இங்கு பிளாஸ்டிக் கப்பில் டீ கொடுக்கப்படாது என்றிருந்த அறிவிப்பு பலகையைப் பார்த்ததும் அதிசயித்தேன். சாதிய மனங்களில் இப் பிளாஸ்டிக் கப் ஏற்படுத்திய அரசியல் அறிந்ததால். சமீபத்தில்தான் அக்கடை வந்திருக்கம்போலும். டீ மாஸ்டரின் தோற்றம் வசீகரமாக இருக்க அவரிடம் டீ அருந்த வேண்டி நெஞ்சத்துள் எச்சில் ஊறியது.
மாஸ்டர் டீ என்றதும், ஓரிரு கேள்விகளைக் கேட்டார். வேறு யாரும் கேட்காதது. டீயின் மீது மேலும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. ஓவியக்காரனாகி டீயை வரைந்து கொடுத்தார். வாங்கிய வேகத்தில் ஒரு மிடறை விழுங்கினேன். பரந்த தேயிலைத் தோட்டத்தில் ஒற்றைத் தேயிலை சருகாகி மிதந்து திரும்பினேன். வார்த்தைகளோடு உடலும் அவரை பாராட்ட வெட்கப்பட்டுக்கொண்டார்.
உடலெங்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை மாலையாக போட்டுக்கொண்டிருந்தவன் டீ கேட்டுத் தவித்தான். முதலாளியோ விரட்டியபடியே இருந்தார். அவனோ விடாது மீண்டும் மீண்டும் வந்தபடியே இருந்தான். நான் காசை கொடுத்து டீயொன்று கொடுக்க வற்புறுத்தினேன். வர கஸ்டமர்கள் சங்கோஜப்படுவார்கள் சார் அதான் விரட்டிவிடுகிறேன் என்றார். பொய்யும் புரட்டும் மிகுந்த உதடுகள்தான் சங்கோஜத்திற்குரியன. இவனது உதடுகள் பொய்யறியாதது கொடுங்க பரவாயில்லையென மீண்டும் வற்புறுத்தினேன். மாஸ்டர் காத்திருந்தார்போல் எள்ளளவும் மாற்றமில்லாது எனக்கு கொடுத்ததைப் போன்றே அவனுக்கும் போட்டுக்கொடுத்தார். அவரின் மீது மேலும் மரியாதை ஏற்பட்டது.
முதலாளி எனைப்பார்த்து அங்க பாருங்க சார் ராஜ அதிகாரத்தோடு டீ குடிக்கிறான் என்றதும் அவனைப் பார்த்தோம். மின் கம்பத்தில் சாய்ந்தபடி கம்பீரமாக அழகுகாட்டி டீயை அருந்திக்கொண்டிருந்தான். இவனோட ராஜ அதிகாரம் நமை எதுவும் செய்யாது, நம்மை ஆளும் ராஜாக்களின் அதிகாரம்தான் நம்மை வாழ்வில் நாயாக அலைய வைக்கும் என்றேன். அது வேண்டுமானால் உண்மைதாங்க. மாற்றி மாற்றி ஆதார் கார்டு வாங்க, ஸ்மார்ட் கார்டு வாங்கவென அலைந்த மக்கள் இப்போ அதிலிருக்கும் பிழைகளை சரிசெய்ய படாதபாடு படுறாங்க இன்னம் என்னென்ன பாடுபட போறோமோவென புலம்பியவாறே மாஸ்டரிடம் சொல்லிக்கொண்டு வெளியேறினார் முதலாளி. அவரைத் தொடர்ந்து நானும்.
அவனது தோற்றமும், கம்பீரமும், தன் தூய்மை வாழ்வின் அகங்காரமும் வெளிப்படுத்தியவாறு இருந்த அவனை மீண்டும் பார்க்க ஆவல் ஏற்பட தூக்கம் தொலைத்த இரவாகிவிட்டது. விடியலைக் கண்ட வேகத்தில் டீக்கடையை அடைந்தேன். நீண்ட நேரமாகியும் அவனைக் காணவில்லை. மாஸ்டரிடம் கேட்க அவரோ சிரித்தபடி வந்தவருக்கு மீண்டும் டீயை வரையத் தொடங்கினார்.