ரணம்

4.2
(6)

வந்த மொத்தப் பேரும் திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர். அனேகமாக வெளியூர்காரர்கள் எல்லாம் முன்னமே சென்றுவிட்டனர். குடிமகன் மட்டுமே கடைசிவரை இருந்து செய்சாத்திரம் முடித்து, மழிக்கப்பட்ட ரோமங்களை ஓரமாய்க் கூட்டி ஒதுக்கிவிட்டு கடைசிக் கணக்கு முடிக்கும் இடத்திற்கு வேகமாய்ச் சென்றான். வேகமாய பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. ஊரை விட்டு ஒதுக்குப் புறமான அந்த இடம் முழுவதும் மனிதக் காலடித் தடங்கள். பூக்களும் மாலைகளும் சிதறிக் கிடந்தன. கொச்சக் கயிறும் பச்சை மூங்கிலும் ஓரமாய்க் கிடந்தன. சிதைக்கு வைக்கப்பட்ட தீ மெதுவாய் சுற்றிப் பரவியது. தேய்ந்து போன மம்பட்டியால் மண்ணைக் குழைத்து தீ வைத்த ஓட்டைகளை நான்கு பக்கமும் அடைத்துக் கொண்டிருந்தான் மாடசாமி. மம்பட்டியைக் கழுவி, உடைந்து கிடந்த மண் கலயத்தின் அருகே வைத்துவிட்டு தான் இருக்கும் இடத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்தான் சுப்பன். இன்னும் பாண்டியும், முத்துச்சாமியும் மட்டும் இவர்களை கார்வார் பண்ணிக் கொண்டு நின்றிருந்தனர்.

“டேய் நல்லா நீத்துன பெறகுதான் வீட்டுக்குப் போகணும். அதுக்கு முன்னால் போனீங்கன்னா தெரியும் சேதி”.

“சாமி எங்க வேலையில கொற வப்பமா. பெரிய சாமியவுக நெஞ்சுக் கூடெல்லாம் பஸ்மமாகுற வரைக்கும் எடத்தைவிட்டு அசைய மாட்டோம்.”

‘இப்படித்தான் பேசு வீங்கடா, அப்புறம் காப்பி குடிக்கப்போனேன். வயித்த வலிக்குதுன்னு ஏதாவது காரணத்தைச் சொல்லி வீட்டுல போயி மொடக்கிடுவீங்க.”

“சாமி அப்பபிடி எல்லாம் நடக்காதுங்க. சுத்த பத்தமா வேலைய முடிச்சுட்டுத்தான் வீட்டுக்குப் போவோம். காலையில் வந்து பாருங்க. அங்கம் கலக்குறதுக்குக் கூட தேடித்தான் புடிக்கணும்.”

“இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. பேசுறத வேலையில் காட்டுங்க”. தங்கள் மொட்டை அதிகாரம் செல்லுபடி ஆகக் கூடிய இடத்தில் நாக்கு நீள வாயாடினார்கள்.

”கடைசிக் கணக்கு முடிக்கிற இடத்துக்கு யாருடா போயிருக்குறது.”

“ஆண்டி போயிருக்கான் சாமி’, ‘சாமியவுக ராத்திரி நனைக்கிறதுக்கு…” தலையைச் சொறிந்து கொண்டே பவ்யமாய் சுப்பன்.

“பெரிய சாமியவுகளுக்கு, பங்காளிச் சாமிக இதுகூடச் செய்ய மாட்டகளா’ மாடசாமி சரியாப் புள்ளி வைத்தான்.

சுற்றிப் பரவிக் கிடந்த பூக்களின் வாசனையை மீறி, சிதையிலிருந்து கிளம்பிய வெண்புகை தாழப் படிந்து மெதுவாய் காற்றின் திசை வழியே மேலெழும்பி அடர்த்தியாய் ஒருவித நாற்றத்துடன் சுற்றிப் பரவியது.

விரிக்கப்பட்ட வெள்ளை வேட்டியின் நடுவில் ரூபாய் நோட்டுகளும், சில்லறைக் காசுகளும். வரவு செலவு பார்ப்பவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்.

“கொட்டுக்காரங்க யாருடா.”

“சாமி இருக்கேனுங்க”.

“இந்தா எடுத்துக்கோ “.

பணத்தை மூலையில் வைக்க பவ்யமாய் குளிந்து எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு ……. “உத்தரவு வாங்கிக்கிறேன் சாமி’. இடத்தை விட்டு அகன்றான்.

“ஏகாலி இருக்கானா.”

செருப்பில்லாக் கால்களுடன் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு ….

“இருக்கேன் சாமி”.

“போன தடவை எவ்வளவு வாங்கினே’.

“முப்பத்தி ரெண்டு சாமி… சாமி வெலவாசி எல்லாம் கூடிடுச்சு கொஞ்சம் போட்டு குடுங்க சாமி”.

இதிலே மனத்தைச் செலுத்தாமல் வெறித்த பார்வையுடன் கை கட்டியபடி நிலை குத்தி நின்று கொண்டிருந்தான் ஆண்டி. அவன் மனமும் எண்ணங்களும் அந்தச் சம்பவத்தையே சுற்றி வந்தது. மறக்கக் கூடிய நினைவுகளா அது. பசுமரத்தாணி போல மனதில் பதிந்து கிடந்து இடது கையால் வலது கையைத் தடவிப் பார்த்துக் கொண்டான். மறக்க நினைத்தாலும் முடியாமல் அந்தத் துயரத்தை ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.

ஏகாலியின் கெஞ்சலும் பேச்சும் எடுபடவில்லை .

“பகடை யாருடா வந்திருக்கிறது”.

“ஆண்டி இருக்கேன் சாமி”.

“போன தடவை எவ்வளவு”.

“நூத்தி இருவது சாமி”.

“ஏகாலிக்குச் சொன்னதுதான் உனக்கும்….. எடுத்துக்க”.

மறுப்போதும் பேசாமல் எடுத்துக் கொண்டான். வேறு சமயங்களாய் இருந்தால் இவனும் வாயாடி… ராவெல்லாம் முழிக்கனும் சாமி… முழுத்த ஆம்பளைங்க நாலு பேர் இருக்கோம். இப்படி ஏதேதோ பேசி பத்து இருவது சேத்து வாங்கியிருப்பான். இறந்தவரின் பிள்ளைகள் கண்மாயில் குளித்துவிட்டு வீடு திரும்பினார்கள். கணக்கு முடித்த பின் வேட்டியைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினான் ஏகா

“ஏண்டா நீயாச்சும் வாயாடி கூடக் கொஞ்சம் வாங்கி வருவேன்னு அனுப்பினா இப்படி குடுத்ததை வாங்கிட்டு வந்திருக்கேயேடா….. நா ஒரு பேப்பய ஒன்னைய அனப்புனேன் பாரு” மாடசாமி ஏக வசனத்தில் திட்டிக் கொண்டிருந்தான்.

எங்கும் ஒரே இருட்டு. தூரத்தில் நரிகளின் ஊளைச் சத்தம். நேரம் ஆக ஆக பக்கத்தில் வந்து நிற்கும். பயமில்லாமல் வந்து நிற்கும். கொஞ்சம் அசந்தாலும் இழுத்துக் கொண்டு ஓடிவிடும். இந்த வாடைக்கு எங்கிருந்தாலும் வந்துவிடும். ஒரு நீளமான கவக்கம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான் ஆண்டி.

குபு குபு வென்று புகை மண்டியடித்தது. காற்றும் சுழன்று அடித்தது. தேய்ந்த நிலவின் ஒளி மேகங்களுக்கிடையே எப்போதாவது மினுக்கியது. இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் காணாமல் போய்விடும்.

“டேய் மாடசாமி காத்துக்கு இந்தப் பக்கம் வாடா.” ஒரு பாட்டிலுடன் நாக்கு சப்பக் கொட்ட ஊறுகாயைத் தொட்டுக் கொண்டான் சுப்பன்.

“டேய் ஆண்டி நீயும் வாடா”.

“எனக்கு வேண்டாம்” எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்துவிட்டான்.

காலங்கள் கடந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தன் மனத்திற்குள் விழுந்த முடிச்சு அவிழாமல் கட்டிப் போட்டிருந்த நினைவுகள்…. வேதனைகள் இன்று அவிழ்ந்தது. அந்த நிகழ்வு நேற்று நடந்தது போன்று இருந்தது. வலது கைத் தழும்பைத் மெதுவாய் தடவிவிட்டான்.

இறந்தவரின் மகன் இவனுடன் படிக்கும் போது ஏற்பட்ட விளையாட்டில் வேகத்தில் மும்முரத்தில் சிறிது நேரம் தன்னை மறந்து விளையாடிய போது மூக்கில் கை பட்டு இரத்தம் வழிய, அழுகை, கோபம், வீறாப்பு, வீம்பு இதையெல்லாம் விட மேல்த்தட்டு வர்க்கம் என்ற ஆணவம் ஒன்று சேர… அடுப்பில் எரிந்த கொள்ளிக்கட்டை ஆண்டியின் கையில் இறங்கியது வலது முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை. அன்று அவன் துடித்த துடிப்பு, வேதனை, அழுகை, திரைப்படத்தில் நடக்கும் கொடுமையான நிகழ்வுக்கு எப்படி வாய் மூடி மௌன சாட்சிகளாய் இருப்பார்களோ அது போலவே நிஜ வாழ்வில் இவனுக்கும் சிறுவன் என்றும் பாராமல் வெறிபிடித்து கோரத்தாண்டவமாடியதை சிலர் ஆதரிக்கும் கொடுமை நிகழவும் செய்தது. உடல் வலி போய் மனதின் ரணம் மட்டும் தழும்பாய் தேங்கி நிற்கிறது.

“ஊறுகாய் எடுத்துக்கடா’.

“போதும்டா’… பாட்டில் காலியாகிக் கொண்டிருந்தது.

“டேய் இந்த பெரிய சாமி இருக்காரே…”

“பெரிய சாமி என்னடா பெரியசாமி காளியப்பன்னு சொல்லு”.

“ஆமா…. ஆமா… இந்த காளியப்பன் இருக்காரே”.

“என்னடா இருக்காரு அதான் செத்துப் போயிட்டான்ல”.

“இவன் உயிரோடு இருக்கும் போது கொஞ்ச ஆட்டமாடா போட்டான்”

“இவன் ஆடிய ஆட்டத்துக்கு புழுத்தள்ளி தானடா செத்தான்’

ஒருவன் உயிரோடு இருந்தபோது அவனை எதிர்த்துப் பேசவோ.. நிமிர்ந்து நிற்கவோ முடியாமல் இருக்கும் அடித்தட்டு வர்க்கம்…. அவன் இறந்த பிறகு குடி மயக்கத்தில் உள்ளதைச் சொல்லிக் கொண்டிருக்க…..

பரவிய தீ உடலெங்கும் சுற்றி, துவண்ட நரம்புகள் முறுக்கேறி கை மட்டும் மெதுவாய் மேலெழும்பியது.

“டேய் கை நீளுதுடா….. ஒரு போடு . போடுடா”.

இதற்காகவே காத்திருத்தவன் போல ஆண்டி வீறு கொண்டு தன் மன பாரத்தை எல்லாம் கைகளில் இறுக்கினான். இவன் வேகத்தில் எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்டது. மாடசாமியும், சுப்பனும் ஒன்றும் புரியாமல் ஆண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

5 thoughts on “ரணம்”

 1. இருக்கும் வரைதான் மேல்சாதி கீழ் சாதி செத்தபின்னாடி எல்லோரும் பொணம்தான்….தனக்கு சூடு போட்ட ஆதிக்க வர்க்கத்தின் கையை செத்து பொணமானுலும் விடமாட்டன் என்று சிதையில் வைத்து உடைத்து பழி தீர்க்கும் வெட்டியான் ஆண்டி…. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மனக்குமறலை அழுத்தமாக உரைக்கும் கதை அருமை.

 2. Shanthi Saravanan

  ஜாதி என்ற சாக்கடை நாற்றம் மயானத்திலும் ஆளூமையை செலுத்துகிறது என்பதையும், உயிரற்ற உடலை அடித்து ரணத்தை ஆற்றிக கொள்ள ஆண்டி மயானம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்பதையும் “ரணம்” படம் பிடித்துக் காட்டுகிறது. வலிகளை சிறுகதையாக படைத்தவிதம் அருமை. கா.சி.தமிழ்க்குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 3. Shanmuga Lakshmi

  கதைக்கு தலைப்பு அருமை.
  மனதில் மறக்க முடியாத அளவிற்கு உள்ள வலியே ரணமாகிறது.சாதியின் பெயரால் சிறுவனை கொடுமைப்படுத்திய கை
  சிதையில் வேகும் போதும் ஓங்குகிறது.ஓங்கியக் கையை உயிரோடு இருக்கும் போது தடுக்க முடியா சூழல் ஆனால் இறந்த பிறகு தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார் ஆண்டி.

  இக்கதையில் படைப்பாளர் மற்றொன்றையும் பதிவு செய்துள்ளார்.இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மது அருந்துவர் என்ற தவறான கோட்பாட்டை உடைத்து விட்டார்.மற்றவர்கள் மது அருந்தும் போது ஆண்டி மறுத்தது.வெட்டியான்கள் கையில் ஏன் நீண்ட கம்பு வைத்துள்ளனர் என்ற கேள்விக்கு சிதை எரியும்போது சிதையினை அடிப்பதற்கு மட்டுமல்ல வரிகளை விரட்டவும் என்பது எனக்கான புதுத்தகவல்.

  வேலைக்குரிய கூலியை கூட கைகளில் பாங்காய் கொடுக்கத் தெரியாத இவர்களெல்லாம் மேல்சாதி எனும் சாயத்தை பூசியுள்ள அற்பர்கள்.மனிதமற்ற இவர்கள் உயிருடன் இருப்பதும் சவத்திற்கு சமம்.பிறப்பின் போது குழந்தையாகவும் இறப்பின் போது சவமாகவும் பெயரிடப்படுகிற மனிதன் இடைப்பட்ட காலத்தில் சாதியெனும் சாயத்தை பூசி தன் சுயத்தை இழந்து விடுகிறான் என்பதை “ரணம் ” மூலம் அழகாக பதிவு செய்துள்ளார் தோழர் கா.சி.தமிழ்குமரன்.

  1. ந.ஜெகதீசன்

   எத்தனை காலம் தான் ஒருவரை இன்னொருவர் அடிமைப்படுத்தி வைக்க முடியும். வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பி அதுவும் வலுவாக திருப்பி அடிக்கத்தான் செய்யத் தூண்டும்.

   உடன் இருப்பவர்களுக்கும் தெரியாது
   உள்ளத்து உணர்ச்சிகளை வன்மையாக வெளிப்படுத்தும் ரணம், மனதில் மென்மையான கீரல் ஒன்றை வெட்டிச் செல்கிறது.

 4. Mathialagan Packirisamy

  இந்த சமுதாயஅமைப்பே எளியவர்களிடம் தான் ரணங்களை ஏற்படுத்த முடியம் என்பதையும்,ரணங்களை மட்டுமல்லாமல் இயல்பான கோபத்தைக்கூட அதனை ஏற்படுத்தியவன் இறந்த பின் தான் எளியவர்களால் தீர்திக்கொள்ள முடியும் என்பதையும் ஆண்டியின் செய்கை மூலம் உணர்த்திய திரு கா. சி.தமிழ்க்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: