யானைப்பசி

0
(0)

பெரிய ட்ரம்-ன் தூரில் மட்டும் கொஞ்சம் கிடந்தது. உடம்பை வளைத்து தலையை உள்ளே விட்டு அரைக்கப்பு மோர்ந்து ஊற்றுவதற்குள் போதுமென்றாகிவிட்டது.

பாத்ரூமை விட்டு சமயலறைக்கு வந்தபோது.. குடிப்பதற்கு பிடித்த எட்டுகுடத்தில், முக்கால் குடம் மட்டுமே எஞ்சியிருந்தது. விளக்கி கழுவுவதற்கு காத்திருந்த பாத்திரங்கள், சிங்தொட்டியை மூடிய வண்ணம் அம்பாரமாய் குவிந்திருந்தன.

இரண்டே நாட்களில் மீண்டும் கொடிகளில் தொங்கிய அழுக்குத்துணிகளும், பாப்பா ஒன்னுக்கு இருந்து ஒதுக்கிய போர்வையும் தங்கள் பங்குக்கு வாசணை கிளப்பின;

‘கரண்ட் இருக்கிறது. தண்ணி போட்டு பார்த்தாலும் தேவலை.’ மோட்டாரில் சுருண்டு கிடந்த ஓஸ்-ஐ வால் போல் உருவிச்சென்று வாசல்முன் தரையோடு முளைத்து வளைந்திருந்த நல்ல தண்ணி குழாயில் கோர்த்து வந்து சுவிட்சை அழுத்தினேன்.

பத்து நிமிடத்திற்கும் மேலான ஓட்டத்தில் வெறும் காற்றுதான் வந்தது. மீண்டும் ஓஸ்-ஐ எடுத்து சுற்றும் போது அக்கம் பக்கத்தினரின் பார்வையில் கூச்சம் அரும்பியது. நாளுக்கு நான்கு வேளையாக இப்படி முயற்சித்தும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இங்கே குடிவந்த புதிதில் வாரம் இருமுறையேனும் நல்ல தண்ணீர் விழும். வராத நாட்களில், அதிகாலையில் எழுந்து மோட்டார் போட்டோமானால், அரை அல்லது ஒரு ட்ரம்மாவது எஞ்சியிருக்கும் தண்ணீர் மேலே வரும். அதுவும் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் வீட்டு உரிமையாளருக்கென்றே போடப்பட்ட கம்ப்ரஸர் மூலமாக கொஞ்சம் உப்புத்தண்ணீராவது கொடுப்பார்கள்;

சமீப நாட்களாக அதற்கும் சாத்தியமில்லை. கம்ப்ரஸர் குறைபாடோ. ஃபோர் வற்றிவிட்டதோ; என்னமோ.! நெடுநேர ஓட்டத்தில் பத்து குடம் நிரம்புவதே அபூர்வம். மீண்டும் கார்ப்பரேசன் குழாயைத்தான் நாடவேண்டியிருக்கிறது.

சூப்பர்ஸ்டார் சொல்லுவது போல ‘எப்ப வரும், எப்படி வரும், எவ்வளவு நேரம் வரும் என சொல்ல முடியாது. நடுஇரவோ, நண்பகலோ, காலையோ, மாலையோ கிழமை பேதமின்றி எப்போ வேண்டுமானாலும் வரலாம், நின்றும் போகலாம்.

மூன்று வீடுகளுக்கு ஒரு குழாய். முந்திக்கொள்பவர்களுக்கு முழுவதுமாய் கிடைத்துவிடும். பிந்துபவர்களுக்கு அரைகுரைதான். கரிக்கடையில் வெட்டப்பட்டு சிதரும் துண்டுகளுக்காக காத்திருக்கும் பிராணிகளைப்போல தண்ணீருக்காக வாசலிலேயே காத்திருக்கத்தோனும்.

நினைத்துப் பார்க்கையில் என் சிறு வயதுக்காலம் தான் தண்ணீர் பஞ்சம் இல்லாத காலம். அந்நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையிலும் தண்ணீர் வரும். வீட்டுக்காரர்கள் பிடித்தது போக, குடம் ஒன்றுக்கு 5 பைசா வீதம் ஊர்ச்சனங்களே நணைந்து விடுவார்கள்

பின்பு ஒரு நாளைக்கு ஒரு முறை, காலையோ மாலையோ.. அடுத்ததாக ஒருநாள் விட்டு ஒருநாள்.. அதையும் தாண்டி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை.. வாரம் ஒரு முறை.. பத்து நாளுக்கு ஒருநாள்.. என காலச்சக்கரத்தில் நடைமுறைகளும் பலவாராக மாறி தந்போது மாதம் இருமுறையாகிவிட்டது. அதுவும் இன்றா நாளையா என தெரியாமல் போய் விட்டது.

இம்முறை தண்ணீர் வந்து இருபது நாட்களை நெருங்கப்போகிறது. ட்ரம், குடம், பாணைகளெல்லாம் இம்மி இம்மியாய் காலியாகி காய்ந்து கருவாடாகி விடும் நிலையில், எங்களுக்கு தண்ணிபட்ட பாடாய் இருக்கிறது.

குளிப்பதற்கு நான் என் அம்மா வீட்டிற்கும், அவள்.. அவள் அம்மா வீட்டிற்கும் செல்லுவது வாடிக்கை. இங்கே கை, கால்களை நனைப்பதற்கும், குழந்தைகள் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போனால் கழுவுவற்கும், பாத்ரூம் சென்றால் ஊற்றுவதற்குமாவது தண்ணீர் வேண்டாமா..! அதற்கும்கூட பங்கம் வந்து விட்டது. தினந்தோறும் ஓஸ்-ஐ  எடுத்து செருகி மோட்டாரை போட வேண்டியதுதான்.. ஏமார வேண்டியதுதான். வடக்கு தெருவுல தண்ணி வந்துருச்சு.. மேற்க வந்துருச்சு.. அடுத்து நம்ம ஏரியாவுலதே வரும்..! என நிணைப்பிலேயே பிழைப்பை கடத்துவதாகி விட்டது.

கடந்த ஆண்டு நாற்பது நாட்களுக்கும் மேலாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகையில் மக்கள் நாலாத்திசைகளிலும் அலைந்தனர். மேற்கே மலையடிவாரத்தில் படர்ந்திருக்கும் தோப்பு, வயல்வெளிகளில் போய் துவைத்தும் குளித்தும், தள்ளுவண்டி, சைக்கிள்களில் குடங்களை நிரப்பி கட்டி வருவதும், அவ்வப்போது சில தெருக்களுக்கு கவுன்சிலர்களின் உதவியோடு தம்மா துண்டு டேங்க் பொருத்திய டிராக்டர் மூலமாய் நூற்றுக்கணக்கான குடங்களுக்கு அரைகுரையாய் விநியோகிப்பதும்.. அடித்து அடித்து அடிகுழாய்கள் பழுதாவதும், பொருமையிழந்த மக்கள் குடங்களின் உதவியோடு சாலை மறியல் செய்வதும்.. ஆட்சியை பிடிக்காத கட்சிகளின் உள்ளுர் தொண்டர்கள் கொடிகள் குடைசூழ கார்ப்பரேசன் காம்பவுண்டு சுவரை முற்றுகையிட்டு தர்ணா செய்வதுமாய் ஊரே களேபரமாய்தானிருந்தது. வெளியூர்களிலும் அவ்வப்போது இதே நிலைமை நீடிப்பதை கண்ணாரக்கண்டும், ஊடகங்கள் மூலமாக தெரிந்துகொள்ளவும் முடிந்தது.

அன்று போலவே இன்றும் கட்டிடங்கள், டீக்கடைகள், திரையரங்கம், பேருந்து நிலையம், ஜனசந்தடி நிரம்பும் இடங்களிளெல்லாம் அதன் சம்பாசனைகள் பேரிரைச்சலாகவே இருக்கிறது.

“மாமா நாட்டுல மழை இல்லை .. ஆத்துல தண்ணி இல்லை.. பெரகெங்குட்டு முன்சிபாலிட்டி காரன் நமக்கு தண்ணி தெரந்து விடப்போரான்..”

“ஆமா மாப்ள..! அந்தப்பக்கம் கர்நாடகாகாரன் அணைய ஃபுல்லா நெரப்பி வச்சிக்கிட்டு தெரந்து விட அடம் பிடிக்கிரான், இந்தப்பக்கம் கேரளாகாரன் நல்லாயிருக்க அணைய உடைச்சே ஆவேன்னு ஒத்தகால்ல நிக்குறான்.. அதுபோக.. ஒரு நாளைக்கு15 மணிநேரத்துக்கும் மேல கரண்ட் இல்லைன்னா தோட்டந்தொரவுல இருக்குற மோட்டாரு எப்பிடி ஓடும்..! முனிசிபாலிட்டிகாரனும் ஆத்துல இருந்து எப்பிடி தண்ணிய ஏத்துவான்.. குழாயில தெரந்து விடுவான்..? எல்லாத்தயும் யோசிக்கனுமில்ல..”

“நேத்து ஒந்தங்கச்சிகூட பால்ல நிறைய தண்ணியா இருக்குன்னு சத்தம் போட்டுட்டு இருந்தா… நான் சொன்னேன்… ஏன்டி அவெ, அவெ தண்ணி கெடைக்காம சீரழிஞ்சிட்டு இருக்காங்கே, உனக்கு அவரு பால்ல தண்ணி ஊத்திருக்காருன்னா சந்தோசப்படனும்.. இன்னைக்கி நிலமைக்கி பால் விலையவிட தண்ணிதா அதிக விலைக்கு போகும்னு சொன்னேன்”

வழக்கமான நாட்களை விட தற்போது மினரல் வாட்டர் விநியோகிப்பவர்களுக்குத்தான் ஏககிராக்கி.. தண்ணீர் பஞ்சம் பாமரனைக்கூட பணக்காரன் ஆக்கிவிடுகிறது. காசு போனாலும் பரவாயில்லையென்று சைக்கிள் கேரியரில் கட்டி மினரல் வாட்டர் கேன்-ஐ  எடுத்து வந்துவிடுகிறான். தற்போது அதற்கும் தட்டுப்பாடு!

மாட மாளிகைகள் கட்டி, ஆழ்துளை குழாய்கள் போட்டிருப்பவர்கள் சிரமத்தை உணருகிறார்களோ இல்லையோ.. வாடகை வீட்டிலும், கார்ப்பரேசன் குழாயை நம்பியிருக்கும் சொந்த வீட்டுக்காரர்களுக்கும் இது தீராத தலைவலியாகவே இருக்கிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே என் வீட்டிலும் இதே நிலைதான். தண்ணீர் வந்து எல்லா குடமும, பாணையும், அண்டா, ட்ரம்களையும் நிரப்பி பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும். மறுமுறை  தண்ணீர் வரும்வரையில் எல்லாம் தொட்டக்க துடைச்சுக்க என்றாகிவிடும்.

சேகரிக்கப்பட்ட தண்ணீர் மூன்று நாட்களுக்கு முன்புவரை ஓரளவு பத்திரமாகத்தானிருந்தது. 15 நாட்களாகப்போகிறது.. ஓரிருநாட்களில் தண்ணீர் வந்துவிடுமென்றெண்ணி சேர்ந்த அழுக்குத் துணிகளையெல்லாம் துவைத்து விட்டதுதான் அவள் செய்த பெருங்குற்றம்!

பாத்ரூம் போவதற்கு.. கை, கால்களை கழுவுவதற்கு நீரை தேடும்போதுதான் மீண்டும் மீண்டும் எரிச்சலாக வரும். “ஏம்ப்பா தண்ணி வர்ரத பாத்துட்டு துவைக்க கூடாதா.. இப்பிடி இருக்குற தண்ணியயெல்லாம் காலிபண்னிட்டு வெரும் ட்ரம்மா போட்ருக்கியே.. உனக்கு தெரிய வேண்டாமா.”

“ஐயோ இதையே எத்தன தடவ சொல்வீங்க.. அழுக்கு துணிகள பூராம் மூட்டைகட்டியா வைக்க முடியும்.. மொத்தம் சேந்தாலும் செரமமா இருக்கு.. சரி தண்ணி வர்ற நேரம் பிடிக்க வசதியா இருக்கட்டுமேன்னுதான் காலி பண்ணுனேன். இப்பிடி ஆகும்னு கனவா கன்டேன்..” அவளும் எரிந்து விழுவாள்.

இப்போதுள்ள சூழ்நிலையில் குடிப்பதற்காவது நான்கு குடம் இருந்தால் போதும். மாமனார் வீட்டினருகில் உப்புத்தண்ணி குழாய் இருக்கிறது.. சமயம்பார்த்து அடித்து நிரப்பி விடுவார்கள். புழங்குவதற்கு சரியாகிவிடும்.. குடிதண்ணீர் அங்கும் கிடைக்காது. அம்மா வீட்டிலும் அதே மாதிரிதான். ஆழ்துளை குழாய் இருக்கிறது.. அதன் மூலம் மாடியிலிருக்கும் தொட்டியை நிரப்பிவிடும். குடிநீருக்கு கார்ப்பரேசன் குழாயைதான் நம்பியிருக்கிறது. மினரல் வாட்டர் ஆபீசை- அனுகியபோது, வழக்கமான கஸ்டமர்களுக்கத்தான் முன்னரிமை  கொடுக்கப்படுகிறது. “ரெண்டுநாள் ஆகும்ணே.. மூனுநாள் ஆகும்ணே..” என்று சொல்லுகிறார்கள். யோசிக்கும் நேரமெல்லாம் திருப்திக்காக மோட்டார் போட்டு விரக்தியடைய வேண்டியிருக்கிறது.

“ஏங்க.. யாருகிட்டயாவது ரெண்டு குடம் தண்ணி கேக்கலாமா.. குக்கர்ல அடுத்து அரிசி; வைக்கிறதுக்கு கூட தண்ணி இல்ல..”

“யாருகிட்ட கேக்குறது.. அவெ, அவெ தண்ணியில்லாம தட்டழிஞ்சுக்கிட்டு இருக்காங்கே.. நம்ம கேட்டவுடனேதே தரப்போராங்க.. ப்ச்..”

“ஏங்க.. நீங்ககூட எங்கயோ யானைக்குழாய் இருக்கு.. அங்க எப்பவும் தண்ணி வந்துட்டே இருக்கும்னு சொன்னீங்களே.. அங்ககூட போயி பிடிச்சிட்டு வரலாம்ல..”

“ஆமா! யானைக்குழாய்.. மறந்தே போச்சுல்ல”

அல்லிநகரத்திலிருந்து தேனி நோக்கி பிரதான சாலை வழியாக சென்றால் இடையில் பழைய லட்சுமி தியேட்டர் வளாகம் வரும். அதன் பக்க வாட்டில் பிரியும் மற்றொறு சாலை வழியாக மேல்நோக்கி ஏறினால் இரு புறமும் பணக்கார பங்களாக்கள், அதையும் தான்டி இறங்கி பாரஸ்ட்ரோட்டையும் கடந்து போய்க்கொண்டே இருந்தால் புறவழிச்சாலையை தொட்டுவிடலாம். அங்கே ஓரிடத்தில் வால்கரட்டின் அடிவாரத்தில் யானைக்குழாய் அமைந்திருக்கிறது.

முக்கால் அடி அகலத்தில் வாய்பிளந்து குடைக்கம்பி கவிழ்ந்து நிற்பதைப்போல் பூமியிலிருந்து முளைத்து கருப்பு நிறத்தில் நின்றிருக்கும். மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டு வௌவேரு ஊர்களுக்கு விநியோகிப்பதற்காக போடப்பட்ட குழாயில் இடையில் இணைக்கப்பட்ட ஒரு முனையாக இருக்கலாம்.

கீழே குழாயில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் அடைப்பைத்தாண்டி மேல்நோக்கி எழும்பி நூல்போல் கசிந்துகொண்டேயிருக்கும். அவ்வழியாக செல்லும்பொதெல்லாம் பார்ப்பேன். வெட்டார வெளியாகவுமிருப்பதால் பலர் வாகனங்களை நிருத்தி கழுவுவார்தள். மாடுகளை குளிப்பாட்டுவார்கள். தள்ளவண்டி, சைக்கிள்கனில் வீட்டு உபயோகத்திற்காக பிடித்தும் செல்வார்கள். சுற்று வட்டாரத்தை அடையாளம் காட்ட யானைக்குழாயை முன்னிட்டுத்தான் சொல்லுவார்கள்.

