முடியாதவைகள்

0
(0)

இன்று கடை அடைப்பு, வெயிலும் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. விசிறியை எடுத்துக் கொண்டு வெளித் திண்ணையில் வெறும் மேலோடு பாக்கியநாதன் உட்கார்ந்தார். இடுப்பில் வேட்டியும், மடியில் துண்டும் கிடந்தன. இளம் தொந்தி சற்றுக் கனத்த உடம்பு. முகத்தில் நாற்பது வயது முதிர்ச்சி. வெயிலுக்கு சுகமாக விசிறிக் கொண்டு சுவரில் சாய்ந்தார். அவரைப் பற்றியே சிந்தனை கிளம்ப ஒரு சுகமயக்கத்தில் ஆழ்ந்தார்.

நாற்பது வயதுங்கறது வாழ்க்கைல ஒரு உன்னதமான காலம். உயர்வான நிலைல நிறைவான வாழ்க்கைய அனுபவிக்கிற கட்டம். வயசாகி மனசும் உடம்பும் தளர்ந்து போக கிழடுமில்லாம அவசரப்படுற சிறுசுமில்லாம ஒரு நிலைப்பட்ட கட்டம்.

மலை கல்லில் சல சலத்து ஓடி, சிற்றாறு பெருகி காட்டாறுப்பாஞ்சு, ஓடைலபுரண்டு வண்டல் வளத்தோடு கலங்கலாச் சேந்து, சமதளத்துக்கு வந்து அமைதியா அடக்கமா ஆறு பாயுது. அதுல அந்த சிற்றாறு சல சலப்பு கரைபொறளும் கோபமில்ல. அதுக்குப் பதிலா அமைதி இருக்கு, பாசனத்துக்கு கட்டுப்பட்ட ஓட்டமிருக்கு. வண்டல் இருக்கு, வளமிருக்கு, அது மாதிரி இந்த நாற்பது வயசுங்றதுபல அனுபவத்தோட பக்குவப்பட்டு பயனுள்ள காலம். நாற்பது தாண்டி, அம்பது அறுபது ஆயிட்டா நெலமையே வேற, அந்த நெலமைல எதுவுஞ் செய்றத விட செய்யாம இருக்கிறதுதே நல்லது.

இப்படி யோசித்தவருக்கு சாவடித் தெரு மாரிச்சாமியின் நினைவு தான் வந்தது. மாரிச்சாமிக் கிழவனுக்கு வயது அறுபது எழுபது இருக்கும். சரியாகச் சொல்ல முடியாது. அவர் காலத்தில் யார் கணக்கு வைத்தது? அவர் பேரனுக்குக் கல்யாணம். அவனுக்கு பேங்கில் வேலை பொண்ணுக்கும் அதே பேங்கிலேயே வேலை. இப்படி அமைவதே கடினம். பையனும் பொண்ணும் பேசி இருக்கிறார்கள். விரும்பி இருக்கிறார்கள். இதற்கு யார்தடை சொல்வார்கள்? எந்தத் தடையுமில்லாமல் இரண்டு பக்கமும் சம்மதம் கிடைத்து விட்டது. சாதியும் இரண்டு பேருக்கும் ஒரே சாதி. இதற்கு மேல் என்ன வேண்டும்.?

பேசி முடிப்பதற்கும், மற்ற விபரங்களுக்கும் பாக்கியநாதனும் போயிருக்கிறார் இப்படி இருக்கும் போது அந்த மாரிச்சாமிக் கிழவன். ஜாதகத்தை தூக்கிக் கொண்டு வந்து விட்டார். அந்த நேரத்தில் வேறு வெளியாட்கள் யாரும் இல்லாமல் போனது நல்லதாகி விட்டது. அதுல பொருந்தல இதுல அமையலன்னா. இந்தக் கிழவன் சொன்னதையயல்லாம் போட்டு ஒரே அமுக்காக அமுக்கி, சும்மா கெடக்க மாட்டியா? வயசான காலத்துல இதெல்லாம் ஒனக்கு எதுக்கு? எல்லாம் நாங்க பாத்துக்குவோம் …. நீராட்டுக்குக் கெட …. என்று அதட்டல் போட்டு கிழவனை அமுக்கினார்கள். காரியத்தை முடித்தார்கள்.

முதுகு நசநசத்தது. விசிறிக்கம்பை திருப்பிப் பிடித்து சொரிந்து கொண்டார். சரியான நமைச்சல். திரும்பிப் பார்த்தார். வட்டமாக ஆப்பம் அளவிற்கு சுவரில் ஈரம் இருந்தது. முதுகில் சுண்ணாம்பும் ஒட்டி இருந்தது. துண்டை முதுகில் போட்டு மேலும் கீழுமாக இழுந்தார். வேப்பங்காற்று சுகமாக வீசியது. முருங்கையும் ஆடியது. சிட்டுக் குருவிக்கும் சிறியதாக கருப்பாக ஒரு குருவி, பெயர் தெரியவில்லை, உட்கார்ந்து முருங்கைப் பூவை கொத்திக் கொத்தி கீழே தள்ளிக் கொண்டிருந்தது.

பாக்கியநாதனுக்கு தெருவில் மதிப்பு அதிகம். கல்லூரிப் படிப்பு வேலைக்காக ஊர் ஊராய் அலைந்த அனுபவம். பல கம்பெனிகளில் ஏறி இறங்கிய பயிற்சி. உலகைப் புரிந்து கொண்ட ஞானம் இப்படி உருவாகி, வேலை எதுவும் கிடைக்காமல் வீடு திரும்பி, மிஞ்சி நின்ற நிலத்தை விற்றுக் கடை வைத்தார். வியாபாரம் பிடித்தது. இவரும் ஊர் சுற்றுவதை நிறுத்தி ஊரில் நிலைத்தார். ஊரும் இவரைப் புரிந்து மதிப்பு வைத்தது.

இப்போதெல்லாம் எதற்கும் பாக்கியநாதன் தான். நல்லது கெட்டதற்கு யோசனை கேட்பதிலிருந்து குடும்பச் சண்டை தெருச்சண்டை வரை வந்தார்கள். நாலு இடங்களுக்குப் போவது நாலு மனிதர்களிடம் பேசுவது என்று ஆகிவிட்டது. நல்ல மாப்பிள்ளை சிக்கினால் சொல்லச் சொல்லி பெண் வைத்திருப்பவர்கள் சொல்வார்கள். உள்ளூர் படிப்பு முடிந்து வெளியூர் படிப்பிற்கு யோசனை கேட்பார்கள். படித்தது போதும் என்றோ குடும்ப கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ ஏதாவது வேலைக்கும் வேறு சொந்த முயற்சிக்கும் வருவார்கள்.

கனவுகளோடு கல்லூரி விடுதிகளில் வாழ்ந்த பிறகு, அந்தக் கனவுகள் கலைந்து விடாமல் அப்படியே நனவாக ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். பட்டத்தை வாங்கிய உடன் வந்துவிடும் என்று நினைத்திருப்பார்கள். விளம்பரங்களைப் பார்த்து இந்த வேலை சரியில்லை. அந்த வேலை வேண்டாம் என்று ஒதுக்கி, நல்லதாக மனுச் செய்வார்கள். மனுச் செய்துவிட்டு இவரது திறமையைப் பார்த்த உடன் ஆர்டர் வந்து விடும் என்று விரைப்பாக நடப்பார்கள். அனுபவப்பட்ட பிறகு தான் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்று அலைய ஆரம்பிப்பார்கள். இவரும் அப்படி நடந்தவர் தான். நடந்து நடந்து பார்த்துச் சலித்த போது தான் பக்கத்து வீட்டுப் பாட்டி கேட்டாள். “ஏண்டாப்பா ….. பாக்கியம் …. படிச்சியே வேலக்கிப் போகலயா?” “போகணும் பாட்டி…. இன்னும் வேல கெடைக்கல” “வேல கெடைக்கலயா! ஏண்டா? படிச்சதுக்கு வேல போட மாட்டாங்களா?”

“அவங்களாப் போட மாட்டாங்க நாமதான் வேல தேடணும்….. ரெண்டு வருசமா அதுக்குத்தான் அலையிறேன்.”

அலையிறீயா – அப்படி என்னத்தடா படிச்ச?.. வேல கெடைக்கறதாப் பார்த்து படிக்காமா!”

“எல்லாப் படிப்பும் இப்படித்தான் பாட்டி, எதப் படிச்சாலும் வேல அதாக் கெடைக்காது. நாம தான் தேடணும்”

“என்னடா இது …. அக்குரும்பா இருக்கு! பின்ன எதுக்குப் படிக்கணும், வேல கெடைக்காத படிப்ப? இப்படி அலையிறதுக்கா? நகைய வித்து நட்ட வித்து, கருமாதிப்பட்டு ஒங்க ஆத்தா ஒண்ணப்படிக்க வச்சது எனக்குல்ல தெரியும்!” “என்ன செய்றது பாட்டி!” “என்ன செய்றதா? நகைய வித்த பணத்துல கட வைக்கலாம் நெலத்த விக்காம இருந்தா பாடுபடலாம். என்ன செய்றதுங்கிறியே!… நல்ல பயடா … சரி, ஆனது ஆகட்டும் இனி எப்ப வேல கெடைக்கும்?”

“எப்பன்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தனும் ஏழெட்டு வருமா அலையிறான். ரெண்டு வருசத்துல கெடைச்சவனும் இருக்கான். கெடைக்காமப் போனவனும் இருக்கான் …. எப்பக் கெடைக்கும்னு சொல்ல முடியாது.” பாட்டிக்கு கோபம் வந்து விட்டது. “நல்லா இருக்குடா ஒங்க பொழப்பு நாறப் பொழப்பு… ஆமா… எனக்கு எப்படித்தேன் வருதுங்கற … வெளக்கமாத்த …. போயிரு நல்லாக் கேட்டுருவேன்.”

அதை நினைத்து பாக்கியநாதன் சிரித்துக் கொண்டார். அந்தப் பாட்டியை இவரால் மறக்க முடியாது. போன வருடம் இறந்து விட்டார். அது வரையிலும் ஏதாவது இப்படி விசாரிக்காமல் இருக்கமாட்டார்.

இப்போதுள்ள இளைஞர்கள் மாறிவிட்டாலும் அந்த நிலைமைகள் மாறவில்லை. அது அதிகமாகி இருக்கிறது. இவரது அனுபவங்களை யெல்லாம் சொல்லுவார். கனவுலகிலிருந்து அவர்களை மீட்டு, இந்த உலகிற்கு கொண்டு வருவார். நம்பிக்கையை ஊட்டி புது முயற்சிகளுக்கு யோசனை செய்வார். அனுபவம் ஏற்படாமல் இன்னும் கனவுலகிலேயே மிதப்பவர்களுக்கு இது கசப்பாக இருக்கும். புத்தி சொல்கிறார். தற்பெருமை பேசுகிறார் என்று நினைப்பார்கள். இதனால் ஊருக்குள் இவருக்கு பட்டப்பெயர் இருக்கிறது. இவர் காதுக்கு அது எட்டவில்லை. “மண்டை வீங்க” என்று ரகசியமாகச் சொல்லிக் கொள்வார்கள். அந்தக் கனவுலக இளைஞர்கள் தான் இந்தப் பெயரை வைத்தது. “ஏங்க… திண்ணைல ஒக்காந்து என்ன செய்றீங்க?” வீட்டுக்குள்ளே இருந்து இவரது மனைவி கலாவதியின் குரல் வந்தது. இவர் முதுகு சொரிந்து கொண்டிருந்தார். “ஏன் …. என்ன செய்யணும்?” “இல்ல – மரத்துல முருங்கக்கா கெடந்துச்ச புடிங்கிக் குடுத்தீங்கன்னா சாம்பாரு வைக்கலாம்னா பாக்றேன் …. வேற காயுமில்ல” எட்டிப் பார்த்தார். நாலைந்து காய்கள் தொங்கின. முருங்கைக் காயை சாம்பாராக வைத்தாலும் சரி, கூட்டாக வைத்தாலும் சரி, அல்லது வேறு எப்படியாக வைத்தாலும் சரி முருங்கைக் காய் இருந்தாலே போதும் இவருக்கு நினைத்த போது நாக்கில் எச்சில் ஊறியது. “உள்ள தொரட்டிக் கம்பு இருக்கு எடுத்துக் குடு” துண்டை திண்ணையில் போட்டு விட்டு எழுந்து நின்றார். இப்போது ஐந்தாறு காய்களும் ஏழட்டுப் பிஞ்சுகளும் தெரிந்தன. கலாவதி தொரட்டியை நீட்டினாள். பக்கத்தில் தொங்கிய காயை தொரட்டியில் மாட்டி விசுக்கென்று இழுந்தார். சொத்தென்று விழுந்தது. இரண்டு காய்கள் இப்படி விழுந்தன. மூன்றாவதை விசுக் கென்று இழுத்த போது நழுவியது. தொரட்டியை மாட்டி ஒரு திருப்பு திருப்பி சடக்கென்று இழுத்தார். காய்விழுந்து விட்டது. இவருக்கும் திருப்தி, நாலாவது திருப்பும் போதே ஒடித்து விழுந்தது. சிரமமில்லை.”

அடுத்த இரண்டும் உச்சியில் இருந்தன. எட்டவில்லை. எக்கி எக்கிப் பார்த்தார். எட்டவில்லை. ஒரு குச்சியைக் கட்ட வேண்டும். வேப்ப மரத்தடியில் ஒரு முழுக்குச்சி கிடந்தது. தொராட்டிக் கம்பில் வைத்து சரடு போட்டுக் கட்டினார். இப்போதும் எட்டவில்லை. பார்ப்பதற்கு ஒரு அடி எட்டாதது போல் தான் தெரிந்தது. ஒரு முழக் குச்சியைக் கட்டிய பிறகும் அப்படித்தான் தெரிகிறது. கொஞ்சம் எக்கிப் பார்த்தார். முருங்கைக் காயின் நுனியில் தொடுவது போல் தெரிந்தது. காற்றுக்கு ஆடி அதுவும் ஒதுங்கி விட்டது.

இவருக்கு எரிச்சலான எரிச்சல். பிடிங்கிய காய்களே போதும். ஆனாலும் மனது கேட்கவில்லை. இதை அப்படியே விட்டு விட விரும்பவில்லை. இவ்வளவு சிரமப்பட்டு அதைப் பிடுங்காமல் விடுவதா?

இன்னொரு குச்சியைத் தேடி எடுத்து இரண்டாவது ஒட்டுப் போட்டார். இப்போது தொரட்டி நேராகவே நிற்கவில்லை. ஆனால் எட்டுவது போல் தெரிந்தது. சிரமப்பட்டு காய்க்குப் பக்கத்தில் கொண்டு வந்தார். காய் காற்றுக்கு ஆடியது. அதற்குத் தகுந்தபடி தொரட்டியை ஒதுக்கினார். தொரட்டி வளைந்து நன்றாகச் சாய்ந்து விட்டது. கையும் ஆட ஆரம்பித்து விட்டது. ச் சே… என்று வந்தது திண்ணைக்கு வந்து துண்டை எடுத்து முகத்தை துடைத்தார். மூச்சு வாங்கியது.

எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்யாமல் விட்டதில்லை. முடியாததையெல்லாம் முடித்துக் காட்டியவர். கேவலம் இந்த முருங்கைக்காய் சிக்கமாட்டேன் என்கிறதே! வெறுப்பாக இருந்தது. அந்தச் சாம்பாரும் கூட்டும், அதன் மணமும் ருசியும் இப்போது மறந்து விட்ட து.

எப்படியும் பிடிங்கி விட வேண்டும். தொரட்டியை நிமிர்த்தினார். அது ஆட்டம் போட்டது. நன்றாக கட்டி விட்டு உயர்த்தினார். இன்னும் ஒரு அடி இருந்தால் போதும். ஆனால் குச்சி கட்ட முடியாது. மரத்தில் லேசாக கொஞ்சம் ஏறினால் விசுக்கென்று பிடிங்கி விடலாம்.

அடிமரத்தில் காலை வைத்து, ஒரு கொப்பை பிடித்து இன்னொரு காலை உயர்த்தினார். சடக்கென்று சத்தம் வந்தது. அப்படியே விட்டு விட்டார். முருங்கை மரத்தில் போய் இந்த நாற்பது வயதில் ஏறினால் அது தாங்குமா? நல்ல வேளை! இதை யாரும் பார்க்கவில்லை. இவருக்குள்ள மதிப்பிற்கு முருங்கை முறிந்து இவர் கீழே விழுந்தால் எப்படி இருக்கும்.

சோர்ந்து போனார். முடியாத காரியமும், பொருந்தாத யோசனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதையும் லேசாக நினைத்து விட முடியாது.

இவர் இப்படி யோசிக்கும் போது, டூர்……… டூர்……. என்று பஸ் ஓட்டிக் கொண்டு ஒரு சிறுவன் வந்து சடன் பிரேக் போட்டு நிறுத்தி, வண்டியை ரிவேர்சில் எடுத்துக் கொண்டிருந்தான்.

இவனை மரத்தில் ஏற்றி விட்டால் பிடிங்கி விடுவன். ஆனால் அது தோல்வி ஆகிவிடும். முடியாத வேலை என்று ஆகி விடுமே! சின்னப் பையனிடம் போய் உதவி கேட்பதா? பையன் ரிவேர்சில் போய்க் கொண்டிருந்தான். இவர் மனதும் சலனப்பட்டது. இந்த விசயத்தில் போய் கௌரவம் பார்ப்பதா? வயதைப் பொருத்து விசயத்தைப் பொருத்துத்தான் காரியத்தைச் செய்ய முடியும். முடியும் என்று நினைத்து விட்டால் மட்டும் முடிந்து விடுமா என்ன! முடியாத காரியமே இல்லையா?

என்னாங்கடா ஒங்க படிப்பு…. வேல கெடைக்காத படிப்பு… என்று பாட்டி கேட்டது நினைவிற்கு வந்தது. அதுவும் முடியாத காரியம்.

அப்படி யாரைக் கேட்டார். இவரையா, இவர் படித்ததையா, வேலையையா வேலை கொடுக்காத அரசாங்கத்தையா? அல்லது எல்லாவற்றையும் சேர்த்தா?

அது எப்படி. இருந்தாலும் அதற்கு இவரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்போதும் முடியவில்லை.

வேலை கிடைக்காத படிப்பு, என்றால் யார் பதில் சொல்வது? என்ன அர்த்தம்! யோசித்துப் பார்த்தால், வேலையும் படிப்பும் போல் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன. குடும்பமும் நிம்மதியும் வாழ்க்கையும் மகிழ்ச்சியும், கிராமமும் வசதியும், குழாயும் தண்ணீ ரும் பதவியும் நேர்மையும் வேலையும் கூலியும், திறமையும் சாதனையும் யோசிக்க யோசிக்க வந்து கொண்டிருந்தன.

இவைகள் எல்லாம் முடியாதவைகள் தானா. ஏன் முடியாது? அந்தச் சிறுவனை மரத்தில் ஏற்றி தொரட்டியைக் கொடுத்தால் காய்கள் விழுந்து விடுமே இவ்வளவு சிரமும் ஏற்படாதே. அவனோடு ஒத்துப் போக, ஒன்றுபட மனம் வரவில்லை. தற்பெருமைதடையாக இருக்கிறது. இது என்ன பெருமை?

காரியத்தைப் பொறுத்து ஒற்றுமையைப் பெரிதாக்கினால் அதிகமாக்கினால் வேலை கிடைக்காத படிப்பு மட்டுமல்ல, எல்லா நிலைமைகளையும் மாற்றி நாட்டையே வளமாக்க முடியுமே! ஒற்றுமையும் வெற்றியும் … நாடும் வளமும்.

இப்படி நினைக்கும் போதே உற்சாகம் ஏற்பட்டது. நம்பிக்கையும் வந்தது. பையனைத் தேடினார். அவன் ரிவேர்சிலேயே போய் முக்கில் திரும்பிக் கொண்டிருந்தான். வண்டியை இன்னும் திருப்பவில்லை. திருப்பி விட்டால் பறந்து விடுவான். இனி யோசிக்க நேரமில்லை. “டேய் ….ய்” உற்சாகமாகத் கத்தினார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top