வார்த்தைகள்

5
(1)

சிம்னி விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கூரை இடுக்குகள் கூரை இடுக்குகள் வழியாய் உள்நுழைந்த காற்று விளக்கைத் தொட்டு விளையாடியது. கூச்சப் பட்டு அப்படியும் இப்படியும் ஆடியது சுடர்.

“இந்த்தக் கூச்சம் கூட நம்மளுக்கு இல்லாமப் போச்சு” என்றாள் சரசு. சடையை முடிந்துகொண்டிருந்த பசுங்கிளி முகத்தைத் திருப்பாமலேயே ‘என்னக்கா செல்ற’ என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினாள்.

“காத்து தொடுது: தீபம் விசும்புது பாத்தியா?”

லேசாகச் சிரித்தாள் பசுங்கிளி. “விசும்புறதுக்குக் கூட நமக்கு லவுதம் இல்லாமப் போச்சுங்குறியா?”

சிரிக்கணும்போல் இருந்தது. உதடு விரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

“நம்ம பொழப்ப நாமதான் தொலச்சுட்டமேக்கா.” பசுங்கிளியின் முகத்தில் சோகம் கப்பியது.

“தொலச்சுட்டம்குறதவிட தொலக்ய வச்சுட்டானுக பாவிக.”

பசுங்கிளி ஒன்றும் பேசவில்லை. கைகளை மேலே உயர்த்தி உடம்பை முறுக்கினாள் சரசு. ‘”மேலெல்லாம் வலிக்கிது.”

“வருஷம் முன்னூத்தறுவத்தஞ்சு நாளும் வேல: ஒருநாக்கூட ரெஸ்ட் இல்லாம……”

‘விடுபடணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

முனியப்பன் நினைவுக்கு வந்தான். அவன் வகுத்துத் தந்த திட்டம் தீக்கங்கு போல பளிச்சிட்டது. சுடப் போகிறதா, வெளிச்சம் பாய்ச்சப் போகிறதா என்று தெரியவில்லை. வெளிச்சம் வேண்டும்: நிச்சயமாக, நிச்சயமாக வெளிச்சம் வேண்டும்.

குடிசையை விட்டு வெளியே வந்தாள். நீண்டுகிடந்த வீதியின் மேற்குமுனையை ஏறிட்டுப் பார்த்தாள். முனியப்பனின் கால்நடை தெரிகிறதா என உற்றுக் கவனித்தாள்.

வீதியின் எதிர்ச்சாரியில் கிடந்த திண்டின்மேல் வாத்தியார் அமர்ந்திருந்தார். வெற்றிலைக் காவியேறிய உதடுகளைத் திறந்து “என்ன பொண்ணு” என்றார்.

சரசு அலட்சியமாகச் சொன்னாள், “ஒண்ணுமில்ல.”

தூரத்தில் ரேடியோச்சத்தம் கேட்டது. எம்ஜியார் பாடிக் கொண்டிருந்தார்.

 

‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காக்

கொடுத்தான்.”

 

தாளம் போட்டுக் கொண்டே பாடிய படகோட்டி எம்ஜியார் நினைவுக்கு வந்தார். அந்தத் தாளமும் ராகமும் மனசைக் கவ்வி இழுத்தன.

அப்போது இளம்பருவ வயசு: பருத்தி மில்லில் வேலைசெய்துகொண்டிருந்தாள். எம்ஜியாரை மானசீகமாகக் காதலித்தாள். ‘ஒருநாளைக்யாச்சும அவரோட கொஞ்சிக் கொலாவி…….’ கற்பனையில் மிதந்தாள். தோழிகளிம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து பேபானாள்.

கேஷியர் நாகேந்திரன் இவளோடு நெருங்கிப் பழகினான். எம்ஜியார் பற்றி நிறையக் கதைகள் சொன்னான். இவளின் கற்பனைகள் செழித்து வளர உதவிகள் செய்தான். இவள் கேட்காமலே சோப்பு, பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் வாங்கித் தந்தான்.

