வானம் எல்லையில்லாதது

0
(0)

விடியற்காலையிலேயே முழிப்பு வந்துவிட்டது. முதலில் கேட்டது பால்க்காரனின் மணிச்சத்தம். அப்புறம் இருளோடு மெலிதாக வந்தது. பள்ளிவாசலில் ஓதும் சத்தம். இளம் குளிர் வீட்டுக்குள் வீசியது. வெளிச்சம் புகையென பரவி வர வர கண்களுக்குப் பொருள்கள் துலங்க ஆரம்பித்தன. முதலில் எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. அவன் படுக்கையில் படுத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அந்த விசில் சத்தம் கேட்டது… இரவு காவல்படையினரின் நீண்ட விசில் சத்தம்… திடுக்கிட்டான் அவன், உடனே வயிற்றைப் பிசைகிற மாதிரிஉணர்வு. முகமே மாறிவிட்டது. முகத்தைச் சுளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

நேற்று ராத்திரி பத்து மணி இருக்கும். அவன் பேங்கிங் சர்வீஸ் எக்ஸாமுக்காக தெய்வசிகாமணியிடம் புத்தகம் வாங்க, மாரிச்சாமியிடம் சைக்கிளை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். மார்க்கெட் ரோட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த போது போலீஸ்காரர் விசில் சத்தம் அவனுக்கருகில் பக்கத்திலிருந்து கேட்டது. அப்போது கூட அவனுக்கு ஒன்றும் நேரவில்லை. ரொம்ப இயல்பாய் திரும்பி விசில் சத்தம் வந்த திசையை நோக்கினான். ரெண்டு போலீஸ்காரர்கள் அவனைப் பார்த்து கீழே இறங்கும்படி கையைக் காட்டினார்கள். அவனுக்கு முதலில் எதுவும் புரியாவிட்டாலும் அனிச்சையாய் இறங்கினான்.

“இங்கே வா…”

சத்தத்திற்குப் பணிந்து போலீஸ்காரர்களின் அருகில் போனான்.

“சைக்கிளை இங்க ஓரமா நிறுத்து.”

அப்போது தான் அவனுக்கு சைக்கிள் லைட்டைப் பற்றி ஞாபகம் வந்தது. உடனே சைக்கிளின் முன்னால் குனிந்து டைனமோவைப் பார்த்தான். எரியவில்லை. உடனே கைககால்கள் நடுங்க ஆரம்பித்தன. முகமெல்லாம் வியர்க்க சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி பெடலைச் சுற்றினான். விளக்கு எரியவில்லை. பின்னால் பேட்டரி வயரைப் பிடித்து லேசாக ஆட்டினான். இப்போது எரிந்தது. உடனே படபடப்புடன்,

“சார்… சார்… லைட் எரியுது… சார், லேசா… வயர்கனெக்ஷன் விட்டிருக்கு.”

அவர்கள் அவன் பக்கம் திரும்பவில்லை. உடனே அவன் சைக்கிளை அவர்கள் பக்கம் திருப்பி பெடலைச் சுற்றி சைக்கிளில் லைட் எரிவதைக் காண்பித்தான். அவர்கள் பார்த்தாலும் பார்க்காத மாதிரி இருக்கவே அவன் மறுபடியும் மறுபடியும் சுற்றிக் கொண்டேயிருந்தான். அவனுக்கே திருப்தி ஏற்படும் வரை.

“அதெல்லாம் கேக்கமாட்டாங்க… ப்ரதர்…”

பக்கத்தில் குசுகுசுப்பு கேட்டது. திரும்பிப் பார்த்தான்; அவனை மாதிரியே நாலைந்து பேர் சைக்கிளை ஓரமாக வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்கள். இவ்வளவு நேரம் கவனிக்கவேயில்லையே. அவர்களும் அவனைப்போலவே பிடிபட்டவர்கள் தான். லேசாய் சோர்வு வந்தது. முதலில் இருந்த படபடப்பு தணிந்திருந்தது. பேசாமல் அவனும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் ஆக ஆக அடுத்து பிடிபடப்போவது யார் என்கிற ஆர்வம் கூடிவிட்டது.

ரோட்டில் சைக்கிளின் நடமாட்டம் குறைந்துவிட்டது. போலீஸ்காரர்கள் ரெண்டு பேரும் திரும்பி,

“இங்க வாங்க… எல்லோரும் அட்ரஸ் குடுத்துட்டு போங்க… காலைல வெஸ்ட் ஸ்டேஷன்ல வந்து ஆஜராகணும்…

தெரிஞ்சிதா…”

அவன் தயங்கி நின்றான். அவனுக்கு முன்னாலும் பின்னாலும் வந்தவர்கள் அட்ரஸ் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவன் கடைசியில் போய் நின்றான்.

