வாங்கப்பா

5
(1)

விளீரென’ படுக்கையிலிருந்து எழுந்தாள் விஜி. ஆடையற்றுக்கிடந்த அவளது சிவந்த முதுகினை நீலநிறம் பூசிக்களித்தது இரவு விளக்கு. இடுப்பில் கிடந்த நைட்டியை எடுத்து அணிந்து ஜிப்பபை இறுக்கிக் கொண்டன கைகள். அருகிலிருந்த கணவனது நிலையும் அவ்வாறே இருக்க கண்டவளுக்கு மூடிவிட துணிவில்லை. அதனால் அவனது உறக்கம் கலையலாம் அது இருவரது உறக்கத்திற்கும் கேடாக முடிய வாய்ப்புண்டு  சிறிது நேரம் எதுவும் தோன்றாமல் சிலையாய் அமர்ந்திருந்தாள்.  பிறகு ஓசையின்றி பூனையாய் எழுந்து விள்க்கினைப்போட்டு கழிவறைக்குச் சென்று வந்தாள். ஆசுவாசம் கண்டபின் மறுபடி கட்டிலில் வந்தமர்ந்தாள். இடுப்பு கனத்து, கெண்டங்கால்களில் உளைச்சல் தெரிந்தது. சன்னலைத் திறந்து வெளிக்காற்றை உள் வாங்கினாள்.

 

ஏதாவது தின்ன வேண்டும்போல ஒருபசி வந்து நின்றது. அடுக்களைக்குள் நுழைந்தாள் கிரைண்டருக்குள் கணவன் வாங்கி வைத்த பழப் பை இருந்தது.  கொடிமுந்திரியும் பச்சை வாழைப்பழமும். கொடிமுந்திரியைத் தொட்டதும் உதிர்ந்து கையில் உருண்டு வந்த்து. அதில் கணவனின் காமம் கண்டாள். வெட்கம் வந்தது. பச்சை வாழைப்பழத்தை உரிக்கையில் அவளுக்கு இதழ்க்கடையோரம் சிரிப்பு மின்னியது. ஒருகண்ணால் கணவனைப்பார்த்தபடி பழத்தை விழுங்கினாள். பாதிப்பழத்தில் பசியடங்கியது. ஒரு த்ம்ளர் த்ண்ணீரைக் குடித்துவிட்டு படுக்கைக்கு வந்தாள்.

 

கணவன் மல்லாந்து படுத்திருந்தான். அருகில் சத்தமின்றி படுத்துக்கொண்டாள் அப்பாவைப் போலவே அவனுக்கும் மயிரடர்ந்த மார்பு.  அப்பாவும் அவன்போலவே பனியன் அணியமாட்டார். வெற்றுடம்பில்தான் அவரை பெரும்பாலான பொழுதுகள் கண்டிருக்கிறாள். தடிதடியான காலகளும் அதில் சுருண்டுகிடக்கும் மெல்லிய ரோமங்களும், உருளை உருளையான கைகளும் மேற்புறத்தில் பரவிக்கிடக்கும் கருப்பு வெள்ளை கலந்த முடிக்கற்றைகளும் அப்பாவை அவதார புருசனாய் காட்டும்.

 

வீட்டுக்குள் நுழையும்போதே, “விஜிம்மா.. “ என அழகாய் அழைத்தபடி வருவார். வீட்டில் எந்த வேலையிலிருந்தாலும் அப்படியே போட்டுவிட்டு கலகல வெனச் சிரித்தபடி, ”அப்பா வந்திட்டாரு..” என்றபடி ரெக்கையாய் கைகளை விரித்துக் கொண்டு பறவையாய் ஓடிவருவாள் விஜி.

 

“ஏங் கன்னுக் குட்….டீ ஈ..” ஓடிவந்தவளின் அக்குள்களைப் பற்றி அலாக்காகத் தூக்கி அங்கமெல்லாம் முத்தமிடுவார்.

“ புருபுருங்குதுப்பா. புருபுருங்குதுப்பா ..!” என கழுத்தைச் சாய்த்துச் சிணுங்கியபடி வாய் கொள்ளாமல் சிரிப்பாள்.

 

அம்மா வந்து அப்பாவைத்திட்டும். “ பொம்பளப்பிள்ளைய வாய்ல எல்லாமா  கொஞ்சுவாங்க..”

 

“அப்பா மீச குத்துதுப்பா. … அப்பா மீச குத்துதுப்பா..”  சொல்லிக்கொண்டே அப்பாவைக் கட்டிக்கொள்வாள் இவள்.

 

“ ச்சீ வெவஸ்த இல்லாத மனுசெ..”  அம்மா கடுப்புடன் அவ்விடம் விட்டு நகரும்.

 

“ யேய்.. இது எங்க அம்மா டீ..”  என அம்மாவின் கரம்பிடித்து இழுத்து நிறுத்திச் சொல்வார்.

 

“ ம்… ஒங்கம்மா இப்பிடித்தே கிருசகெட்டதனமா ஒங்களுக்கு ஒதட்டுல வாய்வச்சு கொஞ்சுமாக்கும். கருமம்.”

 

“ அடி வங்கங்கெட்ட கிறுக்கி எங்காயா வெத்தல போடும் அது தெரியும்ல. சின்னவயசில நாங்களும் வெத்தல போடணும்னு அழுவம் அப்ப எங்காயா என்னா செய்யும் தெரியுமா.. வாயில் மெண்டுக்கிருக்க வெத்தலய கையில துப்பிக் குடுத்தா கை கறபட்டுப் போகும்ணு.. நுனிநாக்குல வச்சு நீட்டும் நாங்க வாய் தெறந்து வாங்கிக்கிருவம் தெரியுமா..? “ என்று பழைய நினைவுகளில் கண்கள் சொக்கிப் போய் சொல்லுவார். அம்மா உடம்பு சிலிர்த்துக் கொள்ளும். “ வ்வோ “

 

“ வ்வோ இல்லடி காட்டுச்சிறுக்கி..! “ என்று அம்மாவைக் கடிந்து பேசுகிற அப்பா, குருவி தன் குஞ்சுகளுக்கு இரை எடுத்து ஊட்டுவதையும், நாய் தனது குட்டிகளுக்கு வாயில் அதக்கிக் கொண்டு போடுவதையும் உதாரணமாய்ச் சொல்லிப் பேசுவார்.

 

விஜியும் மல்லாந்து படுத்தாள். வெள்ளை டிஸ்டம்பர் பூசப்பட்ட சீலிங் சுவரும் வெளிர்நீலத்தில் மிதந்து கொண்டிருந்தது. எதற்கு இந்த பாதி இரவில் அப்பாவின் ஞாபகம்…?  யோசித்துப் பார்த்தாள். கனவு எதுவும் வரவில்லை. உறங்குமுன் அப்பா சம்பந்தமாக எந்த நிகழ்வும் நிகழவில்லை. கணவனோடு கூடிய களைப்பில் நீடித்த உறக்கம்தான் பீடித்திருக்க வேண்டும். எது தனது உறக்கமழித்தது..? எது தன்னை இங்ஙனம் எழுந்து கொட்டக் கொட்ட விழிக்க வைத்தது….? பிடறியில் தன்னைத் தானே அறைந்து கொண்டு யோசிக்க வெறும் கொட்டாவியே வந்தது.

அப்பாவை நேரில் பார்த்து ஒருமாதத்திற்கு மேல் இருக்கும். ஏதோ ஒரு வேலையாய்  அலுவலகம் வந்தவர், இங்கே தலைகாட்டினார். மறுநாள் காலை உணவுக்காக ஆட்டுரலில் மாவு ஆட்டிக்கொண்டிருந்தாள் விஜி.

 

“ வி ஜி ம்மா.. “ வாசலில் அப்பாவின் குரல்.

 

மாவாட்டிய கையோடு விஜியும் எழுந்தாள்.

 

“அ ப் பா..”

 

கதர் வேட்டி கதர் சட்டையில் கையில் ஒரு துணிப்பையுடன் வீடு நுழைந்தார் அப்பா.

 

நடுக்கூடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். கையிலிருந்த பையை கீழே வைத்த அப்பாவின் நெஞ்சில்  வந்து தலை சாய்த்துக்கொண்டாள் விஜி

.