நாகேந்திரனோடு நெருக்கம் ஏற்பட்ட பின் அவன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்தாள்.

நாகேந்திரன் தினமும் அவளை தனிமையில் சந்தித்தான். அவள் அழகை வானளாவப் புகழ்ந்து பேசினான். புதுப்புது செண்டு வகைகும் நகப் பாலிசும் வாங்கித் தந்தான். தனக்கு சினிமா உலகப் பிரமுகர்கள் பலபேரை நன்கு தெரியும் என்றும் சரசுவை சினிமாவில் சேர்த்துவிட உதவி செய்வதாகவும் வாக்குறுதி கொடுத்தான்.

ஆசை அலைமோதியது. கட்டுக்கடங்காத கடலைப் போல கற்பனைகள் அலையடித்தன. சாவித்திரிபோல, கே ஆர் விஜயா போல ஒரு நடிகையாகி…….

மூச்சு வாங்கியது.

“பயப்பட வேண்டியதில்ல” என்றான் நாகேந்திரன். “ஒனக்கிருக்க அழகுக்கும் முகவெட்டுக்கும் சரோஜாதேவியவிட ஃபேமஸா வந்துருவ.”

கண்களை மூடினாள். தொடுவானம் கிட்டத்தில் வந்தது. சூப்பர்ஸ்டார் கைநீட்டி அழைத்தார்.

“ஒரே ஒரு படத்துல அவரோட நடிச்சாப் போதும்: உலக ஸ்டாரா மாறிடலாம்.” நாகேந்திரன் தனது வலிமையான வார்த்தைகளால் சரசுவின் மன அந்தரங்கத்தைத் தடவிக் கொடுத்தான்.

தயக்கங்களைக் கிழித்து எறிந்துவிட்டு அவள் சொன்னாள். “ஆகட்டும் நாகு.”

இன்னும் ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. எம்ஜியாரின் வேறொரு பாடல்.

 

அதோ அந்தப பறவைபோல பாடவேண்டும்.

 

வாத்தியார் திரும்பவும் கேட்டார். “என்ன பொண்ணு நின்னிட்டிருக்க? யாரையாச்சும்…..”

“நீங்கதான் சொன்னீங்க: டவுன்ல ஆளுங்கட்சிக் கூட்டம் நடக்குது: பெரிய பெரிய அரசியல்வாதிங்க வருவாங்க: லாட்ஜுக்குப் போக வேண்டி வரும்னு.”

“ஒரு பயலையுங்காணோம;: வந்தா மொதல்ல பணத்த வாங்கிடலாம். லம்பா ஒரு அமவுண்டு கெடக்யும்.” வெற்றிலை எச்சியைப் புளிச்செனத் துப்பினார். “அப்படிக் கெடச்சுச்சுன்னா ஒனக்கும் பசுங்கிளிக்கும் நானக்கி லீவு.”

லீவு என்ற வார்த்தையைக் கேட்டதும் மனம் துள்ளிக் குதித்தது. அது ஓர் அருமையான வார்த்தை. உடம்பையும் ஆன்மாவையும் குளிர்ச்சிப் படுத்தக் கூடிய அற்புதமான வார்த்தை.

ஒத்தடம் கொடுக்கிற மாதிரி மனசை நீவி விடுகிறது ‘லீவு’ என்ற வார்த்தை.

‘லீவு’ என்று ஒருமுறை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். நீட்டி நிமிர்ந்து படுத்துக் கெடக்கலாம்: கொளகொளப்பும் கசகசப்பும் துர்வாசனையும் இல்லாமல் வேறு வேறு விஷயங்களை நினைத்துக் கொண்டிருக்கலாம். வீட்டைப் பற்றி, ஊரைப் பற்றி, நாகேந்திரனை அடித்துக் கொல்லவேண்டும் என்பது பற்றி…….. பற்களை நறநறவென்று கடித்தாள்.

