வயித்துப்பாடு

4.5
(2)

சைக்கிளை அழுத்தி மிதித்தான் தங்கராசு. என்னதான் உன்னி உன்னி மிதித்தாலும் செக்காய் இருந்தது சைக்கிள். ஒவ்வொரு மிதிக்கும் மூச்சு வாங்கியது. முன் வீல் டயர் வழுக்கையாய் இருந்தது. அவனின் விலா எலும்புகள் போல டயரின் உட்கூடு நூல்கள் ஆங்காங்கே தலை காட்டியது. ஓடி ஓடி உழைத்துக் களைத்து ஓய்வின்றி பரிதாபமாய் உருண்டு கொண்டு இருந்தது. கேன் வாஷ் வைக்கப்பட்டு இருந்த ஓர் இடம் லேசாய் புடைத்துக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் தூக்கித் தூக்கிப் போட்டது. பின் வீல் டயர் நன்றாய் இருந்ததால் கொஞ்சம் எச்சாகவே காற்றடித்திருந்தான். பசியால் அழும் குழந்தை போல பிரிவீல் அவ்வப்போது கீச் கீச் என குரல் கொடுத்துக் கொண்டு இருந்தது. அதற்கு பசியமர்த்த ஆயில் விட சைக்கிள் கடைக்காரன் மறந்திருப்பானா அல்லது மறுத்திருப்பானா தெரியவில்லை. கோடை வெயில் வெளுத்து வாங்கியது. உடம்பெல்லாம் வியர்வை விழுதாய் ஓடியது. நெற்றியில் இறங்கிய வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டான் தங்கராசு. தண்ணீர் தாகம் நா வறட்டியது. உதடுகளை நாவால் ஈரப்படுத்தினான். உப்புக் கரித்தது. தாகம் அதிகமாகியது. மீண்டும் நெற்றியில் இறங்கிய வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டான் தங்கராசு. தண்ணீர் தாகம் நா வறட்டியது, உதடுகளை நாவால் ஈரப்படுத்தினார். உப்புக் கரித்தது. தாகம் அதிகமாகியது. மீண்டும் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை கண்களில் பட்டு கண் காந்தியது. சைக்கிளை நிறுத்தி தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்தான். மேயச் சென்றிருந்த ஆடுகள் வெயில் தாங்கமாட்டாமல் வேப்ப மரத்தடியில் ஒன்றொடொன்று நெருக்கியடித்துக்கொண்டு நின்றன. அந்த மரத்தடியில்நிற்கலாமா என்று ஒர கணம் யோசித்தவன் பின் மனதை மாற்றிக் கொண்டான். இன்னும் ரெண்டு மைல் தூரம்தான் பூதலபுரம், மீண்டும் சைக்கிள் ஏறி உடல் நோக மிதிக்க ஆரம்பித்தான்.

சுற்றிலும் பரவிக்கிடந்த பழையவார்கள், சிறிய வாளியில் தண்ணீர், படிமனான கல், அடிப்பட்டை, நூல், ஊசி, சிறிய ஆணிகள் இத்தியாதிகளுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு போவோர், வருவோரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தங்கராசு. காலையில் இருந்து உட்கார்ந்து கொண்டிருந்தவனுக்கு ஒரு வருமானமுமில்லை. இன்னைக்கு முறையைக் கழிக்க ஒரு இருவது ரூவாயாச்சம் வேணுமே. கை-யைத் தூக்கி வறட் வறட் என்று காலைச் சொறிந்து கொண்டான். ம்… இப்ப எல்லாம் யாரு பழைய செருப்பை தைக்க கொண்டு வாராங்க. அந்தக் காலத்துல பெரிய பெரிய ஆட்களும் சம்சாரிகளும் கான்பூர் குரோன் அடின்னு விதவிதமாய்த் தோல் செருப்புகளைத் தைக்க வருவாங்க. நம்மளால் தொழில் செய்ய முடியாத அளவுக்கு வேலை குமிஞ்சு கிடக்கும். சில மைனர்கள் போடுவதற்கென்றே முட்டைப் பத்து போட்டு செருப்பு கொடுத்தா, கிரீச் கிரீச் சுன்று தெருவே திரும்பிப் பாக்கும். அவங்களுக்குப் பெருமை. நமக்கும் பேர் சொல்லும்.

