வாஞ்சை

0
(0)

“கோழி வளர்க்கிறாளாம் கோழி! சீமையில் இல்லாத அதிசயக் கோழி..! இந்தக் குப்பத்தில் யாராச்சும் கோழி வளர்க்கிறாகளா? இவமட்டும் ஓவியமா கோழி வளர்க்கிறா! இந்தாப்பாரு வேலித்தென்னம் படலைக் கீழே தோண்டி தொளை போட்டு, வீட்டுக்குள்ள நுழைஞ்சு, கண்ட இடங்களில் எல்லாம் கழிஞ்சி அசிங்கம் பண்ணியிருக்கு! ஏக்கோழி இன்னிக்கு நீ தப்பிச்சிட்டே! இன்னொருவாட்டி வீட்டுக்குள்ளே வந்தே.. பிடிச்சு நைய்ய நைக்கத் தட்டி சாறுவச்சு குடிச்சிருவேன். பார்த்துக்கோ..” மாரியம்மாள் உரக்கப் பேசிக் கொண்டிருந்தாள். தனிமையைப் பேசியே வெல்லுவாள். வேலை இல்லாத நேரம் பேசுவதுதான் அவளது வேலை.

தென்னம் படல் மறைப்பைத் தாண்டி அடுத்த வீடு மேரியின் வீடு. மாரியம்மாள் பெருமூச்சு விட்டாக்கூடக் கேட்கும். அவள் திட்டுவது கேட்டு மேரிக்கு கோபம் பொசுபொசுவென மூக்கு நுனிவரை ஏறியது.

“ஏத்தே, அந்த வாயில்லாச்சீவன் என்ன செஞ்சது? அதச் சாக்கு வச்சு விடியக் காலையில் இந்தக் காச்சு காச்சறே..”

“வாடி வா, அத்தையாம்ல அத்தை! அப்படியே ஒங்கொப்பன் கூட பிறந்து குடலை அத்தது மாதிரி! எங்கிட்டு கிடந்து வந்த சிறுக்கி அய்த்தைங்கிறா..? கோழியைத்திட்றேன்னு ரோஷம் வந்தா அத வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டு வளர்க்கணும்! இப்படி அக்கம் பக்கம் வீட்ல திரியவிட்டு நாற அடிக்கக் கூடாது! நாறச் சிறுக்கிக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வருது, ரோஷம்…!”

“ஏத்தேய்.. சும்மா மானாங்கன்னியாப் பேசக்கூடாது! வயசானவகன்னு மருவாதை குடுத்தா.. ஒரேடியா எகிறிக் குதிக்கிறீகளே…!”

ஏளா இவளே, என்னளா உங்க நடுவீட்ல ஏறிக்குதிக்காக! அன்னிக்கி என்னடான்னா ஆட்டை மேயவிட்டு வேலிப் படலைப் பூரா மிதிச்சு பிச்சு நாசம் பண்ணவச்சே..! இன்னிக்கி என்னடான்னா கோழியை மேயவிட்டு வீட்டை நாற அடிக்கிறே.. இதச்சொன்னா ரோஷம் வருதா ரோஷம்? என்னமோ மானாங்கன்னியாப் பேசறாகளாம்ல! நான் பேச ஆரம்பிச்சா மானங்கெட்டு மகிழிபூத்துப்போகும்! லேய் என்ன நினைச்சே” நாக்கை மடித்துக்கொண்டு குதித்தாள் மாரியம்மாள்.

“அடச்சேசுவே, இந்த இடத்தை விட்டு வேற இடத்துக்குப் போலாம்னா அந்த மனுஷன் கேக்கமாட்டங்கறாகளே.. ஆமா, என்னம்மோ பரம்பரையா இருந்த வீட்டை விட்டுட்டு போகக்கூடாதுங்கிறாகளே, சேசுவே இந்த நச்சிலிருந்து விடுதலை இல்லையா?” ஆரோக்கியமேரி புலம்பினாள்.

“ஏளா, என்னளா முணங்கிறே.. எல்லாம் இந்தக் கடக்கரை புறம்போக்கில வந்து ஏறினவங்கதானே..? பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து பட்டாவா போட்டு குடியேறினாங்க? பேசுறாளாம் ரோஷக்காரி, அங்கிட்டுப்போய் குடியிருக்கப் போறாளாம். போகவேண்டியதுதானே…? என்னமோ இந்தக் கடலாத்தா காலடியில இருந்து, அவ குடுக்கிற மீனை வச்சு, குண்டி காயாம பொழப்பு ஓடுது! அங்கிட்டு இங்கிட்டுப்போனா நாறிப்போகும் பொழப்பு!”

மாரியம்மாள் பேசப்பேச ஆரோக்கியமேரிக்கு ஆத்திரம் உலை கொதிச்சு மூடியைத் தள்ளின மாதிரி தள்ளிக்கிட்டு நின்னுச்சு “புருஷன் வரட்டும் போய் காளிகோயில்ல மாரியம்மா பேர்ல காசுவெட்டி போட்டுட்டு வருவோம் இந்தக் கெழம் நாசமாப் போகட்டும்! இப்படி ஒரு வலிய வம்புக்காரி உலகத்திலேயே இருக்கக்கூடாது! குடும்பத்தோட வேரத்து அழிஞ்சு போகணும்” “அடி என்னாடி அங்கே முணங்கிற”

“அட, எம்பொழப்பைப் பத்தி நா பொலம்புறேன் “நீ | வேற..! இவகிட்ட பேசப்பேச வம்பு!

“அக்கம் பக்கத்தாரோட அளவா வச்சுக்கிறதாம் நல்லது. எதுக்கு வீண் வம்புன்னு” அஞ்சாம் வகுப்பு டீச்சர் சொன்னது நினைவு வந்து வாயை இறுக மூடிக்கொண்டாள். காலைநேர வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள். கோழியை வீட்டுக்குள் பற்றி தன்வீட்டு படலுக்குள் கட்டிப்போட்டு கொஞ்சம் அரிசிக் குருணையை போட்டாள்.

மாரியம்மா போன்ற குப்பத்துப் பெண்களுக்குக் கணவன் மாரோ, மகன்மாரோ கடலுக்குப் போய் மீன்களோடு திரும்புவர். விற்பதற்கான மீன்களை வியாபாரிகளிடம் கொடுத்தது போக எஞ்சின மீன்களைப் பங்கிட்டு வீட்டுக்கு கொண்டு வருவர். அந்த மீன்களில் வீட்டுத்தேவைக்கு எடுத்ததுபோக மீதமுள்ள வற்றை ஊருக்குள் பெண்கள் விற்று தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிவருவர். அதிலும் விற்காமல் மிஞ்சிய வற்றைத் கருவாடாக்கி வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வர்.

கடலுக்குப்போய் ஆண்கள் திரும்பி வந்ததும் பெண்களுக்கு வேலை அதிகம். ஆண்கள் கடலுக்குப் போன நாட்களில் விறகு தேடுவது கருவாடு பக்குவம் செய்வது போன்ற வேலைகள் இருக்கும்.

கொஞ்சநேரம் தனிமை கிடைத்தாலும் வதைதான். கடலுக்குப் போன மகனை இலங்கை இராணுவம் பிடித்து சிறையில் அடைத்துவிட்டது. கடலுக்குப் போகும் வயசான புருஷன் திரும்பி வர்றவரை மாரியம்மாள் மனசுக்குள்ளே மருகி மல்லாடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பாள். சந்தோஷமாகப் பேசச் சந்தர்ப்பங்கள் இல்லை. பேசுவதெல்லாம் ஊராருக்கு வம்பாய்த் தெரிகிறது. ஆனால் அவள் பேச ஆரம்பித்தாலும் சரி வேலையில் ஈடுபட்டாலும் சரி அவளை நிறுத்த முடியாது.

மாரியம்மா வெளிய வந்து வானத்தைப் பார்த்தாள். ”அடக்கடவுளே, பொழுதைப் பார்த்தா மணி ஒன்பதாகும் போலிருக்கு! காலையில் கடலோரம் ஒதுங்கின கடல்பாசிபுல்லை மேயப்போன ஆடு மாடுகளும் தண்ணீர் குடிக்க வீடு திரும்பலை! எமனைப் பார்த்து குரைக்கிறமாதிரி கத்தித் திரிஞ்ச நாயையையும் காணோம். எந்நேரமும் ‘க்யாங்.. க்யாங்’..னு கத்தி கத்திசுத்திப் பறக்கும் பறாந்துகளையும் காணோம்! வீட்டுக்கூரைகளில் உக்காந்து கத்திக் கரையும் காக்காக்ககளையும் காணோம்! கடலாத்தா இரைச்சல் சத்தமும் கூட குறைஞ்ச மாதிரிதான் தோணுது. இன்னிக்கு என்ன ஆச்சு? என்ன நடக்கப் போகுதோ தெரியலை! ஒரு சீராய் இல்லை ! கடலாத்தா நீதான் காப்பாத்தணும் கடலுக்குப் போன ஆம்பளைக நல்லபடியா திரும்பி வரணும்!”

சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனாள். அடுப்புச் சாம்பலை நேமி வாயில் போட்டு கரகரண்ணு பல்லைத் தேய்த்தாள். காறி உமிழ்ந்து வாய் கொப்பளித்தாள். இந்தச் சத்தம் ஏழு வீடுகள் தாண்டி உள்ளவர்களுக்கும் குமட்டி குடலைப் புரட்டும்! எதையும் நாலுபேருக்கு தெரியற மாதிரி தாமகச் செய்யணும்னு நினைவிருக்கும். நாசுக்கும் நயமும் இருக்காது. மாரியம்மாள் பல்துலக்கியதும் கஞ்சி குடிக்க உட்கார்ந்தாள்.

நாலு கவளம் விழுங்கி இருக்கமாட்டாள். வழக்கத்துக்கு மாறாக ஹோவென்ற கடலின் பேரிரைச்சல். கடலோரம் இருந்த ஜனங்கள் எல்லாம் பதறி ஓடிவந்தார்கள். ஒரு பனைமர உயரம் கடலலைகள் பொங்கி குதித்துக் கரையில் விரட்டின. குய்யோ முறையோ கத்தல். களேபரம். வெளியே வந்து பார்த்த மாரியம்மாள் பதறி வீட்டுக்குள் ஓடினாள். இருக்கும் பணத்தை முந்தானையில் முடிந்தாள். நல்ல சேலை துணிகள் ரெண்டை மூட்டையாக முடிஞ்சு முதுகில் பிணைத்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஓடினாள். குழந்தைகள், வயதான வர்களில் விழுந்தவர் கதறினர். எழுந்தவர் ஓடினர். மிதிபட்டவர் கத்தினர். எங்கும் மரணபீதி கவ்வியது

கடல் அலைகள் வெள்ளமாய் கரைதாண்டி, குப்பத்தை விழுங்கி, மக்களை விரட்டிச்சென்றன பொங்கிக் கொந்தளிப்பதும், இரைச்சிலிடுவதும் இதுவரை கேட்டிராத ஓலமாக இருந்தது. மழைநீர் சாட்டையாக விளாசத் தொடங்கியது.

குப்பம் இருந்த இடமெல்லாம் கடல் தெப்பம் கருவாடு காய்ந்த கரைகளில் எல்லாம் பிணங்கள் மிதக்கின்றன. மீட்பு வேலைகளில் போர்க்கால வேகத்தில் தொண்டு நிறுவனங்களும் அரசும் ஈடுபட்டிருந்தன. ஜலசமாதியான உயிர்களைக் கப்பல் படை வீரர்கள் தேடினர். உயிர் தப்பியவர்கள் சுனாமி நிவாரண முகாமில் புலம்பியபடி இருந்தனர். இயற்கையே போர் தொடுத்தது போல இருந்தது.

பாய் சரிந்த பாய்மரப் படகுகளைப் போல் மிதக்கும் குடிசைகள். மாரியம்மாள் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வேலி இண்டு இடுக்குகளில் மக்கள் மயங்கிக் கிடக்கிறார்களா.. என்று தேடினாள். முகாமின் பணிகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த துணைக்கலெக்டரும், தாசில்தாரும் மாரியம்மாளைக் கண்டதும் தெறித்தோடி கூட்டத்தில் பதுங்கினார்கள். “கடலுக்கு போனவங்க என்ன ஆனாங்க? எம்புருஷன் முனியசாமி என்ன ஆனார்? இப்போ எங்கே இருக்கார்?” என்று காலையில் இருந்து நூறு தடவை யாவது கேட்டிருப்பாள் அவர்களிடம் சொல்ல பதிலில்லை!

குப்பத்து உயிர்களை மீட்கும் பணியில் மாரியம்மா உயிரைப் பணயம் வைத்து ஈடுபட்டாள் மீனவ வாலிப சங்கத்தினர் துணையோடு இடுப்பளவு தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த பல உயிர்களைக் காப்பாற்றினாள். அலையின் சீற்றம் கொண்ட விரட்டலில் பயந்து விழுந்து வேலி ஓரம் கிடக்கும் உடல்களைத் தேடிப்போனார்கள். இரத்தம் கசிந்தபடி ஒரு பெண் உடல் கிடந்தது. பக்கத்தில் போய்ப் பார்த்தாள். “அடப்பாதகத்தி ஆரோக்கியமேரி, என்னடி ஆச்சு அண்ணன் மகளே” மாரியம்மாள் பதறி மேரியின் உடலைப்பற்றினாள். உடலில் இலேசாக சூடு இருந்தது. முனகல் சத்தம் பலவீனமாக இருந்தது இரத்தம் ஒழுகி சேலை எல்லாம் சொதசொதத்து இருந்தது. “ஆஹா.. பாவி மகளுக்கு கருச்சிதைஞ்சு போச்சு! பெரிய உசிரு பயத்தில் சிசு கலைஞ்சு போச்சோ” மாரியம்மாள் சேலையை வரிந்து இறுக்கிக் கட்டினாள். நல்ல வேளை தண்ணீர் ஏதும் குடித்து வயிறு ஊதியிருக்கவில்லை. இருகை கொடுத்து ஏந்தி தூக்கி ரோடு நோக்கி ஓடினாள். இதற்குள் சங்கத்தினர் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து விட்டனர். உடனே மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆரோக்கியமேரி காப்பாற்றப்பட்டாள்.

இன்னோரிடத்தில் ஒரு வயதான பெண் கட்டையாக தண்ணீரில் மிதந்தாள். ஓடிப்போய் பார்த்தாள், உடல்சூடு அணையாமல் இருந்தது. ரோட்டுக்கு தூக்கிவந்து வயிற்றை அமுக்கி, உப்புத்தண்ணியை கக்க வைத்து, வாயில் வாய் வைத்து ஊதி உயிர் பிழைக்க வைத்தாள். அவளது அசாதாரண வேகத்தையும் துறுதுறுப்பையும் கண்டு ஏதோ காவல் தெய்வத்தை பார்ப்பது போல் வியந்தனர்.

மூன்றாம் நாள் மழை ஓய்ந்திருந்தது. கடல் சற்றுப் பின் வாங்கியிருந்தது. கணக்கிடமுடியாத இழப்புகள். பிணங்களைப் புதைக்க இடமில்லாமல் மசூதி கபர்ஸ்தானிலும் வேதக்கோயில் கல்லறைகளிலும் குவியல் குவியலாய்ப் புதைத்தனர். மீன் பிடிக்கக் கடலுக்குப் போனவர்களில் பிழைத்தவர் எல்லாம் இராமேஸ்வரம் தொண்டி பகுதியில் திசைமாறி ஒதுங்கி பத்திரமாக இருப்பதாகத் தகவல் வந்தது. நிவாரண முகாமும் ஒரளவு சீரான இயக்கத்துக்கு வந்தது.

முகாமில் தங்கியிருந்த குப்பத்து மக்கள் மாரியம்மாளை மரியாதையோடு பார்த்தனர். ‘இவள் குடும்பத்தையா நாசமாப் போகட்டும்னு காசுவெட்டிப் போட நினைச்சோம்’ என்று கழிவிரக்கத்தோடு வெட்கப்பட்டு ஆரோக்கியமேரி கர்த்தருக்கு தோத்திரம் சொல்லிக்கொண்டாள்.

“ஏத்தா, சடவுக்காரக சகசக்காரவுக எல்லாத்தியும் காப்பாத்திட்டியே புண்ணியவதி” என்று ஒரு கிழவி மாரியம் மாளிடம் அன்னம் பாரித்தாள். “அடப்போத்தா ஒரு உசுரு முங்கி செத்துகிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா.. அந்த நேரத்தில் சண்டைக்காரக சகசக்காரங்க எல்லாம் ஒண்ணுதான்! எதோ மனுஷவாஞ்சை என்னால முடிஞ்சதை செஞ்சேன்” என்ற சொல்லி அவிழ்ந்து வரும் கூந்தலை சடசடவெனத்தட்டி கோடாலிக்கொண்டை போட்டபடி நகர்ந்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top