ரசனை

5
(1)

தோளிலிருந்து குழந்தை நழுவி நழுவி இறங்கிக் கொண்டிருந்தது . அவள் இடதுகையில் பிடித்திருந்த வயர்க்கூடை பாறாங்கல்லாய்க் கனக்கிறது . கடைத்தெருவின் அந்த நெருக்கடி யான நெரிசலிலும் கூட  ‘கணகண‘ வென்று மணியடித்துக் கொண்டே வேகமாக வரும் சைக்கிள்காரர்கள்… இருபுறமும் கடைகளைப்  பராக்குப் பார்த்துக் கொண்டே நடந்து வருகிறவர்கள் … இவர்களில் யாரேனும் தன்மீது இடித்துவிடக் கூடாதே என்று இப்படியும் அப்படியுமாக ஒதுங்குவதிலேயே இவளுக்கு மூச்சு வாங்குகிற அளவுக்குப் பதட்டமாயிருந்தது .

இவள் தன்னைத் தொடர்ந்து வருகிறாளா, இல்லையா என்பதைக் கூடக் கவனிக்காமல், முன்னால் தன்போக்கில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கிற விஜயனைக் கூப்பிட்டு, “இந்த வயர்க் கூடையவாச்சும் கொஞ்சம் எடுத்துட்டு வந்தா என்ன?“ என்று கேட்டு விட்டால் கூடத்  தேவலாம் போல் ஓர் எரிச்சல் மூண்டது அவளுக்குள். கேட்டுவிடலாம்;  ஆனால், இங்கே ஒன்றும் சொல்ல மாட்டான் . வீட்டுக்குள் போய் நுழைந்ததுமே அந்த வயர்க்கூடை மளிகைச் சாமான்களோடு பறந்து வந்து இவள் முகத்தில்தான் விழும் . பொட்டலங்கள் எல்லாம் அவிழ்ந்து போய், சிந்திச் சிதறிக் கலந்து கிடக்கிற மளிகைப் பொருள்களை, உட்கார்ந்து பொறுமையாகப் பொறுக்கிப் பிரித்தெடுப்பதை விட, இப்போது குழந்தையையும் , வயர்க்கூடையையும்  சேர்த்துச் சுமப்பதுதான் சுலபமான வேலை .

நடந்து கொண்டே வந்தவள், வலதுபக்கமாகப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டாள். ஒரு புத்தகக் கடையில், புத்தகங்களோ, உள்ளே உட்கார்ந்திருக்கும் ஆள்களோ கூட பார்வைக்குத் தெரியாத அளவுக்கு விதம் விதமாக, ரகம் ரகமாக வாழ்த்து அட்டைகள் சரஞ் சரமாய்க் கோர்க்கப்பட்டு கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன . பொங்கலுக்கு இன்னும் பதினைந்து –இருபது நாள்கள் இருக்கின்றன … ஒரு மாதத்துக்கு முன்னாலிருந்தே இது மாதிரி வாழ்த்து அட்டைகள்  கடைகளில் தொங்க ஆரம்பித்து விட்டன .

ஓரத்தில் நின்று பார்க்கும்போதே இவளுக்கு அந்த வாழ்த்து அட்டைகளின் அழகில் மனம்லயித்துப்போனது. கல்யாணத்திற்கு முன்னால், படிக்கிற போது,  பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து பிரியமாய்த் தோழிகளுக்கும், இவளுக்கு மிகவும் பிடித்தமான ராதா மிஸ்-சுக்கும் அனுப்புகிற அட்டைகள் இவளின் ஞாபகங்களில் மிதந்தன. வெறும் சம்பிரதாயமான வாழ்த்து அட்டைகளல்ல; இவளது ரசனையையும், மனதில் நிறைந்து பொங்குகிற பிரியத் தையும் சுமந்து செல்கிற அன்னப்பறவைகள் … !

‘ ஹூம் … அதெல்லாம் ஒரு காலம் …!‘ என்று பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டு வாழ்த்துக் கார்டுகளின் அழகில் மனம் லயித்து நின்றாள் .

முன்னால்  போய்க் கொண்டிருந்த விஜயன், கொஞ்சதூரம்வரை போனபிறகுதான் இவள் இங்கேயே பின்தங்கி நிற்பதைக் கவனித்தான். வேகமாகத் திரும்பி வந்தான். அவன் வருகிற வேகத்திலேயே இவளுக்குக் கலக்கம் மூண்டது .

“என்ன, இங்கனயே நின்னுகிட்டு பராக்குப் பாத்துகிட்டிருக்க? வேகமா வந்து தொலையேன்”

“… இல்லிங்க, வந்து …”

“என்ன, சொல்லு ? “

“பொங்கலு வருது … நாலஞ்சு கிரீட்டிங் கார்டுங்க வாங்கிக்கட்டுமா? “ – ஒரு குழந்தையின் ஆவல் ததும்பியது அவள் குரலில் .

எரிச்சலும், கடுகடுப்பும் மூண்டுவர ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் , அருகில் கிரீட்டிங்ஸ் கார்டுகள் தேர்ந்தெடுக்க நின்றிருந்த ஆள்களின் கவனம் இவர்கள் மேல் திரும்புவதை உணர்ந்ததும் முணுமுணுப்புடன் மவுனமானான் .

“… இந்தப்பையக் கொஞ்சம்…” – தயங்கினாள் .

“… அப்பிடிக் கீழ வைய்யேன். .. சட்டுன்னு பாத்து எடு …” –சுள் என்று விழுந்தான் விஜயன்.  அவள் வேறு வழியின்றி மவுனமாகக் கடையை நெருங்கி, ஓர் ஓரமாகப் பையை வைத்து விட்டு, கடைவாசலின்  – நடுவே ஆள்கள் நுழைகிற இடைவெளி தவிர – இருபுறமும் நிரம்பித் தொங்கிய, உள்புறம் ஸ்டாண்டுகளில் விரிந்து கிடந்த கார்டுகளை ஆவலுடன் பார்த்தாள் .

மனதை அப்படியே அள்ளி ஒன்றிப்போகச் செய்து  விடுகிற கார்டுகள் . .. ஆப்செட் அச்சுக் கலையின் நேர்த்தியையும் , ஓவியர்களின் தூரிகைக் கனவுகளையும், புகைப்படக் கலைஞர் களின் கேமராக்கள் வடித்திருந்த கவிதைகளையும் தூலமாய் வெளிப்படுத்தியிருந்த வாழ்த்து அட்டைகள் … ! எதை எடுப்பது , எதை எடுக்காமல் இருப்பது என்று புரியாமல் திணறிப் போனாள். தோளில் அரைத் தூக்கத்திலிருந்த குழந்தை விழித்துக் கொண்டு இலேசாகச் சிணுங்கியபடியே மீண்டும் தூங்கிப் போனாள் .

இவள் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் …  மேற்கு வான் சரிவில், ஆதவன் மறையும் வேளை … பொன்பூச்சுப் பெற்று மிளிர்கிற தூரத்துத் தென்னை மரங்கள் … வயல்களில், குனிந்து நாற்று நாட்டுக் கொண்டிருக்கும் உரமேறித் திரண்ட உழைக்கும் பெண்கள், வேலைகளின் நடுவே அண்ணாந்து பார்த்து விடியலைத் தேடுகிற ஏக்கத்தின் வெளிப்பாடு …

‘பூப்போலக் கண்கள் … பூப்போலக் கன்னம் …‘ என்று ஒரு கவிஞர் பரவசப்பட்ட – குழந்தைகளின் விதம் விதமான படங்களில் ஒன்றிரண்டு …

இப்படிப் பார்த்துப் பார்த்து நாலைந்து படங்களை அவள் தேர்ந்தெடுத்தாள். ஊரில்  ‘அம்மாவுக்கு, தோழி வித்யாவுக்கு, தம்பி குமாருக்கு, இன்னும் … யாருக்கு … ம்…ராதா மிஸ்ஸுக்கு…’  என்று யோசித்துக்கொண்டே படங்களை எடுத்துக் கொண்டாள்.  நிமிடத்துக்கு நிமிடம் உள்ளுக்குள் பொங்கிவரும் எரிச்சலை முகச்சுளிப்பில் வெளிக் காட்டத் தொடங்கியபடியே நின்றிருந்த விஜயனிடம் வாழ்த்து அட்டைகளை நீட்டினாள் இவள்…

விஜயன், நிதானமாக அவற்றைக் கையில் வாங்கினான். படங்களை ஒவ்வொன்றாகப்பார்த்தான். பிறகு திரும்பி இவளை ஏறிட்டுப் பார்த்தான். அந்தப் பார்வையிலேயே இவள் துவண்டு போனாள். தோளிலிருந்த குழந்தை திடீரென்று தாங்க முடியாத கனமாகித் தெரிந்தாள். அடிவயிற்றிலிருந்து திரண்டு வந்த ஒருவிதமான சங்கடமும், பயமும் கலந்த உணர்வோடு, “ … ஏங்க …இந்தப்படங்களப் பிடிக்கலன்னா, வேற நல்லதா நீங்களே செலக்ட் பண்ணிக் குடுங்க … “ என்று தொண்டை அடைக்கச் சொன்னாள். விஜயன் ஒன்றுமே சொல்லாமல், இவ்வளவு நேரமும் அவள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருந்த படங்களை, மறுபடி எதிரே இருந்த மர ஸ்டாண்டின் மேல் விரிந்திருந்த கார்டுகளின் குவியல் மீதே போட்டான்.  அங்கே பரந்து கிடந்த கார்டுகள் எல்லாவற்றையும் அவனுடைய கண்கள் பருந்துப் பார்வையில் துழாவின.

மர ஸ்டாண்டின் கடைசியில் போஸ்ட் கார்ட் சைஸில் குவிந்து கிடந்த படங்களின் மேல் நிலைத்தன அவன் கண்கள். அந்தக் கார்டுகளிலிருந்து இரண்டு மூன்றைத் தேர்ந்தெடுத் தான்  விஜயன். நல்ல அச்சுப்பதிவோ, எந்தவிதக் கலைநேர்த்தியோ  இல்லாமல், மனம் போன போக்கில், எந்த நடிகர் அல்லது தலைவரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தனவோ – அவர்களின் ஒட்டுமொத்தமான சாயலைத் தவிர வேறு எதுவும் தெளிவாக இல்லாதபடி, கண்களையும் , மனதையும் உறுத்துகிற மாதிரி, வண்ணங்களை அப்படி அப்படியே கொட்டி இறைத்தாற்போல் இரண்டிரண்டு உருவங்களாய் அச்சாகியிருந்தன அந்தக் கார்டுகளில் .

அவன் தேர்ந்தெடுத்திருந்த படங்களில், இன்றைக்கு சினிமாவில் கொடி  கட்டிப் பறக்கிற இரண்டு‘ சூப்பர் ‘ ,’ சூப்பர் சூப்பர்’  ஸ்டார்களின் படங்கள் இரண்டும்  ஒரு பிரபலமான அரசியல் தலைவரின் படமுமாக  இருந்தன. அவை அச்சிடப்பட்டிருந்த காகிதமும் சரி, அச்சிட்டிருந்த விதமும் சரி , படுமோசமாக இருந்தன . அந்தப்படங்களில் இருந்தவர்களைப் பற்றி அவளுக்கு அந்த நிமிடம் வரை எந்த விதமான ஓர் அபிப்பிராய மும் இருந்திருக்கவில்லைதான் . ஆனால், அந்தக்  கார்டுகளைப் பார்த்ததும்,  கண்களில் மசமசவென்று சில அழுத்தமான நிறங்களாக மட்டுமே அந்தப் படங்கள் அப்பிக் கொண்டன. அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .

தன் முன்னால் நின்றுகொண்டு, விஜயன் தன்னை நோக்கி நீட்டிய படங்களை வாங்கிக் கொள்ள முயலாமல், பரிதாபமான ஒரு பார்வையுடன் நின்றாள் அவள்.

“என்ன ராஜம் , இதை எடுத்துக்க … போதும் …” – என்றான் விஜயன். அப்போது குரூரமான ஒரு புன்னகை இதழ்க்கடையோரம் இரகசியமாகத் தலை நீட்டியதை அவன் மறைக்கக்கூட முயலவில்லை.

ஒன்றுமே பேசாமல், குனிந்து வயர்க் கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு தோளிலிருந்து நழுவி இறங்கிய குழந்தையை மீண்டும் மேலே தூக்கி அணைத்தபடி கடை வாசலிலிருந்து ஓரடி முன்னால் நகர்ந்தாள் ராஜம் .

“ஏய் … என்னடி … இங்க ஒரு மனுஷன் படத்த வச்சுகிட்டு நிக்கறேனில்ல … ? ஒண்ணுமே சொல்லாமப் போறியே ? “

அருகே நிற்பவர்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இரைந்து கத்திய விஜயனை, தான் நின்ற இடத்திலிருந்தே திரும்பிப் பார்த்தாள் ராஜம்.

“இல்லீங்க … எனக்கு எதுவும் வேணாம் … நேரமாகுது, வாங்க, போகலாம் … “ என்றாள் ராஜம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “ரசனை”

 1. Sakthi Bahadur

  இந்திய பெண்களின் உண்மை நிலையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் எளிய சிறுகதை.

  தாலி என்ற ஒரு கயிற்றின் வலிமை ஒரு பெண்ணின் இன்சியல் ஐ மாற்றுகிறது. அவள் வணங்கும் கடவுளை மாற்றுகிறது. அவளின் கருத்தை மாற்றுகிறது. அவளின் இரசனையை மாற்றுகிறது.

  கணவனுக்கு பிடித்தது மட்டுமே அவருக்கு பிடிக்க வேண்டும். அவளுக்கு என்று தனியான ரசனை என்று ஏதாவது இருந்தால் அதை முதலில் துடைத்து எறிவதுதான் கணவனாகிய ஆண்மகனுக்கு அழகு.

  ஆம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று சொல்லித்தானே வளர்த்தோம் நம் பிள்ளைகளை….

  பெண்ணடிமைத்தனத்தை நினைவு கூறும் அருமையான கதை அமைப்பு வாழ்த்துக்கள் தோழர்.

 2. எல்லா பெண்களின் நிலை இவ்வாறு இல்லையென்றாலும் பல பெண்களின் நிலையை மிக அழகாக எடுத்துரைத்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  பள்ளி கால நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் ஆசிரியர். அந்த நாட்கள் மிக சுகமானதாக இப்போதுதான் தோன்றுகிறது. வாழ்த்து அட்டை வாங்குவது என்பது இன்றுபோல் forward message அனுப்புவது போன்றது அன்று என்று இக்கால இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

  இந்த கதையை படித்ததும் என் 10ம் வகுப்பு பொங்கல் பண்டிகைக்கு card வாங்கி பெயர் போடாமல் guess who என்று என் தோழிக்கு அனுப்பிய நாட்கள் தான் நினைவுக்கு வந்தது.

  அது ஒரு கனா காலம் . நல்ல வேளை கதையில் வரும் கணவர் அமையாமல் இணையாக நினைக்கும் கணவர் கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறேன். சில நேரங்களில் இது போன்ற கதைகளை படிக்கும் பொது தான் நாம் எவ்வளவு சுகமான வாழ்க்கை வாழ்கிறோம் என்றே நமக்கு விளங்குகிறது.

  அந்த விதத்தில் என் கணவரின் அருமையை இந்த கதை உணர்த்தியதர்கு ஆசிரியருக்கு நன்றி.

  ஆர்த்தி. வி
  9884646148

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: