வாக்குச் சாவடி எண் 108

0
(0)

“இதுதான் வாக்குச்சாவடி” என்றார்கள். ஒரு ஓட்டுக்கொட்டகை, இரு வாசல் கதவுகள் கொண்ட பெரியச் செவ்வகக் கூடமாக அமைந்து இருந்தது. கிழக்குப் பார்த்த அந்தக் கூடத்துள் தெற்கு, வடக்கு சுவர்களில் செவ்வக வடிவத்தில் கரும்பலகை போல் கருப்புச்சாயம் பூசப்பட்டு இருந்தது. மேற்குச் சுவரில் இரு வாசலுக்கு இடையில் இருபகுதிகளில் இரு கரும்பலகைகளுக்கான கருப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. ஆக ஒரு கூடத்தில் நான்கு வகுப்புகள் அமைந்த ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம்.

வடக்குப்பக்கம் ஒரு பெரிய அறை, அதற்குள் தான் தலைமை ஆசிரியர் அறையும், ஐந்தாம் வகுப்புக்கான வகுப்பறையும், அதற்குப் பின்னால் இருகழிப்பறைகள், தெற்குப்பக்கமாக “டானா” வடிவத்தில் மாணவர்களுக்கான சிறுநீர்புரை இருந்தது. நீர் தொட்டிகள் இருந்தன, நீர் இல்லை. மின்னிணைப்பு இருந்தது, விளக்குகள் இல்லை. காற்றாடிகள் நான்கிருந்தன. இவை இயங்காதாம்.

தலைமையாசிரியர் அறையில் மட்டும் விளக்குகளும் மின் விசிறியும் இயங்குமாம். கதவுகள் இல்லாத ஜன்னல்கள். தங்கு தடையின்றி கொசுக்களும் கழிவறை நாற்றமும் தாக்கிக் கொண்டே இருந்தது. தலைமை தேர்தல் அதிகாரி சேகர் மட்டுமே வந்திருந்தார். பகல் ஒருமணி, பகல் பொழுதில் இந்த ஊருக்கு வரும் ஒரே சிற்றுந்து. அதைப்பிடித்து வந்துவிட்டார். இன்னும் நான்கு அலுவலர்கள் மூன்று மணிக்குள் வந்து சேரவேண்டும். இனி இந்தச் சிற்றுந்து இரவு எட்டுமணிக்குத்தான் வரும். இதைவிட்டால் காலை ஏழரை மணிக்குத்தான் வருமாம். குக்கிராமம் என்ற பெயருக்கு உதாரணமான கிராமம். ஊர் வெறிச்சோடி வெயில் மலர்ந்துகிடந்தது. கொஞ்சம் மணற்பாங்கான வெளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அந்தக் கிராமத்து மனிதர் மூவர், சேகரை வினோதமாக ஏற இறங்கப் பார்த்தபடி பக்கத்தில் வந்து ‘வணக்கம்’ சொன்னார்கள். “நீங்கதான் எலக்சன் ஆபிசரா, சார்”

இங்கதான் ஓட்டுப் போடுவாங்க, உக்காருங்க சார் தலையாரியையும் கணக்குப் பிள்ளையையும் கூட்டிட்டு வர்றோம்.”

சேகரின் வாடிய முகத்தைப் பார்த்ததும் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர்களுள் ஒரு சிறுவனை அழைத்து ‘தம்பி ராசா, சாருக்கு ஒரு செம்பில தண்ணி கொண்டாந்து குடு, பாவம் தாகத்தில் இருப்பாரு போல இருக்கு!’

“ரொம்ப நன்றி, நான் பாட்டில்ல தண்ணீர் கொண்டாந்திருக்கேன். உங்க ஊரு வி.ஏ.ஓ.வை வரச் சொல்லுங்க.”

ஒரு பையன் பள்ளிக்கூடத்தில் கிடந்த கிழிந்த பேப்பர் துண்டு துணுக்குகளை ஒரு மூலையில் ஒதுக்கிக் கூட்டிச் சுத்தம் செய்து கொடுத்தான். சேகர், தான் கொண்டு வந்த எலுமிச்சை சாதப் பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிடத்தொடங்கினார். அந்தப் பையனையும் சாப்பிடச் சொன்னார்.

“இல்ல சார், தேங்க்ஸ் சார், நாங்க பள்ளிக்கூடம் இல்லாத நாள்ல மத்தியானம் சாப்பிடமாட்டோம். பசிக்காது சார். விளையாண்டுகிட்டே இருக்கோம்ல பசி தெரியாது சார். நீங்க சாப்பிடுங்க சார்.”

சேகருக்குப் பசி அடங்கி மனசை பிசைந்த மாதிரி உணர்வு. விரித்தப் பொட்டலத்தைச் சாப்பிட்டாகணுமே. தள்ளி முள்ளி விழுங்கினார். |

பைக்கில் கிராம அதிகாரி வந்தார். கண்ணைப் பறிக்கும் வெள்ளை. புழுதி படர்ந்த இந்தக் கிராமத்தில் சேறுபடாத கொக்கு வெள்ளை சட்டை வேட்டி, சேகருக்கு ஆச்சரியமாக இருந்தது. பரஸ்பரம் இருவரும் வணங்கி அறிமுகப்படுத்திக் கொண்டனர். தலையாரி, தொங்கு தொங்கென்று ஓடிவந்தார். ஐம்பது வயது இருக்கும். கருத்த மேனியில் அவரது துண்டு மட்டும் கொஞ்சம் பளிச்சென்று இருந்தது. வணங்கினார்.

“சார், பண்ணெண்டு மணிக்கெல்லாம் மண்டலத் தேர்தல் அலுவலர் வந்தார். நீங்க ஒருத்தரும் வரலைன்னதும் டைரியில குறிச்சிட்டு ரெண்டு மணிக்கு வர்றோம்மினுட்டு போயிட்டாரு. மணி ரெண்டாகப் போகுது சார். ஜீப்பும் லாரியும் வந்துரும்” என்றார். சேகருக்குள் பயம் கவ்வியது.

கிராம நிர்வாக அதிகாரி சேகரை உள்ளே அழைத்துப் போய் “எங்கெங்கே எத்தனை லைட் கட்டணும்” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, தலையாரியிடம் சொல்லி எலக்ட்ரீஷியனை வரச் செய்தார். எலக்ட்ரீஷியன் தேவையான இடங்களில் குழல் விளக்கு களைக் கட்டிவிட்டு, மின்கம்பத்தில் ஏறி தற்காலிக இணைப்பைக் கொடுத்தார். வெயிலைக் கேலி செய்தபடி விளக்குகள் ஒளிர்ந்தன. தற்காலிக இணைப்பின் ஸ்விட்சை அணைத்தார்.

“பார்தீங்கல்ல சார் எல்லா லைட்டும் எரியும். தேவைப்படும் போது ஸ்விட்சை போட்டுடுங்க எல்லாம் ஒரே கனக்ஷனில் தான் இருக்கு.”

“காற்றாடி சுற்றாதா?”

“சார், காற்றாடி போட்டதில் இருந்து அது சுற்றி நான் பார்த்ததில்லை சார்.”

“கொசுக்கடியில், ஓட்டுக்கூரை புழுக்கத்தில் காற்றாடி இல்லாம இருக்கமுடியாதே! வி.ஏ.ஓ. சார், ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க

சார்!”

கிராம நிர்வாக அதிகாரி எலக்ட்ரீஷியனை தாஜா செய்தார்.

“ரெண்டு பேனையாவது ஓட விடப்பா. பாவம் டவுன்ல இருந்து வர்றாங்க. இந்த ஊருக்கு வந்தவங்களைச் சிரமப் படுத்தலாமா….? அவங்க இந்த ஊரைப் பற்றி தப்பா நினைப்பாங்க இல்ல? ஏதாவது செஞ்சு காற்றாடியைச் சுத்தவிடு. உனக்குக் கூடுதலாக பணம் வாங்கித்தர்றேன்.” எலக்ட்ஷியன் கையைப் பிசைந்தார். அங்குமிங்கும் ஓடினார். ஸ்விட்சை நோண்டினார். ஒரு கம்பை வைத்து காற்றாடிகளைச் சுழலச் செய்தார். மெல்ல மெல்ல சுழல ஆரம்பித்தன. “இதே வேகம்தான் சார், குறைக்க முடியாது, கூட்டவும் முடியாது.”

