வழிதேடி

0
(0)

கடைசியில் ஒரு வழியாக சுந்தரிக்குக் கல்யாணம் நிச்சயமானது. அடுத்த மாதத்திலேயே கல்யாணத்தை வைத்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டார்கள். மாப்பிள்ளை மிலிட்டரியில் இருக்கிறார். லீவுக்குள் கல்யாணம் முடிக்க வேண்டும் என்ற அவசரம். பரமசிவம்பிள்ளைக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒரு மாசத்திற்குள் என்றால் எவ்வளவுபாடு இருக்கிறது. ஆனாலும் சம்மதித்துவிட்டார். சங்கரன்கோயில் மச்சினப்பிள்ளை கோவிந்தனைக் கூப்பிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ஆள் அவ்வளவு சூட்டிகை. அதோடு இந்தச் சிரமங்களைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால், சமைஞ்ச கொமரியை வீட்டில் வைத்துக்கொண்டிருக்கிற கஷ்டம் சகிக்க முடியவில்லை.

சுந்தரியும் பெரியவளாகி பத்து வருஷங்கள் கண் மூடித்திறப்பதைப் போல ஓடிவிடவில்லை. மெல்ல நிதானமாக சுந்தரியின் மனசிலும் உடலிலும் தழும்புகளை விட்டுப் போயிருந்தன. இதற்குள் எத்தனை மாப்பிள்ளை வீட்டார்கள்? எத்தனை பேர் நிச்சயம் வரை வந்து போனார்கள். ஒவ்வொரு முறை பெண் பார்க்கிற போதும் சரி, எப்படியும் இது முடிந்துவிட வேண்டும், முடிந்துவிடும் என்று சுந்தரி நினைப்பாள். எல்லாக் கடவுள்களையும் பிரார்த்திப்பாள். தினமும் துர்க்கை ஸ்தோத்திரம் படிப்பாள். வருஷம் தவறாமல் மார்கழி மாதக் கடுங்குளிரில் எழுந்து செல்வி எங்கிருந்தோ பறித்து வந்த பூசணிப்பூவை மாட்டுச்சாணியில் வைத்து கோலத்தின் நடுவில் வைப்பாள். அந்தக் குளிர் காற்றில் நடுங்கிக்கொண்டே ஆண்டாள் திருப்பாவையை முணு முணுப்பாள். கௌரி நோன்பை பக்தியுடன் கொண்டாடினாள். அவளுக்கும் இவை எவற்றின் மீதும் சிரத்தையில்லாத ஒரு வசந்தகாலம் இருந்தது. அந்த ரவிச்சந்திரனுக்கு இப்போது ரெண்டு குழந்தைகள் இருக்கின்றன. அது எப்போதோ அவளைக்கடந்து போய் விட்டது.

ஒவ்வொரு முறை பெண் பார்க்க வந்து போன பிறகு சுந்தரி ஒவ்வொருவரைப் பற்றியும் மனசுக்குள் சித்திரம்போட்டு அவளுடைய குணாதிசயங்களைப் புரிந்துகொண்டவள் போல சில நாட்களுக்கு லேசாய் தலையாட்டிக்கொண்டே யோசிப்பாள். அவளும் அம்மாவும் தனியாயிருக்கிற நேரங்களில்,

“ஏம்மா, அந்த சிவப்புகல்லுல பேசரி போட்டிருந்தாளே, அவதான் நாத்தனாரா என்ன நீட்டு நீட்டுதா, அவகிட்ட ரொம்ப ஜாக்ரதையாக இருக்கணும்மா…”

அம்மா அவளைப்பார்த்துச் சோகமாய் சிரிப்பாள். சில நாட்கள் கழித்து அப்பா திடீரென்று உம்மென்று இருப்பார். சகட்டு மேனிக்கு எல்லோரிடமும் எரிந்து விழுவார்.

“பெத்து வச்சிருக்கா பாரு எல்லாம் பொட்டக் கழுதகளா ஒரு பைசாவுக்கு பிரயோசனமுண்டா… இருக்கிறதயெல்லாம் வாரிச்சுருட்டத்தான் பொறந்திருக்குக. ஒண்ணைக்கரையேத்தவே இந்தப்பாடா இருக்கு ம்ஹும்…”

பெருமூச்சு விடுவார்.

