யோக்கியதை

4
(2)

“ஏண்டா கொலகாரப் பயலே இப்பிடியாடா பண்ணுவ…” கதறிக்கிட்டிருந்தா பொன்னுத்தாயி கிழவி.நந்தியும் நாகராசனும் இறுக்கமாப் பிடிச்சிருந்த பிடியிலிருந்த திமிறிக்கிட்டே கத்தினான் செவம்பாண்டி.

 

“இங்கபாருளா ஒன்னைய ஆத்தான்னு கூடப் பாக்கமாட்டேன் நெஞ்சேறி மிதிச்சுருவேன்..   ..க்காலி அவளாம் ஒரு ஆளு மயிருன்னு எனக்கு கட்டிவச்ச பாரு.. இங்கவாரு இனியும் அவள ந்நா நம்பனும்னு சொல்றியா.. விடுங்கடா ..ம்மாள அவள பொலி போட்டுறேன்..” திமிறினான். ஆனாலும் அவக பிடிலேர்ந்து அவனாலதப்பமுடியல்ல.

“ஏலே ஒன்னையப் பிள்ளையாப் பெத்ததுக்கு இது ஒன்னுதாண்டா பாக்கி நீ செஞ்ச யெல்லா அக்ரமத்தையும் வேடிக்க பாத்தேன்லே..லோலாய்ப்பயலே மிதிடா வாடா மிதிடா..யேலேய் அவன விடுங்கடா யென்னெயக் கொன்னுட்டுக் கூடப் போகட்டும் விடுங்கடா..” மண்ண வாரித் தூத்தினாள் பொன்னுத்தாயி கிழவி.

”ஏம்பா செவம்பாண்டி பொறுமையா இரப்பா.. இப்பென்னா ஊரு ஒலகத்துல நடக்காதது நடந்து போச்சு.. இந்தத் தவ்வு தவ்வுற.. நடந்தது இல்லைன்னு ஆயிருமா.. நீயே இப்பிடிப் பேசுனா மத்தவக பேசுவாகல..” நாகராசன் செவம்பாண்டியை பிடித்த பிடி நழுவமா அறிவுரை சொன்னான்.

“யேலே விடுறா யென்னெய., ஒனக்கென்னடா தெரியும் ..க்காளி, அவ வாக்கப்பட்டு வந்து ஏழுமாசம் ஆகல அதுக்குள்ள புள்ளயப் பெத்தா என்னடா கணக்கு., கல்யாணத்துக்கு முன்னாடி அவ யெவங்கூட படுத்தெந்திருச்சான்னு தெரியாம விடமாட்டண்டா..” ஏகத்துக்கும் திமிறினான் செவம்பாண்டி.

“யேலேய் வீட்டுக்கு வந்தவள இப்படிப் பேசாதடா., குடும்பம் வெளங்காது.., ஓநாக்கு அழுகிப் போய்ரும்டா., ஒன்னயப் புள்ளையா பெத்ததுக்கு நா நாண்டுக்கிறண்டா..” பொன்னுத்தாயி கிழவிமண்ண வாரித் தூத்திக் கொண்டே சுப்பம்மாவின் கையிலிருந்த கயிற பிடுங்கினாள். சுப்பம்மா “விடுக்கா..” என்று பதறி விலகினாள்.

முப்பது நாப்பது வீடுக மட்டுமே இருக்கிற அந்தக் கைலாசபுரம் கிராமமே கூடியிருந்துச்சு.அந்த நடுநிசியிலஊளையிடுற நாய்களும் இவகளோட கூப்பாடுகளுக்குப் பயந்துபோய் எங்கேயோ போயிருச்சுக. அந்தப்பக்கமாகொட்டத்துகள்லகட்டியிருந்த மாடுக அரண்டு போயி அசை போடுறதையேமறந்து போச்சுக. கன்னுக்குட்டிகஎன்னமோம்மாரிஅச்சத்திலமொனகிக்கிட்டுருக்க..கூடடைஞ்ச பறவைகளும் பஞ்சாரத்திலஅடச்சிருந்த கோழிகளும் உயிரே போச்சுன்னு கெழித்தன.கொழந்தைங்கஅவகளின் அம்மாவோடு சேலைகளிலஊடுநூலாகபாவிக்கிடந்தன.

கொறமாதத்தில் கொழந்தையப் பெத்தெடுத்த செவம்பாண்டி மனைவி செவனம்மாள் ஈனு வலி தந்த அரமயக்கத்திலும் தொப்புள் கொடியே அறுக்காத பிள்ளையை இறுக்கி அணைச்சபடி மயக்கமாகிப் போனாள். கருப்பசாமியும் மாரிமுத்துவும் செவம்பாண்டி உள்ளே நுழையாதபடி கதவுக்கு வெளியே காவலாய் நின்றனர். பிரசவம் பார்த்த வெள்ளத்தாயும் முனியம்மாளும் பிள்ளைக்கு தொப்புள் கொடி அறுத்து முடிச்சு முடிச்சுவிட்டு வெளியில நடக்கிற கலவரத்தக் கண்டு கொள்ளாமல் செவனம்மாள் அண்ணன் சீனிவாசனை பிறந்த பிள்ளைக்கு சேனை தொட்டு வைக்க கூப்பிட்டார்கள்.

”இங்க பாருங்கம்மா ஏதோ கூடப் பொறந்துட்டாளேன்னு சும்மா இருக்கேன்..யேம் மச்சானை மீறி ந்நாவரமுடியாது.. அந்தாளு சொல்றது நாயந்தான., எனக்கு அப்பவே சந்தேகந்தேன் அதனாலதேன் செவம்பாண்டி கண்டபக்கம் சுத்துறவனாயிருந்தாலும் பரவாயில்லன்னு கட்டிவச்சோம்.. இப்போ அந்தாளு கேக்குற கேள்விக்கு நாக்கப் புடுங்கிக்கிறளாம் போலருக்கு.. நடுத்தெருவுல நிப்பாட்டி அசிங்கிப்படுத்திட்டாளே முண்ட..” அவன் பங்குக்கு கூடப் பொறந்த பொறப்புன்னு கூடப் பார்க்காம பேசினான் சீனிவாசன்.

“இந்தப் பயலுகள விடுக்கா நானும் அந்தப்புள்ளைக்கு அண்ணே மொறதான்.. நாந்தொட்டு வைக்கிறேன் சேனைய..” ன்னான் மாடசாமி.

முனியம்மாள் பிறந்த ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.“ ஏலே முட்டாப்பயலுகளா ஆளாளுக்கு கத்திக்கிட்டு.. புள்ளையப் பாருங்கடா கொறமாசத்துல பொறந்தலும் கொழக்கட்ட கணக்கா அம்புட்டு அழகா இருக்கு.. யென்னா மூக்குதேன் கொஞ்சம் நீளம்..காது யானமடல் கணக்கா இருக்கு., அதுகென்னா செய்யுறது., மாடா நீ சேன தொட்டு வையுடா..” என்றாள்.

மாடசாமி சேனை தொட்டு வைத்தான்.இதற்கிடையில் அடித்த கிறுக்கிலும் கத்திச் சலம்பியதிலும் செவம்பாண்டிமட்டையாயிட்டான்.அங்கிருந்தவர்கள் அவனை அப்படியே ரோட்டோரமாய் படுக்க வச்சுட்டுகுழந்தையைப் பாத்துட்டு சண்டையைப் பத்திப்பொறணி பேசி..அவரவர வீட்டுக்கு அவரக்காய் சோத்துக்குன்னு கிளம்பிவிட்டார்கள்.

”புள்ள கொற மாசத்துல பொறந்ததுக்கெல்லாம் சந்தேகப்பட்டா குடும்பம் நடத்த முடியுமா.. அது எயற்கையா நடக்குறதப் போயி., இந்த ஆம்பளைக இருக்காய்ங்களே பொம்பள அப்படி இப்படின்னு எங்கயும் போயிறப்படாது எப்படான்னு காத்திருப்பாய்ங்க நொட்ட சொல்றதுக்குன்னே., யென்ன அவெம் புத்தி அப்படி நம்ம தலையெழுத்து இப்படி குடும்பம் நடத்தனும்முன்னு., விடுத்தா நீ கவலப்படாத யெல்லாஞ் சரியாயிரும்..” செவனம்மாளிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டேபொன்னுத்தாய் சீனியம்மாள் வெள்ளையம்மாள் மூவரும் அவளுக்கு பக்குவம் பாக்க வீட்டிக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்கள். இப்படித்தான் கணேசன் என்ற பெரியவனின் பிறப்பு நிகழ்ந்தது.

இதற்கிடையில் தன் சலம்பலுக்கு மரியாதை இல்லாமல் போன வெக்கத்தில் இதுதான் சாக்கென செவம்பாண்டி பக்கத்து ஊரில் வாழாவெட்டியாய் வாழ்ந்துவரும் கங்காவிடம் தஞ்சமடைந்தான். ஏற்கனவே கங்காவோடு இவனுக்குத் தொடுப்பு இருந்தது.புருசன இழந்த கங்காவுக்கு இவனோட பழக்கம் ஆறுதலா இருந்துச்சு.செவம்பாண்டி ஏற்கனவே கல்யாணமானவங்கிறது பெறகு தாம் கங்காவுக்கு தெரியும்.ஆனாலும் இவனுக்குப் புள்ள இல்லாததுக்குக் காரணமே செவனம்மா தான் என கங்காவை நம்ப வைத்து தனது பழக்கத்தப் பலமா வச்சுக்கிட்டான்.ஆனா இப்போ ஆறேழு மாசம இவம் கங்கா வீட்டுப் பக்கம் போறதில்ல. ஒருமுற இவம் போதையப் போட்டுட்டு தனியா இருக்கிறவ தான யென்ன பண்ணிருவாங்கிற தெனாவெட்டுல கூட்டாளிகளோட போயி படுக்கைக்கு கூப்பிட, வாழாவெட்டியா இருக்கிறவ பூராம் தேவிடியான்னு நெனச்சிங்களாடான்னு அருவாமனைய எடுத்துக்கிட்டு விரட்ட அன்னக்கி ஓடி வந்தவந்தான். ஆனாலும் வீட்டுக்கு வரும் போதெல்லாம் செவனம்மாளிடம் கங்காவைத் தலையில் வைத்துக் கொண்டாடாத குறையாய் பேசுவான் செவம்பாண்டி.இதனாலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.அந்தச் சண்டையின் வன்மம் தான் கணேசன் பிறப்பை இப்படி பேசவைத்தது.

கணேசன் பிறந்த அன்னைக்குப்போனவன் மூனுவருசம் கழிச்சு வீட்டுக்கு வந்தான்.செவனம்மாளிடம் கங்காவை விட்டுவிட்டதாய் பொய் சொன்னான்.இவளும் சரி போகட்டுமேன்னுஏத்துக்கிட்டா.கணேசனை பெரியவனே பெரியவனே என்று அன்பொழுக கொஞ்சினான்.ஊரே ஆச்சரியப்பட்டது.ஆனால் கணேசனின் நீளமான மூக்கும் யானைக்காதும்செவனம்மாளின்மீதுஇவஞ் சந்தேகத்தை அவனுக்கு நினைவு படுத்திக்கிட்டேயிருக்கும்.

இப்படி இவர்கள் வாழ்க்கை போகையில் செவனம்மாள் மீண்டும் கர்ப்பமானாள்.கர்ப்ப காரணத்திற்கான தேதி முதல்க்கொண்டு புருசனிடம் விளக்கம் கொடுத்தாள்.இந்தக் குழந்தையாவது பத்து மாசத்தில் தான் பிறக்க வேண்டும் என்று தினம் ஒரு கடவுளை வேண்டினாள்.இதற்கிடையில் கங்காசெவம்பாண்டியை அவன் வீட்டிற்கே தேடி வந்து பஞ்சாயத்து வைக்க சிவனம்மாளும் கங்காவும் ஓரே வீட்டில் செவம்பாண்டியோடு வாழ ஆரம்பித்தார்கள்.

கங்காவும்செவனம்மாளுக்கு பண்டிதம் பார்த்து உடன் பிறந்த பிறப்பாய் இருந்து வர.,செவனம்மாளுக்கு பிரசவ வலி வந்த பத்தாவது மாதத்தில். சுப்பிரமணி என்ற சின்னவன் பிறந்தான்.இவம்கருவுக்கு வந்த போதே தனக்குப் போட்டியாய் இன்னொருத்தியக் கொண்டுவந்து விட்டான்ங்கிற எண்ணத்தோடு இவனை செவனம்மாளும்., கணேசன் தனக்குத்தான் பிறந்தானா என்கிற சந்தேகத்தோடு செவம்பாண்டியும் பிள்ளைகளை வளர்த்து வந்தார்கள்.

#

பெரியவன் கணேசன் அம்மா பிள்ளையாய் அடக்க ஒடுக்கமாய் வளர்ந்து வந்தான்.சின்னவன் சுப்பிரமணியோ அப்பனைப் போல அப்படியே வளர்ந்தான்.ஆனால் அம்மா பாசம் அவனுக்கு அதிகம்.இருவரும் பெரிய பயல்களாய் வளர்ந்து விட்டார்கள்.கணேசன் இருக்கிற மாடுகளை வளர்த்துக்கொண்டு அம்மா அப்பா காலைச் சுற்றிக் கொண்டு ஊருக்குள்ளேயே இருந்தான்.திடீரென்று மாசத்துக்கொரு பத்துநாள் ஆன்மீகப் பயணம் போவதாய் கிளம்பி விடுவான்.யாரையும் கூட்டு சேர்க்க மாட்டான்.எங்கே எதுக்குப் போறன்ங்கிறதையும் சொல்ல மாட்டான்.யாராவது கேட்டால் சொன்னாலும் சாமி குத்தம் கேட்டாலும் சாமி குத்தமாயிடும்ன்னு சொல்லி பயமுறுத்திருவான்.சுப்பிரமணியோ அப்படிக் கெடையாது.சேவல் வளர்ப்பதில் கெட்டிக்காரன்.வீடு தங்கமாட்டான்.சேவலும் கையுமாய் சேவற்கட்டிற்கு ஊர் ஊராய் சுற்றுவான் ஆனால் நல்ல வரும்படி பார்த்துவிடுவான்.

காமக்காபுரம்.மலையும் மலை சார்ந்த ஊருமாய் இருந்தது.கைலாசபுரத்தைப் போல தான் இந்த ஊரும்.சின்னக் கிராமம்.சாயங்காலம் ஆறு மணிகெல்லாம் குடிக்க ஆரம்பிச்சவன் சுப்பிரமணி., நட்டநடு ராத்திரியாகி விட்டது, குடியை நிறுத்தாமல் குடித்துக் கொண்டே இருந்தான்.

“வேணாம் மக்க.. போதும்டா., கூடக் கொறைய ஆச்சுன்னா வீடு போய்ச் சேரமுடியாது., வனாந்திரத்துக்குள்ள இருக்கோம்., யெப்ப யென்ன வரும்ன்னு சொல்ல முடியாது., வா மக்க கெளம்புவோம்..’ சுப்பிரமணியின் கூட்டுக்காரன் வீரபாகு எவ்வளவோ சொல்லிப் பாத்தான் அவன் கேக்கறதாயில்லை.

“லேய்.. க்காளி., யெந்த மொகறைய வச்சுக்கிட்டு ஊருக்குப் போக சேவ இல்லாம., யெவனும் காறித்துப்பவா.., சுப்பிரமணி தோத்ததா சரித்திரம் பேசிறக்கூடாதுடா.. ஊத்துடா..” ன்னான்.வீரபாகு நெளிந்தான்.சுப்பிரமணியின் அரட்டலுக்குத் திமிறாமல் பிராந்தியை ஊத்திக் கொண்டே வீரபாகு பேசினான்.,

“மக்க பகல்ல நடந்ததையே நெனைக்காத மக்க., வெளையாட்டுல இதெல்லாம் சகசம்., யெல்லா சமயத்திலேயும் நம்மளே செயிக்க முடியுமா., அப்படித்தாம் மக்க தப்புனாப்புல இன்னக்கி நடந்துருச்சு அதுக்குப் போயி இந்தப் பாடுபடுற., அடுத்த கட்டுல நம்மதேன்., யென்னா சொல்ற..” ன்னுநெறஞ்ச கிளாசை சுப்பிரமணி கையில் கொடுத்துவிட்டு இவன் ஓரு பீடியைப் பத்த வைத்தான். தீக்குச்சி அமைந்தது., திரும்பப் பத்த வைத்தான் இப்பவும் அமைந்தது.,

“கழுத யென்னா அமந்துக்கிட்டே இருக்கு..” ன்னு திரும்ப பத்த வைத்தான் பத்தவில்லை கடுப்பாகி பீடியை ஒடிச்செறிஞ்சு விட்டு தீப்பெட்டியை விட்டெறிஞ்சான். சுப்பிரமணிசிரிக்க வீரபாகு கடுப்பாய்ப்பாத்தான்.

“யென்னடா மக்க பாக்குற., ஒத்தத் தீக்குச்சி அமந்ததுக்கே இந்தப்பாடு படுறயே., இதுவரய்ய தோக்காதவன்டா நானு., எஞ்சேவலும் அப்படித்தேன்., கோவம் வரும்மா வராதா.. ஊத்துடா..” ன்னு திரும்ப கிளாசை நீட்டினான் சுப்பிரமணி. வீரபாகுவிற்கு புரிஞ்சுபோச்சு இப்போதைக்கு இங்கிருந்து நகர்றதுநடக்காதுன்னு.. கொஞ்சம் கோவமாவே சொன்னான்..

“இதேங் கடசி ரவுண்டு அடிச்சுவிட்டு கெளம்புவோம் மக்க., நடந்தது திரும்பிரும்மா.. அடுத்து ஆகவேண்டியதப் பாப்போம்., அதஞ் சொல்றன்ல.. அடுத்த கட்டுல நம்ம கொடிதேன்..”வீரபாகு என்ன சொன்னாலும் சுப்பிரமணிசமாதானமாகல்ல. இவன் என்ன சொல்றது நாம என்ன கேக்குறதுங்குற நினைப்பில் இருந்தான்.

