வாசனை

0
(0)

இருளின் விரல்கள் நெரிக்கும் அந்த இரவின் நடுச்சாமத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவன் திடீரென்று ஓலமிட்டுத் துள்ளி எழுந்தான். துள்ளிய வேகத்தில் பின்னால் கைகளை ஊன்றி எதிர்ப்புறச் சுவரில் சாய்ந்து விழுந்தான். உடலெங்கும் மரணத்தின் அதிர்வுகள் ஓடின. நாக்கு வறண்டு போய்விட்டது. அமானுஷ்யமான அவனுடைய மரண ஓலம் இன்னமும் அந்த அறையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. முதலில் எதுவும் தெரியவில்லை. கண்களைத் திறந்து அரக்கபரக்கத் தலையைத் திருப்பிப் பார்த்தான். அப்போதுதான் இரவு விளக்கின் மெலிதான வெளிச்சத்தில் அவன் படுத்திருந்த தலையணையருகில் அமர்ந்திருந்த அவளைப் பார்த்தான். அவள்தானா? அவள்தானா? அவனுக்கு மூச்சு வாங்கியது. நம்பிக்கையில்லாமலே மறுபடியும் அவளைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து லேசாய் சிரித்த மாதிரி இருந்தது. அந்தச் சிரிப்பின் ரேகை மறையாமலே,

“என்னாச்சி… ஏன் அலறுனீங்க…?”

என்று கேட்டாள். அப்படியென்றால் உண்மைதானா! அவன் தன்னுடைய கழுத்தில் கையை வைத்துத் தடவிப் பார்த்தான். ஒரு வேளை கனவுதானோ. சில நொடிகளுக்கு முன்னால் அவன் கழுத்தில் கத்தியை வைத்து யாரோ அறுக்க முயற்சி செய்வதைப் போன்ற உள்ளுணர்வில்தான் அவன் பயந்து துள்ளி விழுந்தது. இன்னமும் படபடப்பு அடங்கவில்லை. ஒருவேளை அவள்தான் அவனைக் கொல்ல முயற்சித்திருப்பாளோ. ச்சே… அப்படி இருக்க முடியாது. அது எப்படி நடக்கும். அவள் எப்படி இதற்குத் துணிவாள். ஒரு வேளை அப்படியும் இருக்குமோ. அவளுக்கு அவன் எந்தக் குறையும் வைத்ததில்லை. கொடுமைப்படுத்தியதில்லை. சித்திரவதைகள் செய்ததில்லை. திருமணம் முடித்ததிலிருந்து அவனைப் பொறுத்தவரை ஒரு சிறந்த கணவனாகவே இருந்து வருகிறான். அவளைச் சிரமப்படுத்தாமல் எல்லா விஷயங்களையும் அவனே கவனித்துக் கொள்கிறான். அவளுக்கு மூன்றுவேளை நல்ல சாப்பாடு, விதவிதமான துணிமணி, டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று சகல வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறான். இதற்கு மேல் என்ன வேண்டும்.

வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டியது. சமைத்துக் கொடுத்து அவனை அலுவலகம் அனுப்பியபின் அவளுக்கு என்ன வேலை? ஓய்வாய் டி.வி. பார்க்கவேண்டியதுதான். மத்தியானம் சாப்பிட்டுவிட்டு தூங்க வேண்டியதுதான். சாயங்காலம் அவன் அலுவலகம் முடிந்து வரும்போது வாங்கி வரும் மல்லிகைப் பூவைத் தலையில் சூடிக்கொள்ள வேண்டியதுதான். இரவிலோ பகலிலோ அவனுக்குத் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் படுக்கைக்கு வர வேண்டியதுதான். இதைவிட சிறந்த வாழ்க்கை வேறு என்ன இருக்க முடியும்.

கல்யாணத்தின்போது அவள் சாதாரணமான கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய முதல் நிபந்தனையே அந்த வேலையை விடச் சொன்னதுதான். வீட்டில் நிறைய புத்தகங்கள் சேகரித்து வைத்திருந்தாள். அவன் எந்தப் புத்தகத்தையும் கொண்டுவர விடவில்லை. அவளுடைய வீட்டில் அவள்தான் நிர்வாகம் செய்து கொண்டிருந்தாள். அவன் அவளுடைய ஒரு வார்த்தையைக் கூட கேட்டதில்லை. அப்படி ஏதாவது அவள் சொல்வதற்கு முயற்சித்தால் அவன் அவளை முறைக்கிற முறைப்பில் அவள் சர்வமும் ஒடுங்கிவிடுவாள். அவளுக்கு என்ன தெரியும். அவளுக்கும் சேர்த்துத்தான் அவன் யோசிக்கிறானே. அது போதாதா.

