வருணம்

0
(0)

காலைத் தபாலில், கோமதியின் திருமணப் பத்திரிகை வந்திருந்தது. உறையைப் பிரிப்பதற்கு முன்பே, அதன் மீதிருந்த கையெழுத்து ரொம்ப நாள்களுக்கப்புறம் கண்களில் சட்டென்று ஈரமாய்ப் பதிந்தது. மணமகனின் பெயரை உடனே படிக்க அனிச்சையாய்த் தாவிய மனதை அடக்கிக் கொண்டு உறையைப் பிரித்தான். எதிர்பார்த்த ஒன்றுதான்-உள்ளே அழைப்பிதழில் பார்வை நிலைதத அதே சமயம், கோமதியின் மனக்கதவு திறந்து கொண்ட அந்த நாள் ஞாபகத்தில் வந்தது.

“ நா விருப்பப்பட்ட எதையும் எனக்குத் தர மாட்டேன்னு அப்பா இது வரைக்கும் மறுத்ததே இல்ல. இந்த விஷயத்துலயும் விட்டுக் கொடுப்பார்னு தான் நெனைக்கிறேன்…”

-நம்பிக்கை நிறைந்த கண்களின் பிரகாசத்துடன் கோமதியிடமிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன.அவளது நம்பிக்கை பொய்யாகி விடக் கூடாதே என்ற கவலை மனதின் மூலையில் தலைகாட்டாமல் இல்லை. ஆனால், அவளது நம்பிக்கைக்கான பலமான அடித்தளம் கோமதி தன் அப்பாவுக்கு எழுதியிருக்கும் அந்தக் கடிதமென்று பட்டது.இதை விடவும் வேறு பொருத்தமான வார்த்தைகளால் இந்த விஷயத்தை வேறு யாராலும் விவரிக்க முடிந்திருக்காது என்று நினைக்க வைக்கும்படியான வார்த்தை களால் வடிக்கப்பட்ட கடிதம் அது. இப்படி ஒரு கடிதத்தை எழுதுவதற்குக் கோமதியால் முடியும் என்று அதைப் படிக்கத் தொடங்கிய அந்த நிமிடம் வரையிலும் அவன் நினைத்ததேயில்லை. ஒரு நாலுவரிக் கார்டில் எழுதக் கூட ஒரு மணி நேரம் ஆகும் அவளுக்கு.

அன்றைக்குக் காலையில், கோமதி ஆபீசுக்குள் நுழைந்ததுமே நேராக  அவனை நோக்கி வந்த போது சாதாரணமாகச் சிரித்தபடி ‘குட்மார்னிங்’ சொன்னான். பதிலுக்கு அவள் குட்மார்னிங் சொல்லாதது ஆச்சரியமாக இல்லை.பலமுறை அவளிடம் இவன் கவனித்ததுதான் அது. ரொம்பவும் ஆர்வமாக இவன் பேச முற்படுகிற சமயங்களில் அவள் அதைக் கவனிக்காமல் கூட போயிருக்கிறாள். முதல் ஓரிரண்டு சமயங்களில் அப்படி கவனியாமல் கோமதி போனபோது, சட்டென்று மனதில்  உடைந்து நொறுங்கியவற்றை இன்னமும் இவனால் வெளியே எடுத்துப் போடவே முடிந்ததில்லை. பிறகு ஒருமுறை அவளே அதைப்பற்றிச் சொன்ன போதுதான் கோமதியின் இயல்பே அது என்பது தெரிந்தது.

“ மனசுல எதையாச்சும் நெனைச்சுக்கிட்டே இருப்பேன் சார், அப்ப யார், எவ்வளவு முக்கியமான விஷயத்தச் சொன்னாலும் அதைக் காதும் வாங்காது,மனசும் வாங்கிக்காது…”

-இப்படி கோமதி சொன்ன போதுதான், இது இவனுக்கும் பொருந்துகிறது தானே என்று உறைத்தது.

கோமதி தன் சீட்டுக்கு நேராகப் போய்க் கோமதி உட்கார்ந்து விட்டதை இவன் கவனித்தான்.

அரைமணி நேரம் கழித்து, வேளையில் மூழ்கியிருந்த இவன் கவனம் கலைந்து நிமிர்ந்த போதுதான் கோமதி இவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது கண்களில் பட்டது.இவன் எப்போது நிமிர்ந்து பார்ப்பான் என்று காத்திருந்தது போல் கோமதி உடனே எழுந்து இவன் அருகே வந்தாள்.

“சார், லஞ்ச் டைம்ல உங்ககிட்டக் கொஞ்சம் பேசணுமே…”

உடைந்து தளும்புகிற குரல்.அந்த வார்த்தைகளின் தழுதழுப்பில் இவன் சங்கடபட்டாலும் , வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ ஒ,பேசலாமே…  “

“ இந்த லெட்டரப் படிங்க சார்…”

டைனிங் ஹாலின் இடது கோடியிலிருந்த டேபிளின் மேல் டிபன் பாக்சைத் திறந்து வைத்துக் கொண்டு கோமதி இவனிடம் ஒரு கடிதத்தை நீட்டினாள். அந்த முகம் இவனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. கோமதியின் வழக்கமான முகமும் சிரிப்பும் துலக்கி வைத்த வெள்ளிக் குத்துவிளக்குப் பிரகாசத்துடன் ஒளிர்பவை. பளீரென்ற அந்தப் பிரகாசத்தின் தூல அடையாளமாய் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தது போல் மின்னுகிற ஈர உதடுகளும், பற்களும்.

அவளுடைய இன்றைய இந்தச் சங்கடம் தோய்ந்த முகம் கோமதிக்குப் புதியது;பொருத்தமில்லாததும் கூட.

மனதின் உளைச்சலை அடக்கியபடி, கடிதத்தின் வாசகங்களில் தனது கவனத்தைக் குவித்தான் இவன் :

“…அப்பா என்ற முறையில், என்னையும் அக்காவையும் பற்றி நீங்கள் எவ்வளவு கவலைப் படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அக்காவும், மாமாவும் அவர்களுடைய வீட்டில் போட்டுக் கொள்ளும் சண்டையும் தெரியும், அப்பா. அக்காவைப் படிக்க வைத்தீர்கள்தானே? எதற்காக? அக்காவால் தன் படிப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை… அவள் இப்போது இருக்கிற நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது…

அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாரும் உங்களைத் திட்டுகிற அளவுக்கு எங்களைச் சிறு வயதிலிருந்து சுதந்திரம் கொடுத்து வளர்த்தீர்கள். நாங்கள் எதைக் கேட்டாலும் அதை மறுத்ததே இல்லை. ஆனால், அக்காவின் திருமணப் பேச்சின் போது,அவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்து விட்டீர்கள். அவள் யாரையும் காதலித்திருக்க வில்லை;படித்து விட்டு வீட்டில்தான் இருந்தாள். வேலைக்குப் போகிறேன் என்று கூடச் சொல்லவில்லை…

“இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாமே அப்பா…கொஞ்ச நாளைக்கு இப்படியே விடுங்க என்னை …” என்றுதானே அவள் சொன்னாள்?

எனக்கே கூட,அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.நீங்கள் கல்யாணப் பேச்சை எடுத்ததுமே அக்கா நாணிக்கோணிக் கொண்டு, ”போங்கப்பா…வெக்கமா இருக்கு…” என்று சினுங்குவாளாயிருக்கும் என்பது என் நினைப்பு. என்னதான் அக்காவுடனேயே வீட்டில் ஒன்றாக இருபத்து நாலு மணி நேரமும் இருந்தாலும், அவள் கூடப் பிறந்தவள்தான் என்றாலும் நமக்கு இந்த சக மனுஷர்களின், மனுஷிகளின் மனங்களில் என்ன இருக்கிறது என்று அனுமானிப்பதில் எவ்வளவு தவறு செய்கிறோம், இல்லையா அப்பா…? இப்போது என் விஷயத்தில் நீங்கள் செய்திருக்கிற மாதிரி!

அக்காவை அப்படியே விட்டிருக்கலாமேபா? குற்றம் சாட்டுவதற்காகச் சொல்லவில் லைப்பா.   எங்களை ஓர் எறும்பு கடித்து விட்டால்கூடப் பாம்பு கடித்து விட்ட மாதிரிப் பதறிப் போய் விடுகிற நீங்கள், அக்காவை எப்படி அந்த மாதிரியான ஒரு பாழுங் கிணற்றில் தள்ளி விட்டு விட்டு இருக்கிறீர்கள் என்பதுதான் என் ஆச்சரியம்.

அவளுடைய வாழ்க்கை இப்படியான பிறகும் எனக்கு வரன் தேடி பேசி முடிப்பதில் இவ்வளவு அவசரம் எதுக்குப்பா? நான் உங்களுக்குப் பாரமாகிட்டேனா அப்பா? நான் வயதுக்கு வந்து அப்படி ஒண்ணும் அதிக வருஷங்கள் ஆகிடலைதானே? வீட்டுக் காரியங்கள் நடப்பதில் என் சம்பாத்தியத்துக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதில் குற்ற உணர்வு வந்து விட்டதா அப்பா?

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டுமப்பா…

நான் இங்கே என் ஆபீசில் என்னோடு வேலை பார்க்கும் ஒரு நண்பரை மணக்க விரும்புகிறேன் என்று சொன்னால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமா,அப்பா..? ஏதோ அசட்டுத்தனமான ஒரு காதல் கதையாக இது முடிந்து போகுமென்று நான் நம்புகிறேன் அப்பா.

அவர் எனக்கு மேலதிகாரிதான். ஆனால், மிகவும் இனிய நண்பர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். என்னை, என் சுபாவங்களை மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஒரே ஒரு பிரச்சினை: அது…அவர் நம் சாதிக்காரரில்லை. எஸ்.டி.கம்யூனிட்டி.நீங்கள் இதையெல்லாம் பொருட் படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் என் மனதை அவரிடம் பறிகொடுத்து விட்டேன். நாங்கள் இன்னும் மூணு வருசத்துக்குக் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பதாக இல்லை.அக்காவின் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை நானும் அவசரப்பட விரும்பவில்லை. அவருடைய ஒரே தங்கைக்குத் திருமணம் முடிந்து விட்டால்,அவரும் ப்ரீயாகி விடுவார்.

நீங்கள் அவரை ஒருமுறை பார்த்துப் பேசினால் போதும் அப்பா. நிச்சயம் அவரை ஏற்றுக் கொள்வீர்கள்.இந்த விஷயம் பற்றி நீங்கள் உடனே முடிவு சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லைப்பா. ஆனால், வேறு வரன் பார்க்கிற முயற்சிகளை நிறுத்தி விடுங்கள், அப்பா.

கல்யாணம் பத்தி நெனைச்சாலே பயமாயிருக்குப்பா…ரொம்பவே பயமாயிருக்குப்பா…

உங்களால எண்ணப் புரிஞ்சுக்க முடியும்ப்பா, ப்ளீஸ்…இப்ப எனக்கு வேற வரன் பாக்காதீங்க.நான் விரும்புகிறவரை, நீங்கள் எப்போது சரி என்று சொல்கிறீர்களோ அப்போது கல்யாணம் பண்ணிக்கறேன், சரியாப்பா…?

உங்கள் முடிவுக்குக் கட்டுப்படுவேன், அது எதுவாக இருந்தாலும்…”

-கோமதியின் கடிதம் அதோடு முடிந்திருந்தது. அதைப் படித்து முடித்து நிமிர்ந்த இவனுக்குக் கண்கள் கலங்கியிருந்தன.

நெகிழ்ந்து கசிந்த வார்த்தைகளில் இவன் சொன்னான் :

“ரொம்ப நல்ல லெட்டர், கோமு…ஒங்க அப்பா நிச்சயம் இதுக்கு ஒத்துக்குவார்…”

“தேங்க்ஸ் சார்,சரி,என்னோட சாய்ஸ் பத்தி என்ன நெனைக்கிறீங்க?”

“ வெரிகுட் சாய்ஸ், கோமு. நம்ம பி.எம்.சாரப்போல ஒருத்தர் ஒனக்குக் கணவரா வர்றது ரொம்ப நல்ல விஷயம்…”

“ சரி,இதுக்கு எங்க அப்பா ஒத்துக்கலைன்னா…?”

“ …!”

“என்ன சார், மௌனமாயிட்டீங்க? நம்மள எதுக்கு இந்த வம்புல மாட்டி விடறான்னு பயப்படறீங்களா?”

“ சேச்சே, இதுல வம்பு என்ன இருக்கு ?”

-கலகலத்துச் சிரித்தாள் கோமதி.மறுபடி பழைய பிரகாசம் திரும்பி விட்ட முகத்துடன் அவளைப் பார்த்த பொது மனம் நிறைந்து போனது இவனுக்கு.

அன்றைக்கு வீட்டுக்கு சாயங்காலம் போனதுமே அப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்து விட்டதாக மறுநாள் காலை அலுவலகம் வந்ததுமே கோமதி சொன்னாள். அதைப் படித்து விட்டு, ஒன்றுமே பேசாமல் இவளைக் கூப்பிட்டுக் கடிதத்தைத் திருப்பித் தந்து விட்டாராம். அவரின் அந்த அமைதியும், மௌனமும் கோமதியை அச்சுறுத்தியிருக்க வேண்டும். அவளுடைய முகம் களையிழந்து குழம்பிப் போயிருந்தது.

ஒரு மாதம் ஓடியிருக்கும்.அன்றைக்கு வந்த உடனே அலுவலகத்தில் பி.எம்.அறைக்குப் போனாள் கோமதி. போன வேகத்தில் வெளியே வந்ததும்,நேராக இவனிடம் வந்தாள் அவள்: ”நான் ரிசைன் பண்ணிட்டேன், சார்… வரட்டுமா?” என்று சட்டென்று சொல்லி முடித்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள். இவன் அதிர்ந்து நிமிர்ந்த போது அவள் இல்லை.

கொஞ்ச நேரம் வரை அப்படியே திகைத்து உட்கார்ந்திருந்த அவன், எதிரே பார்த்தான். கோமதி  தன சீட்டில் எப்போதும் போல் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. ‘கோமதி’ என்று அனிச்சையாகக் கூப்பிட்டு எதோ கேட்க வாயெடுத்தான்.

“அவங்க அப்பவே போயிட்டாங்களே, சார்” என்றார் ஹெட்கிளார்க்.”ஒ,போயிட்டாங்களா?” என்றான் இவன், அர்த்தமில்லாமல்.

திருமண அழைப்பிதழில்,மாப்பிள்ளையின் பெயருக்குக் கீழே ஒரு பக்கம் அவரின் அப்பாவின் பெயரும், மறுமுனையில் கோமதி அப்பாவின் பெயரும் ஒன்று போல் ஒட்டித் தொடர்ந்த ஒரே வாலுடன் அச்சாகியிருந்தன…

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top