“இல்ல மக்க.. இன்னக்கி இங்கேயே தங்குறோம்., நாளக்கி நம்ம சேவலக் களவான்ட்டாவது ஊருக்குக் கெளம்புவோம்” ங்கிற சுப்பிரமணியின் வார்த்தைகளுக்கு கடுப்பான வீரபாகு..

“யோவ் மக்க நம்மள சுத்துவட்டாரம் பூராந் தெரியும்.. இன்னக்கி நாம தோத்தது நமக்கு முன்னாலேயே நம்ம ஊர்க்காரய்ங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.. சேவலக் களவாண்டுறாராம்.. பெரச்சனையக் கெளப்பி விட்டுறாதய்யா.. வெட்டுக் குத்தாகிப் போகும்..”ங்கிற வீரபாகுவின் பேச்சுக்கு குடித்த கிளாசை கசக்கி எறிஞ்சுக்கிட்டேசுப்பிரமணி சொன்னான்.,

“நடந்தா நடக்கட்டும்டா மக்க.. பொம்பள வளத்த சேவல்ட்ட அதுவும் அந்த பொட்டச்சிட்ட தோத்ததுக்கு.. கொல பழியப் பாத்துட்டு செயிலுக்குப் போயிறலாம் மக்க..”ன்னு தெறிச்சான்.

“மக்க வேகத்துல எதையும் செஞ்சிரக்கூடாது.. பொட்டச்சிட்டப் பிரச்சனைன்னா அவளத் தூக்கிட்டுப் போயித் தாலியக் கட்டிவிட்டுவோம்டா.. அவளத் தூக்கிட்டா நம்ம சேவலும் அப்படியே சீதனமா வந்துட்டுப் போது.. அத விட்டுட்டு..” ன்னு சூடேற்றினான் வீரபாகு.

“இதுவும் நல்லாத்தேன் இருக்கு.. கெளப்புவம்டா மக்க..”ன்னு வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டுத் தயாரானான் சுப்பிரமணி.வீரபாகு கலங்கிட்டான்.,

“இவனெ ஊருக்குக் கெளப்ப யேதாவது பேசுனா வேதாளங்கணக்கா அதப்புடுச்சே தொங்குறானே..யெங்க அவளத் தூக்குறதுக்குக் கெளம்பிருவானோ” ன்னு கண்ணு ரெண்டும் பிதுங்கி புலம்பினான்.

“வா மக்க வந்து சீக்கிரமா ஏறு.. கெளம்புவோம்., அவள எப்படித்தூக்குறதுன்னு போற வழியில பேசிக்கலாம்..”ன்னு சொல்லிக்கிட்டே பைக்கை உசுப்பினான் சுப்பிரமணி. வீரபாகு வெடவெடத்துப் போனான்.

“யென்னா மக்க சொல்ற.. ந்நா ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே வண்டிய யெடுத்துட்ட..” ன்னு வீரபாகு சொல்ல சுப்பிரமணி சதாரணமாக..

“அதேன் நீயே சொல்லிடேய்லடா மக்க பெறகென்ன.. வா பின்னாடி ஒக்காரு..பயந்தோம்ன்னா நம்ம பல்லு நம்மளையே பாத்துச் சிரிசிரின்னு சிரிக்கும்ன்னு” சொல்லிகிட்டே வாயிலிருந்த பீடியை வீரபாகுவிடம் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பத் தயாரானான்,

தூரத்தில் ஒரு பைக் திணறித் திணறி உருமிகிட்டே செமக்கமாட்டாத கழுத கணக்காவந்துக்கிட்டிருந்தது மங்கலான வெளிச்சத்தோடு.வீரபாகு சுப்பிரமணியிடம் வண்டியை அணைக்கச் சொன்னான்.அந்த பைக் இவர்கள் இருக்குமிடம் நெருங்கியது.இந்நேரத்தில் ஒரு பைக் இவர்கள் இருக்குமிடம் பக்கமாய் வந்ததில் இருவரும் சுதாரிப்புத் தொனியில் ஈடுபடலாயினர். அந்த பைக் தார்ச்சாலையின் மையப்பகுதியிலிருந்து விலகி கால்வாய்ப் பாலம் கடந்து மண் பாதை வழியாக இவர்கள் இருக்குமிடத்திலிருந்து கொஞ்சம் முன்னாடிவந்து நின்றது. பைக்கில் முன்னால் இருந்த உருவம் பைக் வெளிச்சத்தை நாலாபக்கமும் பாய்ச்சியது. பின்னாலிருந்த உருவம் செல்போன் வெளிச்சத்தில் தேடியது, இவர்கள் படவும்..

”அடியேய் வள்ளி இந்தாருக்காகடி இவகதான..” ன்றது அந்தப் பெண்குரல். உற்றுப் பார்த்த வள்ளி..

“ஆமாடி அவய்ங்கெதேன், லைட்ட அமத்திராத., இந்தா இந்தச் சாக்கப்புடி..” ன்றவாறு பைக்கின் முன்னாலிருந்த சாக்கை தனத்தின் கையில் கொடுத்துவிட்டு பைக்கிலிருந்து இறங்கி பைக்கை அணைத்து பக்க ஸ்டாண்டைப் போட்டு நிறுத்தினாள்.

சுப்பிரமணிக்கும் வீரபாகுவிற்கும் என்ன நடக்குதுன்னேபுரியல. யார் இவங்கநம்மள அடையாளம் தெரியாமப்பேசுறாகளா..இல்ல இந்த நேரத்தில நம்மள எதுக்குஇவங்க தேடிவரணும்., இப்படி அவர்கள் எண்ணங்கள் பறந்து கொண்டிருக்க வள்ளியும் தனமும் அவர்களை நெருங்கினார்கள். நிலவு மேகங்களுக்குஊடா அதுபாட்டுக்குப் போய்கிட்டிருக்க..நிலாவின் வெளிச்சம் தரையில் ஊமத்தையத்தேய்ச்சுபலநாளான கரும்பலகையோட வெளிர்ப்பு நிறமாபரவிகிடந்துச்சு.சின்னச்சாமியும் வீரபாகுவும் இதமான இரவுக்காத்தில் அந்தப்பக்கம்வெளஞ்சு கிடக்கும் பார்த்தீனியச் செடிகளின் தலையாட்டுதலாய் போதையில் ஆடியவாறு கூர்ந்து பார்த்தார்கள். நெருங்கிய வள்ளி ஆரம்பித்தாள்..

“இல்ல இந்தப்பக்கம் வாழத்தோட்டத்துக்கு தண்ணி திருப்பிவிட வந்த அண்ணந்தேன் சொன்னாரு.. ஓங்கிட்ட சேவக்கட்டுல தோத்தவய்ங்க அங்க நின்னு தண்ணியப் போட்டு பொலம்பிக்கிட்டுருக்காய்ங்கம்மா கவனமா இருன்னு.. அதேங் கொஞ்ச நேரஞ்செண்டு இவளையும் தொணைக்கு கூட்டிக்கிட்டு யென்னென்னு பாத்துட்டுப் போலான்னு வந்தேன்..” ன்னு வள்ளிசொல்லவும் சுப்பிரமணிக்கு சிவுக்கென்றிருந்தது.”எம்புட்டுத் தெனாவட்டு இவள்களுக்கு நட்டநடு ராத்திரில வந்துருக்காளுக பைக்கப் போட்டுக்கிட்டு.” ங்கிற நெனப்பும் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“அதுக்கு இந்நேரத்துலயா.. எங்களப் பாத்து யென்னம்மா பண்ணப் போற..”ன்னு கேட்டான் வீரபாகு பயத்தை மறைத்துக் கொண்டு தைரியமாய்.

“ய்யேன்.. பாத்து ஆறுத சொல்லாம்ன்னுதேன்..” ன்னு நக்கலாய் இழுத்தாள் தனம்.

“..க்கும் தேடிப் போனானாம் திருப்பதிக்கு வழிய வந்துச்சாம் லட்டு.. சும்மாரும்மா கடுப்பக் கெளப்பிக்கிட்டு நானே பதறிக் கெடக்கேன்..”ன்னான் வீரபாகு

“..க்கேகெம் யென்ன சொல்றீக.. தோத்தவகளே நாய்க்கர் மகால் தூணக் கணக்கா நிக்கிறப்ப நீங்கயேன் பதற்றீங்க..”ன்னாள் வள்ளி. நாம தூக்கனும்ன்னுநெனச்சவ வழிய வந்து கண் முன்னே நிக்கிறாளே என்ன செய்யிறதுங்கிற திகைப்பில் வள்ளியின் நக்கல் பேச்ச ரசிச்சுக்கிட்டேஅவள் முகத்தையேப் பாத்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி.