‘லீவு’ என்ற சொல்லும் ‘வாரியா’ என்ற வார்த்தையும் எதிரெதிரானவை. ஒன்று விடுதலைக்கு வித்திடுவது, இன்னொன்று அந்த விடுதலையை வெட்டி வீழ்த்திச் சாகவைப்பது. உலகின் மிகக் கொடூரமான வார்த்தை இந்த ‘வாரியா’ என்பதுதான்.

தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. முனியப்பனாய் இருக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு உற்றுப் பார்த்தாள்.

நாகேந்திரனிடம் கூறிய அந்த முக்கியமான வார்த்தை மீண்டும் நினைவுக்கு வந்தது. “ஆகட்டும் நாகு” என்ற அந்த வார்த்தை. அந்த வார்த்தையைச் சொல்லிய அந்த நாளும் ஞாபகத்துக்கு வந்தது. சின்னக் கல் தடுக்கி பெரிய மோட்டார் கவிழ்ந்து போன மாதிரி அவள் வாழ்க்கை ஆகிப் போனது. அந்த வார்த்தையை மட்டும் அன்று உச்சரிக்காமல் இருந்திருந்தா…….?

மறுநாளே நாகேந்திரன் அவளை அழைத்துக் கொண்டு போய் பஸ் ஏறினான். மதுரைக்குப் போய் பிறகு அங்கிருந்து ரயில் ஏறி மெட்ராஸ் போகவேண்டும் என்றான்.

“பணம்?” அப்பாவித் தனமாகக் கேட்டாள் சரசு.

“அத நாம்பாத்துக்கிறேன்.”

மாலையில் பஸ் ஏறி நடுச் சாமத்தில் ஏதோ ஓர் ஊரில் இறங்கினார்கள்.

“மதுரைக்கிப் போகலியா?”

“போகலாம்” என்றான் நாகேந்திரன். “பசிக்கிது: சாப்பிட்டு வேற பஸ்ல போவோம்.”

புரோட்டாக் கடைக்குக் கூப்பிட்டுப் போனான்.

“வாப்பா நாகு” என்றான் புரோட்டா மாஸ்டர்.

சரசுவுக்கு ஆச்சர்யமாய் இருச்தது. ஏதோ ஓர் ஊரில் இருக்கும் புரோட்டா மாஸ்டருக்குக் கூட நாகேந்திரனைத் தெரிந்திருக்கிறது. பெரிய ஆள்தான் போலும்.

புரோட்டா போடுவதை உற்றுக் கவனித்தாள். துளியூண்டு மாவில் எவ்வளவு பெரிய புரோட்டா? மாவுருண்டையைத் தட்டி வீசிவீசிப் பெரிதாக்கிக் கொண்டே மாஸ்டர் கேட்டார், “தங்கச்சி யாரு?”

“சொந்தக்காரப் பொண்ணுதான்” என்றான் நாகேந்த்திரன். சினிமாவுல நடிக்யணும்னு ஆசப் பட்டுச்சு: கூட்டிட்டுப் போறேன்.”

“நல்ல செலக்‌ஷன்: நெறையப் பணங்கெடக்யும்.”

சரசுவுக்கு சந்தோஷமாய் இருந்தது.

‘நெறையப் பணம் கெடக்யும்’ என்ற வாக்கியம் அமிர்தமாய்ப் பாய்ந்தது. லட்சக்கணக்கில் கோடிக் கணக்கில் சம்பாதிக்கலாம்.

“அப்படின்னா ஸ்பெஷல் புரோட்டாவா” என்றார் மாஸ்டர்.

“எனக்கு சாதா புரோட்டா போதும்: தங்கச்சிக்கி ஸ்பெஷல்.”

சரசு ஸ்பெஷல் புரோட்டா சாப்பிட்டாள்.

ஒரு மாதிரியாய் வாசமடித்தது. நெஞ்சு கரித்தது. கண்களில் எரிச்சல்! தொண்டைக் குழியை யாரோ இறுக்கின மாதிரி இருந்தது.

திக்கினாள்: திணறினாள்: அதலபாதாளத்தில் குப்புற விழுந்தாள். “தண்ணி….தண்ணி.”

