ரயில் வந்துரும்

0
(0)

“அப்பா பரிச்ச லீவுல ரயில் பாக்குறதுக்கு மதுரைக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்க… எப்போ போகலாம்?” திரும்பவும் கேட்டான் என் மகன்.

“போவம்ப்பா… கண்டிப்பா  ஒரு நாள் கூப்பிட்டுப் போறேன். ம்…”

விடுமுறை விட்டதும் போதும், பாவம்! நினைக்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டிருக்கிறான்.

அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி்.ஆா் அவா்கள் குறிப்பிட்ட பருவம்வரை யாதுமறியாமல் கூனிக்குறுகி கூண்டினுள் அடைபட்டிருந்ததுபோல ஏழெட்டு வயதிலிருக்கும் எங்கள் ஊா் மழழைகளுக்கு ரயிலென்பது மாய பிம்பமாயிருக்கிறது போலும்.

நன்றாக ஞாபகமிருக்கிறது! எட்டு  வருடங்களுக்கு முன்பு ஆண்டிபட்டியில் வேலை முடிந்து மாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, எங்கள் ஊரின் முகப்பிலிருக்கும் இரயில்வேகேட் அடைக்கப் பட்டிருந்தது. சாலையின் எதிரெதிர் புறங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, கொஞ்சம் குறைய ஏராளமானோர் இறங்கி சாலையோரங்களில் நின்று கொண்டு வரப்போகும் அந்த இரயிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும்தான்! மனசுக்குள்ளே மகிழ்ச்சிப் பிரவாகம் மட்டுமின்றி ஏராளமான உணர்ச்சி அலைகளும் அந்நேரம் அடித்துக் கொண்டிருந்தது. காரணம் அதுதான் பிரியா விடைபெறப்போகும் கடைசி ரயில்!

ஏனைய இடங்களிலெல்லாம் அகலப்பாதையில் ரயில்கள் ஓட எங்கள் ஊருக்கு மட்டும் அப்போதுவரை மீட்டர்கேஜ்-ல் ரயில் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாளொன்றுக்கு இருமுறை மதுரையிலிருந்து போடிவரை வந்துபோகும் ரயிலில் அவ்வளவாக பயணிகள் ஏறமாட்டார்கள். காலையிலும், மாலையிலும் அலுவலக நிமித்தமாக வந்து போவோருக்கும், ஏலக்காய் மற்றும் உயர்தரமான வாசனைத் திரவியங்கள், தானியங்கள், காய்கறிகள் கொண்டுபோவதற்கும் விரும்பும் பயனாளிகளுக்கும் என செல்லமாக ஓடிக்கொண்டிருந்தது. சிறு வயதிலே மதுரையிலிருக்கும் பாட்டி வீட்டிற்கு போக ஓரிரு முறை அப்பா என்னை அந்த ரயிலில் அழைத்துப் போயிருக்கிறார். அப்போது அதில் நீராவி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

அந்நாட்களிலெல்லாம் இரயில் பார்ப்பதென்றாலே தனி குஷிதான். உறவினர் வீட்டுக்குச் செல்வது போல், சினிமாக் கொட்டகைக்குச் செல்வதுபோல், திருவிழாவிற்குச் செல்வதுபோல் இதயம் படபடக்க மனசுக்குள்ளே மகிழ்ச்சிப் பிரவாகம் துள்ளிக் குதிக்கும்.

நான் முதலாம் வகுப்பில் சேர்ந்து சில மாதங்கள் கழித்து பள்ளியில் இன்பச் சுற்றுலா துவங்கியபோது ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றார்போல திருச்சி, மதுரை, குற்றாலம், வைகை அணை என்று மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர். நாங்கள் முதல் வகுப்பு என்பதால் வெறும் பத்துப் பைசா கட்டணத்தில் ஊருக்குள்ளேயே இருக்கும் இரயில் நிலையற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

வெள்ளரிப் பிஞ்சுகள், கடலை மிட்டாய், பிஸ்கட், சர்பத் என அவ்வப்போது கொடுத்ததுமல்லாமல் எங்களை சக சிறுவர் சிறுமியர்களோடு சகஜமாய் பேச விட்டும், திருக்குறள், பாரதியார் பாடல்கள் பாடியதுமன்றி, பல நன்னெறிக் கதைகளையும்,  ரயில் நிலையம் பற்றியும், ரயில் இயங்குவதையும் அது சம்பந்தமான சுவாரஸ்யமான விபரங்களையும் மழலைகள் வியக்கும் வண்ணம் சொல்லிக் கொடுத்தார்கள். மேலும் தெரிந்த விளையாட்டுக்களையும் அவரவருக்குத் தெரிந்த கதைகளையும் எழுந்து நின்று சொல்லச் சொல்லி கைதட்டினார்கள்.

ஊரின் ஒதுக்குப்புறமாக ரயில் நிலையம் அமைந்திருந்ததால் சுற்றிலும் பச்சைப் பசேரென வயல்வெளிகளும், வாய்க்கால் வரப்புகளும், நீரோடைகளும் தென்பட  காகம், மைனா, குருவிகளின் சத்தமும் ரம்மியமுமாய் இருந்தது. ஓட்டுக்கூரை போர்த்திய இரு கல் கட்டிடங்கள், டிக்கட் கொடுக்கும் வாயில், உயர்ந்து நிற்கும் கைகாட்டி, சிமென்டினால் ஆன நீளமான சாய்வு நாற்காளிகள், பயணியர் நிழற்குடை, பிளாட்பாரம், குடைசூழ நிழல் பாவிய மரங்கள், ஒன்றுக்கு இரண்டு மூன்றான தண்டவாளங்கள், ஓடாமல் நிற்கும் கழட்டி விடப்பட்ட கூட்ஸ் பெட்டிகள், தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் என ஒரே பரவசமாயிருந்தாலும் இரயில் எப்போது வரும் என்கிற ஏக்கம் வாட்டிக் கொண்டிருந்தது.

இரயில் வருவதற்கு சற்று முன் வரை எங்களோடு உரையாடிய ஆசிரியர் ‘ஞானவள்ளி’ கடைசியாக எங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். “நீங்க எல்லாரும் படிச்சு என்னவா ஆகப் பேறீங்க.. எங்கே ஒவ்வொருத்தரா எழுந்திரிச்சு சொல்லுங்க பார்ப்போம்..” என கேட்க, ‘டாக்டர், இன்ஜினியர், போலீஸ்’ என்று ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.

அவ்வரிசையில் என் முறை வந்தபோது எழுந்து நின்று இறங்கிய டவுசரை வலது கையால் ஏற்றிப் பிடித்து நெளிந்தபடி வெட்கத்தோடு தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். “ம்.. சொல்லுய்யா..”

அப்பா என்னை இரயிலில் மதுரைக்கு அழைத்துச் செல்லும்போது இடையில் தோன்றிய டிக்கட் பரிசோதகர் நினைவில் வந்தார். பயணிகள் பவ்யத்துடன் தங்கள் சீட்டுகளைக் காண்பிப்பதும் அவர் கையொப்பம் இடுவதும், சிலர் அவருக்கு சல்யூட் அடிப்பதும் என் மனக் கண்களில் ஓடியது.

தானும் அதுபோல் ஓா் அதிகாரியாக ஆக வேண்டும் என சொல்ல வாயெடுக்கும் போதே தூரத்தில் இரயில் கூவும் சத்தம் கேட்டது. எங்களிடையே ஒரே கூச்சல்.. உட்கார்ந்திருக்கும் இடத்தைவிட்டு யாரும் எழுந்து ஓடாதபடி ஆசிரியர் பார்த்துக் கொண்டார்.

சில வினாடிகளிலேயே நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த இரயில் ‘கூச்..குச்.குச் கூச்’ என கூவியபடி மேல்நோக்கி புகையை உமிழ்ந்துகொண்டு ‘டடக்..டடக்  டடக்..டடக் டடக்..டடக்’கென வேகத்தைக் குறைத்து உருண்டு வந்து கரீச்சென தண்டவாளத்தில் நீண்டு நின்றது. ஒரே ஆரவாரம்.. கரகோஷங்கள்.. துள்ளிக்குதித்தல்.. பரவசம் கொண்டாட்டம் என அந்த இடமே குதூகலமாயிருந்தது.

சுற்றுலாப் பயனை அடைந்த மனநிறைவு. சற்று நேரத்தில் நாங்கள் டாட்டா காட்ட அமைதி களைந்து ‘கூச்..குச்.குச்’- சென மீண்டும் அடுத்த ஊர் நோக்கி ஓடத்துவங்கியது ரயில். நாங்கள் பள்ளிக்குக் கிளம்பினோம். அந்த நினைவுகள் என்றும் இனிமையானவை!

அதன்பிறகு இரயிலில் பல பெட்டிகளும், என்ஜின்களும் மாற்றம் கண்டிருக்கின்றன. வந்துபோகும் நேரங்களும் மாறியிருக்கிறது. சில காலம் போக்கு வரத்து இல்லாமலும் பின் மீண்டும் புதுப்பொழிவுடன் ஓடுவதும் என்று மனித வாழ்க்கையைப்போலவே அதுவும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. கடைசியாக அகல இரயில் பாதை போடும் நிமித்தமாக கடந்த ஏழு ஆண்டுகளுக்குமுன் வண்ணக் காகிதங்களுடனும், மாலைகள், மலர்ச்சரங்களின் தோரணங்களுடனும், ஏராளமான பயணிகள் மற்றும்; ஆசையாய்த் தொற்றிக்கொண்ட இளைஞர் பட்டாளங்களின் ஆர்ப்பரிப்பிலும் வழிநெடுகிலும் கூவிக்கொண்டு எங்கள் நெஞ்சையும், கண்ணீரையும் அள்ளிக்கொண்டு பிரியா விடைபெற்றுப் போனது அந்த கடைசி ரயில்!

பஸ் பார்த்திருக்கிறான், லாரி பார்த்திருக்கிறான்  சைக்கிள், பைக், ஆட்டோ, கார் ஏன் வானூர்திகளையும்கூட அண்ணாந்து பார்த்திருக்கிறான். ஆனால் இந்த ரயிலைத்தான்…! மதுரைக்கு செல்லும் சில தருணங்களில் மெஜிரா கோட்ஸ் பாலம் வழியாய் நகரப் பேருந்தில் பயணிக்கையில் கீழே தண்டவாளங்களில் நிற்கும் ஓடாத பெட்டிகளை பரபரப்புடன் ஓரிரு நொடிகள் பார்த்திருக்கிறான். மேலும் ஆன்ராய்டு வழியிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்திருக்கிறான் என் மகன். ஆனால் கண் குளிரத்தான்… ம்.கும்!

அவனின் ஆா்வமறிந்து “ஃபிரியா இருக்கப்ப ஒருநாள் மதுரை ரயில்வே ஸ்டேசனுக்கே உங்கள கூட்டிட்டுப்போயி பிளாட் பாரம் டிக்கட் எடுத்து ரயிலெல்லாம் காமிக்கிறேம்ப்பா… ஒரு வேளை அதுக்குள்ள நம்ம ஊருக்கு ரயில் வந்நாலும் வந்துரும்.” எனவும் சொல்லியிருந்தேன்.

அந்த வேளை இன்னமும் வரவில்லை! தண்டவாளங்கள் எடுத்தே ஏழெட்டு வருடமாயிற்று… “இப்ப வருமோஓ… எப்ப வருமோஓ… ஆச பொறந்தாஆஆ அப்ப வருமோ…” சூப்பா்ஸ்டாரின் படப் பாடலுக்கினங்க அந்த ரயிலுக்கே ஆச பொறந்தா அப்ப வருமோ என்னமோ!

ஒரு கட்டத்தில் இந்த ஊருக்கு “இனி ரயிலே இல்லை“ என்ற அறிவிப்பெல்லாம் அரசல் புரசலாக வந்தபோது கொதித்தவர்களில் நானும் ஒருவன். அதற்காக முன்நின்ற அமைப்புகளும் தனிநபா்களும் ஏராளம். ‘சப்பாணியை எதிர் பார்த்து தண்டவாளத்தையே நோக்கிய மயிலும் நாளடைவில் சப்பாணி வராவிட்டாலும் பரவாயில்லை, ரயில் மட்டும் வந்தால்கூட போதுமென்று நின்று நின்று பார்த்து மறைந்தும் போனாள்.’

நம்பிக்கைக்கு உரமிடும் பொருட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அன்று எடுக்கப்பட்ட தண்டவாளங்கள் தற்போது அகல இரயில் பாதைகளாக பாதிவரை மாற்றம் கண்டிருக்கிறது. முல்லை ஆற்றின் குறுக்கே அதற்கான பாலமும் பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது. சினிமாப் படங்களில் வரும் பாழடைந்த பங்களாபோல் கைவிடப்பட்ட சிதிலமடைந்த இந்த இரயில் நிலையமும் தற்போது கிரானைட், மார்பிள் கற்கள் சூழ புதுப்பிக்கப்படுகிறது. அதில் மராமத்து பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் வரப்போகிறது  இரயில்!

“அப்பா எப்பப்பா கூட்டிட்டுப் போவீங்க…?” மீண்டும் கேட்டான் மகன். ஏங்கிய முகத்தோடு.

“செல்லம் டைம் கிடைக்கும் போது கண்டிப்பா கூட்டிட்டுப் போறேம்பா… இன்னுங் கொஞ்ச நாள் பொறுத்தீங்கன்னு வச்சுக்கங்க… நம்ம ஊருக்கே ரயில் வந்துரும்… அழகா பாக்கலாம்… ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்க வேணாமா…”

“அடப் போங்கப்பா நீங்க வேற… இன்னும் எத்தன வருஷந்தே ஆக்குவாங்க, எத்தன வருஷம்தே ஆறப் பொறுக்கனும்… அப்புறம் நாங்க எங்கிட்டு பாக்குறது… நீ வாடா நம்ம போயி கேரம் விளையாடுவோம்…” அருகில் நின்றிருந்த அவனது ‘அக்கா’ இப்படியாய்ச் சொல்லி அவனை கூட்டிக் கொண்டு போனாள்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top