சேகருக்குக் கொஞ்சம் மனப்புழுக்கம் குறைந்தது.

“ரொம்ப நன்றி சார். வி.ஏ.ஓ. சார் மற்ற நாலுபேரும் லேடீஸ் தான். அவங்க தங்க, திங்க, குளிக்க வெளியே கிளியே போய்வர ஏதாவது வசதி செஞ்சு கொடுங்க சார்! இன்னிக்கும் நாளைக்கும் நாங்க அஞ்சுபேரும் இங்கதான் தங்கியாகணும். கொஞ்சம் உதவி பண்ணுங்க சார். பிளீஸ்.”

சார், லேடீஸ் வேணுமனா இந்த ஸ்கூல் பாத்ரூம், லெட்டின் பயன்படுத்தட்டும். நீங்க வெளியே போயி உங்க வேலைகளை முடிச்சுட்டு வந்திருங்க சார். வேறு வழியில்ல. கிராமத்துல கக்கூஸ் பாத்ரூம் எல்லாம் இன்னும் வரலை. எல்லாம் வெளியில தான். நாமதான் சமாளிச்சுக்கனும்!

திறந்தவெளி பழக்கமில்லை. சேகருக்கு மலக்குடல் ஒட்டி மூடிக் கொண்டதுபோல் உணர்வு.

வண்டிச்சத்தம் கேட்டது. ஒரு ஜீப்பும் லாரியும் வந்தன. ஜீப்பிலிருந்து குதித்து இறங்கிய மண்டலத் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் கையில் கோப்புடன் வாக்குச் சாவடிக்குள் போனார். அவரைத் தொடர்ந்து இரு அலுவலர்கள் ஓடினர். சேகரும் அரக்கப் பரக்க எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னார். மண்டல அலுவலர் அவரை ஏற இறங்கப் பார்த்தபடி, “என்ன சார் பன்னெண்டு மணிக்கெல்லாம் பூத்துக்கு வரச்சொல்லி இன்ஸ்ட்ர க்சன்! இவ்வளவு லேட்ட வந்திருக்கீங்க… சரி இந்தாங்க உங்க பூத்துக்கு உள்ள மெட்டிரியல வாங்கிக்குங்க. பட்டியல் படி சரியா இருக்கான்னு பார்த்து வையுங்க. இல்லாததைக் குறிச்சு வைங்க. அஞ்சு மணிக்கு வருவோம். இல்லாததைச் சொன்னீங்கன்னா அடுத்த ரவுண்ட்ல வரும்போது குடுத்துருவோம். சரி மத்த நாலு பேரும் இன்னும் வரலையா…. என்ன இப்படி பொறுப்பு இல்லாம இருக்காங்க? மாவட்டத் தேர்தல் அதிகாரிக்குத் தெரிஞ்சா ஸ்பாட்லயே சஸ்பென்ட் பண்ணிருவாரு” என்று சேகரை பேசவிடாமல் மண்டல அலுவலகர் அடுக்கிக் கொண்டே போனார்.

சேகர் கொஞ்சம் பவ்வியமா “இந்தக் குக்கிராமத்துக்கு பஸ் வசதியே… இல்லையே சார்.”

“ஆமா சார், அதனாலதான் முன்னாலயே வந்துரணும்னு நாங்க சொன்னோம்ல்ல! சரி, சரி நாலு மணி வரைக்கும் பாங்க. யாரு வர்லையோ… போன்ல உடனே சொல்லுங்க. உங்களுக்கு மாற்று ஏற்பாடு பண்றோம்.”

“சரி சார், இங்க செல்லுக்கு டவர் கிடைக்கலை. எப்படி போன் பண்றது?”

“சரி, சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க சார், இருக்கிற வசதியை வச்சுதான் தேர்தல் நடத்தியாகனும். உங்களை மாதிரி நாங்களும் அது இல்ல, இது இல்லன்னு சொன்னா, சரி வீட்டுக்குப் போங்கன்னு கால்கடிதாசியைக் கிழிச்சுக் கொடுத்திரும் அரசு!”

சேகர் நிலைகுலைந்து போனார். “சார் கவலைப்படாதீங்க சார். எங்களால் முடிஞ்ச உதவியைச் செய்வோம். வந்த சாமான்களை எல்லாம் சரி பாருங்க. கொடுத்த இன்ஸ்ட்ர க்ஷன்படி பூத்தை அரேஞ்பண்ணுங்க. கட்சி சின்னம் வர்ற மாதிரியான படங்களை எல்லாம் இந்த ஸ்கூல் பசங்களை விட்டு அப்புறப்படுத்திருங்க. தலையாரியையும் வி.ஏ.ஓ.வையும் துணைக்கு வச்சுக்குங்க. அவங்க உதவி செய்வாங்க! வி.ஏ.ஓ.சார், எலக்சன் புரோசிடிவ் ஆபிசர் சாருக்கு வேணுங்கிற உதவியைச் செஞ்சு குடுங்க. இந்தப் பூத்தில எந்தப் புகாரும் வராமப் பாத்துக்குங்க!” கிராம நிர்வாக அதிகாரியும், தலையாரியும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் மாதிரி தலையாட்டினர்கள்.

வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டு, பதிவேடுகள் கொண்ட இரண்டு சாக்குள் இறக்கப்பட்டன. மூங்கிலுக்குக் காக்கி உடை போட்ட மாதிரி ஒரு காவலர் சீருடையில் வந்து வணக்கம் சொன்னார். பழைய காக்கிச் சீருடை அணிந்த ஒரு கிழவர் வந்தார். முன்னாள் இராணுவ வீரர் என்றார், காலமும் கவலையும் உறிஞ்சி சப்பிய முகத்தில் பெரிய மீசை. முகம் மீசையைத் தாங்குகிறதா, மீசை முகத்தைத் தாங்குகிறதா என்ற சந்தேகம் எழும் தோற்றம். சோர்ந்த விழிக்குண்டுகள் குழிக்குள் கிடந்தன. மாடு இளைத்தாலும் கொம்புகள் இளைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றும் முகம். வணக்கம் சொன்னார். அவரவர் கைப்பையைச் சுவரோரத்தில் வைத்துவிட்டு உடலை நெட்டி முறித்தனர். ஜீப்பும் லாரியும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போனது.

மணி மூன்று இருக்கும். ஒரு பைக்கில் கணவன் பின்னால் கைக்குழந்தையை ஏந்தியப்படி பெண் ஒருவர் வந்தார். வணக்கம் சொன்னர். “என் பெயர் ஜாஸ்மின், ரெண்டாம் நிலை அலுவலர்”

“வணக்கம்மா, வாங்க இந்தப் பொருள்களை எல்லாம் எடுங்க. இந்தப் பட்டியல்படி சரியா இருக்கான்னு பார்ப்போம்.”

ஜாஸ்மின் குழந்தையைக் கணவனிடம் கொடுத்தார். அது போக மறுத்து அழுதது. சமாதானம் சொல்ல கணவர் குழந்தையை வாங்கி வேடிக்கை காட்ட வெளியே கொண்டு போனார்.

“சார் இதுதான் எனக்கு முதல் எலக்ஷன் டூட்டி சார். ஒன்னுமே தெரியாது சார், அஞ்சு மாத கைக்குழந்தை, பால் குடியை இன்னும் மறக்கலை சார். நீங்கதான் கொஞ்சம் ஹெல்ப் பன்னணும் சார்!”

விஷவேகத்தில் சேகருக்கு கோபம் உச்சந்தலையைத் தொட்டது. “ஏம்மா நீங்களாம் ஏம்மா எலக்ஷன் டூட்டியை ஒத்துகிட்டீங்க? சூழ்நிலையைச் சொல்லி வேற யாருக்கும் மாற்றி இருக்கலாமில்ல?”

“சார், நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம். தாசில்தார் ஒத்துக்க மாட்டேனுட்டார் சார். கலக்டரை பார்க்கச் சொன்னாரு. கலக்டர், ‘போட்ட டூட்டியை பார்த்தாகனும் இல்லைன்னா சஸ்பென்ட் பண்ணிருவேன்னு சொல்றார். வேலையில சேர்ந்து இன்னும் ரெண்டு வருஷம் கூட முடியலை சார்.”

ஜாஸ்மின் கண்ணீர் பொங்கச் சொன்னார். கணவன் இதைப் பார்க்காதது போல் குழந்தையைக் கொஞ்சி கவனத்தினை மாற்ற முயன்று கொண்டிருந்தார்.

ஜாஸ்மின் என்ற பெயர் அவர் மனதில் ஈர்ப்பும் கிளர்ச்சியும் ஏற்படுத்தியது. ஜாஸ்மினை நேர் கொண்டு பார்க்காமலே குனிந்து கொண்டார். ஜாஸ்மினின் குரல் உருக்கம் சேகரது இறுக்கத்தைத் தளர்த்தியது.

“ஏம்மா நீங்க இப்படி சொல்வதற்காகவாவது ஆபிஸர்னு நானிருக்கேன். நான் எனது சிரமத்தை யார்கிட்ட சொல்ல முடியும்? எனக்கும் எலக்ஷன் டூட்டி புதுசுதான். நான் பத்து வருஷம் தனியார் பள்ளியில வேலை பார்த்துட்டு அரசு வேலையில் நுழைந்து ஒரு வருஷம்தான் ஆகுது. என்ன செய்ய? அரசு உத்தியோகம். பொறுப்பையும் கடமையையும் தட்டிக்கழிக்க முடியாது. ஆளுக் கொரு வேலை பார்த்துதான் ஆகணும்!”

புலம்பிப் பயனில்லை. சேகர் சொல்ல படிவங்கள், பொருள்கள் ஒவ்வொன்றாய் எடுத்துக் காண்பித்து வைத்தாள் ஜாஸ்மின். பொருள் சரிபார்ப்பு மும்முரமாய் நடந்தது.

வேகுவேகுன்னு நடந்து வந்ததில் வழியும் வியர்வையோடு மூன்று பெண்கள் வந்து “வணக்கம்” சொன்னார்கள். நிமிர்ந்த சேகர், எரிச்சல் கொப்பளிக்க அவர்களைப் பார்த்தார். அவர்கள் பயம் கலந்த பார்வையோடு விறுவிறுத்து வெலவெலத்து நின்றனர். ஒருவர் மஞ்சுளா முதல்நிலை அலுவலர், சிவந்த முகம் நரை பூத்து கூருண்ட கேசம், வத்தலான தேகம். சிவந்த முகத்திலும், கண்களிலும் இரத்தப்பசையே இல்லை. அடுத்தவர் பெயர் முத்துமணி. ஆணாக இருக்கலாம் என்று சேகர் நினைத்திருந்தார். முத்துமணி குள்ளமாக கறுப்பாக இருந்தாலும் பார்வையில் துறுதுறுப்பு இருந்தது. மூன்றாமவர் குளோரி வயதுக்கு மீறிய கருத்த பருத்த தேகம். களைத்த முகம். இவர்களது பெயர்கள் சேகர் மனதில் எழுப்பி யிருந்த பிம்பங்கள் பொய்த்துப் போயிற்று.

“சரி வாங்க. வந்தீட்டிங்க. ஆளுக்கொரு வேலையா பார்ப் போம்.” பொருள்களைச் சரிபார்க்கும் வேலையினூடே பெண்கள் நால்வரும் தங்களுக்குள் பார்வையைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கு ஒருவர் உதவியும் ஆறுதலுமாக இருப்போம் எனப் பார்வை தொனித்தது.

பட்டியல்படி பொருள்கள் சரியாக இருந்தன. ஐந்துமணிக்கு ஜீப் வந்தது. மண்டலத் தேர்தல் அலுவலர் பார்வையிலேயே எல்லா வற்றையும் அளந்து அறிந்து கொண்டதுபோல் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

“சார், எல்லாம் சரியா இருக்கா சார்!”

“சரியா இருக்கு சார். தங்க, திங்க வசதிதான் கொஞ்சம் பத்தாது.”

“சார், கவலைப்படாதீங்க சார்! வி.ஏ.ஓ.விடம் சொல்லி யிருக்கேன். அவரு கவனிச்சுக்குவார் ஏதாவது பிரச்சினைன்னா போன் பண்ணுங்க!”

“கொடுத்திருக்கிற இன்ஷ்ட்ரக்ஷனை நல்லா படிங்க. ஏழு மணிக்கெல்லாம் வாக்குப் பெட்டிகள் தயாராக இருக்கனும். ஏஜென்ட்கள் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகளைத் திறந்து காட்டி, கையெழுத்து வாங்கி பெட்டியை மூடியிறனும். சரியா எட்டு மணிக்கு வாக்குப்பதிவை ஆரம்பிச்சிறனும். ஒவ்வொரு மணிக்கு ஒரு தரம் ஆண் வாக்காளர், பெண் வாக்காளர் ஓட்டுப் பதிவை குறிச்சு வச்சு கேட்கும்போதெல்லாம் சொல்லனும். பதிவுக் கணக்கும் வாக்குச்சீட்டுக் கணக்கும் ஒத்துப்போகணும். எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமத் தேர்தலை சுமூத்தா நடத்திருங்க. வாழ்த்துக்கள். ராத்திரி ஒருமுறை வருவோம். கலெக்டரும் வந்தாலும் வருவாரு. கான்ஸ்ட பிள் சார், ஆர்மி சார் கவனமாப் பார்த்துக்குங்க வரட்டுமா” சொல்லிக்கொண்டே பறந்தார் மண்டல அலுவலர்.

“எது எப்பிடி இருந்தாலும் வேலை நடந்தாகணும் என்பதிலேயே அதிகாரிகள் குறியா இருக்காங்க” என்று சேகர் முனங்கினார். அரசு அறிவுறுத்தியபடி வாக்குச்சாவடி அமைக்கும் பணி நடந்தது. அந்தந்த அலுவலர்களை வாக்காளர்கள் அணுகும்படியாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேஜைகளும் நாற்காலிகளும் ஆட்டம் கண்டிருந்தன. பழைய நோட்டு அட்டைகளைத் தக்க வாறு கிழித்து முட்டுக்கொடுத்து ஆட்டம் குறைக்கப்பட்டது.

வெயிலின் ஆட்சி மாறி இருளின் ஆட்சி அரங்கேறியது. கொசுக்கள் கொண்டாட்டம் தாள முடியவில்லை. முகத்திலும், காதிலும் மோதி ரீங்கரித்தது. கைகளைத் தட்டி விரட்ட வேண்டி யிருந்தது. சேகர் முன்னெச்சரிக்கையாக வாங்கி வந்த கொசுவர்த்தி களைக் கொளுத்தி வைத்தார். புகைக் கோடாய் எழும்பி அலை அலையாய் பரவின. கொசுக்களின் ரீங்காரம் கொஞ்சம் மட்டுப் பட்டது. “மணி ஏழாகப் போகுது கொசுத்தொல்லை குறையும்” ஆர்மிகாரர் சொன்னார்.

பெண்கள் அவரவர் பணி முடித்து கொஞ்சம் கைகால்களை உதறி எழுந்தனர். அவர்கள் பார்வையாலேயே உரையாடிக் கொண்டனர். “சும்மா கேளுங்க” என்று மஞ்சுளா கிசுகிசுத்தார். சேகரின் காதுகள் விடைத்தன. தலைநிமிராமலேயே அவரது கண்கள் கீழ்ப்பார்வையாக வட்டமிட்டு மேய்ந்து திரும்பியது. ஜாஸ்மினின் குழந்தை அழும் குரல் கேட்டது.

சார், குழந்தை அழுகுது, குழந்தையை வைத்துக்கொண்டு இங்க தங்கமுடியாது. இப்போ வீட்டுக்குப் போயிட்டு காலையில வர்றேன் சார்.”