“ஊரு பூராம் காய்ஞ்சு போயிருந்தாலும், இந்த யானைக்குழாயில மட்டும் எப்பவும் தண்ணி ஒழுகிக்கிட்டே இருக்கும்..” பாரஸ்ட் ரோட்டிலே குடியிருக்கும் நண்பன் ஒருநாள் சொன்னான்.

தற்காலிகத் தீர்வாக யானைக்குழாயை நாடுவதுதான் சிறந்த தீர்வாக தோன்றியது.

சின்டெக்ஸ் அல்லது சிமென்ட்டினால் மாடியில் தொட்டி கட்டப்பட்டு குழாயில் திறந்தவுடன் நீர் வரும்படி சவுகரியமான வீட்டிற்கு குடிபெயரத்தான் நினைத்து, அவசரத்தில் இந்த வீட்டிற்கு வந்தாயிற்று. இங்கே ட்ரம், குடம்-பானையில் பிடித்துவைத்து புழங்கவேண்டியிருக்கிறது. இப்போது நினைத்து என்ன பயன்..!

தெருமுனையிலிருக்கும் உப்பு தண்ணி அடிகுழாயில் கூட்டத்தினூடே புகுந்து தண்ணீர் அடிப்பதோ, வேரு இடங்களுக்குச்சென்று; பிடித்து வருவதோ.. இன்றுவரை இல்லை. சங்கடமாக இருக்கிறது. அவளைச் சுமக்க வைப்பதற்கும் மனமில்லை! இந்த மனப்போராட்டமெல்லாம் யானைக்குழாயில் நான்கு குடம் தண்ணீர் பிடிக்க முடிவு எடுத்த பிறகுதான்.

மணி இரவு 9. துரிதமாகவே தூங்க ஆரம்பித்துவிட்டு அதிகாலையில் 5 மணிக்கு இருட்டோடே எழுந்து சைக்கிளில் கிளம்பவேண்டியதுதான். பொழுது விடிந்து ஜனநடமாட்டம் தென்படுவதற்குள் வந்துவிடலாம். அப்படி வந்தால்தான் மகனை பள்ளிக்கூடம் அனுப்ப தயார் செய்ய முடியும், அவளும் நானும் வேலைக்குச்செல்ல ஏதுவாயிருக்கும்.

அடிக்கடி மாயமாகி வித்தை காட்டும் மின்சாரமும், கொசுக்களின் ஜாலங்களும், யானைக்குழாய் தரப்போகும் தண்ணீர் நினைப்புமாய் கசகசப்பாகவே கடந்தது இரவு.. நன்றாக தூக்கம் வரும் நேரம், கடிகாரம் அலாரமடித்து எழுப்பிவிட்டது.. மணி 5.

இரு கைதிகளை ஒன்றாய் இணைத்த விலங்கு போல இரண்டிரண்டு குடங்களை வௌவேரு கயிருகள் மூலம் இணைத்து சைக்கிளின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் தொங்கவிட்டேன். யுத்தத்திற்கு தயாராகி செல்லும் ஒற்றை ராணுவவீரன் போல நம்பிக்கையோடு கிளம்பினேன்.

“பாத்து போயிட்டு சீக்கிரமா வாங்க”

சுதந்திரமாய் உலாவிக்கொண்டிருந்தது குளிர்பனி. வேலை நேரம் முடிந்து மெல்ல மங்கிக்கொண்டிருந்தது காலை இருள். மங்கிய ஒளியில் சாலையோர மின்கம்பங்கள் மங்சல் நிற வெளிச்சம் பாவியிருந்தன. பால் வண்டிகளும், வாகனங்களும் சாலைகளில் ஓடி மறைய, நடைபயிற்சி எடுப்போர் விங்கு விங்கு என நடந்து கொண்டிருந்தனர்.

வீட்டிலிருந்து புறப்பட்டு லட்சும் தியேட்டர் வளாகம் நெருங்கியபோது இருள் கொஞ்சம் குறைய முழுவதுமாய் களைந்திருந்தது. இனி என்.ஆர்.டி-நகரில் குன்றுபோலிருக்கும் பாதையில் ஏறி இறங்க வேண்டும். ‘குழாயில நல்ல தண்ணி வராட்டியும் பரவாயில்ல.. பேசாம டெய்லி இந்த மாதிரி நாலுகுடம் தண்ணிய யானைக்குழாயில வந்து எடுத்துட்டுப்போயிரலாம்..’ இலக்கை நெருங்க நெருங்க யானைக்குழாய் ரொம்பவே அந்யோன்யமாய் தோன்றியது.

அப்பகுதியில் மாட மாளிகைகளும், கார்களும் அணிவகுத்து, காவலர்களின் துணையும், கொழுத்த உயர்ரக சாதி நாய்களின் அளவான குரைச்சலுமாய் இருந்தது. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஏரியா. இவங்களுக்கெல்லாம் யானைக்குழாய் தேவைப்படாதுபோல..’ ஒரு சைக்கிளைக்கூட காண முடியவில்லை.

பாரஸ்ட்ரோடு வந்தாயிற்று. இனி புறவழிச்சாலை நோக்கி போக வேண்டும். பொழுது நன்றாய் விடிந்திருந்தது. இறக்கமான பாதையில் சைக்கிள் ரொம்பவே தடதடவெனப் பறந்தது. குடங்கள் குதூகலத்தில் தவ்வின. இன்னும் கொஞ்ச தூரம்தான், தண்ணீரை பிடித்துவிட்டு கிளம்பிவிடலாம். ‘ஏற்ற இறக்கமான பாதையாக இருப்பதால் திரும்பி செல்லும்போது பிரதான சாலையை தொடும் வரையில் ஆங்காங்கே இறங்கி உருட்டிக்கொண்டுதான் போகனும் போல..  நேரம் இருக்குல்ல.. இப்ப மணி 6 ஆகுது. அப்பிடியே புடிச்சிட்டு போனாலும் 8-க்குள்ளயாவது வீட்டுக்கு போயிரமாட்டமா.. போயிரலாம்.’

இலக்கை நெருங்கியபோது தலைச்சுமையாகவும், தள்ளுவண்டி, சைக்கிள்களிலும் தண்ணீர் நிரப்பியபடி ஆண்களும் பெண்களும் நாலாத்திசைகளிலும் போய்க்கொண்டிருந்தனர்.

‘என்னடா இது.. நம்மதே வெள்ளன வந்துருக்கோம்னு பார்த்தா, ஏற்கனவே ஆளுக வந்துருக்காங்க போலவே! ஒரு வேளை கூட்டமாகிண்டு இருக்குமோ என்னமோ..’ பதை பதைப்பு தட்டுப்பட்டது.

வேகமாய் இறங்கிய சைக்கிள் பாதையிலிருந்து விலகி வால்கரட்டின் அடியில் யானைக்குழாய் இருக்கும் திசை நோக்கி சட்டெனத் திரும்பியவுடன் அதிர்ச்சியில் கச்சென பிரேக் போட்டு நின்றேன்.

மிகப்பெரிய தேன்கூடு போல குழுமியிருந்தன மனித தலைகள். காரசார வாக்கு வாதங்களும், குடங்களின் உரசல்களும், நசநசப்பும் ஆக்ரோசமுமாய் இருந்தது. சுற்று வட்டாரம் எங்குமிருந்து படையெடுத்து வந்திருக்கிறார்கள் போல. கிராமத்து வாசிகளும், நகர வாசிகளும் கலந்திருந்த தோற்றத்தை பார்க்கையில் குற்றால சீசனில் குளிப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாயிருந்தது.

‘இவ்வளவு பேர்களுக்கும் பின்னால் நின்று தண்ணீர் பிடித்துச்செல்லவா..ப்ச்’

வேடிக்கை பார்த்த நிமிடத்தில், அந்த ஏரியா கவுன்சிலரின் உதவியோடு வந்த காவலர் ஒருவர் லத்தியின் உதவியோடு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார். பல மீட்டர் தொலைவில் நானும் வரிசையில் நின்றேன். யானைப்பசிக்கு சோளப்பொறி போல அந்த மிகப்பெரிய குழாய் முழுவதுமாய் வாய் பிளந்திருந்த போதிலும் ஒரு ஓரமாக மட்டுமே தண்ணீர் ஒழுகிக்கொண்டேயிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top