“சார் லைட் எரியுது… வயர் விட்ருந்துச்சு… அதை கவனிக்கலை சார். இந்த ஒரு தடவை…”

“அட்ரஸ் கொடுத்துட்டு சைக்கிளை எடுத்துட்டுப் போறியா இல்ல… காலைல கோர்ட்டுல வந்து எடுத்துக்கறியா… என்ன செய்றே…”

அவன் அட்ரசைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு நேரே மாரிச்சாமியிடம் விஷயத்தைச் சொன்னான். உடனே மாரிச்சாமி,

“இதுக்குத்தான் நான் யார்ட்டயும் சைக்கிளே கொடுக்கறதில்லை…”

இதைக்கேட்டதும் குபுக்கென அழுகை வந்துவிட்டது. தலையைக் குனிந்து கொண்டான்.

“கரெக்ட் அட்ரஸ் கொடுத்தியா?”

“ம்…”

“ஏண்டா ஏதாச்சும் ஒரு அட்ரஸைக் கொடுத்துட்டு வரவேண்டிய தான… அவங்களுக்கென்ன தெரியவா போது.”

அவனுக்கு பெரிய சங்கடமாக இருந்தது. தனக்குக் கொஞ்சங்கூட சாமர்த்தியம் இல்லை என்று நினைத்தான். அதனால் தான் அவனுக்கே மாறி மாறி கஷ்டங்கள் வந்து கொண்டிருந்தன என்றும் இந்த நேரத்தில் நினைத்தது துரதிருஷ்டமானது. மெலிந்து குச்சியாய் வெளுத்துப் போயிருந்த அவனை யாரும் ஒரு மனுசனாய் மதிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கும் மேல் வேலைக்காக இன்னமும் பரீட்சைகளும், இண்டர்வியூக்களும் போய்க் கொண்டிருக்கிற அவனுக்கு எந்த விதத்திலும் அதிர்ஷ்டம் இல்லை. இல்லாவிட்டால், அவனுடன் படித்த செண்பகராஜ் சிங்கணன் எல்லோரும் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து விட்டார்கள். அவனுக்கு, அப்பாவின் அதிருப்தியான முகச்சுளிப்பும், அம்மாவின் சோகை பிடித்து வெளுத்த சோகமான முகமும், அண்ணனின் இளக்காரமான வார்த்தைகளும், தம்பிமாரின் அலட்சியமும் தான் கிடைத்த அனுபவங்கள். ரெண்டு வருடங்களாக அவனைக் காதலிப்பதாகச் சொன்ன வசந்தா இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இப்போது அவளுடன் டியூட்டோரியலில் வேலை பார்க்கிற கைலாசத்துடன் பழகுகிறாள். அது மட்டுமல்ல. அவனைப் பார்க்கிறபோது ‘ஒட்டடைக்குச்சி’என்று கிண்டல் பண்ணுகிறாள்.

அவன் தெருவிலே நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டான். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தான். சர்வீஸ் கமிஷன் புஸ்தகங்களாக வாங்கி திரும்பத் திரும்பப்படித்தான், ஒரு வெறியுடன்.

அன்று தெய்வசிகாமணி மதுரையிலிருந்து புதுசாய் ஒரு புத்தகம் வாங்கி வந்து படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னான். அதை வாங்கத்தான் புறப்பட்டுப் போனான்.

காலையில் போயிருக்கலாம் அவனைத்தான் துரதிருஷ்டம் பிடறியில் கைவைத்துத் தள்ளுகிறது. அவனுக்கு கண்களில் நீர் தளும்பிற்று. மனசு நீராகிவிட்டது போல உணர்ந்தான். தொட்டால் உடைந்து விடும். அவன் முகத்தைப் பார்த்துத்தானோ என்னவோ மாரிச்சாமி இறங்கிய குரலில்,

“காலைல ஸ்டேஷனுக்குப் போயிப்பாரு… அம்பது ரூபா ஃபைன் கட்டச் சொல்வான்னு நெனக்கிறேன்”என்றவன் ஒரு கணம் கழித்து,

“சரி பார்க்கலாம்”என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.

அவன் வீட்டை நோக்கி நடந்தான், மனசில் வெறுமை. ஏதுமில்லாத உணர்வு, யாரிடமாவது அழ வேண்டும் போல, மனசு விட்டு கதறி அழவேண்டும். அவன் எல்லா விஷயங்களிலும் அவமானப்பட நேர்கிற தன் காரணத்தைக் கேட்டு அழ வேண்டும். இப்போது அம்பது ரூபாய் வேண்டும். வீட்டில் சொல்ல முடியாது. தெரிந்தால் வீட்டில் இருக்க நீதமிருக்காது. வேறு யாரிடம் என்ன சொல்லி புரட்ட. யார் தருவார்கள் அவனுக்கு. நேற்று அப்பா ரயில்வே சர்வீஸ் கமிஷனுக்கு தபால் அனுப்ப கொடுத்த இருபது ரூபாய் இருக்கிறது. அதை வைத்துத்தான் ஏதாவது செய்யவேண்டும்.

எழுந்து உட்கார்ந்தவன் மாறி மாறி தலை முடியைக் கோதிவிட்டான். பல் தேய்த்துக் குளித்துவிட்டு சட்டைப் பையில் இருபது ரூபாயை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான். போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்ததுமே மனசு பட படவென்று அடித்தது. லேசான நடுக்கம் உடலெங்கும் பரவியது. சிவப்பு கலரில் கட்டம் கட்டமாக வரைந்த அந்தக் கட்டடம் எப்போதுமே பயத்தை ஏற்படுத்தியது. அருகில் நெருங்க நெருங்க வயிற்றைக் கலக்கியது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே யாரையும் காணவில்லை. அவனைப் பிடித்த போலீஸ்காரரின் முகத்தை ஞாபகப்படுத்தினான். நரை கலந்த பெரிய மீசை தான் முதலில் நினைவுக்கு வந்தது.

அவன் எதிரே இருந்த வேப்பமரத்தின் கீழே நின்றான். உள்ளே போக மனசு வரவில்லை. அந்தப் பிரதேசம் மயான அமைதியுடன் இருந்தது. இன்னும் வெயில் வராமல் மூடாக்காய் இருந்தது. காக்கைகளின் கரைச்சல் அலறலாய்க் கேட்டது.

அப்போதுதான் அந்த போலீஸ்காரர் சைக்கிளில் வந்து இறங்கினார். அவன் ஓடிப் போய் அவர் முன்னால் நின்று விஷ் பண்ணினான். அவர் வெறுமனே தலையை ஆட்டி விட்டு அவனை ஞாபகமில்லாத மாதிரி “என்ன”என்றார்.

அவன், “சைக்கிள்…”

“மத்தவங்களயெல்லாம் எங்க…”

“தெரியாது சார்…”

அவர் அவருடைய சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு ஸ்டேஷனுக்குள் படியேறினார். அவன் பின்னாலேயே போய்க் கொண்டே,

“படிச்சுமுடிச்சு அஞ்சு வருஷமாச்சி சார். இன்னும் வேல கெடைக்கல சார். வீட்ல சோறு போடறதே பெரிய விஷயம். இதில கோர்ட் பைன்னா, வீட்டை விட்டு துரத்திடுவாங் கசார். சைக்கிள் கூட என்னோடது இல்லை. வேறொருத்தர் கிட்டே வாங்கிட்டு வந்தது. நீங்க தான் தயவு செஞ்சி இந்த தடவை மட்டும் விட்றணும் சார் ப்ளீஸ். சர்வீஸ் கமிஷன் போடறதுக்காக வைச்சிருந்த பணம் சார். இதவைச்சிக்கிட்டு என்ன விட்ருங்க சார்… சார்…”

அவன் குரல் தழுதழுத்தது. ஒரு கணம் முன்பின் தெரியாதவர் முன்னால் அம்மணமாய் நிற்கிற மாதிரி அவமானம் பிடுங்கியது. அவன் தலையைக் குனிந்து கொண்டான். கண்ணீரை அடக்க சிரமப்பட்டான். அவர் ஒரு தடவை அவனை ஏறிட்டுப் பார்த்தார்! அவர் முகம் இளகியிருந்தது.

“என்ன படிச்சிருக்க…”

“பி.எஸ்.ஸி…”

‘பரீட்சையெல்லாம் எழுதறியா…”

“எழுதறேன் சார்…”

ஒரு கணம் பேசாமல் நின்றார். எதிரேயிருந்த வேப்பமரத்தை வெறித்துப் பார்த்தவரின் கண்களில் என்ன தெரிந்ததோ, இரக்கத்துடன் அவனைப் பார்த்து,

“நீ போய் அந்த ஆளுக்கு பத்து இட்லி மட்டும் வாங்கிக் கொடுத்துட்டுப் போ. சீக்கிரம் வேலைக்குப் போற வழியப்பாரு…”

குரல் இழைந்திருந்தது. அவர் கை காட்டிய திசையில் கறுப்பாய் ஒரு ஆள் முட்டங்கால்களைக்கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். உடனே திரும்பி,

“ரொம்ப தேங்ஸ் சார்…” என்று சொல்லிவிட்டு ஹோட்டலைத் தேடிப்போனான். போய்க் கொண்டிருக்கும் போது அவனுக்குத் திடீரென்று சற்று நேரத்திற்கு முன்னால் பார்த்த போலீஸ்காரரின் முகபாவம் நினைவுக்கு வர அவருக்கும் அவனைப் போலவே ஒரு பையன் வேலை தேடிக் கொண்டிருக்கலாமோ என்று யோசித்தான். உடனே நீண்ட பெருமூச்சு வந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top