தண்ணீர் தரப்பட்டது.

குடித்தாள்.

கல்லை உருக்கி ஊற்றின மாதிரி கடினமாய் இருந்தது. அழுகல் வாடைவேறு. குடிக்க முடியவில்லை. வாந்தியெடுத்தாள்.

கண்விழித்த போது உடம்பு வலித்தது. எங்கோ ஒரு குடிசையில் மண் தரையில் கிடந்தாள். “நாகேந்திரா!” என்று கூப்பிட்டாள்.

“நாகேந்திரன் போய்ட்டான்” என்றது ஒரு முரட்டுக் குரல். அண்ணாந்து பார்த்தாள். வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு ஒரு முரட்டுப் பெண்! பாராங்கல் மாதிரி பெரிய உடம்பு.

“ஊருக்கு: உன்னிய ஐயாயிரத்துக்கு வித்துட்டு…….”

குபீரென்று நெஞ்சு எரிந்தது. ராத்திரி சாப்பிட்ட புரோட்டாவின் குமட்டல் வாசம் மூக்குத் தண்டிலிருந்து மூளைவரை ஏறி இறங்கியது. “அடப் பாவி” என்று அலறினாள்.

மீண்டும் கிறுகிறுப்பு! வானமண்டலம் உடைந்து வந்து முகத்தில் மோத மயங்கிச் சுருண்டாள்.

இரண்டு நாள் கழித்து மயக்கம் தெளிந்தது. உணர்வுகள் குபீர் குபீர் என சிலிர்த்தன. அழுகை முட்டியது: அம்மா, அப்பா, ஊர் எல்லாமே படங்களாய் நிழலாடின.

மூன்றாம் நாள் ஒரு முரட்டு மனிதர் வந்தார்.

“அவர்தான் வாத்தியாரு: வணங்கிக்கோ” என்றது பாறாங்கல்.

“வாத்தியார்ன்னா?”

“தெரியல?” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் அ வள். “நெறையப் பொம்பளைகளுக்கு வேல போட்டுத் தராருல்ல: அதனால அவரு வாத்தியாரு.”

வணங்கினாள். “நல்லாரு பொண்ணு” என்றார் வாத்தியார்.

அவர் பேச்சுக் கனிவாய் இருந்தது. “ஒனக்கு என்னென்ன சவுகரியம் வேணுமோ கேளு: செஞ்சு தாரேன்: நாளக்கிருந்து தொழிலத் தொடங்கலாம்.”:

“நான் சினிமாவுல நடிக்கத்தானே வந்துன்.”

“இதுவும் சினிமா மாதிரிதான்: ஒரு நடிகைக்கு அவ ஒடம்புதான் முதலீடு: ஒனக்கும் அழகான ஒடம்பு இருக்கு.”

நெஞ்சு வலித்தது. கண்கள் கலவரமடைந்தன. குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“என்னக்கா ரெம்ப நேரமா நின்னிட்டிருக்க?”

திரும்பிப் பார்த்தாள். பசுங்கிளி! “ஒண்ணுமில்ல: பழைய ஞாபகம்.”

“புரோட்டா நாத்தமா?”

லேசாகச் சிரித்தாள். “புரோட்டாவுல அது என்ன, கஞ்சாவா அபினா?”

“கஞ்சாதான். அதுதான காட்டமான மருந்து.”

ரேடியோச் சத்தம் அடங்கி இருந்தது. யாரோ பேசிக்  கொண்டிருந்தார்கள். முனியப்பனை இன்னும் காணவில்லை.

கூர்மையாகப் பார்த்தாள். கண்கள் வலித்தன. மனம் ஏங்கியது. இன்றுடன் இந்த நரக வாழ்க்கை முடியட்டும். நாளையப் பொழுது வேறுவிதமாய் விடியட்டும்.