அப்பா அவளுக்கு பைநிறைய கைமுறுக்கு கொண்டுவந்திருந்தார். ஊரில் அக்ரஹாரத்தில் குடியிருக்கும்  செட்டியாரம்மாவிடம் போடச்சொல்லி வாங்கி வந்தார்.. விஜி வீட்டிலிருக்கும் காலத்திலேயே யாருக்காவது ஸ்பெசலாக ஆடர் எடுத்துப் போடுகிற பொழுது ஒரு உலக்கு மாவு சேர்த்து இடித்து விஜிக்கென்று தனியாகப் போட்டு டப்பாவில் அடைத்துக் கொண்டு வந்து கொடுப்பார் என்றைக்கும் மாவை அரவை மெசினில் கொடுத்து அரைக்க மாட்டார். கைக்குத்தல்தான் செட்டியாரம்மாவின் ஸ்பெசாலிடி.. மிதமான காரமும் மாறாத மொறுமொறுப்பும் நாவை சுண்டி இழுக்கும்.

 

அப்பாவும் மகளும் இராச்சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது விஜியின் கணவன் வந்துவிட்டான்.

 

“மாமா… தப்புனாப்புல வந்திருக்காரூ..?” என அவரை வரவேற்றான்.

 

“ நா வந்து பாஞ்சு நாள் தான் ஆகுது.. “ என்ற அப்பா, ’’திங்களோட திங்கள் எட்டு..’’ என கிழமையை விரல் இடுக்கில் விரல் வைத்து எண்ணிக்கையைக் கண்க்கிட ஆரம்பித்தார்.

 

“ அன்னிக்கும் எதோ ஒரு சோலியாத்தான் வ்ந்தீங்க. அது கண்க்குல சேராது. என்னியப் பாக்கணும்னு வீட்டுக்கு வாரதுதே கணக்கு…..! என்னாங்க…? ”

விஜி படீரென ஒரு தடையை எடுத்து முன்னால் போட்டாள். கூடவே கணவனையும் காவலுக்கு நிறுத்தி வைக்க,

“ஆத்தாடி.. இந்த ஆட்டைக்கி நா வரலப்பா.. இது அய்யா பாடு மக பாடு. என்னைய விட்ருங்க ” என அலறியபடி ஒதுங்கிப் போனான்.

 

அப்பா மோர் சாதத்தை வழித்து விழுங்கி, தூக்கிக் குடித்து ஏப்பம் விட்டார். ‘’அப்ப, சரி, இன்னிக்கி ஒரு ரகசியத்த ஒடச்சி விட்ற வேண்டியதுதான்…” என்ற பீடிகையோடு அப்பா கை கழுவினார். “ மருமகனே நீங்களும் ஒக்காரலாம்.”

 

ஒதுங்கிப்போன விஜியின் கணவன் பக்கத்தில் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். “ ஒடைங்க மாமா.. நானும் பாத்துக்கறேன்….”

 

“ உள்ளதச் சொல்லணும்னா ஒங்கையால ஒருவா கஞ்சி குடிக்க ஆசவச்சிதே சோலி தொந்தரவுன்னு சாக்கு சொல்லிட்டு ஓடிவாரனாக்கும் தெரியுமா..!’ என்று முடித்தார்.

 

விஜி அழுதுவிட்டாள்.

 

அப்பா பஜாரில் உள்ள கடைகளுக்கு கணக்குகள் எழுதித்தருகிற தொழில்   முறை கணக்குப்பிளையாக வேலை செய்து வருகிறார். எந்த கடைக்கும் தனிப்பட்ட வகையில் அவர் வேலையாள் கிடையாது. கடைக்காரர்கள் அன்றாட தங்கள் வரவு செலவுகணக்குகளை கொண்டுவந்து அப்பாவிடம் ஒப்படைத்துப் போவார்கள். அந்த கணக்கினை அப்பா, வித்துவரவு, கொள்முதல், செலவு, லாபம் என வகைபிரித்து எழுதி, ஐந்தொகை கணக்குப் பார்த்து ஒவ்வொரு கடைக்குமான கணக்குகளை அரசாங்கத்திடம் கணக்குக் காட்டி, தணிக்கைக்கு உட்படுத்தி கடைக்காரர்களிடம் ஒப்படைப்பார். அந்த வகையில் பக்கத்துக்கு இவ்வளவு என சம்பளம் அப்பாவுக்கு.

 

வீடு நிறைய பேரேடுகளும், பைல்களுமாய் அடுக்கிக்கிடகும்.

 

அண்ணன்காரன் வீட்டில் இருந்தாலும் அப்பா விஜியைத்தான் கணக்கு ஒத்துப் பார்க்கக் கூப்பிடுவார். நாள்ச் சிட்டையிலிருந்து பேரேட்டில் பதிந்த கணக்கை சரியாய் வைத்திராவிட்டால் ஐந்தொகை தீராது. அதனால் நாள்ச்சிட்டையும் பேரேட்டையும் ஒத்துப் பார்ப்பதென்பது இந்தவேலையில் முக்கியமானது. கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொள்ள வேண்டும். அண்ணான் அடங்கி உட்காரமாட்டான்.  அதுபோக அம்மாவும் அவனை அங்கே உட்கார விடாது. “போதும் போதும் கடகடயா  நோட்டத்தூக்கிகிட்டு அலஞ்சி கூலிய வாங்கி சீவனம் நடத்துற பொழப்பு ஙொய்யாவோட தொலயட்டும். போய்க் கருத்தாப் படிச்சி கவர்மெண்டு வேலக்கிப் போற வழியப் பாரு..”

 

அப்பா த்னியாளாய் மடியில் இரண்டு நோட்டுக்க்ளையும் தூக்கி வைத்துக் கொண்டு திண்டாடுவதைப் பார்க்க விஜிக்குப் பொறுக்காது.

“ நோட்டக் குடுங்கப்பா நா வாசிக்கிறேன். நீங்க ஒத்துப்பாருங்க..”

 

நாள்ச்சிட்டையை அப்பாவிடமிருந்து வாங்கி “ பக்கம் பன்னண்டு, கொள்முதல் வகை ஆனா.சீயன்னா கடை நாலாயிரத்து இருவத்தாறு..” என உரக்கச் சொல்லி பென்சிலால் குறித்துக் கொள்வாள்.

 

அப்பாவுக்கு பெருமிதம் பொங்கிவ்ழியும். “கவருமெண்டு வேலைக்கிப் போகணும்னாலும் கழுத மேய்க்கப் போகணும்னாலும் கணக்கு எழுதிப்பழகாம காலத்த ஓட்டமுடியாதுடி.. வெட்டியா பயலக் கெடுத்துப்புடா. . த..”  அண்ணனுக்கு வேண்டிய அறிவுரையை அம்மாவின் வழியாகச் சொல்லுவார்.

 

விஜிக்கு கல்யாணம் முடிந்து ஒருவருசம் கழிந்து போனது. முதல் கல்யாண நாளைக்கு விஜியின் கணவர் புதுத்துணி எடுக்க வேணுமென்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். விஜியிடம் கூட எந்தக்கலர் அவளிடம் இல்லை என்று கேட்டார். ஆனால் அவரது அம்மாவோ -விஜியின் மாமியார்-  ”துணியில எதுக்கு காசக் கொண்டுக்குப் போடுறவெ..” என தடுத்ததோடு, “வருசம் திரும்பந் தண்டியும் அவுகளுக்கு  –விஜியின் வீடு –  செய்யக்கடம் இருக்கு.  அதுக்குப் பெறகு வேணும்னா ஒம்பொண்டாட்டிக்கி நீ பட்டும்  பனாரசுமா எடுத்துக்குடு சாமி நா வேணாங்கல..”  என்றார்.

 

விஜியின் நாத்தனாரோ இன்னம் ஒருபடி மேலே நின்றார். “இப்பெல்லா ஒரொர் வீட்ல மூணுஆடி, மூணு தீவாளின்னு ரெட்டச்சீரா இருந்த வழக்கத்த மும்மூணா ஆக்கிப்பிட்டாகம்மா,  தெரியுமா..” என்று எடுத்துக் கொடுத்தார்.

 

விஜிக்கு கண்ணில் நீர்கட்டிக்கொண்டது.  ப்ள்ளிக்கூடத்தில் மொத்தப்பிள்ளை களுக்கு மத்தியில் தனியாய் ஒருபிள்ளையை மட்டும் பிரித்து அவமானப் படுத்துவது போல தன்னை உணர்ந்தாள். நின்ற இடம் சுட்டது. அறைக்குள் சென்று அழுது தீர்க்க வேன்டுமாய் ஆங்காரம் கூட எழுந்தது. உடனடியாய்க் கிளம்பினால் தன்மீதான கிசுகிசுப்பு இன்னமும் கூடுதலாய் வந்துவிழும். நின்ற இடத்திலேயே உதடுகடித்தாள். மட்டியை அழுத்தி அழுகையினை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்தினாள்.

