முரண்நகை

0
(0)

‘காலதேவன் என்னைக்கேலி செய்கிறான்’ என்ற பாடல் வரிதான் அவருக்கு நினைவு வருகிறது. மகிழ வேண்டிய தருணத்தில் மகிழ முடியவில்லை, என்றால் என்ன சொல்வது? இளைய மகன் பாரதி பன்னிரெண்டாம் வகுப்பில் 1156 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துவிட்டான். அவர்கள் விரும்பிய மருத்துவப் படிப்பும் அவன் விரும்பிய அரசு கல்லூரியில் பொது ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைப்பது உறுதி என்பதை இணையதளத் தேடல் மூலம் அறிந்து கொண்டார்கள்.

ரொம்ப சந்தோசம்தான். அதில் ஒரு சின்ன சிரமம். மருத்துவக் கல்லூரி கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் முதலாமாண்டு சேர்க்கைக்கும் குறைஞ்ச பட்சம் ஓர் ஐம்பதாயிரம் தேவை. இப்போது கைவசம் பணம் இல்லை. கல்லூரியில் சேரும் முன் வங்கிக் கடன் வாங்க இயலாது. அவரும் அவரது மனைவியும் அரசு ஊழியர்கள்தாம். மகள் கல்யாணம் என்னும் ஆனந்த சுநாமி வீசியதில் சேமநலநிதியிலிருந்து சேமிப்பு, நகைகள் எல்லாம் இடம் பெயர்ந்தன. தூர்ந்து போன சேமிப்பின் ஊற்றுக் கண்கள் திறக்க மாதங்கள் பலவாகும். வீட்டில் பணம் புரட்ட பளிச்சென்று ஏதுமில்லை .

அக்கம் பக்கம் கடன் கேட்டால் சிரிப்பார்கள். ‘உங்களுக் கென்ன டபுள் என்ஜின்’ என்ற கேலிச்சிரிப்புதான் வரும். பணத்தை எப்படிப் புரட்டுவது என்று திக்கு முக்காடிய போதுதான் புராண அரிச்சந்திரன் கண்ணில் பட்டது அவர் கண்ணிலும் பளிச் செனப்பட்டது. ஆமாம். மனைவியின் தாலிச்செயின் அவரைப் பார்த்து நகைத்தது. ஆனாலும் யாரோ நறுக்கென்று கிள்ளியது போல ரவிச்சந்திரன் மனதில் வலி ஏறக்குறைய நாற்பத்தைந்து வருசத்துக்கு முந்தைய நிலைக்கே தள்ளப்பட்டுவிட்டோமோ… என்ற ஏக்கப்பெருமூச்சு.

வங்கியில் அவர்முன் பலர் அவரவர் வேலைகளில் மும்முர மாய் இருந்தனர். வங்கியில் நகைக்கடன் வரிசையில் நின்று கொண்டிருந்த போதும் அவரது மனது நாற்பத்தைந்து வருசத்துக்குப் பின்னால் சஞ்சரித்தது.

அது கோடை விடுமுறைக் காலம். அப்பா ராஜகோபால் வீட்டிலேயே பட்டறை வைத்து ஒரு நெக்லஸ் செய்து கொண்டிருந்தார். கல் பொருத்துவதற்கான ஜவைகளில் துருத்திய பிசிறுகளை அரத்தால் ராவி சரிப்படுத்திக் கொண்டிருந்தார். பண்டரி செட்டியார் சைக்கிளில் பரபரப்பாய் வந்து வீட்டு முன் இறங்கினார்.

அது 1965 தங்கக் கட்டுப்பாடு சட்டம் கொண்டு வரப்பட்ட காலம். ஒரு பொற்பணியாளரிடமோ, ஒரு நகை வியாபாரியிடமோ 100 கிராமிற்கு மேல் 22 காரட் ஆபரணத் தங்கமோ 24 காரட் சொக்கத்தங்கமோ இருக்கக்கூடாது 100 கிராமிற்கு மேல் தங்கம் வைத்திருப்பது சட்ட விரோதம். தண்டனைக்குரியது. பொற் பணியாளர் அல்லது வியாபாரி 100 கிராம் வைத்திருந்தால் அது யாருக்கான நகை, அவர் பெயர், முகவரி போன்ற விவரத்தினை பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். 22 காரட், 24 காரட் தங்கத்திற்கு பதிலாக 14 காரட் தங்கத்தில்தான் நகைகள் செய்ய வேண்டும். 14 காரட்டுக்கு மேல் மச்சம் உள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படும் என்றெல்லாம் சட்டத்தின் பற்கள் குதறின.

வீட்டிற்குள் அரக்க பரக்க நுழைந்த பண்டரி செட்டியார், “அண்ணா, அண்ணா கஸ்டம்ஸ்காரங்க ஆசாரிக வீடு வீடா சோதனை போடறாங்களாம். கடை வீதியெல்லாம் சோதனை நடக்குது, இங்கேயும் ஒரு குழுவா வரலாம். அதனால தங்கத்தை பத்திரப்படுத்திக்குங்கோ” என்று படபடத்தார்.

அப்பா நிமிர்ந்தார். “சரி எங்கிட்ட இருக்கிற தங்கத்தை எடை போட்டுத் தர்றேன். நீங்களே கொண்டு போய் பத்திரப் படுத்திக்குங்க.”

“அய்யோ, நான் மாட்டேன். நானே தப்பிச்சேன் பிழைச் சேன்னு கக்கூசுக்கு போற சாக்கில ஓடிவந்திருக்கேன். நீங்களே காப்பாத்தி வைங்க” என்றபடி சைக்கிளை மிதித்து பறந்தார். ரவியும் அம்மாவும் திகைத்து நின்றனர். அப்பா வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பி கொப்பளித்துவிட்டு வந்தமர்ந்தார். ஏறக்குறைய செய்துமுடியும் தருவாயிலிருந்த அனைத்து நகைகளையும் ஒரு சின்ன மண்குகையில் (தங்கம் உருக்க பயன்படுத்தப்படும் சிறுமண்குவளை) போட்டு குமுட்டி அடுப்பில் வைத்து குழாய் மூலம் ஊதினார். அப்பா தம் பிடித்து காற்றை ஊத ஊத வியர்வை ஊற்றாகப் பெருகியது. குமுட்டி நெருப்பில் வைக்கப்பட்ட மண் குகையில் தங்கம் அக்கினிகுழம்பாகத் தகதகத்தது. அம்மாவை அழைத்து, ரெண்டு கரித்துண்டுகளைத் தூளாக நுணுக்கச் சொன்னார்.

உருக்கி ஊற்றும் இரும்புக்காடிப்பலகையை எடுத்து நீளக் காடியில் கொஞ்சம் உமியையும் அதன் மீது கரித்தூளையும் பரப்பினார். பின் மீண்டும் குமுட்டி அடுப்பை ஊதினார். தங்கக் குழம்பை ஒரு குறடு கொண்டு பற்றி கரித்தூள் பரப்பிய இரும்பு காடியில் ஊற்றினார். தகதகத்த தங்க நீர் கறுப்புக் கம்பியாக திரண்டு உறைந்தது. அதன் மீது மேலும் கரித்தூளைப் பரப்பினார். நீர் நனைத்த துணியை அதன்மீது போர்த்தினார். தங்கம் கருங்கம் பியாகக் கிடந்தது. அது ஆறிய பக்குவம் கண்டு அதனை அரங்கள் வைக்கும் திறந்த டப்பாவில் அரங்களோடு அரங்களாக வைத்தார். கைகளைக் கழுவி முகம் துடைத்தார். வெற்றிலைகளை நரம்பு கிள்ளி பதமாய் சுண்ணாம்பு தடவி பாக்குகளை மெல்லும் வாயில் சுருள் சுருளாக வெற்றிலையை மென்றபடி யோசித்தார். அம்மாவை அழைத்து காது தோடுகளைக் கழற்றச் சொன்னார். அதனைக் கழுவி புளி ஊறிய நீரில் ஊறப் போட்டார்.

தெருமுனையில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து செருப்புச் சத்தங்கள் வீடு நோக்கி வந்தன. அப்பா பதற்றப்படாமல் சாவகாசமாக புளியில் ஊறிய தோடுகளை பூந்திக் கொட்டை ஊறிய மெருகுநீரில் நனைத்து, வெள்ளைக் குதிரை முடிக்கொண்ட பிரஷ்ஷால் தேய்த்துக் கொண்டிருந்தார். விருட்டென்று மேகம் மறைப்பதுபோல் வீட்டின் முன் அதிகாரிகள் மறைத்து நின்றுகொண்டு மூவர் மட்டும் உள்ளே நுழைந்தனர். அப்பா திடுக்கிட்டு பதற்றப்படுபவர் போல் பாவனையில் நிமிர்ந்து, சமாளிப்பது போல் “வாங்க சார், உங்களுக்கு யாரு வேணும்?”

“நீங்க தானே ராஜகோபால், பண்டரி செட்டியார் கடைக்கு நகை செய்யறவரு?”

“ஆமாம் சார், முன்னால அவரு கடைக்கு நகை செஞ்சுக்கிட்டு இருந்தேன். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் வந்ததில் இருந்து அவரு வேலை கொடுக்கிறதில்லை. நான் வயித்துப் பாட்டுக்காக பழைய நகைகளைப் பழுது பார்க்கிறது. பழைய கல் நகைகளுக்கு எண்ணெய் நீக்கி மெருகு போடறதுன்னு காலத்தை ஓட்டிக்கிட்ருக்கேன். இங்க பாருங்க இந்தத் தோடுகளுக்கு எண்ணெய் நீக்கிகிட்டுருக்கேன்.”

“ஏய்யா, பண்டரி செட்டியார் கிட்டே 500 கிராம் தங்கம் வாங்கி வேலை செஞ்சுகிட்டிருக்கிறதா தகவல் வந்துச்சே?”

“அப்படியா, வாங்க சார், நல்லா பாருங்க தங்கம் இருக்குதான்னு பாருங்க” என்றபடி அப்பா உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தார். வேட்டியை உதறிக் கட்டிக் கொண்டே கொஞ்சம் தள்ளி அதிகாரிகள் எதிரில் நின்றார். உதவியாளர் ஒருவர் அப்பா அமர்ந்திருந்த இடத்தில் பாய்க்கு கீழே, கல் வைக்கும் மேஜை இழுப்பறைகளில், குமுட்டி அடுப்பு உமிகளுக்கு இடையில் எல்லாம் தேடினார். இன்னொரு உதவியாளர் வீட்டில் துணிகள் வைக்கும் டிரங்க் பெட்டிக்குள், சாமி அலமாரியில், சாமி போட்டோவுக்கு பின் எல்லாம் தேடினார். அதிகாரிகள் வீட்டிற்குள் கண்களைச் சுழற்றினர். அம்மாவும் ரவியும் திக்திக்கென்று விழித்தபடி உறைந்து இருந்தனர். அப்பா மென்ற வெற்றிலையைக் குதப்பியபடி சகஜமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பத்து நிமிடத் தேடல். எதுவும் அகப்படவில்லை . சுருங்கிய முகத்தோடு வெளியேறினர்.

அதிகாரிகளிடம் அப்பா பவ்யமாகச் சொன்னார், “புண்ணி யவான்க தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்து எங்க பிழைப்பையே கெடுத்திட்டாங்க, அதிகாரிங்க நீங்க எங்க குடும்ப ஜீவனத்துக்கு மாற்று வழி பண்ணிக் குடுங்க. இல்லாட்டி பசி பட்டினியால நாங்க சாக வேண்டியதுதான்.”

“அய்யா, கவலைப்படாதீங்க. உங்களுக்கெல்லாம் வேற தொழில் பண்ண ஆயிரம் ரூவாக் கடனாக சர்க்காரு கொடுக்கப் போறாங்க” என்றார் தலைமை அதிகாரி.

“இனி நகைத்தொழில் உருப்படாது. பையனைப் படிக்க வைக்க ஏதாவது உதவி செய்யுங்க.”

“கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லதா நடக்கும்” என்றபடி அதிகாரிகள் நடந்தனர். அப்பா தெருமுனைவரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தார். அக்கம் பக்கத்தார் எல்லாம் என்ன, ஏதுவென்று விசாரிக்க மொய்த்துவிட்டனர்.

அப்பா வெற்றிலை எச்சிலைக் காறித்துப்பி, தண்ணீர் கொண்டு கொடகொடவென்று கொப்பளித்து உமிழ்ந்தார். “வந்தாங்க, பார்த் தாங்க, போயிட்டாங்க அவ்வளவுதான் நீங்க வீட்டுக்கு போங்க” என்று புன்னகைத்தார். வெற்றிலையால் சிவந்த அப்பாவின் உதட்டுப் புன்னகையின் கேலி இன்னும் ரவிச்சந்திரனின் மனதில் பளிச்சென்று மின்னுகிறது.

அன்று இரவு மணி பத்திருக்கும். அவர்கள் தூங்கிவிட்ட நேரம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு அப்பா எழுந்த கதவைத் திறந்தார். பண்டரி செட்டி யார் வேர்க்க விறுவிறுக்க பதற்றத்தோடு நின்றார்.

“அண்ணே , காலையில் வாங்க பேசிக்கலாம்” என்றபடி கதவை மூடிவிட்டார்.

காலையில் ஆறு மணிக்கு செட்டியார் வந்துவிட்டார்.

“அண்ணா என்ன ஆச்சு. தங்கத்தை காபந்து பண்ணீட்டிங் கல்ல. எப்படியாவது ஒளிஞ்சு கிளிஞ்சாவது ஒரு வாரத்தில் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்திடுங்க அது கல்யாண வேலை”

அப்பாவின் குரல் இறுகி இருந்தது. “உள்ளே வாங்கண்ணே , இந்தாங்க உங்க தங்கம். எடை போட்டுப் பாருங்க. பத்து கிராம் குறையுது. தொண்ணூறு கிராம் இருக்கு. எடுத்துக்குங்க” செட்டியார் அதிர்ச்சி அடைந்தார்.

“என்ன தங்கம்னு இரும்புக் கம்பியைத் தர்றீங்க?”

“அண்ணா , கருக்க காய்ச்சி இருக்கேன். கொண்டு போய் யாரு கிட்டேயாவது கொடுத்து நவச்சாரம் போட்டு உருக்கினா, நீங்க குடுத்த மச்சம் மாறாம தங்கம் இருக்கும்”

“என்னண்ணே இப்படி கோவிச்சுகிறீங்க. நல்ல தொழில் காரருக்கு இப்படி கோவம் வரலாமா?” “நல்ல தொழில்காரன்கிறதி னாலதான்.. தொழிலுக்கு மரியாதை கொடுத்து இப்படிப் பேசுறேன். கஸ்டம்ஸ் ஆபிசர் வர்றாங்கன்னு நீங்க சொன்னவுடனே தங்கத்தை குடுத்தேன்ல்ல. அப்ப வாங்கிட்டு போயிருக்கலாம்ல. இந்தத் தங்கத்தை அவங்க பறிமுதல் செஞ்சிருந்தா என் குடும்ப கதி என்ன ஆயிருக்கும்? முதலுக்காரன் சொகுசா இருக்கணும். தொழிலாளி அவதிப்படணுமா? இந்த புத்தியுள்ளவன் காற்றுகூட படக்கூடாது. தங்கத்தை எடுத்துகிட்டு போயிருண்ணே.”

“சரி, தங்கத்தை உருக்கி காட்டுங்க”

அப்பா, செட்டியாரை இருக்கச் சொல்லிவிட்டு குளித்து, பத்தி கொளுத்தி, பட்டறையை துலக்கி குமுட்டி அடுப்பைப் பற்ற வைத்தார். ஓரிடத்தில் நில்லாமல் அசைந்தபடியே நிற்கும் யானை போல செட்டியார் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். அப்பா கறுத்த கம்பியை நான்கு துண்டாக வெட்டி மண்குகையில் போட்டு குமுட்டி அடுப்பை ஊதினார். தங்கக் குழம்பாக மாறும் தருணத்தில் நவச்சாரப் பொடியை அதில் தூவினார். நீலநிறப் புகை வெளியேறி தங்கக்குழம்பு தகதகத்தது. உருக்கு காடி இரும்புப் பலகையை சுத்தம் செய்துவிட்டு, பற்றுக் கொறடால் பற்றி உருக்கு காடியருகே உள்ள வட்டப் பள்ளத்தில் வார்த்தார். தங்க நீர் பவுர்ணமி நிலாப் போல மின்னி உறைந்தது. செட்டியார் முகத்தில் தெளிவு வந்தது. தங்கத்தை இப்படியும் காபந்து பண்ணலாமோ என்று தனக்குள் முனங்கிக்கொண்டார்.

“சரிண்ணே. 10 கிராம் குறையுதே என்ன செய்ய?”

“கொடுத்த உருப்படி எல்லாம் செஞ்சு கல் வைக்கிற நேரத்தில உருக்கினா.. சேதாரம் போகுமல்ல”

“சரி அப்ப அந்தக் குமுட்டியில் இருக்கிற உமியையும், உருக்கு மண்குகையையும் குடுங்க. நான் சுத்தம் பண்ணி எடுத்துக்கிறேன்.”

அப்பாவுக்கு கோபம் நிலை கொள்ளலை.

“அண்ணே என் கோவணத்தையும் அவுத்து தர்றேன். அதுலு தங்க சன்னம் எதுவும் ஒட்டி இருக்கலாம்.”

செட்டியார் முகம் கறுத்துப் போனார். வெளியே செட்டியார் என்ன சொன்னாரோ ஏது சொன்னாரோ பஜாரில் யாரும் வேலை கொடுக்கவில்லை. பொதுவா தங்கப் புழக்கமும் குறைந்து போனது.

இந்த சமயத்தில்தான் ரவிச்சந்திரன் ஐந்தாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறி இருந்தான். ஆறாம் வகுப்பில் சேர்த்துப்படிக்க வைக்க பள்ளிக் கட்டணம் 13 ரூபாய். சீருடை துணி மணிகள் 30 ரூபாய். நோட்டுப்புத்தகங்கள் பத்து ரூபாய்னு ஓர் ஐம்பது ஐம்பந்தைந்து ரூபாய் தேவை. பணம் இல்லை. மக்கி மடிந்த ரேசன் அரிசி வாங்க நாள் கணக்கில் வரிசையில் நிற்கும் பஞ்ச காலம். பணப்புழக்கம் இல்லாத காலம்.

வயிற்றுப்பாடு எப்படி இருந்தாலும் மகன் இந்த நகைத் தொழில் செய்யக்கூடாது. படிக்க வைக்க வேண்டும். அம்மா புரிந்து கொண்டது. வெறும் மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொண்டு மாங்கல்யத்தை அவிழ்த்துக் கொடுத்தது. பவுன் கணக்கில் இரும் போட இரும்பாய் தங்கம் கிடந்த வீட்டில் தாலியில் கூட தங்கம் இல்லாமல்போனது. அம்மாவுக்கு கண்ணீர் பொங்கியது. அப்பாவின் உதடு காய்ந்து முகம் வறண்டு போயிருந்தது.

ரவிச்சந்திரன் நினைத்துப் பார்த்தார். அந்த இடத்திலிருந்து வாழ்க்கைப்பாடு இன்னும் நகராமல் இருக்கிறதா? அன்று நான் படிக்க அப்பா, அம்மாவின் தாலியை விற்றார். இன்று என் மகன் படிக்க நான் கழுத்து நகையை அடகு வைக்கிறேன். சமூகமும் விஞ்ஞானமும் வளர வளர, வறுமையும் வளர்க்கப்படுகிறதா?

“ரவிச்சந்திரன் சார்” என்று குரல்கேட்டு நடப்புலகிற்குள் நுழைந்தார். அதிகாலை பறவைகள் போல இமைகள் படபடத்தன. கண்ணோரம் ஒரு துணி திரண்டிருந்தது.

“இதோ வந்துட்டேன் சார்” என்று நகை மதிப்பீட்டாளரிடம் சென்றார் ரவிச்சந்திரன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top