“இது வேறயா.. நீ வந்ததச் சொல்லும்மா.. யென்னா விசயம்.. டேய் மக்க என்னடா மசமசன்னு நிக்கிற யென்னா யேதுன்னு வாயத் தொறந்துதாங் கேளேன்..”ன்னான் வீரபாகு வள்ளியிடமும் சுப்பிரமணியிடமும்.

சுப்பிரமணியின் கண்கள் வேறயாராவது வருகிறார்களா..இல்ல  வேறேதும் திட்டத்தோடு வந்திருக்காகளா என நாலாபுறமும் பாய்ந்தது. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.பாத்துக் கொண்டேயிருந்த சுப்பிரமணி திடீர்ன்னுவள்ளி மேல் பாய்ந்து இறுக்கிக் கட்டிப்பிடித்தான்.அவளது முகமெல்லாம் முத்தம் கொடுத்தான்.காற்று கொஞ்சம் வேகம் பிடிச்சிருந்தது. ”ஏலேய் ஏலேய்..” ன்னு இதை எதிர்பார்க்காத வீரபாகு தலையில் அடித்துக் கொண்டே ”வம்பத் தூக்கி வாரியணச்சுட்டயடா..” ன்னுதல தெறிக்க ஓட வள்ளியோடு வந்த தனம் வாயடைத்துப் போனாள்.

சுப்பிரமணியின் பிடியிலிருந்து விருட்டென்னு விலகிய வள்ளி அவனைத் தள்ளிவிட்டு கொஞ்சம் தூரமாகத் தள்ளி நின்னாள்.வெட்கம் அவளைப் பிடிங்கித் தின்னது.காலையில் சேவக்கட்டில் அவனை முதல் முறைப் பாத்தபோதே விட்டகுறை தொட்டகுறையென அவன் வயப்பட்டிருந்தாள்.அவன் லாவகமாக சேவல்விடும் அழகில் லயித்துப் போனவளுக்கு இவன் தோத்தது என்னவோ போலிருந்துச்சு.குளிரெடுத்த இந்த ராத்திரியிலும் பகலெல்லாம் இவனை விசாரித்து வச்சிருந்தவள் இவன் இங்கிருக்கிற துப்புக் கிடைத்ததும் தாளாமல் தனத்தோடு வந்துவிட்டாள்.

வள்ளியின் தள்ளலில் தடுமாறிய சுப்பிரமணி அவளையே வெறிச்சுக்கிட்டிருந்தான்.பட்டென்று அவன் செய்த செயல் அவன் நெஞ்சுக்குழிக்குள் பிசைந்து கொண்டிருந்தது.வாழைத்தோப்புக்குள் அடிக்கிழங்குகளைப் பதம்பாத்துக் கொண்டிருந்த பன்றிக்கூட்டம் எங்கேயோ கேட்ட பரவுகாவல் விசிலிற்கு கட்டாப்பு தாண்டி கூட்டமாய் இவர்களைக் கடந்து போயின. விசில் சத்தமும் பன்றிகளின் கத்தலும் வள்ளிக்கும் சுப்பிரமணிக்கும் ஏதோ பஜனை பாடுபவர்கள் கடந்து செல்வதைப் போலிருந்தது. தனம் பதறிப் போய் ஒதுங்கியிருந்தாள். வீரபாகு சுப்பிரமணியின் முதுகைத் தட்டினான்..

”மக்க.. டேய் போதும்டா கெளம்புவோம்..”ன்னான் இளைத்துக் கொண்டே., “யெம்மா யாரு பெத்த புள்ளமா நீ அந்தபுள்ளையக் கூட்டிட்டுப் போமா..” ன்னான் தனத்திடம். வள்ளியின் மீதான பார்வையிலிருந்து வீரபாகுவின் தட்டலில் மீண்ட சுப்பிரமணி வீரபாகுவைப் பார்த்து அதிர்ந்தான். சிரிப்பு வேற.,

“யேய் மாப்ள என்னடா ஆச்சு மூக்கெல்லாம் ரத்தம்..” ன்னு கேட்டான்

“இப்படியடா செய்வ கொஞ்ச நேரத்துல கொல நடுங்கிடுச்சுடா.. இங்க பார்றா பன்னி செஞ்ச வேலைய..” என்று பாவமாய் குண்டியைக் காட்டினான். பன்றி குத்தித் தூக்கியிருக்க வேண்டும். மாட்டுவண்டியின் அச்சாணிகளை வைத்து நாலு விரற்கட்டை இடைவெளியில் ஒன்னுசேர ஓங்கிக் குத்தியது போல இருந்த அந்தக் காயங்களைப் பார்த்த வள்ளியும் தனமும் கெழுக்கென்று சிரித்து விட்டார்கள்.

“நீங்க சிரிங்கம்மா சிரிங்க.. ந்நா இவனுக்கு யோசன சொன்னதும் போதும் நீங்க வந்ததும் போதும்.. யெல்லேய் மக்க முடியலடா மொதக் கெளம்புடா..”ன்னு சிடுசிடுத்தான் வீரபாகு.

“சரி மக்க வா வா வண்டில ஒக்காரு..”ன்னு பைக்கைக் கிளப்பினான் சுப்பிரமணி. வள்ளியிடம் கண்களாளேயேவிடை கொடுத்தான்.இருவருக்குள்ளும் அடிக்கிற குளிர்காற்றோடு இவர்கள் காதல் நெருப்பும் கனன்று கெடந்தது.

“ஏய் தனம் அந்தச் சாக்க எட்றி..”ன்னவாறு வள்ளி சுப்பிரமணியை நெருங்கினாள். அவன் என்ன என்பது போல் பார்த்தான்.தனம் தந்த சாக்கை வள்ளி சுப்பிரமணியிடம் தந்தாள்.

“இந்தாங்க உங்க சேவ..கத்தக் கூடாதுன்னு தண்ணில நனச்சு சாக்குல போட்டுக் கொண்டு வந்தேன். திரும்ப எப்ப வருவீங்க..”ன்னு ஆவலாய்க் கேட்டாள்.

“யெனக்கு எல்லாம் யெங்கண்ணந்தேன்.. சாமிகும்பிட வடக்க போயி பத்து நாளாச்சு நாளைக்கு வந்திரும் அப்படியே எங்க அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வந்திடுறேன்..” என்றான். வள்ளிக்கு நெனச்சது இவ்வளவு சீக்கிரமே கைகூடியதில் நட்சத்திரங்கள் உருகி பனியாய் பொழிவதாய் உணர்ந்தாள்.அவள் உடம்பின் செல்கள் கொஞ்சம் சிலிர்த்து நின்றது.

“யெல்லேய் மக்க அத அப்புறம் பாப்பம்டா வலி தாங்க முடியல.. விட்டா டூயட் பாடிருவ  போல.. யெம்மா அவம் ஒனக்குத்தான்.. போயிச் சோலியப் பாருங்கம்மா..”ன்னான் முனகலாய் வீரபாகு. வள்ளியும் சுப்பிரமணியும் காதலும் காதலுமாய் விடைபெற்றார்கள்.இருப்புக் கொள்ளாமல் பைக்கைத் திருகினான் சுப்பிரமணி.திருகலில் வீரபாகு குலுங்கி உட்கார்ந்தான். பின்னால் இருந்த காயத்தால் அவன் ..ச் ..ஸ் ..ப்பா என அலற சுப்பிரமணிக்குள் ஆயிரம் சேவல்கள் பறந்தன.ஒருத்தனோட காதல் ஒருத்தனோட வேதனைன்னு  இரண்டையும் சுமந்து கொண்டு பைக் சீறீப் பாய்ஞ்சது.

#

பொழுது விடிய ஆரம்பித்தது., இரவு ஒரு மின்னலைப் போல நடந்து முடிந்த காட்சிகளால் தூக்கம் கொள்ளாமலிருந்த சுப்பிரமணி ஊர் திரும்பிய அண்ணன் கணேசனைக் கண்டதும் அச்சுவெலாக்கத் தூக்கி அங்குமிங்கும் ஓடினான். என்ன ஏதென்று புரியாத கணேசனுக்கு வீரபாகு விசயத்தைச் சொன்னான்.பதறிப் போன கணேசன்..

“லேய் தாய்மாமா சீனிவாசன் மக தெய்வானை ஒனக்குனே இருக்குறப்பஇதெல்லாம் முடியாது”ன்னான்.அண்ணன் இப்படிச் சொல்வானென நெனைக்காத சுப்பிரமணி தொண்டையச் செருமிக்கிட்டு…

“நீ தான மூத்தவன் நீ கட்டிக்க அவள.. வள்ளிய மறந்துட்டு யென்னால காலம் தள்ள முடியாது புரிஞ்சுக்க..”ன்னுசுப்பிரமணி சொல்ல, கணேசன் அதெல்லாம் சரிப்படாதுன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டான்.