அவள் புரிந்து கொள்வாள். அவள் மட்டுமல்ல. அம்மா ஜானகி, சரசுவதி, செல்வி எல்லோருக்கும் புரிந்துவிடும். சுந்தரி பொங்கி வந்த விம்மலை அப்படியே நெஞ்சுக்குள் புதைத்து விடுவாள். அப்புறம் ஒரு வாரமோ ரெண்டு மாசமோ கழித்து மறுபடியும் பெண் பார்க்க வருவார்கள். சுந்தரியின் மனசில் ஈரம் வற்றிப் போய்விட்டது. நெஞ்சு கூடு விழ ஆரம்பித்தது. இத்துப் போன மனசை கண்ணில் பிடித்து வைத்திருந்தாள். இப்போது கல்யாணம் முடிவானதை அப்பா வந்து சொன்ன நேரம் இருட்டுகிற நேரம். பொங்கின ஏதோ ஒரு உணர்வை மறைக்க, மெலிந்து நீண்ட கைகளால், பாத்திரங்கள் தேய்த்துத் தேய்த்து காய்ப்பேறி கோடுகள் விழுந்து போன உள்ளங்கை படபடக்க கண்ணில் நீர் முட்ட குத்து விளக்கை ஏற்றினாள்.

அப்பாவின் முகத்தில் உடனே பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது. வெளியே கிளம்பிவிட்டார். கலியாண வேலைகளை ஆரம்பிக்க அம்மா பெரிய நிம்மதியுடன் சுந்தரியைப் பார்த்தாள். ஜானகியும், சரசுவும் அப்போது தான் படிக்க உட்கார்ந்தவர்கள் எழுந்து சிரித்துக் கொண்டே அக்காவின் கையைப்பிடித்துக் கொண்டார்கள். அதற்குள் தகவல் வளவு பூராவுக்கும் காற்று போல போய்விட்டது. எங்கேயோ விளையாடிக் கொண்டிருந்த செல்வி மூச்சிரைக்க ஓடி வந்து அக்காவின் மடியில் விழுந்தாள். அக்காவின் முகத்தை ஏந்திக்கொண்டு,

“சப்பை மூக்கா குண்டாஇருந்தாரே, அவராக்கா நம்ம அத்தான்…”

அம்மா சத்தம் போட்டாள்.

“ஏய் கொரங்கு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.”

உடனே செல்வி ரகசியமான மெல்லிய குரலில்,

“யெக்கா அவராக்கா நம்ம அத்தான்…”

அவள் தலையசைத்தாள். மனசில் எங்கிருந்தோ ஊற்று பொங்கின மாதிரி சந்தோஷம்! சிலிர்ப்பு, ஒரு புதிய கலகலப்பு ஒளியுடன் அந்த வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

அதற்கப்புறம் அம்மா அவளை வேலை செய்யவிடவில்லை. ஜானகியும் சரசுவதியும் கூட ஏதோ இந்தக் காரியத்தின் முக்கியத்துவம் தெரியும் என்பது போல, அவர்களே அக்காளுக்கு தினசரி விதம் விதமாக அலங்காரங்கள் செய்தார்கள். அவளை இதுநாள் வரை இல்லாத அன்போடு பார்த்தார்கள். சுந்தரியும் இந்த வித்தியாசத்தை வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் உணர்ந்தாள். வீடு முழுவதும் ஒரு விநோதமான இனிய உணர்வு பரவியிருந்தது. அநேகமாக நாளில் முக்கால் வாசி நேரம் அவளைச்சுற்றியே காரியங்கள் நடந்தன. இந்த நேரத்தில் அவளுடன் ஒண்ணாப்பு படித்த எஸ்.வரலட்சுமியைப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. அவள் ஒரு குழந்தை வைத்திருந்தாள். ரெண்டு பேரும் ரொம்ப நேரத்துக்குப் பேசிக்கிட்டே இருந்தார்கள். பேசப் பேசத் தீரவில்லை!

சங்கரங்கோயில் கோவிந்த மாமாவும் வந்துவிட்டார். அவ்வளவு தான். வீடுகளை கட்டிவிட்டது. ஒரே சிரிப்பும் கூத்தும் தான். சுந்தரி இதுவரை கவனியாத எவ்வளவோ விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தாள். அவளுக்குப் பிடித்தமான பொருள்களை எடுத்து தனியே வைத்தாள்.

“யெம்மா அங்க எப்படியெப்படி இருக்கோ தண்ணி ஊத்தி வைக்க ரெண்டு ஏனம் வேண்டாமா ஒரு செப்பானையும், கொப்பரையும் வேணும்மா…”

கொஞ்சினாள். அம்மாவும் சரி சரியென்று தலையாட்டினாள். சுந்தரிக்கு என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்தாள். கல்யாண விஷயத்தில் எதுவும் குறை இருக்கக்கூடாது. கட்டையோ நெட்டையோ கஷ்டங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். தினசரி வீட்டுக்கு புதுசு புதுசாய் சாமான்கள் வந்து கொண்டேயிருந்தன. ஜானகிக்கும், செல்விக்கும் ஆச்சரியமாய் இருந்தது. அவர்கள் எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்தார்கள். அப்போதெல்லாம் சுந்தரி,

“ஏட்டி இப்ப அதயேன் எடுக்கிற… வேணும்னா என்ட்ட கேளேன் நான் காமிக்கிறேன். அழுக்காக்கிராதே…”

அப்பாவும், கோவிந்த மாமாவும் பம்பரமாய் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

தவசுப்பிள்ளை, பந்தல் மேளம், வாழை, பால், விறகு என்று தினமும் ராத்திரி உட்கார்ந்து எல்லாவற்றையும் கணக்கு பார்த்து எழுதி இன்னும் என்னென்ன காரியங்கள் என்று குறித்து வைப்பார்கள். திடீர் திடீரென ஏதாவது ஒன்று முளைத்துக் கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியமும் பிரமிப்புமாக இருக்கும். கல்யாணம் என்றால் இவ்வளவு காரியங்களா!

சொன்ன பிரகாரம் காலையில் ஆசாரி வந்து விட்டுப்போனார். பாலீஷ் போடக் கொடுத்திருந்த பழைய நகைகளையும், புதுசாய் செய்யக் கொடுத்திருந்த ரெட்டைவடம் முருக்கு மாலையையும் சுந்தரிக்குப் போட்டாள். அவளுக்கே பெருமை தாங்காமல் முகத்தைக் கைகளால் தடவி திருஷ்டி கழித்தாள். செல்வி, அக்காளிடமிருந்து ஒவ்வொன்றாய் வாங்கி கழுத்தில் போட்டாள். எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா. எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு அம்மாவிடம்,

“நல்லாருக்காம்மா…”

பல் தெரிய சிரித்துக் கொண்டே கேட்டாள். உடனே சுந்தரி,

“எல்லாம் எனக்குத்தான் ஒனக்கு அப்பா பிளாஸ்டிக் தான் வாங்கிப் போடுவாங்க.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். செல்வி அப்படியே சுந்தரியை முறைத்துப் பார்த்தாள். அப்புறம்மெல்ல உதட்டைப் பிதுக்கினாள். சுந்தரி அதைக் கவனிக்காமல் போய் நகையைக் கழட்டப் போனாள். உடனே பெரிய்ய சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள்.

சுந்தரி,

“சரி… சரி… கொஞ்ச நேரம் போட்டிரு போட்டிரு…” அப்படியும் அழுகை நிற்கவில்லை. அம்மா அடுக்களையிலிருந்து வந்து,

“என்னட்டி மொளைக்கதுக்குள்ளே செல்லம்… எல்லாம் அவுக அப்பா எளக்காரம். நாலு சாத்து சாத்தினா குருடியும் கொடம் கொண்டுட்டு தண்ணிக்கு ஓடுவா…”

அந்தச் சமயத்தில் அப்பாவும் உள்ளே வந்தவர்,

“என்ன என்ன சத்தம்…”

“என்ன இழவு வந்ததோ ஒப்பாரி வைக்குது அப்பத பிடிச்சி…”

அப்பா செல்வி கிட்டே போய்,

“என்னம்மா என்ன வேணும் செல்விக் கண்ணுக்கு…” அவள் அப்பாவின் மேல் முகத்தைப் புதைத்துக்கொண்டே,

“நீ எல்லாத்தையும் அக்காளுக்கே கொடுத்திருவே. எங்களுக்கெல்லாம் பிளாஸ்டிக்தான்னு அக்கா சொல்றா. அப்புறம் எங்களுக்கு கல்யாணமே முடியாது.”

மறுபடியும் ஈளக்கம் போட்டாள்.

“அட கிறுக்கு இதுக்குத்தானா அழுதே” சிரிப்புடன் அப்பா சொன்னாலும் உடனே சிரிப்பு மங்கி அதிர்ந்து போய் அப்படியே உட்கார்ந்துவிட்டார். யாரும் பேசவேயில்லை. ரொம்ப நேரம் கழித்துத்தான் அப்பா ஒரு பெரிய பெரு மூச்சுடன் எழுந்தார். அந்தப் பெருமூச்சு சுந்தரியின் கல்யாணத்திற்கு அப்புறமும் வீட்டிற்குள்ளே சுற்றிக் கொண்டேயிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top