 

“ எங்கக்கா ஒரு லூசு…! “ என்ற் விஜியி கணவர், “ இதெயெல்லாம் ஒரு விசயமாவே நாம எடுத்துக்கக் கூடாது விஜி. சாய்ஸ்ல விட்றணும்….” என சமாதானப்படுத்தினார்.

 

அப்பாவும் இதேபோலத்தான் பேசுவார். “ எதையுமே இறுக்கமாப் பாக்கக் கூடாது விஜிம்மா. நல்லாருக்கா.. வச்சுக்கணும். சரி இல்லயா.. லூஸ்ல விட்றணும். சும்மா புடிச்சு தொங்கிட்ருக்கப்படாது.”

அந்த கல்யாண் நாளுக்கு யாரும் சொல்லாமலேயே அப்பா புதுத்துணி எடுத்து வந்திருந்தார். அதை மாமியாரது முன்னிலையில்தான் விஜியிடம் கொடுத்தார். அப்பவும் அத்தை மகனிடம் சொன்ன அதே வார்த்தையை அப்பாவிடம் தொனி மாற்றிச் சொன்னது. “ எதுக்குண்ணே துணில துணில காசப் போடுறீக..”  துணிக்குப் பதிலாக பொன்னோ பொருளோ தரலாமே என்கிற மறைபொருளை அப்பா உள்வாங்க்வில்லை.

 

“ யக்கா இந்த கட்ட  மண்ணுல நடமாடும் மட்டும் எம் மகளுக்கு என்னால் ஏண்டதச் செய்யக் கடம இருக்கு .அது ஆகுற பொருளா.. ஆகாத்தாங்கற கணக்கெல்லா வேற….. இத வெறும் பண்டமாப் பாக்கக்குடாதுக்கா..  பாசம்ணு வச்சுக்கங்களேன்..”

 

வீடெங்கும் அப்பா பாசமாய் நெளிந்து கொண்டிருந்தார். கைப்படும் கண்படும் பொருள்கள் யாவற்றிலும் அப்பா…படுத்திருக்கிற கட்டிலில், மெத்தையில், தலைபுதைந்து கிடக்கும் தலையணை யில், போர்த்தியிருக்கும் போர்வையில், கையணைத்துக் கிடக்கும் கணவன்வரை அப்பா.

 

“ என்னாடா விஜிம்மா.. எங் கன்னுகுட்டி..” என விதவிதமான அழைப்புக்களில் அப்பாவின் குரல் உறைந்தும் நிறைந்தும் நின்றது  யாரோ தன்னை அறைந்தது போல விஜியின்  மளமளவென கண்ணில் நீர் வழியத் தொடங்கியது.

 

 

”அப்பா..” மென்குரலில் விம்மினாள். போர்வை நனையத் துவங்கியது.

 

“ நா எல்லார்க்கும் சொல்றது ஒண்ணே ஒண்ணுதான் விஜிம்மா. நிய்யும் கேட்டுக்கணும். எந்தச் சூழ்நிலையிலயும் மனசில பாரம் மட்டும் ஏறவிட்வே கூடாது. ஒருவேள ஏறிடுச்சுன்னா பட்டுன்னு அந்தக் கழுதைய ஏறக்கிவிட்றணும்..!”

 

“ஏம்ப்பா அத கையப்பிடிச்சு மெதுவா ஏறக்கணுமா..?. வெடுக்குன்னு இழுத்துப் போட்ற்ணுமா..” விஜி அப்பாவை பகடி செய்தாள்.

 

“ஏங்க சின்னப்பிள்ளை கிட்டக்கப் போயி என்னா பேச்சுப் பேசறீங்க.. அவளுக் கெதுக்கு கஷ்டம், கவல வரணும்…?”  அன்று அம்மா, அப்பவை மறித்துப் பேசியது.

 

“மன பாரம்ங்கறது வெறும் கவலையினால் மட்டுமில்ல.. அதிகமான சந்தோசத்திலயும் கூட திக்குமுக்காடிப் போய் நிக்கிம். அப்பவும்தான் சொல்றேன்… சந்தோசமோ கவலையோ எதையுமே மனசில வச்சுப் பாக்கப்படாது. ஒரு பேப்பர் பேனாவ எடுத்து மடமடன்னு இருக்கறத எழுதி வடிச்சிறணும்.. சரியா..? “

 

”அதத்தான் மனசில எதையும் வச்சிக்கிடக்குடாதுங்கறதாப்பா..! “

 

நினைத்த மாத்திரத்தில் அவளால் சட்டென எழுந்திட முடியவில்லை.

 

ஒருவேளை பாரம் தாங்கமுடியாத படிக்கு அதிகமாகிவிட்டதோ. இமை மெல்லத் திறந்தாள். கணவனின் வலதுகரம் விஜியின் மார்பில் கிடந்தது. நிச்சலமான உறக்கத்தில் கணவன் இருந்தான். மெதுவாய் அதனை விலக்கிவிட்டு படுக்கையிலிருந்து எழுந்தாள் விஜி.

 

எழுத்து மேசையில் அமர்ந்து பேனாவும் பேப்பரும் திறந்தாள்.

 

“அப்பா….!

வாங்கப்பா..

அறியாத வயசில் எத்தனையோ தரம் உங்களை நான் அடிச்சிருக்கேன் வார்த்தையால வதச்சிருக்கேன். அப்பயெல்லாம் நான் இத்தன மன சஞ்சலம் பட்டதில்ல நீங்களும்  இதுமாதிரி பாராமுகமா இருந்ததில்ல.. அப்பா .. ஒரு சமயம் வீரபாண்டித் திருவிழாவில் அண்ணனுக்கு மட்டும் இடுப்பு பெல்ட் வாங்கிக் குடுத்து, எனக்கு கழுத்துக்கு பாசிமாலையும் பொம்மையும் தந்ததுக்காக கோவிச்சுக்கிட்டு வீம்புக்கே திருவிழா கூட்டத்தில் காணாம போய்ட்டேன். தேடிக்கண்டுபிடிச்சு அண்ணனமாதிரியே எனக்கும் ஒருபெல்ட் வாங்கிக்கொடுத்து சமாதானம் சொன்னீங்க, அப்பவும் எனக்கு கோவம் தீரல, நீங்க வாங்கிக்குடுத்த பெல்ட்ட எடுத்து உங்கள அடிச்சு கண்ணுல காயம் உண்டாக்கிட்டேன் அம்மா உட்பட எல்லாரும் என்னக் கண்டிசாங்க. ஆனா நீங்க எங்கிட்ட, “கோவமா விஜி கண்ணு “ ன்னுதா கொஞ்சிப் பேசினீங்க.

 

இப்போ என்னா கோவம்ப்பா..

 

ஒருநாள் நீங்க கணக்கெழுதிக் கொடுக்கிற கடைக்காரர் வீட்டில் ஏதோஒரு விஷேசம்னு அன்னிக்கி பிராந்தி சாப்பிட்டு வந்தீங்க. உங்களால அந்தசமயம் சரியா  நிக்கமுடியல நடக்க முடியல.. பேச்சுக்கூட உருண்டு உருண்டு பேசுனீங்க. அண்ணே பயந்து வெளீல ஓடிட்டான். அம்மா உங்கள வீட்டுக்குள்ள இழுத்துப்போட்டு கதவ தாள்போட்டது. குளியல் அறைக்குக் தூக்கிபோய் தலவழியே தண்ணீர் ஊத்திவிட்ட்து. போதை இறங்கல. புளியக் கரச்சு குடிக்கக் குடுத்துச்சு. நீங்க எம்மேல வாந்தி எடுத்தீங்க ஆட்டுக்கறியும் அரிசிப்பருக்கையுமா என் உடம்பெல்லாம் நாறிப்போச்சு.. நாலஞ்சு நாள் நான் உங்ககூட பேசவேயில்ல. அத்தை வீட்டுக்கு ஓடிப்போய்ட்டேன். அம்மாவ துணைக்கிக் கூட்டிக்கிட்டு என்னைய வந்து அழச்சிட்டு வந்தீங்க. நீங்க கண்ணீர்சிந்தி கூப்பிடுற அளவுக்கு நா என்னா அத்தன உசத்தியாப்பா… அடிச்சு இழுத்து வந்தாலும் வந்திருப்பேனே..

 

ஆனா.. நீங்க என்னோட அப்பா. கல்நெஞ்சு கிடையாது. கரையிற கருப்பட்டி எங்க அப்பா.. கண்பாத்துப் பேசி, கலகலன்னு சிரிக்கிற சிரிப்பக் கண்டு நாளாச்சுப்பா.. ப்ளீஸ்…. வாங்கப்பா..

