வளர்ப்பு

0
(0)

“இராம்குமார் விபத்தில் இறந்து விட்டான்” என்ற செய்தி கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் அப்போது ஒரு நண்பனின் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டபோது செய்தி வந்தது. சுற்றிலும் திருமண வீட்டு கலகலப்பும் களிப்பும், கொண்டாட்டமுமாக இருந்தது. விபத்தின் அதிர்ச்சியைத் தொலைபேசி வழியாகக் கேட்டபோது மெல்லிய குரலிலேயே பதிலளித்தேன். துக்கத்தைத் துடைத்து முகத்தில் மகிழ்ச்சியை படரவிட்டேன். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சிரிக்கும் போது நாம் அழமுடியாது நம்மைச்சுற்றி இருப்பவர்கள் அழும்போது நாம் சிரிக்கமுடியாது. சமூகவிலங்காகி ஆடை, அணிகலன், பண்பாடு என்றெல்லாம் வந்ததிலிருந்து ஒவ்வொருவரும் சூழலுக்கு ஏற்ப நம் இருப்பைப் பதிவு செய்து கொள்ள நடிப்பும் பாவனையும் தவிர்க்க முடியாத தேவையாகிப்போகிறது. நண்பர் வீட்டு மணவிழா மகிழ்வில் என்பங்கு பகிர்வைச் செலுத்தி வெளியே வந்தேன்.

எதிர்வீட்டில் இருந்த இராம்குமார் சிறுவயதில் எனது மகன்களோடு விளையாடித் திரிந்தவன். அவனது தந்தை வெங்கடேசன் அரசு உத்தியோகத்தில் என்னைவிட அதிக ஊதியம் வாங்கியதால் அவரது மகன்களை ஆங்கில கான்வெண்ட் பள்ளியில் படிக்க வைத்தார். எனது மகன்களோ அப்பொழுதுதான் மேம்படுத்தப்பட்ட ஒர் அரசுப்பள்ளியில் குறைந்ததக் கட்டணத்தில்; படித்தார்கள் அவர்கள் படித்த பள்ளிகள் வெவ்வேறு என்றாலும் விளையாடுவது சிவன் கோவில் மைதானத்தில்தான். அவன் வீட்டிற்குத் தெரியாமல் ஒளிந்து வந்து விளையாடுவான். என் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்த வழக்கம் விளையாடும் போது விளையாடணும் படிக்கும் போது படிக்கணும்! எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வாங்க இயலாதநாளில் அவர்கள் வீட்டில் தொலைக்காட்சியில் “ஒளியும் ஒலியும்”, பாடல்களும், திரைப்பட வசனங்களும் இரு வீட்டிற்க்கும் இடையே இருந்த போக்குவரத்து மிகுந்த நாற்பதடி சாலையைத் தாண்டி கேட்கும்! எனது வீட்டுப் பிள்ளைகள் ஏங்கிவிடக்கூடாதென்று பொதுவைப்பு நிதியில் கடன் பெற்று தொலைக்காட்சி பெட்டி வாங்கினேன். அப்பொழுது இராம்குமார் எங்கள் வீட்டிற்கு வந்து எனது பிள்ளைகளோடு அமர்ந்து கிரிக்கட் பார்ப்பான் அவனது அம்மா அவனைத் தேடிக்குரல்ளழுப்பி எழுப்பி ஓய்ந்தபின் வேறு எங்கிருந்தோ போவது போல் பாவனையில் வீட்டிற்குள் நுழைவான், அப்பாவின் பழக்கவழக்கங்கள் குறித்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். அதனால் பிள்ளைகள் வீட்டில் இருப்பதை விட வெளியில் இருப்பதையே விரும்பினார்கள். வீட்டிற்குள் அப்பாவி போல் இருப்பார்கள் வெளியே முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். ஆனாலும் எங்கள் வீட்டினரோடு மரியாதையாகவும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள்.

அவர்கள் வீட்டில் இராம்குமாரையும் அவனது அண்ணனையும் நடத்தும் கெடுபிடியும் கண்டிப்பும் அவர்கள் இயல்பானவர்களாக வளரவில்லை. படிப்பில் கவனம் இல்லை. அவர்கள் மற்ற பிள்ளைகளோடு விளையாடும்போது காணப்படும் மகிழ்ச்சியும் முகத்தெளிவும் அவர்கள் வீட்டுக்குள் இருக்கும்போது கண்டதில்லை. அவர்கள் ‘வேறுபிள்ளைகளோடு சேர்ந்து விளையாடினால், பழகினால் கெட்டுப்போய் விடுவார்கள்’; என்று சொல்லிச்சொல்லி பிள்ளைகள் மனதில் இறுக்கத்தை விதைத்து விட்டார்கள். எனது பெரியவன் ஏழாம் வகுப்பு முடித்தவுடன் அந்த சிறுநகர பள்ளிகள் மேற்கொண்டு படிக்க ஏதுவாக இல்லை என்று, பக்கத்திலுள்ள நகரத்திற்கு வீட்டை மாற்றிக் கொண்டோம். அந்த சிறு நகரில் பழகிய நண்பர்கள். அக்கம் பக்கத்து வீட்டார் விசேஷசங்களுக்குப் போகும் போது அவர்களைப் பார்ப்பதுண்டு வெங்கடேசன் வீட்டார், மருத்துவம் படிக்கும் எனது பிள்ளைகளை வாஞ்சையோடு விசாரிப்பார்கள் இராம்குமாரும் அவனது அண்ணன் கிருஷ்ணகுமாரும் பத்தாம் வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார்கள் என்று பக்கத்திலுள்ள நகரத்தில் பாலிடெக்னிக்கில் படிக்க வைத்தார் கிருஷ்ணகுமார் ஏகப்பட்ட புகார்களோடு பாலிடெக்கினிக்கில் தட்டுத்தடுமாரி படித்து பட்டயம் வாங்கனான். அண்ணன் காட்டிய வழிதான் தம்பிக்கும்! முன்னவன் காதல் திருமணம் செய்து கண்காணாது போய் ஒரு தொழில் நகரில் குடியிருந்தான் சின்னவனுக்கு ஏகப்பட்ட சேனங்கள் கடிவாளங்கள் கண்காணிப்புகள் கூடின. அவன் தேர்வில் தோல்வி அடைந்து மூன்றுதாள் நிலுவைகளோடு வீடு திரும்பினான்ன சரி இவனாவது நம் பிள்ளையாக நாம் சொன்னதைக்கேட்டு நடப்பான் என்று வீட்டோடு வைத்துக் கொண்டார்கள்.

பெரியவன் காதல் திருமணம் செய்து தம்மை கைவிட்டுப் போய் விட்டான் என்ற கவலையில் அம்மாவும் அப்பாவும் நோயில் விழுந்தனர் அந்நிலையிலும் சின்னவனனைச் சுற்றி ஏகப்பட்ட உளவாளிகளை உலாவ விட்டார்கள் நோய்மைக்கும் மீறி வெப்பம் அவனை வீட்டில் இருக்க விடவில்லை! அப்பாவின் ஒரு சம்பள நாளின் மறுநாள் அவன் எங்கோ ஓடிப்போனான். உடல் இயலாமையோடு ஆள் வைத்து தேடினார்கள் நானும் தேடினேன். பத்திரிகையில் அம்மாவின் உடல் நலமின்மையைச் சொல்லிச் செய்தி வெளிட்டார்கள் அவன் திரும்பவில்லை, பத்திரிகைச் செய்தி பார்த்த மூத்தவன் மனைவி கைக்குழந்தையுடன் வீடு திரும்பினான்! பேத்தியைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் சந்தோசிக்கவும் சங்கடப்படவும் இல்லை! பிரிந்த இளையமகனின் ஏக்கம் அம்மாவின் நினைவைக் காவு கொண்டுவிட்டது உயிர் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக ஏறி இறங்கி புறாவின் கமறல் சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. ஒரு நாள் தப்பிய நினைவு திரும்பியபோது மூத்த மகனின் கையைப் பிடித்து கண்ணீர் வடித்தாள் கண்ணீத்துளிகளோடு உயிரும் வழிந்தது உடல் நலமில்லா தந்தைக்கு மனைவியின் மரணம் பக்கவாதத்தை பரிசளித்துச் சென்றது.