காது அறுந்துடுச்சு, வார் புடுங்கிடுச்சுன்னு அடிக்கடி நம்மகிட்ட வருவாங்க, தொழில் ஐரூரா போய்க்கிட்டு இருக்கும். இப்ப என்னடான்னா ரப்பர் செருப்பு ச-சா கிடைக்குது. சிறுசுல இருந்து பெரியவுக வரைக்கும் மாட்டிக்கிறாங்க. ஓடா தேஞ்சதும் புதுசு புதுசா மாத்திக்கிறாங்க. இப்படி ரப்பர் செருப்பு வந்து நம்ம தொழிலை கெடுக்குமுமனு கனாக்கூட கண்டிருப்போமா, வசதி படைச்சவங்க வித விதமா வெல கூடுனதா….. எங்க இருந்துதான் வருமோ நம்ம கண்ணுல கூட பாக்காத மாதிரியான செருப்புகளை போட்டுட்டு திரியுறாங்க. நாம இப்படி வேனாக் கொதிக்கிற வெயில்ல தலைக்கு மேல ஒரு சாக்கை நாலு மூலையிலும் இழுத்துக் கட்டி உட்கார்ந்துக்கிட்டு போறவங்களையும் வர்றவங்களையும் தொண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.

மனதில் பல விதமான எண்ண ஓட்டங்கள். இனி காலத்துக்கும் இந்தத் தொழில்ல நீடிச்சு இருக்க முடியுமா….? நினைக்கும் போதே பயமாய் இருக்குது. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இதுதான். இதவிட்டா வேறு ஒரு தொழிலும் தெரியாமப் போச்சு. கூட தொழில் பாத்தவங்க எல்லாம் திருப்பூர், கோயம்பத்தூர் போயி வேற வேலை கத்துக்கிட்டாங்க.

அந்தக் காலத்துல சுத்துப்பட்டி எல்லாம் பேர் விளங்கியது கனவு போல ஆயிருச்சு . கீ காட்டுல இருந்தெல்லாம் தேடி வந்து கொடுப்பாங்க. தங்கராசு செருப்பு தச்சு கொடுத்தான்னா குதுரமேல போற மாதிரியில்ல இருக்கும். காதில் விழுவது மன நிறைவாய் இருக்கும். அதுமட்டுமில்லாமல், காளை மாடுகளுக்கு மணி வச்ச கழுத்துப்பட்டை தைக்க சம்சாரிகள் அவ்வப்போது வருவாங்க. விசேச நாட்களில் ஜல் … ஜல் ன்னு மாட்டு வண்டி கட்டி போறதுல அப்படி ஒரு ஆனந்தம். நாலைந்து வண்டிக இப்படி ஒன்னு சேர்ந்து வந்தா பாக்குறதுக்கும், கேக்ககுறதுக்கும் அப்படி ஒரு சந்தோசம் ஊரே வேடிக்கை பாக்கும். இப்ப மாடும் அத்துப்போச்சு. வண்டிகளும் இருந்த இடம் தெரியாமப் போச்சு. அந்த இடங்களில் இபப் டிராக்கடர் நீக்கமற நிறைஞ்சிடுச்சு. அந்தத் தொழிலும் மறந்து அனேக நாளாயிடுச்சு. பழைய ஞாபகங்கள் கண் முன் படம் காட்டிச் சென்றது. இன்னும் ஓரிருவர் கொடுக்கும் பழசையும், யாவாரிகள் கொடுக்கும் பழைய சாக்குகளை தைப்பதிலேதான் பொழப்பு ஓடுது. காலையில் இருந்து இம்புட்டு நேரம் உட்கார்ந்து கால் வ-த்த்து. காலை நீட்டி மாற்றிப் போட்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தான்.

மோட்டார் சைக்கிள் தட தடக்க ஒரு காலை வண்டியிலும், ஒரு காலை தங்கராசுவிற்கு பக்கமாய் வந்து ஊன்றி நின்றார் காண்ட்ராக்டர் பெரியசாமி. பக்கத்தில் நின்றதும் அரக்கப் பரக்க எழுந்து தோளில் கிடந்த துண்டை கக்கத்தில் போட்டுக் கொண்டு பவ்யமாய் அருகில் வந்து லேசாய்க் குனிந்து நின்றான்.

டேய் தங்கராசு, வீட்ல இருந்த பெரிய உசுரு போயிருச்சுடா…

சாமி பெரிய ஆத்தாங்களா…

ஆமா இந்தப் பேப்பர்ல எந்தெந்த ஊருக்கு யாராருக்குச் சொல்லணும்னு எழுதியிருக்கேன். செந்தில் கடையில் சைக்கிள்….?

எடுத்துக்க…. நான் சொன்னேன்னு சொல்-ரு.

சரி அத்தாவ எப்ப எடுக்குறீங்க.

பெரிய உசுரு இல்லையா தூரந் தொலைவுல இருந்து சொந்த

பந்தம் எல்லாம் வரவேண்டி இருக்கு நாள் காலையில் ஆகும்.

ஆட்டுஞ்ச சாமி.

ஒரு இருவது ரூபாத்தாளும் பேப்பரும் கைமாற, மோட்டார் சைக்கிள் தடதடத்தது.

எப்பாவது இப்படி ஒரு வேலை ஊர் ஊருக்குப் போய் துட்டி சொல் – வரணும். ஒன்னு ரெண்டு மாய் கொடுத்தால் கூட அம்பது ரூவாயாவது சேந்துடும். மனசுக்குள் ஒரு தெம்பு. கண்களில் மலர்ச்சி நடையில் ஒரு வேகம். சூட்டோடு சூடாய் ரெண்டு வடையும் டீத் தண்ணியும் அவசர அவசரமாய் தொண்டைக்குள் இறங்கி வயிற்றைச் சமாதானப் படுத்தியது. ஒரு பீடிக்கட்டும் தீப்பெட்டியும் பையினுள் விழா, சைக்கிள் மதிக்க ஆரம்பித்தான்.

குண்டும் குழியுமான சாலை. லேசாய் மெம்மறந்தால் கூட ஆளை விழத்தாட்டிடும். ரோடு போடுறாங்களாம் ரோடு. பேப்பராவுள்ள இருக்குது. இப்படி இருந்தால் ஒரு மழைக்கு தாக்காட்டுமா. ஆய கலைகளில் இந்த ரோட்டில் சைக்கிள் ஓட்டுறதையும் சேத்துக்கலாம்.

ஊர் ஊரா சைக்கிள் மிதிச்சு லோல் பட்டாத்தான் ஒன்னும் ரெண்டுமா வாங்கி செலவுக்கு தேத்த முடியம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பேசுவாங்க. எல்லாத்தையும் கேட்டுக்கணும். சின்னப் பசங்க கூட இந்தாடான்னு ரெண்டு ரூவாயை தூக்கிப் போடுவானுக. அதையும் கையால் குனிஞ்சு வாங்கிக்கணும். ரோசம் பாத்தா முதலுக்கு மோசமாயிரும். துட்டி சொல்ல உன்னைத்தான் அனுப்பிச்சாங்களானனு எகத்தாளமாய் கேப்பாங்க. ரெண்டொருவர் மட்டும் எப்ப எடுக்குறாங்கன்னு விபரம் கேப்பாங்க. அங்க கொடுக்குற ஒன்று ரெண்டுக்கு வளத்த நாயி மூஞ்சிய பாத்த மாதிரி தொண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்கணும். ஈரமுள்ளவங்க மாடாக்குழியில் இருந்து எடுத்த டப்பாவுல கஞ்சிய ஊத்துவாங்க. சிரட்டையில் உள்ள ஊறுகாயைத் தொட்டுக்கிட்டு குடிச்சிட்டு கழுவி இருந்த இடத்துல வச்சிடணும். அந்தக் காலத்துல இருந்து மாறாத பாக்கம். ரோசம் பாத்தா வயிறு காயணும்.

ஒவ்வொரு ஊராய் சொல்-த் திரும்பும் போது, பொழுது மேற்கே சாந்திடுச்சு, பீடிக்கட்டும் கா-யாச்சு. கரிசல் காடு ஒத்தையடிப் பாதை மற்றும் பாதையே அத்துப் போன ஊர்கள் வெயில் மூஞ்சியில் அடித்தது. திரும்பவும் சைக்கிளை ஊருக்கு மிதிக்க வேண்டும். நினைக்கும் போதே ஆயாசமாய் வந்தது. பையினுள் சில்லரைக் காசுகள் கனத்தது. ஒவ்வொரு ஊரிலும் வாங்கியதை மனசுக்குள் கணக்குப் போட்டான். கந்தசாமி புரத்தில் 7, பூதலபுரத்தில் 9, மாதல புரத்தில் 5, சென்னம்பட்டியில் 6, ஒவ்வொன்றாய் கூட்டிப் பார்த்ததில் 45 ரூபாய் வந்தது.

மொத்தத்தில் கொஞ்சம் கொறச்சல்தான். பரவாயில்லை பஸ் ஸடாண்டுல இருக்குறதுக்கு எம்புட்டோ தேவலை. போனதும் மொதக் காரியம் ரேசன்ல அரிசி வாங்கிப் போட்டுடனும். அப்பத்தான் கஞ்சித் தண்ணிக்கு பிரச்சனை இல்லாம ஓடும். அவளின் கிழிந்த ரவிக்கை கண்களில் நிலை குத்தியது. வரிசையாய் பல செலவுகள் வடம் பிடித்தன. அவளிடம் கொடுத்துடலாம். நம்மளவிட அவளுக்குத்தான் யோசனை ஜாஸ்தி. இமைக்கும் நேரத்தில் ஒரு கல்-ல் ஏறி இறங்க, டமார் என்ற சத்தம். பின் சக்கரம் டயர் வெடித்துச் சிதறியது.

இறங்கியவன் நிலை குலைந்து போனான். இன்னும் நாலு மைல் தூரம் போகணுமே கண்களை இருட்டிக் கொண்டு வந்த்து. சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். சைக்கிள் கடைக்காரன் பூதாகரமாய் மனதில் நின்றான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top