் முதல் தகவலைத் தெரிவித்திருக்கும்.

“இந்நேரம் எங்க பெரிம்மா இருந்திருந்தா மொத தாக்கல் சொல்லி விட்ருக்கும்..” – என்னுள் ஓடிய அதே எண்ணம் சித்தி மகளின் வாய் வார்த்தையாய் வந்தது. சொல்லிவிட்டு அது சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டது. அந்தக் கணத்தில்தான் ஒரு வெறுமையினை என்னுள் உணரமுடிந்தது. ’பெரியாள் வேணுங்கறது இதுதானோ’ கண்கள் குருடாகிப் போனதுபோல ஒரு இருள் தோன்றி மறைந்தது. அம்மாவை ’அமர்த்தி’ வைத்திருந்த இடம் நோக்கி கண்கள் நகர்ந்தன. தரையில் சாணமிட்டு புள்ளிக்கோலம் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு மனைப்பலகை கிடத்தி அதன்மேல் அம்மா உயிர்பிரிந்த கணத்தில் உடுத்தியிருந்த சேலையும் ரவிக்கையும் வைக்கப்பட்டி ருந்தன. அம்மாவின் கண் கண்ணாடியும் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியும் உடனிருக்க, அருகே ஐந்துமுக குத்துவிள்க்கு சுடர்விட்டு எரிந்து, அம்மாவின் புன்னகையைப்போல பிரகாசம் கொண்டிருந்தது.

அக்கா குமுறிவந்த அழுகையை ஒருகேவலோடு அடக்கி, மூக்கு சீந்தி, கண்களைத் துடைத்துக் கொண்டது. உணர்ச்சிமயமான அந்தச் சூழலைப் புரிந்து கொண்ட திருப்பூர் மதனி, “சரி என்னிக்கும் எல்லாரும் ஒரேமாதிரியே இருந்திர முடியுமா… பச்சஎல பழுக்கணும், பழுத்த எல உதிரணும்.. அப்பத்தான அடுத்த எல புதுசா தழைச்சு வரமுடியும்..அம்மா அம்மான்னு சொல்லிட்டே இருந்தா நாம என்னிக்கிப் பெரியாளா ஆகறது..?  இன்னிக்கிருந்து மாறிக்கிட வேண்டியதுதா..”

அந்த வார்த்தைகள் அனைவரையும் ஆற்றுப்படுத்துவதாய் அமைந்திருந்தது. சித்திமகள் உட்பட எல்லோரும் தலையசைத்து ஏற்றுக்கொண்டார்கள்.

“காப்பியா.. கூல்ட்ரிங்ஸ்சா..?” – சின்னவனின் மனைவி வந்து கேட்டது.

“மதியம் சாப்ட்டீகளா..? கடைல வேணும்னா சாப்பாடு வாங்கி வரச் சொல்லவா.?” – தனம் அக்கா கேட்டது.

“சாப்பாடெல்லா வேணாம்க்கா.. விருந்துக்கா வந்திருக்கம்.. காப்பியே போதும் அத்தாச்சி..” –  என இரண்டுபேருக்கும் பதிலைச் சொன்னது சித்திமகள்.

அவர்கள் சாப்பிடவில்லை எனத்தெரிந்தது. சாப்பிடவும் மாட்டார்கள் என்பதுவும் உறுதியாகப் புரிந்தது. என்னசெய்ய…

’அதுக்காக பசியோட எப்புடிம்மா அனுப்பறது..?” அம்மா வீட்டுக்கு வந்த யாரையும் ஏதாவது சாப்பிட வைக்காமல் அனுப்பாது, என்ன சொல்லி மறுத்தாலும் திருப்பித்திருப்பிப் பேசி சரிக்கட்டிவிடும். அம்மா அவ்ர்களை கெஞ்சுவதைக் கண்டு கடுப்பாகி ’அவுக சாப்புடாட்டி கால்ல விழுந்துடுவ போல’ என நானும் தம்பிகளும் பரிகசிப்பதுண்டு. இங்கே சித்திமகள் சாப்பிட்டு வராத நிலையிலும் சாப்பாட்டை மறுக்கையில் கையறுநிலை உணரமுடிந்தது. இதைத்தான் அம்மா ஒவ்வொருவரிடமும் கண்டிருக்குமோ.. “ நீ சாப்பிடலேங்கிறப்ப எங்களுக்குச் சங்கட்டமா இருக்கில்லம்மா..” –  என பதிலளித்தேன்.

”உண்மையிலயே பசியில்லண்ணே..  வாரப்பதே சாப்ட்டு வந்தே.. தேவை..ன்னா எங்க பெரிம்மாவப் போல நானே கேட்டு வாங்கிச் சாப்பிடுவே..ண்ணே” – என அம்மாவின் நினைவுச் சரடு ஒன்றை உருவிப் போட்டது.

”கேப்ப் புட்டும், சோளக்களியும் செஞ்சு தரச்சொல்லி மெனக்கிட்டு ஒருநாள் தங்கி இருந்தே எவ்வீட்ல சாப்பிட்டுப் போவாங்க.. ’எங்க பக்கமெல்லாகளி’ங்கற வாத்த அத்துப் போச்சு, மலரு.. எந்தப் பொம்பள இப்ப ஒரல்குத்துரா, எவ ,திருகபோட்டு திரிக்கிறா.. ’ ம்பாக “ என்று சொன்னதன் பிறகே, சித்திமகளின் பெயர்

’மலர்’ என்பது ஞாபகத்திற்கு வந்தது.

“ஆமா கேப்ப்க்களியுங்கூட அத்தைக்கு ரெம்பப் பிரியம்..சாகறதுக்கு நால் நாளைக்கி மிந்திகூட களிக்கிண்டி கூட்டுச்சாறு வச்சுக்குடுக்கச் சொல்லிசாப்பிட்டாங்க.” எனது மனைவியும் தனது இருப்பை காட்டிக் கொண்டாள்.

அதனைத்தொடர்ந்து, பல சம்பவங்கள்… அம்மாவின் தயாள குணம், குழந்தைகள் மீதான பாசம், உறவுகளுடனான பற்று, அவரது தனித்த ஈடுபாடு, அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பேணுதல்..என, ஆளுக்காள் பேச, மலர் என்னிடம் கண்ணோடு கண்வைத்ததுபோல  தணிந்த குரலில் கேட்டது.

“குமாரண்ணே வந்திருந்திச்சா..”   கிசுகிசுப்பாய்க் கேட்டுவிட்டு தானே பதிலும் சொல்லிக் கொண்டது. ”வந்திருப்பாக….”  – உடனே முகத்தில் சோகம் கவிந்தது.

குமார் – மலரின் பெரியம்மாவின் மகன். குமுளிக்கார பையன். அக்கா-தங்கை குடும்பத்தில் பேச்சுவார்த்தை இருந்தபொழுது. இரண்டு குடும்பத்திற்கும் மூத்தமகனாய் இருந்து எல்லா காரியங்களையும் பொறுப்பாய் பார்த்தவன். அப்பாவுக்கு உதவியாய் நகைக்கடையிலும் வியாபாரம் பார்க்கிறான். குடும்பங்களுக் கிடையிலான மனஸ்தாபத்தின் போது அவனது போக்குவரத்தும் குறைந்திருந்தது. ஆனாலும், மல்ரின் உடன்பிறந்த அண்ணன் ஒரு சாலைவிபத்தில் சிக்கிக் கிடந்த சமயம், எல்லாவற்றையும் மறந்து முதல் ஆளாய் ஓடிவந்து நானென நின்றான். தீவிர சிகிச்சையில் பலனில்லாமல் அவன் இறந்துபோனபோதும், மலருக்கு சித்தி  பார்த்து வைத்த மாப்பிள்ளைக்கே மணமுடித்து வைத்து,  முதல் குழந்தை பிறக்கிறவரை வந்துபோனவன், அதன் பிறகு .. என்ன ஏதென்று விசாரிக்கக் கூட இல்லையாம்.

“யே..ன்.. மறுபடி எதும் பிரச்சனையா..? “

அம்மா இருந்த காலத்தில் பலர் கேட்பதுண்டு.

“எல்லாமே மனசுதே.. சொல்ற மனசு.. கேக்குற மனசு.. ரெண்டுலயுமே குழப்பமில்லாம இருக்கனணும் இருந்தா எல்லாமே நால்லாத்தே இருக்கும். மனசே பொரண்டு கெடக்குறப்ப.. கேக்குற வார்த்தையும் சொல்ற வார்த்தையும் கொழம்பி பிழையாத்தாம் மாறும். வார்த்த பிழையாச்சுனா வாழ்க்கையும் பிழையாயிரும்ல.. அதுதே..”

“வந்திருந்தான்  மா..”

’பெரீப்பா …. பெரீம்மா..?”

“ எல்லாருந்தே..“

”பெரீம்மாக்கு எதொ கண்ணுல ஆப்பரேசன் பண்ணீருந்தாங்களாமே..? “

“ அப்பிடியா, அது தெரிலியே..“

“ நல்லார்க்காங்களா..? ‘

“ ம் “

“ப்ச்.. அன்னிக்கே வந்திருந்தா அல்லாரையும் பாத்திருக்களாம்..ரெண்டு வாத்த பேசி இருக்கலாம்..”  – மலரின் கண்களில் நீர் துளிர்த்தது. “ ’’எனக்கு அப்பா இல்ல, ஒடம்பொறந்த அண்ணெங்காரனும் அல்ப்பாயிசுல போய்ச்சேந்துட்டான்.. அம்மா இருந்தும் இல்லாக்கொற.. அதால எம் புருசெ ரெம்ப ஆடுறான் ..ண்ணே எனக்கு காசுபணம் வேண்டா ம்.. ண்ணே சொந்தம்னு சொல்லி ரெண்டுபேர் வீட்டுக்கு வந்துபோனாப் போதும் எனக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும். அந்தாளுக்கும் ‘கேக்க ஆளிருக்காங்கன்னு ஒரு பயமிருக்கும். .. குமார் அண்ணனப் பாத்தாச் சொல்லுங்க..ண்ணே..“

முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதது மலர். அம்மாவை நினைத்து அழுவதாக எல்லோரும் மௌனம் காத்தார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “வார்த்தைப் பிழை”

 1. SathyaRamaraj

  கண்ணீர் வரவழைத்து விட்டது கதை.ஒரு பெண்ணின் உணர்வுகளை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விடுவது ஆகப்பெரிய வரம்.வாழ்த்துகள் சார்!

 2. “பச்சை இலை பறிப்பதும் பழுத்த இலை முழுவதும் தானே வாழ்க்கை.”
  வாழ்வியல் ரகசியத்தை எதார்த்தமாக சொல்லும் கிராமிய மக்களின் பேச்சு வழக்கில் அருமையான நடை.
  “காசு பணம் வேண்டாம்ணே…. ஒரு ஆறுதலுக்கு குமார் அண்ணணெ வந்து போக சொல்லுங்க,” என்று உறவுக்காக ஏங்கும் ஒன்று விட்ட தங்கை.
  இறப்பு வீட்டில் பிரிந்த சொந்தத்தை சேர்த்து வைக்கக்கோரி அழும் காட்சி, பெண்களின் மென்மையான மனநிலையை பிரதிபலிக்கும் அருமையான கதை.

  வாழ்த்துக்கள் தோழர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: