முன்னறிவிப்பு

0
(0)

எண்ணை தேய்க்காதல்! வாரி முடித்திருந்தாள். ஒன்றிரண்டு முடிகள் காதோரம் தொங்கின. நெற்றி மையத்தில் வட்டமாக்க் கரும்பொட்டு! பேசரி ஜொலிக்காத மூக்கு மொழுக்கையாய் இருந்தது. பித்தளைக் கம்மல்கள் காதுகளை அலங்கரித்தன.

போலிஸ்டேஷன்முன் நின்றாள். முதலைவாய்போல கேட் திறந்திருந்தது. கேட்டின் தலைமேல் பெரிய பெரிய எழுத்துக்களில் ‘மகளிர் காவல் நிலயம்’ எழுத்துக் கூட்டி வாசித்தாள்.

தயக்கத்தோடு உள்ளே நுழைந்தாள். நடையில் தேக்கம்! கண்களில் மருட்சி! சற்றுமுன்வரை மனசில் நின்றிருந்த தெம்பு காணாமல் போயிருந்தது. இதயம் ‘துடிக்’ ‘துடிக்’ எனக் குதிரைவேகத்தில் பாய்ந்தது.

“நீ எந்தூரும்மா?”

திடுக்கிட்டு நின்றாள். குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். அங்கே இவளைப் போல் ஒரு பெண்! நாகரீகமாய் உடை அணிந்திருந்தாள். கண்களில் கருப்புக் கண்ணாடி.

“சொல்லும்மா, எந்தூரு?” அவள் குரல் இனிமையாய் ஒலித்தது.

கொஞ்சம் தைரியம் கிடைத்தது. தனக்கு நேர்ந்த கெதி இவளுக்கு உண்டாகவில்லை போலும். அதனால்தான் இனிமையாகவும் சந்தோஷமாகவும் நாகரீகமாகவும் இருக்கிறாள். தானும் இவளைப்  பால் பிறந்திருக்கவேண்டும்.

“எஸ் ஐ அம்மாவப் பாக்கணுமா?”

‘ஆமாம்’ என்று தலையசைத்தாள். அந்தத் தலையசைவு நடுக்கமானதாய் இருந்தது. மனசில் இருந்த பயமும் வாழ்க்கையில் கிடைத்த அவஸ்தையும் மல்லுக் கட்டின. விடுபட வேண்டும் அந்தக் கொலைகாரனிடமிருந்து.

‘ஆமாம்’ என்று மீண்டும் தலையசைத்தாள்.

“எம்பேரு சரஸ்வதி: ஒம்பேரு?”

நடுக்கத்தைக் காட்டாமல் இருக்க முயன்றாள். ஆனாலும் குரல் நடுங்கியது. “எம்பேரு……எம்பேரு…. காளியம்மா.”

“காளியம்மாவா?” எனக் கேட்டுவிட்டுப் பேப்பரில் குறித்துக் ;காண்டாள். “ஒம்புருஷம்பேரு?”

புருஷன் பேரைச் சொல்ல வாய்வரவில்லை. அது பெரிய தப்பு: தடுமாற்றம் உண்டானது. அவள் வம்சத்தில் யாருமே அப்படிச் சொன்னதில்லை: தப்புச் செய்யக் கூடாது.

“இது தப்பில்ல”” என்றது உள்மனம். அவன் ஒரு கொலைகாரன்: கொடுமைக்காரன்: அவன் பேரைச் சொல்வது தப்பே இல்லை.

“சொல்லும்மா” என்றாள் சரஸ்வதி. “காலம் எம்புட்டோ மாறிப் போச்சு: இது நாகரீக காலம்: புருஷன் பேரச் ;சால்றது சட்டப்படி தப்புக் கெடையாது.”

சரஸ்வதியின் வார்த்தையால் ஊக்கமடைந்தாள். கல்யாணத்துக்குப் பின் முதன்முறையாக அந்தப் பேரை உச்சரித்தாள். ‘கந்தசாமி!’

அதையும் குறித்துக் கொண்டாள்.

“அந்த மரத்தடியில போயி ஒக்காரு: அம்மா வாரதுக்கு இன்னும் ஒருமணிநேரம் ஆகும்.”

 

ஒருமணிநேரமா? மனசு திடுக்கிட்டது. புளிக் கொட்டரைக்குப்  போகவேண்டும். சுகந்தி புளித்தட்டிக் கொண்டிருப்பாள்.

“எங்கம்மா போற?” என்றாள் சுகந்தி.

“டேசனுக்கு.”

“எதுக்கும்மா?”

“சும்மாதான்.”

“அப்பாவ ரிப்போர்ட் பண்ணப் போறியா?”

எதுவும் பேசத் தோன்றவில்லை. அழுகை முட்டியது.

“சொல்லும்மா: அதுக்குத்தான?”

“ஆமா கண்ணு” என்றாள் இவள். “பொம்பள போலிஸ் வந்திருக்காம்: புகார் குடுத்தா கூப்பிட்டுக் கண்டிப்பாகளாம்.”

சுகந்திக்கு அழுகை வந்த்து: “அடிப்பதங்களாம்மா?”:

“இல்ல கண்ணு” என்று தோளைத் தொட்டு அணைத்துக் கொண்டாள். “சும்மா அரட்டுப் போடுவாகன்னு விசுவாசம் தாத்தா சொன்னாக.”

முகத்தில் நம்பிக்கை வரவில்லை: அதற்குமேல் பேசவும் தோனறவில்லை. கண்களில் நீர் கசிய புளித் தட்டத் தொடங்கினாள். இவள் முக்காடு போட்டுக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள்.

அணில் பிள்ளை ஒன்று மரத்தில் இருந்து இறங்கி ஓடியது: இன்னொன்று அதை விரட்டியது.

மரத்தருகே போனாள். பூமிக்குமேல் எம்பி இருந்த வேர்மேல் உட்கார்ந்தாள். அடித் தண்டில் முதுகைச் சாய்த்தபோது ஆசுவாசமாய் இருந்தது.

நேற்றிலிருந்து சாப்பிடவில்லை. களைப்பாய் இருந்தது. காதை அடைத்துக் கொண்டு வந்தது. செருமினாள். உமிழ்நீர் உண்டாகவில்லை. தொண்டையில் வரட்சி!

பக்கத்தில் இன்னொருத்தி உட்கார்ந்திருந்தாள். தலை நரைத்திருந்த அவள் முகத்திலும் சோகம்.

கேட்கலாமா என்று தோன்றியது. அவள் எதற்காக இங்கு வரவேண்டும் இந்த வயசில்?

‘அம்மா’ என்று கூப்பிட்டது நெஞ்சு: ஆனாலும் நாக்கு எழவில்லை. வாய்வரை வந்த கேள்வியை உள்ளுக்குள் திருப்பிஅனுப்பிவிட்டாள்.

களைப்பாய் இருந்தது. மரத்தில் சாய்ந்தாள். பசிவயிறும் வேப்பமர நிழலும் தூக்கத்தை அனுமதித்தன.

மூடிய விழிகளில் சின்னச் சின்ன நெருப்புப் பொறிகள் உருண்டு திரண்டு பெரிதாய்ச் சுடர்விட்டுப் பிரகாசித்தன. நூற்றுக் கணக்காய், ஆயரக் கணக்காய் நெருப்புத் து;ணடங்கள் முகத்தில் வந்து மோதின. புருஷனின் வக்கரித்த முகமும் சாராய வாடையும் தீக் குண்டத்தில் வெந்து போகாமல் இவளையும் சுகந்தியையும் வளையமிட்டு இறுக்கின.

சிவந்த கண்களும் வெடவெடவென நடுங்கிய மூக்குமாய் வீட்டுக்குள் நுழைந்தான். கால்கள் பின்னலிட்டுத் தடுமாறின. ‘சொத்’தென்று மதிலில் சரிந்து உட்கார்ந்தான்.

“சோறு வையி!” நாக்குக குழறியது.

“ஆக்கல” என்றாள் காளியம்மா. சுகந்தி நிலைப் படியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

“ஏன்?”

பதில் சொல்லாமல் கூரைமுகட்டை வெறித்தபடி இருந்தாள்.

“சொல்லுடி: ஏன் சோறு காச்சல?”

“கூலி தரல: நாளக்கிச் சேத்துத் தாராகளாம்.”

“கடன் வாங்க வேண்டியதுதான?”

“அதெல்லாம் என்னால முடியாது.”

“என்ன சொன்ன?” தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான். “ஒனக்கு அம்புட்டுத் திமுரா?”

“ஆமா! நீ சம்பாரிச்சுக் கொண்டாந்து கொட்டுரைல்ல: அதான் திமுரு.”

“ஆய்!” காட்டுப் பூனை மாதிரி கத்தினான். கைகளை ஓங்கிக் கொண்டு வந்தான். ஓங்கிய கை உயராமல் துவண்டு சரிந்தது. “நான் யாருன்னு நெனச்ச?”

இவள் அமைதியாய் இருந்தாள்.

“சொல்லுடி, நான் யாரு?” கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “கரட்டுப் பட்டி கந்தவேலு பேரன். ஒரு பொட்ட நாயி என்னய எதுக்குறியா?”

அடுப்படியில் கிடந்த விற்றகுக் கட்டையை எடுத்து முதுகிலும் தோள்பட்டையிலும் மாறி மாறி அடித்தான்.

காளியம்மா அலறினாள்.

“அப்பா…..” கத்திக் கொண்டே குறுக்கே பாய்ந்தாள் சுகந்தி.

“பொட்ட நாயி ஓடிப் போ!” அவள் கையையும் பிடித்து இழுத்து வாசலில் எறிந்தான்.

பலம் உள்ளமட்டும் அடித்தான். கீழே தள்ளிவிட்டு மிதித்தான். நாராசமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

“நீயெல்லாம் மனுசந்தானாப்பா?” பக்கத்துவீட்டு விசுவாசம் தாத்தா சத்தம் போட்டார்.

“ஒன் ஓக்யத என்னான்னு எனக்குத் தெரியாதாக்கும்?” அவரையும் மரியாதை இல்லாமல் பேசினான்.

“என்னடா ராஸ்கல்!” படியிறங்கி ஓடிவந்தார் தாத்தா.

பெண்கள் அவரைத் தடுத்தனர்.

“எலும்ப முறிச்சிடுவேம்படுவா!”

“நீ கிழிச்ச” என வாய்க்குள் முனகியபடி வீதியில் இறங்கியவன் ஏதோ யோசனையில் திரும்பவும் வீட்டுக்குள் நுழைந்தான். அடுக்குப் ப்பானையை நோண்டியவன் மேலாக இருந்த சின்னச் சட்டியை எடுத்து எறிந்தான். அது கீழே விழுந்து உடைந்து சிதறியது.

அடுத்த சட்டிக்குள் துழாவினான். ஒன்றும் கிடைக்கவில்லை. அதையும் கீழே எறிந்தான். அடுத்த சட்டியில் பத்து ரூபாய் இருந்தது.

சுகந்தி ஓடிவந்து அவன் கையைப் பிடித்தாள். ‘வச்சுருங்கப்பா: சேத்து வச்சுப் புதுச் சீல எடுக்கணும்.” முந்திக் கிழிசல் மனக் கண்ணில் தெரிந்தது.

“போ கழுத.” மீண்டும் அவளைக் கீழே தள்ளிவிட்டான்.

அந்த வீட்டை வீதி வெறித்துப் பார்த்தது. ஆண்களும் பெண்களும் ஒரு மௌனமான இறுக்கத்தோடு நின்றிருந்தார்கள். மாலை மறைந்த இரவுக் காற்று வெக்கையாய் இருந்தது காளியம்மாவுக்கு.

தெருவில் இறங்கினான். வார்த்தையாடிக் கொண்டு நடந்தான். முக்குத் திரும்பி மறைந்து போனான்.

எல்லாரும் ஆறுதல் சொன்னார்கள். பாத்துமா மாமி சேமியா உப்புமா கொண்டு வந்து தந்து சாப்பிடச் சொன்னாள்.

எதிர்வீட்டுப் பொன்னமக்கா ரேஷனில் வாங்கிய நூல் சேலையை சுகந்திக்குக் கொடுத்தாள். காளியம்மா வீட்டு ரேஷன் கார்டு அடகு வைக்கப் பட்டிருந்தது.

விசுவாசம் தாத்தா காளியம்மாவைக் கூப்பிட்டாள். “பொம்பளைகளுக்குன்னு பொம்பளைகளே வேல செய்யிற போலிஸ் ஸ்டேஷன் வந்திருக்கு: அங்க போயி புகார் பண்ண வேண்டியதுதான?”

சுரீரென்றது: கட்டியவனை ஜெயிலில் தள்ளி அடிவாங்க விடவா? வேண்டாம்: வேண்டவே வேண்டாம்.

“ஒங்களுக்கு சம்பாதிச்சுப் போடுறத விட்டுட்டு, நீங்க சம்பாரிச்சதயும் அள்ளிட்டுப் போயி குடிக்கிறானே: கொலகாரப் பாவி.”

“வேணாந்தாத்தா: என்ன பாவஞ்செஞ்சனோ: இந்த கெதியில கெடக்கேன்: அவனுக்கு அடிவாங்கிக் குடுத்து அந்தப் பாவத்தையும் சொமக்கணுமா?”

“இப்படியே பேசிப் பேசித்தான் ஆம்பளைக தப்புப் பண்றத அதிகப் படுத்துறீக.”

பெருமூச்சு விட்டாள். “மெத்தநாப் போச்சு: இன்னும் கொஞ்சநாதான்: இந்தப் பொட்டக் கழுதைய எவனுக்காச்சும் பிடிச்சுக் குடுத்துட்டன்னா நிம்மதியாக் கண்ண மூடிருவேன்: அப்பறம் அவன் அனாதிப் பயலா அலையட்டும்.”

“ஒன் இஷ்டம்” என்றார் தாத்தா.

மறுநாள்…….

கருக்கலில் எழுந்து புளித் தட்டப் போனார்கள். உடம்பு வலித்தது. அடிவாங்கிய இடங்கள் கன்றிப் போயிருந்தன. ஊசியால் குத்திக் குத்தி உருவின மாதியான வலி!

புளிக்கொட்டரைக்குள் நுழைந்தார்கள். பெரிய அம்பாரமாய்ப் புளக்குவியல்! பார்க்கவே பயமாய் இருந்தது. ஸ்டோர் ரூமில் ஸ்டாக் வைக்கப் பட்ட ஐஸ்புளி.

கூடையில் அள்ளினாள் காளியம்மா. நொந்துபோன கேப்பைக் களி மாதிரி கொசகொசவென இருந்தது.

கட்டிகட்டியாய்ப் பிணைந்து கிடந்த பளியைச் சவளம் சவளமாய்ப் பிரித்துப் போட்டாள். நாரும் பழமும் பிரிவினை இல்லாமல் ஒட்டிக் கிடந்தன. உருவி எடுப்பது சிரமம் என்று தோன்றியது.

சுகந்தி புளிச் சவளங்களைக் கைநிறைய அள்ளினாள். தட்டுகல்லில் வைத்து சுத்தியலால் தட்டித் தட்டிப் போட்டாள். ஓரடியில் ஈரடியில் புளி மசியவில்லை: நிறைய அடிவாங்கியது.

“ஆவி போகுது” என்று யாரோ முனகினார்கள். “ஐஸ் பளின்னாவே தட்டவும் முடியாது: எடுக்கவும் முடியாது.”

உலகம் வெறுப்பாய் இருந்தது. சூரியவெளிச்சம் கண்ணைக் கூச்சப் படுத்தியது. சூரியன் விழித்து இருட்டைக் கலைக்கிறது: விழித்தபின் நிம்மதி போய்விடுகிறது. கஷ்டமான வேலை! சந்தோஷமில்லா சம்பாத்தியம்! புருஷனின் சித்திரவதை!

செத்துப் போகலாமா? போகலாம்தான். நல்ல முடிவு. நிம்மதியான தூக்கம். சுகந்தியின் கெதி?

அவளையும் சேர்த்துக் கொண்டு………..இருவரும் தீவைத்துக் கருகிப் போகலாம்.

கண்ணீர் உதிர்ந்தது.

“அழுகுறியாம்மா?” என்றாள் சுகந்தி.

“இல்ல” என்றபடி கண்ணைத் துடைத்துக் ;காண்டாள்.

“காளியம்மா!”

யாரோ கூப்பிட்டார்கள். கேட்வாசல் பக்கம் இருந்து வந்தது குரல். ஏறிட்டுப் பாரத்தாள்.

கந்தசாமி நின்றிருந்தான்.

‘என்ன’ என்பதுபோல் தலையை மேல்நோக்கி அசைத்தாள்.

“இங்க வாயேன்.”

வரவில்லை. கடுப்போடு தலையைத் திருப்பிக் கொண்டாள்.

“சும்மா வா காளி.” அவன் குரல் மென்மையாய் ஒலித்தது. வெறுப்பு இல்லை, விகாரம் இல்லை, ‘என்ன மன்னிச்சுக்க’ என்பதுபோல் விழித்தான்.

எழுந்து வெளியே வந்தாள். சுகந்தியும் பின் தொடர்ந்தாள்.

“நான் ராத்த்திரி மொரட்டுத் தனமா நடந்துகிட்டேன்.”

எதுவும் பேசவில்லை: தலை கீழே கவிழ்ந்தது. கால் பெருவிரலால் தரையைக் கீறினாள்.

“கோவிச்சுக்காத காளி.”

‘சரி’ என்பதுபோல் தலையை ஆட்டினாள்.

“இன்னக்யும் எனக்கு வேல கெடக்யல: பசிக்கிது.”

பாவமாய் இருந்தது. இரவிலிருந்து சாப்பிடவில்லை போலும். கண்ணிரண்டும் கிடங்கு விழுந்து கிடந்தன.

“பத்து ரூபா இருந்தாக் குடேன்.”

“காசு இல்ல.”

“ரெம்பப் பசிக்கிதும்மா.”

“கடையில கடன் வாங்கி ஆக்கிப் போடுறேன்: வீட்டுக்குப் போ.”

“நீ எந்நேரம் ஆக்கி நான் எந்நேரம் சாப்பிட?”

“என்னங்கட்டும்?”

“அஞ்சு ரூபாயாச்சும் குடு.”

“இல்ல.”

“நெசமாவே இல்லையா?”

“இல்ல.”

உர்ரென்று முறைத்துப் பாரத்தான்.

காளியம்மா சுகந்தியை இழுத்துக் கொண்டு புளிக் கொட்டரைக்குள் நுழைந்தாள்.

நினைவுகள் போராடின. அவன்மீது இருந்த கோபம் குறைந்து அனுதாபம் கூடியது. வீட்டுக்குப் போய் ஆக்கிப் போடலாமா?

வேண்டாம் என்றது மனசு. உன்னைப் போல் அவனும் ஒருநாள் பட்டினி கிடக்கட்டும்.

“பசிக்கிதும்மா” என்றாள் சுகந்தி.”

“வட வாங்கிட்டு வந்து தின்னு.”

“சோறு காச்சுனா அப்பாவும் சாப்பிடுவாருல்ல?” மகள் முகத்தை ஆழமாய்ப் பார்த்தாள்.

தட்டுக்கல்லில் பார்வை இறக்கினாள் சுகந்தி. சுத்தியல் வேகமாய் இயங்கியது. புளிச் சவளம் அடிபட்டு முத்துச் சிதறியது.

பசிக்கிறது என்று சொன்னவனைத் தண்டிக்கக் கூடாது: இன்று ஒருநாள் மன்னித்து விடலாம்.

வீட்டுக்குப் புறப்பட்டாள். கதவு திறந்து  கிடந்தது. சாமான்கள் தாறுமாறாய்ச் சிதறிக் கிடந்தன. நெஞ்சு துணுக்குற்றது.

விஸ்வாசம் தாத்தா கூப்பிட்டார். “பித்தள செம்பு, பித்தள வட்டி, குத்துவிளக்கு மூணையுங்காணலியா?”

“ஆமா தாத்தா.”

கந்தசாமி தூக்கிட்டுப் போய்ட்டான்.”

“அடப்பாவி!”

“வித்துக் காசு வாங்கி மூக்குமுட்டக் குடிப்பான். குடிச்சுட்டு வந்து ஒன்னயப் போட்டு அடிப்பான்.”

உடம்பு வெலவெலத்தது. திண்ணையிலேயே உட்கார்ந்து அழுதாள்.

“அழுகுறதுல பிரயோஜனமில்ல: அவன பயமுறுத்தி வக்யணும்.”

“காளியம்மா.”

கூப்பிடும் குரல் கேட்டு உலுக்கி விழுந்தாள். கையை ஊன்றி எழுந்து நின்றாள். சரஸ்வதியோடு  வள்ளையும் சொள்ளையுமாய் ஓர் இளைஞன்.

“இவர்தான் நகரச் செயலாளர்” என்றாள் சரஸ்வதி. “இவர் சொன்னாத்தான் கேஸ் எடுப்பாங்க.”

கையெடுத்துக் கும்பிட்டாள்.

“இருக்கட்டும்” என்றான் இளைஞன். கையிலிருந்த ரெண்டு மூணு பேப்பர்களைப் புரட்டினான். “கந்தசாமி சம்சாரம் காளியம்மாவா?”

“ஆமாங்கய்யா.”

“நூறு ரூபா குடும்மா.”

“நூறு ரூபாயா? எதுக்கு?”

சரஸ்வதி கண்களை இடுக்கிக் கொண்டு ஒரு தினுசாய்ப் பார்த்தாள். “ஸ்டேஷன் செலவுக்கு.”

காளியம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நூறு ரூபா என்பது நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாத கனவு வருமானம்.

“சீக்கிரம் எடு: நாங்க அடுத்த கேஸப் பாக்கணுமில்ல.”

என்ன விஷயம் என்றுகூடக் கேட்கவில்லை: வீட்டில் என்ன நடந்தது என விசாரிக்கவில்லை. அதற்குள் பணம் கேட்கிறார்கள். பணச் செலவு இல்லை என்றல்லவா விஸ்வாசம் தாத்தா சொல்லியிருந்தார்.

“எங்கிட்ட காசு இல்ல தாயி.”

இளைஞன் நகர்ந்தான்.

“காசுபணம் இல்லாம ஏன் ஸ்டேஷனுக்கு வரணும்?” என்று சடைத்துக் கொண்டாள் சரஸ்வதி.

பைக் சத்தம் கேட்டது.  கூடி இருந்த எல்லாரும் எழுந்து ஒதுங்கி நின்றார்கள்.

பைக் ஓரமாய் ஒதுங்கி நின்றது. ஆண்போலிஸ் மாதிரி முழுக்கால் டிரவுசரும் அரைக்கைச் சட்டையும் அணிந்து ஒருத்தி பைக் ஓட்டி வந்திருந்தார். சரஸ்வதி சொன்ன அம்மா இவராகத்தான் இருக்க வேண்டும்.

நெஞ்சுக்குள் ஒரு பரபரப்பு! உணர்ச்சியில் ஒரு சுறுசுறுப்பு! அம்மாவைத் தானே தனியாய்ச் சென்று பார்த்துவிட்டால் என்ன?

சோர்வை உதறி எறிந்துவிட்டு விறுவிறுவென நடந்தாள். பைக்கில் இருந்து இறங்கிய அம்மாவின் அருகில்  சென்றாள். தடாலெனக் காலில் விழுந்தாள். முதுகில் சுரீரென்று வலித்தது.

“எந்திரி! எந்திரி! என்றாள் அம்மா. “ஒனக்கு என்ன வேணும்?”

தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற காளியம்மா கண்களில் நீர்புரள, “ எங்க வீட்டுல…..” என்று ஆரம்பித்தாள். நெஞ்சு அடைத்தது. குரல் தழுதழுத்தது.

“கண்ணத் தொடச்சுக்கோ: என்ன விஷயம்னாலும் அவங்க கிட்ட சொல்லு.”

முகத்தை முந்தானையால் துடைத்தாள். அம்மா காட்டிய திசையில் திரும்பியபோது அங்கே புன்னகைபூத்த முகத்தோடு நின்றிருந்தாள் சரஸ்வதி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top