முனியப்பன் வருவான்: ஆளுங்கட்சிப் பேச்சாளருக்கு ஒரு ‘குட்டி’ தேவை என்றபடி சரசுவைக் கைகாட்டுவான். இரவில் ஒரு லாட்ஜில் வைத்திருந்துவிட்டுக்  காலையில் கொண்டு வந்து விடுவதாகக் கூறுவான். ஐநூறோ ஆயிரமோ கைமாற முனியப்பனுடன் சென்று பஸ் ஏறி, தூரத்து ஊருக்கு ஓடிப் போய் வேறு ஏதாவது ஒழுக்கமான தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.

“என்ன தொழில் செய்யலாம்?”

“இந்த ஏரியாவுல திராட்சைத் தோட்டம் ஜாஸ்தி:  வட்டியாந்து டவுன்ல விக்யலாம். சின்ன அமவுண்டு கெடக்யும்.”

இறுக்கப் பட்டுக் கிடந்த தோள்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. கசங்கிக் கிடந்த மார்பகங்கள் நிம்மதியாய விம்மின. அமுக்கிக் கிடந்த பாறாங்கல்லை நகர்த்தித் தள்ளி விடுபட்ட மாதிரி உடம்பு சந்தோஷித்தது.

ஒருநாள் முனியப்பன் கேட்டான். “நாம சேந்து குடும்பம் நடத்தலாமா?”

இந்த வார்த்தையை அவள் எதிர்பார்க்கவில்லை. கண்களை மூடினாள். அவன் பிம்பத்தை வரவழைத்து தரிசித்தாள். ‘கணவன் என்ற வடிவம் அந்த பிம்பத்துக்குள் உருக் கொள்ளவில்லை. முதலில் அவன் ஒரு வாடிக்கையாளன்: அடுத்துப் பணம் செலவழித்துத் தன்னை விடுவித்த தெய்வம்.

“வேணாம்” என்றாள் சரசு. அடிவயிற்றில் இருந்து பெருமூச்சு பிறிட்டது.

“ஏன்” என்றான் முனியப்பன்.

பதில் சொல்லவில்லை. கண்கள் பனித்தன.

“அழுகுறியா?”

மந்தானையால் துடைத்துக் கொண்டாள். “மன்னிச்சுக்க முனியப்பா: புதுசாத் தொடுற ஒரு மனுஷன் எனக்கு வேணும்.”

அவன் முறுவலித்தான்.

“நீயும் ஒரு புதுப் பொண்ணாப் பாத்துக் கட்டிக்கோ: என்னோட புதுவாழ்க்கையும் ஒன்னோட புதுவாழ்க்கையும் தனித் தனியா……..”

அவன் எழுந்து நடக்கத் தொடங்கினான்.

மறுநாள்!

போனவனைக் காணவில்லையே எனத் திகைக்காமல் இவளாகவே கூடையைத் தூக்கிக் கொண்டு திராட்சைப் பந்தலை நோக்கி நடந்தாள்.

முனியப்பன் திராட்சை வெட்டிக் கொண்டிருந்தான்.

“ஏன் வீட்டுக்கு வரல?”

“வேணாம்னு தோணிச்சு: அதனாலதான்…..” ஓர் அன்னியனைப் போல தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

சந்தோஷமா, வருத்தமா என்று கணிக்க முடியாத உணர்ச்சிவௌளம் தொண்டையை அடைத்தது. கண்ணீரை அடக்கிக் கொண்டு பாளம் பாளமாய்த் தொங்கிய திராட்சைக் கொத்துகளை ஏறிட்டுப் பார்த்தாள் சரசு.

 

குமுதம்,. செப்டம்பர் 1985

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வார்த்தைகள்”

  1. மனிதர்களின் மனம் எவ்வளவு விசித்திரமானது! நெருங்கி வந்தால் விலகுவதும,விலகிச் சென்றால் நெருங்குவதுமாக இத்தகைய கண்ணாமூச்சி விளையாட்டுகளால் தான் வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாகக் கடந்து போகுமோ?!

    சத்யா ராமராஜ் உத்தமபாளையம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: