மைதானம்

5
(1)

பல யோசனைகளுக்குப் பிறகு தேர் கட்டிப் பிணம் தூக்கி நடந்தார்கள். முனியன் வழிகாhட்டுதலாய் முன் சென்றான். தெக்கு வீடு வடக்கு வீடு என வளர்ந்த ஜனங்கள் ஒன்றுகூடி பாடைக்கு முன்னும் பின்னும் வந்தார்கள். பத்தாக்குறைக்கு எட்டூர் ஆட்களும் சேர்ந்திருந்தார்கள். பெண்டு பிள்ளைகள் குட்டி குருமான்கள் காட்டின் துவக்கத்தில் கால்பின்னிக் கொண்டனர்.

என்னதான் முன்னத்தி ஏராய்ச் சென்றாலும் முனியன் மனசில் பயம் இருந்தது. மூன்றுநாள் வைப்புக்குப்பின் வீச்சமெடுத்துத் தூக்கிவரப்பட்டாள் நாரணிக்கிழவி.

வடக்கு குடியிருப்பு என்று வந்தபின் விழுகிற முதல் பழணம் இது. இந்த வருஷத்தில் தெற்குக் குடியிருப்பில்தான் மூன்று சாவுகள் நடந்தன. அப்போதெல்லாம் வழக்கம் போல் ஓடைப்பக்கம் புதைத்தர்கள். அந்தச் சுடுகாட்டுப் பாதையில் பங்கு கேட்க ஆட்கள் இல்லை. ஜனக்கூட்டம் பெருத்தபின் தலைக்கட்டு வரிப்போட்டு கதிர்வேல் பிள்ளையிடம் காடு வாங்கி வடக்கே குடி வந்தது தனிக்கதை.

நாரணிக்கிழவியின் ஐம்பது வயது மகன் வெள்ளை வேட்டியை முக்காடகப் போட்டுக் கொண்டு கைகள் குறுக்கி நடந்தான். அவனுக்கு ஆதரவாக ஐந்தாறு பேர் நெருக்கிக்கொண்டு நடந்தார்கள். தொங்கிய வயிறுகளுடனும் தொளதொளத்த சட்டைகளுடனும் சொந்தம் சுருத்துக்கள் வந்தன. அவிழ்கிற உருமாக்கட்டை திரும்பத் திரும்பச் சரி செய்து கொண்டு நாரணிக்கிழவியின் பேரன் கனிப்பாண்டி நடந்தான். தெககு வீடு, வடக்கு வீடு, இளவட்டங்களின் தலைவனாக அவன் இருந்தான். பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்கிறான். ஏதொன்றுக்கும வெடிப்பான பயல்;

அவன் வயதொத்த இளைஞர்கள் கும்பலாக நடந்தார்கள். ஊரின் பெரிய வீட்டு ஆட்களின் பிள்ளைகள் தோரணை அவர்களிடம் இருந்தது. லூஸ்பிட்டிங் சட்டைகள் கலர் கலராய் விதம்விதமாய் ஒவ்வொருத்தர் உடம்பிலும் மிதந்தது. மயானக்கரைக்கென்றுதான் அவர்கள் கைலிகளுடன் வந்தனர். மற்ற நேரங்களில் ஆபீஸர் வீட்டுப்பிள்னைகள் தோற்றுப்போவார்கள்.

அந்த நீண்ட காடு வெளிறிப்போய்த் தெரிந்த சுத்துப்பட்டு நிலங்களில் அடையாளத்திற்கே பச்சைகள் தெரிந்தன. வைரமணி நாடார் முத்துத்தேவர் தோட்டங்கள் தூரந்தொலைவுகளில் பச்சை வைத்து நின்றன. தண்ணீர்ச் சோங்கில் தென்னைகள் விரிந்தன.

கல் கரடுகளில் வெறுங்காலோடு நடந்தவர்கள் நிறைய இருந்தனர். ஏப்ணபொதுமான ஆணிச்செருப்புடன் முனியள் நடந்தான்.

வடக்குக் குடியிருப்புக்குச் சுடுகாடு என்றில்லை. நாரணிக்கிழவி இறந்ததும் ஊரின் முக்கியத்தெருக்’கள் வழியே நடந்து தெற்கு ஓடைப்பக்கம் புதைக்கத்தான் முதலில் திட்டமிட்டிருந்தார்கள். கிராம நிர்வாக அதிகாரி தங்கப் பெருமாள்தான் ஓடோடியும் வந்தார். அப்படி வந்தால் ‘வெட்டுவேன் குத்துவேன்’ என்று ஊர்க்காரர்கள் சிலபேர் காத்திருப்பதாக முனியனிடம் சொன்னார்.

“அதிகாரி ஒண்ணு சொன்னா அது நல்லதுக்குத்தான் இருக்கும்… கொஞ்சம் பொறுமையா இருப்பம்… நமக்கும் இங்கருந்து ஊருக்குள்ள நடந்தோ ஊரச்சுத்தியோ ஓடைக்குத் தூக்கிட்டுப் போறதுக்குள்ள பூண் விட்டுப் போயிரும்.. ஐயாவுக மனசு வச்சு அக்கம் பக்கத்துல எடஞ்சொன்னா சட்டுப்புட்டுன்னு பொதச்சுட்டு ஆகவேண்டியதப் பாக்கலாம”;.

ஓரொரு சமயங்களில் முனியன் சொல்லுக்கு மதிப்பு இருந்தது. என்னதான் பெரியதனமாக இருந்தாலும் கனிப்பாண்டிக்கு பெரியப்பன் முறை வேறு.

கிராம நிர்வாக அதிகாரி தங்கப்பெருமாளுக்குப் பிணத்தை நிறுத்தி வைத்த பெருமிதம் இருந்தது. ஆனால், அதை அடக்கம் செய்ய சரியான வழி சொல்லா விட்டால் ரோட்டில் போட்டு மறியல் செய்வார்கள் என்கிற பயமும் இருந்தது.  ஊருக்குள் தூக்கிப் போனால் சாதிக் கலவரம் வந்துவிடும். இதில் எது நடந்தாலும் அதை முன்கூட்டித் தடுக்காமல் விட்டதற்கான தண்டனை தனக்குக் காத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

முனியனைத் தனியாக அழைத்துப் போனார். “கெராமத்துத் தலைவரு அக்கையன வந்து பாருங்க.. நானும் அங்க இருக்கேன்… கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வருவம்…” என்றார்.

அக்கையன் மச்சு வீட்டிலிருந்து இறங்கி வந்தார். கிராம நிர்வாக அதிகாரி சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தார். முனியனும் கூடச்சென்றிருந்த நான்கைந்து பேரும் வெளித்திண்ணையில் விளிம்பைத் தடவிக்கொண்டு நின்றார்கள்.

அக்கையா அரங்கு வீட்டின் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். சற்று வேகமாகவும், சற்று நிதானமாகவும் அவரது கால்கள் விழுந்து கொண்டிருந்தன.

அக்கையா எட்டூரு ஜனங்களுக்கும் பொது நியாயஸ்தராக இருந்தார். எட்டூரும் வந்து போகிற மைய ஊராகவும் அது இருந்தது. ஊர் ஊருக்குப் பஞ்சாயத்து பண்ணப் போவார். நேரத்தோதுகள் வாய்க்கா விட்டால் தன்னூர்சாவடிக்கு வரவழைத்து விடுவார். ‘ஜே ஜே‘வென்று அப்போதெல்லாம் கூடிவிடும் கூட்டம். பஞ்சாயத்து முடிவில் பகல் விருந்துக்கு எட்டூர் பண்டுகளன் பணமும் விழுந்திருக்கும்.

நல்லதோ கெட்டதோ அக்கையா ஒன்று சொல்கிறாரென்றால் முடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பின் விளைவுகள் என்று வந்ததில்லை.

அக்கையா வாசலுக்கு வந்தார். முனியன் கை கூப்பினான். கிராம நிர்வாக அதிகாரி அக்கையாவுக்குப் பின்னாள் நின்று கொண்டிருந்தார். முனியனும் கூட வந்திருந்தவர்களும் அக்கையாவின் வாயசைவுக்காகக் காத்திருந்தார்கள்.

“ஏப்பா முனியா ஊர் நடப்பு ஒனக்குத் தெரியாததில்ல… ஈங்கிறதுக்கும் கத்தி கம்ப எடுத்து இப்பத்தே ஓஞ்சு கெடக்கம்… மறுபடியும் ஒரு வென வந்துடக்கூடாது…” என்று நிறுத்தினார். இன்னும் இரண்டு படிகள் இறங்கி வந்து திண்ணையின் வலப்புறம் நின்று கொண்டார். ஓன்றோடொன்று சேர்கிற சாதிக்காரர்கள் என்றால் அவர் இப்படியெல்லாம் நிறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறவரில்லை. உள்ளே அழைத்துப் போவார். காத்தாட என்றால் நீண்டு அகன்ற திண்ணையின் நடுமையத்தில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்வார். அப்படியே ஒரு காலை தொடையின் மேல் போட்டுக் கிடு கிடுவென ஆட்டிக்கொண்டே பேசுவார். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. சட்டுப்புட்டென்று நாலு வார்த்தை பேசி அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

“தெக்காம ஒங்களுக்கு அரசாங்கம் காலனி ஏற்படுத்திக் குடுத்திடுச்சு. அதுக்கு மேக்காம ஓடைப்பக்கம் சுடுகாட்டுக்கு எடமும் விழுந்திருச்சு. அதப்பத்தி இந்த பத்து முப்பது வருஷமாக் கேள்வியில்ல… இப்ப ஒங்கள்ல கொஞ்சப்பேரு வடக்கயும் குடிபோனதுனாலதே இம்புட்டு வம்பும் வந்திருச்சு… அங்கிட்டிருந்து பொணத்த ஊருக்குள்ளாற கொண்டாறணும்னு ஒங்க எளவட்டம் பேசிக்கிறதா ஆபஸரு சொன்னாரு… அது நல்லதுக்கில்ல… நா என்னா சொல்றேன்னா இப்ப வாங்குன எடத்துக்கு அபபால கரட்டோரம் மெடராஸ்காரம்மா தரிசு கெடக்கு அதுல போயி பொதைங்க… ஏ என்னான்னு கேக்க ஆளு வராது… அதுக்குந்தள்ளி பாரஸ்ட் நெலங்க இருக்கு… அதுலயும் பொதைக்கலாம். குண்டுக்க மாட்டாங்க… மீறி ஊருக்குள்ள நடந்து ஓடைப் பக்கந்தே பொதைப்போம்னு கௌம்புனீங்கன்னா பெரிய வம்பு வந்திடும்… மித்த ஜாதிக்காரனெல்லாம் ஒண்ணு சேருவாங்க… கலகங்கச்சரான்னு போலீசுக்குப் பதில் சொல்லவே பொழப்பு சரியாப் போயிடும்.”

முனியனும் மற்றவர்களும் அமைதியாயிருந்தார்கள். உடன் வந்திருந்தவர்களைத் தனியே அழைத்துப்போய் சிறிது நேரம் பேசினான் முனியன். பிறகு அக்கையாவிடம் வந்தான். “நீங்க சொன்னபடி அந்த மெட்ராஸ்காரம்மா தரிசில பொதைக்கிறோம்… ஆனா எந்த வில்லங்கமும் வராமப் பாத்துக்கிறது ஒங்களோட பொறுப்பு..”

“வில்வங்கம் வராதுன்னுதான நா அந்த எடத்த ஒங்களுக்குக் காட்றே… சும்மா தைரியமாப் போயிப் பொதைங்க… இந்தா வி.ஏ.ஒ கூட ஏம்பின்னாலதான இருக்காரு… போங்க போயி ஆகவேண்டியதப் பாருங்க…” என்று கூறிவிட்டு அக்கையா படிகளின் மேலேறிக் கொண்டார்.

புதிதாக வடக்கு வீடுகளுக்கும் ஒரு சுடுகாடு கிடைக்கப்போகிற தெம்பில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

ஊர் வெகுதூரத்தில் மறைந்தது தெரிந்தது. பொட்டல் வெளியில திட்டுத் திட்டாக ஆட்களின் மொத்த நடையும் இருந்தது. எல்லாமுமாகச் சேர்ந்து இருநூறுபேர் தேறினார்கள். தெக்கு வீடுகளும் வடக்கு வீடுகளுமாகச் சேர்கிற நூரு நூற்றைம்பது தலைக்கட்டில் வீட்டுக்கு ஒரு ஆள் வேலைக்குப் போகாமல் இரவில் வந்து விழுந்திருந்தார்கள். மிச்சம் சொச்சமெல்லாம் வெளியூர் ஆட்கள்தான்.

கம்புகள், துணிகள் கொண்டு கட்டப்பட்ட தேரில் நாரணிக்கிழவி சாமிச்சிலைபோல் பூக்களில் ஒளிந்திருந்தாள்.

மெட்ராஸ்காரம்மாவின் இடத்தில் முதல் குழி விழுந்திருந்தது. குழியைச் சுற்றி முன்னதாக வந்த நான்கு பேர் மண்வெட்டி கடப்பாரை சகிதம் காத்திருந்தார்கள். குழிக்கருகில் தேரை இறக்கி வைத்தார்கள்.

தூரத்தில் கிழக்கு மேற்காக தார்ச்சாலை நீண்டது. முன்பைவிட இப்போது அதிக பஸ்கள் வந்து போகின்றன. பிணம் தூக்கி நடந்த இந்த ஒரு மணிநேரத்தில் நான்கைந்து வண்டிகளைக் கூட்டம் பார்த்திருந்தது.

மெட்ராஸ்காரம்மாவுக்கு இப்படி ஒரு இடம் இருப்பதே மறந்து போயிருக்கும். அந்த அம்மாவுக்கு ஊருக்குள் பூர்வீக வீடுகள் இருந்தன. சொந்த பந்தங்கள் என்று யாரும் அங்கு குடியிருக்கவில்லை. வேறு வேறு ஆட்கள் வாடகை, ஒத்தி என்று இருந்தார்கள். வாடகை போக்கு வரத்துகளை வாங்கி கொடுத்துவிட மதுரையில் ஒரு ஆள் இருந்தான். அந்த அம்மாவின் புருஷன் உயிரோடு இருந்தபோது சென்னையில் பிஸினஸ் பார்ட்னராக இருந்தான். சோப்புக் கம்பெனி பிரபலமடைந்தபின் மதுரை கிளைக்கு அந்தம்மாவால் அனுப்பி வைக்கப் பட்டிருந்தான்.

“குழிய இன்னங்கொஞ்சம் ஆழமா வெட்டிருக்கணும்ப்பா…” தேரைச் சுற்றி நின்றிருந்தவர்களில் ஒருவன் சொன்னான்.

“நீங்க வெட்டிப் பாத்திருந்தாவுல தெரியும். ஓவ்வொரு பேருக்கும் உசிரு போய் உசிரு வந்த மாதிரி இருந்துச்சு…” மண்ணும் வியர்வையும் சுரந்து சாரைமேனியுடன் இருந்த ஒரு ஆள் முண்டாசை அவிழ்த்து உதறியபடி சொன்னான்.

இன்னொரு ஆள், “ஆமாமா… காலம்பற எட்டு மணிக்கு தொட்டவேல.. இப்ப நாலுமணியாச்சும் ஆகுமா.. இம்புட்டுதே ஓடிருக்கு.. சும்மா உள்ள தள்ளி மண்ண மூடிட்டுப் போங்கப்பா.. கெழவிய நாயி நரிக வந்து இழுத்துட்டுப் போனாலும் தெரியவா போகுது..”

ஆள் ஆளுக்குப் பேச்சுக்களில் கூடி இருந்தார்கள்.

“கெழவி செத்த நேரம் வடக்கு வீட்டுக்காராளுகளுக்குப் புது மயானக்கர அம்புட்டுருக்கு..”

“இருங்கப்பா எம்புட்டுத் தொலவட்டு சொமக்கிறது.. ஊரு எங்க இருக்கு… நாமெங்க இருக்கம்… தெக்கு வீட்டுக்காராளுக்கு அர மைல்ல சுடுகாடிருக்கு… நாம நடந்தே இத்துப் போயிருவோம் போலிருக்கு…”

“நமக்குள்ள எதுக்கப்பா சண்ட… இதயாச்சும் கைகாட்டி விட்ருக்காகளே… இல்லேன்னா வீண் பிரச்சனைகள்ல வந்துருக்கும்…”

இளசுகள் முன்னுக்கு வந்தார்கள். “ஆமாமா மண்ணாங்கட்டிப் பெரச்சனைக வருது… ஊர்ல மித்த சாதியாளுகளுக்கெல்லாம் இஷடப் போக்குல பொதக்கிறதுக்குச் சுடுகாடு இருக்கு. நாம நம்ம ஜனங்களுக்கின்னு இருககுற சுடுகாட்டுக்கே ஊருக்குள்ள நொழஞ்சு பொணத்த தூக்கிட்டுப் போக முடியல…”

“பெறகென்ன மத்த ஆளுக நெற மரக்கா நீர்மாலன்னு ஏழு தடவ ஊரச்சுத்திக்கிட்டு எட்டாவது தடவையாக் கொட்டு மொழக்கத்தோட போயி அடக்கம் பணறாக… நாம யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு வந்து பொதைக்கிறோம்… என்னமோ நாமலே கொன்னுட்டு வந்து பொதைக்கிற மாதிரி…”

“கொட்டு மொழக்கத்தோட ஊரச் சுத்திவர மடடும் நாம வேணும். நம்ம கொட்டு வேணும். நம்ம பொணம் மட்டும் வரக்கூடாதா? இது என்னங்கடா நாயம்…”

இந்தப் பேச்சுக்களிடையே தூரச்சாலையிலிருந்து விடுபட்டு ஒரு கார் தரிசு நிலத்தில் ஊடுருவி வந்து கொண்டிருந்தது.

முனியன் ஆச்சரியத்துடன் பார்த்தான். காரில் வந்து துக்கம் விசாரிக்க அப்படி யார்தான் வருகிறார்கள்? கிழவியின் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்கள் யாரும் அபபடியொன்றும் பெரிய உத்தியோகங்களில் இல்லையே!.

கார் பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கினாலும் வேகம் குறையாமல் வந்து கொண்டிருந்தது.

என்ன ஏது என்று தெரியாத வியப்புடன் எல்லோருமே பிணத்தேரைத் தனித்துவிட்டு விட்டு காரை எதிர் கொண்டார்கள்.

மெட்ராஸ்காரம்மாள் இறங்கினாள். கூடவே இருவர் இறங்கினர். ஒருவன் நடு வயது ஆள். மதுரையில் இருக்கிற பார்ட்னராயிருக்கலாம். இன்னொருவன் இளைஞன். மெட்ராஸ்காரம்மாவின் சாடையிலிருந்தான்.

“யோவ்… இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க?…” கோட்டும் சூட்டும் அணிந்த அந்த இளைஞன் ஆவேசமாய் நெருங்கினான்.

மேட்ராஸ்காரம்மாள் அடையாளம் தெரியாமல் பருத்திருந்தாள்… அவளை முப்பது வருஷத்திற்கு முன் தாவனியில் பார்த்த ஞாபகம் முனியனுக்கு இருந்தது. என்றாலும் அந்த முகத்தை உடனே உருவகிக்க முடியவில்லை. கூட்டம் கூட்டமாக அவர்களின் வயல்வெளிகளுக்கு ஆட்களை வேலைக்கு அழைத்துப் போயிருக்கிறான். சென்னைக்கு கல்யாணமாகிப் போன பின்பு அவள் எப்போதோ ஒருமுறை திருவிழாவிற்கு ஊருக்கு வருகிறவளாய் மாறிப் போனாள். சோப்புக் கம்பெனி அது இதுவென்று பிரபலமடைந்த பின் ஊருக்கு வருவது சுத்தமாக நின்று போனது. ஆனால், அவள் தயாரிக்கிற சோப்பு மட்டும் ஊரைச் சுத்தப் படுத்தியது.

மாலை வெய்யில் மெட்ராஸ்காரம்மாளின் முகமஞ்சளை வசீகரித்துக் காட்டியது. ஐம்பது வயசாவது இருக்கும். முப்பது வயசுக்குள் நின்று கொள்ள பிரயத்தனப்பட்டிருக்கிறாள்.

“யோவ்… யாருய்யா இங்க குழி வெட்டுனது… தூக்குங்கய்யா பொணத்த… அப்பால கொண்டுட்டுப் போங்க… நல்ல வேள நா மதுரைக்கு வந்த சமயம் போன் வந்தது… இல்லேன்னா என்னாகுறது… ரியல் எஸ்டேட்டுக்காரன் என்னயப் போட்டுத் தீட்டிருவானே…”

“அம்மா கொஞ்சம் பொறுங்கம்மா…” முனியன் பணிவாக மெட்ராஸ்காரம்மாளிடம் வந்து நின்றான். பிணத்துடன் வந்திருந்த கூட்டம் முழுவதும் காரையும் அதிலிருந்து இறங்கியவர்களையும் சூழ்ந்து கொண்டது.