சேகர் தலைநிமிராமலேயே வாக்குசீட்டின் பின்புறம் கையெழுத் திட்டபடி மவுனம் சாதித்தார்.

“சார், சார்” ஜாஸ்மின் தயங்கித் தயங்கிப் பேசினார். நா வறண்டு ஒட்டிக் கொண்டது.

“ஏம்மா உங்களுக்கு வேலையைப் பற்றி பயமும் அக்கறையும், இருக்காம்மா, நாலுவகையான வாக்குச்சீட்டுகள். மொத்தம் நாலாயிரம் சீட்டில் பூத்சீல் போட்டு தயாரா வைக்கணும். நீங்க பாட்ல வீட்டுக்குப் போகணும், காட்டுக்குப் போகணும்னு ஒத்தக் கால்ல நிக்கிறீங்க?”

“சார், கோவிச்சுக்காதீங்க சார், கைக்குழந்தை ராத்திரி எல்லாம் பசியில பாலுக்கு அழும். தூங்க விடாது. அவங்க அப்பா மாதிரி… என்று சொல்ல வந்தவள் நாக்கைக் கடித்து நிறுத்தினார். ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு மேஜைமீது விழுந்தது. சேகரின் கவனத்தில் தெறித்தது. சேகருக்கு நெஞ்சுசுட்டது. உறைந்த மனம் பனிக்கட்டியாகக் கரைந்தது.

“சார், பூத்சீல் வைக்கிற வேலையை நாங்க முடிச்சுத் தர்றோம். சார். பாவம் பிள்ளைக்காரப் பொண்ணு. அனுப்பி வைங்க சார்” என்று மஞ்சுளா ஆரம்பிக்க மற்ற இருவரும் ஒரே குரலில் வழிமொழிந்தனர்.

“சரிம்மா, இப்போ போயிட்டு காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்துறணும். வராட்டி நான் ஏழு அஞ்சுக்கெல்லாம் போன் பண்ணி மாற்று ஏற்பாடு பண்ண வேண்டியதிருக்கும். அதனால வர்ற பின் விளைவுக்கெல்லாம் நான் பொறுப்பல்ல!”

“தேங்க்ஸ் சார், காலையில ஏழு மணிக்கெல்லாம் டாண்ணு வந்துருவேன் சார்.”

மகிழ்ச்சியையும் நன்றியையும் பார்வையால் மற்றவர்களிடம் தெரிவித்துவிட்டு பர்தா அணிந்து பையை எடுத்துக்கொண்டு ஜாஸ்மின் கிளம்பினார். குழந்தை தாவிக்கொண்டு வந்து ஜாஸ்மினிடம் ஒட்டிக்கொண்டது. ஜாஸ்மின் கணவர் சேகருக்கு நன்றி சொல்லி வண்டியைக் கிளப்பினார்.

மஞ்சுளா, முத்துமணி, குளோரி மூவரும் வாக்குச் சீட்டுகளைப் பிரித்து பூத்சீல வைக்கச் சொல்லிவிட்டு ஓர் ஓரமாய்ச்சென்று கைலியை மாற்றிக்கொண்டு சேகர் வெளியே கிளம்பினார்.

வெளியே நிலா வெளிச்சம் இருட்டோடு ஊடுருவி கருப்பு வெள்ளைப்படமாக இளந்தென்றல் காற்றோடு கலந்து மனதை மயக்கியது. ஊருக்கு வெளியே கண்மாய்ப் பக்கம் போனார். உடல் இறுக்கமும் மனப்புழுக்கமும் தளர்ந்தது. கண்மாயை ஒட்டிய சிறுபாலக்கட்டையில் பத்துக்கு மேற்பட்ட ஆண்கள் குதூகலமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இருபதிலிருந்து நாற்பத்தைந்து வரை வயசு வேறுபாடில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். பாலக் கட்டையில் காலி பாட்டில்களும் மிச்சர் பொட்டலங்களும், வாழைப் பழங்களும் தோலுரித்துக் கிடந்தன. அவர்களைக் கடக்கும்போது குப்பென்று எழுந்த நாற்றம் சேகரை விலகி நடக்கச் செய்தது. சேகரைப் பார்த்து, “சார் வணக்கம், ரோட்டாரமா இருந்துட்டு வாங்க சார், கம்மாய்க்குள்ளே போயிறவேணாம். பூச்சிப் பொட்டுக இழையும்” என்றது ஒருகுரல்.

“சார் உங்களுக்கும் பழக்கம் உண்டா சார். வாங்க சார். உங்களுக்கும் வச்சிருக்கோம்” என்றது இன்னொரு குரல். இதை தொடர்ந்து வான்கொழி கனைத்தது மாதிரி சிரிப்பொலி.

சேகர் கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் ரோட்டோரம் ஒதுங்கி நடந்தார். சற்றுத் தொலைவில் போய் வந்த வேலையை முடித்துக்கொண்டார். நிலவு இதை எல்லாம் பார்த்து சிரித்தபடி மேகத்துள் ஒளிந்தும், ஒளிர்ந்தும் “கண்ணாமூச்சு” ஆடிக் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டம் கலையுமா என்று சற்று காத்திருந்தார். ஒரு பத்து நிமிடம் பார்த்தார். கூட்டத்தின் குரல்கள் நாளைய தேர்தல் கொடுக்கல் – வாங்கல் குறித்தும் சாதிவாரியான நபர்களையும் பெயர்களையும் குறித்து தடித்த குரல்களின் அடைமொழிகளோடு பேச்சு ஆரம்பமாயிற்று. வார்த்தை மோதல்களின் நாற்றம் மலத்தையும் விஞ்சியது.

“ஏய், தேர்தல் அதிகாரி வந்திருக்காருப்பா, நாளைக்கு வில்லங்கம் கில்லங்கம் ஏதாவது பண்ணிறப் போறாரு. மெல்லப் பேசுங்கப்பா” என்றது ஒரு குரல்.

“வரட்டும் மச்சான். அவரையும் கவனிக்கிற மாதிரி கவனிச்சிருவோம். கவனிப்புக்கு மசங்காத ஆளு யாரு இருக்கா…”

பேச்சுக்களின் போக்குகள் சேகரின் மனதைக் கலக்கியது. மேல்ல ஓசைபடாமல் கம்மாய்க்குள் இறங்கி தட்டுத்தடுமாறி நடந்து கண்மாயின் தெற்கு கரை வழியாக ஏறி வாக்குச் சாவடிக்குள் நுழைந்துகொண்டார். பனிப்பொழிவையும் மீறித் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

பெண்கள் மூவரும், சேகர் கையெழுத்திட்ட வாக்குச் சீட்டுகளில் எல்லாம் பூத்துசீல்’ குத்தி வகை வாரி வரிசைக் கிரமமாக அடுக்கி ரப்பர்கள் இணைத்திருந்தனர். சேகருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“ஏம்மா டிபன் கொண்டு வந்திருக்கீங்களா. ஏதாவது ஏற்பாடு செய்யனுமா?”

“தேங்ஸ் சார். நாங்க கொண்டு வந்திருக்கோம். உங்களுக்கும் வேணும்னா நாலு இட்லி தர்றோம்.”

“தேங்ஸ்மா நானும் கொண்டு வந்திருக்கேன்”

“சார் வாங்க சேர்ந்து சாப்பிடுவோம்” முத்துமணி அழைத்தார்.

“இல்லம்மா நீங்க சாப்பிடுங்க. நான் இன்னும் நூறு கையெழுத்து போட்டுட்டு அப்புறமா சாப்பிடறேன்”

“சார், லேடீஸ் பாத்ரூம்ல தண்ணீர் கொஞ்சமாத்தான் இருக்கு. குளிக்க கிளிக்கப் பத்தாது. தண்ணீருக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க சார்”

“சரிம்மா சொல்றேன்” வெளியே வந்து தலையாரியிடம் சொன்னார். தலையாரி, “அந்த மோட்டார் ஓடாதுசார். இருந்தாலும் தண்ணிக்கு ஏற்பாடு பண்றேன் சார்” என்று வெளியே போனார்.