அனைத்துக் காரியங்களும் முடிந்தன. மூன்று மாதங்கள் கழிந்து ஒரு நாள் அதிகாலை இராம்குமார் வீட்டுக்கு வந்தான் சண்டிகரில் ஒரு கம்பனியில் வேலை பார்ததாகவும் ஒரு நண்பன் மூலம் அம்மா இறந்த செய்தி கேட்டதாகவும் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்ததாகவும் சொன்னான் ஆள் நன்றாக உயரத்திற்கு ஏற்ற சதை போட்டு மீசை இல்லாமல் சிவந்த நிறத்தில் ஒரு இந்தி நடிகனைப் போல் இருந்தான். வாயில் எந்தநேரமும் பான்பராக் மணத்தது அப்பாவைக் கட்டிப்பிடித்து அழுதான். எங்கோ போனாலும் நல்ல நிலையில் இருக்கிறான் என்ற ஆறுதல்! இந்தத் தகவல் அம்மாவுக்கு தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருப்பாள் என்ற ஆதங்கமும் அப்பாவுக்கு இருந்தது இரண்டு மகன்களும் எங்கும் போகக்கூடாது தன்னுடனே இருக்கவேண்டும் என்று அப்பா விரும்பினார். பெரியவன் உள்ளூரிலேயே எலக்ட்ரிஷியன் வேலை தேடிக் கொண்டான்.

சின்னவன் சண்டீகர் சென்று முறைப்படி கம்பனியிலிருந்து விலகி தனக்குச் சேர வேண்டிய பணப்பயன் பெற்று வருகிறேன் என்று அப்பாவிடம் அனுமதி கேட்டான் “மெல்லப் போகலாம் இரு, இருஞ்” என்று அப்பா தாமதப்படுத்தினார் அவனது கைப்பேசிக்கு ஒருமணிநேரத்திற்கு இருமுறை, மும்முறை அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. கைப்பேசியில் அவன் பேசும்போதெல்லாம் மகிழ்ச்சி, துக்கம், இயலாமை கோபம் என்று பல பாவங்கள் அவனது முகத்தில் வெளிப்பட்டன சரளமாக இந்தியில் ஏற்ற இறக்கங்களோடு சின்ன மகன் பேசுவது கண்டு அப்பாவுக்கு ஒரு பக்கம் புளகாங்கிதம்!; மறுபக்கம் இவனும் காதலில் சிக்கியிருப்பானோ. என்று சந்தேகம். மெல்லக் கேட்டார் “யாருப்பா அது? “கம்பனியில் வேலைபார்க்கும் நண்பர்கள் அப்பா. சீக்கிரம் வரச்சொல்றாங்க. முதலாளி விசாரித்துக் கொண்டே இருக்கிறாராம்”; என்றான் தன்னை அப்பா நம்பவில்லை என்பதனை அவனும் உணர்ந்தான். இந்தச்சூழ்நிலையில் அவன் எதையும் சொல்ல முடியாமல் தவித்தான்.

ஒரு வழியாக தன் அப்பாவை சமாதானப் படுத்தி விட்டு சண்டிகருக்கு கிளம்பினான். பத்துநாள்களாகியும் வரவில்லை அவனது அப்பா அனுதினமும் தொலைப்பேசியில் தொனதொனக்கத் தொடங்கினார். பதினைந்தாவது நாள் கிரகணம் கல்விய முகம்போல முகம் முழுக்க கருந்தாடியோடு ஊர் திரும்பினான் முகத்தில் கலகலப்பில்லை. அப்பா விசாரித்தார்” உடல் நலமில்லாமல் இருந்தேன் அதனால் ஷேவ் பண்ணவில்லை என்றான். மூன்று மணிக்கொருமுறை தோலைபேசி அழைப்புகன் வந்தபடி இருந்தன. வெளியே தனியாக யாருமில்லா இடத்தில் போய் பேசினாள் அப்பா விசாரித்ததால் “நெட்வொர்க் இணைப்பு கிட்டவில்லை வெளியேதான் கிடைக்கிறது” என்றான்; அவனது முகம் நாளுக்கு நாள் வாடத்தொடங்கியது.

மதுரையில் ஒரு தனியாலி நிறுவனத்தில் அப்பா இராம்குமாருக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தார் அப்பாவின வற்புறுத்தல் தாங்காமல் முகச்சவரம் செய்து கொண்டு மதுரைக்குப் போனான் பஸ் பயணத்தின் போது முன் சீட்டில் இருந்து ஓட்டுனரோடு பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான் கவனம், தவற விட்ட ஓட்டுநர், முன்னால் சென்ற லாரி திடீரென்று நின்றது கண்டு வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓரமாக இடது புறம் திருப்பினார் அப்போது மரத்தில் மோதியதில் இராம்குமார் மட்டும் முன்கண்ணாடி வழியே வெளியே விழுந்த இடத்திலேயே உயிர்விட்டான். முகம் சிதறிப் போனது. பஸ்ஸில் வந்தவர்களுக்கு சிறுகாயங்கள் மட்டும்தான் மதுரையிலேயே உடற்கூறு ஆய்வு முடித்து அங்கேயே அடக்கம் பண்ணிவிட்டார்கள்.

எனது துணைவியார் வர இயலாத சூழல், நான் மட்டும் துக்கம் விசாரிக்கச் சென்றேன். வெங்கடேசன் நிலைகுழைந்து அழுதார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர், மனைவி இறந்தபின்; மகனும் கோரமான விபத்தில் இறந்த துயரத்தில் நாகுழறி அழுதார். அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அவரதுதோளை மெல்லத்தட்டி ஆறுதலைத் தெரிவித்தேன் “நாலு பொம்பளைப் பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரு ஆண் பிள்ளையான எனக்கு எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன. என்னை மாதிரி என்பிள்ளைகள் கெட்டுப்போகக் கூடாதுன்னு கடிவாளம் போட்டு வளர்த்தேன் கடிவாளத்தை அறுத்தெரிந்து போயிட்டான்களே” என்று அவர் ஏதேதோ சொல்லி புலம்பினார். அவரைத்தடுக்காமல் அழவிட்டால் அவரது சோகம் குறைந்து உடல் நலம் தேறலாம் என்று எண்ணினேன். அவராக அழுகைத் தணிந்து சாப்பிட்டிங்களா, என்று சைகையில் கேட்டார். “எனக்குப் பசியில்லை, நீங்கள் ஏதாவது சாப்பிட்டால்தான் உங்கள் உடலுக்கும் நல்லது.” என்று ஒருகப்காப்பியைக் குடிக்க வைத்தேன். கொஞ்சம் தெம்பாகத் தெரிந்தார். “இருட்டி விட்டது. இனி ஒருமணிநேரம் பயணம் செய்ய வேண்டியது இருக்கிறது. நான் கிளம்பறேன். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் சொல்லுங்கள் நான் வந்து விடுகிறேன”; என்று அவரது தோளைத் தொட்டு ஆறுதல் சொல்லிப் புறப்பட்டேன்.