அவனுடைய அப்பா அடிக்கடி சொல்வார்,

“பொம்பளைககிட்ட யோசனை கேட்டா… அவ்வளவுதான். நம்பள பொன்னஞ்சட்டி ஆக்கிருவாளுக…”

உண்மையில் அப்பாவும் அப்படித்தான் நடந்துகொண்டார். அவர் முன்னால் ஒரு நாளும் அம்மா பேசி அவன் பார்த்ததில்லை. அதேபோல அப்பாவும் எந்த ஒரு விஷயத்தையும் அம்மாவிடம் சொல்லி அவன் கேட்டதில்லை. எப்போதாவது சில நேரங்களில் அரங்கு வீட்டுக்குள் உட்கார்ந்து அம்மா அழுது கொண்டிருப்பாள் யாருக்கும் தெரியாமல்.

அவன் அப்பாவைப் பார்த்து வளர்ந்தான். அப்பாவின் பேச்சைக் கேட்டு வளர்ந்தான். அப்பா வீட்டுக்குள்ளே நுழைந்தவுடனே வீட்டில் அம்மா, அக்கா, தங்கை எல்லாம் பயந்து நடுங்குவதைப் பார்த்து அவனுக்குள்ளும் ஒரு குரூர ஆசை வளர்ந்து வந்தது; அவனைப் பார்த்தும் அப்படி எல்லோரும் நடுங்க வேண்டுமென்று.

குடும்பத் தலைவனாக இருப்பதிலும் குடும்பத்தைக் கட்டிக் காப்பதிலும் பெருமகிழ்வு கொண்டான். அலுவலகத்தில் அதிகாரிகள் நடப்பதைப்போல குடும்பத்திலும் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனாலும் அப்பாவைப் போல அவனால் அவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்ள முடியவில்லை. இப்பவும் அலுவலகம் கிளம்பும்போது அவள் வாசல் கதவை பூட்டுப் போட்டு பூட்டிய பிறகே தன்னுடைய மொபெட்டை எடுப்பான்.

இவ்வளவு நாகரிகமாக நடந்துகொள்கிற அவனைக் கொல்ல முயற்சி செய்வாளா என்ன? இருக்காது. ஒரு வேளை பிரமையாக இருக்குமோ. ஆனால் இந்த நேரத்தில் ஏன் அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அதுவும் அவன் தலைமாட்டில், அவளது வலது கையில் ஆயுதம் ஏதும் வைத்திருக்கிறாளோ, இரவு விளக்கின் மெலிதான வெளிச்சத்தில் அவள் நிழலே மறைத்து கொண்டிருப்பதால் அவளுடைய கைகளில் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை.

அவள் பேசுவதே இல்லை. ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர அதிகம் பேசுவதில்லை. திருமணம் முடிந்த புதிதில் அவள் பேசுவதற்கு முயற்சி செய்தாள். ஆனால் அவன் அவளைப் பேச விடவில்லை.

“அதிகமாக பேசினா எனக்கு பிடிக்காது…”

என்று அடக்கிவிட்டான். அவளும் பேச்சைக் குறைத்துக் கொண்டாள்.

பேசாமலே இருந்து இருந்து மனப் பிறழ்வு ஆகியிருக்குமோ. அவனைக் கொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லையே. அவனுடைய சென்னைக் கிளை அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒரு ஊழியரை அவன் மனைவி, தூங்கும்போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொன்றுவிட்டாள் என்று நேற்றுதான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு அந்த ஊழியரின் குடிப்பழக்கம்தான் காரணம் என்றும் சொன்னார்கள். ஆனால் இவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவளை ஒரு தடவை கூட அடித்தது கிடையாது. இதற்கு மேல் ஒரு கணவனிடம் என்ன வேண்டும்.

அவன் ஆசுவாசமாகி மெதுவாகச் சாய்ந்திருந்த சுவரை விட்டு எழுந்து படுக்கைக்கு வந்தான். அவள் ஏன் இன்னும் அந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறாள். எழுந்து விளக்கைப் போடலாம் இல்லையா… – ஒரு வேளை விளக்கைப் போட்டால் தன் கையிலுள்ள ஆயுதம் தெரிந்துவிடும் என்று யோசிக்கிறாளோ, ஏன்தான் இப்படி கன்னாபின்னாவென்று மனசு அலைந்து திரிகிறதோ, மனசை அமைதிப்படுத்த வேண்டும். அமைதி… அமைதி. அவன் உடல் தளர்ந்தது போல இருந்தது. அப்படியே அவளைப் பார்த்தபடியே படுக்கையில் சாய்ந்தான்.

அவள் இன்னமும் தான் இருந்த இடத்திலிருந்து அசையாமல் நிதானமாக, “என்ன…? கொல்லப் போறேன்னு நெனச்சி பயந்துட்டீங்களா…” என்றாள். அவன் அந்த அறைக்குள் மரணத்தின் வாசனையை உணர ஆரம்பித்தான்.

 

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top