வக்கற்றதுகள்

0
(0)

ஆத்திரமும் ஆதங்கமும் பொங்கியது ஆறுமுகத்திற்கு. “சம்பாதிச்சு பொண்டாட்டி பிள்ளைக்கு சோறுபோடத் துப்பில்லாத மனுஷனுக்கு கோபம் எதுக்கு வருது. எங்கையாவது போய்த் தொலைய வேண்டியது தானே. மண்ணுக்கும் மனுஷனுக்கும் பாரமா ஏன் இருந்துக்கிட்டு…” மனைவி பொன்னம்மாவின் சவுக்கடி வார்த்தைகள் இருதயத்தை வெடுக் வெடுக்கென்று பிடுங்கியது.

ஆறுமுகம் பள்ளிப் பருவத்திலிருந்தே ‘தண்ணீர்ப் பாம்பாக சாராயக் கடையிலேயே கிடையாகக் கிடந்தான். அப்பா இல்லாத பிள்ளை ஊதாரித்தனமா திரிந்தவனை திருத்தணும்னா.. கால் கட்டுபோடறதுதான் வழின்னு அம்மா தனது மகள் வழி பேத்தி பொன்னம்மாளையே கட்டி வைத்துப் பார்த்தாள். திருந்துன பாடில்லை! விதவை மகளும் தன் மகள் பிழைப்பை நினைத்து கவலையில் காற்றாகிப் போனாள். மகனுக்காக என்ற பாசம் மாறி பேத்திக்காக, அவள் பிள்ளைக்காக வைராக்கியமாய் அம்மா உயிரைக் காத்து வந்தாள்.

ஆற்றில் தண்ணீர் வராம நஞ்சை பூமி எல்லாம் வேக்காட்டில் வெள்ளை பூத்துப் பிளந்து கிடந்தது. விவசாயம் விளங்காமல் போனது கூலிவேலையும் குதிரைக் கொம்பானது. வயிற்றுப் பிழைப்புக்கு இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கவேண்டிய நிர்பந்தம்.

இந்தச் சூழலை எல்லாம் உணராமல் மகன் “ஆறான்” சாராயக் கடையே கதியாகக் கிடந்தான். மாதம் ஒருமுறை கள்ளச்சாராயக் கேஸ், வாய்த்தகராறுன்னு ஜெயிலுக்குப் போவதும், வருவதுமாய் ஜெயில்கோழியாகத் திரிந்தான்.

அம்மாவுக்கு மகன்மீதுபாசம் பட்டுப் போனது. மகனுக்குப் பிறந்த இரு குஞ்சுகளையும் காப்பாற்ற வாழும் வைராக்கியம் நீண்டது.

“புருஷன்காரன் பசியோடு காத்திருக்கையில் தனக்கு இட்லி வைக்காமல், இட்லி வாங்க வந்தவனுக்கு கொடுக்கிறாளே” என்ற ஆத்திரத்தில் ஆறுமுகம் தண்ணீர் டம்ளரை விட்டு எறிந்தான். இது பொறுக்காமல் ஆவேசப்பட்டுத்தான் பொன்னம்மாள் திட்டினாள்.

ஆறுமுகம் நடக்க நடக்க பசியும் சோர்வும், நேற்றிரவு சாப்பிட்ட தண்ணியின் மிச்ச சொச்சமும் வயிற்றைச் சுருக்கிப் பிடித்துச் சுண்டும் உணர்வும் சேர்ந்து அவனைத் தள்ளாடச் செய்தது. தெருமுனையில் உட்கார்ந்தான்.

‘ச்சே ஐம்பது வயசாச்சு. பொண்டாட்டி பிள்ளை, பொழைப்பு தழைப்புன்னு பாராம கம்மனாட்டியா திரிஞ்சுட்டோமே.. பொன்னம்மா திட்றதுலையும் ஞாயம் இருக்குல்ல…’

தண்ணி அடிச்சு அடிச்சு நரம்பெல்லாம் வெலவெலத்துப் போச்சு. பனஓலையாட்டம் கையெல்லாம் ஆடுது. இந்த வயசில யாருகிட்ட போய், என்ன வேலை பார்க்க! இப்போ தனியார் சாராயக்கடை இல்ல! டாஸ்மாக் கடையிலே வேலை பார்க்க படிச்சிருக்கணும். டெபாசிட் கட்ட வக்கு இருக்கணும். விவசாயக் கூலி வேலை பார்க்கவும். விளைச்சலுமில்லை. நஞ்சை பூமி புழுதிக்காடாய்ப் போச்சு. – ‘என்ன செய்ய? செத்துத்தான் தொலையணும்னா, குடும்பத்துக்கு என்ன வழி சொல்ல, …..ம், ம் நாம இருந்தாலும், ஒண்ணுதான், செத்தாலும் ஒண்ணுதான். நம்ம கறைச்சல் (தொந்தரவு) இல்லாம லாவது அதுக பொழைப்பை ஓட்டும்ங்க.. கழிவிரக்கம் அவனை பம்பரமாக ஆட்டிக் கொண்டிருந்தது.

“என்ன பிள்ளே ஆறான். என்ன யோசனை பலமா இருக்கிறாப்ல…” கலியன் கேட்டான். கலியமூர்த்தியும் ஒரு ஜெயில் கோழிதான். அடிக்கடி சிறுசிறு திருட்டு, பாக்கட்டறுப்பு, ஏமாத்துக்கேசுன்னு ஜெயிலுக்குப் போய்வருவான், இருவரும் ஜெயில் சினேகிதர்கள். மூணு மாதத்திற்கு ஒரு தரம் ஜெயில்ல இல்லைன்னா வெளியில சந்திச்சுக்குவாங்க.

“வா, கலியா, ஒண்ணுமில்ல, லேசா தலைவலி மாதிரி இருந்துச்சு..”

“தண்ணியில பேட்டரிக் கட்டை கூடிப் போச்சோ, சரி, வா டீ குடிக்கலாம்”

இருவரும் டீக்கடையில் ஆளுக்கொரு முறுக்கு எடுத்து கடித்தார்கள். டீ குடித்தார்கள். டீக்கடையில் சிறு டிவி ஓடிக் கொண்டிருந்தது. கடற்கரையில் ஒரே பரபரப்பு. ஜனங்கள் குய்யோ முறையோன்னு அலறல் சத்தம். குப்பங்கள் அழிந்து தண்ணீர்க் காடாக இருந்தது. குடிசைகள் சிதைந்து கிடந்தன. வயதானவர்கள் சிறுவர்கள் விறைத்து உப்பிக் கிடந்தனர்.

“என்ன அது..?” ஆறான் பதறினான்.

“ஏதோ கடல் கொந்தளிப்பாம், சுனாமி அலைகளாம், குப்பத்துக் குள்ளே நுழைஞ்சிருச்சாம். குமிகுமியாய்ப் பிணங்களாம். வா போய்ப் பார்த்துட்டு வருவோம்” டீக்கடையில் காசு கொடுத்தபடியே கலியன் சொன்னான்.

“வா போகலாம். ஏதாவது கிடைக்கலாம் இன்னிக்கு பிழைப்புக்கு ஆகலாம்”

“ஆஹா முடிச்சவிக்கி கிட்டே மாட்டிக்கினமே, இன்னிக்கு எந்தச் சிக்கல்ல மாட்டிவிடப் போறானோ? ஆறான் யோசிப்பதை உணர்ந்த கலியன் “வா, இங்கே சும்மா இருக்கிறதுக்கு போய்ட்டு வரலாம்” ஆறுமுகத்தை தோளில் கை போட்டுத் தள்ளிக்கொண்டு போனான். ஆறுமுகம் குடிகாரன்தான் ஒழிய திருடனல்ல! முடிச்சவிழ்க்கும் மோசக்காரன் இல்ல” அந்த நம்பிக்கைதான் இத்தனை வருஷமா பல சாராயக் கடைகளில் வேலை பார்க்கவும், வீட்டில் குடும்பத்தார் நம்பிச் சோறு போடவும் காரணமாய் இருந்தது. பசிக் கிறக்கத்தில இருந்தவனுக்கு டீ, முறுக்கு வாங்கிக் கொடுத்தானே கலியன். அதுக்காகவாவது போய் வரலாம்” என்று ஆறுமுகம் போனான்.

பேசிக்கொண்டே கடற்கரைக்குப்பம் வந்தார்கள். குடிசை களுக்குள் எல்லாம் தண்ணீர். குடிசைகள் முக்கோணமாய் மிதந்து கொண்டிருந்தன. பலர் தட்டுத்தடுமாறி சாமான் செட்டுகளோடு குழந்தைகளோடும் தப்பி ஓடிக்கொண்டிருந்தனர். உறவுகள் உயிரற்று உடலாகி மிதப்பது பார்த்தவர்கள் பாசத்தால் பிணைக்கப்பட்டார்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் ஓடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். வாலிப சங்கத்தினர்கள் வாயில் துணி கட்டி, உப்பிய பிணங்களை சிரமப்பட்டு தூக்கி வந்து மேடான பகுதியில் கிடத்திக் கொண்டிருந்தனர். சிதைந்த வீடுகளுக்குள்ளும் அலறல், முனகல், பீதியோடு அங்கும் இங்கும் உறவுகளைத் தேடும் பெண்கள், குழந்தைகள். எங்கும் நரகக் கதறல்கள், உலகமே அழிந்து விட்டதாக அலறல். மீன் கருவாடுகள் காய்ந்த இடத்தில் மனித பிணக் காடாக மாறி இருந்தது.

கலியன் ஆறுமுகத்தின் கையை பிடித்து ஒரு இடிந்த ஓட்டு வீட்டுப் பக்கம் இழுத்துப் போனான்.

“இந்தாபாரு, இந்த வீட்டுக்குள்ளே நைசா போறேன். பீரோ பெட்டிக்களுக்குள்ளேயே நகை நட்டு, பணம் காசு தேறுதான்னு பார்க்கிறேன், நீ வெளியே நின்னு யாரும் வராமப் பார்த்துக்க! யாரும் வந்தா குரல் கொடு! கிடைக்கறதை பங்கு போட்டுக்கலாம் என்ன நா சொல்றது சரிதானே?”

“பாவம், சரியிற வீட்லே கொள்ளை அடிக்கிறது படுபாதகம் இல்லையா?”

“அட பித்துக்குளியாட்டம் பேசுறபிள்ளே! எரியிற வீட்ல பிடுங்கின வரைக்கும் லாபம்னு பழமொழியே சொல்லி வைச்சிருக்கானுவ.. நீ என்ன பிழைக்கத் தெரியாம…’

ஆறுமுகத்துக்கு மனம் ஒப்பவில்லை. ஆனால் ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்ற சொல் பொன்னம்மா திட்டின “துப்புக் கெட்டவன், பொண்டாட்டி பிள்ளையை வச்சு பிழைக்க வக்கில்லா தவன்”-னு காறித் துப்பியதை நினைவூட்டியது. மவுனமாய் இருந்தான். கலியன் சிதைந்த வீட்டுக்குள்ளே போய் ஏதோ உருட்டினான். ஆறுமுகம் வீட்டு வாசலருகே போகும்போது ஒரு ஆள் வலியோடு முணங்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தான். ஒரு பெண் பிள்ளை பதினைந்து வயசு இருக்கும். வேகமாகப் போய் கலியனைக் கூப்பிட்டான்.

“என்ன, வெவரமில்லாம இருக்கே, வந்தமா, அகப்பட்டதை கைப்பத்தினமான்னு போய்கிட்டே இருக்கிறதா..? அந்தச் சத்தம் இந்தச் சத்தம்னு பினாத்தறே” கலியன் கடித்தான்.

“கலியா, நீ வர்றியா, நான் சத்தம் போய்ட்டு ஆளுகளைக் கூப்பிடவா” ஆறானுக்கும் கோபம் வந்தது.

கலியன் படிந்தான் “சரி வா இதை அப்பறப்படுத்திட்டு அப்புறமா வருவோம்”

உடலைச் சுற்றிக் கிடந்த இடிபாடுகளைக் களைந்தனர். மெல்ல மெல்ல தலைமாட்டில் ஒருவர், கால்மாட்டில் ஒருவராக இருந்து தூக்கி வெளியே கொண்டுவந்தனர். அந்த பெண் பிள்ளையின் துணிகளை சரி செய்து பின் தூக்கிக்கொண்டு போனார்கள். அவள் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். காலில், தோளில் ரத்தம் கசிந்து உறைந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ரோட்டோரம் கொண்டு வந்தார்கள். எதிரே வந்த வாலிபர் சங்கக் குழுவினரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்து ஆம்புலன்சுக்கு கொண்டு போகச் சொன்னார்கள்.

ஆம்புலன்ஸ் அருகே ஒரு பெரிய அதிகாரி செல்போனும் கையுமாக பரபரப்பில் இருந்தார். இரு துணை அதிகாரிகள் நின்றிருந்தனர். அதில் ஒருவர் “அய்யா, பிணங்களை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருக்கு. இந்தப் பகுதி நகராட்சியில் 15 பேர் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். 60 இடம் காலியாக கிடக்காம்… இருப்பவர்கள் அந்தந்தப் பகுதிகளில் நிவாரண வேலைகளில் இருக்கிறார்கள்”

“என்னங்க, ஒரு மாவட்டத் தலைநகர்ல 15பேர்தான் துப்புரவுப் பணியாளர்கள் இருக்கிறார்கள்? அந்த நகராட்சி ஆணையரைப் பேசச் சொல்லுங்கள்.”

“அய்யா நாங்க நகராட்சி ஆணையரை விசாரிச்சோம் அங்கே துப்புரவுத் தொழிலாளிகள் எல்லாம் தனியார் காண்ட்ரக்ட்ல இருக்காங்களாம்! அவங்க காண்ட்ராக்டரை அணுகினோம். அவர் இந்த மாதிரி வேலைகளுக்கு எல்லாம் எங்க தொழிலாளிகளை வேலை வாங்கனும்னு ஒப்பந்தத்தில் இல்லை. அதனால் அவங்களை அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டார்.”

நெருப்பு சுட்டதுபோல் குதித்துத்துடித்தார் பெரிய அதிகாரி. முகம் சிவந்தது. அந்தக் காண்ட்ராக்டரை செல்லில் தொடர்பு கொண்டார். தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக தகவல் கரகரத்தது. அந்த ஒப்பந்தக்காரர் ஒரு பெரிய அரசியல் புள்ளிக்கு ரொம்ப வேண்டியவராம். பெரிய அதிகாரிக்கு எரிச்சல் வந்தது. பெருமூச்சு விட்டார்.

வாலிபர்கள் வாய் கட்டி மும்முரமாய் மீட்புப் பணியில் அலைந்தனர். அவர்களைக் கொண்டு பெரிய அதிகாரி, சடலங்களை அப்புறப்படுத்தும் வேலைகளையும், நிவாரணப் பணி வேலை களையும் வாங்கினார்.

ஆறான் சொன்னான் “எனக்கு வெவரம் தெரிய நான் செய்த முதல் நல்ல காரியம் இந்தப் பொம்பளப் புள்ளையைக் காப்பாத்துனது தான் இது தர்ற நிம்மதி, நீ சொல்றதுல இல்ல, வா நாம பாதிக்கப் பட்டவங்களுக்கு உதவலாம். ஒரு நிம்மதியாவது கிடைக்கும்”

“அட என்ன மறுபடி மறுபடி பித்துக்குளியாட்டம் பேசுற! வா அந்த வீட்டு பீரோவில ஏதாவது லம்பா கிடைக்கும்” என்று கலியன் ஆறானை இழுத்துக்கொண்டிருந்தான்.

மேட்டுக்கும் பள்ளத்தாக்குமான இழுப்புப் போராட்டத்தின் போது, அந்த வழியே இரு போலீஸ்காரர்கள் வந்தார்கள். கலியன் போலீஸ்காரர்களைப் பார்த்ததும் பம்மி ஒன்றுக்கு இருப்பது போல் முகத்தைக் குனிந்து குந்தினான். ஆறுமுகம் எதுவும் செய்யத் தெரியாது விழித்தான். போலீஸ்காரர்கள் நெருங்கி கலியன் முதுகில் லத்தியால் தட்ட, திடுக்கிட்டு எழுந்தான்.

“ஏன்டா ஜெயில் கோழிகளுக்கு இங்கிட்டு என்னடா வேலை? எதுவும் கொள்ளையடிக்க வந்தீகளா? என்னடா கிடைச்சது? எங்கே எடு வெளியே…?”

“இல்லிங்க ஏட்டய்யா, நாங்க சும்மா பாதிக்கப்பட்டவங்களுக்கு ஏதாவது உதவலாம்னு வந்தோம்” ஆறுமுகம் பயந்து பயந்து சொன்னான். கலியன் தலையாட்டினான்.

“மொசப் பிடிக்கிறதுக மொகம் தெரியாது? நடங்கடா ஸ்டேசனுக்கு….”

“ஐயா, சத்தியமா பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவ வந்தோம்யா” கலியன் முணுமுணுத்தபடி நடந்தான்.

“அப்படியா, நம்பலாமா? சரி வாங்க இந்தப் பொணங்களை அப்புறப்படுத்துங்க”

போலீஸ்காரர்கள் பின்னால் இருவரும் நடந்தார்கள். கலியன் முணுமுணுத்தபடி நடந்தான்.

பெரிய பொக்லைன் எந்திரங்கள் மூலம் பெரிய பெரிய குழிகள் வெட்டப்பட்டிருந்தன. வாலிப சங்கத்தினரோடு, கலியனும் ஆறானும் தூக்கிட்டு வந்த பிணங்களைக் குழியில் தள்ளினர்.

பொக்லைன் எந்திரமும் மண்தள்ளி மூடியது. அந்தப் பகுதி முழுவதும் பிணநாற்றம். அதிகார எந்திரத்தின் நாற்றம் அதையும் மிஞ்சி நாறிக் கொண்டிருந்தது.

தனது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவத்தை சந்தித்திராத ஆறுமுகம் தனது துக்கிரித்தனத்திற்கும் குடும்பப் பொறுப்பற்ற தனத்திற்கும் பிராயச்சித்தமாக ஓடி ஓடி வேலை செய்தான். போலீஸ் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தது.

தன்னார்வக் குழுக்கள் இடிபாடுகளிலிருந்தும், சுவர் புதை களிலிருந்தும் பிணங்களை எடுத்து வந்தார்கள். நிழற்படம் எடுத்து பின்குழிகளில் தள்ளினார்கள். – “உதவாக்கரையாக இருப்பதைவிட செத்துத்தொலை…” என்ற பொன்னம்மாவின் வார்த்தைகளை துடைத்தெறிய மனிதனாக நிமிர்ந்து இயங்கினான். சாராய ஊறலில் ஊறி ஊதி மரத்து போயிருந்த ஆறுமுகத்தின் இதயம் நல்லமுறையில் துடிக்க ஆரம்பித்தது.

வெயிலும் சாரலும் மாறி மாறித் தாக்கிக்கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக பசியும் சோர்வும் அலுப்பும் நரமாமிசக் கவிச்சியும் தலைசுற்றி கொண்டு வந்தது. ஆறுமுகத்திற்கு. குழியில் பிணங்களை தள்ளித் தள்ளி விட்டுக் கொண்டிருந்த ஆறுமுகம் தடுமாறி பிணக்குவியலில் விழுந்தான். எதிர்ப்புறம் மண்தள்ளும் பொக்லைன் எந்திர கர்ஜனை மீறிய ஆறுமுகத்தின் குரலை சுற்றியிருந்தவர்கள் உணரும் முன் அவன் மீதும் மண் விழுந்தது

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top