”ந்நா மாசம் பத்து நா அங்க இங்கன்னு கோயில் கோயிலாச் சுத்துறவன்., எனக்கு குடும்பஸ்தேன் ஆசெல்லாம் இல்லடா சுப்பு., அது நமக்கு செட்டாகாது. ஒன்னோட வாழ்க்க நீயே முடிவு பன்ணிக்க.,அண்ணே ந்நா ஒனக்கு ஒத்தாசையா இருக்கேன்.பிரம்மச்சாரி சாமியாரப் போறவன் யெனக்கு கல்யாணம் கில்யாணம் எல்லாம் செட்டாகாது”ன்னான் கணேசன்.

“யென்னெண்ணே வார்த்தலேயும்கண்லேயும் யேதோ பதட்டம் தெரியுதே..யென்னான்னு சொல்ண்ணே..” நக்கலாய்க் கேட்டான் வீரபாகு. எங்கே எதையும் கண்டு பிடித்துவிட்டானோ என மழுப்பலாக பதிலளித்தான் கணேசன்.

“லேய் வீரபாகு., நீ ஒருத்தம் போதும்டா ஊதி விடுறதுக்கு., சுப்பு இவனக் கூடச் சேத்துக்கிட்டு யென்கிட்ட யெதையும் பேசாத..” வீரபாகுவிற்கு குபீக்கென்றிருந்தது கணேசணின் வார்த்தைகள்.

”யேண்ணே ஒனக்கு யென்ன பண்ணேன்னு இப்படிப் பேசுற.. மூத்தவென் நீ.. தேவானயக் கட்டிக்கன்னா கட்டிக்க வேண்டியது தான..கட்டிக்கிட்டு சுப்பிரமணிக்கு வழி விட வேண்டிதான., அண்ணே இருக்குறப்போ தம்பிக்கு கல்யாணம் பண்ணுனா ஊரு யென்ன பேசும்ன்னு தெரியும்ல்ல.., இல்ல வேற யெந்தப் புள்ளையவாவது நீயும் ஓந்தம்பி கணக்கா நெனச்சுக்கிட்டிருந்தாச் சொல்லு அதையும் பாப்போம்., அத செய்யாம யெங்களுக்குள்ள ஒடசலக் குடுக்குற..” ங்கிற வீரபாகுவின் வார்த்தைகள் தடிக்க, சுப்பிரமணி சமாதானப்படுத்தினான்.

“க்கடிச்ச ப்பாக்குல க்காப்பாக்கு குடுக்காத பெரியாத்தா  பஸ்டாண்டு வர வந்து போய்ட்டு வா போய்ட்டு வான்னு வழியனுப்புனாளாம்.. போடா நீல்லாம் பேசவந்திட்ட.. மொதல்ல ஓம்முடிச்சவிக்கித்தனத்த நிப்பாட்றா..சுப்பு இவெம் யென்னக்யா இருந்தாலும் ஒனக்கு ஆப்படிக்கிறவந்தேன் கவனம்மாரு” ன்னுகணேசன் சொல்ல சுப்பிரமணி இருவரையும் சமாதானப்படுத்தினான்.இப்ப நாம என்னத்தச் சொல்லிட்டோம்ன்னு அண்ணங் குதிக்கிறாப்ல என குழம்பிப் போனான் வீர்பாகு.

இப்படியே விட்டா பேச்சு நீளும்ன்னு யோசன பண்ணின சுப்பிரமணி ஒரு சமாதானத்துக்கு வந்தான்.

” சர்ண்ணே இப்பப் பேச்ச விடு, அதப் பெறகு பேசுவோம். பக்கத்தூர் தேட்டர்ல இந்திப்படம் போட்டிருக்காய்ங்க நல்லார்க்ன்னு சொன்னாய்ங்க..நீதேன் பல மொழி தெரிஞ்சவனாச்சே., வா படத்துக்குப் போவோம் நீ எங்களுக்கு கதையச் சொல்லு” ன்னான்.இதுவும் நல்லதுதேன் இப்போதைக்கு இந்தப் பேச்சுகள்லேர்ந்து தப்பிக்கலாம் என கணேசனும் ஒத்துக்கொண்டு மூனு பேரும் கெளம்பினார்கள். போற வழியில் டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டுப் போவோம்ங்கிற வீரபாகுவின் யோசனையையும் கணேசன் நான் குடிக்கமாட்டேன் என்னத் தொந்தரவு பண்ணக்கூடாது என்கிற நிபந்தனையோடு ஏத்துக்கிட்டான்.

டாஸ்மாக் பாருக்குள் வீரபாகுவிற்கும் சுப்பிரமணிக்கும் ஏகப்பட்ட வரவேற்பு..கணேசனை ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். இந்த ஊருக்குள்ள யெவனாருந்தாலும் குடிக்காம இருக்க முடியாதுடா பாருக்கு வந்தே ஆகணும் ஏன்னா விதி அப்படி கணேசங்குடிக்கிற செலவு ஏஞ்செலவு ன்னான் அங்க ஒருத்தேன்.

அவசரத்துக்கு ஒருபய ஒதவமாட்டாம் இதுக்குன்னா கடனெ வாங்கியாவது செலவழிக்கிறாய்ங்க ன்னு கணேசன் நெனைக்கிறப்பவே அவன பஞ்சு மிட்டாய் விக்கிற இந்திக்காரப்பயஒருத்தேன் தோளில் பஞ்சுமிட்டாய் பறக்ககணேசனைக் கடந்தவன் தெரிஞ்ச மொகமா இருக்கேங்கிற சந்தேகத்தோடேயே கணேசனைத் திரும்பிப் பாத்தான். கணேசன் தெரியாதது போல நடையில் வேகங்காட்டி ஒரு டேபிளைப் பாத்து ஒக்காந்தான்.சுப்பிரமணியும் வீரபாகுவும் சரக்கும் சைடிசும் வாங்கப் போயிருந்தார்கள்.

”பஞ்சுமிட்டாய் விக்கவந்தவனுக்கு பார்ல என்ன வேலை பொழைக்க வந்த எடத்துல.. நம்மள வேற பாத்துட்டான்., அவெந் திரும்ப உள்ள வந்துறக் கூடாதுடா கணேசா” ன்னு கணேசன வேண்டிக்கிட்ட கணேசன் தலையக் குணிந்து கொண்டே வாசலைப் பாத்துக்கிட்டிருந்தான்.சரக்கு சைடிசோடு வந்த சுப்பிரமணியும்வீரபாகுவும் கணேசனைப் பாத்து சிரிச்சுவிட்டார்கள்.

“யெண்ணே சும்மா வெக்கப்படாம நிமிந்து ஒக்கார்ண்ணே.. நம்ம ஊரு..நம்ம பாரு… யெவெம் பேசுறான்னு பாப்போம்” ன்னான் வீரபாகு.

“நெலம தெரியாம இவம் வேற பனஓலையில நாய் மோண்டது கணக்கா சலசலன்னு..” ன்னு கணேசன் நெனக்கிற நேரத்தில் பஞ்சுமிட்டாய் இந்திக்காரன் அவனைப் நோக்கி வந்தான். கணேசனுக்கு உள்ளே ஆடியது.பஞ்சு மிட்டாய்க்காரனும் பல மொழி தெரிஞ்சவன்.தமிழும் பிசகாமல் பேசுவான்.கணேசனை நெருங்கி பக்கத்தில் வந்ததும் துள்ளலாய் பேச ஆரம்பிச்சான்.

“ அண்ணா கணேஷ்ணா என்னா நல்லா இருக்கியா.. எவ்ளோ டைம் போயிருச்சு அண்ணா.. உன்னப் பாத்து ” ன்னு கட்டிப் பிடிக்க வந்தான். கணேசன் விலகி நின்னு தெரியாதது போல பாத்தான்.

“ கணேஷ்ண்ணா என்னத் தெர்ல.. மறந்து உட்டியா.. நாரத்தேவ் கணேஷ்ண்ணா நாரத்தேவ்..” ன்னு அவனது பெயரைச் சொல்லிக்காட்டி கட்டிப் பிடித்தே விட்டான். உதறினான் கணேசன்.நாரத்தேவ் விடவில்லை.இன்னும் இறுக்கமாகக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு கொஞ்சினான். சுப்பிரமணியும் வீரபாகுவும் இருவரையும் பிரிச்சுவிட., கணேசன் நாரத்தேவ் மண்டையில முழங்கைய வச்சு ஒரே குத்து குத்த அவன் அழுது கொண்டே செல்போன எடுத்து சுப்பிரமணியிடமும் வீரபாகுவிடமும் காட்டினான்.

“ கணேஷ்ண்ணா நா யார்ன்னு தெர்யாம அடிக்குது.. இங்ஙோ பார்ங்ஙோ நான்னும் கணேஷ்ண்ணாவும் இருக்ற போட்டோ..” ன்னான். அவர்கள் இருவருக்கும் ஆச்சரியம். சுப்பிரமணி கணேசனிடம்..

“ தெரிஞ்ச பய தான்ண்ணே பெறகு ஏன் அடிச்ச..” ன்னுகேக்கும் போதே வீரபாகு

“ மாப்ள மொத இதப் பாருய்யா..” ன்னு செல் போனக் காமிச்சான். சுப்பிரமணிக்குத் திக்குமுக்காடிப் போனது.