“என்னய்யா… எப்படிய்யா சும்மா இருக்கிறது? எவஞ்சொத்துக்கு எவம் பொறந்திருக்கான்… ஏதோ ஒங்களயெல்லாம் நம்பித்தே முப்பது வருஞத்துக்க முந்தி எங்க வீட்டுக்காரரு இந்த எடத்த வாங்கிப் போட்டாரு. சொந்த ஊர்ல ஒரு சொத்து இருக்கட்டுமேன்னுதே நானும் பத்திரம் முடிக்கச் சம்மதிச்சே… இப்பச் சுடுகாடா மாத்தப் பாக்குறீகளே…”

“அம்மா.. அக்கயாதேஞ் சொன்னாரு… சும்மாதேகெடக்கு ஒரு ஓரத்துல பொதைங்க. பின்னப் பெறகு அந்தம்மாகிட்டச் சொல்லி கொஞ்சம் எடம் வாங்கித் தர்றேன்னு…” முனியன் பவ்யமாய்ச் சொன்னான்.

மேட்ராஸ்காரம்மாள் கொதித்துப் போனாள். “அந்த மூள கெட்ட மனுஷன் இதுவுஞ் செய்வான், இதுக்கு மேலயும் செய்வான்… ஈனக்கெரயத்துக்கு எனக்கு வித்துருன்னான். இல்லேன்னதும் இங்குட்டுக் கையக் காட்டினானாக்கும்… இப்ப நாஞ்சொல்றே… பொணத்த தூக்கிட்டுப் போய் அவெ நெலத்துல பொதைங்க… அவனும் ஊர்ல முக்காவாசியப் பட்டாப் போட்டுத்தான் வச்சிருக்கான்…” மெட்ராஸ்காரம்மாள் பத்ரகாளியாய் மாறியிருந்தாள். அதே வேகத்தில் போய் அக்கையாவின் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்வாள் போல் முனியனுக்கு தோன்றியது.

முனியன் தடுக்கத் தடுக்கக் கேளாமல் நாரணிக்கிழவியின் பேரன் கனிப்பாண்டி கூட்டத்தின் மத்தியில் வந்தான்.

“ஒங்கள மாதிரி துட்டு மப்பு இருக்கிற ஆளுகள்ளாம் வெளாண்டு பாக்குற மைதானமா நாங்க ஆகிப்போனோம்… எளிய சாதிகன்னா ஒங்களுக்கெல்லாம் அம்புட்டு எளக்காரம்… மனுஷன மனுஷனாத்தே மதிக்கத் தெரியல… இப்ப நாங்க ஒங்க காட்லயும் பொதைக்கல் அந்த அக்கையா காட்லயும் பொதைக்கல: எங்களுக்குன்னு ஓடைப்பக்கம் இருக்கிற சுடுகாட்லயே பொதைச்சுக்கிறம்…”

கனிப்பாண்டி அதே வேகத்தில் பிணத்தேர்ப்பக்கம் நடந்தான். கூட இளவட்டங்களும் விரைசலாக நெருங்கினர். யாரையும் எதிர்பார்க்காமல் அவர்கள் தேரைத் தூக்கிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து செல்ல நடந்தார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “மைதானம்”

  1. Sakthi Bahadur

    ஒரே நாடு ஒரே மதம் என்று கர்ஜிக்கும் இந்த நாட்டில் ஒரே சுடுகாடு என்பது இல்லை. செத்த பிணத்தை புதைக்க கூட பேதம் பார்க்கும் கிராமங்கள். சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிளவுபட்டு நிற்கும் மனிதர்கள். தாங்கள் அடக்கி ஒடுக்கி சுரண்டப்படுவதை எதிர்த்துக் கேட்காமல் தங்களால் முடிந்தவரை தனக்கு கீழ்ஜாதி மக்களை அடக்கி ஒடுக்கி விரட்டும் மேல் சாதி மனோபாவம். எத்தனை பெரியார்கள் அம்பேத்கர் எங்கு திருத்தினாலும் திருந்தாத மக்களின் மனநிலையை ஒரு சிறுகதையின் மூலம் படம் பிடித்து காட்டியுள்ளார் அல்லி உதயன்.

    வாழ்த்துக்கள் தோழர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: