முள்

4.7
(3)

“என்ன பந்தல் பலமா இருக்கு?.. யாருக்கு கல்யாணம்?”

முகமது ராவுத்தரைப் பார்த்து ஜங்கால் நாயக்கர் கேட்டார்.

“அவரப் பந்தலுங்க …… ஒங்களுக்கு எப்பப் பாத்தாலும் கேலி தான்.”

வெட்டிப் போட்ட கருவக் குச்சிகள் சிதறிக் கிடந்தன. கொஞ்சம் நேரான கம்புகள் கால்களாக நிற்க, குறுக்கு வசத்தில் குச்சிகளை கட்டிக் கொண்டிருந்தார். பயிர்க்குழியில் சோளத்தட்டை வழியே அவரைக் கொடி எட்டிப் பார்த்தது.

“ஏம்மா …… தங்கச்சி, என்ன ராவுத்தரு சொல்றதுக்கு வெக்கப்படுறாரு”

திண்ணையில் அரிசிபுடைத்துக் கொண்டிருந்த ராவுத்தரின் சம்சாரத்தை வம்புக்கு இழுத்தார். சைத்தூன் பீவிக்கு சிரிப்பு வந்து தலைச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“இல்ல…. பேரனுக்கு சொல்லாமக் கொள்ளாம நிக்கா வச்சுட்டாரோ என்னமோன்னு நெனச்சேன்.”

இப்பொழுது ராவுத்தர் ஆரம்பித்தார்.

“இப்பத்தேன் வெளங்குது … நைசா பேச்சப் போட்டு பேத்திய கட்டி விட்றலாம்னு பாக்காரு போல.”

“அடடா …. இந்த ஒட்டப் பல்லு மைனருக்கு ஏம் பேத்திய குடுக்கனுமாக்கும்?”

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த சபீக் ஓட்டைப் பல்லை மறைக்க வாயை மூடிக் கொண்டான்.

“ஏங்… குடுத்தா என்ன ? அவளுக்கு இப்பத்தேன் ரெண்டு பல்லு எட்டிப் பாக்குது. அதுக்கு இவன் என்ன கொறச்ச?”

“குடுக்கலாம் …. ஆனா ஏம் பேத்தியப் பாத்தாலே இந்த மாப்ள நடுங்குறாரே…. மாப்ளக்கி தைரியம் பத்தாது.”

“பாப்பமா …. தூக்கியாரச் சொல்லட்டா?”

“ம். பாப்பம்”

“தூக்கியாந்துட்டா ….. அப்பறம் தரமாட்டம்… சம்மதமா ?”

“சம்மதம் …. மாப்ள தப்பிச்சிட்டு வந்தாளே போதும்.”

“டேய் எந்திர்ரா.. போயி ஜெயாவத் தூக்கியாடா”

“தைரியஞ் சொல்லி அனுப்புங்க…. பேண்றப் போறாரு.”

அரை டவுசரை இழுத்து இடுப்புக் கயிற்றில் சொருகிக் கொண்டு சபீக் ஒடினான். ஜங்கால் நாய்க்கர் இங்கிருந்தே கத்தினார்.

“சபீக் ஓஷ் தாண்டு…. ஜெயாக் கண்ணா … சபீக் ஒஷ்தாண்டு”

ஏற்கனவே அடிவாங்கியது நினைவுக்கு வர சபீக் சட்டென்று திரும்பி சந்தில் நுழைந்தான். ரப்பர் பொம்மையை இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு வாசல் கதவுக்குப் பின்னால் ஜெயா தயாராக நின்றாள். வாசலை லேசாக எட்டிப் பார்த்தும் கொண்டாள். பின்புறமாக வந்த சபீக் ஜெயாவை அலாக்கத் தூக்கி வாசலுக்குக் கொண்டு வந்தான். ஜெயா ஏமாந்து உதறினாள். தெருவில் எல்லோரும் சிரித்தார்கள்.”

“சீ… கீழவிடுளா …. சாதி கெட்ட வெளாட்டு வெளாடுறானுவ… சாதி கெட்டவனுவ …”

திடுக் கென்று இருந்தது. ஒரு கிழவி வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து கத்தினாள்.

சபீக் கீழே விட்டான். கிழவியைப் பார்த்து பயந்து போன ஜெயா சபீக்கை ஒட்டி நின்றாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top