வர்ணம்

0
(0)

பெரியவர் சாகும்போதும் ஒரு போராளியாகவே இருந்தார். தொண்ணூறு வயது; மூப்பும் பலவீனமும் தனது முத்திரைகளை முழுதாகப் பதித்திருந்தது. எலும்பும் தோலுமாய் இருந்த அவரது உடலில் அரச இலையில் தெரியும் நரம்புப் பின்னல் போல் நரம்பு ஓட்டம் தெளிவாகப் புடைத்துத் தெரிந்தது. இது பெரியவர் ஒரு பெரிய வைராக்கியசாலி என்னும் தோற்றத்தைத் தந்தது.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி நெருங்க நெருங்க அவரது முகத்திலும் உடலிலும் உணர்வுக் கொந்தளிப்பினையும், உடல்நிலை மோசமடைந்து வருவதனையும் காணமுடிந்தது. எமனும் அவரும் உயிர் சரட்டின் ஒவ்வொரு முனையைப் பிடித்து கயிறு இழுப்புச் போட்டி நடத்திக் கொண்டிருப்பது போல் தொண்டைக் குழியில் மேல் மூச்சும் கீழ் மூச்சும் போய் வந்து ‘சரட் சரட்’ என ஒலி எழும்பிக் கொண்டிருந்தது.

பெரியவரது மகன் பேராசிரியர் கணேசன் கல்லூரிக்குச் சென்று ஐம்பதாவது சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி இருந்தார். கல்லூரியில் வழங்கப்பட்ட இனிப்பினை மகன் சிறுவன் சுரேஷ்க்கு கொஞ்சம் கொடுத்தார். பெரியவர் வாய் திறந்து ஏதோ பேச முயன்றார். கணேசன் அந்த லட்டில் கொஞ்சம் பிட்டு நன்றாக நசுக்கி அப்பாவின் வாயில் வைத்தார். பல்லில்லாத வாய் சப்புக் கொட்டுகையில் இருமுறை அசைந்து கொடுத்த நாக்கு அப்படியே ஒட்டிக் கொண்டது. இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பொங்கி மளமளவென வழிந்தது. ஏறி ஏறி இறங்கிய நெஞ்சுக்குழியில் ‘சரட் சரட்’ ஒலி அடங்கி விட்டது. சிலிர்த்துப் போன கணேசன் ‘அப்பா’ வென கத்தி விட்டார்.

மனைவியும் வந்து “பால் ஜலம் கொடுங்கோ” என்று சொல்ல ‘பால் தண்ணி’ ஊட்டினார். அந்த வெள்ளைத் தண்ணீரை அவரது உடல் ஏற்காமல் வெளியேற்றி விட்டது. உயிர் சூடு அமர்ந்து உடல் விரைத்து வந்தது. சிவந்த வெளுத்த மேனி நீலம் பூத்து வந்தது. முகம் மட்டும் அந்த மஞ்சளில் சுடர்ந்தது.

நேற்று இரவே சொந்த பந்தங்களுக்குத் தந்தி கொடுத்திருந்தார், கணேசன். இன்னொரு சகோதரனும் சகோதரியும் வந்திருந்தனர். கல்லூரி ஆசிரிய நண்பர்கள் மூலம் உள்ளூரிலிருந்த சக பேராசிரியர் களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தரப்பட்டது. சக பேராசிரியர் களும் நண்பர்களும் மாலையும் கையுமாய் வந்து துக்கம் விசாரித்துச் சென்றபடி இருந்தனர். ஒரு சங்கத்தின் தாலுகா செயலரும் ஐந்தாறு உறுப்பினர்களும், சில உறவினர்களும் மட்டுமே இருந்தனர்.

காலை பத்து மணிக்கு இறந்தது; மணி மூன்று ஆகிவிட்டது. புரோகிதர் ஈஸ்வரமூர்த்தி அய்யர் தனது உதவியாளர்களை ஏவி இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். “நீர் மாலைக்கான சாமான்களைக் கொண்டாங்கோ! நாழியாகிறது. இன்னும் அடுத்தடுத்த ஜோலி இருக்கு பாருங்கோ!”

கணேசனுக்கு சடங்காச்சாரங்களில் நம்பிக்கை இல்லை. பெரியவரும் அப்படிதான் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர். கணேசனது மனைவி காயத்ரிதான் வற்புறுத்தினார்.

