மின்னல்பொழுது

5
(2)

உட்காராமல் அங்குமிங்கும் அலைந்தான். எல்லோரும் உட்கார்ந்து கொண்டோ படுத்தோ நித்திரை வசப்பட்டு விட்டார்கள். பஸ் இனிமேல் காலையில் தான். நிச்சயப்பட்டுவிட்டது. பெருக்கி கழுவி விட்டது மாதிரி பஸ் ஸ்டாண்ட். மழை வந்தாலும் வரலாம். அவனைப்போல தூக்கம் வராமல் ஒன்றிரண்டு பேர் டீக்கடை ஓரங்களில் வடிந்திருந்தனர். அவன் தூங்குகிற ஒவ்வொரு முகத்தையும் முகபாவத்தையும் பார்த்துக்கொண்டே நடந்தான்.

இன்னமும் ஆறு மணிநேரம் இருந்தது, முதல் பஸ் வர. பஸ் ஸ்டாண்ட் ரொம்பவும் சின்னது. நாலைந்து முறை சுற்றிவிட்டான். ரெண்டு டீயும் குடித்தாயிற்று. இனி என்ன செய்யலாம்? திரும்பிய போது எதிர்ப்பட்ட முகம் கௌரியை நினைவுபடுத்தியது. கௌரி… கௌரி… வாய் முணு முணுத்த போது முகம் வியர்வையில் நனைந்தது. அவன் வேகமாக பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே நடந்தான்.

தெரு கொஞ்சம் மாறியிருந்தது. புதிதாய் வீடுகள் முளைவிட்டிருந்தன. ஆனால், எப்போதும் போலவே தெரு விளக்குக்கம்பம் குப்பைகளுக்கிடையில் பூத்திருந்தது. புதிதாய் டியூப்லைட் தெருவுக்குள் பிரகாசித்தது. தலைமாடு கால்மாடாய் குடும்பங்கள் பரவிக்கிடந்தன. அவர்களின் சுதந்திரம் சந்தோஷம் தருவதாய் இருந்தது. வீட்டை அடையாளம் கண்டுகொண்டான். அவன் முன்பு பார்த்த மாதிரியே சந்தனக் கலரில் பார்டர் அடிக்கப்பட்ட வாசல் மாறாமலிருந்தது. வீட்டைக் கண்டதும் படபடத்தது நெஞ்சு. வீட்டின் முன் நின்றான். இப்படியே திரும்பி விடுவோமா? கதவைத்தட்டக் கையை ஓங்கியபோது எங்கோ காவல்படையின் விசில் சப்தித்தது. குற்றவாளி போல் அங்குமிங்கும் பர பரவெனப் பார்த்தான். திரும்பிவிடலாமா? கூண்டில் ஏறிவிட்டு தப்பிக்க நினைப்பதா? தண்டனை என்னாவது?

“கௌரி… கௌரி…”

தொண்டையிலிருந்து வெறுங்காற்றாய் வந்தது. என்ன ஆச்சு. பேச்சு நின்றுவிட்டதா? இதுதான் தண்டனையா? பயத்தில் கொஞ்சம் சத்தமாகவே ‘கௌரி’என்று கத்திவிட்டான். வீட்டுக்குள்ளிருந்து குரல் கேட்டது – ‘யாரது?’

‘கௌரி இருக்காளா?’

இது எல்லாரையும் கொஞ்சம் அவசரமாக எழுப்பிவிட்டது போல் தோன்றியது. லைட் ஒளிர்ந்தது. வாசல் கதவைத் திறந்தவர் இவனைப் பார்த்ததும் அகலமாய் கண் விரித்து,

“வாங்க தம்பி வாங்க… வாங்க…” பரபரப்புடன் உள்ளே நடந்தார் அந்தப் பெரியவர்.

“கௌரி… கௌரி யார் வந்திருக்கான்னு பாரு…”

குரலில் ஆனந்தம் இழையோடியது. அவள் வந்தாள். முதலில் சரியாகக் கவனிக்காதவளே போல கண்களைக் கசக்கிக் கொண்டாள். சட்டென ஒரு வலி இதயத்தில்! உடம்பு சிலிர்த்தது. முகம் சுருங்கி விரிந்தது. ‘பிரார்த்தனை பலித்துவிட்டது…’

“வாங்க.”

குரல் தழு தழுத்து சோகமாய் ஒலித்தது. அழுகை பீறிடும் போல முந்தானையால் அடக்கினாள். கண்கள் அருவியாய் கொட்டியது. அவனுக்கு முகம் விகாரமானது. நிலைகொள்ளாமல் தவித்தான். முள்ளின் மேலே இருப்பதைப் போல துடித்தான். உள்ளேயிருந்து அவளுடைய அம்மா வந்தாள்.

“வாங்க தம்பி…”

அழுத்தமாய் அழைத்தாள். யாருக்கும் அடுத்து என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அமைதி. ஒரு நிமிஷம் இறுக்கம். வியர்வையில் நனைவது போல உணர்வு அவனுக்கு. சட்டைப்பித்தானைக் கழற்றி விட்டான். கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்தான். எல்லோர் முகத்தையும் தவிர்க்க விரும்பினான். குறிப்பாக கௌரியின் முகம். அதுவும் அந்த முகத்தில் தோன்றிய உணர்ச்சிகள்… அவனால் தாங்க முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். வீடு கொஞ்சமும் மாறவில்லை. பேசாமல் ஏதாவது பத்திரிகையில் பயணம் போய் நேரத்தைக் கழித்திருக்கலாமோ. முள்ளாயிருந்தது உட்கார்ந்திருந்த நாற்காலி. இவள் ஏன் இப்படி ஆகிவிட்டாள். இருபத்தெட்டு வயதில் ஐம்பதைத் தாண்டியவள் போல். அந்தக்களை எங்கே போச்சு? அதைத்தான் நீ பறித்துக் கொண்டாயே. ஈனஸ்வரத்தில் குரல் கேட்டது. இந்த அமைதியை சகிக்க முடியவில்லை. ஏதாவது பேசியே ஆக வேண்டும். அவன் வாய் திறந்தான்.

“எல்லோரும் சௌக்கியந்தானே…”

இந்தக் கேள்விக்கு பதிலும் அவனுள் தான் இருந்தது.

“சௌக்கியமா… எப்படி தம்பி சௌக்கியமா இருக்க முடியும்… நீங்க எப்படி இருக்கீங்க…”

“ஏதோ இருக்கேன்.”

“ஆமா தம்பி என்ன தான் நினைச்சிட்டிங்க மனசிலே… முழுசா மூணு வருசமாச்சு… எட்டியே பார்க்கல… எந்த ஊர்ல இருக்கீங்கன்னு தகவலும் கிடையாது… இந்தப்பொண்ணு இங்க தெனமும் அழுதழுது சாகுது… எப்பதான் கூட்டிட்டுப்போறதா உத்தேசம்…”

கௌரி திரும்பி அம்மாவை முறைத்தாள். அவன் வாய்திறக்க முயன்றான். தொண்டைக்குள் கல் அடைத்தது போல் இருந்தது. வாய்க்குள் முனங்கிய மாதிரி பேசினான்.

“எதுக்கும் ஒரு நல்ல நேரம் வர வேண்டாமா?”

பேசாமல் நின்றிருந்த பெரியவர் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கையில் ஏனத்துடன் வெளியே கிளம்பினார்.

“என்ன நேரமோ… காலமோ தம்பி இவதலைல என்ன தான் எழுதியிருக்கோ…”

“ஆமா ஏங்க போட்ட லெட்டருக்கெல்லாம் பதிலே போடலே…?”

கௌரியின் கேள்வி முகத்திலறைந்தது. ஒரு கணம் திடுக்கிட்ட முகத்தை கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டே,

“ஒரு லெட்டர் கூட வரலியே…” மனம் தொண்டையை இறுக்கியது. “பொய்… பொய்…” என்று சுசீலா அங்கே நின்றாள்.

“ஏங்க லெட்டர் மேலே லெட்டரா போட்டுட்டுருக்காங்களே ஒரு பதில் போடுறதானே…”

“அட சும்மா இரு… பதில் போட்டா அம்புட்டு தான். எல்லாந் தெரிஞ்சுடும்…”

“தெரிஞ்சா என்ன… இப்படி பயந்து பயந்து எத்தனை நாளைக்கு… ஊர்லேருந்து யாராவது வந்தா ஒளிஞ்சுகிடுறீங்க… இப்படி பயப்படுறவுக எதுக்கு அன்னிக்கு எம்பின்னால சுத்தணும்… கெஞ்சி கூத்தாடணும்… இல்ல நேரடியா அவங்ககிட்ட சொல்லிதீத்திர வேண்டியதானே…”

“அது முடியாது சுசீலா…”

“ஏன்?”

“அவ முகத்தை பார்த்தே என்னால பேச முடியாது. அப்புறம் என்ன காரணத்தை சொல்லுவேன் தீக்கறதுக்கு…”

“சரி, அவங்களை இங்கே கூட்டிட்டு வாங்க ரெண்டு பேருமா இருக்கோம்னு ஆயிரந்தடவை சொல்லியாச்சு…”

“வேண்டாம்…”

“அதுவும் வேண்டான்னா என்ன செய்யறது…”

“நீ ஒண்ணுஞ்செய்ய வேண்டாம்… ஒஞ்சோலிய பாரு…”

அவன் கையிலிருந்த பால் சுட்டது. இந்த நேரத்தில் எங்கே போய் அலைஞ்சி பால் வாங்கிட்டு வருகிறார். நிமிர்ந்தான். கௌரி அழுது கொண்டிருந்தாள். பெரியவர் ஏதும் செய்யத் தோன்றாமல் கொடியில் கிடந்த வேஷ்டியைத் திரும்பவும் எடுத்து மடித்துப் போட்டார்.

“நாவேற ஊருக்கு மாத்திட்டம்ல… இப்ப புதுக்கோட்டையில் இருக்கேன். அதான் நீ போட்ட லெட்டர் வராம இருந்திருக்கும்…”

மறுபடியும் பொய். அவன் இருமினான். கௌரி நிமிர்ந்தாள். அழுகை நின்றிருந்தது. இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் போல் முகட்டைப் பார்த்தாள்.

“சரி சரி எல்லாத்தையும் காலைல பேசிக்குவோம்… தம்பிக்கு படுக்கை கொடு கௌரி… இல்லைனா ரூம்ல வேணா படுத்துக்கிறீங்களா?”

பெரியவர் சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

“இல்ல… நாவெளியில படுத்துக்கிறேன்…”

“லேசா குளிர் இருக்கு…”

“பரவால்ல…”

“சரி. தம்பிக்கு அந்த புது போர்வையை கொடு…”

படுக்கையைக் கொடுக்கும் போது ஒரு பார்வை பார்த்தாள். இவன் கூசினான். நிமிரவே முடியவில்லை. “அடேய் சண்டாளா வாழ்க்கையைக் கெடுத்திட்டியே பாவி”என்று சபிக்கிற அர்த்தத்தை கற்பனை பண்ணிக் கொண்டான். படுத்து வானத்தில் மனசை பொருத்த இடம் தேடிக் கொண்டிருந்தான். உள்ளே பேச்சுச் சத்தம் கேட்டது. தீர்ப்பெழுதுவதாய் நினைத்தான். மனசை நாலு பேர் சேர்த்து ஏறி மிதித்துப்பிசைவது போல வலி. அழுகையில்லாத சோகம் தொண்டைக்குள் பரவியது. செருமிக் கொண்டான். ‘கௌரி’வாய் நிறைய முணு முணுத்தான். பேசாமல் இங்கேயே இருந்துவிட்டால்… துணையை பிரிந்த கொக்கு ஒன்று “சுசீலா”என்று கத்திக் கொண்டே இவனைக் கடந்தது. சுசீலா கௌரி… சே எது இப்படியெல்லாம் நடத்திச் சென்றது. சைத்தான் பிடித்துவிட்டதா…? பிசாசுகளின் வசம் மனது போய்விட்டதோ… ஒரு வேளை இதுதான் வாழ்க்கையின் முடிவா? இதோடு இப்பவே முடிந்துவிடுமோ. இழுக்கிற மூசசே இறுதி மூச்சாய் இருக்காதா என்று ஏங்கினான்.

சுசீலாவைப் பார்த்தது, திருட்டுத் தனமாய் கல்யாணம் முடித்தது, எல்லாமே கனவாய் உதிர்ந்து விடாதா? உடனே ‘துரோகி’என்ற அலறல் உடல் பூராவும் கேட்டது. மண்டையைப் பிளப்பது போல இருந்தது. கண்களை மூடி மூடித் திறந்தான்.

எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். அவசரமாக படுக்கையைச் சுருட்டி கதவருகில் வைத்தான். கால்களில் செருப்பை நுழைத்துக் கொண்டு திரும்பினான். தலைமுடியைக் கோதிவிட்டுக் கொண்டான். எங்கிருந்தோ அகாலமாய் கோயில் மணி ‘கௌரி’என்றடித்தது. தப்பியோடும் குற்றவாளியைப் போல் ஜாக்கிரதையாகக் கதவைத் திறந்து வெளியே நடந்தான். இன்னொரு முறை வருவேன் என்று ஏனோ நினைத்தான்.

பஸ்ஸிற்குள் ஒரே சலசலப்பு! இளங்காலையின் குளிர் நடுக்கியது. “டிக்கெட் எடுத்த ஆள்மட்டும் ஏறுங்க. டிக்கெட் எடுக்காம உக்காந்தா இறக்கிவிட்ருவேன்…” குளித்து நெற்றி நிறைய திருநீறும் குங்குமமும் அப்பியிருந்த கண்டக்டர் கத்தினான். அவன் ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்தான். பையில் டிக்கெட்டை பத்திரப்படுத்திக் கொண்டான். அவசரப்பட்டான். பொறுமையிழந்தான். இன்னும் ஏன் பஸ் கிளம்பவில்லை. முகம் சவக்களையைப் பெற முயற்சித்தது. பஸ் போகும் போது சில்லென்ற குளிர்காற்று முகத்திலறைந்து தலைமுடியைக் கலைத்தது. வெளியே இரண்டு பக்கமும் கரியிருட்டு. தூரத்து விளக்குகள் மின்மினிப் பூச்சிகள். மனசில் சிள்வண்டு இரைந்து தப்பிக்க வழி தேடியது. வெளியே இருட்டு அவனுக்குப் பிடித்திருந்தது. கண்களை மூடினான். உள்ளேயும் இருட்டு. எல்லாமே கனவு என்று சொல்லிக் கொண்டான். அது மனசுக்கு இதமாயிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “மின்னல்பொழுது”

 1. என்னத்தான் மனசாட்சி முள்ளாய் குத்தினலும் ஆணுக்கு பாதிப்பு ஒன்றும் பெரியதாயில்லை. இளைப்பாற இன்னொருத்தி கிடைத்து விடுவாள்… ஆனால் பெண்ணுக்கு…? அவளும் அவள் முள்ளின் குடும்பமும் மேல் நிற்பதை போல் காத்துக்கொண்டே இருக்கவேண்டும்… சமுதாய நிலையையும் பெண்ணைபெற்றாவர்களின் நிலையையும் காட்டும் அற்புதமான படைப்பு . சிறப்பு தோழர்.

 2. “ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
  என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது”… என்கிற அவ்வையின் பாடலை நினைவுபடுத்துகிறது இச்சிறுகதை. என் வயிறே! இன்று ஒரு நாளைக்கு மட்டும் சாப்பிடாமல் இரு என்று சொன்னாலும் இருக்க மாட்டேன் என்கின்றாய்,… இரண்டு நாளுக்கான உணவை சாப்பிட்டுக் கொள் என்று சொன்னாலும் சாப்பிட மாட்டேன் என்கிறாய்….. உணவுக்காக போராடும் துன்பம் உனக்கு தெரியவில்லையோ!?.. என்று வயிறுடன் தனது போராட்ட வாழ்வை நிம்மதியில்லாமல் நகர்த்திக் கொண்டிருக்கும் ஒரு ஏழை முதியவரின் கதையை கருவாகக் கொண்டு பயணிக்கிறது..

  வறுமையில் பசிக்கான சிறிதுணவு கிடைத்தாலும் ருசியான உணவு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் நாட்களை கடந்து கொண்டிருக்கின்றார் பொன்னையா பிள்ளை. அமாவாசை என்றாலே விருந்தோம்பலை (ஒரே ஒரு கரண்டி சாதம்) காக்காவுடன் முடித்துக்கொள்ளும் நகரவாசிகளுக்கு மத்தியில், மாதந்தோறும் வரும் அமாவாசையை திருநாளாகவே நினைத்து….., அத்திருநாளில் கிடைக்கப்போகும் நிரந்தரமில்லாத உணவிற்காகவும்…..,அதன் சுவையினை பற்றியுமான நினைப்பிலேயே பிற நாட்களைப் கடத்துகிறார்.. வண்ண உணவு கனவுகளுடன் தொடங்கிய அமாவாசை திருநாள் எப்படி கருப்பு மதியமாக ஆகியது??.. என்பதை ஆழமாகவும் சிறப்பாகவும் எழுதியுள்ள ஆசிரியர் உதயசங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.. நன்கு வாழ்ந்து கெட்டிருப்பினும் வறுமையிலும் யாரிடமும் கையேந்தாது தனது பசி ருசியை அடக்கி, இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் முருகன் மற்றும் குடும்பத்தினர் மூலம் எளியவர்களின் மனோபாவத்தை கண்முன்னே கொண்டுவருகிறார்…

  “வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்….” என்ற திருக்குறள் காலத்தின் சுழற்சியால் பொய்யாகி போனாலும் பொன்னையா பிள்ளைக்கு அமாவாசை விரத சாப்பாடாவது கிடைக்கிறதே என்று தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..

  உடல்/மன வலிமை குன்றி இருப்பினும் வாடாத சுவை அரும்புகளை கொண்டிருக்கும் ‘நாக்கு’டன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் அனைத்து முதியோர்களுக்குமானது இக்’கருப்பு மதியம்’..

  சுபாஷினி
  9789070266.

 3. ஜெகநாதன்.வீ 9789177991

  மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிய சொல்லாடல் போல கட்டிய மனைவி இருக்க அவளுக்கு தெரியாமல் இன்னொரு திருமணம் செய்து விட்டு கடைசி பஸ்ஸை தவறவிட்ட காரணத்தால் தங்குவதற்காக வீட்டுப் பக்கம் ஒதுங்கும் மனிதப் பிசாசுகள் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: