மௌனத்தின் விழிப்பு!

0
(0)

வாழைத் தார்களின் காய்கள் பிரிக்கப் பட்ட, துண்டு துண்டான தண்டுகள் சிதறிய அந்தப் புழுதிப் படுக்கையில் உருண்டு கிடந்த சுப்பு கண் விழிப்பதற்கும் கரும்பு லாரி சந்தைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது. நடுநிசிக் காற்றின் ஜிலுஜிலுப்பு அவனுக்குள் ஒருவித நடுக்கச் சோம்பலை உண்டாக்கினாலும் வாழ்க்கைச் சுமையினால் தள்ளாடிப் போயிருந்த மனம் அவனை உசுப்பியது. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு கைகளை ஊன்றி வேகமாய் எழுந்தான். ஹானிக் காலின் எதிர்த்தாக்குதலால் சிறிது தடுமாறினான். ஒரு வழியாக சுதாரித்துக் கொண்டு கிந்திக் கிந்தி லாரியை நோக்கி நடந்தான்.

லோடுமேன்கள் லாரியின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். விடிந்தவுடன் விலை கூவி வற்கப் போகும் சில்லரை வியாபாரிகள் லாரியை முற்றுகை இட்டனர்.

“யே! எல்லாரும் அங்குட்டுப் போங்கப்பா! லாரி வந்து நிக்கிறதுக்குள்ள ஈ மாதிரி மொக்கிறீங்களே! எல்லாரும் காலம்பற வாங்க| இப்ப யாருக்கும் விக்யல.” லாரியில் வந்த கரும்புக்குச் சொந்தக்காரர் வேதமுத்து கரடியாய்க் கத்தினார். வேதமுத்துவின் குரலுக்கு எவ்வித பலனும் இல்லை. அவருடைய அதிகாரக் கூச்சல்களும் அதை மதிக்காத சில்லரை வியாபாரிகளின் அலட்சியப் போக்குகளும் அங்கு ஒவ்வொரு சந்தை தினத்தன்றும் நிகழும் வாடிக்கை நிகழ்ச்சி.

சுமார் நூறடி தூரத்தில் உயரமான கம்பத்தில் பவ்வியமாய்ச் சிரித்துக் கொண்டிருந்த குழல் விளக்கின் வெள்ளைக் கதிர்கள் மெலிந்துபோய் கரும்புச் சோகையின் பசுமையில் பிணைந்து ஒருவித ரம்யத் தோற்றத்தை அளித்தன.

லோடுமேன்கள் கட்டுகளை இறக்கும்போதே சில்லறை வியாபாரிகள், தடிமனாய், உயரமாய் இருந்தவற்றைப் பிடுங்கிக் கொண்டு போய் தங்கள் வியாபார ஸ்தானத்தில் நிரப்பினர்.

ஹானிக் காலின் வேதனையை மறந்து, சுப்புவும் கூட்டத்தோடு கூட்டமாய்ப் பதினைந்து கட்டுகளை இறக்கிக் கொண்டான்.

“ஏய் சுப்பு! வசக்கட்டு இருந்தாக் கட்டத் தொடு| இல்லாட்டி வந்த வழியப் பாத்துக்கிட்டுப் போ! வாராவாரம் ஒங்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க முடியாது.” வேதமுத்து விரட்டினார்.

“இல்லண்ணே! நாளைக்கெல்லாம்; பணத்த ஒழுங்காக் குடுத்துர்றேன்.” கரும்புக் கட்டை நிமுத்திக் கொண்டே சமாதானமாகப் பேசினான் சுப்பு.

“வேண்டாம்னா விடுப்பா| நான் சொல்லச் சொல்ல நீ பாட்டுக்குத் தூக்கிட்டுப் போற?……சுந்தரம்! இதுகளையெல்லாம் நம்ம கட்டுயளோட தூக்கிப் போடு.”

“வேண்டாம்ணே! இந்த ஒரு தடவ மட்டும் விட்டுக் குடுங்க. வித்தாலும் விக்யாட்டியும் பைசாப் பாக்கி இல்லாம கணக்கு முடிக்க்pறேன்.”

“சரி வேதமுத்து, இந்த ஒரு தடவ விட்டுப் பாப்போம்” என்று கட்டுக் காரதிடம் கூறிய சுந்தரம் சுப்புவைப் பார்த்து “இந்தா பாருப்பா, மதியம் பன்னண்டு மணிக்கெல்லாம் பைசாப் பாக்கி இல்லாம பணம் வந்துரணும்| இந்தா தாரேன், அந்தா தாரேன்னா கண்ணு செந்து போகும்” என்றார்.

கருக்கிருட்டு வைகறையில் சந்தை சுறுசுறுப்பாகியது. கொள்வோரும் கொடுப்போரும் கூச்சலிட்ட படி விடியலுக்குப் புது மெருகேற்றினர்.

சுப்பு தன் கரும்புக் கட்டுகளை நோட்டம் விட்டான். சக வியாபாரிகளின் கட்டுகளுக்கும் தன் கட்டுகளுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பயதை உணர்ந்தான். தன் சரக்கு விலை போகுமா என்ற சந்தேகம் அவனை பயமுறுத்தியது.

‘இன்னக்கி லோடு ஜாஸ்தியா வந்திருக்கு| வெல கெடக்யுமான்னு தெரியல.’ சிறு வியாபாரிகளைப் போலவே பெரு வியாபாரிகளும் பயப்டவே செய்தனர்.

சுப்புவின் மனம் கனத்தது. ‘இந்த முசுறு இன்னக்கி வெரட்டத்தாம் போறான்| எப்படித்தான் மொதலெடுக்கப் போறனோ தெரியல| லாபமோ நஸ்டமோ, கரும்பு கைய விட்டுப் போனா நல்லது. குருவு வந்ததும் காய்கறிக் கடைப் பக்கம் போய்த் துண்டு போட்டு விற்கச் சொல்ல வேண்டியதுதான்.’

சக வியாபாரிகள் மும்முரமாய் விற்றுக் கொண்டிருக்க சுப்புவின் விற்பனை தூங்கி வழிந்து கொண்டிருந்தது. அவனுடைய மனசு சோம்பல் முறித்துக் கொள்ள முயற்சித்தது.

ஒவ்வொரு கட்டிலும் ஒன்றிரண்டு தவிர மற்றவை சத்துப் பிடிக்காத சொங்கிச் சவளங்கள். சுப்புவின் பார்வையில் வெறுமை குடியேறியது.

‘கையுங்காலுந்தான் நம்மளுக்குச் சொத்து| இந்த ஆனிக் காலு இப்படியா சோதிக்யுணும்? ரெண்டு ரூபாக் காசு இருந்துச்சுன்னா ஒரு பழைய செருப்பையாவது வாங்கித் தொலக்யலாம். குருவு மட்டும் இல்லாமப் போயிருந்தா…..’ நினைவுகளால் மனசு குமைந்து கொண்டிருந்த போது சுப்புவின் மனைவி குருவம்மாள் நீராகாரம் நிறைந்த தூக்குவாளியுடன் வந்து சேர்ந்தாள். இடுப்பில் இருந்த பெண் குழந்தை தந்தையைக் கண்ட சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

குழந்தையை வாங்கி முத்தமிட்டபடி “மணி என்னாகும்?” என்றான்.

“ஒன்பதாவப் போகுது” என்றபடி மீண்டும் குழந்தையை வாங்கிக் கொண்டு வாளியைக் கணவனிடம் கொடுத்தாள்.

வாளியில் இருந்த ஒருபடி சீரையும் பருகிவிட்ட மதக்கத்தில் ஏப்பம் விட்டான் சுப்பு.

“நீச்சுத் தண்ணி ஏது குருவு?”

“பொன்னாயி வீட்டுல வாங்கியாந்தேன்…..ஆமா யாவாரம் எப்படி?” ஆவல் பொங்கக் கேட்டாள்.

“கரும்பு லாரி நெறைய வந்திருக்கு| வாங்குன எடத்தில பிரியம்| விக்கிற எடத்துல சவுதம்| நம்ம தரித்திரம் நம்மல விட்டு அவ்வளவு சிக்க்pரம் போகுமா என்ன?”

“இந்த வாரமும் ஊருப் பயக கிட்ட வாங்கிக் கட்டிட்டு வா! வீட்டுல புள்ளயப் பாத்துக்கிட்டு இருந்தாலாச்சும் நானு நாலு ரூவாக்கிப் புளித்தட்டப் போவேன். அங்குட்டும் இல்லாம இங்குட்டும் இல்லாம கெடுக்குறியே மனுசா!”

“இப்ப அதப் பத்திப் கேசி என்ன செய்ய? மொதல்ல வாங்குன சரக்க கைய விட்டுக் கழிக்யணும். மூணு கட்டத் தூக்கிட்டுப் போயி காய்கறிக் கடப் பக்கம் துண்டு போட்டு வில்லு. …இந்தா கத்தி சூதானம்.”

“என்னா சுப்பு, மணி நாலாச்சு| இந்தா அந்தான்னு இழுக்குறியே தவிர காசு பைய விட்டு வெளிய வரமாட்டேங்குது.”

“வா சுந்தரம்! எம்பொஞ்சாதி நாலு கட்டத் தூக்கிட்டுப் போயிருக்கா. வந்ததும் மொத்தமா சேத்துத் தந்துடலாம்னு பாத்தேன்.”

“என்னய்யா இப்படிப் பண்ற? வேதமுத்துகிட்ட ஒனக்காக எம்புட்டுத் தூரம் வாதாடுறேன்? நல்ல பேரு வாங்கித் தர மாட்டேங்குறியே| ஒங்கணக்கு மட்டுந்தான் பாக்கி| மத்தவங்கள்லாம் செட்டில் பண்ணிட்டாங்க.”

“ஒனக்குத் தெரியாதா சுந்தரம்? இன்னக்கி மாதிரி என்னக்யுமே இருந்ததில்ல. ஏதோ கொஞ்சம் கொறச்சுப் போடு.”

“என்னப்பா நீ? சரி! நூத்தி அஞ்சுக்கு அஞ்சக் கொறச்சுக்கிட்டு நூறக் குடு.”

களைத்துப் போய்க் குழந்தையுடன் வந்தாள் குருவம்மா. 23 ரூபா 75 பைசாவைக் கணவனிடம் கொடுத்தாள்.

தன்னிடம் இருந்த நோட்டு சில்லறை குருவம்டமா கொடுத்ததையும் சேர்த்து சுந்தரத்தின் முன்னால் துணியை விரித்துக் கொட்டினான்.

“யாவாரம் ரெம்ப மோசம்ப்பா| வேதமுத்துட்ட நீதான் நெலமய எடுத்துச் சொல்லணும்” என்றபடி பணத்தை எண்ணித் தயக்கத்துடன் கொடுத்தான்.

எண்ணிப் பார்த்த சுந்தரம் 75 ரூபாய் 35 பைசா இருப்பதைக் கண்டு கோபமுற்றான்.

“இன்னக்கி நெலம ஒனக்குத் தெரியாததில்ல.” சுப்பு கெஞ்சினான.

“அந்த ஜவாப்பெல்லாம் தேவை இல்ல| பாக்கிப் பணத்த ஒழுங்கா எடுத்து வையி.”

“என்னப்பா என்ன விஷயம்?” வேதமுத்துவும் அங்கு வந்து சேர்ந்தான்.

“இல்லண்ணே, இன்னக்கி சந்த ரெம்ப சவுத்துப் போனதால….”

“சவுத்துப் போனா எங்களுக்கென்னய்யா? காசக் கட்டி வச்சிட்டு நகரு| வாராவாரம் ஒன்னோட மாரடிக்கிற பொழப்பாப் போச்சு.” குறுக்கிட்டுக் கோபத்துடன் சத்தம் போட்டார் சுந்தரம்.

“எம்புட்டுக் குடுத்திருக்கான்?”

“எழுபத்தி அஞ்சு!”

“இந்தப் புத்துக் காலுப் பயலுக்கு சரக்கு இல்லைன்னனே, கேட்டியா? நம்ம தலையெழுத்து| பத்து ரூபாயக் கொறச்சுக்கிட்டு தொண்ணூறையாவது வாங்கித் தொல.”

“வித்ததே அம்புட்டுத்தான்ணே| நாங்க ரெண்டு பேரும் சேந்து பாடுபட்டும் இம்புட்டுத்தான் தேறுச்சு| ஒரு டீ கூடக் குடிக்யல.”

“ஏண்டா திருட்டு நாயி! யாரு கிட்ட கத சொல்ற? ஊருப் பய காசுகள அம்பக்கம் பண்ணித்தாண்டா வேட்டி இல்லாம அலையிற. இந்தப் பொழப்புப் பொழக்கிறதுக்கு ஒரு சாண் கயித்துல தொங்கலாம்.” வேதமுத்து சீறிப் பாய்ந்தார்.

“கொஞ்சம் நெதானமாப் பேசுங்கண்ணே| பாக்கி சாக்கி நின்னாலும் ஒழச்சு ஒங்க கடன அடச்சுருவோம். இதுக்காகப் போயி நான் ஏன் தூக்குப் போட்டுக்கணும்?” நிதானமாகப் பேசினான் சுப்பு.

“ஆமா. இந்தப் புத்துக் காலு மகாராசன் மலையேறி சம்பாரிக்கப் போறாரு. பொழக்ய வக்கில்லைன்னா பொண்டாட்டியக் கூட்டிக் குடுக்குணும்.”

சுந்தரம் விலக்கி இருக்காவிட்டால் அவர் தலை துண்டாகப் போயிருக்கும். குருவம்மாவின் கையில் இருந்த அரிவாள் மேலும் அவரை நோக்கிப் பாய்ந்தது. சுப்பு அவசர அவசரமாக மனைவியின் கையைப் பிடித்து அரிவாளைப் பிடுங்கினான். அவள் பதட்டத்துடன் ஆடியது. கண்கள் விரிந்து சிவந்திருந்தன.

சுந்தரமும் வேதமுத்துவும் அரண்டுபோய் நின்றார்கள். “ஏலே! அக்கா தங்கச்சி, ஆத்தர்ஙகுற வித்தியாசம் தெரியாத பஜாரிப் பசங்களா! அடுத்த வாரம் ஒங்க பாக்கிய மூஞ்சியில விட்டெறியலைன்னா நான் ஒருத்தனுக்குப் பொறந்தவ இல்லடா…..இந்தா பொறப்படு வீட்டுக்கு.”

குருவம்மா விட்டெறிந்த ஆங்காரக் குரலின் அடிவேரைத் தேடுபவன்போல் சிலிர்ப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான் சுப்பு.

 

புதிய நம்பிக்கை ஜூன் 1985

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top