 

எழுத்தின் இடைவெளியில் கண்ணீர்த்துளி விழுந்து தாளை ஈரமாக்கியது. எழுதுவதை நிறுத்திவிட்டு விழிநீரை விரல்களால் துடைத்துக் கொண்டாள்.

 

போனதரம் அப்பா விஜியின் வீட்டிற்கு வந்தபொழுது விஜி கணவரோடு வெளியில் சென்றிருந்தாள். வழக்கம்போல அலுவலக விசயமாய் அப்பா வந்திருக் கிறார். விஜி இருந்திருந்தால் சாப்பாடு போடச்சொல்லி  உண்டு சென்றிருப்பார். விஜிக்கு எல்லாக் கவலைகளையும்விட வீட்டுக்கு வந்த அப்பாவுக்கு தன்கையால் ஒருவேளைச் சோறு போடமுடியாது போய்விட்டதே என்பதுதான் இப்போது வரையிலும் அடிமனசில் தங்கி இம்சித்துக்கொண்டுள்ளது. மாமியார்கூட சாப்பிடச் சொன்னார்களாம். அப்பா சாப்பிடவில்லை. அப்படியும் மேலும் ஒருமணி நேரம் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். விஜியும் கணவரும் குகைக் கோயிலுக்குள் இருந்ததால் இருவரது செல்போனிலும் டவர் கிடைக்கவில்லை. பொதுவாகவே கோயிலுக்கென்று சென்றுவிட்டால் இருவருமே செல்போனை மறந்து விடுவார்கள். அவ்வளவு நேரம் காத்திருந்த அப்பா இன்னும் கொஞ்சனேரம் இருந்திருக்க வேண்டும். அல்லது பிறகுவருகிறேன் என வந்தது போலவே திரும்பச் சென்றிருக்க வேண்டும் மாறாக மாமியாரிடம் விஜிக்காக தான் வாங்கி வந்திருந்த தின்பணட் பொட்டலத்தை தந்த அப்பா, விஜியிடம் இரவலாய் வாங்கிப்போயிருந்த நகைப் பெட்டியையும் மாமியாரிடம் கொடுத்ததுதான் பிரச்சனை.

 

திடீரென ஏற்படும் பணப்பிரச்சனைகளுக்கு அப்பா வீட்டில் இருக்கும் தங்க நகைக்ளை வங்கியில் அடமானம் வைப்பதும் திருப்பிவாங்குவதும் விஜியின் வீட்டில் நடக்கிற வழமையான காரியங்களில் ஒன்று. அது வீட்டுக்கான சொந்தச் செலவாக் இருக்கலாம், சில சமயம் அப்பாவின் தொழில் வழியிலும் ஒரு தேவை ஏற்படுவதுண்டு. ஏதாவது ஒரு கடைக்கான கண்க்கு முடிக்கப்படுகிற பொழுது அலுவலகத்தில் பணம் கட்டிமுடிக்க வேண்டியிருக்கும் அப்படியான் சமயங்களில் அப்பா கடைக்காரரை எதிர்பார்த்து காத்திருக்கமாட்டார். கடைக்காரர்களும் அப்பாவை அந்த நம்பிக்கைகாகவே எந்தவொரு வேலையாயிருந்தாலும் அப்பா வுக்கே மாற்றிவிடுவார்கள். ‘மணிப்பிள்ளகிட்ட விட்டாச்சுன்னா எழுதறது, கண்க்கு ஒப்படைக்கிறது ன்னு நாலொண்ணையும் யாரையும் எதிர்பாக்காம முடிச்சிருவாப்ல.’ என பெருத்த நம்பிக்கையிலிருப்பார்கள். அதனை தக்கவைக்கவே அப்பாவும் த்ன்னால் இயன்றமட்டும் மெனக்கிடுவார். கடைசி முயற்சியாகத்தான் வீட்டு நகையைத் தொடுவார். இந்தவிசயம் வீட்டில் எல்லோருமே அறிந்த சேதி.

 

இந்தமுறை ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் கண்க்கு முடிக்க வேண்டியிருந்த தாம், அப்பா விஜியிடம் பேசியிருந்தார். விஜியும் தனது நகையைக் கூட வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தாள் அப்பா விஜியின் கணவரிடமும் மாமியாரிடமும் தெரிவித்து விட்டுத்தான் தரக் கேட்டிருந்தார் கணவனுக்கு தெரியும். ஆனால் மாமியாருக்குத் தெரியாது.. விஜியின் கணவர்,’ நாஞ் சொல்லிக்கிறேன்’ என்று தலை யாட்டியதோடு சரி தன் தாயாரிடம் சொல்லாமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது

 

அப்பாவிடம் நகையை வாங்கிய மாமியாருக்கு சின்ன அதிர்ச்சி. அதனை ஈடுகட்ட இருபொருள்படுகிற தொனியில் அப்பாவிடம் பேசி இருக்கிறார்.

 

”அய்யாவுக்கும் மகளுக்கும் ஆயிரத்தெட்டு இருக்கும் நாம் போயி அதகேக்கலாமாண்ணே… “ என்று இழுத்த விஜியின் மாமியார் அடுத்தொரு வார்த்தையில் கவிழ்த்திருக்கிறார். “ அல்லிமகராணின்னாலும் அவளும் ஆனத்தாலி கட்டுன அர்ச்சுனனுக்கு பொண்டாட்டிதே.. “ என விஜி தனது வீட்டுக்கு உரித்தானவள் என அப்பாவிடமிருந்து விஜியை பிரித்துக் காட்டி இருக்கிறார். மறைமுகமாக தனக்குத் தெரியாமல் தன் வீட்டில் சூது நடப்பதுபோல் அவரது வார்த்தைகள் அப்பாவிற்கு விழுந்திருக்கும் போலிருக்கிறது.

 

சம்பந்தகாரம்மாளின் நக்கலும், கிண்டலும் கலந்த வார்த்தையில் அப்பா குற்றவாளியாய் கூனிக்குறுகிப் போயிருக்கிறார்.

.

இருவருக்கும் இடையில் என்ன சம்பாஷனை நிகழ்ந்தது எனத் திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்திருக்கிறது. இரண்டுபேருமே அதனை யாரிடமும் சொல்லவில்லை.

 

ஆனால் அதன்பிறகு அப்பா போனில் விஜியின் கணவனிடம் தன்னை மன்னித்துக் கொள்ளச் சொல்லி பேசினார்.. பெண்ணின் பொருள்மீது தான் உரிமை கொண்ட்டாடி பயன்படுத்தியது முறையற்றது எனவும் மனம்கசிந்தார். விஜி பலமுறை அப்பாவை சமாதானப்படுத்துகிற விதமாய் அழைத்தாள். ஆனாலும் அப்பா ஒவ்வொரு முறையும் தன்னை குற்றமற்றவராக சொல்லிக்கொள்ளவிரும்பவில்லை.

 

‘’பொதுவா பொண்ணுகுடுத்தவனுக்கு போக்குவரத்து வ்ச்சுக்கவே உரிம கிடையாது… அந்த வகையில் நா அங்கனயே புத்திய கடெங்குடுத்துட்டேன். நீ எதும் சங்கடப்படாத தாயீ.. ‘’

 

அதற்குமேல் விஜியால் அப்பாவிடம் சகஜமாகப் பேச ஏதுமில்லாத்துபோலவே இருந்தது. என்ன வசயமாய்ப் பேச்சைத் துவக்கினாலும் அப்பா அங்கேயே நின்றிருந்தார்.

 

‘’மருமகெ, என்னமுஞ் சடச்சுப் பேசறாரா கண்ணு.. மாமியார் வஞ்சாகளாம்மா ப் ச் அன்னைக்கி எம்புத்திய யாருக்கோ கடெங்குடுத்திட்டெ..”

 

மறுபடியும் பேனாவை எடுத்தாள்.

 

“ அப்பா… டி வி யில சிவாஜி படம் பாக்கிற போதெல்லாம் உங்க ஞாபகத்தை தவிர்க்க முடியல. ஒருதரம். ஒரேஒருதரம் நீங்க நேரில வந்தா எல்லாம் சுமுகமா ஆயிரும். உங்க தோள்ல சாஞ்சு நா அழுக வேணும். உங்க முகம் பாத்து நான் சிரிக்கவேணும். வாங்கப்பா… ப்ளீஸ்… !’’

 

எழுதிய கடிதத்தின் மீது அப்படியே தலைகவிழ்ந்து படுத்தாள் விஜி.

 

” விஜி ம்மா.. “

 

விடிகாலையில் அப்பா வந்தார்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top