ஊரில் மொத்தம் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று வாக்காளர்கள். சராசரியாக எழுபது சதவீதம் பதிவாகலாம் அதனால சுமார் அறுநூறு வாக்குச்சீட்டுகள் என்ற அடிப்படையில் நாலு வித வாக்குச்சீட்டுகளில் இரண்டாயிரத்து நானூறு கையெழுத்துப் போடவேண்டும் என்று கணக்கிட்டுத் தலைமை தேர்தல் அலுவலர் சேகர் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு விட்டு வந்த பெண் அலுவலர்கள், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஒன்றியப் பெருந்தலைவர் என ரகம் பிரித்து அடுக்கினர்.

தலைமை அலுவலரும் சாப்பிட்டுவிட்டு வந்து கையெழுத்து இடுவதைத் தொடர்ந்தார். கை வலித்தது. ஒவ்வொரு கையெழுத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நினைக்க வலி மறந்தது. பேச்சுத் துணைக்கு ஒரு ஆண் அலுவலர் கூட இல்லாமல்போனது வருத்தம். போலிஸ்காரரரிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றால் அவர் வெளியே போய் உட்கார்ந்து கொண்டார். முன்னாள் ராணுவவீரர் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தவரோ என்ன அலுப்போ, விரித்துப் படுத்ததும் குறட்டைச் சத்தம் கேட்டது. இவர் நமக்கு பாதுகாப்பா, இவருக்கு நாம் பாதுகாப்பா என்று சேகர் சிரித்துக்கொண்டார்.

இரண்டாயிரத்து நானூறு வாக்குச் சீட்டுகளுக்கு வாக்குச் சாவடி முத்திரை இடுவதற்குள் பெண் அலுவலர்கள் இரண்டுமுறை கழிவறைப்பக்கம் போய் வந்தனர். மஞ்சுளாவின் நடையில் பேச்சில் சோர்வும் வலியும் தொனித்தது. ஊர் அடங்கி நிசப்தமாக இருந்தது அவ்வப்போது கோட்டான்கள் குழறல் சத்தம். ஒற்றை நாய் குரைக்கும் சத்தம், அதைத் தொடர்ந்து இன்னொரு நாய் பதிலுக்குக் குரைப்பது மாதிரி சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. கையெழுத்து இட்டு இட்டு வலது புஜம் வலித்தது. எல்லா ஆவணங்களையும் பத்திரப்படுத்தி வைத்தார். அதனருகிலேயே படுக்கையை விரித்துப்படுத்தார்.

யாரோ நடக்கும் சத்தம் கேட்டுப் பரப்பரப்போடு எழுந்தார். மஞ்சுளா கழிவறைப் பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். நடையில் தளர்ச்சி. கையில் ஒரு காகிதச் சுருள். மீண்டும் படுக்க உடல் சோர்வு தூண்டியது. மனசு கேட்கவில்லை மெல்ல எழுந்து மஞ்சுளா அருகில் போய் “என்னம்மா அடிக்கடி பாத்ரூம் போறீங்களே, உடம்பு என்ன செய்யிது….?”

மஞ்சுளாவின் குரலில் மூச்சுத் திணறலும் படபடப்பும் இருந்தது. சுழலும் மேஜை விசிறியில் சிக்கிய காகிதம் மாதிரி தவிப்பு.

“சார் ஒண்ணுமில்லை சார்” கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு “சார் கூடப்பிறந்த பிறப்பா நினைச்சு சொல்றேன். மெனோபஸ் பீரியட் சார். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கு. எலக்சன் டூட்டி வேணாம்னு கேன்சல் பண்ண முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்யிறது…. பெண்ணா பிறந்ததுக்கு வலியை சுமந்துதானே ஆகணும்” குரல் தழுதழுத்தது.

அம்மா ரத்தம் பிசுபிசுத்த ஈரச்சேலையோடு இடுப்பைப் பிடித்துக்கொண்டு முக்கல் முனகலோடு அடுப்படிக்குள் நகர்ந்தது சேகரின் நினைவில் நிழலாடியது. நெஞ்சைப் பிசைந்தது. ரெண்டு வினாடி கண்களை மூடியபடி நின்றார். எதிரில் மஞ்சுளா நிற்பது நினைவுக்கு வந்தது. அவனது அடிவயிற்றிலிருந்து எழும் துடிப்புகள், கொந்தளிப்புகள் வடிந்து அடங்கியது. முதன் முதலாய் ஒரு அந்நியப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசினார்.

“சரிம்மா நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க” காலையில் பார்ப்போம். குட்நைட். குளோரியும் முத்துமணியும் போர்வைக்குள் அடைக்கலமாய் அட்டைப்பூச்சிபோல் சுருண்டு படுத்திருந்தனர். விசிலை எடுத்தபின் குக்கரிலிருந்த வெளிவரும் ஓசைபோல பெருமூச்சு வந்தது. படுக்கையில் படுத்தார். அம்மாவும் அக்காவும் பட்ட வலிகள் எல்லாம் நினைவைபுரட்டின. படுக்கையில் புரண்டார். எப்போது தூங்கினாரோ… செல்லிலிருந்து காலை ஐந்து மணிக்கு அலாரம் சத்தம் எழுப்பியது.

போலிஸ்காரர் உட்பட அனைவரையும் எழுப்பிவிட்டார். அவர்களைக் தயாராகச் சொல்லித்தான் குளிக்கத் தேவையான வற்றை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். கண்மாயை ஒட்டிய ஒரு தோட்டத்தில் மோட்டடார் ஓடியது. நல்லதாகப் போச்சு. அலுப்பு தீர நல்ல குளியல். கிராமத்துப் பெண்கள் அவரவர் கூடைகளில் குப்பை அள்ளிக்கொண்டு ஊருக்கு வெளியே போனார்கள். அங்குமிங்கும் கோழி கூவும் சத்தமும், குருவிகளின் சத்தமும் கேட்டன. இனிமையாக இருந்தது. நகரத்தில் கேட்காத பூபாள கீதங்கள்.

முன்னேற்பாடு பணிகள் நினைவுக்கு வர வேகவேகமாகத் திரும்பினார். இவர் வாக்குச் சாவடிக்குப் போனதும் பெண் அலுவலர்கள் குளிக்கச் சென்றனர். காவலரும் இராணுவவீரரும் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே போய் வந்தார்கள். தலையாரியிடம் சொல்லி எல்லோருக்கும் டீ வாங்கிவரச் சொன்னார். மணி ஆறரைக்கு எல்லாரும் தயாராகிவிட்டனர்.

வாக்குச்சாவடி முகவர் ஒருவர்பின் ஒருவராக வந்து குவிந்தனர். ஒரு வாக்காளருக்கு இரண்டு மூன்று முகவர்கள் வந்திருந்தனர். ஒருவர் முதன்மை முகவர் இன்னொருவர் மாற்று முகவர் என்ற அடிப்படையில் அவர்களது கையொப்பம், அங்க அடையாளம் நிழற்படம் சரிபார்த்து அனுமதித்தார். மற்றவர்களை வெளியேற்றினார். எல்லாரது முன்னிலையில் காலி வாக்குப்பெட்டிகளைக் காண்பித்து அவர்களின் ஒப்புதலின்படி நான்கு வாக்குப்பெட்டி களையும் மூடி சீலிட்டார். “சரியாக எட்டுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு தொடங்கிவிடும். அதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்து விடுங்கள்” என்று முதன்மை அலுவலர் சேகர் சொல்ல ஒரு சிலர் போனார்கள். மற்றவர்கள் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

மணி ஏழு பத்தாகிவிட்டது. ஜாஸ்மின் வந்து சேரவில்லை. சேகருக்கு பதற்றம் ஆரம்பம் ஆனது. மஞ்சுளாவும் மணியைப் பார்த்துக்கொண்டார். இரண்டாம் அலுவலரான ஜாஸ்மின் நான்குவிதமான வாக்குச்சீட்டுகளை வரிசைக் கிரமமாகக் கிழித்துத் தரவேண்டும். அவர் பணி மிக முக்கியமான பணி! கவனமாகச் செயல்பட வேண்டிய பணி. இன்னும் வரவில்லையே. மற்ற இரு அலுவலர்களைக் கொண்டு ஓர் அரைமணிநேரம் சமாளிக்கவரும். ஒருநாள் முழுக்கச் சமாளிக்க முடியாதே… ஒரு சொட்டு மண்ணென்ணெய் தரையில் விழுந்தால் போதும் தரைமுழுக்கப் படர்ந்து பரவிவிடுவதுபோல் ஜாஸ்மின் வராத கவலை அனைவரையும் பற்றிக்கொண்டது. பதற்றமானது.

கடிகாரத்தைப் பார்ப்பதும் கிசுகிசுப்பதுமாகவும் இருந்தனர். சேகருக்குக் கோபம் பொங்கியது. ‘பிரச்சினைகளும் நெருக்கடிகளும் வரும்போதுதான் அறிவில் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும். பதறின காரியம் சிதறிவிடும்’ எனச் சங்கத்தலைவர் ஒருவர் அடிக்கடி சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் பதற்றப் பட்டால் ஒட்டுமொத்த வாக்குப் பதிவும் பதற்றத்தில் குளறுபடியாகி விடும். நிதானமாக இருக்கவேண்டும் என முடிவெடுத்தார் சேகர். மற்ற மூவரும் அவரவர் குலசாமிகளை வேண்டிக்கொண்டனர். எதுவும் பேசவும் முடியவில்லை பேசாமலிருக்கவும் முடியவில்லை என்ற நிலையில் நால்வரும் தவித்தனர்.

மணி ஏழு முப்பத்தைந்துக்கு அரக்கபரக்க உடம்பெல்லாம் வியர்வை பொங்க உள்ளே நுழைந்தார் ஜாஸ்மின். “சார், மன்னிச்சுக்குங்க நான் வந்துட்டேன்” என்றபடி எல்லாருக்கும் வணக்கம் சொல்லி பர்தாவை அப்புறப்படுத்திவிட்டுத் தனக்கான இடத்தில் அமர்ந்தார். புழுக்கமான அறையின் ஜன்னலைத் திறந்து விட்டது போல தெம்பும் தெளிவும் எல்லாருக்கும் வந்தது.

சேகர் கிராம நிர்வாக அதிகாரியை அழைத்து எல்லாருக்கும் காலை, மதிய உணவு ஏற்பாடு செய்யவும் அதற்கான தொகையைத் தான் தருவதாகச் சொன்னார்.

ஒரு வாக்காளர் கொண்டு வந்த அடையாளச் சீட்டினையும் அதிலுள்ள நிழற்படத்தையும் ஒத்துப்பார்த்து, முதலாம் அதிகாரி மஞ்சுளா உரக்கப் பெயரை வாசித்துக் கையொப்பம் பெறுவார். முகவர்களும் சரிபார்த்துக் குறித்துக்கொண்டனர். ஜாஸ்மின், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஒன்றியப் பெருந்தலைவர் ஆகிய பதவிகளுக்குரிய தனித்தனி வாக்குச்சீட்டுகளை விவரம் சொல்லி வாக்காளரிடம் கொடுத்தார். மூன்றாம் அலுவலர் முத்துமணி வாக்களரின் வலது கை ஆட்காட்டி விரலைப்பிடித்துச் சிறுதுணியால் எண்ணெய்ப் பசை இல்லாமல் துடைத்து அழியா மையை இட்டார். நாலாம் அலுவலர் குளோரி, வாக்குச்சீட்டுப் பதிவு செய்யும் முத்திரையை மையில் தொட்டுக் கொடுத்து தனித்தனியாக முத்திரையிட்டு அந்தந்த வாக்குகளுக்குரிய பெட்டிகளில் இட்டு பின் முத்திரையைத் திரும்பத் தரும்வரை கவனித்துக்கொண்டு இருந்தார். இத்தனைப் பணிகளும் கிரமமாகச் சரியாக நடக்கிறதா என்று தலைமை அலுவலர் சேகர் கவனித்துக் கொண்டு இருந்தார்.

இப்படியாக வாக்குப்பதிவுகள் மெல்லத் தொடங்கி வேகம் பிடித்தது. நான்கு வாக்குகள் இட்டு ஒரு வாக்காளர் திரும்ப குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் ஆவதால் கூட்டம் நெருக்கியது. முகவர்கள் பெயரைக்குறித்துக் கொண்டே வாக்காளர்களிடம் கண் ஜாடையில், கை ஜாடையில் ஆதரவு திரட்டினர். தலைமை அலுவலர் சேகர் எச்சரித்தார். ஒரு முகவர் தனது உள்ளூர் ஆளுமையை வெளிப்படுத்த குரல் உரக்கப் பேசினார்.

“சார், அந்த மை வைக்கிற அம்மா ‘கையைக் கொடுங்க, கையைத் கொடுங்க’ன்னு ஒரு அரசியல் கட்சி சின்னத்துக்கு ஆதரவா நடந்துக்கிறார். கண்டிச்சு வைங்க. இல்லாட்டி நாங்க எங்க கட்சி சின்னத்துக்கு ஆதரவா பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்போம்” என்று குதித்தார். எல்லாருக்கும் திடுக்திடுக்கென்றது.

சேகருக்குக் கோபம் சுள்ளென்று உச்சந்தலைக்கு ஏறியது. கோபப்பட்டால் தேர்தல் நடத்த முடியாதே… மெல்ல நிதானமாய் எழுந்துபோய் அவரது வலக்கையைப் பிடித்து, “இதுக்கு பேரு என்னா?” இதை எப்படிச் சொல்லலாம்னு நீங்க சொன்னதுக்கப் புறம் நாங்க தேர்தல் நடத்துறோம். இங்க பாருங்க மற்ற ஏஜென்டுகள் எல்லாம் கொஞ்சம் கவனிங்க. ஒழுங்கா தேர்தல் நடத்தவிடாம இந்த ஏஜென்ட் தான் கெடுதல் பண்றார். இவரைக் கட்டுப்படுத்த லைன்னா தேர்தல் நின்னுபோகும். இதற்கு நீங்கதான் பொறுப்பு. இந்த ஊர் ஜனங்களே நீங்கதான் சாட்சி” என்றார். –

இன்னொரு முகவர் எழுந்து, “சார் அந்த ஏஜென்ட் சொன்னது என்னசார் தப்பு? நீங்க ஒரு கட்சிக்கு ஆதரவா செயல்படுறீங்க” என்றார். மூன்றாமவர் எழுந்து, “என்னங்கய்யா ஒரு ஜாதியாளுகளா சேர்ந்துகிட்டு உங்க ஜாதி ஜனங்களை கவனத்தை கவர்வதற்காகச் சத்தம் கொடுக்கிறீகளா….” என்றார். “ஆமாம் உங்க ஜாதி ஆளுக வர்றப்போ நீங்க கத்துங்க” என்றார் இரண்டாமவர்.

“இங்க பாருங்க உங்க ஜாதிப் பிரச்சினைகளை வெளியே வச்சுக்குங்க. இதுமாதிரி சத்தம் கொடுத்து ரகளை பண்ணினீங்கனா பொதுமக்களை சாட்சியா வச்சு தேர்தலை நிறுத்திருவோம். அப்புறம் ராணுவத்தை வச்சுத்தான் தேர்தல் நடக்கும். ஜாதிவாரியா ஆதரவு திரட்டுறது, ஜாடை காட்டுறது எல்லாம் இங்க வச்சுக்காதீங்க… எந்திரிச்சு வெளியே போங்க. உங்களை வெளியேத்திர அதிகாரம் எங்களுக்கு இருக்கு. எந்திரிச்சுப் போங்க” என்று சேகர் உரத்தக் குரல் கொடுத்தார்.)