கணேசன் ரெண்டு பெண்களோட மாலையும் கழுத்துமாய் சிரித்துக் கொண்டிருந்தான்.நாரத்தேவ் முகம் மட்டும் படத்தில் முன்னாடி அகலாமாய் இருந்தது.

” அந்த ரெண்டு பேரும் என்னோட அத்த பொண்ணுங்க.. சித்திரா பாபி புத்திரா பாபி., நான்னே எடுத்த ஷெல்பிண்ணா.. நல்லாருக்கா.. கணேஷ்ண்ணா நல்லா சிர்க்குதுள்ள ” ன்னான் சுப்பிரமணியிடம் வெள்ளந்தியாய் நாரத்தேவ்.கணேசன் கிர்ருன்னு தலையைக் குனிஞ்சுக்கிட்டான். நெலமையப் புரிஞ்சுக்கிட்ட வீரபாகு

“ சரி தம்பி நீ நாளைய்க்கு வா.. நாங்க யிங்கதேன் இருப்போம்..” ன்னு சொல்லி நாரத்தேவை அனுப்பி வச்சான். நாரத்தேவ் வருத்தமாக் கிளம்பினான்.சுப்பிரமணியும் கணேசனும் பார்த்துக்கிட்டே இருக்க., வீரபாகு

“ இப்பத்தான மாப்ள தெரியுது அண்ணே ய்யேன் கல்யாணம் வேண்டாம்ன்றாப்ல.. அடிக்கடி கோயிலுக்குப் போறேன்னுட்டு காணாமப் போறப்லன்னு..” ன்னு சுப்பிரமணியிடம் சொல்லிவிட்டு கணேசனிடம்

“ அண்ணே மதினி ரெண்டும் சூப்பர்ண்ணே.. கெளப்பிட்டேய்ல.. நொறுக்கி விடுண்ணே., ஒங்கப்பனுக்கு ரெண்டு ஒனக்கும் ரெண்டு..அப்ப ஓந்தம்பிக்கும் ரெண்டா..“ன்னு சொல்ல கணேசன் பேந்தப் பேந்த முழித்தான். வீரபாகு விடல.,

“ ந்நா சாமியாருப் பய., ப்ரம்மச்சாரின்னு ஊரு பூராஞ் சொல்லிட்டு., இப்படித் திருட்டுதனமா ரெண்டக் க்ரெட்பண்ணி வாழ்றியேண்ணே., அதுவும் வடக்க.. சூப்பர்ண்ணே..” ன்னான் நக்கலாக.

“வீரபாகு இர்றா..: ன்னு கடுப்பில் கத்தினான் சுப்பிரமணி. பாரில் எல்லோரும் இவங்களை வேடிக்கை பாக்க..

“யெதா இருந்தாலும் இங்க வேணாம் வெளில போயி பேசிக்குவோம் கெளம்புங்க..” ன்னு ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு சுப்பிரமணி வெளில வந்தான்.

வீரபாகு பீடியைப் பத்த வச்சான். ஒரு ஓரமாய் மூனு பேரும் ஏதும் பேசாமல் நின்னு கொண்டேயிருக்க., கணேசனுக்கு உள்ளுக்குள்ள கதக் கதக்குன்னு இருந்துச்சு.

“ யண்ணே நடந்தது நடந்ததா இருக்கட்டும்., நீ வழக்கம்போல இரு., இது ஊருக்கும் யாருக்கும் தெரியாம நாங்க பாத்துக்குறோம்.. ஆனா நாஞ்சொல்றத நீ செய்யனும்..” ன்னான். வீரபாகு இவன் என்னடா புது ரூட்டப் போடுறான்னு யோசிக்கிறப்பவே கணேசன் சுப்பிரமனியிடம்.,

“ யேய் சின்னவனே தெரியாமப் பாத்துக்கடா நீ என்ன சொன்னாலும் அண்ணஞ் செய்யிறேன்.. வீரபாகு ஒனக்குந்தாண்டா ” ன்னு கெஞ்சுனான்.

“ அதேஞ் சொல்லிட்டேன்ல வீரபாகும் இத வெளில பேச மாட்டான். நீ சொன்ன மாதிரி தேவானைய நானே கட்டிக்கிறேன்., ஆனா அந்த வள்ளிப் பிள்ளைய விட்டுட்டு என்னால வாழ முடியாது., அவளையும் நானே கட்டிக்கணும் அதுக்கொரு வழியச் சொல்லு..” ன்னான். பிரமாதம்டா உங்க கணக்கு வழக்குன்னு வீரபாகு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே..

“ சரி கெளம்புவோம் அதேன் முடிவாகிப் போச்சுல ஆகவேண்டியதப் பாப்போம்..” ன்னான்.மூனு பேரும் அங்கேயிருந்து கிளம்பினார்கள்.

#

இப்படியாக இவர்கள் முடிவெடுத்த பெறகு., பிராந்திப் பாட்டில்களும் பீடிக்கட்டுகளும் தீரத் தீர விழுந்து படுத்து புரண்டு பலமாய் சிந்துச்சு கடைசியாய் வள்ளியை வீரபாகும் வள்ளியின் அப்பா மொரட்டுராமசாமியை கணேசனும் கல்யாணத்துக்கு சரிக்கட்டுவது ன்னு யோசனைக்கு வந்தார்கள்.

வீரபாகு காமாக்காபட்டியில் வள்ளி வீட்டின் தெருப்பக்கமா அப்படியே சும்மா சுத்திவந்துக்கிட்டே இருந்தான்.அவன் நினைத்தது போலவே வள்ளி அவனைப் பார்த்து சுப்பிரமணியை விசாரித்தாள்.

“ யெங்கம்மா., சுப்பிரமணி ஒங்க கலயாணப் பேச்ச வீட்டுல எடுத்தான். அவ்வளவுதேன் ஒரேப் பிரச்சன., அவென் அம்மா அவென் மாமம் பொண்ணத்தேன் கட்டனும்ன்னு பிடிவாதம் இல்லைன்னா நாண்டுக்கிருவேன்னு சொல்லிருச்சு., இவனுக்கு நீயில்லாம பொழைக்க முடியாதுன்னு இந்த ரெண்டு நாளா குடிச்சுக்கிட்டு அலையிறாம்மா.. ” ன்னான்.

வள்ளிக்கு கண்களில் நீர்க்கோர்த்துக்கொண்டு நிக்க., வீரபாகு ”ந்நா ஒரு யோசன சொல்றேம்மா நீ சரின்னு சொன்னா அவெங்கிட்ட பேசுறேன்.: ன்னான்.

அவளுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம்ம ம் ன்னு தேம்பிக்கிட்டே தலையாட்டினாள்.

“ சுப்பிரமணியோட வீட்டுக்குத் தெரியாம ஒங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிருவோம்., அவனுக்கு அவங் கூட்டாளி ஒருத்தேன் சின்னமனூர்ல சந்தக் காண்ட்ராக்ட் வேல எடுத்துத் தர்றேய்ங்கிறாம். ஒன்னோட அவெம் இங்கேயே வீட்டோட மாப்பிள்ளையா இருக்கட்டும்.சந்த வேல முடிய எப்படியும் ரெண்டு வருசமாகிப் போகும். அதுவரைய்ய சுப்பிரமணி சின்னமனூர்ல ரெண்டு நாளு இங்க ரெண்டு நாளுன்னு வந்து போகட்டும்., அதுக்குள்ள ஒங்களுக்கு புள்ளகுட்டி ஆயிருச்சுன்னா மத்தது தானாவே நடக்கும்., ஒங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்க வேண்டியது யெங்க பொறுப்பும்மா.” ன்னு மூச்சு வாங்காமப் பேசி முடிச்சான். வள்ளிக்கும் சரின்னு பட்டது.

“சரிண்ணே அவருக்குச் சம்மதம்ன்னா., யெனக்குஞ் சம்மதந்தேன் அவரிடம் பேசிப்பாருங்க..” ன்னாள். வீரபாகு இன்னைக்கு மாப்பிள்ளைகிட்ட எக்ஸ்ட்ரா ஒரு குவாட்டர கரெய்க்க்ட்டு பண்ணிடனுன்னு மனசுக்குள்ள குதுகலமாய்க் கிளம்பினான்.

வள்ளியின் அப்பா மொரட்டுராமசாமியை கணேசன் அவனது பாணியில் சரிக்கட்டி வந்துவிட்டான்.எப்படியென சுப்பிரமணியும் வீரபாகுவும் குடைந்து குடைந்து கேட்டும் அதெல்லாம் ரகசியம்ன்னு வழக்கம் போல ரகசியம் காத்துவிட்டான் கணேசன்.

அடுத்த பத்து நாளில் வள்ளிக்கும் சுப்பிரமணிக்கும் வள்ளி வீட்டாளுக முன்னாடி கல்யாணம் நடந்தது.என்னமோப்பா என வந்தவர்கள் வாழ்த்திவிட்டுக் கெளம்பிவிட்டார்கள்.

ரெண்டு நாட்கள் வள்ளியோடு இருந்த சுப்பிரமணி சந்தைக் காண்ட்ராக்ட்டு விசயமா மெட்ராஸ் போறேன் வர்றதுக்கு பத்து பன்னெண்டு நாளாகும்ன்னு அவளிடம் பொய் சொல்லிவிட்டுஅவனோட சொந்த ஊருக்கு வந்து சேந்தான்.

“ யென்ன மாப்ள ரெண்டு மூனு நாளா ஆளப் பாக்க முடியல்ல., வீட்டுல கேட்டேன் ஏதோ காண்ட்ராக்ட்டு யெடுக்கப் போறீகளாம்ள.. கல்யாணம்ன்னு பேச்ச யெடுக்கவும் பொறுப்பு வந்துருச்சு போல..” தலையாட்டிக் கொண்டே சீனிவாசன் கேட்க.,

“ யெப்பவுமே மாமாவுக்கு நக்கல்தேன்..” ன்னு வெட்கப்பட்டுக் கொண்டான் சுப்பிரமணி.

“பெறகு எம்மருமவ வர்ற நேரம் சும்மாவா..” ன்னு பெருமைப்பட்டாள் செவனம்மா.

“ மாமா கல்யாணத்துக்குப் பெறகு வேல அது இதுன்னு நாலஞ்சுனாக் கூட வெளியூர்ல இருக்க வேண்டிதிருக்கும்., தேவானகிட்ட இப்பவே சொல்லி வச்சுருங்க., பெறகு அதுபாட்டுக்கு மூக்கச் சிந்திறப் போகுது..” ன்னு பொறுப்பாய் பேசினான். செவம்பாண்டி அவன் பிள்ளை சுப்பிரமணி இப்படிப் பேசுவதில் சிலாகிச்சுப் போனான்.

”யேம் புள்ள யெப்படி பொறுப்பா பேசுறான்.. நீ யெங்க வேணால்லும் போய்ட்டு வாடா கண்ணு..” ன்னு மோவாயைத் தடவிக் கொண்டான். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வீரபாகு க்கும் ன்னு அவனுக்குள்ளயே சொல்லிக்கிட்டான்.

 

சுப்பிரமணிக்கு இரண்டாவதாகவும் தேவானைக்கு முதலாவதாகவும் என இருவருக்கும் கல்யாணம் முடிஞ்சது.

சின்னமனூரில் காண்ட்ராக்ட் வேலையென காமக்காபட்டிக்கும் கைலாசபுரத்துக்கும் மாறி மாறி குடும்பம் நடத்தினான் சுப்பிரமணி.கணேசனும் கட்டிவிடப்பட்ட அவனோட ஆன்மிகப் பயணக்கதையில் சித்திரா புத்திராவோடு குடும்பம் நடத்தினான்.வீரபாகு இவங்க ரெண்டு பேரையும் மனசுல வச்சுக்கிட்டு அவனும் ரெண்டு கல்யாணம் பண்ற யோசனைக்கு வந்திட்டான்.மொரட்டுராமசாமியும் சீனிவாசனும் மருமகன் சுப்பிரமணியைத் தாங்கினார்கள். செவம்பாண்டியும் செவனம்மாளும் கணேசனுக்கும் இப்படி ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பார்க்க ஆசைப்பட., வள்ளியும் தேவானையும் அவங்களோட மனசுக்குள்ளேயும் வெளிலேயும் எம்புருசனப் போல உண்டுமான்னு பூரித்துப் போயிருந்தார்கள்.

வள்ளிக்கு மாமனார் மாமியார் மச்சினன் சுப்பிரமணியின் ஊரைப் பாத்துவிட ஆசப்பட்டு சுப்பிரமணியிடம் பலதடவை சொன்னாள்.

“ கொஞ்சம் பொறுமையா இரு., எல்லாரையும் சமாதானப்படுத்திட்டு ஜம்முன்னு போயி நிப்போம்.” ன்னு சுப்பிரமணி சமாளிச்சுக்கிட்டேஇருந்தான்.

ஆனாலும் வள்ளிக்கு ஆவல் மேலிடசுப்பிரமணி சின்னமனூர் காண்ட்ராக்ட் வேலைக்கு போற ஒரு நாள்ல அவனுக்குத் தெரியாம சுப்பிரமணியின் கிராமத்துக்கு போவதுன்னும் தூரத்தில் இருந்தாவது மாமனார் மாமியாரைப் பாத்துவிட்டு வருவதென நினைத்துக் கொண்டாள்.

“ சரி வள்ளி தங்கமே மாமா கெளம்புறேன். வெல நெறையக் கெடக்கு, வேகமா முடிச்சுட்டு வரப் பாக்குறேன், ஒருநா முன்னப்பின்ன யானாலும் ந்நா ஒன்நெனப்பாவேதேன் இருப்பேன்..” சொல்லிக்கிட்டே வள்ளியைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து தலையைத் தடவினான்.

அவளும் வெட்கப்பட்டுக் கொண்டே அவனோட அணைப்பில் அவன் நெஞ்சைத் தடவிகிட்டே..

“ மாமா மொழுகாம இருக்கேன்..” ன்னாள். சுப்பிரமணி இதை எதிர்பாக்கவில்லை.என்ன சொல்லுறதுன்னு தெரியாம அவளைத் தூக்கி ரெண்டு சுத்து சுத்தி இறக்கிவிட்டு அவள் நெத்தியில் முத்தம் கொடுத்து கெளம்பினான்.

ஊர் எல்லை வந்ததும் வீரபாகுவை செல்லில் கூப்பிட்டு டாஸ்மாக் பாருக்கு வரச் சொல்லிவிட்டு இவனும் கெளம்பினான்.

”வள்ளிக்கு கொழந்த பொறந்துருச்சுன்னா பிரச்சனதேன்.சமாளிக்க முடியாது., மாமனார் மாமியாளப் பாக்கணும்ன்னு பிடிவாதம் பிடிப்பா முதல்ல அதுக்கு ஒரு முடிவு கட்டணும்” ன்னு சுப்பிரமணி நெனச்சுக்கிட்டான். வீரபாகுவும் அவனும்பாரில் சந்தித்துக் கொண்டு பல கதைகளையும் யோசனைகளையும் பேசி கடைசியாக..

“யெல்லேய் மாப்ள ந்நா செல்ல சுட்ச் ஆப் பண்ணிட்டு வேற நம்பர் வாங்கிர்றேன்., அவ தேடி வரட்டும்., பெறகு சமாதானம் பேசி ஒரே வீட்ல குடும்பம் நடத்திக்கிருவோம்” ன்னு வீரபாகுவிடம் சொல்லிட்டுக் கெளம்பினான் சுப்பிரமணி.

காலமும் நேரமும் ஓட ஓட தன் வீட்டுப்பக்கமே தலவைக்காத தன் புருசனத் தேடிக்கிட்டு ஒருநாள் பொழுது விடியுறதுக்கு முன்னையே வள்ளி அவளோட அப்பாவையும் கூட்டிக்கிட்டு சுப்பிரமணியின் வீட்டுக்கே வந்துவிட்டாள்.

விடியக்காலை ஆறுமணிகெல்லாம் வீட்டை விசாரித்து சுப்பிரமணியின் வீட்டிற்கே வந்துவிட்டாள் வள்ளி.

தென்னஞ்சோகைகளை வைத்து மறைப்புவேலி கட்டியிருந்த அந்த வீட்டு முற்றத்தில் வேப்பமரமும் புங்கை மரமும் இருந்தது. மரமடஞ்ச சேவல்களும் வெடக் கோழிகளும் அங்கொன்னும் இங்கொன்னுமாக கொக்கரித்துக் கொண்டிருக்க தேவான ப்பேய்க் ப்பேய்க் என்ற சத்தத்தோடு தட்டில் இரையெடுத்துக் கொண்டு வெளியவந்தாள். வாசலில் நின்னுக்கிட்டிருந்த வள்ளியை அவ கவனிக்கவில்லை.உள்ளே கணேசன் பூஜை செஞ்சுக்கிட்டிருந்தான்.

வள்ளியின் பார்வைக்கு மொரட்டு ராமசாமி ”யாருப்பா வீட்டுல..: ன்னு குரல் கொடுத்தான்.

”கணேசா வெளில யாருன்னு பாருப்பா..” ங்கிற செவனம்மாளின் வார்த்தைக்கு சன்னல் வழியாப் பாத்த கணேசன் மொரட்டு ராமசாமியையும் வள்ளியையும் பாத்து பதறிப் போனான். நேராப் புறக்கடைக்குப் போனவன் மொகம் கழுவிக்கிட்டிருந்த சுப்பிரமணியிடம்..

“யெலேய் அந்தப்புள்ள வள்ளி அவங்கப்பனக் கூட்டிட்டு வீட்டுக்கே வந்துட்டாடா.. நான் இங்க இருந்தேன் நாம பன்ணினதுக்கு அந்த ஆளு யென்னெ கொன்னே போட்டுருவாம்.. நீ போய் சமாளிச்சுக்க.. யென்ன ஆளவிடு நாங்கெளம்புறேன்..” ன்னு பின்வாச வழியா தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு கெளம்பிவிட்டான் கணேசன்.

