யாவர் வீட்டிலும்

0
(0)

காலையில் கண் முழித்ததும் அவள் கேட்டது நாதசுர சத்தம். முதலில் மனசில் ஒரு உற்சாகம் வந்தது. இவ்வளவு காலையில்… இந்தச் சத்தம்… புரிந்து போயிற்று. கல்யாணம்… பிள்ளைமார் சத்திரத்தில் யாரோ தன் கனவுகளை பூக்க வைக்கப்போகிற வைபவம். முகம் தெரியாத அந்தப் பெண்ணின் மேல் பொறாமை வந்தது. இன்று கடைசி வெள்ளி. சீக்கிரமே குளித்து அடுப்படி யெல்லாம் கழுவி விட்டு துர்க்கை ஸ்தோத்திரம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். யாரோ துர்க்கை ஸ்தோத்திரம் கல்யாணம் நிச்சயிக்கும் என்று சொல்லியிருந்தார்களாம். அவர்களை இப்போது அவசியம் பார்த்து குசலம் விசாரிக்க வேண்டும். ஒண்ணா, ரெண்டா, பனிரெண்டு வருஷம் வந்து போன வெள்ளியெல்லாம் படித்து தலை கீழாய் மனதில் இறுகப் பதிந்து போனது. எழுந்திரிக்க வேண்டும் என்று நினைப்பே சோம்பல் படுத்தியது. இப்படியே கண்ணை மூடிக்கொண்டு கிடக்கலாம் போல் தோன்றிக் கொண்டேயிருந்தது.

அந்த இருட்டுக்குள்ளும் அம்மா பளிச்சென இருந்தாள். என்ன தான் ஆனாலும் அம்மா அம்மா தான். இவள் அம்மாவை விட நிறம் ஒரு படி கம்மி. தாட்டியம் குறைவு. அம்மாவைப் போல பல் வரிசை கிடையாது. இதனாலேயே பல நேரங்களில் அம்மாவுடன் எரிச்சல் பட்டிருக்கிறாள். அம்மாகளையே தனி தான். திடீரென்று எல்லா இயக்கமும் நின்று போனது போல நிசப்தம். மறுபடியும் மெல்ல பாட்டுச் சத்தம் நினைவுகளின் பின்புலமாக கிளம்பியது. ஏதோ முருகன் பாட்டு. முருகன் பாட்டைக் கேட்கிற போதெல்லாம் அவள் பார்த்த கடைசி சினிமா நினைவிற்கு வரும். அப்பம், பாளையங்கோட்டையிலிருந்து ரமாவும், கிருஷ்ணாவும் வந்திருந்தார்கள். அவர்கள் வந்து எத்தனை வருஷம் இருக்கும்… ம்ம்… எட்டு வருஷம்  யப்பா எட்டு வருஷமாக வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை. இல்லையில்லை. இடையில் தாத்தா செத்ததுக்கு களக்காடு போய் விட்டு வந்தது. அப்புறம் ஒரு தடவை மதுரைக்கு ஏதோ ஒரு சடங்கு வீட்டுக்குப் போனது. அதுக்கப்புறம் வெளியே போனதில்லை. யாரையும் பார்த்ததில்லை. இப்படியும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து தானிருக்கிறோம் என்று பெருமிதத்துடன் நினைத்துக் கொண்டு எழுந்தாள்.

கொஞ்ச நாளாகவே ஒரு சலிப்பு, மனசை விரட்டிக் கொண்டிருந்தது. எது செய்தாலும்; பேசினாலும் ஒன்றுமில்லாதது போல ஒரு உணர்வு. சுற்றிச் சுற்றிபட்டாசல், அடுக்களைக்குள் மட்டும் வளைய வளைய வருவதால் கூட இருக்கலாம். வெளியே போக வேண்டும். காற்றைச் சுவாசிக்க வேண்டும். இப்போது மெயின் ரோடு எப்படி இருக்கும். தியேட்டர்கள் மாறி இருக்குமா. பழைய நினைவுகளின் மேலேறி எல்லா இடங்களிலும் புகுந்து புகுந்து வந்தாள். பனிரெண்டு வருஷமாய் பார்த்துக் கொண்டிருக்கிற இந்த ஓட்டு முகடு. அதில் குடும்பம் நடத்தும் பல்லிகள், எப்போதும் சோகம் வழியும் வீட்டு முகங்கள், வாய் ஓரம் நெளிந்து எத்தனை தரம் தேய்த்தாலும் கரி போகாத காப்பிச்சட்டி, இட்லி எடுக்கும் போதெல்லாம் ஆவியடிக்கிற இட்லித் தட்டு, கோடுகள் வரைந்து கிடக்கும் சிப்பிலித் தட்டு, காம்பு முனை குறைப்பட்ட சட்ட கப்பை, அழகான அவளுக்குப் பிரியமான முட்டைத் தட்டு, அரைக்கும் போதெல்லாம் கேட்கத் தூண்டுகிற சத்தம் வரும் ஆட்டுரல், புகை வெளியே போக முடியாத அடுக்களை, இவைகளுக்கிடையே இந்த வாழ்க்கை முடிந்து விடுமோவென்று அடிக்கடி பயந்தாள்.

பட்டாசல் கதவை இழுத்துச் சாத்திவிட்டு அங்கணக்குழிக்குள் வந்து குளிக்க ஆரம்பித்தாள். தலையில் தண்ணீர் விட்டவுடன் மூச்சிழுத்தாற் போல நடுக்கிற்று தண்ணீரின் சத்தம். உடம்பின் சூடு, அந்த இருட்டு மனசை லேசாக்கியது.

மெல்ல ஆரம்பித்திருந்தது பகல். நெற்றியில் திருநீறு பூசி குத்து விளக்கில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றிவிட்டு உட்கார்ந்தாள். கண்களை மூடினவுடன்,

“திருவுருவானவள் துர்க்கா

திரிசூலிமாயவள்

திருநீற்றில்என்னிடம்

திகழும்துர்க்கையே

தேவிதுர்க்கையே

ஜெயதேவிதுர்க்கையே”

தானாகவே பொங்கி வந்தது. ஒரு தடவை படித்து முடித்ததும் மனம் அலைய ஆரம்பித்தது. திரும்பின போது தம்பி ராகவன் இன்னும் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

வீட்டுக்குள் நுழைபவரை வரவேற்றுச் சிரித்துக் கொண்டிருந்தார் அப்பா போட்டோவில். அப்போது இருபத்தைந்து வயதிருக்கலாம். நேற்றைக்குச் சாயந்திரம் ஊருக்குப் போயிருக்கிறார். திருநெல்வேலி போய் யாரோ சொன்ன ஜாதகம் பார்த்துக் கொடுத்துவிட்டு அப்படியே சேர்மாதேவி போய் ஜானகியத்தை கிட்டே ரூபாய் வாங்கணும் என்று முடிவெடுத்திருந்தார். இப்படியே நினைவுகள் அலைக் கழிக்க ஒரு வழியாக நமஸ்கரித்துவிட்டு எழுந்தாள். நேற்றைக்கு இராத்திரி செல்வி வந்து ஜெகதா வந்திருக்கிறாளென்று சொல்லியிருந்தாள். செல்விக்கு இவளை விட நான்கு வயது குறைவு, இரண்டு பிள்ளைகள் கையில் வைத்திருந்தாள். ஜெகதாவுக்கு போன ஐப்பசியில் தான் கல்யாணம். இவளுடைய கிளாஸ்மேட். காப்பியைக் கொதிக்க வைத்து விட்டு துவைப்பதற்கான துணிகளை எடுத்து வைக்க பட்டாசலுக்கு வந்தாள். ம்ஹும்… தினமும் இதே தான். காலையில் எழுந்ததிலிருந்து அடைகிறவரை, ஒரு மாற்றமும் இல்லாமல், நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தாற் போல்,

“சார்… சார்…” வாசலிலிருந்து உள்ளே சத்தம் நுழைந்து கொண்டிருந்தது. இவள் பட்டாசல் மறைவில் நின்றபடி,

“அப்பா இல்ல… ஊருக்கு போயிருக்காங்க…”

“எப்ப வருவாங்கன்னு தெரியுமா…”

“தெரியல…”

“சரி நான் போய்ட்டு சாயந்திரம் வர்றேன்…”

தலையை மட்டும் ஆட்டினாள். இவர் அடிக்கடி அப்பாவை வந்து பார்த்துப் போவார். இவர் கூட நல்ல களை தான். ஆனால், ஆள் தான் கொஞ்சம் கறுப்பு. ச்செய்… இன்னிக்கு என்னாச்சு… கண்டமானிக்கு நெனப்பு ஓடுது… மறுபடியும் அடுக்களைக்குள் போய் தீயைத் தள்ளிவிட்டு, துணிகளை வாளியில் நனைத்தாள். அம்மா தண்ணிக்குப் போயிருந்தாள். அம்மா வீட்டு வேலை எதுவும் செய்யமாட்டாள். ஆனால், தண்ணீர் மட்டும் எதிலும் துளிக் கூட குறையாமல் பார்த்துக் கொள்வாள். அப்பாவுக்கு அடிக்கடி கோப மூட்டுவாள்.

“அங்கேயிங்கேன்னு அலைஞ்சி பெறக்கிப் பாக்கணும். எங்கனயும் அலையாம இப்படியே வீட்ல ஒக்காந்திருந்தா தேடிக்கிட்டு வருவாக… நெனச்சிட்டு இருங்க…”

அப்பா அதற்குப் பிறகு அலைவார். சோர்வார். பாவம் அப்பா என்னமாய் ஆகிவிட்டார். உள்ளே திரும்பிப் பார்த்தாள். ராகவனும் எழுந்து வெளியே போய் விட்டிருந்தான். அவள் மட்டும் தான் இருந்தாள். அப்போது தான் அது நடந்தது.

“யம்மா… தாயே… இரக்கப்பட்ட தாய்மாரே… ஏழை கலியாணமுங்க… ஏதாவது ஒதவி செய்யுங்க… ஒங்க மகளாட்டம்… ஒடம் பிறப்பாட்டம் நெனச்சி கருணை காட்டுங்க… மகாலட்சுமி நீங்க நல்லாருப்பீக…”

வாசலில் ஒரு பெண் திருமணப் பொலிவு, வயது எல்லாமும் தாண்டியவள் தட்டைக் கையிலேந்தியடி அவளுக்குப் பின்னால் ஒரு வயதானவள் – அவள் தான் குரல் கொடுத்திருக்க வேண்டும் – நின்று கொண்டிருந்தாள். இருவருமே எல்லாமும் கடந்து ஏதோவொரு விரக்தியான நிலையில் இருந்தார்களெனப்பட்டது. கணத்தில் இவளுக்கு வேண்டாத கற்பனை மனசில் உருவாகி விட்டது. அப்பா கூட இப்படித் தான் ஊர் ஊராக அலைவதாகவும், அப்பாவும் அவளும் ஒரு காலத்தில் இப்படி வீடு வீடாக ஏறி இறங்கிப் போகிற தாயும் நினைத்த மாத்திரத்தில் துக்கம் பெருகி கண்ணீர் முட்டியது. அலமாரியிலிருந்து ஒரு ரூபாயை எடுத்துத் தட்டில் போட்டாள். அவர்களும் முதலில் இவள் கண்ணீரைக் கண்டு திகைத்தாலும் பின்பு சாதாரணமாக அடுத்த வீட்டுக்கு அதே குரலுடன் போய் விட்டனர். ஆனால், இவளால் அப்புறம் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. முகம் விகாரமாகி நினைத்து நினைத்து கண்ணீர் பெருகியது. எங்கோ மேளச் சத்தம் கேட்டது. திடீரென துர்க்கைப் பாட்டு நினைவில் வந்தது. யம்மா… யம்மா… என்று வாய் விட்டு அரற்றினாள். அம்மா வந்தாள். ராகவன் வந்தான். யாருடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாதபடி அழுதாள். கொஞ்சம் நேரத்தில் அம்மா எதை உணர்ந்தாளோ, அவளும் அழ ஆரம்பித்தாள். ராகவன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top