முரண்

0
(0)

கோடை வெயில் சுள்ளென்று அடித்தது ஆலமரத்தடியில் ஊர் கூடியிருந்தது. காவன்னாவும் சீனாதானாவும் தங்களுக்குள் குசுகுசுவென கூடிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தில் ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மாரியப்பனின் உடம்பில் வரிவரியாய் கோடுகள். சாட்டைக் குச்சியாலும் கம்பாலும் ஆளாளுக்கு அடித்ததில். துவண்டு போய் நிற்கமாட்டாமல் நின்று கொண்டு இருந்தான். யாரோ அடித்ததில் கண் இமை வீங்கிப் போய் இருந்தது. அவன் மனைவி சுப்பு பக்கத்தில் நின்று கொண்டு இருந்தாள். உடம்பு அனலாய் காய்ச்சல் கொதித்தது. அவர்களின் இரண்டு வயது மகன் டவுசர் கூடப் போடாமல் பசியில் மூக்கு வடிய அழுது கொண்டு இருந்தான். சீனாதானவும் காவன்னாவும் இன்னும் தங்களுக்குள் ஒரு முடிவு காணமுயன்று கொண்டு இருந்தார்கள்.

ஆனாலும் ஒரு கீழ் சாதிப்பயலுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது காவன்னா கொடுக்கிற இடம்தான் இவ்வளவும். கோவிந்தன் சீனாதானா காதில் விழும்படியாய் கொம்பு சீவினான். காவன்னா வீட்டில் மாடுகளை மேய்ப்பது முதல் அவரின் அந்தரங்க எடுபிடிவரை மாரியப்பன்தான். கோவிந்தன் துண்டால் தலையைத் துடைத்தான். உயரே நிமிர்ந்து பார்த்தான் ஒரு காக்கை உட்கார்ந்து இருந்தது.

பெண்கள் ஊருக்குள் கூட்டம் கூட்டமாக கூடி மாரியப்பனைப் பற்றியும் அதைவிட அதிகமாய் ஊர் பொரணியும் பேசினார்கள். காட்டில் பருத்தி எடுக்கக் கூட யாரும் போகவில்லை. கட்டுத்தறியிலேயே காலன்னா வீட்டு மாடுகள் கிடந்தன. காடெல்லாம் சுற்றி வந்த மாடுகள் கட்டுத்தறியில் நிற்கமாட்டாமல் திமிறிக் கொண்டு இருந்தன. மாரியப்பனை எதிர்பார்த்து உடம்பில் ஒட்டும் ஈக்களை சப் சப்பென்று வாலால் அடித்துக் கொண்டு இருந்தன.

ஆலமரத்தடியில் புள்ளிகளாய் வெயில் கூர்மையாய் பாய்ந்தது. ஆனாலும் அது குளிர்ச்சியாய் இருந்தது. சிறுவர்கள் வேகாத வெயி-லும் மஞ்சனத்திக் கம்பைச் செதுக்கி கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். எங்க காலத்துல இப்படி எல்லாம் ஒரு கூட்டம் நடந்திருக்குமா.ம் கலிமுத்திப் போச்சு வேற என்னத்தச் சொல்ல. பெரிசு துண்டை விரித்து சாய்ந்தது.

காவன்னாவும் சீனாதானாவும் இப்போது தெளிவாய் தங்களுக்குள் பேசி முடிவு கண்டது போல் கூட்டத்தின் நடுவில் வந்து உட்கார்ந்தார்கள்.

கருவக்காய் தின்ற வெள்ளாடு விதையை மட்டும் கடவாய் வழியே கீழே விழ அசை போட்டுக் கொண்டு இருந்தது. கூட்டம் அமைதிகாத்தது. காவன்னா பேச ஆரம்பித்தார். மாரியப்பன் எப்பவும் இப்படி நடந்தது இல்ல அவன் பொண்டாட்டிக்கு காச்சலுங்கருதுனால அவசரப்பட்டு கோவில் கிணத்துல தண்ணி எடுத்துட்டான் அதுக்காக அவன் செஞ்சுத நாயப்படுத்தி பேசல. நம்ம எளவட்டப் பயலுகளும் லேசா ரெண்டு தட்டு தட்டிட்டானுக. ஆனாலும் இது மாதிரி இன்னொரு தடவ இப்படி நடக்கக் கூடாதுன்னு பஞ்சாயத்து விரும்புது. அதுக்கு மாரியப்பனுக்கு ஏதாவது பைசல் பண்ணனும்னு முடிவு செஞ்சிருக்கோம். அது என்னன்னு சீனாதானா இப்பச் சொல்லுவார்.

தோளில் கிடந்த துண்டை சரி செய்து கொண்டு சீனாதானா கூட்டத்தை ஒரு முறை பார்வையை கழற்றினார் மாரியப்பன் தலைகுனிந்து நின்று கொண்டு இருந்தான். அவன் மனைவி புடவைத் தலைப்பால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

மல்லி விதைப்பு மும்முரமாய் நடந்த போது விதைப்பாளுக்கு அழைத்தும் வராமல் காவன்னா வீட்டுக்கு மாரியப்பன் சென்றது ஞாபகத்துக்கு வந்தது.

மாரியப்பன் மேல எனக்கோ பஞ்சயத்துக்கோ விரோதமில்லை ஆனா அவன் செஞ்சதுக்கு பரிகாரமா அடுத்த மாதம் நம்ம காளியாத்தா கோவில் பொங்கல் விழா நடக்கு முன்னால திருமதிலுக்கு வெள்ளையும் உள்ள இருக்கும் கிராதிக்கு பெயிண்டும் அடிச்சு தரனும்ங்கறது இந்த பஞ்சாயத்தோட தீர்ப்பு.

காளியாத்தா கோவில் பொங்கல் விழா முடிந்து கலர் பெயிண்டாலும் வெள்ளையாலும் பளீரென தெரிந்தது. வழக்கம் போல காவன்னாவும் சீனாதானவும் இரவுக் கடன் முடிக்க கோவிலைத் தாண்டிச் சென்றார்கள். கண்மாய் தண்ணீர் வற்றி வெறுமையாய் கிடந்தது. யோவ் காவன்னா கால் கழுவ தண்ணீருக்கு எங்கய்யா போறது. கரையில் இருந்த அடிபம்பையும் இந்த சின்னப் பய புள்ளக ஒடிச்சுப் போட்டுருச்சுக. எனனய்யா கையில் வெண்ணெய வச்சிக்கிட்டு நெய்க்கு அலயுற கோவில் கிணத்துலதான் தெப்புத் தெப்புன்னு தண்ணி இருக்குதே.

இருவரும் கால் கழுவி விட்டு சாவகாசமாய் வெளியே வந்தார்கள். காளியத்தா எண்ணெய்ப் பிசுக்கேறி கருத்த உடலுடன் தன் பெரிய விழிகளால் பார்த்துக் கொண்டே இருந்தான்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top