“ஏன்னா ஒரு தலைமுறையா ஜாதி ஜனங்களிலிருந்து ஜாதிபிரஷ்டம் பண்ணினது மாதிரி ஒதுங்கியே இருந்தாயிடுத்து! இன்னும் என்ன, அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் நம் பிள்ளைங்களுக்கு வேணாமோ? பிதுருக்களின் ஆசியும் புண்ணியமும் நம்ம பிள்ளைகளுக்குச் சேர வேணாமோ? நானும் என் பிள்ளைகளும் சாதி சம்பிரதாயங் களிலிருந்து ஒதுங்கி இருக்க முடியுமோ? எல்லாம் பெரியவாளோடு போகட்டும்! இனியாவது சாஸ்திரசம்பிரதாயங்கள் அனுஷ்டிக்கணும்!”

இழப்பின் துயரத்தில் கணேசனுக்கு எதிர்வாதம் செய்ய முடிய வில்லை. இறப்பு இயற்கைதான்! மரணத்தை ஒத்திப்போட முடியும்; ஆனால் வெல்ல முடியுமா? என்றாலும் இழப்பின் கடுமையால் அவரால் வாய் திறக்க முடியவில்லை !

கணேசன் மனவிை காயத்ரியின் ஆக்ஞையை ஈஸ்வரமூர்த்தி குருக்கள் மந்திரங்களை நீட்டி முழங்கி செயல்படுத்திக் கொண்டிருந்தார்.

கணேசனது நண்பர் ஆறுமுகம் வந்தார். அவர் தான் நகரில் அனைத்து நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்ததும், ஈமச்சடங்கு களுக்குத் தேவயைான சாமான்களை வாங்கித் தருவதுமான பணிகளைச் செய்து கொண்டிருந்தார். ஆறுமுகம் கணேசனிடம் சொன்னார். “சிவகங்கையிலிருந்து பெரியவரோடு பழகிய ஜனங்கள் இரண்டு லாரிகளில் வந்து கொண்டு இருக்கிறார்கள் நாலரை மணிவரை தாமதப்படுத்துங்கள்!”

“என்னவோய் புரபசர் கணேசன், கார்த்தால பத்துமணிக்கு விழுந்த பிரேதம்! மணி நாலாகப் போறது; இன்னும் எத்தனை நாழிதான் வைத்திருக்கிறது? வானம் வேற ஒரு மாதிரியாக இருக்கிறது!! பூமாதாவிற்குச் சேரவேண்டிய உடலை நாம ஏன் தாமதப் படுத்தணும்? சுடுகாட்டிலும் அதற்குப் பின்னால் அகத்திலும் நிறைய சாங்கியங்கள் செய்ய வேண்டியதிருக்கே!” ஈஸ்வரமூர்த்தி விரட்டினார்.

“சாமி, வானவில் பூத்திருக்கு! மழை வராது சாமி!” – ஆறுமுகம் சொன்னார்.

“செத்த நாழி பொறுங்கோ மாமா, அப்பாவோட பழகியவா ளெல்லாம் வர்றாளாம்! அவா ஆத்ம திருப்தியை ஏன் கெடுக்கணும்?” – கணேசன் சொன்னார்.

புரோகிதர் முகத்தை ஒரு மாதிரி சுருக்கி துண்டை உதறி, வெற்றிலை பாக்குப் பையை பிரித்தார்.

இரண்டு லாரிகள் நிறைய ஜனங்கள் ஆணும் பெண்ணுமாய் பறை தப்பு முழங்க கதர் ஆடையும் மாலையுமாய் வந்தனர். அந்தத் தெருவே நிரம்பி வழிந்தது. சம்பிரதாயமாக வந்து பார்த்துச் சென்ற அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாம் பாதிக்கதவு திறந்தபடி வேடிக்கை பார்த்தனர். அந்த ஊர்வலத்தில் நால்வர் வக்கீல் கோட்டோடு வந்தனர்.”என்னவோய் நம்மாவாள்கிட்டே தப்பு அடிக்கிறதெல்லாம் சம்பிரதாயமில்லையே! மாலை கோடின்னு தடபுடலா வர்றாங்க! அவங்களை சித்தே ஒதுங்கி இருக்கச் சொல்லுங்கோ” புரோகிதர் புலம்பினார்.

அந்தக் கூட்டம் வீட்டின் முன் நின்றது. அந்த நான்கு வக்கீல் களும் சில வயதானவர்களும் கண்ணீர் முட்ட இறுகிய முகத்தோடு கணேசனது கையைப்பற்றி துக்கத்தினைப் பகிர்ந்து கொண்டனர். இதுவரைக்கும் மனமிறுகி துக்கத்தின் விளிம்பிலிருந்த கணேசனுக்கு கண்ணீர் முட்டியது. வந்தவர்கள் மாலை சாத்தி மரியாதை செய்தனர்.

ஈஸ்வரமூர்த்தி அய்யர் ஏதோ காயத்ரியிடம் சொன்னார். காயத்ரி வேகமாக வந்தான்.

“என்னன்னா இது ஆச்சாரமில்லா அனாச்சாரம்! இப்படி மாலை கோடி போடறது எல்லாம் நம்மவாள் சம்பிரதாயம் இல்லன்னா! இதை எல்லாம் சொல்லி சித்தே நிறுத்தப்படாதோ” சந்நதம் வந்தது போல் பேசினாள் காயத்ரி!

வக்கீல்களில் ஒருவர் சொன்னார், “அம்மா ஆச்சாரமோ அனனாச்சாரமோ எங்களுக்குத் தெரியாது! இந்தப் பெரியவர் எங்களுக்கெல்லாம் தெய்வம் மாதிரி! அவருக்கு செய்யற மரியாதையை நாங்க செஞ்சாதான் எங்களுக்கு நிம்மதி! தயவு செஞ்சு உங்க சடங்கெல்லாம் இப்போ பேசாதீங்க!

“என்னன்னா கேட்டுண்டே கல்லாட்டம் நிக்கறேள்!”

கணேசனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

ஆறுமுகம் சமாதானத்திற்கு வந்தார். “மன்னி தயவு செஞ்சு அவங்க இஷ்டம் போல செய்யவிடுங்க! எதுவும் பேச வேண்டாம்!

இன்னொரு வக்கீல் சொன்னார் “அம்மா கோவிச்சுக்காதீங்க! எங்களுக்கு எல்லாம் வாழ்வு கொடுத்த தெய்வம் இவரு! இப்படி அனாதையாட்டம் பச்சமூங்கில்ல வச்சு கொண்டு போக விட மாட்டோம்! அங்க பாருங்க அந்த முக்குல பூப்பல்லக்கு தயாராகுது!” காயத்ரி வாயில் கைவைத்து செய்வதறியாது உறைந்து போனாள்!

“நீங்க எல்லாம் யாரு? எங்க ஆச்சாரத்தில் குறுக்கே ஏன் வர்றேள்?” புரோகிதர் ஈஸ்வரமூர்த்தி அய்யர் கேட்டார்.

“சாமி நாங்க எல்லாம் சிவகங்கை பகுதியில் தாழ்த்தப்பட்ட ஜனங்களா இருந்தவங்க! எங்க பாட்டன் அப்பன் காலத்தில எல்லாம் எங்க ஜனங்க சிவகங்கை பகுதியில் எந்த கோயில் குள்ளேயும் நுழைஞ்சதில்ல! சாமிதான் – இந்த சுப்பிரமணிய அய்யர் தான் எங்க தாத்தன் அப்பன்மாரை எல்லாம் அறுபது வருசத்துக்கு முன்னால கோயிலுக்குள்ளாற அழைச்சிட்டுப் போய் போராட்டம் நடத்தினாரு! காந்தியும் இதுக்கெல்லாம் ஆதரவு தெரிவிச்சு தன்னோட பத்திரிக்கையில் எழுதினாராம்! அந்தப் போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரு, மதுரை வைத்தியநாதய்யரு, ஈரோட்டு பெரியாரு மாதிரி தலைவர்களெல்லாம் ஆதரவு தெரிவிச்சாங்களாம்! பெரிய தள்ளுமுள்ளு போராட்டம். ரெண்டு உயிர்ச்சேதத்திற்கு அப்புறம் கோயிலுக்குள்ளாற போகவிட்டாங்களாம்! இதே மாதிரி காளையார் கோயில்லயும் நடந்துச்சாம் அங்கேயும் இந்த சூனாபானா சாமிநாதன் தலைமையை தாங்கினாங்களாம்!

அதிலிருந்து எங்காளுகளுக்கு இந்த “சூனாபானா” அய்யருன்னா குலதெய்வம் மாதிரி! இதனால அய்யரு சாமியை அவங்க சாதியை விட்டு விலக்கிட்டாங்களாம்! இவுக சிவகங்கை அக்கிரகாரத்தை விட்டு ஒதுங்கி மறவர் தெருவுலதான் குடியிருந்தாக! இந்த சமயம் தான் எங்க அய்யா அதாவது எங்க அப்பாவோட அப்பாவூட்டு நிலத்தகராறு விஷயமா தேவகோட்டை கோர்ட்டில ஒரு கேஸ் நடந்துச்சு. சூனாபானா சாமியே வக்கீலாக இருந்ததனால அவுகளே எங்க அய்யாவுக்கு ஆஜராகி கேஸ் நடத்தினாக!

ஒருநாள் எங்க அய்யா கேஸ் விஷயமாக “சூனாபானா” சாமியை பார்க்க தேவகோட்டை பார்சேம்பருக்குள்ள போனாகலாம்! வெயில்ல வந்து தண்ணி தவி தாங்காம பார்சேம்பர்ல இருந்த மண்குடத்தில இருந்து தண்ணி மோந்து குடிச்சிட்டாகலாம்!

“ஒரு இழிசாதிக்காரன் எப்படி பார்சேம்பர்ல நுழைஞ்சு தண்ணீர் மொண்டு குடிக்கலாம்?ன்னு அங்கிருந்த வக்கீல்க எல்லாம் கன்னாபின்னான்னு சத்தம் போட்டாகலாம்.”

நம்ம “சூனாபானா” சாமிக்கு கோவம் வந்திருச்சு, “என்னய்யா மனுசாளுக்குள்ளே உயர்வு தாழ்வு? இதுக்காய்யா சட்டம் படிச்சீங்க?” – ன்னு கேட்டுட்டு ‘ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு உதவாத தண்ணிப்பானை இங்கே எதுக்கு?’ன்னு சொல்லி அந்தப் பானையைத் தண்ணியோட தூக்கி கீழே போட்டு உடைச் சுட்டாராம்! பார்கவுன்சில் விதிகளை மீறி புரட்சிக்காரன் மாதிரி கலவரத்தைத் தூண்டினதாகப் பார்கவுன்சில்ல இருந்து சூனாபானா சாமியை ஆறுமாசம் விலக்கி வச்சிட்டாக!

‘சக மனிதனுக்கு உதவாத இந்த கோட்டும் உத்தியோகமும் எனக்கு எதுக்குன்னு, கோட்டைக் கழட்டி எறிஞ்சிட்டு சாமி வந்திட்டாக! அப்புறம் சாமி வக்கீல் தொழிலே செய்யல! எங்க தலைமுறை ஹைஸ்கூல்ல படிக்கிற காலத்தில இருந்து தூண்டி உற்சாகப்படுத்தி எங்களை வக்கீலுக்குப் படிக்க வச்சாக!

“அக்கிரஹாரத்து ஜனங்களோட தொல்லையும் பரிகாசமும் தாங்க மாட்டாம தன்னோட பிள்ளைக படிப்புக்காக இந்த காரைக்குடிக்கு குடி வந்தாக! இந்த சாமி மேல இருந்த மரியாதையில கருப்பையான்னு இருந்த என் பேரை மாத்தி இந்த சூனாபானா சாமி பேரைத்தான் எனக்கு சுப்பிரமணின்னு வச்சிருக்காக! இதோ இவரு பேரு கணபதி சுப்பிரமணியன், என் மகனோட பேரும் கணபதி சுப்பிரமணியன்! இது மட்டுமல்ல! எங்க தெரு வளைவுல பெருவாரியான ஆம்பளைக பேரு சுப்பிரமணியன், சுப்பையா பொம்பளைக பேரு சுப்புலட்சுமி, சுப்புத்தாய்ன்னு தான் வச்சி இருக்கோம்.”

தனது தந்தையைப் பற்றி அரைகுறையாய் தெரிந்த கதைகள் முழுதாய்த் தெரியவர கணேசன் குலுங்கி குலுங்கி அழுதார்!

“ஓ! பெரியவாள், ராமானுஜர் மாதிரியல்ல ஒரு பெரிய மகானுபாவரா இருந்திருக்கா! நேக்குத் தெரியாமப் போச்சே! நன்னா உங்க இஷ்டப்படி செய்யுங்கோ! சாஸ்திரம் சம்பிரதாய மெல்லாம் ஒரு அடையாளத்துக்குதான்! இவா மாதிரி பெரியவாள் இந்த சடங்குகளுக்கெல்லாம் அப்பாற் பட்டவா மாதிரியன்னா நடந்துண்டார்! பேஷா செய்யுங்கோ!” குறுக்கே இருந்த நந்தி விலகியதுபோல் ஈஸ்வரமூர்த்தி விலகிக் கொண்டார்!

கணேசனது மனைவி காயத்ரி மாமனாரின் பிரதாபங்களைக் கேட்டு பிரமித்துப் போனாள், “இவளோ பெரிய மகானை வெறும் சோற்றுச் சுமையா நினைச்சுண்டோமே” என்று வாயில் முந்தானை வைத்து விம்மினாள்!

புஷ்ப ரதமாய் பல்லக்குத் தயாராக வந்தது. நீர்மாலை சடங்குகள் குளிப்பாட்டல் எல்லாம் முடிந்தன. சங்கச் செயலர் சிவப்புத் துண்டை போர்த்தினார். வக்கீல்கள் கதராடை போர்த்தினர். தாரை தப்பட்டை முழங்க வக்கீல் சுப்பிரமணிய அய்யரின் இறுதி ஊர்வலம் புறப் பட்டது. நகரமே அன்னம்பாரி மரியாதையோடு எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது. மேற்கு வானில் சூரியன் மலைவாயிலில் நின்றான். வானில் மேகங்கள் பல வர்ணங்களில் திட்டுத் திட்டாய் நகர்ந்து கொண்டிருந்தன.

சுடுகாட்டில் சடங்குகள் முடிந்து உடல் குழிக்குள் இறக்கப் பட்டது. கணேசனும் அவரது உறவினர்களும் வாய்க்கரிசி போட்டு முடிக்கவும் அந்தக் கூட்டமே வாய்க்கரிசி போட்டது! தொழிலாளிக்கு வாய்க்கரிசி சில்லறை குவியலாகக் குவிந்தது.

புதைகுழியில் மண்தள்ளி சாங்கியங்கள் செய்து விட்டுப் புறப்படத் தொடங்கினர். வக்கீல் சுப்பிரமணியன் சொன்னார். “இவ்வளவு நேரம் எங்க நன்றிக் கடமையைச் செய்ய ஒத்துழைப்பு தந்தீங்க! “சூனாபானா” சாமி தன் கண்பார்வை மங்குற வரைக்கும் கோர்ட்டுக்கு வந்து எங்களை தனியா சந்திச்சு அன்னன்னைக்குள்ள கேஸ் விவரம் கேட்டு சில சட்ட நுணுக்கங்களை எல்லாம் சொல்லுவாக! நாங்க அவருக்கு பணம் கொடுத்தா வாங்க மாட்டாக! வற்புறுத்தல் தட்டாம வெறும் காபி மட்டும் சாப்பிடுவாக! அப்படிப்பட்ட குருநாதராகவும், எங்களை எல்லாம் பெறாத அப்பாவாகவும் இருந்த அந்த மகானுக்கு இன்னுமொரு கடமை செய்யணும்! தயவு செய்து தப்பா நினைச்சுக்காதீங்க! உங்க சடங்கு சம்பிரதாயங்களை தடுக்கணுங்கிறது எங்க நோக்கமில்ல! சாதி பேதம் பாராத அந்த மகாமனுசருக்கு வேறெப்படி நன்றிக்கடன் செலுத்தணும்னு தெரியலை! இன்னும் ஒரு பத்து நிமிஷம் பொறுங்க!” என்றபடி வக்கீல் சுப்பிரமணியம் கையை அசைத்தார்.

ஆம்பிள்ளைகள் எல்லாம் மேல் சட்டையைக் கழற்றி அமர்ந்தனர். தயாராக அழைத்து வரப்பட்ட நாவிதர்கள் விறுவிறுவென தலை முடியை இறக்கத் தொடங்கினர். கணேசனது உறவினர்கள் புல்லரித்துப் போய் நின்றனர். கணேசனும் அவர்களோடு முடி இறக்க அமர்ந்தார். ஈஸ்வரமூர்த்தி அய்யர் ஏதோ அவசரமாக சொல்ல வந்தவர், சொல்லாமலே நிறுத்திக் கொண்டார்.

‘சாமி பேதங்களைக் கடந்து இத்தனை பேர் மகன்களைப்போல் இறுதிக்கடமை செய்ய பெரியவர் எவ்வளவு பெரிய மனுசராக இருந்திருக்கணும்?’ வந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

புதை குழி மேட்டில் வைக்கப்பட்ட பொரிகடலை பலகாரங்களை காக்கை குருவிகள் கொத்தின. பல வர்ணங்களில் ஜாலம் காட்டிய மேகக் குழுக்கள் ஒரே நீலவர்ணத்தில் இணைந்து கலந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top