அவர் பெரியவனை அழைத்து, “மாமாவை பஸ் ஸ்டாண்டில் விட்டு வா” என்றார்; கிருஷ்ணகுமார் பைக்கில் பஸ்ஸடாண்டிற்கு அழைத்துச் சென்றான் பஸ்வர அரைமணியாகும் என்று இருவரும் டீ குடித்தோம் கிருஷ்ணகுமாரிடம் கேட்டேன் “சண்டிகரில் இராம்குமாருக்கு காதல் கீதல் உண்டா எதுவும் தெரியுமா?” “ஆமாம் மாமா, அங்கே ஒரு கல்யாணம் ஆனதாகத் தகவல்! அந்தப் பெண்னை அழைச்சுக்கிட்டு இங்கே வந்திருக்கிறான் அந்த நேரம் அம்மா உடல் நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்பட்டு அந்தப் பெண்னை அம்மாவிடம் அறிமுகப்படுத்தினால் அம்மாவுக்கு சிக்கலாகிவிடும் என்று காரில் இருந்தபடியே வீட்டையும், வீட்டின் முன் வராந்தாவில் உட்கார்ந்திருந்த அப்பாவையும் காட்டியபடி நகர்ந்து விட்டான். அப்புறம் மதுரை ராமேஸ்வரம் எல்லாம் சுத்திவிட்டு சண்டிகர் போனார்களாம் இதை எல்லாம் அந்த சண்டிகர் பொண்ணு போனில் சொல்லித்தான் தெரிந்தது. இராமகுமார் விபத்தில் இறந்த விபரம் இங்குள்ளவர்களுக்குத் தெரிந்த அடுத்த நிமிடமே அவனது நண்பன் மூலமாக அந்தப் பெண்ணுக்கு தகவல் போய்விட்டது. நேற்று மதியத்திலிருந்து இன்று சாயந்திரம் வரை ஆறேழு தடவை பேசிருச்சு! நான் பேசுறது அதுக்கு புரியலை அது அழுதுகிட்டே பேசறது எனக்கு புரியலை மாமா” என்று ஆதங்கப்பட்டான். அந்தநேரம் தொலைபேசி அழைப்பு ஒலித்தது. கிருஷ்ணகுமார் துள்ளிக்குதித்தான் மாமா அந்த பெண்தான் மாமா, எதாவது சொல்லி இனிமேல் பேசவிடாம செஞ்சுருங்க மாமா” என்று கைபேசியை என்னிடம் கொடுத்தான்.

எனது குரல் புதிய குரல் என்றுணர்ந்ததும் யார் என்ன உறவு என்று கேட்டாள் அவர்கள் இருவரும் சண்டிகரில் ஒரு சிவன் மந்திரில் திருமணம் செய்து கொண்டனர் என்றும், அவளை இராம்குமார் தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்த அழைத்துவந்தான் என்றும் அன்று அவர்களது அம்மா உடல் நிலை கருதி அறிமுகப் படுத்தாமலே திரும்பி விட்டனர் என்று சொன்னாள் “நீ கர்ப்பமாக இருக்கிறாயா” என்று கேட்டேன். “கர்ப்பமாக இருந்திருந்தால் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருந்திருக்கும்! ஒரு அழகான அறிவான கெட்டிக்கரான் கணவனாகக் கிடைத்தும் கொடுத்து வைக்காத பாவியானேன்! இப்படி பாதி வழியில்; விட்டுப்போவான் என்று கற்பானையில் கூட நினைத்ததில்லை! அங்கிள் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் நான் அங்கு வந்து எனது மாமானாரிடம் ஆசிர்வாதம் பெறவும், அவரது மருமகள் என்ற சம்மதம் பெறவும், அனுமதி பெற்றுத்தாருங்கள். அந்த நினைப்பிலாவது உயிர்வாழ்வேன். இராம்குமாரை மறக்க முடியவில்லை அங்கிள்” என்று கதறினாள்.

“அம்மா நீ ஒரு ஆசிரியை! நீ பிள்ளைகளுக்கு பாடம் கற்பிப்பது மூலமும், மேலும் மேலும் படிப்பது மூலமும் உன் கவலையை மறக்கலாம். உனது முதிர்ச்சியும் அறிவுத்தெளிவும் புதுவாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் சூழல் அமையலாம்!” என்றேன் அவள் மீண்டும் கதறி அழுது முன்பு சொன்னதையே திரும்பச்சொன்னாள். எனது முகத்தைக் கவனித்த கிருஷ்ணகுமார் நான் அந்தப் பெண்ணுக்கு ஏதாவது உதவி செய்து விடுவேன் என்று நினைத்தானோ என்னவோ கைபேசியைப் பிடுங்கி தொடர்பைத் துண்டித்துவிட்டான்! தர்மசங்கடமாக இருந்தது எனக்குப் புதியசோகம் தொற்றிக் கொண்டது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top