முகவர்கள் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டு கிசுகிசுத்தபடி உட்கார்ந்து கொண்டனர். நேற்று ராத்திரி கண்மாய்க் கரையில் ஒன்றாகக் குடித்து கும்மாளமிட்ட குரல்கள்தாம் இவை. குடிக்கிற வரைக்கும் ஜாதி இல்லை. குடிச்சு போதை ஏறினதும் ஜாதிக்கொம்புகள் சொந்தபந்தக் கொம்புகள் முளைத்துக் கொள்கின்றன. இப்படித்தான் பதவியில் உட்காரும் வரை எல்லா ஜாதிக்காரர்கள் வோட்டும் தேவை. ஜெயித்துப் பதவிக்கு வந்ததும் தன் ஜாதி, தன் இனம், உறவு என்று போதைகளின் பாதை விரியுது. தடுமாறுது.

சற்று அமைதியானது. சேகர் மூன்றாம் அலுவலர் முத்துமணியிடம் சென்று, “வலது கையைக் காட்டுங்க” என்று சொல்லவேண்டாம். வலது ஆட்காட்டி விரலைக் காட்டுங்கன்னு சொல்லுங்கம்மா” என்றார். சத்தம் கொடுத்த முகவர் அடங்கிப் போனார்.

காலை சிற்றுண்டி வந்தது. ஒருவர் ஒருவராய்ச் சாப்பிட்டுட்டு வாங்க. சாப்பிடப் போனவர் வர்றவரைக்கும் அடுத்த அலுவலர் அவங்க வேலையையும் பார்த்துக்கிடுங்க. நான் கடைசியாக சாப்பிட்டுக்கிறேன்.” இப்படியாகப் பணி தொடர்ந்தது.

ஒன்பது மணி வாக்கில் மஞ்சுளாவும் ஜாஸ்மினும் பதட்டத்துடன் காணப்பட்டனர். மெல்லிய குரலில் கிசுகிசுத்துக் கொண்டனர். சேகர் அவர்கள் பக்கம் பார்வையைத் திருப்பினார் மஞ்சுளா மெல்ல எழுந்துபோய் சேகரிடம் மெதுவாகச் சொன்னார். “சார் ஜாஸ்மின் எட்டேமுக்கால் ஒன்பது மணிவாக்கில் குழந்தைக்குப் பால் கொடுக்கிற வழக்கம். பால் சுரந்து மாரில் கட்டிக்கொண்டு வலிக்குதாம் சார். ஒரு பத்து நிமிஷம் அனுமதி கொடுத்தீங்கன்ன. பாத்ரூம்ல போய் பாலை பீச்சி வெளியேற்றி விட்டு வந்தால் வலி இருக்காது”

“சரி நீங்க ரெண்டுபேரும் சீக்கிரமே போயிட்டு வாங்க” உங்க வேலையை நான் பார்துக்கிறேன்”

சிறுவயதில் தனக்குப் பின் ஒரு தங்கை பிறந்தவுடன் இறந்து போனதும், அம்மா பட்ட வேதனையும் அழுகையும் பக்கத்து வீட்டுப்பெண்கள் சொன்ன யோசனைகளும் நினைவில் ஆடியது. அவர்கள் இருவரும் வரும்வரை அவர்களது பணிகளைப் பதற்ற மில்லாமல் நிதானமாக சேகர் செய்தார். ஒரு பாறாங்கல் சுமையை இறக்கி வைத்த மாதிரி ஜாஸ்மின் பணிக்குத் திரும்பினார். கூச்சமும் பதற்றமும் இருந்தது. யாருடைய முகத்தையும் ஏறிட்டுப் பார்க்க வில்லை. இதை எல்லாம் பார்வையிலேயே புரிந்துகொண்ட முகவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தனர். மண்டல அலுவலர் இடை யிடையே வந்து வாக்குச் சதவீத தகவல் அறிந்து போனார். “ஐந்து மணிக்கெல்லாம் பணத்தோட வந்துவிடுவேன். தயாராக இருங்க” என்று சொல்லிப் போனார்.

வாக்குப்பதிவு மெல்ல மெல்ல ஊர்ந்து ஐம்பத்தைந்து சதவீதத்தைத் தாண்டியது. மணி நாலைத் தொட்டது. வெளியே குடிமகன்களின் கூக்குரல்கள், குதியாட்டம், ஜாதிக்காரர்களின் குழுச்சண்டை எல்லாம் அரங்கேறிக் கொண்டிருந்தது. காவலர் மவுனப் பார்வையாளராக இருந்தார். ‘அவங்க ஊர்ப் பிரச்சினை நாம ஏன் தலையிட்டு வம்பில மாட்டிக்கணும்’ சொல்லிக் கொண்டார். முன்னாள் ராணுவவீரர் சுவாசிக்கும் அய்யனார் சிலையாக இருந்தார்.

நாலரை மணி இருக்கும். ஒருவர் தள்ளாடியபடி உள்ளே நுழைந்து முகவரிச் சீட்டைக்காண்பித்தார். முகவரி சீட்டை பதிவேட்டில் சரிபார்த்துக்கொண்டிருந்த வேளையில் கத்தையாக கொஞ்சம் வாக்குச் சீட்டுகளை ஜாஸ்மினிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டார். காவலரும், ராணுவவீரரும் பின்தொடர்ந்து ஓடிப்பார்த்தனர். பிடிக்க முடியவில்லை . முகவர் ஒருவரும் விரட்டிக் கொண்டே பின் தொடர்ந்து ஓடினார். அவர் திரும்பவே இல்லை. பஞ்சுப்பொதியில் தீப்பற்றியதுபோல் பதற்றம். ஜாஸ்மின் கதறி அழுது கீழே மயங்கினார். மஞ்சுளாவும், முத்துமணியும் தாங்கிப் பிடித்து தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். சேகருக்கு ஈரக்குலையைப் பறித்தது போல உணர்வு. பதறினால் நிலைமை சிக்கலாகிவிடும்.

நிதானமாக ஜாஸ்மினின் இருக்கைக்குப் போனார். எந்த வாக்குச்சீட்டு பறிக்கப்பட்டது பார்த்தார். ஊராட்சித் தலைவருக்கான வாக்குச்சீட்டில் ஒன்பது சீட்டுகள் குறைவதைக் கண்டறிந்தார். அதனை உறுதிப்படுத்திக் கொண்டார். மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார். தொடர்பு கிடைக்கவில்லை. எனினும் தொடர்பு கிடைத்தது போல் பேசினார். இந்நிகழ்வைக் குறுந்தகவலாக மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், மண்டல அலுவலர் ஆகியோருக்கு அனுப்பினார். காவலரும் முன்னாள் ராணுவவீரரும் “இனி வாக்களிக்க வர்றவங்களை சோதித்த பின்தான் உள்ளே அனுப்பனும்” என்றார். ஒரு மனு தயார் செய்து முகவர்களிடம் சாட்சிக் கையெழுத்திடச் சொன்னார்.

முகவர்கள் கையெழுத்திட மறுத்தனர். “அப்போ வாக்குச்சீட்டுப் பறிப்புக்கு நீங்களும் உடந்தைன்னு நான் புகார் செய்து உங்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்ற கண்டிப்பான குரலில் சத்தமாகச் சொன்னார். ஒருவர் கையெழுத்திட மற்றவர்களும் முனங்கிக்கொண்டே கையெழுத் திட்ட னர்.

பதற்றத்தோடும் மெதுவாகவும் வாக்குப்பதிவு தொடர்ந்தது. சரியாக ஐந்து மணிக்கு வாக்குப்பதிவை நிறுத்தினார். முகவர்களிடம் வாக்குப்பதிவு விவரங்களைத் தெரிவித்துவிட்டு நான்கு பெட்டிகளையும் மூடி அரக்கு முத்திரை இட்டார். இரு முகவர்கள் குட்டிபோட்ட பூனைபோல வாக்குப் பெட்டிகளைச் சுற்றிச்சுற்றி வந்தனர். சேகர் அவர்களை அப்புறப்படுத்த காவலரிடம் சொன்னார். அப்போதுதான் தகவல் அறிந்ததுபோல் கிராம நிர்வாக அலுவலர் வந்தார்.

“சார் ஏதோ கிறுக்கன் தப்பு செஞ்சுட்டான். கடுமையான நடவடிக்கை எதுவும் எடுத்திடவேண்டாம். அப்புறம் நாங்க ஊருக்குள்ளே தலைகாட்ட முடியாது” என்று கெஞ்சினார்.

கிராம நிர்வாக அலுவலரின் பேச்சு முகவர்களிடம் கலக்கத்தையும் பீதியையும் உருவாக்கிவிட்டது. ‘அந்தச் சத்தப் பேச்சாளி முகவர்,’ சேகரிடம் வந்து, “சார் நீங்க பாட்ல எதுவும் கடுமையான நடவடிக்கைன்னு போனீங்கன்னா நீங்க பெட்டியைத் தூக்கிட்டு ஊரைவிட்டு, வெளியே போகமுடியாது. உயிரும் இருக்காது பார்த்துக்குங்க” என்று மிரட்டினார். மற்ற முகவர்களும் இதற்கு ஒத்துப்போனார்கள்.

பிரச்சினை திசைமாறுவது கண்டு பெண் அலுவலர்கள் பதறினர். கோழிக்குஞ்சுகள் மாதிரி தலைமை அலுவலர் சேகரிடம் வந்து ஒண்டினர். சேகர் நிதானித்தார்.

“எல்லோரும் இதைக் கேளுங்க. தேர்தல் முடிந்துவிட்டது. எங்களோட வேலையும் முடிந்துவிட்டது. வாக்கு விவரங்களை மேலதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவோம். எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிதான் முடிவு செய்வார். அதனால எங்களைப் பற்றி தவறா நினைப்பதோ, மிரட்டுவதோ சரியா இல்லை!”

ஒரு முகவர் கிசுகிசுத்தார். “நான் ஆரம்பத்திலிருந்தே கவனிக்கிறேன். அந்த அதிகாரி சங்கத்துக்காரன் மாதிரியே மண்டையா பேசுறான். தானும் தப்பு செய்ய மாட்டேங்கிறான். அடுத்தவனையும் செய்யவிடமாட்டேங்கிறான்.”

“இங்க பாருங்க நாங்க அரசு ஊழியர்கள். எங்களுக்கு அரசாங்கம் கொடுத்த வேலையை செஞ்சட்டோம். உங்க ஊருக்கு வேலைக்கு வந்த அசலூார்க்காரங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது உங்க கடமை. இதுக்கு மேல் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை!” என்றார் சேகர்.

முகவர்களும் ஊர்ப்பெரிய மனிதர்களும் குழுக்குழுவாய்க் கூடி கிசுகிசுத்தனர். பெண்அலுவலர்கள் முகம் வெளிறிப்போய் சேகரிடம் ஒண்டி நின்றனர்.

ஆறுமணிக்கெல்லாம் மண்டல அலுவர் ஜீப்பும், காவல்துறை லாரி பின்தொடரத் தேர்தல் பெட்டி எடுத்துச்செல்லும் லாரியும் வந்தன. தேர்தல் பெட்டி எடுத்துச் செல்லும் லாரி ஒரு நூறடி முன்னால் தள்ளிப்போய் நின்றது. “வாக்குப் பெட்டிகளை ஏற்ற தோதாக பூத் முன்னால் நிறுத்தச் சொன்னால் நூறடி தள்ளி நிறுத்திறாங்களே. பிரேக் புடிக்கலையா” மண்டல அலுவலர் கடுப்பாகப் பேசினார்.

“ஆமாம் சார். பூத் முன்னால் நிறுத்தத்தான் பிரேக் பிடித்தேன். பிரேக் பிடிக்கலை நூறடி தள்ளிப்போய் நிற்குது. ஏதோ நம்ம தேர்தல் மாதிரி சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி லாரி, ஓடுது”

“வண்டியை ஒழுங்கா வச்சுக்க துப்பில்லை. தேர்தல் அது இதுன்னு அதிகப்பிரசங்கியாப் பேசுற. லாரி ஓட்றதோடு, நின்னுக்க. இது அரசாங்க வேலை. ஏடாகூடமா பேசி மாட்டிக்காதே. உள்ள பிழைப்பும் போயிடும்!”

மண்டல அலுவலர் உரத்த குரலில் பேசிக்கொண்டு உள்ளே நுழைந்ததைக்கண்டு முகவர்களும், ஊர் பெரியவர்களும் பயத்தில் உறைந்து நின்றனர். மண்டல அலுவலர் பணஉறையை சேகரிடம் கொடுத்தார். அதை வாங்கி மஞ்சுளாவிடம் கொடுத்து அவரவருக் குரிய மதிப்பூதியத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னார். மண்டல அலுவலர் சேகரிடம் சென்று மெல்லிய குரலில் அவர் அனுப்பிய குறுந்தகவலை பார்த்ததாகவும் உரிய நடவடிக்கை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கவலைப்பட வேண்டாமென்றும் சொன்னார். சேகர் கொடுத்த ஆவணங்களையும், வாக்குச்சீட்டுக் கணக்கு களையும் சரிபார்த்து தான் கொண்டு வந்த பையில் பத்திரப் படுத்திக்கொண்டிருந்தார்.

அலுவலர்களுக்குப் பிரித்துக் கொடுத்த ஊதியத்திலிருந்து உணவுக்கான தொகையை வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தார் சேகர். கிராம நிர்வாக அலுவலர் வாங்க மறுத்தார். “நாங்க சாப்பிட்ட காசைக் கொடுக்கிறோம். எங்களுக்கு இந்தக் குக்கிராமத்தில் சாப்பிட உணவு ஏற்பாடு செய்ததே பெரிய விஷயம். எங்களுக்கு வேறு யாரும் செலவு செய்யக்கூடாது. நீங்க இதை வாங்கிக்கறீங்களா இல்லையா.” என்று ஒரு அதட்டல். அவர் வாங்கிக்கொண்டார்.

சரிபார்க்கப்பட்ட வாக்குச்சாவடி ஆவணங்களையும், வாக்குப் பெட்டிகளையும் லாரியில் ஏற்றினார். “சரி, ரொம்ப தேங்ஸ். சார் வர்றோம் சார்” என்று மண்டல அலுவலர் பறக்கப் பார்த்தார்.

சேகர் அவரது வலது பின்னங்கையை இறுக்கிப் பிடித்து நகர விடமால் நிறுத்தினார்.

“என்ன மிஸ்டர் கையைப் பிடிச்சு நிறுத்திரிங்க. நாங்க அடுத்த பூத்துக்குப் பெட்டிகள் எடுக்கப்போகணும் விடுங்க!” சற்றுக் கோபத்துடன் மண்டல அலுவலர் சொன்னார்.

‘சார் எங்களை எல்லாம் ஏற்றிக் கொண்டு போய் பக்கத்து நகரத்தில் இறக்கி விட்டுருங்க. இங்கு எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை !”

“சார், நீங்க என்ன தேவையில்லாம பயப்படுறீங்க. உங்களை யாரும் ஒன்னும் செய்யமாட்டாங்க! சட்டப்படி வோட்டுப் பெட்டி வண்டியில் ஆளுகளை ஏத்தக்கூடாது சார்! நாங்க அடுத்த பூத்தில போய் பெட்டிகளை வாங்கப் போகணும். எங்களைத் தடுக்காதீங்க, பிளீஸ்!”

“சார் உங்க சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும். நீங்க என்னைக் கூட விட்டுருங்க. இந்த நாலு பெண் அலுவலர்களைக் கொண்டு போய் டவுன்ல இறக்கிவிட்டுருங்க. இந்தப் பெண் அதிகாரிகளை எத்திகிட்டுப் போகாம இந்த வண்டி நகராது. அப்படி நகர்ந்தால் என் உடல்மீது ஏறித்தான் நகரும்” என்று ஆவேசமாக ஜீப்பை நோக்கி நடந்தார். பெண் அலுவலர்கள் அழத்தொடங்கினர். முகவர்களும், ஊர் ஜனங்களும் திகைத்து அண்ணம் பாரித்து நின்றனர்.

மண்டல அலுவலர் பணிந்தார். எல்லோரும் வண்டியில் ஏறினர். “கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போச்சே” முகவர்கள் கிசுகிசுத்தனர். சக்கரங்கள் சுழன்றன.

மறுநாள் காலை செய்தி ஊடகங்கள் ஒப்பித்தன. “உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது…”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top