“யாரத் தேடி வந்திருக்கீக..”ன்னு தேவான் கேட்க “ சுப்பிரமணீய..” ன்னு மொரட்டு ராமசாமி சொல்ல..

“ அவரு யேன் வீட்டுக்காருதேன்., உள்ள வந்து ஒக்காருங்க கூப்புடுறேன்.,  இந்தாங்க..” ன்னு தேவான குரல் கொடுக்க வள்ளி அதிர்ந்து போனாள்.

”இது எதிர்பாத்தது தான..” ங்கிற வெளில வந்த சுப்பிரமணிக்கு அவெம் பேச வேண்டிய வேல சுழுவா முடிஞ்சிருந்தது.

“ தேவான வந்தவங்களுக்கு காபி எடுத்துட்டு வா..” ன்னு சொல்லிவிட்டு வள்ளியையும் அவ அப்பாவையும் உள்ள வரச் சொன்னான்.

வள்ளி அசையாமல் சுப்பிரமணியை அப்படியே பாத்துகிட்டே இருந்தாள். சுப்பிரமணி..

“ வள்ளி ஏதோ நடந்து போச்சு.. ஒன்னையும் மறக்க முடியல்ல., தேவானையக் கட்டிக்கிறச் சொல்லி வீட்டிலேயும் ஒரே பிரச்சன., பொறுத்துக்க நாம யெல்லாம் ஒன்னாவே இருக்கலாம்.. ஆம்பளைக பிரச்சன யென்னன்னு ஒங்கப்பாவுக்கும் நல்லாவே தெரியும்.. நீங்க சொல்லுங்க மாமா., வள்ளி தேவான ரெண்டு பேரையும் ஒன்னா வச்சுக் காப்பாத்திக்கிறேன்..” ன்னான் மொரட்டுராமசாமியிடம். வள்ளி பதிலேதும் பேசாமல் அவனைப் பாத்துக்கிட்டே இருந்தாள். வள்ளியின் அப்பா மொரட்டுராமசாமி..

“ வாம்மா திரும்புவோம்.., ஊருக்குப் போயி ஆள்பேரோட வந்து யென்னான்னு பேசுவோம்..” ங்க., வள்ளி கேக்காதது போல் சுப்பிரமணியைப் பாத்துக்கிட்டே இருந்தாள். அவளது கண்கள் ஏமாற்றத்தையும் கோவத்தையும் கக்கிக் கொண்டிருந்தது.

சுப்பிரமணி பொம்பள யென்ன செஞ்சிருவான்னு அவள சமாதானப்படுத்தும் போக்கில் விடாமப் பேசிக்கிட்டிருந்தான்.தேவானைக்கும் அதிர்ச்சி.அவளும் நின்னுக்கிட்டிருந்தாள்.

“ இங்கபாரு வள்ளி நாங்கடசியாச் சொல்றது இதேன். ஒத்துக்கிட்டு வா ஒன்னாயிருந்து பொழப்போம்., யெங்கப்பனுக்கும் ரெண்டு பொண்டாடிதேன்., யெங்கண்ணனுக்கும் ரெண்டு பொண்டாடிதேன்., யேன் ஒங்கப்பாவுக்கே ரெண்டு பொண்டாட்டி இருந்து ஒனக்குத் தெரியாம இருக்கலாம்.. மொறப்படி பாத்தா இந்த வீட்டுக்கு நீதேன் மூத்த மருமக ஒனக்கில்லாததா உள்ள வா..” ன்னான்.

“நீ ஒடிச்சா ஒடியிறதுக்கும் வளச்சா வளயிறதுக்கும் பொம்பளைய யென்னா நெனச்ச..” ன்னு கோபமானாள் தேவானை.

“ய்யேய் ஓஞ்சோலியப் பாத்துக்கிட்டு உள்ள போ.. இதுயெம் பிரச்சன தலையிடாத..” ன்னு சுப்பிரம்ணி தேவானையை மிரட்டினான்.

“ ய்யேண்டா ஒம்பவுசுக்கு பொம்பளைக பேசுன்னா பேசனும் மூடுன்னா மூடனும்மா.. வ்வோளி மகனே..” ன்னு அமைதியாப் பாத்துக்கிட்டே இருந்த வள்ளி பக்கத்திலிருந்த மூங்கிக் கட்டையப் பிடுங்கி வெளு வெளுன்னு வெளுத்தாள் சுப்பிரமணியை., அவனால் தடுக்க முடியவில்லை. தலையிலும் உடம்பிலும் மூங்கில் ஈறுகள் கிழித்து ரத்தம் கொட்டின. அவள் விடவில்லை மூங்கில்கட்டையிலிருந்த ஆணியைப் பிடுங்கி அவன் முகத்திலும் நெஞ்சிலும் ஆழமாய்க் கிழித்தாள். சுப்பிரமணியின் சத்தத்தில் ஆளும் பேரும் கூடி விலக்கிவிட்டார்கள் வள்ளியை. வள்ளி மூச்சிறைத்து நிக்க.,

“ மனுசப்பயலா இல்ல மிருகமா இவெம்., இவய்ங்கூட இனி ஒரு பொட்டு நிமிசம் நாஞ்சேந்து பொழைக்க மாட்டேன்..”ன்னு வள்ளி விட்ட இடத்திலிருந்துபக்கத்திலிருந்த மூக்கணாங்கயிறால் தேவானை சுப்பிரமணியின்முதுகுச் சட்டைத் தோலை உரித்தாள்.., செவம்பாண்டி கொதிச்சு..தேவனையை முடியப் பிடிச்சு இழுத்துத் தள்ளிவிட்டான்.

“யென்னங்கடி பொம்பளைக சேந்துக்கிட்டு யெம்புள்ளைய அடிக்கிறீகளா.., யிப்ப அவெம் யென்ன ஊரு ஒலகத்துல இல்லாததப் பண்ணிட்டான்..” ன்னான். அவன் பேசி முடிக்க செவம்பாண்டியை மூஞ்சியில் விளாசினாள் மூக்கணாங்கயிறை தேவானை.மூக்குடைந்து ரத்தம் வழிய அசந்து போனான் செவம்பாண்டி. கூடியிருந்தவர்களும்.,  ”பொம்பளைகளுக்கு இம்புட்டு அடாவடித்தனங் கூடாதப்பா., ஒங்க வீட்டுச் சங்கதிய நீங்களே பேசிக்கங்க..” யெனப் போய்விட., தேவானை வள்ளியின் பக்கமா வந்து நின்னுக்கிட்டாள்.

“யிங்க பாருங்கடி நீங்க வெளங்க மாட்டீங்க., ஆம்பளனா சும்மாவா., யிங்க சாமிக்கே ரெண்டு பொண்டாட்டிதேன்..” ன்னு மொனகின செவம்பாண்டியைப் பொத்திக்கிட்டிருன்னு செவனம்மாள் அவெம் மண்டையில் தட்டினாள்.

தட்டுத் தடுமாறி எந்திருச்ச சுப்பிரமணி..

“.ய்யேய்..கூடயிருந்து பொழக்கிறதுன்னா யிங்க நில்லுங்க., யில்லையின்னாக் கெளம்புங்கடி., யெனக்கு வேறொருத்திக் கெடைக்க மாட்டாளா யென்னா.., பொட்டச்சிக யோக்கியத யென்னன்னு யெங்களுக்குந் தெரியும்டி..” ன்னான் உருவிய வேட்டியை கட்டிக்கிட்டே

”பொம்பளைங்க யெங்களுக்கு யெங்க யோக்கியதையக் யென்னன்னுந் தெரியும்..காப்பாத்திக்கவுந் தெரியும். ஆம்பளச் சாமின்னால்லும் சரி., ஆம்பள மனுசன்னாலும் சரி ஒங்க யோக்கியதையக் காப்பாத்த துப்பில்லாதவய்ங்க தானடா நீங்க..” ன்னு சொல்லிட்டு கெளம்பினாங்க வள்ளி தேவானையும்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “யோக்கியதை”

  1. sakthi Bahadur

    “ஆண்டவனாயிருந்தாலும் ஆம்பளைன்னா ரெண்டு பொன்டாட்டி கட்டனும்” என்கின்ற பொது விதியை மையபடுத்தி எழுதபட்ட அருமையான புனைவு.
    கைலாச புரத்தில் சிவனான்டிக்கும் அவன் மனைவிக்கும் தலைமகன் கணேசன் பிறந்த அந்த கணத்தில் நடந்த ஊடலில் துவங்கு கிறது கதை. தோழர் அய். தமிழ்மனிணியின் குசும்பை பலவருடம் பக்கதில் இருந்து சுவைத்ததை போன்ற அருமையான நடை. வள்ளியும் தேவான் ம் தன் கணவனையும், தன் மகன் தன்னைபோலவே என்று பெருமை பேசும் சிவனான்டியையும் பிய்த்தெடுக்கும் கிளைமாக்ஸ் சூப்பெர்.கலக்கிட்டீங்க தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: